MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.02 திருக்கெடிலவடவீரட்டானம்
    திருவதிகைவீரட்டானம் என்பதும் இது
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    11 சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்
    சுடர்த் திங்கட் சூளாமணியும்
    வண்ண உரிவை யுடையும்
    வளரும் பவள நிறமும்
    அண்ணல் அரண்முர ணேறும்
    அகலம் வளாய அரவும்
    திண்ணன் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை. 4.2.1
    12 பூண்டதோர் கேழல் எயிறும்
    பொன்றிகழ் ஆமை புரள
    நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து
    நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
    காண்டகு புள்ளின் சிறகுங்
    கலந்தகட் டங்கக் கொடியும்
    ஈண்டு கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை. 4.2.2
    13 ஒத்த வடத்திள நாகம்
    உருத்திர பட்ட மிரண்டும்
    முத்து வடக்கண் டிகையும்
    முளைத்தெழு மூவிலை வேலுஞ்
    சித்த வடமும் அதிகைச்
    சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
    தத்துங் கெடிப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
    () சித்தவடம் என்பது இத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது. 4.2.3
    14 மடமான் மறிபொற் கலையும்
    மழுபாம் பொருகையில் வீணை
    குடமால் வரைய திண்டோ ளுங்
    குனிசிலைக் கூத்தின் பயில்வும்
    இடமால் தழுவிய பாகம்
    இருநில னேற்ற சுவடுந்
    தடமார் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை. 4.2.4
    15 பலபல காமத்த ராகிப்
    பதைத்தெழு வார்மனத் துள்ளே
    கலமலக் கிட்டுத் திரியுங்
    கணபதி யென்னுங் களிறும்
    வலமேந் திரண்டு சுடரும்
    வான்கயி லாய மலையும்
    நலமார் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதென்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை. 4.2.5
    16 கரந்தன கொள்ளி விளக்குங்
    கறங்கு துடியின் முழக்கும்
    பரந்த பதினெண் கணமும்
    பயின்றறி யாதன பாட்டும்
    அரங்கிடை நூலறி வாளர்
    அறியப் படாததோர் கூத்தும்
    நிரந்த கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை. 4.2.6
    17 கொலைவரி வேங்கை அதளுங்
    குலவோ டிலங்குபொற் றோடும்
    விலைபெறு சங்கக் குழையும்
    விலையில் கபாலக் கலனும்
    மலைமகள் கைக்கொண்ட மார்பும்
    மணியார்ந் திலங்கு மிடறும்
    உலவு கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை. 4.2.7
    18 ஆடல் புரிந்த நிலையும்
    அரையில் அசைத்த அரவும்
    பாடல் பயின்ற பல்பூதம்
    பல்லா யிரங்கொள் கருவி
    நாடற் கரியதோர் கூத்தும்
    நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
    ஓடுங் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை. 4.2.8
    19 சூழு மரவத் துகிலுந்
    துகில்கிழி கோவணக் கீளும்
    யாழின் மொழியவள் அஞ்ச
    அஞ்சா தருவரை போன்ற
    வேழ முரித்த நிலையும்
    விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
    தாழுங் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை. 4.2.9
    20 நரம்பெழு கைகள் பிடித்து
    நங்கை நடுங்க மலையை
    உரங்களெல் லாங்கொண் டெடுத்தான்
    ஒன்பதும் ஒன்றும் அலற
    வரங்கள் கொடுத்தருள் செய்வான்
    வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
    நிரம்பு கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை. 4.2.10

    இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book