4.113 தனி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1050 வெள்ளிக் குழைத்துணி போலுங்
கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி
நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை
சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்
பூசிய வேதியனே. 4.113.1
1051 உடலைத் துறந்துல கேழுங்
கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட
லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக்
கங்கை பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி
மைக்கண் துணிநெஞ்சமே. 4.113.2
1052 முன்னே யுரைத்தால் முகமனே
யொக்குமிம் மூவுலகுக்
கன்னையும் அத்தனு மாவா
யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென்
னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம்
பிரானுன்னை வேண்டியதே. 4.113.3
1053 நின்னையெப் போது நினையலொட்
டாய்நீ நினையப்புகிற்
பின்னையப் போதே மறப்பித்துப்
பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போதும் மறந்திட்
டுனக்கினி தாயிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு
வாழி இறையவனே. 4.113.4
1054 முழுத்தழல் மேனித் தவளப்
பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பெருஞ் சோதியை எங்கள்
பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு
வானைத் தொழுதபின்னை
தொழப்படுந் தேவர்தம் மால்தொழு
விக்குந்தன் தொண்டரையே. 4.113.5
1055 விண்ணகத் தான்மிக்க வேதத்
துளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்திரு மாலகத்
தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்
துளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி
யானெங் கறைக்கண்டனே. 4.113.6
1056 பெருங்கடல் மூடிப் பிரளயங்
கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும்
இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர
முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை
நல்வீணை வாசிக்குமே. 4.113.7
1057 வானந் துளங்கிலென் மண்கம்ப
மாகிலென் மால்வரையுந்
தானந் துளங்கித் தலைதடு
மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர்
வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக்
காட்பட்ட உத்தமர்க்கே. 4.113.8
1058 சிவனெனும் நாமந் தனக்கே
யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை ஆட்கொண் டளித்திடு
மாகில் அவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத்
திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழி
யானென் றெதிர்ப்படுமே. 4.113.9
1059 என்னையொப் பாருன்னை எங்ஙனம்
காண்பர் இகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும்
படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை
வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ்
சடைக்கற்றை வேதியனே. 4.113.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book