MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.13 திருவையாறு
    பண் - பழந்தக்கராகம்
    திருச்சிற்றம்பலம்

    124 விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
    இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன்
    தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
    அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 4.13.1
    125 செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
    கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்
    வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
    அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 4.13.2
    126 நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
    துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
    மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்
    அணியானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 4.13.3
    127 ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
    வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
    பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
    ஆழித்தீ ஐயாறார்க் காளாய்நான் உய்ந்தேனே. 4.13.4
    128 சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
    விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
    உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
    அடையானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 4.13.5
    129 நீரானே தீயானே நெதியானே கதியானே
    ஊரானே உலகானே உடலானே உயிரானே
    பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
    றாராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 4.13.6
    130 கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
    எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
    விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
    அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
    அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின
    எனப் பொருள்படுகின்றது. 4.13.7
    131 மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
    பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
    நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
    அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 4.13.8
    132 முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப்
    பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
    எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும்
    அத்திசையாம் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 4.13.9
    133 கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
    திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
    பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
    அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 4.13.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book