MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.26 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
    திருச்சிற்றம்பலம்

    259 நம்பனே எங்கள் கோவே
    நாதனே ஆதி மூர்த்தி
    பங்கனே பரம யோகி
    என்றென்றே பரவி நாளுஞ்
    செம்பொனே பவளக் குன்றே
    திகழ்மலர்ப் பாதங் காண்பான்
    அன்பனே அலந்து போனேன்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.1
    260 பொய்யினால் மிடைந்த போர்வை
    புரைபுரை அழுகி வீழ
    மெய்யனாய் வாழ மாட்டேன்
    வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
    செய்யதா மரைகள் அன்ன
    சேவடி இரண்டுங் காண்பான்
    ஐயநான் அலந்து போனேன்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.2
    261 நீதியால் வாழ மாட்டேன்
    நித்தலுந் தூயே னல்லேன்
    ஓதியும் உணர மாட்டேன்
    உன்னையுள் வைக்க மாட்டேன்
    சோதியே சுடரே உன்றன்
    தூமலர்ப் பாதங் காண்பான்
    ஆதியே அலந்து போனேன்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.3
    262 தெருளுமா தெருள மாட்டேன்
    தீவினைச் சுற்ற மென்னும்
    பொருளுளே அழுந்தி நாளும்
    போவதோர் நெறியுங் காணேன்
    இருளுமா மணிகண் டாநின்
    இணையடி இரண்டுங் காண்பான்
    அருளுமா றருள வேண்டும்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.4
    263 அஞ்சினால் இயற்றப் பட்ட
    ஆக்கைபெற் றதனுள் வாழும்
    அஞ்சினால் அடர்க்கப் பட்டிங்
    குழிதரும் ஆத னேனை
    அஞ்சினால் உய்க்கும் வண்ணங்
    காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
    அஞ்சினால் பொலிந்த சென்னி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.5
    264 உறுகயி றூசல் போல
    ஒன்றுவிட் டொன்று பற்றி
    மறுகயி றூசல் போல
    வந்துவந் துலவு நெஞ்சம்
    பெறுகயி றூசல் போலப்
    பிறைபுல்கு சடையாய் பாதத்
    தறுகயி றூச லானேன்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.6
    265 கழித்திலேன் காம வெந்நோய்
    காதன்மை என்னும் பாசம்
    ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி
    உணர்வெனும் இமைதி றந்து
    விழித்திலேன் வெளிறு தோன்ற
    வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
    அழித்திலேன் அயர்த்துப் போனேன்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.7
    266 மன்றத்துப் புன்னை போல
    மரம்படு துயர மெய்தி
    ஒன்றினால் உணர மாட்டேன்
    உன்னையுள் வைக்க மாட்டேன்
    கன்றிய காலன் வந்து
    கருக்குழி விழுப்ப தற்கே
    அன்றினான் அலமந் திட்டேன்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.8
    267 பிணிவிடா ஆக்கை பெற்றேன்
    பெற்றமொன் றேறு வானே
    பணிவிடா இடும்பை யென்னும்
    பாசனத் தழுந்து கின்றேன்
    துணிவிலேன் தூய னல்லேன்
    தூமலர்ப் பாதங் காண்பான்
    அணியனாய் அறிய மாட்டேன்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.9
    268 திருவினாள் கொழுந னாருந்
    திசைமுக முடைய கோவும்
    இருவரும் எழுந்தும் வீழ்ந்தும்
    இணையடி காண மாட்டா
    ஒருவனே எம்பி ரானே
    உன்திருப் பாதங் கண்பான்
    அருவனே அருள வேண்டும்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.26.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book