MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியார்
    அருளிச் செய்த
    சிவஞானசித்தியார் சுபக்கம்


    திருச்சிற்றம்பலம்
    விநாயகர் வணக்கம்

    ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
    நால்வாய்ஐங் கரத்தன்ஆறு
    தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான்
    தருமொருவா ரணத்தின் தாள்கள்
    உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே
    இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
    திருகோட்டும் அயன்திருமால் செல்வமுமொன்
    றோவென்னச் செய்யும் தேவே. 1

    பாயிரம்

    அறுவகை சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாம்
    குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்(கு)
    அறிவினில் அருளால் மன்னி அம்மையோ டப்ப னாகிச்
    செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம். 2
    என்னைஇப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தே
    தன்னைவைத் தருளி னாலே தாளிணை தலைமேற் சூட்டும்
    மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ் மெய்கண் டான்நூல்
    சென்னியிற் கொண்டு சைவத்திறத்தினைத் தெரிக்கலுற்றாம். 3
    பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
    தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
    கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
    புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம். 4
    மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றும்
    குறைவிலா அளவி னானுங் கூறொனா தாதி நின்ற
    இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை
    நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்து மன்றே. 5
    அருளினால் ஆக மத்தே அறியலாம் அளவி னாலும்
    தெருளலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை யுள்ளே
    மருளெலா நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா
    இருளெலா மிரிக்க லாகும் அடியரோ டிருக்க லாமே. 6
    அளவை

    அளவை காண்டல் கருதல்உரை அபாவம் பொருளொப் பாறென்பர்,
    அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பெனநான்(கு),
    அளவை காண்பர் அவையிற்றின் மேலு மறைவர் அவையெல்லாம்,
    அளவை காண்டல் கருதல்உரை என்றிம் மூன்றின் அடங்கிடுமே. 7
    மாசறு காட்சி ஐயந் திரிவின்றி விகற்ப முன்னா
    ஆசற அறிவ தாகும் அனுமானம் அவினா பாவம்
    பேசுறு மேதுக் கொண்டு மறைபொருள் பெறுவ தாகும்
    காசறு முறையிம் மானத் தடங்கிடாப் பொருளைக் காட்டும். 8
    கண்ட பொருளை இரட்டுறவே கருதல் ஐயம் திரியவே,
    கொண்டல் திரிவாம் பெயர்ச்சாத்தி குணமே கன்மம் பொருளெனஐந்,
    துண்ட விகற்ப உணர்வினுக்குப் பொருளி னுண்மை மாத்திரத்தின்,
    விண்ட வில்லா அறிவாகும் விகற்ப மில்லாக் காட்சியே. 9
    காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென,
    ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம்,
    மாண்ட உரைதந்த் ரமந்த்ரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம்,
    பூண்ட அளவைக் கெதிர் புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே. 10
    அன்னிய சாதி யுமதன் சாதியும் அகன்று நிற்றல்
    தன்னியல் பன்னி யத்தைத் தவிர்ந்துதன் சாதிக் கொத்தல்
    துன்னிய பொதுஇ யற்கை சொனனஇவ் விரண்டி னுள்ளே
    மன்னிய பொருள்கள் யாவும் அடங்கிடு மான முற்றால். 11
    உயிரினோ டுணர்வு வாயில் ஔ¤யுரு வாதி பற்றிச்
    செயிரொடு விகற்ப மின்றித் தெரிவதிந் திரியக் காட்சி
    அயர்விலிந் திரிய ஞானம் ஐம்புலன் சார்ந்து யிர்க்கண்
    மயர்வற வந்த ஞானம் மானதக் காண்ட லாமே. 12
    அருந்தின்பத் துன்பம் உள்ளத் தறிவினுக் கராக மாத்
    தரும்தன்வே தனையாங் காட்சி சமாதியான் மலங்கள் வாட்டிப்
    பொருந்திய தேச கால இயல்பகல் பொருள்க ளெல்லாம்
    இருந்துணர் கின்ற ஞான மியோகநற் காண்ட லாமே. 13
    பக்க மூன்றின் மூன்றேது வுடைய பொருளைப் பார்த்துணரத்,
    தக்க ஞானந் தன்பொருட்டாம் பிறர்தம் பொருட்டாம் அனுமானம்,
    தொக்க இவற்றாற் பிறர்தௌ¤யச் சொல்லலாகும் அச்சொல்லும்,
    மிக்க வந்நு வயத்தினொடு வெதிரே கக்சொல் லெனஇரண்டாம். 14
    மூன்று பக்கம் பக்கம்நிகர் பக்கம் நிகரில் பக்கமெனத்,
    தோன்றும் பக்கந் துணிபொருளுக் கிடமாம் உவமை நிகர் பக்கம்,
    ஆன்ற பொருள்சென் றடையாத விடமா நிகரில் பக்கமுதல்,
    ஏன்ற இரண்டும் பொருளுண்மைக் கிடமாம் ஒன்று பொருளின்றாம். 15
    ஏது மூன்றாம் இயல்புகா ரியத்தோ டநுப லத்தியிவை,
    ஓதி னியல்பு மாமரத்தைக் காட்டல் உறுகா ரியம் புகைதன்,
    ஆதி யாய அனல்காட்ட லாகும் அநுப லத்தியது,
    சீத மின்மை பனியின்மை காட்டல் போலுஞ் செப்பிடிலே. 16
    புகையால் அனலுண் டடுக்களைபோ லென்னப் புகறல் அந்நுவயம்,
    வகையாம் அனலி லாவிடத்துப் புகையின் றாகும் மலரினொடு,
    முகையார் நீரிற் போலென்று மொழிதல் வெதிரே கச்சொல்இவை,
    தொகையால் உறுப்பைந் தொடுங் கூடச் சொல்லு வாரு முளர்துணிந்தே. 17
    போது நாற்றத் தால்அறிதல் பூர்வக் காட்சி அனுமானம்
    ஓது முறையா லறிவின்அள வுணர்தல் கருதல் அனுமானம்
    நீதி யான்முற் கன்மபல நிகழ்வ திப்போ திச்செய்தி
    ஆதி யாக வரும்பயனென் றறிதல் உரையால் அனுமானம். 18
    அநாதியே அமல னாய அறிவன்நூல் ஆக மந்தான்
    பின்ஆதிமா றின்றிப் பேணல் தந்திர மந்தி ரங்கள்
    மனாதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை யாகும்
    தனாதிஈ றிலாதான் தன்மை யுணர்த்துல் உபதே சந்தான். 19
    ஈண்டு பக்கப் போலிநான் கேதுப் போலி யொருமூன்றான்,
    வேண்டும் எழுமூன் றாகும்விளங் குவமைப் போலி யீரொன்பான்,
    காண்டுந் தோல்வித் தானம்இரண் டிருபத் திரண்டாம் கருதிலிவை,
    யாண்டு மொழிவர் அவையெல்லாம் அளக்கில் அறுபத் தைந்தாகும். 20

    பிராமணவியல்

    முதற் சூத்திரம் (21-90)

    ஒருவனோ டொருத்தீ ஒன்றென் றுரைத்திடும் உலகமெல்லாம்
    வருமுறை வந்து நின்று போவதும் ஆத லாலே
    தருபவன் ஒருவன் வேண்டும் தான்முதல் ஈறு மாகி
    மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே. 21
    உதிப்பதும் ஈறு முண்டென் றுரைப்பதிங் கென்னை முன்னோர்
    மதித்துல கநாதி யாக மன்னிய தென்ப ரென்னின்
    இதற்கியான் அனுமா னாதி யெடேனிப்பூ தாதி யெல்லாம்
    விதிப்படி தோற்றி மாயக் காணலாம் மேதி னிக்கே. 22
    இயல்புகாண் தோற்றி மாய்கை என்றிடின் இயல்பினுக்குச்,
    செயலதின் றியல்பு செய்தி செய்தியேல் இயல்ப தின்றாம்,
    இயல்பதாம் பூதந் தானே இயற்றிடுஞ் செய்தி யென்னில்,
    செயல்செய்வான் ஒருவன் வேண்டுஞ் செயற்படும் அசேத னத்தால். 23
    நிலம்புனல் அனல்கால் காண நிறுத்திடும் அழிக்கும் ஆக்கும்
    பலந்தரு மொருவ னிங்குப் பண்ணிட வேண்டா வென்னின்
    இலங்கிய தோற்ற நிற்றல் ஈறிவை இசைத லாலே
    நலங்கிளர் தோற்ற நாசம் தனக்கிலா நாதன் வேண்டும். 24
    சார்பினில் தோன்று மெல்லாம் தருபவன் இல்லை யென்னில்
    தேரின்இல் லதற்கோ தோற்றம் உள்ளதற் கோநீ செப்பாய்
    ஓரின்இல் லதுவுந் தோன்றா துள்ளதேல் உதிக்க வேண்டா
    சோர்விலா திரண்டு மின்றி நிற்பது தோன்று மன்றே. 25
    உள்ளது மிலது மின்றி நின்றதொன் றுளதே லுண்டாம்
    இல்லதே லில்லை யாகும் தோற்றமும் இசையா தாகும்
    உள்ளகா ரணத்தி லுண்டாம் காரிய முதிக்கும் மண்ணில்
    இல்லதாம் பங்க டாதி எழில்தரு மியற்று வானால். 26
    ஒருபொரு ளொருவ னின்றி உளதில தாகு மென்னில்
    தருபொருளுண்டேலின்றாம் தன்மையின் றின்றே லுண்டாய்
    வருதலின் றிலது கார்ய முதலுள தாகு மென்னில்
    கருதுகா ரியமு முண்டாய்த் தோற்றமுங் கருத்தா வாலாம். 27
    காயத்தின் அழிவு தோற்றம் கண்டனம் உலகற் காணா
    நீஇத்தை உரைத்த வாறிங் கென்னெனில் நிகழத்து முண்மை
    மாயத்த உலகம் பூநீர் தீவளி வான மாதி
    யாயித்தா னொன்றி னொன்று தோன்றிநின் றழித லாலே. 28
    ஓரிடம் அழியப் பின்னும் ஓரிடம் நிற்கும் ஒக்கப்
    பாரிடம் அழிவ தின்றாம் என்றிடிற் பயில்வித் தெல்லாம்
    காரிட மதனிற் காட்டும் அங்குரங் கழியும் வேனில்
    சீருடைத் துலகு காலஞ் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும். 29
    காலமே கடவு ளாகக் கண்டனம் தொழிலுக் கென்னில்
    காலமோ அறிவின் றாகும் ஆயினுங் காரி யங்கள்
    காலமே தரவே காண்டும் காரணண் விதியி னுக்குக்
    காலமுங் கடவு ளேவ லால்துணைக் கார ணங்காண். 30
    அழிந்தபின் அணுக்கள் தாமே அகிலமாய் வந்து நின்று
    கழிந்திடுங் கன்மத் தென்னில் கன்மமும் அணுவுங் கூட
    மொழிந்திடுஞ் சடமே யாகி மொழிதலான் முடியா செய்தி
    ஒழிந்திடும் அணுரூ பங்கள் உலகெலா மொடுங்கு மன்றே. 31
    காரண அணுக்கள் கெட்டாற் காரிய உலகின் றென்னில்
    காரண மாயை யாகக் காரியங் காண லாகும்
    காரண மாயை யென்னை காண்பதிங் காணுவே யென்னில்
    காரண மாயை யேகாண் காரியம் அணுவிற் கண்டால். 32
    காரிய மென்ப தென்னை காரண அணுவை யென்னில்
    காரியம் அவய வத்தாற் கண்டனங் கடாதி போலக்
    காரிய உருவ மெல்லாம் அழிதருங் கார ணத்தால்
    காரிய உறுப்பின் மாயை தருமெனக் கருதி டாயே. 33
    தோற்றமும் நிலையு மீறும் மாயையின் தொழில தென்றே
    சாற்றிடு முலகம் வித்துச் சாகாதி அணுக்க ளாக
    ஏற்றதே லீண்டு நிற்கும் இல்லதே லியைவ தின்றாம்
    மாற்றநீ மறந்தா யித்தால் மாயையை மதித்தி டாயே. 34
    மாயையி னுள்ள வஞ்சம் வருவது போவ தாகும்
    நீயதிங் கில்லை யென்னில் நிகழ்த்திடு முயலிற் கோடு
    போய்உகும் இலைக ளெல்லாம் மரங்களில் புக்குப் போதின்
    ஆயிடும் அதுவு மென்னிற் காரணங் கிடக்க வாமே. 35
    கருதுகா ரணமுண் டாகக் காரிய முள்ள தாகி
    வருதலால் அநாதி வைய மற்றொரு கடவு ளித்தைத்
    தருதலால் ஆதி யாகச் சாற்றலு மாகு மாயைக்
    கொருவனா ரென்னிங் கென்னின் உள்ளவா றுரைப்பக் கேள்நீ. 36
    புத்திமற் காரி யத்தால் பூதாதி புருடன் தானும்
    அத்தனு கரணம் பெற்றால் அறிதலால் அவற்றை மாயை
    உய்த்திடும் அதனான் மாயைக் குணர்வொன்று மில்லையென்றே
    வைத்திடு மதனால் எல்லாம் வருவிப்பா னொருவன் வேண்டும். 37
    காரிய கார ணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம்
    பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைநி மித்தம்
    தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக
    ஆரியன் குலால னாய்நின் றாக்குவன் அகில மெல்லாம். 38
    விந்துவின் மாயை யாகி மாயையின் அவ்வி யத்தம்
    வந்திடும் விந்துத் தன்பால் வைகரி யாதி மாயை
    முந்திடும் அராக மாதி முக்குண மாதி மூலம்
    தந்திடுஞ் சிவன வன்தன் சந்நிதி தன்னில் நின்றே. 39
    வைகரி செவியில் கேட்ப தாய்அத்த வசன மாகி
    மெய்தரும் உதான வாயு மேவிட விளைந்த வன்னம்
    பொய்யற அடைவு டைத்தாய்ப் புந்திகா ரணம தாகி
    ஐயமில் பிராண வாயு அடைந்தெழுந் தடைவு டைத்தாம். 40
    உள்ளுணர் ஓசை யாகிச் செவியினில் உறுதல் செய்யா(து)
    ஔ¢ளிய பிராண வாயு விருத்தியை உடைய தன்றித்
    தௌ¢ளிய அக்க ரங்கள் சிந்திடுஞ் செயல தின்றி
    மௌ¢ளவே எழுவ தாகும் மத்திமை வேற தாயே. 41
    வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறு விபாக மாகித்
    தோற்றுதல் அடைவொ டுக்கிச் சொயம்பிர காச மாகிச்
    சாற்றிடு மயிலி னண்டம் தரித்திடும் சலமே போன்றங்(கு)
    ஆற்றவே உடைய தாகிப் பைசந்தி அமர்ந்து நிற்கும். 42
    சூக்கும வாக்க துள்ளோர் சோதியாய் அழிவ தின்றி
    ஆக்கிடும் அதிகா ரத்திற் கழிவினை தன்னைக் கண்டால்
    நீக்கமில் அறிவா னந்தம் முதன்மைநித் தியமு டைத்தாய்ப்
    போக்கொடு வரவி ளைப்பும் விகாரமும் புருட னின்றாம். 43
    நிகழ்ந்திடும் வாக்கு நான்கு நிவிர்த்தாதி கலையைப் பற்றித்
    திகழ்ந்திடும் அஞ்ச தாகச் செயல்பரி ணாம மன்று
    புகழ்ந்திடும் விருத்தி யாகும் படங்குடி லானாற் போல
    மகிழ்ந்திடும் பிரம மன்று மாமாயை என்பர் நல்லோர். 44
    வித்தைகள் வித்தை ஈசர் சதாசிவர் என்றி வர்க்கு
    வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்தி ரங்கள்
    தத்துவம் சரீரம் போகம் கரணங்கள் தாமெ லாமும்
    உய்த்திடும் வைந்த வந்தான் உபாதான மாகி நின்றே. 45
    மூவகை அணுக்க ளுக்கு மறைமையால் விந்து ஞானம்
    மேவின தில்லை யாகில் விளங்கிய ஞான மின்றாம்
    ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞான முண்டேல்
    சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே. 46
    அருவினில் உருவந் தோன்றி அங்காங்கி பாவ மாகி
    உருவினில் உருவ மாயே உதித்திடும் உலக மெல்லாம்
    பெருகிடும் சுருங்கும் பேதா பேதமோ டபேத மாகும்
    ஒருவனே யெல்லா மாகி அல்லவா யுடனு மாவன். 47
    அருஉரு ஈனா தாகும் விகாரமும் அவிகா ரத்தின்
    வருவது மில்லை என்னின் வான்வளி யாதி பூதம்
    தருவது தன்னின் மேக சலனசத் தங்க ளோடும்
    உருவமின் உருமே றெல்லாம் உதித்திடும் உணர்ந்து கொள்ளே. 48
    மண்ணினிற் கடாதி யெல்லாம் வருவது குலால னாலே
    எண்ணிய உருவ மெல்லாம் இயற்றுவன் ஈசன் தானும்
    கண்ணுகா ரியங்க ளெல்லாம் காரண மதனிற் காண்பன்
    பண்ணுவ தெங்கே நின்றிங் கென்றிடிற் பகரக் கேள்நீ. 49
    சீலமோ உலகம் போலத் தெரிப்பரி ததனால் நிற்கும்
    கோலமும் அறிவா ரில்லை ஆயினுங் கூறக் கேள்நீ
    ஞாலமே ழினையுந் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும்
    காலமே போலக் கொள்நீ நிலைசெயல் கடவுட் கண்ணே. 50
    கற்றநூற் பொருளும் சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும்
    பெற்றியும் சாக்கி ராதி உயிரினிற் பிறந்தொ டுக்கம்
    உற்றதும் போல வெல்லா உலகமும் உதித்தொ டுங்கப்
    பற்றொடு பற்ற தின்றி நின்றனன் பரனு மன்றே. 51
    உயிரவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பதென் அரன்பா லென்னில்
    செயிருறு மலத்தி னாகும் சிதைந்ததே தென்னிற் சித்த(து)
    அயர்வொரிக் காரி யங்கள் அழியுங்கா ரணங்கி டக்கும்
    பயில்தரு காரி யம்பின் பண்டுபோற் பண்ணு மீசன். 52
    தோற்றுவித்தளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும்
    போற்றவே உடைய னீசன் புகுந்தது விகார மென்னில்
    சாற்றிய கதிரோன் நிற்கத் தாமரை அலருங் காந்தம்
    காற்றிடும் கனலை நீரும் கரந்திடும் காசி னிக்கே. 53
    உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக் கலகம் ஓத
    வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னின்
    விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள்
    புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே. 54
    இறுதியாம் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம்
    உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதா னுண்டா காதாம்
    அறுதியில் அரனே யெல்லாம் அழித்தலால் அவனா லின்னும்
    பெறுதுநாம் ஆக்கம் நோக்கம் பேரதி கரணத் தாலே. 55
    சொன்னஇத் தொழில்க ளென்ன காரணந்தோற்ற வென்னின்
    முன்னவன் விளையாட் டென்று மொழிதலு மாம்உ யிர்க்கு
    மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே
    துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதுஞ் சொல்ல லாமே. 56
    அழிப்பிளைப் பாற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம்
    கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பில்
    தெழித்திடல் மலங்க ளெல்லாம் மறைப்பருள் செய்தி தானு
    பழிப்பொழ பந்தம் வீடு பார்த்திடின் அருளே எல்லாம். 57
    அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
    உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
    அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
    உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே. 58
    நண்ணிடும் உருவ மென்னின் நமக்குள உருவம் போலப்
    பண்ணிட ஒருவன் வேண்டும் இச்சையேற் பலரும் இச்சை
    கண்ணிய உருவங் கொள்ளேம் யாம்பெருங் கடவுள் தானும்
    எண்ணிய யோக சித்தர் போலுரு இசைப்பன் காணே. 59
    வித்தக யோக சித்தர் வேண்டுருக் கொள்ளு மாபோல்
    உத்தமன் கொள்வ னென்னின் அவர்களி லொருவ னாவன்
    அத்தகை யவர்க ளெல்லாம் ஆக்குவ தருளா லாங்கு
    வைத்தது மாயை யென்னின் வடிவெலா மாயை யாமே. 60
    மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும்
    மாயஆ ணவம கன்ற அறிவொடு தொழிலை ஆர்க்கும்
    நாயகன் எல்லா ஞானத் தொழின்முதல் நண்ண லாலே
    காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால். 61
    சத்தியே வடிவென் றாலும் தான்பரி ணாம மாகும்
    நித்தமோ அழியும் அத்தால் நின்மலன் அருவே யென்னின்
    அத்துவா மார்க்கத் துள்ளான் அலனிவன் அருமை தன்னைப்
    புத்திதா னுடையை போல இருந்தனை புகலக் கேள்நீ. 62
    உலகினில் பதார்த்த மெல்லாம் உருவமோ னருவ மாகி
    நிலவிடு மொன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல
    அலகிலா அறிவன் றானும் அருவமே யென்னி லாய்ந்து
    குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்திடாயே. 63
    பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான்
    அந்தமும் ஆதி யில்லான் அளப்பில னாத லாலே
    எந்தைதான் இன்ன னென்றும் இன்னதா மின்ன தாகி
    வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே. 64
    குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆத லானும்
    செறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
    வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமையானும்
    நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே. 65
    ஆரணம் ஆக மங்கள் அருளினால் உருவு கொண்டு
    காரணன் அருளா னாகில் கதிப்பவ ரில்லை யாகும்
    நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாம்
    சீரணி குருசந் தானச் செய்தியும் சென்றி டாவே. 66
    உருவருள் குணங்க ளோடும் உணர்வருள் உருவிற் றோன்றும்
    கருமமும் அருள ரன்றன் கரசர ணாதி சாங்கம்
    தருமரு ளுபாங்க மெல்லாம் தானருள் தனக்கொன் றின்றி
    அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே. 67
    உலகினை இறந்து நின்ற தரன்உரு வென்ப தோரார்
    உலகவ னுருவில் தோன்றி ஒடுங்கிடு மென்றும் ஓரார்
    உலகினுக் குயிரு மாகி உலகுமாய் நின்ற தோரார்
    உலகினி லொருவ னென்பர் உருவினை யுணரா ரெல்லாம். 68
    தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர்
    மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாதர்
    ஆவது முணரார் ஆதி அரிஅயற் கறிய வொண்ணா
    மேவுரு நிலையு மோரார் அவனுரு விளைவு மோரார். 69
    போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
    யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
    வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
    ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர். 70
    ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு
    நின்றலால் உலக நீங்கி நின்றனன் என்று மோரார்
    அன்றிஅவ் வேட மெல்லாம் அருள்புரி தொழிலென் றோரார்
    கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணமென் றோரார். 71
    நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
    பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
    தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில்
    தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார். 72
    கண்ணுதல் யோகி ருப்பக் காமன்நின் றிடவேட் கைக்கு
    விண்ணுசு தேவ ராதி மெலிந்தமை ஓரார் மால்தான்
    எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித் திமவான் பெற்ற
    பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார். 73
    படைப்பாகித் தொழிலும் பத்தர்க் கருளும்பா வனையும் நூலும்,
    இடப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்றும்,
    அடைப்பானாம் அதுவும் முத்தி யளித்திடு மியோகும் பாகந்,
    துடைப்பானாந் தொழிலும் மேனி தொடக்கானேற் சொல்லொ ணாதே. 74
    உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த
    அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது
    திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங்
    கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே. 75
    அத்துவா மூர்த்தி யாக அறைகுவ தென்னை என்னின்
    நித்தனாய் நிறைந்த வற்றின் நீங்கிடா நிலைமை யானும்
    சித்துடன் அசித்திற் கெல்லாம் சேட்டித னாத லானும்
    வைத்ததாம் அத்து வாவும் வடிவென மறைக ளெல்லாம். 76
    மந்திர மத்து வாவின் மிகுத்தொரு வடிவ மாகத்
    தந்ததென் அரனுக் கென்னில் சகத்தினுக் குபாதா னங்கள்
    விந்துமோ கினிமான் மூன்றா மிவற்றின்மே லாகி விந்துச்
    சிந்தையா ரதீத மான சிவசத்தி சேர்ந்து நிற்கும். 77
    சுத்தமாம் விந்துத் தன்னில் தோன்றிய ஆத லானும்
    சத்திதான் பிரேரித் துப்பின் தானதிட் டித்துக் கொண்டே
    அத்தினாற் புத்தி முத்தி அளித்தலால் அரனுக் கென்றே
    வைத்தவா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம். 78
    மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத்
    தந்திரம் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேள்நீ
    முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத் தானும்
    அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே. 79
    அயன்றன் ஐஆதி ஆக அரனுரு வென்ப தென்னை
    பயந்திடுஞ் சத்தி யாதி பதிதலாற் படைப்பு மூலம்
    முயன்றனர் இவரே யாயின் முன்னவ னென்னை முற்றும்
    நயந்திடும் அவனி வர்க்கு நண்ணுவ தொரோவொன் றாமே. 80
    சத்திதான் பலவோ வென்னில் தானொன்றே அநேக மாக
    வைத்திடுங் காரி யத்தான் மந்திரி யாதிக் கெல்லாம்
    உய்த்திடு மொருவன் சத்தி போலரன் உடைய தாகிப்
    புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்த வாறாம். 81
    சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞான மாகும்
    உய்த்திடு மிச்சை செய்தி இவைஞானத் துளவோ வென்னின்
    எத்திற ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி
    வைத்தலான் மறைப்பில் ஞானால் மருவிடுங் கிரியை எல்லாம். 82
    ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியையென் றொருமூன் றாகி
    நின்றிடுஞ் சத்தி இச்சை உயிர்க்கருள் நேச மாகும்
    நன்றெலாம் ஞான சத்தி யால்நயந் தறிவன் நாதன்
    அன்றருட் கிரியை தன்னால் ஆக்குவன் அகில மெல்லாம். 83
    சீவனும் இச்சா ஞானக் கிரியையாற் சிவனை யொப்பான்
    ஆவனென் றிடின்அ நாதி மலம்இவற் றினைம றைக்கும்
    காவல னிவன்செய் கன்மத் தளவினிற் கொடுப்பக் காண்பன்
    பாவியாம் புத்தி முத்திப் பயன்கொளும் பண்பிற் றாகும். 84
    ஞானமே யான போது சிவன்தொழில் ஞான மொக்கின்
    ஈனமில் சதாசி வன்பே ரீசனாந் தொழில தேறின்
    ஊனமேற் கிரியை வித்தை உருத்திரன் இலய போகம்
    ஆனபே ரதிகா ரத்தோ டதிகர ணத்த னாமே. 85
    வித்தையோ டீசர் சாதாக் கியஞ்சத்தி சிவங்கள் ஐந்துஞ்
    சுத்ததத் துவஞ்சி வன்தன் சுதந்திர வடிவ மாகும்
    நித்தமென் றுரைப்பர் கால நீங்கிய நிலைமை யாலே
    வைத்திலர் முற்பிற் பாடு வருவித்தார் கருமத் தாலே. 86
    ஒருவனே இராவ ணாதி பாவக முற்றாற் போலத்
    தருவனிவ் வுருவ மெல்லாம் தன்மையும் திரியா னாகும்
    வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும்
    இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும். 87
    பொன்மைநீ லாதி வன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின்
    தன்மையாய் நிற்கு மாபோல் சத்திதன் பேத மெல்லாம்
    நின்மலன் தானாய்த் தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன்
    முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குந்தான் முளையா னன்றே. 88
    சத்தியுஞ் சிவமு மாய தன்மைஇவ் வுலக மெல்லாம்
    ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி
    வைத்தனன் அவளால் வந்த ஆக்கமிவ் வாழ்க்கை யெல்லாம்
    இத்தையும் அறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார். 89
    சிவன்அரு உருவும் அல்லன் சித்தினோ டசித்தும் அல்லன்
    பவமுதல் தொழில்க ளொன்றும் பண்ணிடு வானும் அல்லன்
    தவமுத லியோக போகம் தரிப்பவ னல்லன் தானே
    இவைபெற இயைந்து மொன்றும் இயைந்திடா இயல்பினானே. 90

    இரண்டாஞ் சூத்திரம் (91 -186 )

    உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி
    அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத்
    தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே
    நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும். 91
    ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி
    நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின்
    அன்றவை பதிதான் ஒன்றென் றறையும்அக் கரங்கள் தோறும்
    சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே. 92
    உருவொடு கருவி யெல்லாம் உயிர்கொடு நின்று வேறாய்
    வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன்
    தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான்
    வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே. 93
    இருவினை இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து
    வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப லன்கள்
    தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே
    மருவிடா வடிவுங் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே. 94
    இருவினை யென்னை இன்பத் துன்பங்கள் இயல்ப தென்னின்
    ஒருதன்மை இயல்புக் குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி
    வருவதென் மலருந் தீயும் மருவலின் வாசம் வெம்மை
    தருவதென் நீரென் செய்து தானியல் பாகு மன்றே. 95
    தன்னியல் பொழியப் பூவும் தழலும்வந் தணைய நீரின்
    மன்னிய திரண்டு செய்தி வருமிரு வினையி னானும்
    உன்னிய இன்பத் துன்பம் உறும்உயி ருணர்வி லாத
    துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே. 96
    இம்மையின் முயற்சி யாலே இருநிதி ஈட்டி இன்பம்
    இம்மையே நுகர்வர் செய்தி இலாதவர் பொருளு மின்றி
    இம்மையே இடரு ழப்பர் வேறிரு வினைய துண்டேல்
    இம்மையின் முயற்சி யின்றி எய்திட வேண்டும் இங்கே. 97
    இருவினைச் செயல்காண் இம்மை இரும்பொரு ளின்பம் வேண்டி
    வருவினை செய்யுங் காலை மடிவரும் மடியு மின்றித்
    தருவினை யதனில் அந்தந் தானறும் துயருந் தங்கும்
    ஒருவினை செய்யா தோரும் உடையர்இவ் வுலகத் துள்ளே. 98
    பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும்
    ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி அனுப வத்தால்
    கூறிடும் முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது
    தேறுநீ இனிச்செய் கன்மம் மேலுடற் சேரு மென்றே. 99
    உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
    விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
    தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
    இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல். 100
    முற்செயல் விதியை இந்த முயற்சியோ டனுப வித்தான்
    இச்செயல் பலிக்கு மாறென் இதமகி தங்கள் முன்னர்
    அச்செய லானால் இங்கும் அவைசெயின் மேலைக் காகும்
    பிற்செயா தனுப விப்ப தின்றுபின் தொடருஞ் செய்தி. 101
    மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி
    ஞாலத்து வருமா போல நாம்செய்யும் வினைக ளெல்லாம்
    மேலத்தான் பலமாச் செய்யும் இதமகி தங்கட் கெல்லாம்
    மூலத்த தாகி யென்றும் வந்திடும் முறைமை யோடே. 102
    இதமகி தங்கள் என்ப திகல்மன வாக்குக் காயத்(து)
    இதமுயிர்க் குறுதி செய்தல் அகிதமற் றதுசெய் யாமை
    இதமகி தங்க ளெல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டிங்(கு)
    இதமகி தத்தால் இன்பத் துன்பங்கள் ஈவ னன்றே. 103
    இறைவனிங் கேற்ப தென்னை இதமகி தங்க ளென்னின்
    இறைபர னுயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை யாகும்
    அறமலி இதஞ்செய் வோருக் கனுக்கிர கத்தைச் செய்வன்
    மறலி அகிதஞ் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன். 104
    நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வ(து)
    அக்கிர மத்தால் குற்றம் அடித்துத்தீர்த் தச்சம் பண்ணி
    இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன்
    எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே யென்றும். 105
    தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொ லாற்றின்
    வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்துத் தீய
    பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடில் பரிவே யாகும்
    இந்தநீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவு மென்றும். 106
    செயல்களே பலத்தைச் செய்யும் தெய்வம்வேண் டாஇங் கென்னின்
    முயலுமிச் செயல்க ளிங்கே முழுவதும் அழியு மெங்கே
    பயனளிப் பனவ ழிந்தே பலன்களைப் பண்ணுங் கெட்டே
    வயலிடும் தழையும் தின்னும் மருந்தும்பின் பலிக்கு மாபோல். 107
    செய்க்கிடுந் தழையும் தின்னுந் திரவிய மதுவும் போல
    உய்த்திடுஞ் செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை யென்னி
    வைத்திடுஞ் சோறும் பாக்கும் அருந்தினர் வயிற்றின்மாய்ந்தால்
    மெய்த்திடும் பலம்உனக்கு மலமலான் வேறு முண்டோ. 108
    திரவியம் உவமை யன்று செய்திக்கண் திரவி யங்கள்
    விரவிய விடத்தே வீந்து பலந்தரும் இம்மை அம்மை
    பரவிநீ பார்நீர் அங்கி பாததிரத் திட்ட வெல்லாம்
    கரவிடு மிங்கே எங்கே பலன்கொளக் கருதி னாயே. 109
    செய்தவர் மனத்தே எல்லாச் செய்தியும் கிடந்து பின்னர்
    எய்தவே பலன்க ளீனும் என்றிடின் இருஞ் சுவர்க்கம்
    பொய்யர்வாழ் நரகம் பூமி புந்தியிற் கிடந்து போந்த(து)
    ஐயனே அழகி துன்சொல் இந்திர சால மாய்த்தே. 110
    தானஞ்செய் பொருள் தரித்தோர் செய்தவர் தக்க செய்தி
    ஊனம்பின் னுறவே காண்டும் பலமுறு விப்பான் வேண்டும்
    ஈனமில் செய்தி ஈச னிடும்பணி இவைநாம் செய்தால்
    நூனங்கள் அதிக நோக்கி நகர்விப்பன் வினைநோய் தீர. 111
    உலகுடல் கரணங் காலம் உறுபலம் நியதி செய்தி
    பலவிவை கொண்டுகன்மம் பண்ணுவ துண்பதானால்
    நிலவிடா திவைதாம் சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா(து)
    அலகிலா அறிவ னாணை அணைத்திடும் அருளி னாலே. 112
    ஒழுக்கம்அன் பருள்ஆ சாரம் உபசாரம் உறவு சீலம்
    வழுக்கிலாத் தவம்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
    அழுக்கிலாத் துறவ டக்கம் அறிவொடர்ச் சித்த லாதி
    இழுக்கிலா அறங்க ளானால் இரங்குவான் பணிய றங்கள். 113
    மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல
    இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச்
    சினமுத லகற்றி வாழும் செயலற மானா லியார்க்கும்
    முனமொரு தெய்வ மெங்கும் செயற்குமுன் னிலையா மன்றே. 1140
    யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
    மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
    வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
    ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே. 115
    இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோவந்(து)
    அங்குவான் தருவா ரன்றேல் அத்தெய்வ மத்த னைக்காண்
    எங்கும்வாழ் தெய்வமெல்லாம் இறைவனாணையினால் நிற்ப(து)
    அங்குநாம் செய்யுஞ் செய்திக் காணைவைப் பால ளிப்பன். 116
    காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
    மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம்
    வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன்றில்லான்
    பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே. 117
    தாபர சங்க மங்க ளென்றிரண் டுசரவில் நின்று
    மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்
    நீபரன் தன்னை நெஞ்சில் நினைவையேல் நிறைந்த பூசை
    யாய்பரம் பொருளை நாளும் அர்ச்சிநீ அன்பு செய்தே. 118
    அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும்
    பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
    வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
    நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே. 119
    மறைகளீ சன்சொல் அச்சொல் வழவாரா உயிரை வைக்கும்,
    சிறைகள்மா நிரயம் இட்ட பணிசெய்வோர் செல்வத் தோடும்,
    உறையும்மா பதிகள் உம்ப ருலங்கள் யோனிக் கெல்லாம்,
    இறைவனா ணையினால் இன்பத் துன்பங்கள் இயைவதாகும். 120
    ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய் யாரை
    ஆணையில் தண்டஞ் செய்தும் அருஞ்சிறை யிட்டும் வைப்பன்
    ஆணையின் வழிசெல் வோருக் கரும்பதி செல்வம் நல்கி
    ஆணையும் வைப்பன் எங்கும் ஆணையே ஆணை யேகாண். 121
    அரசனும் செய்வ தீசன் அருள்வழி அரும்பா வங்கள்
    தரையுளோர் செய்யில் தீய தண்டலின் வைத்துத் தண்டத்
    துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்
    நிரயமும் சேரார் அந்த நிரயமுன் நீர்மை ஈதாம். 122
    அருளினால் உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின்
    இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்
    பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன்
    மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன். 123
    மருத்துவன் உரைத்த நூலின் வழிவரிற் பிணிகள் வாரா
    வருத்திடும் பிணிகள் தப்பில் தப்பிய வழியுஞ் செய்யத்
    திருத்தினன் மருந்து செய்யா துறும்பிணி சென்றுந் தீர்ப்பன்
    உரைத்தநூற் சிவனுமின்னே உறுங்கன்ம மூட்டித் தீர்ப்பன். 124
    மண்ணுளே சிலவி யாதி மருத்துவன் அருத்தி யோடும்
    திண்ணமா யறுத்துக் கீறித் தீர்த்திடுஞ் சிலநோ யெல்லாம்
    கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்
    அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினைய றுப்பன். 125
    பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந் தானே
    யாதனா சரீர மாகி இன்பத்துன் பங்க ளெல்லாம்
    நாதனார் ஆணை யுய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத்
    தீதிலா அணுவா யோனி சேர்ந்திடும் சீவ னெல்லாம். 126
    உடல்விடா யோனி பற்றி உதிப்பினும் உதிக்கு மொன்றிற்
    படர்வுறா துறும்பா வத்தாற் பாடாணம் போற்கி டந்து
    கடனதாம் காலஞ் சென்றாற் கடுநர கதனில் வீழ்ந்தங்(கு)
    இடருறும் உருவங்கன்மத் தளவினில் எடுக்கு மன்றே. 127
    பன்னகம் அண்ட சங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர்
    துன்னுதோல் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவே போல
    உன்னிய வுயிர்கள் தூல வுடல்விட்டு வானி னூடு
    மன்னிடு நனவு மாறிக் கனவினை மருவு மாபோல். 128
    தன்மமோ டதன்ம வாகித் தானிரு பயனுந் தந்து
    நன்மைதீ மையினு மின்பத் துன்பினு நாடிக் காண
    முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத் தொன்ற தாகிக்
    கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும். 129
    இருவினை அநாதி யாதி இயற்றலால் நுகர்வால் அந்தம்
    வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி யார்த்துத்
    தருசெயல் முறைமை யாலே தான்பல பேதங் காட்டி
    அருவதாய் நின்ற ரன்தன் ஆணையின் அமர்ந்து செல்லும். 130
    சங்கமம் தாப ரங்கள் தத்தம்கன் மத்துக் கீடா
    அங்குரு யோனி மாறும் அச்சுமா றாதிங் கென்னின்
    இங்குமா னுடரி யற்றும் புண்ணியத் தின்ப ஈட்டம்
    இங்குவான் சுரர்ளாயோ நரர்களாய் அருந்து வாரோ. 131
    நரர்களாய்த் துய்ப்ப ரென்னின் நரர்பதி சுரரு லோகம்
    சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னஅச் சழியு மாகும்
    சுரர்களாய்ப் பலன்கள் துய்த்துத் தாமிங்குத் தோன்றும் போது
    நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத் தமரராய் நண்ணிடாரே. 132
    வண்டுக ளாகி மாறும் மயிர்க்குட்டி மற்றோர் செந்துப்
    பண்டைய உருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்கும்
    கண்டுகொள் யோனி யெல்லாம் கன்மத்தால் மாறு மென்றே
    கொண்டன சமய மெல்லாம் இச்சொல் நீ கொண்ட தெங்கே. 133
    அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி யானான்
    பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலா முழுதும் ஆண்டு
    நிகரிலா அரச னாகும் நிலந்திநீ டுலகம் போற்றச்
    சகமதில் எலிதா னன்றோ மாவலி யாய்த்துத் தானே. 134
    செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே கன்மால்
    வைப்புறு மியோனி எல்லாம் மாறிவந் திடாவிங் கென்னின்
    எப்படி யானுஞ் செய்திக் கிறைகரி யாவ னென்றே
    முற்பட மொழிந்தே னெல்லாம் முதல்வன்தன் விதியே யாகும். 135
    அவ்வவ யோனி தோறும் அவ்வவ உலகந் தோறும்
    செவ்விதின் அறிந்து கன்மம் சேர்ந்திடா சீவன் சேரா
    இவ்வகை தம்மிற் சேர்வும் இறைசெய லானாற் செய்த
    எவ்வுரு வுந்தன் கன்மான் மாற்றுவன் இறைவன் தானே. 136
    மாறியிவ் வுருவ மெல்லாம் வருவதெங் கேநின் றென்னில்
    கூறிய சூக்கு மத்தாம் உருவெனிற் குறியொன் றென்னின்
    வேறொரு குறியா மாரம் வீரசங் கிலியு மாகும்
    தேறுநீ யொருவ னாலிச் செயலெலாம் சிவனா லாகும். 137
    சூக்குமங் கெட்டுத் தூலந் தோன்றிடா சூக்கு மத்தின்
    ஆக்கியோ ருடல்கி டப்ப தின்றுட லாக்குந் தன்மைக்(கு)
    ஓக்கிய சத்தி யுண்டாய் உடல்தருங் காலம் உற்று
    நீக்கிட மரம்பின் வேரோர் நீள்மர நிகழ்த்து மாபோல். 138
    விதிப்படிச் சூக்கு மத்தே உருவரும் வினையா லிங்கே
    உதித்திடா உருவ மாக உருவரு மரங்கள் வித்தில்
    கதித்தெழு மரமும் வித்தும் கழியும்பின் அழியுஞ் சூக்க
    மதிக்கெழு கலைகள் போல வருவது போவ தாமே. 139
    தூலமா முருவி னுக்குச் சூக்கும முதல தற்கு
    மூலமா னதற்கு மூல மோகினி அதன்மு தற்றான்
    மேலதாம் விந்து சத்தி சிவமிவை மிசையா மெல்லாம்
    சாலவின் றாகும் ஆன்மாச் சிவத்தினைச் சார்ந்த போது. 140
    அரன்விதி யருள தென்றே அறைந்தனம் அதுவு முன்னே
    தரைநர கருந்து றக்கம் தனுகர ணாதி யெல்லாம்
    வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தால் தீர்த்துப்
    பரகதி யதுவுந் தந்து பாதபங் கயமும் சூட்டும். 141
    எழுமுடல் கரண மாதி இவைமலம் மலம லத்தாற்
    கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னில்
    செழுநவ அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை
    முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன். 142
    நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
    வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
    சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும்உ யிர்க்காய்
    வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே. 1430
    மாயையிற் கால மோடு நியதிபின் கலாதி தோன்றும்
    ஆயஅக் கால மூன்றாய் ஆக்கியு மளித்தும் போக்கிக்
    காயமோ டுலகுக் கெல்லாம் காலசங் கையினைப் பண்ணி
    நாயக னாணை யாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம். 144
    நியதிபின் தோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும்
    அயர்விலாக் கலைபின் தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின்
    செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை
    உயர்கலை யதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும். 145
    விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண்
    இச்சையைப் பண்ணி நிற்கும் தொழிலறி விச்சை மூன்றும்
    வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி ஆன்மா
    நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்ப னன்றே. 146
    வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையில் தோன்றித்
    தருங்குண மூன்றாய் ஒன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகும்
    இருங்குண ரூப மாகி இயைந்திடு மெங்கும் ஆன்மாப்
    பெருங்குண வடிவாய்ப் போக சாதனம் பெந்த மாமே. 147
    சித்தமாம் அவ்வி யத்தம் சிந்தனை யதுவுஞ் செய்யுஞ்
    புத்திஅவ் வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து
    வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப்
    பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும். 148
    ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய்
    ஈங்கார்தான் என்னோ டொப்பார் என்றியான் என்ன தென்றே
    நீங்காதே நிற்குந் தானும் மூன்றதாய் நிகழு மென்பர்
    பாங்கார்பூ தாதி வைகா ரிகம்தைச தம்தா னென்றே. 149
    மதுமது தைச தத்தின் வந்தொரு பொருளை முந்தி
    நினைவதுஞ் செய்தங் கைய நிலைமையின் நிற்கு மாங்கே
    இனமல சோத்தி ராதி கன்மஇந் திரிய மெல்லாம்
    முனமுரை செய்த வைகா ரிகம்தரு மென்பர் முன்னோர். 150
    நற்செவி துவக்குக் கண்நா நாசிஐந் தினையு நல்லோர்
    புத்திஇந் திரிய மென்று புகன்றனர் இவைத மக்குச்
    சத்தநற் பரிச ரூப இரதகந் தங்க ளைந்தும்
    வைத்தனர் விடய மாக அடைவினின் மருவு மென்றே. 151
    வாக்கொடு பாதம் பாணி பாயுவோ டுபத்த மைந்து
    நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ளெனநி னைந்தே
    ஆக்கிய வசன கமன தானமும் விசர்க்கா னந்தம்
    ஊக்கமார் ஐந்து மைந்தின் தொழிலென ஓதி னாரே. 152
    வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவி யாகும்
    ஓயாத மனாதி காயத் துணருமுட் கருவி யாகும்
    ஆய்வார்கட் கராக மாதி அவற்றினுட் கருவி யென்பர்
    மாயாள்தன் வயிற்றி வற்றால் துடக்குண்டு வாழு மான்மா. 153
    ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்க ளென்று
    பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதி கத்தின்
    நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும்
    ஆசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்ட கந்தான். 154
    சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
    தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்(கு)
    ஏற்ற மாமோசை யாதி இருங்குண மியைந்து நிற்கும்
    ஆற்றவே விடய பூதம் அங்காங்கி பாவத் தாமே. 1550
    இரந்தர மாகி வான்றான் இடங்கொடுத் திடும்ச லித்துப்
    பரந்தவை திரட்டும் கால்தீச் சுட்டொன்று வித்தல் பண்ணும்
    நிரந்தரங் குளிர்ந்து நின்று பதஞ்செயும் நீர்மண் தானும்
    உரந்தரு கடின மாகித் தரித்திடும் உணர்ந்து கொள்ளே. 156
    மண்புனல் அனல்கான் வான்பால் படிவுநாற் கோண மாகும்
    தண்பிறை மூன்று கோணம் தகுமறு கோணம் வட்டம்
    வண்பொன்மை வெண்மை செம்மைகறுப்பொடு தூமவன்னம்
    எண்தரும் எழுத்துத் தானும் லவரய ஹவ்வு மாமே. 157
    குறிகள்வச் சிரத்தி னோடு கோகந தஞ்சு வத்தி
    அறுபுள்ளி அமுத விந்து அதிதெய்வம் அயன்மா லாதி
    செறிபுக ழீச னோடு சதாசிவம் பூத தெய்வம்
    நெறிதரு கலைஐந் திற்கும் நிகழ்த்துவர் இந்த நீர்மை. 158
    சுத்ததத் துவங்க ளென்று முன்னமே சொன்ன ஐந்தும்
    இத்தகை மையின்இ யம்பும் இவைமுப்பத் தொன்று மாகத்
    தத்துவ முப்பத் தாறாஞ் சைதன்னி யங்க ளைந்து
    சித்தசித் தான்மா வொன்று முப்பதும் அசித்தே செப்பில். 159
    ஐந்துசுத் தத்தின் கீழேழ் சுத்தாசுத் தம்அ சுத்தந்
    தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வற்கு
    வந்திடும் பிரேர காண்டம் மருவுபோக சயித்தி ரத்தோ(டு)
    அந்தமில் அணுக்க ளுக்குப் போக்கிய காண்ட மாமே. 160
    தத்துவ ரூப மாகும் தரும்அரு வுருவ மெல்லாம்
    தத்துவம் தூல சூக்க பரங்களு மாகி நிற்கும்
    தத்துவம் தன்னிற் சாரும் அணுக்கள்சா தாக்கி யத்தில்
    தத்துவ சத்தம் சாரும் சகலமும் தத்து வங்காண். 161
    தத்துவம் எண்மூன் றும்சென்(று) ஆன்மதத் துவத்தொ டுங்கும்,
    வித்தையி னொடுங்கும் ஆறும் சிவத்தினி னொடுங்கும் மூன்றும்,
    நித்ததத் துவம்இம் மூன்றும் என்பர்கள் இரண்டு நின்ற,
    சுத்தமாம் சிவத்தொ டுங்கும் தோற்றமும் இதுபோ லாகும். 162
    மொய்தரு பூத மாதி மோகினி அந்த மாகப்
    பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்று
    மெய்தருஞ் சைவ மாதி இருமூன்றும் வித்தை யாதி
    எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே. 1630
    சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
    உவந்தருள் உருத்தி ரன்தான் மால்அயன் ஒன்றினொன்றாய்ப்
    பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய்
    நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்ப னென்பர். 164
    சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி
    ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி
    வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும்
    எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள். 165
    சத்திதான் நாத மாதி தானாகுஞ் சிவமு மந்தச்
    சத்திதா னாதி யாகும் தரும்வடி வான வெல்லாம்
    சத்தியும் சிவமு மாகும் சத்திதான் சத்த னுக்கோர்
    சத்தியாம் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே. 166
    சிவம்சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்
    உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்
    பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும்
    தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே. 167
    தனுகரண புவன போகம் தற்பரம் பந்தம் வீடென்(று)
    அணுவினோ டெல்லா மாகி அடைந்திடுந் தத்து வங்கள்
    இனிதறிந் திவைநி விர்த்தி முதல்கலை யிடத்தே நீக்கி
    நனிபர முணர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி யாவன். 168
    எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக் கென்னில்
    தொல்லாய கன்மமெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின்
    நில்லாமை முற்று வித்து நீக்கவும் கூடி நின்ற
    பொல்லாத ஆணவத்தைப் போக்கவும் புகுந்த தன்றே. 169
    ஒன்றதாய் அநேக சத்தி யுடையதாய் உடனாய் ஆதி
    அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து
    நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச்செம் பினிற்களிம்பேய்ந்(து)
    என்றும்அஞ் ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே. 170
    மலமென வேறொன் றில்லை மாயாகா ரியம தென்னின்
    இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை
    விலகிடும் மலமி வற்றை வேறுமன் றதுவே றாகி
    உலகுடல் கரண மாகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே. 171
    மாயையே ஆன்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்கும்
    தூயவெம் பரிதி தன்னைச் சுடர்முகில் மறைத்தாற் போலப்
    போய்முகில் அகலச் சோதி புரிந்திடு மதுவே போலக்
    காயமு மகல ஞானத் தொழில்பிர காச மாமே. 172
    பரிதியை முகில் மறைப்பப் பாயொளி பதுங்கி னாற்போல்
    உருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைகள் ஔ¤க்கு மாகும்
    கருதிடும் இச்சா ஞான காரியம் காயம் பெற்றால்
    மருவிடும் உயிர்க்குக் காயம் வந்திடா விடின்மறைப்பே. 173
    போதகா ரியம்ம றைத்து நின்றது புகல்ம லங்காண்
    ஓதலாம் குணமு மாக உயிரினுள் விரவ லாலே
    காதலால் அவித்தை சிந்தத் தரும்கலை யாதி மாயை
    ஆதலா லிரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே. 174
    புருடன்தன் குணம் அவித்தை யெனில்சடம் புருட னாகும்
    குருடன்தன் கண்ணின் குற்றம் கண்ணின்தன் குணமோ கூறாய்
    மருள்தன்றன் குணம தாகி மலம்அசித் தாகி நிற்கும்
    தெருள்தன்றன் குணம தாகிச் சித்தென நிற்கும் சீவன். 175
    மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல்
    மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று
    பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்
    இம்மலம் மூன்றி னோடும் இருமல மிசைப்பன் இன்னும். 176
    மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும்
    ஏயும்மும் மலங்கள் தத்தந் தொழிலினை இயற்ற ஏவும்
    தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்
    ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும். 177
    மலம்மாயை கன்மம் மாயே யம்திரோ தாயி மன்னிச்
    சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும்
    நிலையாத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத் தின்கண்
    அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே. 178
    அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ(டு)
    எண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயி ரத்தால்
    உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத்து தித்தல்
    கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண். 179
    நரர்பயில் தேயந் தன்னில் நான்மறை பயிலா நாட்டில்
    விரவுத லொழிந்து தோன்றல் மிக்கபுண் ணியந்தா னாகும்
    தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து
    பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே. 180
    வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்
    தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும்
    ஊழ்பெற லரிது சால உயர்சிவ ஞானத் தாலே
    போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே. 181
    மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
    ஆனிடத் தைந்து மாடும் அரன்பணிக் காக வன்றோ
    வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர்
    ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார். 182
    கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவ தாயும்
    பரிணமித் தழிவ தாயும் பாலனாய் அழிவ தாயும்
    தருணனாய் அழிவ தாயும் தான்நரைத் தழிவ தாயும்
    உருவமே யழியே யானால் உள்ளபோ தேபார் உய்ய. 183
    ஒருபுலன் நுகரும் போதங் கொன்றில்லை ஒன்றன் பாலும்
    வருபயன் மாறி மாறி வந்திடும் எல்லாம் மாறும்
    ஒருபொழு துணரி னுண்டாம் அல்லதிவ் வல்லல் வாழ்க்கை
    மருள்கன வதுவும் போல மாயும்பின் மாயு மன்றே. 184
    அரிசனம் பூசி மாலை அணிந்துபொன் னாடை சாத்திப்
    பரிசனம் பின்பு செல்லப் பாரகர் பரிக்கக் கொட்ட
    வரிசின்ன மூதத் தொங்கல் வந்திட வுணர்வு மாண்டு
    பெரியவர் பேச்சு மின்றிக் கிடத்தலால் பிணத்தோ டொப்பர். 185
    பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின்னடைப் பிணங்கள் போல
    உணக்கியே உழல்வீர் உங்க ளுடலுயிர் உணர்வு மெல்லாம்
    கணத்திடைத் தோன்றி மாயும் காயமென் றறிந்தொ ருக்கால்
    வணக்குறீர் அரனை என்றும் வானவர் வணங்க வைப்பன். 186

    மூன்றாஞ் சூத்திரம் (187- 190)

    உயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதாய் உற்றுச்
    செயிருறும் இச்சா ஞானச் செய்திக ளுடைய தாகிப்
    பயில்வுறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில்
    துயிலொடும் அஞ்ச வத்தைப் படும்உண்மை துரியா தீதம். 187
    உடலின்வே றுயிரேன் இந்த உடலன்றோ உணர்வ தென்னின்
    உடல்சவ மான போதும் உடலினுக் குணர்வுண் டோதான்
    உடலினின் வாயுப் போனால் உணர்ச்சியின் றுடலுக்கென்னின்
    உடலினின் வாயுப் போகா துறக்கத்தும் உணர்வ தின்றே. 188
    அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியாவாகும்
    அறிவதும் ஒன்றொன் றாக ஒன்றொன்றாய் அறியு மென்னின்
    அறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா ஐந்தையுங் கொண்(டு)
    அறிவதொன் றுண்ட தான்மா ஐம்பொறி அறிந்தி டாவே. 189
    அறிந்திடும் பிராண வாயு அடங்குதல் விடுதல் செய்தால்
    அறிந்திடா துடலு றக்கத் தறிவின்மை கரண மின்மை
    அறிந்திடு முதலி யாகின் அதுநிற்கக் கரணம் போகா
    அறிந்திடும் பிராணன் தன்னை அடக்கியும் விட்டும் ஆன்மா. 190

    இ ல க் க ண வி ய ல்
    நான்காஞ் சூத்திரம் (191 - 230)

    உணர்வன கரண மென்னின் ஒன்றையொன் றுணரா வெவ்வே(று)
    அணைதருஞ் செயல்கள் நான்கும் அறிந்தவை அடக்கி ஆக்கிப்
    புணருமுட் கரண மாக்கிப் புறக்கரு வியினும் போக்கி
    இணைதரு மிவற்றின் வேறாய் யானென தென்ப தான்மா. 191
    கருவியாம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும்
    மருவிஆன் மாவே என்ன வரும்தீப மெனத்தெ ரிந்தாங்(கு)
    ஒருவியான் மாவி னுண்மை உணர்ந்தவர் தமையு ணர்ந்தோர்
    தருமிது பசுஞா னம்பின் சிவஞானந் தனக்கு மேலாம். 192
    அவ்வுடன் உவ்வும் மவ்வும் மனம் மனம்புத்தி அகங்கா ரங்கள்
    செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும்
    ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுதித் தொடுங்குமா
    பவ்வமும் திரையும் போலும் பார்க்கில்இப் பண்புந் தோன்றும். 193
    அயன்அரி அரனு மீசர் சதாசிவம் அதிதெய் வங்கள்
    உயவரும் அவ்வோ டுவ்வு மவ்விந்து நாதங் கட்குப்
    பயனுறும் அஞ்சில் ஆன்மாப் பரவிடில் அசித்தாம் பார்க்கில்
    சயமுறு வளியி ரண்டும் தவிர்த்துறில் தானுந் தோன்றும். 194
    ஆன்மாவின் வடிவு தானே அநேகார்த்தக் கூட்ட மென்னில்
    பார்ப்பார்கட் கான்மா இன்றாய்ப் பலபொரு ளுண்மையாகும்
    சேர்ப்பாய பலவே உண்மை என்றிடில் சென்றி வற்றை
    ஓர்ப்பான்வே றுணர்வோர்க் கெல்லாம் உணர்பொருள் வேறதாமே. 195
    அறிவிச்சை செயல்களெல்லாம் அடைந்தனல் வெம்மை யும்போல்
    குறியுற்றங் கேகா நேக குணகுணி பாவ மாகி
    நெறியுற்று நிற்கு மென்னில் நிகழபுலன் கரண மெல்லாம்
    செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமா சீவ னார்க்கே. 196
    குணங்களை யின்றி யொன்றாம் குறியு டைத்தான்மா வென்னின்
    இணங்கிடா இச்சா ஞானக் கிரியைகள் இவையு டற்கட்
    பிணங்கிடுஞ் சந்நி திக்கண் எனிற்பிணத் துறக்கத் தின்றாம்
    உணங்கிடும் கரண மென்னில் சந்நிதி ஒழிந்த தன்றே. 197
    சந்நிதி குணம தாகும் தானென்போல் என்னிற் காந்தம்
    முன்னிரும் பென்றா யீர்க்கு முறைமையுண் டகற்ற லின்றாம்
    உன்னுத லொடுங்கல் ஓடல் இருத்தலே கிடத்தல் நிற்றல்
    என்னுமித் தொழில்கள் மற்றும் இயற்றுவ தான்மா வென்னே. 198
    உருவுயி ரென்னின் இந்த உடலினுட் காண வேண்டும்
    வருவது பரிணா மத்தாய் அநித்தமாம் பூத மாகும்
    கருவினில் நுழையு மாறும் காட்டிட வேண்டும் கண்ணின்
    மருவிடா தென்னின் உன்றன் வாயினால் உருவன் றென்னே. 199
    சூக்கும உருவ தென்னில் தூலகா ரணம் தாகும்
    ஆக்கிய மனாதி தன்மாத் திரைவடி வசேத னம்பின்
    நீக்கிய சூக்கு மத்தே நிற்பதோ ருருவுண் டென்னின்
    ஆக்கிடும் உருவமெல்லாம் அசித்துமாய் அநித்த மாமே. 200
    அருவுரு வென்னில் ஆன்மா அருவுரு வாவ தின்றாம்
    உருவரு வாகா தாகும் ஒருபொருட் கிரண்டு தன்மை
    வருவது மில்லை காட்ட வன்னிபோல் மருவு மென்னின்
    உருவமுங் காண வேண்டும் உண்மையும் ஒழிந்து போமே. 201
    சந்திரன் வடிவு போலத் தான்அரு வுருவ மென்னின்
    வந்துநங் கண்ணிற் றோனறும் வடிவுள தாமு யிர்க்கும்
    இந்தவூ னுருவந் தானாய் எழுவது முயிரே யென்னில்
    பந்தமாய் அசித்தா யான்மாப் பவுதிக மாகு மன்றே. 202
    அருவவி காரி யான்மா ஆகாயம் போல வென்னின்
    உருவினைக் கட்டி யாட்டி ஓட்டிமீட் டுலாவப் பண்ணி
    மருவிநிற் பிதி ருத்திக் கிடத்திமண் புரட்டி மற்றும்
    பெருவிகா ரங்க ளெல்லாம் தருவதென் பேசி டாயே. 203
    அசித்தெனின் உணராதான்மா அசித்துச்சித் தாகுமென்னின்
    அசித்துச்சித் தாகா தாகும் சித்தசித் தாவ தில்லை
    அசித்தொரு புறமா யொன்றில் சித்தொரு புறமாய்நில்லா(து)
    அசித்துறாச் சித்தே யென்னின் அசித்தடைந் தறிவ தின்றாம். 204
    உயிரினை அணுவ தென்னின் உடல்பல துவார மோடும்
    பயில்வுறக் கட்டு ணாது பாரமும் தரித்துச் செல்லா(து)
    அயர்வுறும் அசித்தாய்ப் பூத அணுக்களி னொன்ற தாகும்
    இயல்புறும் அவய வத்தால் அணுவுரு இறக்கு மன்றே. 205
    உடலினின் ஏக தேசி உயிரெனின் உருவாய் மாயும்
    படர்வுறு மறிவின் றெங்கும் சுடரொளிப் பண்ப தென்னில்
    சுடர்தொடிற் சுடுவ தெங்கும் தொட்டிடம் அறிவுண் டாகும்
    அடர்புலன் இடத்து மொக்க அறிவெழ வேண்டுமன்றே. 206
    உருவினில் நிறைந்து நின்றங் குணர்ந்திடும் உயிர தென்னின்
    மருவிடா துறக்கம் வாயில் அறிவொக்க வழங்க வேண்டும்
    பெருகிடும் சுருங்கும் போதம் பேருடல் சிற்று டற்கண்
    வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்துபின் மாயுமன்றே. 207
    எங்குந்தான் வியாபி யாய்நின் றுணரும்இவ் வான்மா வென்னில்,
    தங்கிடும் அவத்த போக்கு வரவுகள் சாற்றால் வேண்டும்,
    பங்கமார் புலனொன் றொன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும்,
    இங்கெலாம் ஒழிந்தான் நிற்ப தெங்ஙனம் இயம்பல் வேண்டும். 208
    சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகளுடல் மறைத்த தென்னின்
    வைத்துறா துடற்கண் வாயில் கரணங்கள் வழியால் ஞானம்
    ஒத்துறும் மலமற் றாலும் உறுமலம் வீடு மின்றாம்
    பெத்தமு மடையான் முத்த னாய்ப்பிர காச னாமே. 209
    அசித்தரு வியாப கம்போல் வியாபகம் அருவ மின்றாய்
    வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி
    நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும்
    பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா. 210
    மாயையின் வயிற்றுள் மன்னி வருஞ்செயல் ஞான மிச்சை
    ஏயுமக் கலாதி மூன்றால் ஏகதே சத்தி னேய்ந்திங்(கு)
    ஆயுமுக் குணங்கள் அந்தக் கரணங்க ளாதி யெல்லாம்
    காயபெத் தங்க ளாகிக் கலந்துடன் நிற்கு மான்மா. 211
    சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச்
    சாக்கிர முதலா யுள்ள அவத்தையுள் தங்கி யெங்கும்
    போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம்
    ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா. 212
    மருவா னந்தம் விஞ்ஞான மனோபி ராணன் அன்னமயம்
    உருவாந் தன்மை யுண்டாய்மு ஒன்றுக் கொன்று சூக்குமமாய்
    வருமாம் அன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகும்
    அருவா யான்மாஐங் கோசத்தார்ப் புண்டவற்றின் அகம் புறமாம். 213
    தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த்
    தேர்ப்பாரிற் செலவும்வேறாய்ச் செலுத்துவோர் செய்திதானும்
    பார்ப்பாய வேடங் கட்டி ஆடுவோர் பரிசு போலும்
    ஆர்ப்பாய காயந் தன்னை ஆன்மாநின் றாட்டு மாறே. 214
    என்னுடல் பொறிபி ராணன் கரணம்என் னுணர்வென் றக்கால்
    தன்னின்வே றாகும் நீஎன் றன்மனை யென்ற வெல்லாம்
    நின்னின்வே றாகும் என்னின் நீங்கிடா இவையிங் கென்னின்
    உன்னின வாகும் நீயாம் உகிர்மயிர் உகவுங் காண்டி. 215
    பொன்னணி யாடை மாலை போதுமே லான போதிங்(கு)
    என்னணி யானென் றுன்னி இருந்தனை பிரிந்த போது
    நின்னணி நீயு மல்ல வாயினை காய நின்னில்
    அன்னிய மாகும் உன்னை அறிந்துநீ பிரிந்து பாரே. 216
    உடலியா னல்லேன் இந்த உணர்வுயான் அல்ல வான
    கடனியா தென்னின் வேறு கண்டுணர் வென்ன தென்னகை
    இடரிலா என்ற னான்மா என்றபோ தான்மா வேறோ
    திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்ப லேகாண். 217
    புந்தியை மனம தென்றும் மனமது புந்தி யென்றும்
    சிந்தையைச் சீவ னென்றும் சீவனைச் சிந்தை யென்றும்
    முந்தனை யான்மா வென்றும் ஆன்மாவை முந்த னென்றும்
    வந்திடு மென்ற னான்மா என்றது மற்றொன் றைக்காண். 218
    அறிவுடல் சிந்தை யான்மா அணைதலால் ஆன்மா வென்பர்
    எறிசுடர் விளக்கி ருக்கு மிடத்தையும் விளக்கென்றாற்போல்
    பொறிபுலன் கரண மெல்லாம் புலப்படும் அபேத மாகிப்
    பிறிதரா தறிவ தான்மர அறிபொருள் பின்ன மாமே. 219
    கண்டுணர் புருடன் வேறு கனவுகண் டொடுங்கிக் காயம்
    உண்டியும் வினையு மின்றிக் கிடந்துயிர்த் திடவு ணர்ந்து
    கண்டிடுங் கனவுஞ் சொல்லி ஒடுக்கமுங் கருதி வேறாய்
    உண்டியும் வினையும் உற்றிங் குணர்த்திட உணரா நிற்கும். 220
    புருடனே அறிவ னாகில் பொறிபுல னாதி போதம்
    தருவதென் அறிவு மாயா தனுகர ணாதி பற்றி
    வருவதிங் கநாதி யாக மலத்தினின் மறைந்து நிற்பன்
    அருவனாய் இவற்றோ டாளும் அமைச்சரும் அரசும் போல்வன். 221
    படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லில்
    கடைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்னர்
    அடைதருந் தனியே அந்தப் புரத்தினில் அதுபோ லான்மா
    உடலினின் அஞ்ச வத்தை உறுமுயிர் காவ லாக. 222
    சாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில்
    ஆக்கிய இருபத் தைந்து களத்தினிற் சுழுமுனை மூன்று
    நீக்கிய இதயந் தன்னில் துரியத்தி லிரண்டு நாபி
    நோக்கிய துரியா தீதம் நுவலின்மூ லத்தி னொன்றே. 223
    இருவகைச் சாக்கி ராதி அவத்தைக ளியல்பு தானும்
    இருவகை கீழே நூக்கி உற்பவங் காட்டு மொன்று
    பெருகமேல் நோக்கித் தீய பிறப்பறுந் திடுமி யோகில்
    தருவதோர் சமாதி தானும் தாந்துபின் சனனஞ் சாரும். 224
    அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும்
    செறிதருங் கரணந் தன்னில் செயல்தொறுபே கண்டு கொள்நீ
    பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளா லாங்கே
    குறியொடும் அஞ்ச வத்தை கூடுவர் வீடு கூட. 225
    ஐந்துசாக் கிரத்தின் நான்கு கனவினில் சுழுனை மூன்று
    வந்திடுந் துரியந் தன்னின் இரண்டொன்று துரியா தீதம்
    தந்திடும் சாக்கி ராதி அவத்தைகள் தானந் தோறும்
    உந்திடுங் கரணந்தன்னில் செயல்தொறு முணர்ந்து கொள்ளே. 226
    கேவல சகல சுத்தம் என்றுமூன் றவத்தை யான்மா
    மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாம்
    காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லாம்
    ஓவின போது சுத்த முடையன்உற் பவந்து டைத்தே. 227
    அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும்
    செறிவிலன் கலாதி யோடும் சேர்விலன் செயல்க ளில்லான்
    குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான்
    பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகேவலத்தில் ஆன்மா. 228
    உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல் செப்பல்
    வருசெயல் மருவிச் சத்த மாதியம் விடயம் தன்னில்
    புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்கு ழன்று
    திரிதரும் சகல மான அவத்தையிற் சீவன் சென்றே. 229
    இருவினைச் செயல்க ளொப்பின் ஈசன்தன் சத்தி தோயக்
    குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
    திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம்
    பெருகிநா யகன்தன் பாதம் பெறுவது சுத்த மாமே. 230

    ஐந்தாஞ் சூத்திரம் (231 -239)

    பொறிபுலன் கரண மெல்லாம் புருடனால் அறிந்தான் மாவை
    அறிதரா அவையே ஆன்மாக்க ளனைத்து மெங்கும்
    செறிதரும் சிவன்ற னாலே அறிந்திடும் சிவனைக் காணா
    அறிதரும் சிவனே யெல்லாம் அறிந்தறி வித்து நிற்பன். 231
    இறைவனே அறிவிப் பானேல் ஈண்டறி வெவர்க்கும் ஒக்கும்
    குறைவதி கங்கள் தத்தம் கன்மமேற் கோமான் வேண்டா
    முறைதரு செயற்குப் பாரும் முளரிகட் கிரவி யும்போல்
    அறைதரும் தத்தங் கன்மத் தளவினுக் களிப்பன் ஆதி. 232
    அறிந்திடும் ஆன்மா வொன்றை ஒன்றினால் அறித லானும்
    அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும்
    அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே
    அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவ னன்றே. 233
    கருவியால் பொருளால் காட்டால் காலத்தால் கருமந் தன்னால்
    உருவினால் அளவால் நூலால் ஒருவரா லுணர்த்த லானும்
    அருவனாய் உண்மை தன்னில் அறியாது நிற்ற லானும்
    ஒருவனே எல்லாத் தானும் உணர்த்துவன் அருளி னாலே. 234
    கருவியும் பொருளும் காட்டும் காலமும் கன்மந் தானும்
    உருவமும் அளவும் நூலும் ஒருவரு முணர்த்த லின்றி
    அருவனா யுலக மெல்லாம் அறிந்தவை யாக்கி வேறாய்
    ஒருவனே உயிர்கட் கெல்லாம் உயிருமாய் உணர்த்தி நிற்பன். 235
    இறைவன்தன் சந்நி திக்கண் உலகின்றன் சேட்டை யென்னும்
    மறைகளும் மறந்தாய் மாயை மருவிடான் சிவன வன்கண்
    உறைதரா தசேத னத்தால் உருவுடை உயிர்கட் கெல்லாம்
    நிறைபரன் சந்நி திக்கண் நீடுணர் வுதிக்கு மன்றே. 236
    உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக
    இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக
    அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து
    நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன். 2371
    தெரிந்துகொண் டொரோவொன் றாகச் சென்றைந்து புலனும் பற்றிப்,
    புரிந்திடும் உணர்வி னோடும் போகமுங் கொடுத்தி யோனி,
    திரிந்திடு மதுவுஞ் செய்து செய்திகண் டுயிர்கட் கெல்லாம்,
    விரிந்திடும் அறிவுங் காட்டி வீட்டையும் அளிப்பன் மேலோன். 238
    அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித்
    தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை
    மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்(கு)
    இருளினை ஔ¤யா லோட்டும் இரவியைப் போல ஈசன். 239

    ஆறாஞ் சூத்திரம் (240 -248)

    அறிவுறும் பொருளோ ஈச னறிவுறா தவனோ வென்னின்
    அறிபொருள் அசித்த சத்தாம் அறியாத தின்றாம் எங்கும்
    செறிசிவம் இரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்
    நெறிதருஞ சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாயே.
    240
    ஆவதாய் அழிவ தாகி வருதலால் அறிவு தானும்
    தாவலால் உலகு போகம் தனுகர ணாதி யாகி
    மேவலால் மலங்க ளாகி விரவலால் வேறு மாகி
    ஓவலால் அசத்தாம் சுட்டி உணர்பொரு ளான வெல்லாம். 241
    மண்தனில் வாழ்வும் வானத் தரசயன் மாலார் வாழ்வும்
    எண்தரு பூத பேத யோனிகள் யாவு மெல்லாம்
    கண்டஇந் திரமா சாலம் கனாக்கழு திரதங் காட்டி
    உண்டுபோல் இன்றாம் பண்பின் உலகினை அசத்த மென்பர். 242
    உணராத பொருள்சத் தென்னின் ஒருபய னில்லைத் தானும்
    புணராது நாமும் சென்று பொருந்துவ தின்றாம் என்றும்
    தணவாத கரும மொன்றும் தருவது மில்லை வானத்(து)
    இணரார்பூந் தொடையு மியாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும். 243
    தத்துவம் சத்(து) அசத்துச் சதசத்து மன்றென் றாலென்
    உய்த்துணர்ந் துண்டோ இன்றோ என்றவர்க் குண்டென் றோதில்
    வைத்திடும் சத்தே யாகும் மனத்தொடு வாக்கி றந்த
    சித்துரு அதுஅ சித்தாம் மன்த்தினால் தேர்வ தெல்லாம். 244
    அறிபொருள் அசித்தாய் வேறாம் அறிவுறாப் பொருள்சத்தென்னின்
    அறிபவன் அறியா னாகில் அதுஇன்றுபயனு மில்லை
    அறிபவன் அருளி னாலே அந்நிய மாகக் காண்பன்
    அறிபொரு ளறிவாய் வேறாய் அறிவரு ளுருவாய் நிற்கும். 245
    பாவிப்ப தென்னிற் பாவம் பாவகங் கடத்திற் பாவம்
    பாவிக்கும் அதுநா னென்னில் பாவகம் பாவங் கெட்டுப்
    பாவிப்ப தென்னிற் பாவம் பாவனை இறந்து நின்று
    பாவிக்கப் படுவ தாகும் பரம்பரன் அருளி னாலே. 246
    அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும்
    உன்னிய வெல்லாம் உள்நின் றுணர்த்துவன் ஆத லானும்
    என்னதி யானென் றோதும் இருஞ்செருக் கறுத்த லானும்
    தன்னறி வதனாற் காணும் தகைமையன் அல்லன் ஈசன். 247
    ஒன்றெனு மதனால் ஒன்றென் றுரைப்பதுண் டாகை யாலே
    நின்றனன் வேறாய்த் தன்னின் நிங்கிடா நிலைமை யாலே
    பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமையன் அறிவி னுள்ளே
    என்றுநின் றிடுத லாலே இவன்அவ னென்ன லாமே. 248

    சாதனவியல்
    ஏழாஞ் சூத்திரம் (249 -252)

    எட்டாஞ் சூத்திரம் (253-291 )
    >
    அனைத்துஞ்சத் தென்னின் ஒன்றை அறிந்திடா தசத்தா லென்னின்,
    முனைத்திடா தசத்துச் சத்தின் முன்னிருள் இரவி முன்போல்,
    நினைப்பதிங் கசத்தே யென்னில் சத்தின் முன்நிலாமை யானும்,
    தனைக்கொடொன் றுணர்த லானும் தானசத் துணரா தன்றே. 249
    சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்தும் அசத்து மன்று
    நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடும் இரண்டின் பாலும்
    ஒத்துட னுதித்து நில்லா துதியாது நின்றி டாது
    வைத்திடுந் தோற்றம் நாற்றம் மலரினின் வருதல் போலும். 250
    சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால் அசத்தஞ் ஞானம்
    ஒத்துறா குற்ற மெல்லாம் உற்றிடு முயிரின் கண்ணே
    சத்துள போதே வேறாம் சதசத்தும் அசத்து மெல்லாம்
    வைத்திடும் அநாதி யாக வாரிநீர் லவணம் போலும். 251
    அறிவிக்க அறித லானும் அழிவின்றி நிற்ற லானும்
    குறிபெற்ற சித்தும் சத்தும் கூறுவ துயிருக் கீசன்
    நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்பன் அன்றே
    பிறிவிப்பன் மலங்க ளெல்லாம் பின்னுயிர்க் கருளினாலே. 252
    மன்னவன்தன் மகன்வேட ரிடத்தே தங்கி
    வளர்ந்(து)அவனை அறியாது மயங்கி நிற்பப்
    பின்னவனும் என்மகன்நீ என்றவரிற் பிரித்துப்
    பெருமையொடும் தானாக்கிப் பேணு மாபோல்
    துன்னியஐம் புலவேடர் சுழலிற் பட்டுத்
    துணைவனையும் அறியாது துயருறும்தொல் லுயிரை
    மன்னும்அருட் குருவாகி வந்(து)அவரின் நீக்கி
    மலம்அகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன். 253
    உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம்
    உயரும்விஞ் ஞானகலர் பிரளயா கலர்சகலர்
    நிரையின்மலம் மலங்கன்மம் மலங்கன்ம மாயை
    நிற்கும்முத லிருவர்க்கு நிராதார மாகிக்
    கரையில்அருட் பரன்துவிதா சத்திநிபா தத்தால்
    கழிப்பன்மலம் சகலர்க்குக் கன்ம வொப்பில்
    தரையில்ஆ சான்மூர்த்தி ஆதார மாகித்
    தரித்தொழிப்பன் மலம்சதுர்த்தா சத்திநிபா தத்தால். 254
    பலவிதம்ஆ சான்பாச மோசனந்தான் பண்ணும்
    படிநயனத் தருள்பரிசம் வாசகம்மா னதமும்
    அலகில்சாத் திரம்யோக மௌத்தி ராகி
    அநேகமுள அவற்றினௌத் திரிஇரண்டு திறனாம்
    இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தால்
    இயற்றுவது கிரியைஎழிற் குணட்மண்ட லாதி
    நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதிதான் இன்னும்
    நிர்ப்பீசம் சபீசமென இரண்டாகி நிகழும். 255
    பாலரொடு வாலீசர் விருத்தர்பனி மொழியார்
    பலபோகத் தவர்வியாதிப் பட்டவர்க்குப் பண்ணும்
    சீலமது நிர்ப்பீசம் சமயா சாரம்
    திகழ்சுத்தி சமயிபுத் திரர்க்கு நித்தத்(து)
    ஏலுமதி காரத்தை இயற்றித் தானும்
    எழில்நிரதி காரையென நின்றிரண்டாய் விளங்கும்
    சாலநிகழ் தேகபா தத்தி னோடு
    சத்தியநிர் வாணமெனச் சாற்றுங் காலே. 256
    ஓதியுணர்ந் தொழுக்கநெறி இழுக்கா நல்ல
    உத்தமர்க்குச் செய்வதுயர் பீசமிவர் தம்மை
    நீதியினால் நித்தியநை மித்திககா மியத்தின்
    நிறுத்திநிரம் பதிகார நிகழ்த்துவதும் செய்து
    சாதகரா சாரியரும் ஆக்கி வீடு
    தருவிக்கும் உலோகசிவ தருமிணியென் றிரண்டாம்
    ஆதலினான் அதிகாரை யாம்சமயம் விசேடம்
    நிருவாணம் அபிடேகம் இவற்றனங்கு மன்றே. 257
    அழிவிலாக் கிரியையினான் ஆதல்சத்தி மத்தான்
    ஆதல்அத்து வாசுத்தி பண்ணிமல மகற்றி
    ஒழிவிலாச் சிவம்பிரகா சித்தற்கு ஞானம்
    உதிப்பித்துற் பவந்துடைப்பன் அரன்ஒருமூ வர்க்கும்
    வழுவிலா வழிஆறாம் மந்திரங்கள் பதங்கள்
    வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள்
    கழிவிலா துரைத்தமுறை யொன்றினொன்று வியாத்தி
    கருதுகலை சத்தியின்கண் சத்திசிவன் கண்ணாம். 258
    மந்திரங்கள் முதல் ஐந்தும் கலைஐந்தின் வியாத்தி
    மருவும்மந் திரமிரண்டு பதங்கள் நாலேழ்
    அந்தநிலை யெழுத்தொன்று புவனம் நூற்றெட்(டு)
    அவனிதத் துவமொன்று நிவிர்த்திஅயன் தெய்வம்
    வந்திடுமந் திரம்இரண்டு பதங்கள் மூவேழ்
    வன்னங்கள் நாலாறு புரம்ஐம்பத் தாறு
    தந்திடும்தத் துவங்கள்இரு பத்து மூன்று
    தரும்பிரதிட் டாகலைமால் அதிதெய்வம் தானாம். 259
    வித்தையின்மந் திரமிரண்டு பதம்நா லைந்து
    விரவும்எழுத் தேழுபுரம் இருபத் தேழு
    தத்துவமு மோரேழு தங்குமதி தெய்வம்
    தாவில்உருத் திரனாகும் சாந்தி தன்னில்
    வைத்தனமந் திரமிரண்டு பதங்கள்பதி னொன்று
    வன்னமொரு மூன்றுபுரம் பதினெட் டாகும்
    உத்தமமாம் தத்துவமும் ஒருமூன் றாகும்
    உணரில்அதி தேவதையும் உயரீச னாமே. 260
    சாந்தியா தீதகலை தன்னின்மந் திரங்கள்
    தாம்மூன்று பதமொன்(று)அக் கரங்கள்பதி னாறு
    வாய்ந்தபுரம் மூவைந்து தத்துவங்க ளிரண்டு
    மருவும்அதி தேவதையும் மன்னுசதா சிவராம்
    ஏய்ந்தமுறை மந்திரங்கள் பதினொன்று பதங்கள்
    எண்பத்தொன் றக்கரங்கள் ஐம்பத்தொன் றாகும்
    ஆய்ந்தபுரம் இருநூற்றோ டிருபத்து நாலாம்
    அறிதருதத் துவம்முப்பத் தாறுகலை ஐந்தே. 261
    மூன்றுதிறத் தணுக்கள்செயும் கன்மங் கட்கு
    முன்னிலையாம் மூவிரண்டாம் அத்து வாவின்
    ஆன்றமுறை அவைஅருத்தி அறுத்துமல முதிர்வித்(து)
    அரும்பருவம் அடைதலுமே ஆசா னாகித்
    தோன்றிநுக ராதவகை முற்செய் கன்மத்
    துகளறுத்தங் கத்துவாத் தொடக்கறவே சோதித்(து)
    ஏன்றஉடற் கன்மம்அந பவத்தினால் அறுத்திங்(கு)
    இனிச்செய்கன் மம்மூல மலம்ஞானத் தால்இடிப்பன். 262
    புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
    புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம
    அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
    அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
    சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
    சிரப்பொருளை மிகத்தௌ¤ந்தும் சென்றால் வைசத்
    திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம்
    செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர். 263
    இம்மையே ஈரெட்டாண் டெய்திஎழி லாரும்
    ஏந்திழையார் முத்தியென்றும் இருஞ்சுவர்க்க முத்தி
    அம்மையே யென்றமுத்தி ஐந்து கந்தம்
    அறக்கெடுகை யென்றும்அட்ட குணமுத்தி யென்றும்
    மெய்ம்மையே பாடாணம் போல்கைமுத்தி யென்றும்
    விவேகமுத்தி யென்றும்தன் மெய்வடிவாம் சிவத்தைச்
    செம்மையே பெறுகைமுத்தி யென்றும்செப் புவர்கள்
    சிவனடியைச் சேருமுத்தி செப்புவதிங் கியாமே. 264
    ஓதுசம யங்கள் பொருளுணரு நூல்கள்
    ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள்
    யாதுசம யம்பொருள்நூல் யாதிங் கென்னில்
    இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி
    நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
    நின்றதியா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல்
    ஆதலினால் இவையெல்லாம் அருமறைஆ கமத்தே
    அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும். 265
    அருமறையா கமமுதனூல் அனைத்தும்உரைக் கையினான்
    அளப்பரிதாம் அப்பொருளை அரனருளால் அணுக்கள்
    தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளிவில்
    தர்க்கமொடுத் தரங்களினாற் சமயம்சா தித்து
    மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம்
    மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே தாங்கம்
    சுருதிசிவா கமம்ஒழியச் சொல்லுவதொன் றில்லை
    சொல்லுவார்த் மக்கறையோ சொல்லொ ணாதே. 266
    வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள்
    வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்
    ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ ரிண்டும்
    ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்
    நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
    நிகழ்த்தியது நீள்மறையி னொழிபொருள்வே தாந்தத்
    தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம் பிறநூல்
    திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த மாகும் . 267
    சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
    செனனமொன்றி லேசீவன் முத்த ராக
    வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி
    மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து
    முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
    மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப்
    பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
    பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன பிராந்தி. 268
    இறைவனா வான்ஞான மெல்லா மெல்லா
    முதன்மைஅனுக் கிரகமெல்லா மியல்புடையான் இயம்பு
    மறைகளா கமங்களினான் அறிவெல்லாந் தோற்றும்
    மரபின்வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கும்
    முறைமையினால் இன்பத்துன் பங்கொடுத்த லாலே
    முதன்மையெலாம் அறிந்துமுயங் கிரண்டு போகத்
    திறமதனால் வினைஅறுக்குஞ் செய்தி யாலே
    சேரும்அனுக் கிரகமெலாம் காணுதும்நாம் சிவற்கே. 269
    சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்ர மார்க்கம்
    தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
    நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
    நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்
    சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்பிய
    சாரூப்பிய சாயுச்சிய மென்றுசதுர் விதமாம்
    முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி
    முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபத மென்பர். 270
    தாதமார்க் கம்சாற்றிற் சங்கரன்தன் கோயில்
    தலம்அலகிட் டிலகுதிரு மெழுக்கும் சாத்திப்
    போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி
    புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித்
    தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமும்
    செய்துதிரு வேடங்கண் டால்அடியேன் செய்வ(து)
    யாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும்
    இயற்றுவதிச் சரியைசெய்வோர் ஈசனுல கிருப்பர். 271
    புத்திரமார்க் கம்புகலில் புதியவிரைப் போது
    புகையொளிமஞ் சனம்அமுது முதல்கொண் டைந்து
    சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானாம்
    சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த
    பத்தியினால் அருச்சித்துப் பரவிப் போற்றிப்
    பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி
    நித்தலும்இக் கிரியையினை இயற்று வோர்கள்
    நின்மலன்தன் அருகிருப்பர் நினையுங் காலே. 272
    சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும்
    சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள்
    அகமார்க்க மறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங்
    கணைந்துபோய் மேலேறி அலர்மதிமண் டலத்தின்
    முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி
    முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள்
    உகமார்க்க அட்டாங்க யோக முற்றும்
    உழத்தல்உழந் தவர்சிவன்தன் உருவத்தைப் பெறுவர். 273
    சன்மாக்கம் சகலகலை புராண வேத
    சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
    பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம்
    பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும்
    நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
    ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம்
    பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
    பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் தானே. 274
    ஞானநூல் தனையோதல் ஓது வித்தல்
    நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
    ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
    இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
    ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம்
    ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம்
    ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
    அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம். 275
    கேட்டலுடன் சிந்தித்தல் தௌ¤த்தல் நிட்டை
    கிளத்தலென ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்
    வீட்டையடைந் திடுவர்நிட்டை மேவி னோர்கள்
    மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்(கு)
    ஈட்டியபுண் ணியநாத ராகி இன்பம்
    இனிதுநுகர்ந் தரனருளால் இந்தப் பார்மேல்
    நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால்
    ஞானநிட்டை அடைந்தவர் நாதன் தாளே. 276
    தானம்யா கம்தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள்
    சாந்திவிர தம்கன்ம யோகங்கள் சரித்தோர்
    ஈனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப்பளவின் மீள்வர்
    ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர்
    ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம்
    ஒடுங்கும்போ தரன்முன்நிலா தொழியின்உற்ப வித்து
    ஞானநெறி அடைந்தடைவர் சிவனை அங்கு
    நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற் றாளே. 277
    சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்
    திலமளவே செய்திடினும் நிலமலைபோல் நிகழ்ந்து
    பவமாயக் கடலின்அழுந் தாதவகை எடுத்துப்
    பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
    தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
    சரியைகிரி யாயோகந் தன்னினும்சா ராமே
    நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
    நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே. 278
    ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம்
    நல்லஆ கமஞ்சொல்ல அல்லவா மென்னும்
    ஊனத்தா ரென்கடவர் அஞ்ஞா னத்தால்
    உறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தான்
    ஆனத்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போல்
    அஞ்ஞானம் விடப்பந்தம் அறும்முத்தி யாகும்
    ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்
    இறைவனடி ஞானமே ஞான மென்பர். 279
    சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
    சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
    ஆரியனாம் ஆசாவந் தருளால் தோன்ற
    அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத்
    தூரியனாம் சிவன்தோன்றும் தானுந் தோன்றும்
    தொல்லுலக மெல்லாம்தன் னுள்ளே தோன்றும்
    நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும்
    நின்றநிலை யெல்லாம்முன் நிகழ்ந்து தோன்றும். 280
    மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிபாதம்
    மேவுதலும் ஞானம்விளைந் தோர்குருவின் அருளால்
    புக்கனுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள்
    பூதலத்தில் புகழ்சீவன் முத்த ராகித்
    தக்கபிரி யாப்பிரிய மின்றி ஓட்டில்
    தபனியத்தில் சமபுத்தி பண்ணிச்சங் கரனோ(டு)
    ஒக்கவுறைந் திவர்அவனை அவன்இவரை விடாதே
    உடந்தையாய்ச் சிவன்தோற்ற மொன்றுமே காண்பர். 281
    அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே
    அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து
    குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும்
    கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில்
    பிரியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப்
    பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த் தோன்றி
    நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி
    நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதார னாயே. 282
    புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்
    புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே
    நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
    ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
    எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்
    எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக்
    கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்
    கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன். 2830
    ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு
    நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை
    சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்
    செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை
    கோலமிலை புலனில்லை கரண மில்லை
    குணமில்லை குறியில்லை குலமு மில்லை
    பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப்
    பாடலினொ டாடலிவை பயின்றிடினும் பயில்வர். 284
    தேசமிடம் காலம்திக் காசனங்க ளின்றிச்
    செய்வதொன்று போல்செய்யாச் செயலதனைச் செய்தங்(கு)
    ஊசல்படு மனமின்றி உலாவல் நிற்றல்
    உறக்கமுணர் வுண்டிபட் டினியிருத்தல் கிடத்தல்
    மாசதனில் தூய்மையினின் வறுமை வாழ்வின்
    வருத்தத்தில் திருத்தத்தில் மைதுனத்தில் சினத்தின்
    ஆசையினின் வெறுப்பின்இவை யல்லாது மெல்லாம்
    அடைந்தாலும் ஞானிகள்தாம் அரனடியை அகலார். 285
    இந்நிலைதான் இல்லையேல் எல்லா மீசன்
    இடத்தினினும் ஈசனெல்லா விடத்தினினும் நின்ற
    அந்நிலையை அறிந்தந்தக் கரணங்கள் அடக்கி
    அறிவதொரு குறிகுருவின் அருளினால் அறிந்து
    மன்னுசிவன் தனையடைந்து நின்றவன்ற னாலே
    மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத்
    துன்னியசாக் கிரமதனில் துரியா தீதம்
    தோன்றமுயல் சிவானுபவம் சுவானுபூ திகமாம். 286
    சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்
    சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்
    பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின்
    பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ
    ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள்அரி வையரோ(டு)
    அனுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்
    நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும்
    நுழைவர்பிறப் பினின்வினைகள் நுங்கி டாவே. 287
    கருவிகழிந் தாற்காணா ரொன்றுமெனிற் காணார்
    காணாதார் கன்னிகைதான் காமரசங் காணாள்
    மருவிஇரு வரும்புணர வந்த இன்பம்
    வாயினாற் பேசரிது மணந்தவர்தாம் உணர்வர்
    உருவினுயிர் வடிவதுவும் உணர்ந்திலைகாண் சிவனை
    உணராதார் உணர்வினால் உணர்வதுகற் பனைகாண்
    அருள்பெறின்அவ் விருவரையும் அறிவிறந்தங் கறிவர்
    அறியாரேற் பிறப்பும்விடா தாணவமும் அறாதே. 2880
    பன்னிறங்கள் அவைகாட்டும் படிகம்பால் உள்ளம்
    பலபுலன்கள் நிறங்காட்டும் பரிசுபார்த் திட்(டு)
    இந்நிறங்கள் என்னிறம்அன் றென்று தன்றன்
    எழில்நிறங்கண் டருளினால் இந்நிறத்தின் வேறாய்ப்
    பொய்ந்நிறஐம் புலன்நிறங்கள் பொய்யெனமெய் கண்டான்
    பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை
    முன்னிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி
    முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்னீங்கா முறைபோல். 289
    எங்குந்தான் என்னினாம் எய்த வேண்டா
    எங்குமிலன் என்னின்வே றிறையு மல்லன்
    அங்கஞ்சேர் உயிர்போல்வன் என்னின் அங்கத்(து)
    அவயவங்கள் கண்போலக் காணா ஆன்மா
    இங்குநாம் இயம்புந்தத் துவங்களின் வைத்தறிவ(து)
    இறைஞானந் தந்துதா ளீதல்சுட ரிழந்த
    துங்கவிழிச் சோதியும்உட் சோதியும்பெற் றாற்போல்
    சோதிக்குட் சோதியாய்த் தோன்றிவன் காணே. 290
    பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
    படும்பொழுது நீங்கிஅது விடுமபொழுதிற் பரக்கும்
    மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
    அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும்
    நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
    நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி
    ஆசையொடும் அங்குமிங்கு மாகிஅல மருவோர்
    அரும்பாச மறுக்கும் வகை அருளின்வழி யுரைப்பாம். 291

    ஒன்பதாஞ் சூத்திரம் (292 - 303)

    பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
    பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
    நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
    நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
    ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்(று)
    அறிந்தகல அந்நிலையே யாகும் பின்னும்
    ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க
    உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெலா மோட. 292
    வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
    விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
    நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம்
    நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே
    காதலினால் நான்பிரம மென்னு ஞானம்
    கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண்(டு)
    ஓதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம்
    ஒன்றாகச் சிவன்இயல்பின் உணர்ந்திடுவன் காணே. 293
    கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில்
    கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் உயிர்கள்
    மரணங்கொண் டிடஉறங்கி மயங்கிமூர்ச் சிக்க
    வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச்
    சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி
    தவிராது மலமிதுவும் பசுஞான மாகும்
    அரணங்க ளெரித்தவன்தன் அடியைஅறி விறந்தங்(கு)
    அறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே. 294
    சிவனைஅவன் திருவடிஞா னத்தாற் சேரச்
    செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லாம்
    அவனையணு காவென்றும் ஆத லானும்
    அவனடிஅவ் வொளிஞான மாத லானும்
    இவனுமியான் துவக்குதிர மிறைச்சி மேதை
    என்புமச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ
    அவமகல எனையறியேன் எனும்ஐய மகல
    அடிகாட்டி ஆன்மாவைக் காட்ட லானும். 295
    கண்டிடுங்கண் தனைக்காணா கரணம் காணா
    கரணங்கள் தமைக்கான உயிருங் காணா
    உண்டியமர் உயிர்தானுந் தன்னைக் காணா(து)
    உயிர்க்குயிராம் ஒருவனையுங் காணா தாகும்
    கண்டசிவன் தனைக்காட்டி உயிருங் காட்டிக்
    கண்ணாகிக் கரணங்கள் காணமல் நிற்பன்
    கொண்டானை உளத்திற்கண் டடிகூடிற் பாசம்
    கூடாது கூடிடினும் குறித்தடியின் நிறுத்தே. 296
    குறித்தடியின் நின்(று)அட்ட குணமெட்டுச் சித்தி
    கோகனதன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம்
    வெறுத்துநெறி அறுவகையும் மேலொடுகீ ழடங்க
    வெறும்பொயென நினைந்திருக்க மேலொடுகீ ழில்லான்
    நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வர்க்கு
    நினைப்பரியான் ஒன்றுமிலான் நேர்படவந் துள்ளே
    பொறுப்பரிய பேரன்பை அருளியதன் வழியே
    புகுந்திடுவன் எங்குமிலாப் போகத்தைப் புரிந்தே. 297
    கண்டஇவை யல்லேன்நான் என்றகன்று காணாக்
    கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த
    தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே
    சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி
    விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால்
    விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும்
    பண்டைமறை களும்அதுநா னானே னென்று
    பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே. 298
    அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும்
    அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்(டு)
    அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி
    ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்தர்ச் சித்(து)
    அஞ்செழுத்தாற் குண்டலியின் அனலை யோம்பி
    அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் வழிநின்(று)
    அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன்
    அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே. 299
    நாட்டுமித யந்தானும் நாபியினில் அடியாய்
    ஞாலமுதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய்
    மூட்டுமோ கினிசுத்த வித்தைமல ரெட்டாய்
    முழுவிதழ்எட் னக்கரங்கள் முறைமையினின் உடைத்தாய்க்
    காட்டுகம லாசனமேல் ஈசர்சதா சிவமும்
    கலாமூர்த்த மாம்இவற்றின் கண்ணாகுஞ் சத்தி
    வீட்டைஅருள் சிவன்மூர்த்தி மானாகிச் சத்தி
    மேலாகி நிற்பன்இந்த விளைவறிந்து போற்றே. 300
    அந்தரியா கந்தன்னை மத்திசா தனமாய்
    அறைந்திடுவர் அதுதானும் ஆன்மசுத்தி யாகும்
    கந்தமலர் புகையொளிமஞ் சனம்அமுது முதலாக்
    கண்டனஎ லாம்மனத்தாற் கருதிக் கொண்டு
    சிந்தையினிற் பூசித்துச் சிவனைஞா னத்தால்
    சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க
    வந்திடும்அவ் வொளிபோல மருவிஅர னுளத்தே
    வரவரவந் திடுவன்பின் மலமான தறுமே. 301
    புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டில்
    பூமரத்தின் கீழுதிர்ந்த போதுகளுங் கொண்டு
    சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தா லங்குச்
    சிந்திக்கும் படிஇங்குச் சிந்தித்துப் போற்றி
    அறமபாவங் கட்குநாம் என்கடவே மென்றும்
    ஆண்டவனைக் கண்டக்கால் அகம்புறமென் னாதே
    திறம்பாதே பணிசெய்து நிற்கை யன்றோ
    சீரடியார் தம்முடைய செய்தி தானே. 302
    இந்தனத்தின் எரிபாலின் நெய்பழத்தின் இரதம்
    எள்ளின்க ணெண்ணெயும்போல் எங்குமுளன் இறைவன்
    வந்தனைசெய் தெய்விடத்தும் வழிபடவே அருளும்
    மலமறுப்போ ரான்மாவின் மலரடிஞா னத்தாற்
    சிந்தனைசெய் தர்ச்சிக்க சிவன்உளத்தே தோன்றித்
    தீஇரும்பைச் செய்வதுபோற் சீவன் தன்னைப்
    பந்தனையை அறுத்துத்தா னாக்கித்தன் னுருவப்
    பரப்பெல்லாங் கொடுபோந்து பதிப்பனிவன் பாலே. 303

    ப ய னி ய ல்
    பத்தாஞ் சூத்திரம் (304 - 309)

    இவனுலகில் இதமகிதம் செய்த வெல்லாம்
    இதமகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்
    அவனிவனாய் நின்றமுறை ஏக னாகி
    அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம்
    சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றும்
    செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
    பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற்
    பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே. 304
    யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதியான் என்னும்
    இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத்
    தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே
    தனையளித்து முன்நிற்கும் வினையொளித்திட் டோடும்
    நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி
    நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம்
    ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பி னல்லால்
    ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே. 305
    இந்திரிய மெனைப்பற்றி நின்றேஎன் வசத்தின்
    இசையாதே தன்வசத்தே எனையீர்ப்ப திவற்றைத்
    தந்தவன்ற னாணைவழி நின்றிடலால் என்றும்
    தானறிந்திட் டிவற்றினொடுந் தனையுடையான் தாள்கள்
    வந்தனைசெய் திவற்றின்வலி அருளினால் வாட்டி
    வாட்டமின்றி இருந்திடவும் வருங்செயல்க ளுண்டேல்
    முந்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள்
    மூளாஅங் காளாகி மீளா னன்றே. 306
    சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத்
    தானாக்கித் தலைவன்அவர் தாஞ்செய்வினை தன்னால்
    நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய்
    நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன்
    உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே
    உள்நின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும்
    நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும்
    நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் தானே. 307
    நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
    நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும்
    நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
    நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
    ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
    எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானங்
    கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
    குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பார். 308
    அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும்
    ஔடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா
    எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக்(கு)
    இருவினைகள் சென்றணையா முற்செய்வினை இங்குத்
    தங்கிப்போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த
    சக்கரமும கந்தித்துச் சுழலு மாபோல்
    மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா
    மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே. 309

    பதினொராஞ் சூத்திரம் (310 - 321)

    காயமொழிந் தாற்சுத்த னாகி ஆன்மாக்
    காட்டக்கண் டிடுந்தன்மை யுடைய கண்ணுக்(கு)
    ஏயும்உயிர் காட்டிக்கண் டிடுமா போல
    ஈசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவன் இத்தை
    ஆயுமறி வுடையனாய் அன்பு செய்ய
    அந்நிலைமை இந்நிலையின் அடைந்தமுறை யாலே
    மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீ ழிருப்பன்
    மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே. 310
    பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே
    பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க
    வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம்
    வாச்சியவா சகஞானம் வைந்தவத்தின் கலக்கம்
    தருஞானம் போகஞா திருஞான ஞேயம்
    தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகும்
    திருஞானம் இவையெலாங் கடந்தசிவ ஞானம்
    ஆதலாற் சீவன்முத்தர் சிவமேகண் டிருப்பர். 311
    அநாதிஉடல் ஒன்றினைவிட் டொன்றுபற்றிக் கன்மால்
    ஆயழிந்து வருதலால் அந்த மில்லை
    பினாதியருள் பெற்றவர்கள் நித்தவுரு வத்தைப்
    பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே இதுவும்
    இனாதுநிலை இதுதானுங் காய முண்டேல்
    இருங்கன்ம மாயைமல மெல்லா முண்டாம்
    மனாதிதரு முடலாதி காரியத்தால் அநாதி
    மலம்அறுக்கும் மருந்தற்றால் உடன்மாயுங் காணே. 312
    தெரிவரிய மெய்ஞ்ஞானம் சேர்ந்த வாறே
    சிவம்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த னாகும்
    உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமும்
    ஔ¢ளெரியின் ஔ¤முன்னர் இருளுந் தேற்றின்
    வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி
    மாயாதே தன்சத்தி மாய்ந்து காயம்
    திரியுமள வும்உளதாய்ப் பின்பு காயஞ்
    சேராத வகைதானுந் தேயு மன்றே. 313
    ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும்
    அடையின்அந்த ஆன்மாவும் அழியுமெனிற் செம்பிற்
    காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக்
    கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே
    தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால்
    தான்சுத்த னாயிருக்கை முத்திஅரன் தாளைப்
    பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன்
    புகுதஇருள் போம்அடியிற் பொருந்தமலம் போமே. 314
    நெல்லினுக்குத் தவிடுமிகள் அநாதி யாயே
    நெல்லைவிட்டு நீங்கும்வகை நின்றநிலை நிகழ்த்தீர்
    சொல்லியிடில் துகளற்ற அரிசியின்பா லில்லை
    தொக்கிருந்து மற்றொருநெல் தோன்றி டாவாம்
    மெல்லஇவை விடுமறவே இவைபோல அணுவை
    மேவுமல முடல்கன்மம் அநாதிவிட்டே நீங்கும்
    நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை
    நணுகிநிற்கு மாதலால் நாசமுமின் றாமே. 315
    எவ்விடத்தும் இறையடியை இன்றியமைந் தொன்றை
    அறிந்தியற்றி யிடாஉயிர்க ளிறைவன் றானும்
    செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து
    சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன்
    இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா
    இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும்
    அவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லால்நாம்
    அரன்டியை அகன்றுநிற்ப தெங்கே யாமே. 316
    எங்குந்தான் நிறைந்துசிவன் நின்றா னாகில்
    எல்லாருங் காணவே வேண்டுந்தா னென்னில்
    இங்குந்தான் அந்தகருக் கிரவிஇரு ளாகும்
    ஈசனருட் கண்ணில்லார்க் கொளியாயே யிருளாம்
    பங்கந்தா னெழும்பதுமம் பக்குவத்தை யடையப்
    பதிரிஅலர்த் திடுவதுபோல் பருவஞ்சே ருயிர்க்குத்
    துங்கஅரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே
    சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே. 317
    சென்றணையும் நிழல்போலச் சிவன்நிற்ப னென்னில்
    சென்றணையும் அவன்முதலி சிவத்தைஅணைந் தொன்றாய்
    நின்றதுயிர் கெட்டென்னில் கெட்டதணை வின்றாம்
    நின்றதேற் கேடில்லை அணைந்துகெட்ட தென்னில்
    பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ
    பொன்றுகையே முத்தியெனில் புருடன்நித்த னன்றாம்
    ஒன்றியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னின்
    ஒருபொருளாம் அதிபதியோ டுயிர்பொருளொன் றன்றே. 318
    செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச்
    செம்பொனுடன் சேரும்மலஞ் சிதைந்தாற் சீவன்
    நம்பனுடன் கூடுமெனிற் பொன்போ லல்லன்
    நற்குளிகை போலஅரன் நணுகுமலம் போக்கி
    அம்பொனடிக் கீழ்வைப்பன் அருங்களங்க மறுக்கும்
    அக்குளிகை தானும்பொன் னாகா தாகும்
    உம்பர்பிரா னுற்பத்தி யாதிகளுக் குரியன்
    உயிர்தானுஞ் சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே. 319
    சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில்
    சிவனருட்சித் திவன்அருளைச் சேருஞ்சித் தவன்றான்
    பவங்கெடுபுத் திமுத்தி பண்ணுஞ்சித் திவற்றிற்
    படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து மிவன்றான்
    அவன்றானே அறியுஞ்சித் தாதலினா லிரண்டும்
    அணைந்தாலு மொன்றாகா தநந்நியமாக யிருக்கும்
    இவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி
    இதுஅசித்தென் றிடில்அவனுக் கிவனும்அசித் தாமே. 320
    இரும்பைக்காந் தம்வலித்தாற் போல்இயைந்தங் குயிரை
    எரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத்தா னாக்கி
    அரும்பித்திந் தனத்தைஅன லழிப்பதுபோல் மலத்தை
    அறுத்தமலன் அப்பணைந்த உப்பேபோ லணைந்து
    விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோல் அடக்கி
    மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னாகிக்
    கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக்
    கட்டியைஒத் திருப்பன்அந்த முத்தியினிற் கலந்தே. 321

    பன்னிரண்டாஞ் சூத்திரம் (322 -328)

    செங்கமலத் தாளிணைகள் சேர லொட்டாத்
    திரிமலங்கள் அறுத்தீசன் நேசரொடுஞ் செறிந்திட்(டு)
    அங்கவர்தந் திருவேடம் ஆலயங்க ளெல்லாம்
    அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப் பாடி
    எங்குமியாம் ஒருவர்க்கு மௌ¤யோ மல்லோம்
    யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித்
    திங்கள்முடி யார்அடியார் அடியே மென்று
    திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை யோரே. 322
    ஈசனுக்கன் பில்லார் அடியவர்க்கன் பில்லார்
    எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும்அன் பில்லார்
    பேசுவதென் அறிவிலாப் பிணங்களைநாம் இணங்கிற்
    பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர் விடுநீ
    ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்(டு)
    அவர்கருமம் உன்கரும மாகச் செய்து
    கூசிமொழிந் தருள்ஞானக் குறியில் நின்று
    கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே. 323
    அறிவரியான் தனையறிய யாக்கை யாக்கி
    அங்கங்கே உயிர்க்குயிராய் அறிவுகொடுத் தருளால்
    செறிதலினால் திருவேடம் சிவனுருவே யாகும்
    சிவோகம்பா விக்கும்அத்தாற் சிவனு மாவர்
    குறியதனால் இதயத்தே அரனைக் கூடும்
    கொள்கையினால் அரனாவர் குறியொடுதாம் அழியும்
    நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுவ ரென்றால்
    நேசத்தால் தொழுதிடுநீ பாசத்தார் விடவே. 324
    திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
    சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே
    உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும்
    உளனெங்கும் இலன்இங்கும் உளனென் பார்க்கும்
    விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
    மந்திரத்தின் வந்துதித்து மிகுஞ்சுரபிக் கெங்கும்
    உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி
    ஒழுகுவது போல்வௌ¤ப்பட் டருளுவன்அன் பர்க்கே. 325
    ஞானயோ கக்கிரியா சரியை நாலும்
    நாதன்தன் பணிஞானி நாலினிக்கும் உரியன்
    ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
    யோகிகிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி
    ஆனஇரண் டினுக்குரியன் சரியையினில் நின்றோன்
    அச்சரியைக் கேஉரியன் ஆதலினால் யார்க்கும்
    ஈனமிலா ஞானகுரு வேகுருவும் இவனே
    ஈசனிவன் தான்என்றும் இறைஞ்சி ஏத்தே. 326
    மந்திரத்தான் மருந்துகளால் வாய்த்தவியோ கத்தால்
    மணிஇரத குளிகையினால் மற்றும் மற்றும்
    தந்திரத்தே சொன்னமுறை செய்ய வேத
    சகலகலை ஞானங்கள் திரிகால ஞானம்
    அந்தமிலா அணிமாதி ஞானங்க ளெல்லாம்
    அடைந்திடும்ஆ சான்அருளால் அடிசேர் ஞானம்
    வந்திடுமற் றொன்றாலும் வாரா தாகும்
    மற்றவையும் அவனருளால் மருவு மன்றே. 327
    பரம்பிரமம் இவனென்றும் பரசிவன்தா னென்றும்
    பரஞானம் இவனென்றும் பராபரன்தா னென்றும்
    அரன்தருஞ்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும்
    அருட்குருவை வழிபடவே அவனிவன்தா னாயே
    இரங்கியவா ரணம்யாமை மீன்அண்டம் சினையை
    இயல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் பார்த்தும்
    பரிந்திவைதா மாக்குமா போல்சிவமே யாக்கும்
    பரிசித்தும் சிந்தித்தும் பார்த்தும் தானே. 328

    சிவஞானசித்தியார் சுபக்கம் முற்றிற்று