MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.51 திருக்கோடிகா - திருநேரிசை
    திருச்சிற்றம்பலம்

    488 நெற்றிமேற் கண்ணி னானே
    நீறுமெய் பூசி னானே
    கற்றைப்புன் சடையி னானே
    கடல்விடம் பருகி னானே
    செற்றவர் புரங்கள் மூன்றுஞ்
    செவ்வழல் செலுத்தி னானே
    குற்றமில் குணத்தி னானே
    கோடிகா வுடைய கோவே. 4.51.1
    489 கடிகமழ் கொன்றை யானே
    கபாலங்கை யேந்தி னானே
    வடிவுடை மங்கை தன்னை
    மார்பிலோர் பாகத் தானே
    அடியிணை பரவ நாளும்
    அடியவர்க் கருள்செய் வானே
    கொடியணி விழவ தோவாக்
    கோடிகா வுடைய கோவே. 4.51.2
    490 நீறுமெய் பூசி னானே
    நிழல்திகழ் மழுவி னானே
    ஏறுகந் தேறி னானே
    இருங்கடல் அமுதொப் பானே
    ஆறுமோர் நான்கு வேதம்
    அறமுரைத் தருளி னானே
    கூறுமோர் பெண்ணி னானே
    கோடிகா வுடைய கோவே. 4.51.3
    491 காலனைக் காலாற் செற்றன்
    றருள்புரி கருணை யானே
    நீலமார் கண்டத் தானே
    நீண்முடி யமரர் கோவே
    ஞாலமாம் பெருமை யானே
    நளிரிளந் திங்கள் சூடுங்
    கோலமார் சடையி னானே
    கோடிகா வுடைய கோவே. 4.51.4
    492 பூணர வாரத் தானே
    புலியுரி அரையி னானே
    காணில்வெண் கோவ ணமுங்
    கையிலோர் கபால மேந்தி
    ஊணுமூர்ப் பிச்சை யானே
    உமையொரு பாகத் தானே
    கோணல்வெண் பிறையி னானே
    கோடிகா வுடைய கோவே. 4.51.5
    493 கேழல்வெண் கொம்பு பூண்ட
    கிளரொளி மார்பி னானே
    ஏழையேன் ஏழை யேன்நான்
    என்செய்கேன் எந்தை பெம்மான்
    மாழையொண் கண்ணி னார்கள்
    வலைதனில் மயங்கு கின்றேன்
    கூழைஏ றுடைய செல்வா
    கோடிகா வுடைய கோவே. 4.51.6
    494 அழலுமிழ் அங்கை யானே
    அரிவையோர் பாகத் தானே
    தழலுமிழ் அரவம் ஆர்த்துத்
    தலைதனிற் பலிகொள் வானே
    நிழலுமிழ் சோலை சூழ
    நீள்வரி வண்டி னங்கள்
    குழலுமிழ் கீதம் பாடுங்
    கோடிகா வுடைய கோவே. 4.51.7
    495 ஏவடு சிலையி னாலே
    புரமவை எரிசெய் தானே
    மாவடு வகிர்கொள் கண்ணாள்
    மலைமகள் பாகத் தானே
    ஆவடு துறையு ளானே
    ஐவரால் ஆட்டப் பட்டேன்
    கோவடு குற்றந் தீராய்
    கோடிகா வுடைய கோவே. 4.51.8
    496 ஏற்றநீர்க் கங்கை யானே
    இருநிலந் தாவி னானும்
    நாற்றமா மலர்மேல் ஏறும்
    நான்முகன் இவர்கள் கூடி
    ஆற்றலால் அளக்க லுற்றார்க்
    கழலுரு வாயினானே
    கூற்றுக்குங் கூற்ற தானாய்
    கோடிகா வுடைய கோவே. 4.51.9
    497 பழகநான் அடிமை செய்வேன்
    பசுபதீ பாவ நாசா
    மழகளி யானை யின்றோல்
    மலைமகள் வெருவப் போர்த்த
    அழகனே அரக்கன் திண்டோ ள்
    அருவரை நெரிய வூன்றுங்
    குழகனே கோல மார்பா
    கோடிகா வுடைய கோவே. 4.51.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கோடீசுவரர்; தேவியார் - வடிவாம்பிகையம்மை

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book