MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.97 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    933 கோவாய் முடுகி யடுதிறற்
    கூற்றங் குமைப்பதன்முன்
    பூவா ரடிச்சுவ டென்மேற்
    பொறித்துவை போகவிடின்
    மூவா முழுப்பழி மூடுங்கண்
    டாய்முழங் குந்தழற்கைத்
    தேவா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.1
    934 காய்ந்தாய் அனங்கன் உடலம்
    பொடிபடக் காலனைமுன்
    பாய்ந்தாய் உயிர்செகப் பாதம்
    பணிவார்தம் பல்பிறவி
    ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற்
    கருளாயுன் அன்பர்சிந்தை
    சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.2
    935 பொத்தார் குரம்பை புகுந்தைவர்
    நாளும் புகலழிப்ப
    மத்தார் தயிர்போல் மறுகுமென்
    சிந்தை மறுக்கொழிவி
    அத்தா அடியேன் அடைக்கலங்
    கண்டாய் அமரர்கள்தஞ்
    சித்தா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.3
    936 நில்லாக் குரம்பை நிலையாக்
    கருதியிந் நீணிலத்தொன்
    றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு
    வேனைவந் தாண்டுகொண்டாய்
    வில்லேர் புருவத் துமையாள்
    கணவா விடிற்கெடுவேன்
    செல்வா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.4
    937 கருவுற் றிருந்துன் கழலே
    நினைந்தேன் கருப்புவியிற்
    தெருவிற் புகுந்தேன் திகைத்தடி
    யேனைத் திகைப்பொழிவி
    உருவிற் றிகழும் உமையாள்
    கணவா விடிற்கெடுவேன்
    திருவிற் பொலிசத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.5
    938 வெம்மை நமன்தமர் மிக்கு
    விரவி விழுப்பதன்முன்
    இம்மையுன் தாளென்றன் நெஞ்சத்
    தெழுதிவை ஈங்கிகழில்
    அம்மை அடியேற் கருளுதி
    யென்பதிங் காரறிவார்
    செம்மை தருசத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.6
    939 விட்டார் புரங்கள் ஒருநொடி
    வேவவோர் வெங்கணையாற்
    சுட்டாயென் பாசத் தொடர்பறுத்
    தாண்டுகொள் தும்பிபம்பும்
    மட்டார் குழலி மலைமகள்
    பூசை மகிழ்ந்தருளுஞ்
    சிட்டா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.7
    940 இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்
    டிமையோர் பொறையிரப்ப
    நிகழ்ந்திட அன்றே விசயமுங்
    கொண்டது நீலகண்டா
    புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்
    தீரப் புரிந்துநல்காய்
    திகழ்ந்த திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.8
    941 தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்
    துன்றன் சரண்புகுந்தேன்
    எக்காதல் எப்பயன் உன்றிற
    மல்லால் எனக்குளதே
    மிக்கார் திலையுள் விருப்பா
    மிகவட மேருவென்னுந்
    திக்கா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.9
    942 பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்
    புற்றவன் பொன்முடிதோள்
    இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்
    டலற இரங்கிஒள்வாள்
    குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்
    குற்றக் கொடுவினைநோய்
    செறுத்தாய் திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book