4.15 பாவநாசத்திருப்பதிகம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
145 பற்றற் றார்சேற் பழம்பதியைப்
பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத்
தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை
விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் உத்தமனை
உள்ளத் துள்ளே வைத்தேனே.
வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று. 4.15.1
146 ஆனைக் காவில் அணங்கினை
ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக்
கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும்
வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை
மதியைச் சுடரை மறவேனே. 4.15.2
147 மதியங் கண்ணி ஞாயிற்றை
மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை
ஐயா றமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள்
வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை
நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே. 4.15.3
148 புறம்ப யத்தெம் முத்தினைப்
புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி
உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற்
காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்டத்
தரிமான் ஏற்றை அடைந்தேனே.
உறந்தையென்பது உறையூர். 4.15.4
149 கோலக் காவிற் குருமணியைக்
குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை
அமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப்
பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத்
தோளைக் குளிரத் தொழுதேனே.
குடமூக்கென்பது கும்பகோணம். 4.15.5
150 மருக லுறையுமா ணிக்கத்தை
வலஞ் சுழியின் மாலையை
கருகா வூரிற் கற்பகத்தைக்
காண்டற் கரிய கதிரொளியைப்
பெருவே ளூரெம் பிறப்பிலியைப்
பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச்
சிந்தை யுள்ளே வைத்தேனே. 4.15.6
151 எழிலார் இராச சிங்கத்தை
இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பிற்
குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து
நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத் தம்மானை
அன்பி லணைத்து வைத்தேனே. 4.15.7
152 மாலைத் தோன்றும் வளர்மதியை
மறைக்காட் டுறையும் மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை
அண்ணா மலையெம் அண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய
சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை
விருப்பால் விழுங்கி யிட்டேனே. 4.15.8
153 சோற்றுத் துறையெஞ் சோதியைத்
துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழனத் தம்மானை
ஆல வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள்
நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை அடலேற்றைத்
தோளைக் குளிரத் தொழுதேனே. 4.15.9
154 புத்தூ ருறையும் புனிதனைப்
பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை
வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப்
பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்றன் மனத்துள்ளே
மாத்தூர் மேய மருந்தையே.
மாத்தூரென்பது - திருவாமாத்தூர். 4.15.10
155 முந்தித் தானே முளைத்தானை
மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை
அரக்க னாற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச்
செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான்
என்பார் பாவ நாசமே. 4.15.11
திருச்சிற்றம்பலம்
Goto Main book