MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  இருபா இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார் )
  -------------------
  அன்பர்களே,

  மெய்கண்ட சாத்திரங்கள் 14-இல் தலை சிறந்தது மெய்கண்டாரின் சிவஞானபோதமாகும்.
  தமிழ் தத்துவச் சிந்தனையின் சிகரமாய் தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும் ஆழத்தை
  கொண்டுள்ளதாகத் திகழ்கின்றது. அதற்கு அடுத்தபடியாக எண்ணத் தருவது இருபா இருபது
  என்னும் சிறிய நூலாகும். மெய்கண்டார் மேற்பார்வையில் எழுந்தனவாக
  அருணந்தியின் சிவஞானசித்தியாரும் இந்நூலும் மனவாசகங் கடந்தாரின் உண்மை விளக்கம்
  எனும் நூலும் ஆகும்.

  1.
  கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி
  மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் -- வெண்ணெய் நல்லூர்
  மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை
  கைகண்டார் உள்ளத்துக் கண்

  2.
  கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என
  வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ!
  காரா கிரகக் கலி ஆழ்வேனை நின்
  பேரா இன்பத்து இருத்திய பெரும!
  வினவல் ஆனாது உடையேன் எனது உளம்
  நீங்கா நிலை ஊங்கும் உளையால்
  அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின்
  ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல்
  திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய்
  சுத்தன் அமலன் சோதி நாயகன்
  முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா
  வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்
  வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும!
  இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும்
  பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின்
  வேறோ உடனோ விளம்பல் வேண்டும்
  சீறி அருளல் சிறுமை உடைத்தால்.
  அறியாது கூறினை அபக்குவ பக்குவக்
  குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின்
  அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும்
  பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால்
  பக்குவம் அதனால் பயன்நீ வரினே
  நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ
  தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே
  மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ
  நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ
  உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே
  இணை இலி ஆயினை என்பதை அறியேன்
  யானே நீக்கினும் தானே நீங்கினும்
  கோனே வேண்டா கூறல் வேண்டும்
  காண்பார் யார்கொல் காட்டாக்கால் எனும்
  மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்
  கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின்
  ஆட்பால் அவர்க்கு அருள் என்பதை அறியே

  3.
  அறிவு அறியாமை இரண்டும் அடியேன்
  செறிதலால் மெய்கண்ட தேவே -- அறிவோ
  அறியேனோ யாது என்று கூறுகேன் ஆய்ந்து
  குறிமாறு கொள்ளாமல் கூறு.

  4.
  கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
  வேறு கிளக்கில் விகற்பம் கற்பம்
  குரோதம் மோகம் கொலை அஞர் மதம் நகை
  விராய் எண் குணனும் ஆணவம் என விளம்பினை
  அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம்
  பைசால சூனியம் மாச்சரியம் பயம்
  ஆயேழ் குணனும் மாயைக்கு அருளினை
  இருத்தலும் கிடத்தலும் இருவினை இயற்றலும்
  விடுத்தலும் பரநிந்தை மேவல் என்று எடுத்த
  அறுவகைக் குணனும் கருமத்து அருளினை
  ஆங்கு அவைதாமும் நீங்காது நின்று
  தம்வழிச் செலுத்தித் தானே தானாய்
  என்வழி என்பது ஒன்று இன்றாம், மன்ன!
  ஊரும் பேரும் உருவுங் கொண்டு என்
  ஊரும் பேரும் உருவுங் கெடுத்த
  பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியில்
  சைவ சிகாமணி! மெய்யர் மெய்ய!
  மும்மலம் சடம் என மொழிந்தனை அம்ம
  மாறுகோள் கூறல் போலும் தேறும்
  சடம்செயல் அதனைச் சார்ந்திடும் எனினே
  கடம்படம் அதனுள் கண்டிலம் விடப்படும்
  ஊந்நிரள் போன்றது ஆயில் தோன்றி
  அணைந்து ஆங்கு அகறல் வேண்டும் குணங்களும்
  பன்மை இன்று ஆகும் எம்மைவந்து அணையத்
  தானோ மாட்டாது யானோ செய்கிலன்
  நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு
  இயல்பு எனில் போகாது என்றும் மயல்கெடப்
  பந்தம் வந்தவாறு இங்கு
  அந்தம் ஆதி இல்லாய் ! அருளே.

  5.
  அருள் முன்பு நில்லாது அடியேற்குக் கண்ணின்று
  இருள்கொண்டவாறு என்கொல் எந்தாய்! -- மருள்கொண்ட
  மாலையாய்! வெண்ணெய்வாழ் மன்னவா! என்னுடைய
  மால் ஐயா மாற்ற மதி.

  6.
  மதிநுதல் பாகன் ஆகிக் கதிதர
  வெண்ணெய்த் தோன்றி நணி உள் புகுந்து என்
  உளம்வெளி செய்து உன் அளவில் காட்சி
  காட்டி என் காட்டினை எனினும் நாட்டிஎன்
  உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்
  பாதாள சத்தி பரியந்தம் ஆக
  ஓதி உணர்ந்த யானே ஏக
  முழுதும் நின்றனனே, முதல்வ! முழுதும்
  புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
  ஆங்கு ஐந்து அவத்தையும் அடைந்தனன் நீங்கிப்
  போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
  எவ்விடத்து உண்மையும் இவ்விடத்து ஆதலும்
  செல் இடத்து எய்தலும் தெரித்த மூன்றினும்
  ஒன்று எனக்கு அருளல் வேண்டும் என்றும்
  இல்லது இலதாய் உள்ளது உளது எனும்
  சொல்லே சொல்லாய்ச் சொல்லும் காலைச்
  சிறுத்தலும் பெருத்தலும் இலவே நிறுத்தி
  யானை எறும்பின் ஆனது போல் எனில்
  ஞானம் அன்று அவை காய வாழ்க்கை
  மற்றவை அடைந்தன உளவெனின் அற்றன்று
  விட்ட குறையின் அறிந்து தொன்று
  தொட்டு வந்தனன் என வேண்டும் நட்ட
  பெரியதில் பெருமையும் சிறியதில் சிறுமையும்
  உரியது நினக்கே உண்மை, பெரியோய்!
  எனக்கு இன்று ஆகும் என்றும்
  மனக்கு இனியாய்! இனி மற்றது மொழியே

  7.
  மொழிந்த அவத்தை முதல் அடியேன் நின்றாங்கு
  ஒழிந்தன நான்கும் உணர -- இழிந்து அறிந்து
  ஏறிற்று இங்கு இல்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே!
  தேறிற்று என் கொண்டு தெரித்து.

  8.
  தெரித்தது என் கொண்டு எனை உருத்திர பசுபதி!
  செடிய னேனையும் அடிமை செய்யப்
  படிவம் கொண்டு வடிவுகாட்டு இல்லாப்
  பெண்ணை ஆளும் வெண்ணெய் மெய்ய!
  அவத்தையில் தெரித்தனன் ஆயின் அவத்தை
  தெரித்தாங்கு இருத்தலும் இலனே திருத்தும்
  காலம் முதலிய கருவி ஆயின்
  மாலும் பிரமனும் வந்து எனை அடையார்
  ஓதும் காலை ஒன்றை ஒன்று உணரா
  சேதனம் அன்று அவை பேதைச் செயலும் இச்
  சேதன ஆனால் செயல் கொள வேண்டும்
  போதம் அவற்றைப் புணர்வதை அறியேன்
  கருவித் திரளினும் காண்பது ஓர் ஒன்றாய்
  ஒருவுதல் அறியேன் உணர்வு இலன் ஆதலின்
  நிற்கொடு கண்டனன் ஆயின் எற்குக்
  கருவி ஆயினை பெருமையும் இலவே
  யானே பிரமம் கோனே வேண்டா
  இன்னும் கேண்மோ, மன்ன! நின்னின்
  முன்னம் என்றன் உணர்வு இலன் ஆதலின்
  என்னைக் காண்பினும் காண்பல உன்னோடு
  ஒருங்கு காண்பினும் காண்பல அரும்துணை
  கண்டவாறு ஏது எனது கண்ணே!
  அண்டவாண! அருட்பெரும் கடலே!

  9.
  கடல் அமுதே! வெண்ணெய்க் கரும்பே! என் கண்ணே!
  உடலகத்து மூலத்து ஒடுங்கச் -- சடலக்
  கருவியாது ஆங்கு உணர்த்தக் காண்பதுதான் என்னை
  மருவியது என்று உரைக்க மன்.

  10.
  மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
  அன்னியம் ஆக்கி அருள்வழி அதனால்
  என்னுள் புகுந்தனை எனினே முன்னைத்
  திரிமலம் தீர்த்த தேசிக! நின்னோடு
  உருவுதல் இன்றி உடந்தையே ஆகும்
  பெருநிலை ஆகல் வேண்டும் மருவிடும்
  மும்மலம் அதனால் எம்முள் நின்றிலை எனில்
  அம்மலத் திரிவும் செம்மலர்த் தாள்நிழல்
  சேர்தலும் இலவாய்ச் சார்பவை பற்றிப்
  பெயர்வு இலன் ஆகும், பெரும! தீர்வு இன்று
  அமைந்த கருமத்து இயைந்ததை அல்லது
  சமைந்தன இலஎனச் சாற்றில் அமைந்த
  மாயேயம் கன்மம் மாமலம் மூன்றும்
  மாயாது ஆகவே ஆர்ச்சன மாயையின்
  உற்பவம் தீராது ஒழுகும் ஒன்று ஒன்று
  நிற்சமம் ஆயின் அல்லது நிற்பெறல்
  இல்லென மொழிந்த தொல் அறம் தனக்கும்
  ஏயாது ஆகும் நாயேன் உளத்து
  நின்றனை என்பனோ நின்றிலை என்பனோ
  பொன்றிய பொன்றிற்றில மலம் என்பனோ
  ஒன்றினை உரைத்து அருள் மன்ற குன்றாப்
  பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க்கு அதிபதி!
  கைகண் தலைவாய் கால்செவி மூக்கு உயர்
  மெய்கொண்டு என்வினை வேர் அறப் பறித்த
  மெய்கண்ட தேவ! வினையிலி!
  மைகொண்ட கண்ட! வழுவிலென் மதியே!

  11.
  மதிநின்பால் இந்த மலத்தின்பால் நிற்க
  விதிஎன்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய! -- பதிநின்பால்
  வந்தால் இதில்வரத்தில் வந்து இரண்டும் பற்றுகிலேன்
  எந்தாய் இரண்டு ஆமாறு என்

  12.
  எண்திசை விளங்க இருட்படாம் போக்கி
  முண்டகம் மலர்த்தி மூதறிவு அருளும்
  மேதினி உதய மெய்கண்ட தேவ!
  கோதுஇல் அமுத! குணப்பெரும் குன்ற!
  என்னின் ஆர்தலும் அகறலும் என்னைகொல்
  உன்னில் துன்னி உனாவிடில் பெயர்குவம்
  என்னும் அதுவே நின் இயல்பு எனினே
  வியங்கோள் ஆளனும் ஆகி இயங்கலும்
  உண்டு எனப்படுபவை எண்தாள் முக்கண்
  யாங்கணும் பிரியாது ஓங்கு நின் நிலையின்
  யான் வந்து அணைந்து மீள்குவன் ஆயின்
  ஆற்றுத்துயர் உற்றோர் அணிநிழல் நசைஇ
  வீற்றுவீற்று இழிதர வேண்டலும் வெறுத்தலும்
  இன்றிச் சாயைக்கு நன்றுமன் இயல்பே
  அனையை ஆகுவை நினைவு அரும் காலை
  இந்நிலை அதனில் ஏழையேற்கு இரங்கி
  நின்னை வெளிப்படுத்து ஒளிப்பை நியேல்
  அருள்மாறு ஆகும், பெரும! அ•து அன்றியும்
  நிற்பெற்ற அவர்க்கும் உற்பவம் உண்டு எனும்
  சொற்பெறும் அ•து இத் தொலுலகு இல்லை
  அவ்வவை அமைவும் சோர்வும் மயர்வுஅறச்
  சொல்லில் சொல்லெதிர் சொல்லாச்
  சொல்லே சொல்லுக சொல் இறந்தோயே!

  13.
  இறந்தோய் கரணங்கள் எல்லாம் எனக்குச்
  சிறந்தோய் எனினும் மெய்த் தேவே! -- பிறந்து உடனாம்
  காயம் கொளவும் கொளாமலும் கண்டதுநீ
  ஆயன்கொல் பாதவத்து அற்று

  14.
  அற்றதுஎன் பாசம் உற்றது உன் கழலே
  அருள்துறை உறையும் பொருள்சுவை நாத!
  வேறு என்று இருந்த என்னை யான் பெற
  வேறு இன்மை கண்ட மெய்கண்ட தேவ!
  இருவினை என்பது என்னைகொல் அருளிய
  மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
  இதமே அகிதம் எனும் இவை ஆயில்
  கணத்திடை அழியும் தினைத்துணை ஆகா
  காரணம் சடம் அதன் காரியம் அ•தால்
  ஆரணங்கு ஆம் வழி அடியேற்கு என்னைகொல்
  செயல் எனது ஆயினும் செயலே வாராது
  இயமன் செய்தி இதற்கு எனில் அமைவும்
  பின்னை இன்று ஆகும் அன்னதும் இங்குச்
  செய்திக்கு உள்ள செயல் அவை அருத்தின்
  மையல்தீர் இயமற்கு வழக்கு இல்லை, மன்ன!
  ஒருவரே அமையும் ஒருவா ஒருவற்கு
  இருவரும் வேண்டா இறைவனும் நின்றனை
  நின்னது கருணை சொல் அளவு இன்றே
  அமைத்தது துய்ப்பின் எமக்கு அணைவு இன்றாம்
  உள்ளது போகாது இல்லது வாராது
  உள்ளதே உள்ளது எனுமுரை அதனால்
  கொள்ளும் வகையால் கொளுத்திடும் ஆயின்
  வள்ளன்மை எலாம் உள்ளிட அமையும்
  ஈய வேண்டும் எனும்விதி இன்றாம்
  ஆயினும் என்னை அருந்துயர்ப் படுத்தல்
  நாயி னேற்கு நன்றுமன் மாயக்
  கருமமும் கரும பந்தமும்
  தெருள அருளும் சிவபெரு மானே!

  15.
  மான் அமரும் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன!
  போனவினை தானே பொருந்துமோ -- யான் அதனில்
  ஆவனோ ஆக்காய் அமலனாம் நின் அருள்தான்
  தேவனே! யாதுக்கோ தேர்.

  16.
  தேராது உரைப்பன் தெருமரல் உள்ளத்தொடு
  பேராது அருளுதல் பெரியோர் கடனே
  நின்னைக் கலப்பது என் உண்மை எனில்
  நினது நேர்மை சொல்மனத்து இன்றே
  எழுவகைத் தாதுவின் ஏழ்துளை இரண்டும்
  பெருமுழைக் குரம்பையில் பெய்து அகத்து அடக்கி
  நீக்கி என்றனைப் போக்குஅற நிறுத்தி
  இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
  விச்சை சாலவும் வியப்பு அது நிற்க
  வாக்கும் மனமும் போக்கு உள தனுவும்
  சொல்லும் நினைவும் செய்யும் செயலும்
  நல்லவும் தீயவும் எல்லாம் அறிந்து
  முறை பிறழாமல் குறைவு நிறைவு இன்றாய்க்
  காலமும் தேசமும் மால் அற வகுத்து
  நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே
  சான்றோர் செய்தி மான்று இருப்பு இன்றே
  சாலார் செயலே மால் ஆகுவதே
  அத்துவா மெத்தி அடங்கா வினைகளும்
  சுத்திசெய் தனையே ஒத்த கன்மத்திடை
  நீங்கின என்னை ஊங்கு ஊழ் வினைகளும்
  ஆங்கு அவை அருத்துவது ஆரைகொல் அதனால்
  கருமம் அருத்தும் கடன் அது இன்றாம்
  தருமம் புரத்தல் பெருமையது அன்றே
  கண்ணினுள் மணிய! கருத்தினுள் கருத்த!
  வெண்ணெய் வேந்த! மெய்கண்ட தேவ!
  இடர்படு குரம்பையில் இருத்தித்
  துடைப்பது இல்லா அருள் தோன்றிடச் சொல்லே.

  17.
  சொல்தொழும்பு கொள்ள நீ சூழ்ந்ததுவும் நின்செயல்கள்
  மற்றவர்கள் நின்நோக்கில் மாய்ந்த உயிர்க் -- குற்றம்
  ஒளித்தி யாங்கு, ஐய! உயர்வெண்ணெய் நல்லூர்க்
  குளித்தமதுக் கொன்றை எம் கோ!

  18.
  கோலம் கொண்ட ஆறு உணராதே
  ஞாலம் காவலன் யான் எனக் கொளீஇப்
  பொய்யை மெய்யனப் புகன்று வையத்து
  ஓடாப் பூட்கை நாடி நாடா
  என்னுள் கரந்து என் பின் வந்து அருளி
  என்னையும் தன்னையும் அறிவின்றி இயற்றி
  என்னது யான் எனும் அகந்தையும் கண்டு
  யாவயின் யாவையும் யாங்கணும் சென்று
  புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
  மிக்க போகம் விதியால் விளைத்திட்டு
  என்பணி ஆளாய் எனைப் பிரியாதே
  ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு
  என்வழி நின்றனன் எந்தை அன்னோ
  அருள்மிக உடைமையின் அருள்துறை வந்து
  பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை ஆதலும்
  கைகண்டு கொள்ளெனக் கடல் உலகு அறிய
  மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத்
  தன்னுள் கரந்து தான்முன் ஆகித்
  தன்னதும் தானுமாய் என்னை இன்றாக்கித்
  தன்னையும் என்னையும் தந்து தனது
  செய்யாமையும் என்செயல் இன்மையும்
  எம்மான் காட்டி எய்தல்
  அம்ம எனக்கே அதிசயம் தருமே.

  19.
  தருமா தருமத் தலைநின்று ஆழ்வேனைக்
  கருமா கடல்விடம் உண் கண்டப் -- பெருமான்
  திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான்
  உரு என்ன வந்து எடுத்தான் உற்று.

  20.
  உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றும்
  அற்றவர்க்கு அற்றவன் அல்லவர்க்கு அல்லவன்
  அந்தம் ஆதி இல்லவன் வந்து
  குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும்
  பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு
  இருள்வெளி ஆகும் மருளினை அறுத்து
  வந்து புகுதலும் சென்று நீங்கலும்
  இன்றி ஒன்றாய் நின்ற அந்நிலையில்
  ஒன்று ஆகாமல் இரண்டா காமல்
  ஒன்றும் இரண்டும் இன்றா காமல்
  தன்னது பெருமை தாக்கான் ஆயினும்
  என்னது பெருமை எல்லாம் எய்தித்
  தன்னை எனக்குத் தருவதை அன்றியும்
  என்னையும் எனக்கே தந்து தன்னது
  பேர் ஆனந்தப் பெரும் கடல் அதனுள்
  ஆரா இன்பம் அளித்துத் தீரா
  உள்ளும் புறம்பும் ஒழிவுஇன்றி நின்ற
  வள்ளனமை காட்டி மலர் அடி அருளிய
  மன்னன் எங்கோன் வார்புனல் பெண்ணை
  வெண்ணெய் காவலன் மெய்கண்டதேவன்
  அண்ணல் அருள் ஆலயத்தன் நண்ணிய
  மலம் முதலாயின மாய்க்கும்
  உலக உயிர்க் எல்லாம் ஒரு கண்ணே.

  (முற்றும்)