4.76 தனித் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
736 மருளவா மனத்த னாகி
மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா அறுக்கும் எந்தை
இணையடி நீழ லென்னும்
அருளவாப் பெறுத லின்றி
அஞ்சிநான் அலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே
போதுபோய்ப் புலர்ந்த தன்றே. 4.76.1
737 மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகிற்
சிவகதி விளையு மன்றே. 4.76.2
738 எம்பிரான் என்ற தேகொண்
டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரான் ஆட்ட ஆடி
என்னுளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத்
தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரான் என்னி னல்லால்
என்செய்கேன் ஏழை யேனே. 4.76.3
739 காயமே கோயி லாகக்
கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக
மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
நிறையநீர் அமைய வாட்டிப்
பூசனை ஈச னார்க்குப்
போற்றவிக் காட்டி னோமே. 4.76.4
740 வஞ்சகப் புலைய னேனை
வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டாய்
அதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டேன்
நின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா
என்னென நன்மை தானே. 4.76.5
741 நாயினுங் கடைப்பட் டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவ மார்த்த
அமுதனே அமுத மொத்து
நீயுமென் னெஞ்சி னுள்ளே
நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்
நோக்கிநீ அருள்செய் வாயே. 4.76.6
742 விள்ளத்தா னொன்று மாட்டேன்
விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை
வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனும்
உயிர்ப்புளே வருதி யேனுங்
கள்ளத்தே நிற்றி அம்மா
எங்ஙனங் காணு மாறே. 4.76.7
743 ஆசைவன் பாச மெய்தி
அங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா
உழந்துநான் உழித ராமே
தேசனே தேச மூர்த்தி
திருமறைக் காடு மேய
ஈசனே உன்றன் பாதம்
ஏத்துமா றருளெம் மானே. 4.76.8
744 நிறைவிலேன் நேச மில்லேன்
நினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும்
வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே
திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய்
கொன்றைசேர் சடையி னானே. 4.76.9
745 நடுவிலாக் காலன் வந்து
நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன அஞ்சு பூதம்
அவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம்
பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ
கிளரொளிச் சடையி னீரே. 4.76.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book