4.48 திருஆப்பாடி - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
466 கடலகம் ஏழி னோடும்
புவனமுங் கலந்த விண்ணும்
உடலகத் துயிரும் பாரும்
ஒள்ளழ லாகி நின்று
தடமலர்க் கந்த மாலை
தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி
மன்னும்ஆப் பாடி யாரே. 4.48.1
467 ஆதியும் அறிவு மாகி
அறிவினுட் செறிவு மாகிச்
சோதியுட் சுடரு மாகித்
தூநெறிக் கொருவ னாகிப்
பாதியிற் பெண்ணு மாகிப்
பரவுவார் பாங்க னாகி
வேதியர் வாழுஞ் சேய்ஞல்
விரும்பும்ஆப் பாடி யாரே. 4.48.2
468 எண்ணுடை இருக்கு மாகி
யிருக்கினுட் பொருளு மாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப்
பரவுவார் பாங்க னாகிக்
கண்ணொரு நெற்றி யாகிக்
கருதுவார் கருத லாகாப்
பெண்ணொரு பாக மாகிப்
பேணும்ஆப் பாடி யாரே. 4.48.3
469 அண்டமார் அமரர் கோமான்
ஆதியெம் அண்ணல் பாதங்
கொண்டவன் குறிப்பி னாலே
கூப்பினான் தாப ரத்தைக்
கண்டவன் தாதை பாய்வான்
காலற எறியக் கண்டு
தண்டியார்க் கருள்கள் செய்த
தலைவர்ஆப் பாடி யாரே. 4.48.4
470 சிந்தையுந் தெளிவு மாகித்
தெளிவினுட் சிவமு மாகி
வந்தநற் பயனு மாகி
வாணுதல் பாக மாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த
மண்ணித்தென் கரைமேல் மன்னி
அந்தமோ டளவி லாத
அடிகள்ஆப் பாடி யாரே. 4.48.5
471 வன்னிவா ளரவு மத்தம்
மதியமும் ஆறுஞ் சூடி
மின்னிய உருவாஞ் சோதி
மெய்ப்பொருட் பயனு மாகிக்
கன்னியோர் பாக மாகிக்
கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட
இருந்தஆப் பாடி யாரே. 4.48.6
472 உள்ளுமாய்ப் புறமு மாகி
உருவுமாய் அருவு மாகி
வெள்ளமாய்க் கரையு மாகி
விரிகதிர் ஞாயி றாகிக்
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார்
கருத்துமாய் அருத்த மாகி
அள்ளுவார்க் கள்ளல் செய்திட்
டிருந்தஆப் பாடி யாரே. 4.48.7
473 மயக்கமாய்த் தெளிவு மாகி
மால்வரை வளியு மாகித்
தியக்கமாய் ஒருக்க மாகிச்
சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கமாய் இறுதி யாகி
எண்டிசைக் கிறைவ ராகி
அயக்கமாய் அடக்க மாய
ஐவர்ஆப் பாடி யாரே. 4.48.8
474 ஆரழல் உருவ மாகி
அண்டமேழ் கடந்த எந்தை
பேரொளி உருவி னானைப்
பிரமனும் மாலுங் காணாச்
சீரவை பரவி யேத்திச்
சென்றடி வணங்கு வார்க்குப்
பேரருள் அருளிச் செய்வார்
பேணும்ஆப் பாடி யாரே. 4.48.9
475 திண்டிறல் அரக்க னோடிச்
சீகயி லாயந் தன்னை
எண்டிறல் இலனு மாகி
எடுத்தலும் ஏழை அஞ்ச
விண்டிறல் நெறிய வூன்றி
மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட்டு கந்த
பரமர்ஆப் பாடி யாரே. 4.48.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
Goto Main book