MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.108 திருக்கடவூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1016 மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த
    மாணிமார்க் கண்டேயற்காய்
    இருட்டிய மேனி வளைவாள்
    எயிற்றெரி போலுங்குஞ்சிச்
    சுருட்டிய நாவில்வெங் கூற்றம்
    பதைப்ப வுதைத்துங்ஙனே
    உருட்டிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே. 4.108.1
    1017 பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்
    தோதிப் பரிவினொடும்
    இதத்தெழு மாணிதன் இன்னுயிர்
    உண்ண வெகுண்டடர்த்த
    கதத்தெழு காலனைக் கண்குரு
    திப்புன லாறொழுக
    உதைத்தெழு சேவடி யான்கட
    வூருறை உத்தமனே. 4.108.2
    1018 கரப்புறு சிந்தையர் காண்டற்
    கரியவன் காமனையும்
    நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்
    கங்கையும் பொங்கரவும்
    பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்
    காலனைப் பண்டொருகால்
    உரப்பிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே. 4.108.3
    1019 மறித்திகழ் கையினன் வானவர்
    கோனை மனமகிழ்ந்து
    குறித்தெழு மாணிதன் ஆருயிர்
    கொள்வான் கொதித்தசிந்தைக்
    கறுத்தெழு மூவிலை வேலுடைக்
    காலனைத் தானலற
    உறுக்கிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே. 4.108.4
    1020 குழைத்திகழ் காதினன் வானவர்
    கோனைக் குளிர்ந்தெழுந்து
    பழக்கமோ டர்ச்சித்த மாணிதன்
    ஆருயிர் கொள்ளவந்த
    தழற்பொதி மூவிலை வேலுடைக்
    காலனைத் தானலற
    உழக்கிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே. 4.108.5
    1021 பாலனுக் காயன்று பாற்கடல்
    ஈந்து பணைத்தெழுந்த
    ஆலினிற் கீழிருந் தாரண
    மோதி அருமுனிக்காய்ச்
    சூலமும் பாசமுங் கொண்டு
    தொடர்ந்தடர்ந் தோடிவந்த
    காலனைக் காய்ந்த பிரான்கட
    வூருறை உத்தமனே. 4.108.6
    1022 படர்சடைக் கொன்றையும் பன்னக
    மாலை பணிகயிறா
    உடைதலைக் கோத்துழல் மேனியன்
    உண்பலிக் கென்றுழல்வோன்
    சுடர்பொதி மூவிலை வேலுடைக்
    காலனைத் துண்டமதா
    உடறிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே. 4.108.7
    1023 வெண்டலை மாலையுங் கங்கைக்
    கரோடி விரிசடைமேற்
    பெண்டனி நாயகன் பேயுகந்
    தாடும் பெருந்தகையான்
    கண்டனி நெற்றியன் காலனைக்
    காய்ந்து கடலின்விடம்
    உண்டருள் செய்தபி ரான்கட
    வூருறை உத்தமனே. 4.108.8
    1024 கேழல தாகிக் கிளறிய
    கேசவன் காண்பரிதாய்
    வாழிநன் மாமலர்க் கண்ணிடந்
    திட்டவம் மாலவற்கன்
    றாழியும் ஈந்து அடுதிறற்
    காலனை அன்றடர்த்து
    ஊழியு மாய பிரான்கட
    வூருறை உத்தமனே. 4.108.9
    1025 தேன்றிகழ் கொன்றையுங் கூவிள
    மாலை திருமுடிமேல்
    ஆன்றிகழ் ஐந்துகந் தாடும்
    பிரான்மலை ஆர்த்தெடுத்த
    கூன்றிகழ் வாளரக் கன்முடி
    பத்துங் குலைந்துவிழ
    ஊன்றிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே. 4.108.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book