4.95 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
913 ஈன்றாளு மாயெனக் கெந்தையு
மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந்
தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன்
திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன்
றன்னடி யோங்களுக்கே. 4.95.1
914 பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்
சேயிந்தப் பாரைமுற்றுஞ்
சுற்றாய் அலைகடல் மூடினுங்
கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் கன்பன்
திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி
னான்றன மொய்கழலே. 4.95.2
915 விடையான் விரும்பியென் னுள்ளத்
திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை
சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல்
பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி
யோங்கட் கரியதுண்டே. 4.95.3
916 மாயமெல் லாமுற்ற விட்டிருள்
நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தா
னவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந்
திருப்பா திரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென்
சிந்தையுள் நின்றனவே. 4.95.4
917 வைத்த பொருள்நமக் காமென்று
சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய
நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா
ரவர்பா திரிப்புலியூர்
அத்தன் அருள்பெற லாமோ
அறிவிலாப் பேதைநெஞ்சே. 4.95.5
918 கருவாய்க் கிடந்துன் கழலே
நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம்
பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலியச் சிவாய
நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா
திரிப்புலி யூரரனே. 4.95.6
919 எண்ணா தமரர் இரக்கப்
பரவையுள் நஞ்சமுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரந்
தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள்
பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழல்நங்
கருத்தில் உடையனவே. 4.957
920 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர
வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள்
செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
மேல்வைத்த தீவண்ணனே. 4.95.8
921 மண்பா தலம்புக்கு மால்கடல்
மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர்
வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோ ந்
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட்
சுடரான் கழலிணையே. 4.95.9
922 திருந்தா அமணர்தந் தீநெறிப்
பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம்
புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித்
தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற
வாமல்வந் தேன்றுகொள்ளே. 4.95.10
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்,
தேவியார் - தோகையம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
Goto Main book