4.57. திருஆவடுதுறை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
548 மஞ்சனே மணியு மானாய்
மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று
நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து
துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும்
ஆவடு துறையு ளானே. 4.57.1
549 நானுகந் துன்னை நாளும்
நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பும் நாயேன்
உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந் தேயு கந்த
தகவிலாத் தொண்ட னேன்நான்
ஆனுகந் தேறு வானே
ஆவடு துறையு ளானே. 4.57.2
550 கட்டமே வினைக ளான
காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும்
உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்திப்
பலிதிரிந் தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே
ஆவடு துறையு ளானே. 4.57.3
551 பெருமைநன் றுடைய தில்லை
யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி
உகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக்
கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட
ஆவடு துறையு ளானே. 4.57.4
552 துட்டனாய் வினைய தென்னுஞ்
சுழித்தலை அகப்பட் டேனைக்
கட்டனாய் ஐவர் வந்து
கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை
மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும்
ஆவடு துறையு ளானே. 4.57.5
553 காரழற் கண்ட மேயாய்
கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே
யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே
நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும்
ஆவடு துறையு ளானே. 4.57.6
554 செறிவிலேன் சிந்தை யுள்ளே
சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்
கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன்
நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன்
ஆவடு துறையு ளானே. 4.57.7
555 கோலமா மங்கை தன்னைக்
கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன்
செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை
நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட
ஆவடு துறையு ளானே. 4.57.8
556 நெடியவன் மலரி னானும்
நேர்ந்திரு பாலும் நேடக்
கடியதோர் உருவ மாகிக்
கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே
என்றுதாம் பேச லாகார்
அடியனேன் நெஞ்சி னுள்ளார்
ஆவடு துறையு ளானே. 4.57.9
557 மலைக்குநே ராய ரக்கன்
சென்றுற மங்கை அஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே
தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி
ஒறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும்
ஆவடு துறையு ளானே. 4.57.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book