MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.65 திருச்சாய்க்காடு - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    629 தோடுலா மலர்கள் தூவித்
    தொழுதெழு மார்க்கண் டேயன்
    வீடுநாள் அணுகிற் றென்று
    மெய்கொள்வான் வந்த காலன்
    பாடுதான் செல்லு மஞ்சிப்
    பாதமே சரண மென்னச்
    சாடினார் காலன் மாளச்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.1
    630 வடங்கெழு மலைமத் தாக
    வானவர் அசுர ரோடு
    கடைந்திட எழுந்த நஞ்சங்
    கண்டுபல் தேவ ரஞ்சி
    அடைந்துநும் சரண மென்ன
    அருள்பெரி துடைய ராகித்
    தடங்கடல் நஞ்சம் உண்டார்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.2
    631 அரணிலா வெளிய நாவல்
    அருள்நிழ லாக ஈசன்
    வரணிய லாகித் தன்வாய்
    நூலினாற் பந்தர் செய்ய
    முரணிலாச் சிலந்தி தன்னை
    முடியுடை மன்ன னாக்கித்
    தரணிதான் ஆள வைத்தார்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.3
    632 அரும்பெருஞ் சிலைக்கை வேட
    னாய்விறற் பார்த்தற் கன்று
    உரம்பெரி துடைமை காட்டி
    ஒள்ளமர் செய்து மீண்டே
    வரம்பெரி துடைய னாக்கி
    வாளமர் முகத்தின் மன்னுஞ்
    சரம்பொலி தூணி ஈந்தார்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.4
    633 இந்திரன் பிரமன் அங்கி
    எண்வகை வசுக்க ளோடு
    மந்திர மறைய தோதி
    வானவர் வணங்கி வாழ்த்தத்
    தந்திர மறியாத் தக்கன்
    வேள்வியைத் தகர்த்த ஞான்று
    சந்திரற் கருள்செய் தாருஞ்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.5
    634 ஆமலி பாலும் நெய்யும்
    ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
    பூமலி கொன்றை சூட்டப்
    பொறாததன் தாதை தாளைக்
    கூர்மழு வொன்றால் ஓச்சக்
    குளிர்சடைக் கொன்றை மாலைத்
    தாமநற் சண்டிக் கீந்தார்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.6
    635 மையறு மனத்த னாய
    பகீரதன் வரங்கள் வேண்ட
    ஐயமில் லமர ரேத்த
    ஆயிர முகம தாகி
    வையகம் நெளியப் பாய்வான்
    வந்திழி கங்கை யென்னுந்
    தையலைச் சடையில் ஏற்றார்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.7
    636 குவப்பெருந் தடக்கை வேடன்
    கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
    துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்
    தூயவாய்க் கலசம் ஆட்ட
    உவப்பெருங் குருதி சோர
    ஒருகணை யிடந்தங் கப்பத்
    தவப்பெருந் தேவு செய்தார்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.8
    637 நக்குலா மலர்பன் னூறு
    கொண்டுநன் ஞானத் தோடு
    மிக்கபூ சனைகள் செய்வான்
    மென்மல ரொன்று காணா
    தொக்குமென் மலர்க்கண் ணென்றங்
    கொருகணை யிடந்து மப்பச்
    சக்கரங் கொடுப்பர் போலுஞ்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.9
    638 புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து
    மாயகொண் டரக்க னோடிச்
    சிவன்திரு மலையைப் பேர்க்கத்
    திருமலர்க் குழலி யஞ்ச
    வியன்பெற எய்தி வீழ
    விரல்சிறி தூன்றி மீண்டே
    சயம்பெற நாம மீந்தார்
    சாய்க்காடு மேவி னாரே. 4.65.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சாயவனேசுவரர்,
    தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book