4.33 திருமறைக்காடு - திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
324 இந்திர னோடு தேவர்
இருடிகள் ஏத்து கின்ற
சுந்தர மானார் போலுந்
துதிக்கலாஞ் சோதி போலுஞ்
சந்திர னோடுங் கங்கை
அரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலும்
மாமறைக் காட னாரே. 4.33.1
325 தேயன நாட ராகித்
தேவர்கள் தேவர் போலும்
பாயன நாட றுக்கும்
பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங்
கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலும்
மாமறைக் காட னாரே. 4.33.2
326 அறுமையிவ் வுலகு தன்னை
யாமெனக் கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து
வினைகளால் நலிவு ணாதே
சிறுமதி அரவு கொன்றை
திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை யாவார்
மாமறைக் காட னாரே. 4.33.3
327 கால்கொடுத் திருகை யேற்றிக்
கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீராற்
சுவரெடுத் திரண்டு வாசல்
ஏல்வுடைத் தாவ மைத்தங்
கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார்
மாமறைக் காட னாரே. 4.33.4
328 விண்ணினார் விண்ணின் மிக்கார்
வேதங்கள் விரும்பி யோதப்
பண்ணினார் கின்ன ரங்கள்
பத்தர்கள் பாடி யாடக்
கண்ணினார் கண்ணி னுள்ளே
சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலங்கொண் டேத்தும்
மாமறைக் காட னாரே. 4.33.5
329 அங்கையுள் அனலும் வைத்தார்
அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார்
தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கை யோடு
திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மாமறைக் காட னாரே. 4.33.6
330 கீதராய்க் கீதங் கேட்டுக்
கின்னரந் தன்னை வைத்தார்
வேதராய் வேத மோதி
விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்ட மாடி
இட்டமாய்க் கங்கை யோடு
மாதையோர் பாகம் வைத்தார்
மாமறைக் காட னாரே. 4.33.7
331 கனத்தினார் வலி யுடைய
கடிமதில் அரணம் மூன்றுஞ்
சினத்தினுட் சினமாய் நின்று
தீயெழச் செற்றார் போலுந்
தனத்தினைத் தவிர்ந்து நின்று
தம்மடி பரவு வார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார்
மாமறைக் காட னாரே. 4.33.8
332 தேசனைத் தேசன் றன்னைத்
தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று
வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை என்றுங்
கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலும்
மாமறைக் காட னாரே. 4.33.9
333 பிணியுடை யாக்கை தன்னைப்
பிறப்பறுத் துய்ய வேண்டிற்
பணியுடைத் தொழில்கள் பூண்டு
பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை அரக்க னோடி
எடுத்தலுந் தோகை அஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார்
மாமறைக் காட னாரே. 4.33.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்,
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
Goto Main book