4.64 திருவீழிமிழலை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
619 பூதத்தின் படையர் பாம்பின்
பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட்
கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த ஓசைக்
கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.1
620 காலையிற் கதிர்செய் மேனி
கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையின் மதியஞ் சேர்ந்த
மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல
அண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையின் அமுதர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.2
621 வருந்தின நெருநல் இன்றாய்
வழங்கின நாளர் ஆற்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர்க்
கியம்பினர் இருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால்
பொய்யரா மவர்கட் கென்றும்
விருந்தினர் திருந்து வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.3
622 நிலையிலா வூர்மூன் றொன்ற
நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங்
கொண்டவர் தேவர் தங்கள்
தலையினாற் றரித்த என்பும்
தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.4
623 மறையிடைப் பொருளர் மொட்டின்
மலர்வழி வாசத் தேனர்
கறவிடைப் பாலின் நெய்யர்
கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப்
பிணையல்சேர் சடையுள் நீரர்
விறகிடைத் தீயர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.5
624 எண்ணகத் தில்லை அல்லர்
உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணகத் தரையர் காற்றிற்
பெருவலி யிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரில்
நால்வர்தீ யதனில் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.6
625 சந்தணி கொங்கை யாளோர்
பங்கினர் சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை
தந்தையு மாய ஈசர்
அந்தியோ டுதயம் அந்த
ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.7
626 நீற்றினை நிறையப் பூசி
நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநா ளொன்று
குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி
யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.8
627 சித்திசெய் பவர்கட் கெல்லாஞ்
சேர்விடஞ் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம்
பறைப்பவர் இறப்பி லாளர்
முத்திசை பவள மேனி
முதிரொளி நீல கண்டர்
வித்தினில் முளையர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.9
628 தருக்கின அரக்கன் தேரூர்
சாரதி தடைநி லாது
பொருப்பினை யெடுத்த தோளும்
பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு
நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
Goto Main book