4.56 திருஆவடுதுறை - திருநேரிசை
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
538 மாயிரு ஞால மெல்லாம்
மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப்
படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த
கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும்
ஆவடு துறைய னாரே. 4.56.1
539 மடந்தை பாகத்தர் போலும்
மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங்
கொல்புலித் தோலர் போலுங்
கடைந்தநஞ் சுண்பர் போலுங்
காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க் கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே. 4.56.2
540 உற்றநோய் தீர்ப்பர் போலும்
உறுதுணை யாவர் போலுஞ்
செற்றவர் புரங்கள் மூன்றுந்
தீயெழச் செறுவர் போலுங்
கற்றவர் பரவி யேத்தக்
கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே. 4.56.3
541 மழுவமர் கையர் போலும்
மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும்
என்புகொண் டணிவர் போலுந்
தொழுதெழுந் தாடிப் பாடித்
தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே. 4.56.4
542 பொடியணி மெய்யர் போலும்
பொங்குவெண் ணூலர் போலுங்
கடியதோர் விடையர் போலுங்
காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும்
வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும்
ஆவடு துறைய னாரே. 4.56.5
543 வக்கரன் உயிரை வவ்வக்
கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந்
தானவர் தலைவர் போலுந்
துக்கமா மூடர் தம்மைத்
துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும்
ஆவடு துறைய னாரே. 4.56.6
544 விடைதரு கொடியர் போலும்
வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும்
பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும்
உலகமு மாவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும்
ஆவடு துறைய னாரே. 4.56.7
545 முந்திவா னோர்கள் வந்து
முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார்
நடுவுடை யார்கள் நிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார்
திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும்
ஆவடு துறைய னாரே. 4.56.8
546 பானமர் ஏன மாகிப்
பாரிடந் திட்ட மாலுந்
தேனமர்ந் தேறும் அல்லித்
திசைமுக முடைய கோவுந்
தீனரைத் தியக் கறுத்த
திருவுரு வுடையர் போலும்
ஆனரை ஏற்றர் போலும்
ஆவடு துறைய னாரே. 4.56.9
547 பார்த்தனுக் கருள்வர் போலும்
படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர
இன்பங்கள் கொடுப்பர் போலுங்
கூத்தராய்ப் பாடி யாடிக்
கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவாய் அலறு விப்பார்
ஆவடு துறைய னாரே. 4.56.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
Goto Main book