4. 04 திருவாரூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
32 பாடிளம் பூதத்தி னானும்
பவளச்செவ் வாய்வண்ணத் தானுங்
கூடிள மென்முலை யாளைக்
கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும்
ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.1
33 நரியைக் குதிரைசெய் வானும்
நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானை முன்னோட
முன்பணிந் தன்பர்கள் ஏத்த
அரவரைச் சாத்திநின் றானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.2
34 நீறுமெய் பூசவல் லானும்
நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
ஏறுகந் தேறவல் லானும்
எரிபுரை மேனியி னானும்
நாறு கரந்தையி னானும்
நான்மறைக் கண்டத்தி னானும்
ஆறு சடைக்கரந் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.3
35 கொம்புநல் வேனி லவனைக்
குழைய முறுவல்செய் தானுஞ்
செம்புனல் கொண்டெயில் மூன்றுந்
தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும்
வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர ஈருரி யானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.4
36 ஊழி யளக்கவல் லானும்
உகப்பவர் உச்சியுள் ளானுந்
தாழிளஞ் செஞ்சடை யானுந்
தண்ணமர் திண்கொடி யானுந்
தோழியர் தூதிடை யாடத்
தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.5
37 ஊர்திரை வேலையுள் ளானும்
உலகிறந் தொண்பொரு ளானுஞ்
சீர்தரு பாடலுள் ளானுஞ்
செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை
மருவி யுடன்வைத் தவனும்
ஆதிரை நாளுகந் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.6
38 தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத்
தோன்றி யருளவல் லானுங்
கழற்கங்கை பன்மலர் கொண்டு
காதல் கனற்றநின் றானுங்
குழற்கங்கை யாளையுள் வைத்துக்
கோலச் சடைக்கரந் தானும்
அழற்கங்கை ஏந்தவல் லானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.7
39 ஆயிரந் தாமரை போலும்
ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிரந் தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலும்
ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.8
40 வீடரங் காநிறுப் பானும்
விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும்
ஓங்கியோ ரூழியுள் ளானுங்
காடரங் காமகிழ்ந் தானுங்
காரிகை யார்கள் மனத்துள்
ஆடரங் கத்திடை யானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.9
41 பையஞ் சுடர்விடு நாகப்
பள்ளிகொள் வானுள்ளத் தானுங்
கையஞ்சு நான்குடை யானைக்
கால்விர லாலடர்த் தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்
புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சின் அப்புறத் தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book