4.40 திருவையாறு - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
394 தானலா துலக மில்லை
சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை
கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை
வார்குழல் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை
ஐயனை யாற னார்க்கே. 4.40.1
395 ஆலலால் இருக்கை இல்லை
அருந்தவ முனிவர்க் கன்று
நூலலால் நொடிவ தில்லை
நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி
மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுத மில்லை
ஐயனை யாற னார்க்கே. 4.40.2
396 நரிபுரி சுடலை தன்னில்
நடமலால் நவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந்
துணையலால் இருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத்
தெளிவலால் அருளு மில்லை
அரிபுரி மலர்கொண் டேத்தும்
ஐயனை யாற னார்க்கே. 4.40.3
397 தொண்டலாற் றுணையு மில்லை
தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை
கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப்
பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்கள் ஏத்தும்
ஐயனை யாற னார்க்கே. 4.40.4
398 எரியலா லுருவ மில்லை
ஏறலால் ஏற லில்லை
கரியலாற் போர்வை யில்லை
காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப்
பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை
ஐயனை யாற னார்க்கே. 4.40.5
399 என்பலாற் கலனு மில்லை
எருதலா லூர்வ தில்லை
புன்புலால் நாறு காட்டிற்
பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித்
தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை
ஐயனை யாற னார்க்கே. 4.406
400 கீளலால் உடையு மில்லை
கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை
தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட
வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை
ஐயனை யாற னார்க்கே. 4.40.7
401 சகமலா தடிமை யில்லை
தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையான்
நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க
முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை
ஐயனை யாற னார்க்கே. 4.40.8
402 உமையலா துருவ மில்லை
உலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர்
நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக்
கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா அருள் கொடுப்பார்
ஐயனை யாற னார்க்கே. 4.40.9
403 மலையலா லிருக்கை யில்லை
மதித்திடா அரக்கன் றன்னைத்
தலையலால் நெரித்த தில்லை
தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ
நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னும்
ஐயனை யாற னார்க்கே. 4.40.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book