MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    822 செற்றுக் களிற்றுரி கொள்கின்ற
    ஞான்று செருவெண்கொம்பொன்
    றிற்றுக் கிடந்தது போலும்
    இளம்பிறை பாம்பதனைச்
    சுற்றிக் கிடந்தது கிம்புரி
    போலச் சுடரிமைக்கும்
    நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா
    லொற்றி யூரனுக்கே. 4.86.1
    823 சொல்லக் கருதிய தொன்றுண்டு
    கேட்கிற் றொண்டாயடைந்தார்
    அல்லற் படக்கண்டு பின்னென்
    கொடுத்தி அலைகொள்முந்நீர்
    மல்லற் றிரைச்சங்க நித்திலங்
    கொண்டுவம் பக்கரைக்கே
    ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி
    யூருறை யுத்தமனே. 4.86.2
    824 பரவை வருதிரை நீர்க்கங்கை
    பாய்ந்துக்க பல்சடைமேல்
    அரவ மணிதரு கொன்றை
    இளந்திங்கட் சூடியதோர்
    குரவ நறுமலர் கோங்க
    மணிந்து குலாய சென்னி
    உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி
    யூருறை யுத்தமனே. 4.86.3
    825 தானகங் காடரங் காக
    வுடையது தன்னடைந்தார்
    ஊனக நாறு முடைதலை
    யிற்பலி கொள்வதுந்தான்
    தேனக நாறுந் திருவொற்றி
    யூருறை வாரவர்தாந்
    தானக மேவந்து போனகம்
    வேண்டி உழிதர்வரே. 4.86.4
    826 வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள்
    ளேற்றொடும் வீற்றிருந்த
    மாலைச் சடையார்க் குறைவிட
    மாவது வாரிகுன்றா
    ஆலைக் கரும்பொடு செந்நெற்
    கழனி அருகணைந்த
    சோலைத் திருவொற்றி யூரையெப்
    போதுந் தொழுமின்களே. 4.86.5
    827 புற்றினில் வாழும் அரவுக்குந்
    திங்கட்குங் கங்கையென்னுஞ்
    சிற்றிடை யாட்குஞ் செறிதரு
    கண்ணிக்குஞ் சேர்விடமாம்
    பெற்றுடை யான்பெரும் பேச்சுடை
    யான்பிரி யாதெனையாள்
    விற்றுடை யானொற்றி யூருடை
    யான்றன் விரிசடையே. 4.86.6
    828 இன்றரைக் கண்ணுடை யாரெங்கு
    மில்லை இமய மென்னுங்
    குன்றரைக் கண்ணன் குலமகட்
    பாவைக்குக் கூறிட்டநாள்
    அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை
    யாளையும் பாகம்வைத்த
    ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி
    யூருறை உத்தமனே. 4.86.7
    829 சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங்
    காவுந் துதைந்திலங்கு
    பெற்றிகண் டால்மற்று யாவருங்
    கொள்வர் பிறரிடைநீ
    ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங்
    கைவிட் டுறுமென்றெண்ணி
    விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப
    தில்லிடம் வேதியனே. 4.86.8
    830 சுற்றிக் கிடந்தொற்றி யூரனென்
    சிந்தை பிரிவறியான்
    ஒற்றித் திரிதந்து நீயென்ன
    செய்தி உலகமெல்லாம்
    பற்றித் திரிதந்து பல்லொடு
    நாமென்று கண்குழித்துத்
    தெற்றித் திருப்பதல் லாலென்ன
    செய்யுமித் தீவினையே. 4.86.9
    831 அங்கட் கடுக்கைக்கு முல்லைப்
    புறவம் முறுவல்செய்யும்
    பைங்கட் டலைக்குச் சுடலைக்
    களரி பருமணிசேர்
    கங்கைக்கு வேலை அரவுக்குப்
    புற்று கலைநிரம்பாத்
    திங்கட்கு வானந் திருவொற்றி
    யூரர் திருமுடியே. 4.86.10
    832 தருக்கின வாளரக் கன்முடி
    பத்திறப் பாதந்தன்னால்
    ஒருக்கின வாறடி யேனைப்
    பிறப்பறுத் தாளவல்லான்
    நெருக்கின வானவர் தானவர்
    கூடிக் கடைந்தநஞ்சைப்
    பருக்கின வாறென்செய் கேனொற்றி
    யூருறை பண்டங்கனே. 4.86.11

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book