MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  2. வியாக்கிரபாதச் சருக்கம். (29- )

  மன்னுமருந்தபோதனரின் மருவுமத்தியந்தின்னா
  முன்னரியதிருமுனிபா லோங்குலகந்துயர்நீங்கப்
  பன்னரியசிவஞானம் பத்திதரும்பான்மைதகத்
  தன்னிகரிறிருவருளா லவதரித்தானொருதநயன்.

  இ-ள்: நிலைபெற்ற பெரிய விருஷிகளிற் பொருந்திய மத்தியந்தினனென்று பேரையுடைய
  உன்னுதற்கரிதாகிய மகாவிருஷியினிடத்திலே பெரிய சர்வலோகங்களும் பிறவித் துன்பம்
  நீங்கும் வண்ணம் திரிலித கரணங்களுங் கடந்த சிவனிடத்தில் பத்திஞான
  வயிராக்கியத்திலுண்டான பகுதிமிகத் தனக்கொப்பில்லாத கடாக்ஷத்தினாலே ஒருகுமாரன்
  திருவவதாரஞ் செய்தான். (2-1)

  தனிப்புதல்வன்றனையணைத்துத் தகவுச்சிமோந்துசடங்
  கனைத்துமடைவினிலியற்றி யருமறைநூலவைகொடுத்து
  மனத்துணையாந்திருநாம மருவுநெறியுபதேசித்
  தினிச்செயவேண்டுவதென்கொ லெனமொழிந்தானெழின்முனிவன்.

  இ-ள்: நல்லொழுக்கமுள்ள மத்தியந்தினமுனிவர் ஒப்பில்லாத குமாரனைத் தழுவிக்கொண்டு
  இலக்ஷணமுள்ள உச்சியை மோந்து உபநயன முடிவாயுள்ள கன்மங்களடைவே பண்ணி
  பதினாலு வித்தையையுங் கற்பித்து உயிர்த் துணையாகிய ஸ்ரீ பஞ்சாக்கர முறைமையிலே
  பொருந்தும்படி உபதேசித்துக் குமாரனைப் பார்த்து இனிநா முனக்குச் செய்யு முபகாரமேதென்று
  கேட்டருளினார்.

  பதினாலு வித்தையாவது ஆறங்கம் நால்வேதம் மீமாஞ்சை புராணம் தருக்கம் தருமசாத்திரம்
  என்பவைகளாம். (2-2)

  இந்தவகைச்சிவனருளா லிரவியெதிர்மணியுமிழ
  வந்தவனலெனவிளங்கு மழமுனிவனடிவணங்கித்
  தந்திரமுன்புகலுமருந் தவத்தொகையிற்றலையான்
  வந்தமின்மாதவமடியேற்கருளு கெனவுரைசெய்தான்.

  இ-ள்: இந்தக்கிரமத்தினால் கன்மம் சமமாய் அருள்மேலிட ஆதித்தன் சந்நிதியில் சூரியகாந்தஞ்
  சுவலிக்குமாறு போல் (ஞானஉதயமான) மழமுனி பிதாவை நமஸ்கரித்து வேதாகம முன்சொன்ன
  அரியதவசுகளில் மேலானத வசு அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும் என்றுசொன்னான்- எ-று. (2-3)

  தவமெவையுமுணர்ந்தமுனி தநயன்முகமிகநோக்கிப்
  புவனமலிபோகங்கள் பொருந்திமருந்தவம்புரிந்தாற்
  சிவகதியுமிதுவன்று சிவார்ச்சனமார்ச்சனமாகிற
  பவமகலும்பரபோகம் பெறலாகுமெனப்பகர்ந்தான்.

  இ-ள். எல்லாத்தவசுகளுமறிந்த அந்தமுனிவர் குமாரனுடைய திருமுகத்தைமிகுந்த அனுக்கிரகத்தாலே
  பார்த்து அருளிச்செய்வார், உலகங்களில் அரியதவசுகள் பண்ணினால் மிகுதியான சுவர்க்காதி
  போகங்கள் பொருந்தும், இது சிவலோகத்துக்குப் போம் வழிஎங்ஙனமென்னில், சிவபூசையை
  அர்ச்சிப்பையானால் சனனம் விடும் பரலோகமும் சித்திக்குமென்று அனுக்கிரகித்தார்- எ-று. (2-4)

  சொன்னமொழிகொண்டிறைவன் றோன்றிமகிழ்ந்துளதானம்
  பின்னுகெனமழமுனிக்குப் பார்முழுதும்பரப்பிரம
  சன்னிதிகாணதுகாணுந் தவக்குறைகாணென்றாலு
  மன்னிடமாய்நிகழுமிட முளதென்றான்மாமுனிவன்.

  இ-ள். குருவுபதேசத்தையுட்கொண்டு பரமேஸ்வரன் திரோபவியாமல் பிரகாசித்து ஆநந்த சத்தியுடனே
  யெழுந்தருளியிருக்கிற புண்ணிய ஸ்தல மருளிச்செய்யுமென இருநூற்றிருபத்துநாலு புவனங்களுஞ்
  சிவ சந்நிதியாம் (அப்படியன்றென்று) காணும்படி செய்த தவசுகளில் குறைவாகிலும் (சரீரமுழுதும்
  ஆன்மா வியாபியாய் நின்றாலும்) அந்த ஆன்மா இருக்குமிடம் ஒன்று உண்டாயிருப்பதுபோல் சிவன்
  எங்கு நிறைந்து நின்றாலும் சிவனுக்க திட்டானமாய் விளங்கும் புண்ணிய ஸ்தலமுமுளதென்று
  அம்முனிவர் அருளிச் செய்தார்- எ-று.
  அதேதென்னில். (2-5)

  பாருயிர்கட்குபகரித்துப் பரப்பினடுப்படுவதொரு
  மேருகிரியும்புடைசூழ் வெற்புமவற்றிடைநாடு
  மாரயிர்கள்பயனருந்து ம்மருலகாமெனக்கழித்தான்
  சீருலவுநாறுவளர் செறுவெனலாஞ்சிறுமையுற.

  இ-ள். பதினாலுலோகத்திலுமுள்ள ஆன்மாக்களிக்குச் சலனம் வாராமல் பூமிக்குநடுவே நிற்கிற
  மகாமேருவும் அதன்பக்கஞ் சூழ்ந்த குல பருப்பதங்களும் அவைகளின் நடுவிலிருக்கும்
  இராச்சியங்களும் ஆன்மாக்களிந்தப் பூமியிலே யார் சித்தகன்ம்பலம் அனுபவிக்கிற
  சுவர்க்கத்துக்கொக்கும், அதிற்கன்மபலம் நாற்றங்கால் விளைவுக் கொக்குமெனக்
  கழித்தான்சிவன்- எ-று. (2-6)

  எத்தகையபோகங்க ளெவற்றினுக்குங்காரணமாய்
  வைத்தபடியிடம்போதா வகைநெருங்குமன்னுயிர்கண்
  முத்திபெறத்திருவுள்ள முகிழ்த்தபெருங்கருணையினா
  லத்தனுமித்தலநண்ணி யலகிலிடங்கைக்கொண்டான்.

  இ-ள். எல்லாப் பெருமையுமுடைய போகபூமியான சுவர்க்காதிபத முதலான நரகாதி யெவைகளிலும்
  காரணமாக வைத்த கன்மபூமி இடம் போதாத படியாலே ஒன்றுக்கொன்று நெருங்கி நிற்கிற
  எண்ணிறந்த ஆன்மாக்களும் சிவ புண்ணியத்தினாலே கன்ம சாமியசத்திநி பாதமல பாகமாய
  முத்திபெறத் திருவுள்ளத்தில் குறித்த பெரிய கிருபாசக்தியைய திட்டித்துப் பரமேசுவரனும்
  அந்தக் கன்மபூமியைப் பொருந்தி எண்ணிறந்த திருப்படைவீடு இடமாகக் கொண்டிருந்தான்--எ-று.

  இனி இதிலும் அதிகமருளிச் செய்கிறார். திருப்படைவீடுஎன்பதுஆலயம். (2-7)

  ஞாலத்தாயிரகோடிநற்றானமுளவவற்றி
  னேலத்தானலமார விடங்கொண்ட வெழிற்றில்லை
  மூலத்தானத்தொளியாய் முளைத்தெழுந்தசிவலிங்கக்
  கோலத்தானின்பூசை கொள்வானென்றுரைசெய்து.

  இ-ள். இந்தக் கன்மபூமியி லெண்ணிறந்த திருப்படைவீட்டில் ஆயிரங்கோடி புண்ணிய ஸ்தலமுண்டு
  இத்தலங்களிலா நந்தநிருத்தஞ் செய்யப் பொருந்தின தில்லை வனத்து ஆலடியில் பிரகாசமான
  பாதாளத்தின்கீழ் சொல்லறிந்த சிவபூமியிலே நின்றும் குறிதோன்றின சிவலிங்கக் கோலத்தான்
  நினது பூசைகொள்ளு மவனென வாசக தீக்ஷைபண்ணினார். எ-று. (2-8)

  திருநீறுநுதல்சேர்த்தித் திகழுச்சிதனைமோந்தெங்
  கருநீறுபடவுதித்த காளையெனவணைத்துவிழி
  தருநிர்மத்தியந்தின்னாந் தந்தையைவந்தனைசெய்து
  வெருநீர்மையன்னையையு மடிபணிந்துவிடைகொண்டான்.

  இ-ள். நெற்றியிலே திருநீறுசாத்திப் புத்திரவாஞ்சையாலே உச்சியை மோந்து எமது கருவாகிய
  பாசம் நீறுபட்டுப் போம்படிசனித்த பிள்ளையென்று ஆலிங்கனம் பண்ணி இந்தப் பிள்ளையை
  நீங்குகிறோமேயென்று விழி நீர்தர விருக்கிற பிதாவாகிய மத்தியந்தின மாமுனியையு நமஸ்கரித்து
  பிள்ளை நீங்குறானென்கிற பயத்தையுடைய மாதாவையும் நமஸ்கரித்து அனுமதி பெற்றான். (2-9)

  வேறு.

  மண்டானிடர்தீர்வகையாலருளால் வருவானிருளார்மகராலயநீர்
  தண்டாரகைபோற்றரளம்புரளத் தள்ளுந்தடமாடுயர்தில்லைவனத்
  தண்டாதிபனாமமதேதுணையா வரியுங்கரியுந்திரியுஞ்சரியுங்
  கண்டானுழையாவுயர்கானமுமுன் காணாதனகண்டுகடந்தன்னே.

  இ-ள். பூலோகம் பிறவித்துன்ப நீங்கும்படி அருளினாலே தெற்கு நோக்கி வருகின்றவன்
  கருங்கடற்றரங்க நீர் குளிர்ந்த தாரகைகளைப்போல் முத்துக்களை வாரி யொதுக்கும்
  கரைப் புறஞ்சூழும் பெரிய தில்லை வனத்து அண்டர் நாயகனது பஞ்சாக்கரமே வழித்துணையாகச்
  சிங்கமும் யானையும் சஞ்சரிக்கும் வழியும் கண்ணுக்கு நுழைய வொண்ணாத இருள்செறிந்து
  யர்ந்தகானமும் முன்காணாதவை யெல்லாத்தையுங் கண்டு நீங்கினான்-- எ-று. (2-10)

  மொழியும்மொழியும்பரிசொன்றிலதாமுன்னான்மறையோதமுழங்கியகான்,
  வழியும்வழியும்மதுவார்புதுவீ வாசந்தகவீசியவார்குவளைக்,
  கழியுங்கழியும்படிவனந்தலர்பொற்கமலங் கண்மலங்களையுங்கயநீர்,
  பொழியும்விழியும்மனமுங்குளிரப் புதுமாமுனிகண்டுபுகழ்ந்தனனே.

  இ-ள். ஆனாதி காலத்திலே தொடங்கி வேதாகமங்களும் வாக்குக்கெட்டா தென்றெழியாமல்
  முழங்கிக் கூப்பிடும் வனமார்க்கமும் ஒழுங்குதேனை நிறையப்பருகின புதிய வண்டுகளும் மணம்
  பொருந்திவீசிய நீளிய நீலோற் பல மலர்ந்தகழியும் நீங்கும்படி வந்து அலர்ந்த பொற்றாமரைகளையும்
  பாசமறுக்குந் திருக்குளத்தையும் நீர்பொழியுங் கண்ணும் மனமுங் களிகூரக்கண்டு தோத்திரம்
  பண்ணினான் புதியமுனி-- எ-று. (2-11)

  முற்பிறப்பில் இந்தத் தலத்தைத் தரிசித்தவரல்லர்- தரிசித்திருந்தால் முத்தியடைய
  வேண்டுமேயல்லது மறுசன்மம் வாராது இப்போது - மறுசன்மம் கொண்டுவந்து
  தரிசித்தாராதலால் புதிய முனியென்றார்.

  சீரார்தருபொய்கைவணங்கியதன்றென்பான்மிகுமன்பொடுசேர்சரியே
  பேராவகைசெல்லவொராலநிழற்பிரியாதபிரானெதிற்நேர்படமுற்
  பாரார்விழுந்துமெழுந்தும்விழிப்பயின்மாரிபொழிந்துமழிந்துமொழிந்
  தாராவமுதேயெனையாளுடையா யறிவேயெனவோதின்னாரணமே.

  இ-ள். வைபவமிகுந்த புண்டரீக பொய்கையை வணங்கி அதற்குத் தெற்காக மிகுந்த அன்பு
  துணையாகப் பொருந்தின சரிவழியே விலங்காமற் செல்லுமளவில் ஒரு ஆலடி நிழலைப்
  பிரியாத ஸ்ரீமூலத்தானமுடைய தமபிரானார் முன்னே வெளிப்படத் திருமுன்னே யேகாங்கமா
  விழுந்து தெண்டம் பண்ணியும் எழுந்திருந்தும் விழியிலே பயிலப்படா நின்ற நீர்மேகம்போல
  பொழியா நின்றும் தன்னையிழந்துந் தோத்திரங்கள் மொழிந்தும் தெவிட்டா வமுதேயென்னை
  யடிமையாக வுடையவனே யென்னறிவேயென்று வேதங்களாலே தோத்திரம் பண்ணினான்- எ-று. (2-12)

  முன்னாள்பதியாயினுமேதகுசீர் மூலபதியாளுடைமுக்கணனே
  பொன்னார்தருபொய்கையுடைப்புனிதாபொடிசேர்வடிமுடிவேயடியே
  னென்னாதரவார்தருபூசைகொள்வாயினியாய்முனியாதெனவோதிமடுப்,
  பன்னாண்மலர்கொய்ததின்மூழ்கியருட்பாதங்களணைந்துபணிந்தனனே.

  இ-ள். அனாதிகாலத்திலே தொடங்கிப் பெத்தமுத்தியிரண்டினுஞ் சுதந்தரத்தினாலே
  யாண்டருளிய பதியேயாயினும் பின்னையுஞ் சீரியவுனக் கொத்திருக்கிற மூலமான
  பதியை யாண்டு கொண்டருளிய மூன்று கண்ணினையுடையோனே, இதுவுமன்றி யுனக்கு
  மேலுமருளுமாயிருக்கிற புண்டரீ கப் பொய்கையையுடைய புனிதனே, இயல்பாகவே
  விபூதிதூளிதஞ் சேர்ந்த திருமேனியையுடையவனே, எல்லாப் பொருளுக்கும் முடிவே
  பேதையாகிய அடியேனுடைய ஆசைமிகுந்த அருச்சனையைக் கொண்டருளுவாய் யாவற்கு
  மினியானே தீதென்று திரோப வியாமற் கொண்டருளென்று திருக்குளத்திலே மூழ்கி அதிற்
  புதிதாக மலர்ந்த பலபூக்களையும் பொற்றாமரைப் பூவையுமெடுத்து வந்து
  அருட்பாதங்களையருச் சித்தான்--- எ-று. (2-13)

  தடமாமலர்கொண்டுவணங்கியருந் தவமாமுனிதில்லைவனச்சரியே
  குடபாலணைவான்மணமாமலருங்குளமுங்கரையுந்தளமுங்குறுகித்
  திடமார்தருவே நிழலாவெழிலார் சிவலிங்கமிருத்தியருத்தியொடங்
  கிடமாகவிரண்டிடமும்பணிவுற்றிறையே துணையாகவிருந்தமர்நாள்.

  இ-ள். பெரிதாயலரந்த திவ்வியதாமரை மலர்கொண்டு பூசித்துப் பெரிய அருணீங்காதமுனி
  தில்லை வனத்தில் மேற்காகவொரு சரி வழியே செல்லுகையிலே பரிமளமிகுந்த பூவினையும்
  வாவியினையுங் கரையினையும் உள்ளாடு வெளியையும் பொருந்திச் சிக்கென்ற தொரு
  தில்லைச் செடிநிழலிலே சோதிரூபமான சிவலிங்கந்தா பித்து ஆசையுடனே பன்னசாலை
  யுமுண்டாகப் பண்ணி மூலத்தானத் துடனிரண்டிடமும் பணிவுற்று இறைவனே துணையாகத்
  திரிவித கரணமும் பொருந்தியிருக்கு நாளில்---எ-று.
  திடமார்தருவேயென்பதற்கு--வலியமரமெனிலுமமையும். (2-14)

  காலம்பெறநீறணிமாமுனிநீர் கமழ்குண்டிகைதண்டுகரண்டிகையுட்
  சாலும்பலபோதுசமித்தொளிர்புற்சாகாதிபலாசிலைதாமிகமே
  னாலுஞ்சடையெட்டுமுடித்தொருநாணண்ணித்திகழர்ச்சனைபண்ணமருப்
  பாலொன்றலராய்பொழுதேபழுதார்பலமாமலர்கண்டுபகர்ந்தயர்வான்.

  இ-ள். சந்தியாவந்தன காலங்கள் பொருந்த அனுட்டானம் பண்ணும் மழமுனியென்பவன்
  பரிமளமுள்ள சலம் பொருந்தின கமண்டலம் தண்டு திருப்பூக்குடை நிறைந்த பலபுட்பங்கள்
  சமிதை பசிய தருப்பை அறுகு முதலான புல்சாக மூலபலங்கள் பலாசிலை முதலானவை
  மிகக் கொண்டுவந்து அதற்குப் பின்பு தாழ்ந்த சடையை எட்டுமுடியாகக் கட்டிமுடித்து
  ஒருநாள் புட்ப விதிப்படி பொருந்தப் பூசிக்கப் பரிமளம் பொருந்தின புட்பம் ஆராயுமளவில்
  குற்றமிகுந்த பலபுட்பங்களைக் கண்டு விதனப்பட்டுச் சொல்லுவான். எ-று. (2-15)

  வண்டூதும்விடிந்தெனிலல்லெனிலோர் வழியுந்தெரியாதுமரங்கண்மிகக்
  கண்டூரவளர்ந்துகரஞ்சரணங்காலும்பனியால்வழுவுங்கழிதே
  னுண்டூறுபடுத்தியசெம்மனல்வீயொத்தேறுமரும்புவிரும்பலரைப்
  பண்டூரொடெரித்தபரம்பொருளார் பழுதென்றனரென்றுபகர்ந்தயர்வான்.

  இ-ள்: புட்பம் -விடிந்தெடுக்கில் வண்டுகள் தீண்டும் இராத்திரியெடுக்கப் போனால் வழியுந்
  தெரியாது கோங்கு முதலான மரங்களிலே யெடுக்கலா மென்னில் அடிமரம் கண்ணுக்கும்
  எட்டாமல் உயர்ந்து வளர்ந்திருக்கிற படியால் கையுங்காலும் பனியால் வழுக்கும் மிகுந்த
  வண்டுகள் தேனையுண்டு ஊறுபடுத்திய பழமையாகிய நல்லபூவும் மலரும் பக்குவத்தைப்பொருந்தி
  வண்டுகள் ஏறத்தக்க அரும்புகளும் நாட்பூவும் முன்னே விரும்பாத முப்புராதிகளையூருடனே
  யெரித்தருளிய தம்பிரானார் ஆகமத்திலே பழுதென்றருளிச் செய்தார் இதற்கென் செய்வோமென்று
  விதனப் பட்டிருந்தார்.-எ-று (2-16)

  தண்ணார்மதிசூடுசடாமகுடத்தலைவா
  கடைவாழ்வுதவிர்ப்பவனே,
  கண்ணார்நிதலோயொருமான்மறிசேர்கரவா
  வரவாகருமூலகரா,
  மண்ணார்புகழ்தில்லைவனம்பிரியா
  மணியேயெனையாளமகிழ்ந்தனையே,
  லெண்ணாதுநினைந்தவைதந்தருண்மற்றின்பார்
  தருமன்பிலனென்றயர்வான்.

  இ-ள்: குளிர்ச்சிபொருந்திய சந்திரனையணிந்த சடாமகுடத் தலைவனே
  ஈனமான உலக வாதனையை அடியார்களுக்குத் தவிர்ப்பவனே நிறைந்த பாலலோசனனே ஒப்பற்ற
  மான்மறி பொருந்தின கரத்தையுடையானே பாம்பைப் பூணாக வுடையானே பவபாச மூலத்தைக்
  கெடுப்பவனே பூமியிலுள்ளோர் துதிக்குந் தில்லைவன நீங்காத சிந்தாமணியே என்னையாட்கொள்ளத்
  திருவுள்ள மகிழ்ச்சி யுண்டாகில் பத்திஞான வயிராக்கியமில்லா னென்றென்னை யெண்ணாமல்
  அடியேனினைத் தவரந்தந்தருள் வேறொரு சுகத்தி லாசையிலேனென்று சோர்வார். -எ-று (2-17)

  அன்பூடுருகப்பணிவாரலரேலருளாயெனும்வாய்மையறிந்தும்விடா
  வென்பூசையுநேசமும்யானுமுனக்கெங்கேயெனநொந்தயர்வானெதிரே
  வன்பூதமிகப்புடைசூழ்விடைமேன்மதிசூழ்சடைவானவர்கோன்வரநேர்
  முன்பூதலமேதுபணிந்திருகண்முகமார்புனலாடினன்மாமுனியே.

  இ-ள்: பத்தியினால் நெஞ்சங்கரைந்து வணங்கார்களாகில் கடாட்சியா யென்கிற வேதாகம
  வாக்கியங்களை யுண்மையாகக் கண்டும் ஆசை விடாதவென தருச்சனையும் அகப்பட்ட
  நேசமுந்(தபோதனனாயிருக்கிற) யானும் (ஆத்தியந்த சூனியமாய்ப் பரிபூரணமாய்ப்
  பத்தவற்சலனா யுமிருக்கிற) உனக்குத் தகும்படி எப்படியென்று விதனப்பட்டு மோகிப்பவன்
  முன்னே வலிய பூதப்படை மிகச்சூழும் இடப வாகனத்தில் இளந்திங்களணிந்த சடையையுடைய
  தேவ தேவனெழுந்தருள அவர் சந்நிதிக்கு நேராகப் பூமியிலே சாட்டாங்கமாக நமஸ்கரித்து
  இரண்டு கண்களாலுந் தாரை கொள்ளுகிற சலத்தாலே மழமுனி ஸ்நானம் பண்ணினார்- எ-று. (2.18)
  ---------------------------------
  மூலகரர-ஹரா-வென்பது-கராவெனலாயிற்று.

  ஆலந்தருவானமுதாமொழியாலருமாமுனி யர்ச்சனையிச்சையினின்,
  சீலந்திகழ்வாய்மைமகிழ்ந்தனநீ சிந்தித்தவரம்பலசெப்பெனவென்,
  காலுங்கரமும்புலியின்மலியக் கண்ணங்கவைதங்கவிரங்கிமுதற்,
  கோலந்திகழ்பூசைகொளென்றுவரங் கொண்டானவையெந்தைகொடுத்தனனே.

  இ-ள்: அழகுள்ள ஆலமர நீழலில் நீங்காத தம்பிரானார் அமுதசொரூபமாயிருக்கிற தமது
  திருவாக்கினாலே அரிய மழமுனியே நம்மையருசசிகப் பெருக ஆசைப்பட்ட நல்லசீலம்
  பொருந்தின வுன்னுடைய திரிவித கரணசுத்தியின் உண்மையைக்கண்டு சந்தோஷப்பட்டோம்
  நீ நினைத்த பலவாகிய வரங்களைச் செப்புவாயாகவென்றருள அடியேனுடைய கையுங்காலும்
  புலியைப்போலவலு வானநகப் பற்றுண்டாகவும் அவைகளில் கண்கள் பொருந்தவும்
  இரங்கியருளி முன்னே புட்ப விதிக்குத் தேவரீர் கற்பித்த நானாதிகர்ம அருச்சனை
  கொண்டருளுமென்று வேண்டிக்கொள்ள அந்த வரங்களைச் செகறபிதாவாகிய பரமேசுவரர்
  திருவுளம் பற்றினார்.- எ-று. (2-19)

  விண்ணாடருநாடருமேலவனே விரவாவரமுந்தருவானெனநற்,
  கண்ணாறுமரும்புபெரும்புனன்மெய்க்காலாறெனவார்தருகாதன்மையான்,
  மண்ணாரவணங்கவணங்குடனே மறைவானிறைவான்வழிமேவியபின்,
  பண்ணாரவியாககிரபாதனெனும் பாவார்பெயரோதினபாரிடமே.

  br> இ-ள்: அரியயனிந்திராதிகளுஞ் சொப்பனத்திலுங் காண்பதற்கரிய பகிரண்டங்கடந்த
  மேலோனே என்பொருட்டாக இவ்விடத்தே திருமேனி கொண்டெழுந்தருளி வேண்டின
  வரந்தருவானென்று கண்களில் நின்றும் உண்டாகா நின்ற பெரும்புனல் உண்மையான
  ஆற்றங்கால்போல நீண்டொழியாமற் செல்லும் பத்திமையால் பூமியதிர ஏகாங்கமாக
  நமஸ்கரிக்க ஈசுவரியுடனே மறைந்தருளின சிவன் சிதம்பரத்திலே யெழுந்தருளின பின்பு
  பண்ணும் பாடலும் பொருந்த வியாக்கிரபாதனென்கிற திருநாமத்தைப் பூதகணத்தார்
  கூறினார்கள்.- எ-று. (2-20)

  பாரிடம் பூலோகத்தாரெனினுமமையும்.

  அறுகாலெழுகால்பிறகாமடுவுற் றமையாநியதிச்சமைவாதரியா,
  மறைகாதலினாலறைவானறவார் மந்தாரமரும்புசெருந்திகிரா,
  நிறைபாதிரிகோங்குயர்சண்பகமே நீர்வாழ்மலாவல்லிகொணீண்மலர்கொண்,
  டிறையானடியேமுறையால்வழிபட் டெண்ணார்தருகாலமிருந்தனனே.

  இ-ள்: வண்டிகளெழுவதற்கு முன்னே பொய்கையினிடத்துச் சேர்ந்து முடியா நியதிமுடித்து
  அன்புடனே வேதங்களைப் பத்தியினா லுச்சரித்துச் சென்று பற்றியேற நகமும் பார்த்தெடுக்க
  விழியுங் கைகால்களிற் பெற்றலமையால் கோட்டுப்பூக் கொடிப்பூ நீர்ப்பூவிங் குற்றமறத்
  தெரிந்தெடுத்துக் கொண்டு நல்லதம்பிரானார் திருவடியிலே விதிப்படி யருச்சித்து எண்ணிறந்த
  காலமிருந்தனர் - எ-று. (2-21)

  நற்றந்தைபுலிச்சரணங்கரநீ ணயனங்கள்பரித்தமைகாணநயந்
  துற்றங்கெதிர்சென்றுவணங்கமகிழ்ந் தொளிர்மேனியின்வாய்மையுவந்துடனே,
  பொற்றண்மலர்வாவிபடிந்திறையைப் பூசித்தருண்மேவுபுலீவச்சரமும்,
  பற்றும்பெருமானையுமர்ச்சனைசெய்பயில்வாரவிருந்துபரிந்தொருநாள்.

  இ-ள்: நல்லபிதாவாகிய மத்தியந்தின முனிவர் நம்முடையபுத்திரன் புலிக்காலுங் கையும்
  அவைகளில் கண்களும் பெற்றனனென்று சந்தோஷப்பட்டுக் காணும்படிக்கு வந்தவருக்கெதிரே
  சின்று பொருந்தி நமஸ்கரித்த வளவிலே வியாக்கிரபாதமான தேசோன்மயமாகிய சத்தி
  சரீரத்தை இன்புறக்கண்டு மகிழ்ந்து அப்பொழுதே பொன்மையுங் குளிர்ச்சியுமுள்ள மலர்கள்
  பொருந்திய சிவகங்கையிலே மூழ்கி ஸ்ரீமூலத்தானமுடைய தம்பிரானாரைரையும்
  நாடோறும் பூசை செய்து வியாக்கிரபாதருடைய பன்னசாலையிலேயிருந்து குமாரனுடைய
  சரீரத்தைக் கண்டு பிரியப்பட்டு ஒருநாளொரு வர்த்தை சொல்லுவார்.- எ-று. (2-22)

  நற்பான்மிகுதந்தையரும்புதல்வர்நஞ்சந்ததியுய்ந்திடநண்ணினையே,
  லிற்பாலினியாகுதியாதிமறித் திடுவானுடை யானெடுவானடைவான்,
  முற்பாலுனையானெனநீபெறுமா முனியாதுகொளென்றுவசிட்டமுனிக்,
  கற்பார்தருபின்னியைமன்னுமணக் கடனாலுடனா நெறிகண்டனனே.

  இ-ள்: நல்ல பகுதி மிக்க பிதாவானவர் யான் பெறுவதற்கரிய புதல்வனே நம்முடையசந்ததி
  தழைத்தோங்கப் பொருந்துவையாகில் இல்லறத்தின் பகுதிக்கு இனியொன்றுசொல்லக்கேள்
  பிதிர்களு மெதிர்கொள்ளும் சங்கிராந்தி காலத்தில் தருப்பணம் பிண்டோத நக்கிரியை
  முதலாகப் பண்ணுகின்றவனாகிய புத்திரனையுடையவனே பிதிர் லோகத்தை யடைவனென்று
  வேதஞ் சொல்லுகையால் முன்னம் உன்னை யான் புத்திரனாகப் பெற்றதுபோல நீயும்
  ஒரு புத்திரனைப்பெற வெறுத்து விடாமல் விவாகஞ் செய்து கொள்ளென்று சம்மதிக்கப்
  பண்ணி வசிட்டமாமுனி தங்கையான கற்பு மிகுங் கன்னியைபபேசிப் பொருத்த நிமித்தம்
  பார்த்து ௦# விரத சமாவர்த்தனம் பாணிக் கிரகணம் கர்பாதானம்-பும்ஸவனம்-சீமந்தம்-
  சாதகன்மாந்தமாகச் செய்வித்துப்போனார். (2-23)
  -------------------
  # விரதசமாவர்த்தநம்-என்பது முகூர்த்தத்திற்குமுன் செய்கிற சடங்கு.

  பின்பக்கொடிமன்னுபமன்னியனைப் பெறவந்தவருந்ததிகொண்டுபெயர்ந்,
  தின்பச்சுரபிப்பொழிபானுகர்வித் தெழிலாரவளர்த்திடுநாளிவர்தா,
  மன்பிற்புணரக்கொணர்வித்துமகிழ்ந்தயிலென்றிடு முன்பயிலும்படிசேர்,
  புன்பற்கமர்பண்டமுமுண்டறிபால்போலுய்த்தனவும்புகாதிகழ்வான்.

  இ-ள். சிறிது காலத்துக்குப்பின் வியாக்கிரபாதருடைய தேவியார் திடசித்தனான உபமன்னிய
  பகவானைப்பெற சாதகன்மத்துக்கு வந்த அருந்ததியார் அந்தக் குழந்தையைத் தம்முடைய
  ஆச்சிரமத்துக்குக் கொண்டுபோய் இனிய காமதேனு சுரந்தபால் ஊட்டி அழகுபெற வளர்க்கு
  நாளில் வியாக்கிரபாதருந் தேவியாரும் புத்திர வாஞ்சையாலே தங்கள் பன்னசாலையிலே
  கொண்டுவரச் செய்து ஆசையுடனே உண்ணென்று முன்னேயிடப்பட்ட பாகஞ்செய்து சிறிய
  பல்லுக்கு மெத்தென்ற பதார்த்தமும் முன்னே புசித்தறிந்த பால்போலக் கற்பித்ததிர
  வியங்களையும் புசியாமலுமிழ்ந்து போடுவார் - எ-று. (2-24)

  மணமேதகுபால்பெறுமாறழமா மகனார்முனியாம்வறியோமறியோ,
  முணவேயினிதாமவைதாமிவர்கா ணுடையாரெனவாழ்வுடையானெதிரே,
  துணர்மேலெழுவெங்கன்றங்கிநடுத்துஞ்சுந்தொழிறஞ்செனநைஞ்சழுதக்,
  கணமேயிறையானிறைபாலலையுங்கடல்பெற் றதுகண்டுகளித்திடுவான்.

  இ-ள். திவ்விய பரிமளமிகுந்த காமதேனுவின் பாலைக்கருதி உபமன்னிய பகவானழ
  வியாக்கிரபாதமுனி யாங்கள் தரித்திர்கள் பாலும் பழமு மினிய பதார்த்தமுஞ் சொப்பனத்திலு
  மறியோம் புசிப்புக்கினிய பதார்த்தங்களை மிகுதியாகவுடையவர் இவர்தானென்று
  அழியாத சம்பத்துள்ள ஸ்ரீமூலத்தானமுடைய தம்பிரானார் சந்நிதியிலே வளரும்படிவிட
  சிகை விட்டெழுகின்ற ஜாடராக்கினியைப் பொருந்தி மத்தியிலிரறக்கும் செய்கை பொருந்த
  அழவுஞ் சீவனற்று அப்பொழுதே தம்பிரானார் திருவருளினாலே மிகுந்த அலை பொருந்தின
  திருப்பாற்கடல் வரப்பெற்றுப் பானம் பண்ணினதைருஷிகண்டுகொண்டு களித்தாடினார் - எ-று. (2-25)

  ஆளும்பெருமானெதிரங்கொருநா ளலர்பங்கயவாதனமாயமரத்,
  தாறொன்றுதலஞ்சகனந்தவிரச் சடரந்தொடர்மார்பெதிர் தள்ளவிழத்,
  தோளங்கைபொரக்களமேனிமிரச்சுரிதந்தநிரைப்பிரியந்தரநா,
  வாளொன்றுவிழிக்கடைதுண்டம்விடாவண்ணந்தகுதிண்ணியமாமுனியே.

  இ-ள். ஒருநாள் தன்னையாண்டு கொண்டருளிய தம்பிரானார் சந்நிதியிலே பத்மாசனம்
  பொருந்த ஒருதாள் பூமியையும் சகநத்தையும் பொருந்தாமல் வயிறு தொடர்ந்து மார்பை
  யெதிரே தள்ள இரண்டு தோளுந்தாழக் கையிரண்டும் புட்பம் போலக் கழுத்து மேனோக்கியுயரக்
  கீழ்வாய்மேல் வட்டப்பட்ட பல்லுக்கு நடுவே நாவை வைத்து ஒளிபொருந்தின விழிகளை
  மூக்கு நுனியிலே வைத்திருந்து நாலு வன்னத்திலே மேலான திடசித்தத்தையுடைய பிரமருஷி - எ-று. (2-26)
  -----------------
  சகநமென்பது - புருஷ்டபாகம்.

  சீரார்சிவயோகமகம்புணரச் செறியின்புணரக்குறியின்புறுமா
  றேரார்தருதாருவனத்திடையாறெண்ணாயிரமாமுனிவர்க்கிறைவ
  னோராதவர்மோகமொழித்தருளாலொருநாணடமாடலுகந்தனனென்
  றாராவுணர்வாலறிவுற்றயராவந்தோவெனநொந்தயர்கின்றனனே.

  இ-ள். அட்ட ஐசுவரியத்துக்கு மேலான சிவயோகமானது ஆன்ம சைதன்னியத்தைப் பொருந்த
  விளைந்த சுகானுபவத்தினாலே பார்த்தவிடக் குறியிலே பிரியா வதிசயமாக அழகு விளங்கின
  தேவதாருகா வனத்தில் நாற்பத்தெண்ணாயிர மகாருஷிகளுக்குத் தன்னையுணராதவருடைய
  மோகங்களையு நீக்கி யொருநாள் தேசோரூபமாக நிருத்தஞ் செய்யப் பொருந்தினனெனு மிதனைச்
  சிறிதறிவினாலே கண்ட மாத்திரத்திலே அயர்ந்து அந்தோவெனநொந்து வியாகுலத் தழுந்தினார் - எ-று. (2-27)

  நன்மேனிகொடெந்தைபிரான்வெளியேநடமாடியநல்லிடமாயிடநா,
  முன்னேயமராவகைமாமுனிவன்மூலப்பதிசேரமொழிந்தனனற்,
  றன்னேருறுதாளருணாமுணரத் தகுமோமிகுமன்பகமோவிலதா,
  லென்னேபெருமானொருமானுடன்வந்தெங்கேபரதந்தருமென்றயர்வான்.

  இ-ள். எம்முடைய தம்பிரானார் தேசோரூபியா யிருடிகள் யாவருங்காண நிருத்தஞ் செய்தருளிய
  தேவதாருவனம் நமக்குச் சிவபூசை பண்ணி யிருக்குமிடமாகக் கற்பியாமல் நம்முடைய பிதாவாகிய
  மத்தியந்தினமுனி ஸ்ரீமூலத்தானத்திலே சிவபூசை பண்ணி யிருவென்று கற்பித்தனர் தனக்குத்தானே
  ஒப்பாகிய ஸ்ரீபாதத்தினுண்மைப் பற்றுச் சற்றுமிலாத யாமுமறியுந் தகுதியோ உள்ளத்தில் மெய்யன்பு
  இல்லை எப்படியோ தம்பிரானார் ஈஸ்வரியுடனே யெழுந்தருளி நமக்கெவ்விடத்தே நிருத்தந்
  தரிசிப்பித்தருளுவாரென்று சோர்வார் - எ-று.

  பின்புதெளிந்து சிதம்பரஸ்தலமே நிருத்தத்தைதருமென்கிறார். (2-28)

  அத்தன்பரதத்டுவனித்தநடத்தமரும் பொதுவின்பெயர்மன்றமலம்
  சத்தும்பரிரண்மயகோசமகந்தனிபுண்டரிகங்குகைவண்ககனஞ்
  சுத்தம்பரமற்புதமெய்ப்பதமச்சுழுனாவழிஞானசுகோதயநற்
  சித்தம்பரமுத்திபரப்பிரமந்திகழுஞ்சபைசத்திசிவாலயமே.

  இ-ள், செகற்பிதாவாய்த் தத்துவாதீதனாய் நித்தனாயிருக்கிற சிவபெருமான் அநவரத
  தாண்டவம் பொருந்தின இந்தப்பொதுவின் பெயர் சர்வான் மாக்களுக்கும் பொதுவாய்ச்
  சங்கார வழக்கறுக்கிற அம்பலமாதலால் அநாதியே பரசாசுவதமாதலால் பெத்த
  முத்தியிரண்டிது நீங்காமல் உயிர்க்குயிராய் நீங்காமல் நிற்கிற சற்காரியமாதலால்
  மேலான பொருளாதலால் களங்கமற்ற கனகமயரூபமென்று வேதஞ் சொல்லுதலால்
  தன்னைத்தானே யறிந்திருக்குமாதலால் சுத்த கேவலமாதலால் பூமிக்கு இருதயக் கமலமாதலால்
  யாவர்க்கும் புகலிடமாதலால் – சுத்தபரமாகாசமாதலால் - சாக்கிராதீதங்கழன்ற சுத்தமாதலால்
  பரஞானமாதலால் காணுந்தோறுங் காணுந்தோறும் புதுமையாயிருத்தலால் சத்திய
  ஞானசொருபமாயிருத்தலால் சுழுமுனா மார்க்கத்திலெழுந்திருக்கிற பிரகாசமான
  ஞானமாதலால் தன்னைத் தரிசித்தவர்களுக்கு ஞானாநந்தத்தைத் தோற்றுவிக்கும்
  பொருளாதலால் பசுபாச ஞான நீக்கி யிருத்தலால் சர்வத்துக்குமிடங் கொடுத்திருத்தலால்
  பதமுத்திகளைக் கைவிட்ட விடமாதலால் பிரம சொரூபமான மகாமாயைக்கு மேலாதலால்
  எப்பொழுது மெல்லாப் பாதத்திலும் விளங்கும் ஞானமாகிய சபையாதலால் சிவசத்தி சொரூபமாதலால்
  ஆநந்த நிருத்தத்துக்கு அதிட்டானமுமாய் ஆலயமுமாதலால்,

  என்றின்னமனேகமனேகமெடாவோரார்பொதுவின்பெயராரணநூ,
  னின்றென்றுமியம்பிடுமின்னுமிதினேரேயெனவிங்காரேயறிவா,
  ரன்றந்நிலையத்தலைவன்னிலைகண்டவருண்டெனவின்றுணர்கின்றனமான்,
  மன்றந்தெரியத்தருமென்றருளால்வளர்சிந்தைதெளிந்தனன்மாமுனியே.

  இ-ள். என்று இப்படியே யின்னம்பல நாமங்களை யழகுவிளங்கும் பொதுவின் பெயராகக் கற்பித்து
  வேதாகம சாத்திரங்களிடை விடாமனின் றெக்காலமுங் கோஷியா நிற்கும் இந்தச்
  சிதம்பரத்தினுண்மையை யின்னதென்றள விட்டியார் தானறிவார் முற்காலத்திலே
  நிருத்த மூர்த்தியினுடைய சத்தியத்தைத் தரிசித்தவர்களுண்டென்று ஆகமப்
  பிரமாணத்திலேயின்று கண்டறிந்தோமாதலால் சிதம்பரந்தானே தரிசிப்பிக்குமென்று
  திருவருளினாலே தெளிந்தார் - எ-று. (2-30)

  வியாக்கிரபாதச் சருக்கம் முற்றிற்று.
  ஆக திருவிருத்தம் - 58