4. நடராசச் சருக்கம் (158-228)
காலமு மநேகஞ் சென்று கழிந்தபின் கடவுள் கூறுஞ்
சீலமார் சித்த யோகந் தெளிவுற நாடிச் சிந்தை
சாலவு மகிழ்ச்சி பொங்கத் தருக்குமிக் கிருக்கு மிக்குப்
பாலமு தனைய நாமம் பயில்வுமாய் முயலு நாளில்.
இ-ள். இப்படி அநேககாலஞ் சென்றபின் கடவுளருளிச்செய்த பரிசுத்தம் நிறைந்த சித்தயோகம்
விளங்கக்கண்டு சித்த மிகவுங் களிகூர வளப்ப மிகுந்திருக்கிற கரும்புரசம் பால் அமிர்தம் இவைகளை
ஒத்த ஐந்தெழுத் தருள் நிலையிலே பொருந்தித் தவமுயலு நாளில்- எ-று. (4-1)
இங்கிவர் தம்பா லன்பா லிறைநடக் கருத்த ராய்முற்
றங்கிய வாறைஞ் ஞூறு தாபத ரணைய நீரிம்
மங்கல தினத்து வாழ வம்மினென் றுரைத்துத் தாமும்
பங்கமி லதுக ணத்திற் பன்முறை யெண்ணி யெண்ணி.
இ-ள். இவ்விடத் திருந்தரிஷிகள் எதிரே அன்பினாலே கடவுள் நிருத்தங் காணும் கருத்தினராய்
முன்னே வந்திருந்த மூவாயிரம் பிரமரிஷிகள் வந்தணைய நீங்களும் இந்த மங்கலமான
சித்தயோகநாளிப் பெருவாழ்வு பெறவாருங்களென்று சொல்லித் தாமும் குறைவற்ற
சித்தயோகத்தை ஒருகணப் போதில் பலகால் அலகிட்டு எண்ணை எண்ணிப் பார்த்துப்
பார்த்து இருந்தார்கள். -எ.று. (4-2)
கறவையான் வரவு பார்க்குங் கற்றின மெனவுங் கார்சே
ருறையுண வுணர்ந்து நோக்கி யோய்ந்தபுள் ளெனவு மோங்கற்
செறிமுகின் முழவு கேட்குந் திகழ்மயிற் றிரளும் போல
விறையவ னடமே சிந்தித் திடைத்தினங் கடத்தி னார்கள்.
இ-ள். தாய்ப்பசு எப்போது வருமோவென்று பார்த்து நிற்கும் கன்று கூட்டம் போலவும்
மேகத்தைப் பொருந்து மழைத்துளி யுணவைப் பார்த்து எப்போது மழை பெய்யும் என்று
வாடியிருக்குஞ் சாதகப்புள்ளுப் போலவும் முழவினொளியை யொத்த மலைத்தலையிற்
செறிந்த மேகத்தின் முழக்கங் கேட்க விரும்பும் விளங்கும் மயிற்கூட்டம் போலவும்
தம்பிரானார் நடனத்தைச் சிந்தித்து நடுவுள்ள நாட்களைக் கழித்தார்கள்- எ-று. (4-3)
வென்றிகொ ளந்நாண் முன்னாள் வெய்யவன் விரைந்து வெள்ளிக்
குன்றினை நண்ணி யண்ணல் கூத்தயர் தரவ கன்றா
னென்றமை யறிந்தான் போலங் கிராவழி போந்து தில்லை
யொன்றிய கடற்பாற் றோன்றி யெழுந்துவந் துச்சி யுற்றான்.
இ-ள். வெற்றி பொருந்தி யெல்லா யோகங்களுக்கு மேலான அந்த வியாழக்கிழமை பூசமான
சித்தயோகத்துக்கு முன்னாள் ஆதித்தன் விரைந்து சென்று கையிலாயத்தைப் பொருந்தித்
தம்பிரானார் சிதம்பரத்திலே நிருத்தஞ் செய்ய எழுந்தருளுகிறார் என்கிற செய்தியை
அறிந்தவனைப்போல அங்கு நின்றுங் கடுக இராவழிபோந்து தில்லைவனம் பொருந்தின
கீழ்கடற்பால் தோன்றி ஆகாசமார்க்கமாக வந்து நடுப்பட்டான். - எ-று. (4-4)
இரவியு முச்சி யெய்த விருகர முச்சி யெய்த
வருபவ ரெதிரோம் வந்தான் றேவர்க டேவன் வந்தா
னரியயர் பெருமான் வந்தா னென்றெழு வதற்குப் பின்னே
பரவிய வொலியுங் கேளாப் பார்மிசை பதறி வீழ்ந்தார்.
இ-ள்.ஆதித்தனும் ஆகாயத்தின்மத்தியில்வர இரண்டுகைகளும் உச்சியிற் பொருந்தக் குவித்து
வைத்துக்கொண்டு தற்காலத்திலே நிருத்த தெரிசனம் பண்ணவரும் ரிஷிகள் எதிரே ஓம்வந்தான்
தேவர்கள் தேவன் வந்தான் இருவர் தேடுதற்கரியான் வந்தான் என்று தற்காலத்திலே சங்காதி
வாதியங்கள் தொழிற்படுவதற்குப்பின்பாக வீசிய தரங்கஞாயமாகப் பரந்துவருமொலிகேட்டு
மூர்ச்சித்துத் தரையில் வீழ்ந்தார்கள்-எ-று- (4-5)
--------------
தரங்கஞாயம் என்பது- ஒரு அலைக்குப்பின் மறுஅலைவருதல்
ஆயிர மதியு தித்த வருவரை போல வேத
மாயிரம் வகையா லோது மதுதகப் பானு கம்ப
ராயிர முகத்தி ரண்டா யிரங்கரத் தால ணைத்த
வாயிரஞ் சங்கு மோமென் றறைந்தன தழங்க வங்கண்.
இ-ள்.ஆயிரஞ் சந்திரர்களுதித்த பெரியமலைபோலவும் வேதம் ஆயிரம் முகமாகக்
கோஷிக்கிறதுபோலவும் பானுகம்பரென்கிற கணேசுவரர் ஆயிர முகத்திலும்
இரண்டாயிரங் கரங்களிலும் பொருந்தவைத்த ஆயிரம் சங்கும் எல்லாங் கேட்பப்
பிரணவோச்சாரணம் பண்ணின அவ்விடத்து-எ-று.
மலை, பானுகம்பர் சரீரம்,மதி சங்கு,வேதம் ஓசையுமெனக்கொள்க. (4-6)
நடமுயல் விரகுந் தாள கதியுநல் லருளாற் பெற்ற
வடகுட வனைய தோள்க ளாயிர முடைய வாணன்
சுடர்விடு கடகக் கையாற் றெம்மெனப் பன்மு கத்த
குடமுழ வெழுமு ழக்கங் குரைகடன் முழக்கங் கொள்ள.
இ-ள்.தாண்டவாதி பேதங்களும் நடனத்திலுண்டான விசாரங்களும் அநந்தமான தாள
பேதங்களும் தாளத்திலுண்டான வழிகளும் தம்பிரானாருடைய நல்லருளினாலே பெற்ற
மேருவை ஒத்த தோள்கள் ஆயிரமுடைய வாணாசுரன் ஒளிவிடப்பட்ட கடகம் பொருந்தின
கைகளினாலே முழக்கத்தொம் என்கிற அனுகரண ஓசையோடே கூடின பலமுகத்தினையு
முடைத்தான குடமுழவிலே எழாநின்ற வோசை ஆரவாரம் பொருந்தின எழு கடலின்
முழக்கத்தையும் கவுளீகரித்துக்கொள்ள-- எ-று. (4-7)
தாண்டவாதிபேதங்கள் பரதநூலும் அந்நூல்முற்றுணர்ந்தவர்களும்
இன்மையின் விவரித்து எழுதாதுவிடப்பட்டன.
ஐந்துதுந் துபியு மாசி லருமறை யொலியு நீடு
கந்தரு வஙகள் கூடுங் கானமுங் கேட்டா ரும்பர்
தந்தமி றிருச்சி லம்பி னரவமுங் கேட்டா ரும்பர்
சிந்திய மந்தா ரத்தின் செழுமலர் தெரியக் கண்டார்.
இ-ள். தோற்கருவி துளைக்கருவி நரம்புக்கருவி கஞ்சக்கருவி கண்டக் கருவி யென்கிற
பஞ்ச வாத்தியங்களும் குற்றமில்லாத வேதகோஷமும் பெரியயாழிற் கூடுங்கானமும்
தம்பிரானார் ஸ்ரீபாதத்திலே ஒழிவில்லாத திருச்சிலம்பினது ஓசையுங் கேட்டார்கள்.
தேவர்களால் வருஷிக்கப்பட்ட வளவிய மந்தாரத்தின் மலரைப் பூமியிலே தெரியக்
கண்டார்கள்---எறு. (4-8)
தாகத்திற் றண்ணீ ரோசை தகவொலி செவிம டுத்து
மோகித்தா ரெழுந்தா ராற்றார் முகமெலாங் கண்ணீர் வாரச்
சோகித்தார் தொழுதார் போற்றி துணைவனே போற்றி தோன்றா
வாகத்தா யருளை யென்றென் றலறினார் வாய்க ளார.
இ-ள். பாலை நிலத்தில் நடப்போர் தண்ணீர் தாகமேலிட்டு அருவியோசை கேட்டு
அருந்தியும் தாகந் தணியாமல் வருந்துமவர் விடாய்த்து விழுந்தது பொலத் தம்பிரானா
ரெழுந்தருளுகிற ஆர்ப்பரவங்கேட்டுங் கட்புலன்பட நிருத்தங் காணாமல் மோகித்து
விழுந்தார்கள் பரவசமாக எழுந்திருந்தார்கள் பொறையாற்றார் முகமெலாங் கண்ணீர்
வாரப் பொருமினார் நமஸ்கரித்தார் தோத்திரம் பண்ணினார் உயிர்த்துணைவனே
இரட்சி தோன்றாத் திருமேனியுடையவனே யருள்வாயாக வென்றென்று வாய்விட்டு
அலறினார்கள்--- எ-று. (4-9)
எண்ணருங் காதல் கூரு மிருவருங் காண ஞானக்
கண்ணினை நல்க முன்னைக் காரிருள் கழிவுற் றின்ன
வண்ணமென் றறிய வாரா வளரொளி மன்றுண் மாதோ
டண்ணனின் றாடு கின்ற வாநந்த நிருத்தங் கண்டார்.
இ-ள். எண்ணிறந்த பத்திபொருந்தின வியாக்கிர பாதரும் பதஞ்சலியுங்காண இவர்களுடைய
பரம குருவாய் ஸ்ரீகண்டபரமேசுவரர் ஞான திருட்டியை அனுக்கிரகிக்க அநாதியே
சகசமான ஆணவத்தை நீங்கி இத்தன்மைய தென்று அறியக்கூடாத மிகுந்த ஞானப்பிரகாசமான
மன்றில் ஞானசத்தியை அதிட்டித்துத்தம்பிரானார் நிருத்தஞ் செய்யக் கண்டார்கள்--- எ-று. (4-10)
திருவடி நிலையும் வீசுஞ் செய்யகா லுஞ்சி லம்பு
முருவள ரொளியும் வாய்ந்த வூருவு முடுத்த தோலு
மரைதரு புரிவுங் கச்சி னணிகளு மழகா ருந்தி
மருவிய வுதர பந்தக் கோப்புநூல் வாய்ப்பு மார்பும்
இ-ள். நின்றருளிய ஸ்ரீபாதமும் தூக்கியருளிய சிவந்தபாதமும் திருவடிகளிற் சாத்தியருளிய
திருச்சிலம்பும் திருமேனியில் மிகுந்த பிரகாசமும் அழகிய திருத்தொடையுஞ் சாத்தியருளிய
புலித்தோலாடையும் அதுதரித்த அரையும் அவ்வரையிற் சாத்தியருளிய கச்சினழகும் அழகுநிறைந்த
திருவுந்தியிலே பொருந்தின உதரபந்தனச் சேவையும் திருஎக்கிஞோபவீதம் பொருந்தின திருமார்பும்-
எ-று. (4-11)
வீசிய செய்ய கையும் விடதரக் கரங்க வித்த
தேசுவண் டுடியு மங்கிச் செறிவுமுன் றிரண்ட தோளுங்
காசுகொண் மிடறுந் தோடார் காதும்வெண் குழையுங் காண
மாசிலா மணிவாய் விட்டு வழங்கிடா நகைம யக்கும்
இ-ள். வீசியருளிய சிவந்த கரமும் புயங்கம் பொருந்தின ஸ்ரீயத்தத்தைக் கவித்தருளிய
பிரகாசமும் பரநாதம் பொருந்தின வளவியதமருகமும் தீயகலும் முன்னே திரண்ட
தோளும் நீலவொளி பொருந்தின திருமிடறும் திருத்தோடும் வெள்ளிய சங்கக் குழையும்
பொருந்தின திருச்செவியும் வெளிப்படக் குற்றமற்ற திருவாய்ப் பவளமு நீக்கமறச்
சிரித்தருளிய மோகனமும். எ-று. (4-12)
ஓங்கியகமலச்செவ்வியொளிமுகமலருங்கண்கள்
பூங்குழலுமையைநோக்கும்புரணமும்புருவப் பொற்பும்
பாங்கமர்நுதலும்பின்றாழ்படர்சடைப்பரப்பும்பாம்பு
நீங்கருந்தாருநீருநிலவுமேனிலவு நீறும்.
இ-ள். மேலான தாமரைமலரின் அழகுபோன்ற திருமுகப் பிரசன்னமும் மலர் அணிந்த
குழலியார் என்கிறஉமையைப்பார்த்தருளுகிற திரு நயனங்களின் கடாட்ச விளக்கமும்
திருப்புருவத்தின் அழகும் அழகிய திருநெற்றியும் பின்தாழ்ந்து விரிந்த கற்றைச் சடையும்
சர்ப்பமும் நீங்காத கொன்றை மாலையும் கங்கையும் சந்திரனும் திருமேனியிற்பரம உத்தூளனமும்-- எ-று (4-13)
கடிமலரணையவாரிக்காரிருளளகஞ்சேர்த்த
முடியுநன்னுதலும்பொட்டுமுயங்கிருபுருவவில்லும்
வடிகொள்வேல்விழியுங்காதும்வளர்குமிழ்மலருந்தொண்டைப்
படிவவாயிதழுமுத்தநகையுமெய்ப்பசுமைவாய்ப்பும்.
இ-ள். இருண்ட மேகத்தை யொத்த திருக்குழலிலே மணம் பொருந்திய மலர்கள் சேர்த்திச்
சொருகின திருமுடியும் நல்ல திருநெற்றியுந் திலதமும் பொருந்தின இரண்டு வில்லை ஒத்த
திருப்புருவமும் வடித்த வேல்போன்ற விழியும் திருக்காதும் விளங்குங் குமிழ மலர்போன்ற
திருமூக்கும் ஆதொண்டைக் கனிபோலும் திருவாயிதழும் முத்துப்போலு நகையும்
பச்சென்ற திருமேனியழகும்-எ-று.
கடிமலரலைய வென்று பாடமாயின், கடிமலர் சரிய வாரிமுடித்த வென்றுரைக்க. (4-14)
பூங்கமுகமர்கழுத்திற்பொலிந்தமங்கலநாண்பொற்பும்
பாங்கமரமையார்தோளும்பங்கயச்செங்கைதாங்கு
மோங்குசெங்கழுநீர்ச்செவ்வியொளிதருமலருந்தாருங்
கோங்கரும்பவைபழித்தகொங்கையுங்குலவுபூணும்.
இ-ள். கன்னிக்கமுகு போன்ற திருக்கழுத்தில் நித்தியமான பொலிவினை யுடைய
திருமங்கல நாண் அழகும் பக்கம்பொருந்தின மூங்கிலைப் பார்க்கிலும் அழகிய
தோளும் கைத்தாமரையிலே ஏந்தும் மேலான அழகு விளங்கின செங்கழு நீர்ப்பூவும்
செங்கழுநீர்த் திருமாலையுங் கோங்கு அரும்புகளை நிந்தித்த திருமுலைத் தளமு
மொளி பொருந்தின திருவாபரணமும்-- எ-று. (4-15)
துடியமரிடையும்பாந்தட்டொகுபணந்தகுநிதம்ப
வுடையமர்துகிலுமல்கவொல்கியநிலையுஞ்செய்ய
வடிமலர்மிசையணிந்தவாடகப்பாடகக்கீழ்
விடுசுடர்ச்சிலம்பும்வாய்ந்தமெல்லியல்வியந்துகாண
இ-ள். துடியையொத்த திருமருங்கும் பெரும் பாம்புகளின் விரிந்த படங் கூடியது ஒத்த
நிதம்பலத்திற் சாத்தியருளிய பரிவட்டமும் மிகவும் அசைந்த நிலையும் சிவந்த
ஸ்ரீபாதத்திற் சாத்தின பொற்பாடகத்துக்குக்கீழே ஒளி விளங்கும் திருச்சிலம்பும்
பொருந்தின பரமேசுவரி அதிசயித்துக் கண்டருள. எ-று. (4-16)
ஆடியபெருமான்வெய்யோனலர்கதிராயிரத்துக்
கூடியமண்டலம்போற்குறைவிலாவகைநிறைந்து
நாடருஞானமன்றுணாமுய்யவயன்மான்முன்பு
தேடருமேனிகொண்டுதிருநடஞ்செய்யக்கண்டார்.
இ-ள்.சத்தியே திருமேனியாகக்கொண்டு சத்திகாண ஆடிய தம்பிரானார் ஆயிரமாதித்தப்
பிரகாசம் ஒன்றாகக் கூடின மண்டலம்போல குறைவற நிறைந்து நாடுதற்கரிய
ஞானசபையில் நம்போல்வாரை யிரட்சிக்கவேண்டி முன்பு பிரமா விட்டுணுக்கள்
தேடக்காணாத சோதி சொரூபத்தை யதிட்டித்து நிருத்தஞ் செய்தருளக்
கண்டார்கள்--எ-று-. (4-17)
வேறு.
பொருவில்புயங்கப்புனிதனடங்கட்புலன்மேவத்
தெரிபொழுதங்கத்தொருசெயலின்றிச்சிரமேவக்
கரமலர்நுந்தப்புனல்விழிகம்பித்துரைகாணா
விருவருமின்பக்கடலுளலைந்தரென்செய்தார்
இ-ள். ஒப்பில்லாத அலைவற்ற தாண்டவத்தைப்பொருந்துஞ் சுத்தனது நிருத்தங் கண்ணுக்குப்
புலப்படத் தெரிந்தவளவில் அவயவத்தில் யாதொரு சேட்டையுமற்றுச் சிரத்திலே
கைம்மலர்பொருந்த விழிநீர்த் தாரை கொள்ள நடுக்கமுற்று உரைகுழறி வியாக்கிர
பாதரும் பதஞ்சலியும் இன்பச் சாகரத்திலே மிதந்தார் இனிவேறே யென் செய்வார்--
எ-று. (4-18)
தற்பரமாகுந்தலைவனதுண்மைத்தன்மைப்பொற்
சிற்பரமாமம்பரவொளியிந்தன்றிருமேனிப்
பொற்புடனாடும்பொலிவும்விழுக்குட்புணராதா
லற்புதனேயிங்கார்கிலமென்றென்றயர்கின்றார்.
இ-ள். சுட்டுணர்வுக் கப்பாற்பட்ட முதல்வனது சத்தியமான சுபாவம் விளங்கின
ஞானத்துக்குமேலான சிதம்பரப்பிரகாசமும் தேவரீருடைய திருமேனியின்
பிரகாசத்துடனேயாடும் அந்தப் பிரகாசமும் பார்வைக் கடங்காத படியாலே
ஆச்சரியமான திருமேனியையுடையவரே சத்தினிபாதக் குறைவினாலே எங்கள்
நினைவு முடிக்கப் பெறுகின்றோ மில்லையென்று வருந்துகின்றார்கள்-- எ-று.
தன்திருமேனி பொற்பு என்பதற்குத் தன்னுடைய திருமேனியிலே பொருந்தின
பரமேசுவரியெனினு மமையும். (4-19)
காரணனேமுன்காமனைவேவக்கண்வைத்த
பூரணனேநின்புகழ்நடம்யாரும்புணர்வெய்தப்
பாரிருண்மோகந்தீர்ருண்ஞானம்பணியென்றென்
றாரணமோதுஞ்சாகைகளோராயிரமாக.
இ-ள். சர்வகாரணனே முன்னாள் மதனன்வெந்து வீழத் தீக்கண்ணாற் பார்த்தருளிய
பரிபூரணனே தேவரீருடைய புகழ்பொருந்திய நிருத்த மெல்லாருங் காணக்
கடாட்சிப்பீராக இருளையும் மயக்கத்தையும் நீக்குமபடியான உமது கிருபை
பொருந்தின திருவடி ஞானம் பணித்தருள் வீராகவென்று வெகுவிதமாகச்
சரகைகளினாலே விண்ணப்பஞ் செய்தனவேதங்கள்-- எ-று. (4-20)
-------------------
வேதமென்றது வேதகர்த்தர்களை.
ஒருவனைநேரேயிருவருமுன்னான்மறையஞ்சா
திரவுறுமாறேழையமினியெட்டும்படியின்பந்
தரைமுதலாறாறெனவருநாதாதியின்மீதே
பரதபராபரபரிபுரபாதாபணியென்றார்.
இ-ள். ஒப்பில்லாத முதல்வனைச் சந்நிதிப்பட்டு நின்று விட்டுணுவும் பிரமாவும்
முன நான்குவேதங்களும் தேசோரூபத்துக்கஞ்சாமல் வேண்டிக் கொள்ளுகிற
வழியை ஒன்றும் அறியாதயாங்களு மின்பம் பெறும்படி பிருதி விமுதல்
முப்பத்தாறென்று சொல்லப்பட்டுவரும் பரநாதத்தின் மேலே நிருத்தஞ் செய்பவரே
பராபரப் பொருளானவரே திருச்சிலம்பணிந்த ஸ்ரீபாதத்தையுடையவரே
பணித்தருள்வீராக வென்றார் இந்திராதிகள்- எ-று (4-21)
கரணம னைத்தும் புலனிவை காணா கைவிட்டான்
மரணமெ மக்கிங் கிதுதமி யோம்வாழ் வருண்மாறிற்
றிரணமு மெய்ச்சஞ் சலமில தென்றா லொன்றாநின்
புரணமெ னக்கொண் டருளுக வென்றார் நின்றார்கள்.
இ-ள். தத்துவங்களெல்லாங் கூடினாலும் விஷயங்களை யறியமாட்டா தத்துவங்கள்
கூடாதபொழுது எங்களுக்குக் கேவலம் பொருந்தும், இவ்விடத்து அருள் நீங்கித்
தனித்தவிடத்து எங்கள் வாழ்விது, தேவரீர் அருளில்லா விடத்துத் துரும்பும்
அசையாதென்று உண்மையாக வேதாகமங்கள் ஒன்றாகச் சொல்லுதலாலே அவ்விடம்
உம்முடைய பூரண மொழியவில்லை ஆதலாலெங்கள் சுதந்தரமான கேவலக்காணியையும்
பூரணமான தேவரீருடைய சுதந்தர சத்தியையுந் திருவுள்ளத்திலே கொண்டருளி
எங்களையும் பிரேகரிப்பித் தருள்வீராக வென்றார்கள் அவ்விடத்து நின்ற ரிஷிகள்
முதலானோர்-எ-று (4-22)
இவ்வகை யேநான் மறைமுத லேனோ ரிரவெய்தப்
பைவிர வாரப் பணியணி நாதன் பரிவாலிப்
பொய்விர வாமெயப் பொலிவினர் யாரும் புணர்வெய்தத்
திவ்விய மாமம் பரபத ஞானந் தெரிவித்தான்
இ-ள். இவ்வாறு வேதமுதலான தேவர்களும் இருடிகள் முதலானோர் யாவரும்
வேண்டிக்கொள்ள படம் பொருந்திய சர்ப்பாபரணமணிந்த சிதம்பரநாதர்
அநுக்கிரகத்தினாலே இப்படி சத்தியம்பொருந்தின திருமேனிப் பொலிவினையுடைய
பக்குவராகிய வேதரிஷிகள் முதலான யாவரும் பொருந்துதலுறத் திவ்வியமாயிருக்கிற
பரமாகாசப்பத்தி ஞானத்தைத் தெரிவித்தார்- எ-று. (4-23)
நாரணன் வேதா வாசவன் வானோர் நவைசேரா
வாரண மேலோர் தாபதர் மூவா யிரவோர்நற்
சாரணர் தாவா நாரதர் பூதா திகளாசைக்
காரண ரேனோ ராடலை நேரே கண்டார்கள்
இ-ள். அரிபிரமர் இந்திராதி தேவர்கள் குற்றமில்லாத வேதங்கள் முதலாக உயர்ந்தோராகச்
சொல்லப்பட்ட பெரியோர்கள் மூவாயிரம் பிர்மரிஷிகள் நல்ல சாரணர் குற்றமில்லாத நாரதர்
பூத முதலானோர் திக்குப் பாலர்கள் மற்றுமுண்டான இருடிகள் யாவருந் தம்பிரானார்
நிருத்தத்தைப் பிரத்தியட்சமாகக் கண்டார்கள்- எ-று.
எண்ணருங்காதல் கூருமென்கிற 10-வது திருவிருத்தந்து வக்கி நாரணன் வேதா என்கிற
24-வது திருவிருத்தம் அளவாகச் சொல்லியது ஏதென்னில், வியாக்கிரபாதர் பசஞ்சலிகளுக்குத்
திரோதானத்தை நீக்கி ஆநந்த சுபாவ நிருத்தத்தைத் தரிசிப்பித்ததும் அரிபிரம இந்திராதி
வேதங்களுக்கும் ஆணவளவை விந்து அவத்தை நீக்கித் திரோதானத்தில் அருளாநந்த
நிருத்தந் தரிசிப்பித்ததும் மூவாயிரம் ருஷியாதி யானவர்களுக்குக் கலாபந்த நீக்கி
வயிந்தவா நந்தந் தரிசிப்பித்ததுங் கண்டுகொள்க. (4-24)
கண்டனர்கண்ணுக்கின்புறமுன்னேகரமுச்சிக்
கொண்டனருள்ளக்கொள்கைததும்பக்குறியாரப்
பண்டருவேதப்பாடலோடாடிப்பரபோகந்
தண்டனதாமெய்க்கருணையினூடுற்றலைகின்றார்.
இ-ள். கண்களுக்குச் சுகம்வரப் பிரத்தியட்சமாகக் கண்டனர் கரங்களுச்சியிலே
பொருந்தக் கொண்டார்கள் தங்கள் நினைவு நிரம்பி வழிகிறது போலக் கண்ணீரும்
புளகமுமாகிய குறிகள் நிறைய இசைபொருந்திய வேதகீதத்தோடு ஆநந்தக் கூத்தாடி
பரபோகந்தரும் தம்பிரானாருடைய காருண்ணிய சாகரத்திலே மிதந்தார்கள்-- எ-று.
(4-25)
பரபதகங்காதரவரவிந்தாசனனச்சிச்
சிரமரிகண்டாவிருடருகண்டாமிகுதெவ்வர்
புரமெரிகண்டாபவமிரிகண்டாவெனவோதிக்
கரமலர்சிந்தாவரகரவென்றார்கணநாதர்.
இ-ள். மேலான பதமுள்ளவனே கங்காதரனே கமலாசனுடைய உச்சித்தலை யரிந்து துண்டப்
படுத்தினவனே கறுப்பு நிறத்தைக்காட்டின கண்டத்தை யுடையவனே மிகுந்து மாறுபட்டோர்
புரங்களை யெரித்தவீரனே சந்நத்தைக் கெடுக்கிற ஞானக் கண்ணை எங்களுக்குத் தந்தருளென்று
விண்ணப்பஞ் செய்து புட்பாஞ்சலி பண்ணி அரகரா வென்றார் கணநாதர்கள்-- எ-று. (4-26)
ஆடினரெந்தாயாகமசிந்தாமணியேயென்
றோடினர்நின்றாரோகைமலிந்தாரொளிர்கண்ணீர்
வீடினர்குன்றாமூடியவெந்தீவினைதீரத்
தேடுமருந்தேதாவருளென்றார்சிலதேவர்.
இ-ள். பரவசராய் நின்று கூத்தாடினர் எந்தையே யாகமத்துக்குச் சிந்தாமணியேயென்று
ஓடினர் பரவசராய் நின்றார் அதிப் பிரியப் பட்டார்கள் வெளிப்பட ஒளி பொருந்தின
கண்ணீர்த் தாரை கொண்டார் மலைபோன்று எங்களை மேலிட்ட கொடிய தீவினைதீர
யாவருந்தேடு மருந்தே யருளைத் தருவாயாக வென்றார்கள் சிலதேவர்கள்-- எ-று. (4-27)
மாலயன்மேலாவாசவனேசாமதியேசெங்
கோலநிலாவாபாலனநீறாகோவேதிண்
காலனிலாவாகாதியகாலாகதியேவண்
பாலநிலாவாகாவெனநேரேபணிவுற்றார்.
இ-ள். அரி பிரமர்களுக்கும் மேலானவனே இந்திரனுக்குச் சினேகிதனே சர்வாத்துமாக்க்களுக்கும்
அறிவே செவ்வண்ண விளக்க முடையவனே பாலொத்த வெண்ணீற்றனே கோவே திண்ணிய
காலன் இல்லையாகும்படி காய்ந்தருளிய ஸ்ரீபாதனே சமயிகளெல்லாரும் அறுதியிட்டுச்
சொல்லும் வழியே வளவியபால சந்திரசேகரனே சமுசாரதாபத்தில் நாங்களழுந்தாமல்
இரட்சியென்று சந்நிதியிலே பணிந்தார்கள் - எ-று. (4-28)
திகழ்தருசெம்புன்றலைதிரிமுண்டஞ்சோசங்கத
தகுகுழைநுண்கண்சிறுநகைதந்தந்தாழபண்டி
பகுசகனந்திண்தொகுசரணந்தண்பாரதங்கப்
புகழ்கரணங்கொண்டயாவவநந்தம்பூதங்கள்.
இ-ள். விளங்குகின்ற செங்குஞ்சித்தலை - நெற்றியிலே, திருபுரண்டாம்- சங்கங்குழைபொருந்தினகாதுகள்
- சிறிய கண்கள் - புன்னகையையுடைய பற்கள் - தாழ்ந்த வயிறு - இரண்டுபிரிவாகிய பிருஷ்டபாகம்
என்னு மிவைகளையுடைய பதங்கள் பலம்பொருந்தியகால்கள் பூமியிலேபொருந்த உற்புலித
கரணங்கொண்டு ஆடுவன- எ-று. (4-29)
---------
உற்புலிதமென்பது கூத்தின் விகற்பம்.
மலரெரிமுச்சிக்குழிவிழியொட்டற்கவுளவாய்விட்
டிலகெயிறொடடைக்களமிருநெட்டைககரமீர
லுலருதரஞ்சிற்றரையுயர்தெற்றப்பதமோடும்
பலவலகைக்கொத்திடுகுணலைக்கொத்தினபாணி.
இ-ள். எரிபோல விரிந்த மயிரை யுடைய பெருந்தலையம் குழிந்த கண்களும் ஒட்டிய
கன்னமும் வாய்க்கு வெளியில் புறப்பட்ட பற்களும் ஒட்டையின் கழுத்து போன்ற
கழுத்தும் நீண்ட இரண்டு கைகளும் ஈரலுலாந்த வயிறும் சிறிய அசையுமுடையனவாய்
உயர்ந்த தெற்றுதல் பொருந்திய முட்டிக் காலுடனே பலபேய்கள் குனித்திடுங் குணலைக்
கூத்துக் குச்சரியாகக் கைகளைக் கொட்டின - எ-று. (4-30)
தோடிறையேவாய்வீடலரூடார்சுரிகூழைப்
பாடளியாழோடேழிசைகோடாவகைபாடத்
தாடகுமாடாரநூபுரம்வீடாவொலிசாரவித்
தாடினாபாடாவாடினாபீடாரர்மாதா.
இ-ள். இதழ்சற்றே நீங்கின் புட்பங்கள் நிறைய வுள்ளேவைத்துச் சொருகின கொண்டைப்புறத்தில்
வண்டுகள் யாழோடுகூடச்சத்தசுரமும் மயங்கா மற்பாட தாளுக்குத் தகுதியாகக் கால்
வடிம்பிற்பொருந்தின பொற்சிலம் போசையைக்கூட்டி ஆடினர் பாடாமல் மயங்கினர்
பெருமையையுடைய தேவஸ்திரீகள்- எ-று. (4-31)
அண்டாகண்மிண்டப்பண்டெழுநஞ்சுண்டமுதீயுங்
கண்டனகண்டப்பண்டைநடங்கண்குளிர்வித்துக்
குண்டிகைகொண்டைத்தண்டொடுமண்டிக்குலைவேணி
முண்டமிலங்கக்கொண்டையாகின்றார்முதுவோர்கள்.
இ-ள். தேவர்கள் விஷவேகத்தைச் சகிக்க மாட்டாமல் திரண்டு வந்து விண்ணப்பஞ்
செய்ய பண்டு சமுத்திரத்திலே தோன்றிய நஞ்சை அமுது செய்து அவர்களுக்கு
அமிர்தத்தை யீந்தருளும் நீலகண்டனது அகண்ட பரிபூரணமான அநாதி நிருத்தத்தாலே
கண்களைக் குளிர்வித்து கமண்டலம் சோமன் கட்டின தண்டுகள் ஒன்றுக்கொன்று
நெருங்கிச் சடையவிழத் திரிபுண்டரம் விளங்க வெகுவிதமாக ஆடினார் பழைய
மூவாயிர முனிவர்கள்- எ-று. (4-32)
வீரதராவான்மேருகராகான்விரிகொன்றைத்
தாரவராவாகர்வெனநேரேதகவாரா
நாரதரேரார்சாரணரேனோர்நசையாழின்
பாரகராராவார்வமொடாடும்பணியுற்றார்.
இ-ள். வெற்றியையுடையவனே பெரிய மகம்மேருவை வில்லாகக் கைக்கொண்டவனே
வாசனை மிகுந்த கொன்றைமாலை யணிந்த பரமசிவமே நாகத்தை யாபரணமாகஉடையவனே
எங்களை ரட்சியென்று சந்நிதியிலே முறைப்படிவந்து தும்புரு நாரதர்களும் அழகு பொருந்திய
தேவதூதர்களும் மற்றைத் தேவர்களும் காந்தர்வ வேதபாரகராகிய வித்தியாதரர் முதலானவர்களும்
நீங்காத ஆசையோடு ஆடுந்தொழிலைப் பொருந்தினார்கள் - எ-று. (4-33)
குடமுழவங்கொக்கரைபொருதாளங்குழல்வீணை
படகநெடுங்கத்திரிகைதடாரிபணிலங்க
டுடிகரடஞ்சச்சரிபலகொண்டோர்தொகவாரா
நெடுமுகிலஞ்சக்கடலொலியெஞ்சநிகழ்வித்தார்.
இ-ள். பிரதானவாத்தியமான குடமுழாக்கள்- கொக்கரையென்கிற வாத்தியங்கள்- சர்வ
வாத்தியங்களுக்கும் சுருதியான தாளம்- வேய்ங்குழல்கள் வீணைகள்- தம்பட்டம்-
பெரியகத்திரிகை- பம்பை- தவளச்சங்கங்கள்- தமருகம் கரடிகை- சச்சரி முதலான
வாத்தியங்களைக் கைக்கொண்ட மேளத்தோர் கூடிவந்து மேகங்கள் திடுக்கிடவும்
சமுத்திரவொலி குறையவும் முழக்குவித்தார்கள் - எ-று. (4-34)
பரிவுடனாடுந்தொழிலினராய்முன்பலர்வாழத்
தெரிவுறநீடும்புலிமுனியோனுந்திகழ்வெய்து
மரவரசோனும்பரவசமாய்நின்றழநேரே
வரமெவைகூறுந்தரவெனநாதன்மகிழ்வுற்றான்.
இ-ள். அன்புடன் கூத்தாடுந் தொழிலையுடையராய்ச் சந்நிதியிலே பொருந்தினோர் யாவரும்
பெருவாழ்வு பெற்று வாழ உண்மையைத் தரிசித்துச் சுபாவ குணத்திலே யழுந்தின
வியாக்கிரபாதரும் அந்த நிலையைப் பொருந்தின பதஞ்சலியும் பரவசமாய் நின்றழ
அங்ஙனம் சந்நிதியிலே நின்றழும் வியாக்கர பாதரையும் பதஞ்சலியையும் பார்த்தருளி
நாம் கொடுக்க உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்களென்று மகிழ்ந்து திருவாய்
மலர்ந்தருளினார்- எ-று. (4-35)
அண்டர்பிரான்முன்புண்டரிகத்தாண்முனியன்பிற்
கண்டுளிசோரக்கைதொழுதுள்ளங்கசிவெய்திப்
பண்டுனைநாளுங்கண்டிடுமாறென்பயிலபூசை
கொண்டருள்வேறிங்குண்டிலவேதுங்கொளவென்றான்.
இ-ள். தேவதேவன் திருமுன்பே வியாக்கிரபாதர் அன்பினாலே ஆநந்த பாஷ்பம் பெருக
நின்று கைகூப்பித் தொழுது மனமுருகி முன்போலத் தேவரீரை நாள்தோறும்
கிரியாவிதிப்படியான பண்ணுகிற பூசையை உண்மையாகக் கைக்கொண்டருள
வேண்டும் இதுவே யன்றிப்பெறவேண்டிய குறை வேறொன்று மில்லையென்றார் -
எ-று. (4-36)
ஆடுகவென்றங்காடுமரஞ்சீரருள்செய்யக்
கூடுமநந்தன்கூடுமநந்தங்கொடுவெம்மை
நீடுமநந்தங்கேதநினைந்தோநிலன்மேவுஞ்
சேடர்கடுன்பந்தீரநினைந்தோதெரியாது.
இ-ள். வேண்டும் வரத்தை உரையாடுங்களென்று அவ்விடத்தில் நிருத்தஞ்செய்யும் பரமேசுரர்
அருளிச்செய்ய அன்புபொருந்திய பதஞ்சலி தன்னைக் கூடும் முடிவில்லாதகொடிய தீவினையில்
நீட்டிக்கும் மனத்திற்றங்கும் ஏதுக்களாகிய துக்க வாதனையாலே இனனம் மனத்தை வந்து
பொருந்துமோவென்று எண்ணியோ தெரியாது பூலோகத்தைப் பொருந்துஞ் சேஷமாயுள்ள
ஆன்மாக்கள் பிறவித்துன்பந் தீர என்று எண்ணியோ தெரியாது. - எ-று.
தெற்குக்கயிலாச பாரிசத்தில் தவமுயலும் பொழுது பரமசிவஞ்சா நித்தியஞ்செய்து பிரமாவாக
வெளிப்பட்டு இவர் வாய்மைகளைச் சோதித்துப் பின்பு தற்சொரூபமான போது வேண்டிய
தென்னவென தாருகாவனத்தில் செய்த நிருததத்தைத் தரிசிக்க வேண்டுமென்றுசொல்ல
இது இடம் அன்று அங்கு சிதம்பரத்தில் காணக்காட்டுது மென்றருளிச் செய்ய அவ்வண்ணம்
அந்தன்னைப் பொருந்தும் அந்தமில்லாத கொடுமை உடைய தீவினையிற்றங்கு மனதுக்குத்
தம்மிடத்திற் றங்கும் ஏதுக்களாகிய சுகதுக்க வாதனையிற்பட்டு மறைப்பு வருமென நினைந்தோ
வெனினுமமையும்-பூமியிற் பொருந்தும் புண்ணிய பாவ சேஷமாயுள்ளவர் சேஷர்களென வட
மொழித்திரிவு. இது என் சொல்லியவாறோவெனில் தனது சஞ்சிதப் பிரார்த்தவ ஆகாமியத்தாற்
பிறவி வருமென நினைந்தோ பூலோகத்துப்பொருந்துஞ் சேஷமாயுள்ள புண்ணிய பாவமுடைய
ஆன்மாக்கள் பிறவித் துன்பந்தீர நினைந்தோ இப்படி நிருத்தம் அநவரதஞ் செய்யவென்றது,
தெரியாதெனவும் இரண்டும் வேண்டியென்பது பொருந்தும் - எ-று. (4-37)
சென்றுவணங்கித்திகழுமநந்தத்திறலோனு
மின்றிகழ்வாழ்வோர்விழிபுணர்காலந்தொறுமன்றந்
துன்றியஞானச்சோதியுணேசத்துணையோடு
மென்றுநடந்தந்தருளவிரங்காயினியென்றான்.
இ-ள். வந்துவணங்கி விளங்கும் அநந்தனாகிய வெற்றியுடையோனும் மின்போல விளங்கப்பட்ட
உடம்பில் வாழும் ஆன்மாக்கள் வெளியாரக் காணும் அக்காலந் தோறும் அம்பலத்தில் பூரணமாய்
நிறைந்த ஞானப் பிரகாசத்துள் காதலையுடைய துணையாகிய பராசக்தியுடனேகூட இன்று முதல்
என்றும் நிருத்தத்தைப் புலப்படுத்தி அருளாயினி என்றான்- எ-று. (4-38)
தேவர்கடேவன்றிருவருளங்கப்படிசெய்ய
மேவியபோதங்கிருவருமிக்காடினர்மிக்கோ
ராவெனவேழெண்கடலொலிபோல்வைத்தலைவுற்றார்
பூவலயம்பூமலைதகவானோர்பொழிவுற்றார்.
இ-ள். தேவர்களுக்குத் தேவன் அவ்விடத்து அப்படித் திருவருள் செய்யப் பொருந்தினபோது
வியாக்கிர பாதரும் பதஞ்சலியுமாகிய இருவரும் ஆநந்தக் களிப்பு மேலிட்டு ஆடினர். மற்றுமுள்ள
தேவர்கள் இருடிகள் முதலாயினோர் ஏழென்று எண்ணப்பட்ட கடலோசைபோல ஆரவாரித்துச்
சிரசின்மேல் கைவைத்துச் சுழலலுற்றார் பூமிவட்டத்தில் புஷ்பங்கள் மலைக்கு ஒப்பாக நிறையும்படித்
தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள்-எ.று. (4-39)
-------------------------
ஆ - என்பது அதிசயவிரக்கச்சொல்.
எங்குமுழங்கத்துந்துபிசங்கத்தொலிநீடச்
சங்கையின்புற்றும்பர்களேனோர்தாம்வாழப்
பங்கமிலின்பத்தொருபதேசம்பரிவான் மிக்
கங்கவர்தங்கட்கெங்கள் பிரானாரருள்செய்வார்.
இ-ள். திக்குகளெங்குந் துந்துமி முழங்கச் சங்கங்களின் ஓசைபெருக மயக்கமின்றிப்
பேரின்பத் தழிந்தித் தேவர்கள் இருடிகள் முதலானோர் வாழப் பங்கமில்லாத இன்பமிகுந்த
ஒப்பற்ற உபதேசம் அன்புடையார் தங்களுக்கு எம்மை அடிமையாக உடைய தம்பிரானார்
அருளிச் செய்வார்- எ-று. (4-40)
ஞானநமக்குத்திகழ்விடநம்மிற்பிறிவின்றோன்
றானதுசிந்துச்சத்தமர்ஞாலத்தகலாது
தானுடலுட்பட்டிடுமுயிரிற்றங்குதல்போலவோம்
வானவர்சுற்றிக்கோலுமினென்றான்மன்றாடி.
இ-ள். நமக்கு ஞானமானதுவிளங்கப்பட்ட அதிட்டாநம்-நம்மிடத்தில் பிரிவின்றி ஒன்றானது
சித்தாகிய ஞேயம் சத்தாகிய ஞானம் - அமரப்பட்ட இப்பூமியைவிட்டு அகலாதது எப்படியென்னில்-
உடலில் உட்பட்டிருக்கும் உயிரினைப்போல அந்த ஞானத்திற்கு ஞேயமாகிய உயிராய்த்தங்குதல்
செய்வோமாகையால் தேவர்களே இந்த இடத்தைச்சுற்றி அம்பலமாகக் கோலுமி னென்றார்
அம்பலத்தாடினார்- எ-று. (4-41)
தொன்மையஞானம்பெற்றதுசுற்றும்பொருளாயவான்
முன்மலர்தூவித்தொழநடராசன்முதுநூலிற்
சின்மயமாமன்றிரண்மயமொன்றுண்டதுசேரப்
பொன்மயமாகுமபுவியினர்காணும்பொழுதென்றான்.
இ-ள். பழமையையுடைய ஞானமாகிய சிதம்பரத்தில் அத்தன்மையைத் தம்பிரானார்
அருளினாலே சுட்டி அறிவுபெற்று ஸ்தலத்தை யாவருக்குந் திரவிய மேதாமென்று
ஆராய்வான் காரணமாகித் தேவர்களெல்லாஞ் சந்நிதி முன்பு புஷ்பாஞ்சலி பண்ணி
நமஸ்காரஞ் செய்ய நடேசர் சொல்வார் வேதத்தில் ஞானமயமாய் இம்மன்றினுக்கு
இரண்மய கோசமென்றொரு பெயர்உண்டு அது விசுவத்திலுள்ளவர் கண்டித்துக் காணும்பொழுது
அடங்கப் பொன்னின் சொரூபமாகுமென்றார்- எ-று. (4-42)
என்றருளுஞ்சீரருடலைமேல்கொண்டிமையோர்பொன்
சென்றழறங்கித்தேசுடனோடிச்செலவற்று
நின்றதுகொண்டங்கருள்படிமாவர்நிகழ்வித்தார
மன்றகுமென்றங்கதுபடிமாவாமலிவித்தார்.
இ-ள். என்றருளிச்செய்யுந் திருவருளைத் தேவர்கள் தலைமேற்கொண்டு கனகம்
அழலிற்சென்று தங்கி களங்க மற்றுத் தன்னுடைய ஒளியுடன்கூடி ஓடி ஒட்டற்று நின்ற
பொன்கொண்டு தம்பிரானார் அவ்விடத்து அருளியபடியே பெரிதாக அம்பலத்தைச்
செய்வித்தரா அதற்கு நம்மன்னராகிய சிதம்பரேசுரர் பொன்னம்பலமாகத் தகுமென்று
அவ்விடத்துச் சொன்னபடி மறைவாக நாமம் பொன்னம்பலம் என்று எல்லோரையுஞ்
சொல்வித்தார்- எ-று. (4-43)
பொன்னசலஞ்சேர்பொருளள்முயக்கும்புற்போன்முற்
பன்னருஞேயப்பரபதஞானந்தருபானமைச்
சின்னிலைமன்றந்தேவர்கள்செய்யுந்திருமன்றந்
தன்னையுமன்றேசெய்ததுஞானந்தானாக.
இ-ள். பொன்னாகிய மகமேரு பருவதத்தைச் சேர்ந்த பொருள்பொன்னானாற் போலவும்,
அளத்திற் போடும்புல் உப்பானாற் போலவும், முற்சொல்லுதற்கு அருமையுடைய
ஞேயாதிட்டானமான பரபதமென்னும் ஞான நிட்டையைத்தரும் முறைமையையுடைய
ஞானநிலையாகிய மன்றம்-தேவர்களாற் செய்யப்படும் அழகிய கனக சபையையும்
அப்போதே ஞானந்தானாகச் செய்தது- எ-று. (4-44)
அன்று தொடங்கித் தேவர்களுஞ்சீரரவோனுந்
துன்றுபுலிக்கான்முனிமுதலாகுந்தூயோருஞ்
சென்றுவணங்கித்திசைதொறும்வாழத்திருவாளன்
மன்றினடந்தந்தென்றுமகிழ்ந்தான்மாதோடும்.
இ-ள். அன்றுதொட்டு அரிபிரமேந்திராதி தேவர்களுஞ் சிறப்புடைய பதஞ்சலி பகவானும்
திடசித்தமுடைய புலிக்கால் முனி முதலாகுஞ் சுத்த இருடிகளுந், திசைகளின் உள்ளவர்களும்
வந்து வணங்கி முத்தியில் வாழ்வதாக மஹதைசுவரியமுடைய பரமேசுரன் பொன்னம்பலத்தில்
எப்போதும் நடனஞ்செய்து பராசத்தியோடு மகிழ்ந்தருளினார்- எ-று. (4-45)
கரவினிருத்தம்புரியவிருத்தங்கழிகானின்
மிருகமனைத்தும்பறவைகண்முற்றுமிகுநாதப்
பரிபுரசத்தம்பருகிமதித்தம்பிகைபாத
மருவி நிரக்கம்பெருகியிரக்கமலிவுற்று.
இ-ள். மறைப்பில்லாத நிருத்தத்தை ஈசுரன் செய்ய மாறுபாடு நீங்கிய காட்டில் வாழும்
மிருகங்கள் அனைத்தும், பறவைகள் அனைத்தும், நாதமிகுந்த திருச்சிலம்பினது சத்தத்தைச்
செவியாரப் பருகிச் சத்திநி பாதம் பொருந்தி அருளைக் குறித்துக் கண்ணீர் பெருகிச்
சிவஞானத்திற் பொருந்தி வாழ்ந்தன. (4-46)
-------------------------------
நீரக்கமெனற்பாலது - விகாரவகையால் நிரக்கமெனக் குறிகிநின்றது.
அரவரசன்சொற்றகவரமுன்பெற்றனனாகக்
கரவில்கணங்கட்புனன்மிகநுந்தக்கரநாலுந்
திரிநயனம்பொற்சுரிகைபிரம்பொப்பருசெம்மை
மருவியநந்தித்தலைவனைவந்தித்தெதிர்நின்றார்.
இ-ள். பணிக்கரசனாகிய பதஞ்சலி முன்புவேண்டிக்கொண்ட சொற்படியே திருவுள்ளம்
வாழ்ந்தருளி அநவரத தாண்டவஞ்செய்ய வரங்கொடுத்தருளப் பெற்றனனாகக்கண்டு
அசத்தியம் இல்லாத கணநாதர்கள் கண்ணீர் மிகத்ததும்ப நான்கு திருக்கரங்களும்
திருநயனமும் பொற்சுரிகையும் பிரம்பும் ஒப்பில்லாத செம்மையாகிய சாரூபமும்
பொருந்திய நந்திகேசுரனாகிய தலைவனை வணங்கி யெதிர் நின்றார்கள்- எ-று. (
4-47)
பன்னுக ணத்தோர் தலைவன் வருத்தம் பாராதே
நின்னில யத்தின் னிலைதக நாளுந் நில்லென்றார்க்
கென்னையு ரைக்கோ மிதுபி ணிகைக்கு மெனிலெய்த்தோர்
தன்னைந ருக்கிச் சாறுகொள் வாருந் தகுமென்றார்.
இ-ள். இப்படிச் சொல்லப்படாநின்ற கணங்கள் நாயகனுடைய திருமேனி வருத்தத்தை
விசாரியாதே நின்னுடைய ஆநந்த நிருத்தமாகிய புயங்கத்தினிலை பொருந்த அநவரதமு
நில்லென்று வரம்பெற்றுக் கொண்டவர்களைக் குறித்து நாமென்ன சொல்வோம் இந்தமருந்து
பிணியை யோட்டுமெனில் நோயினால் இளைத்தோர் அம்மருந்தினை வேருடன்பிடுங்கி
நருக்கி அதன் சாற்றைப் பிழிந்து கொள்ளுதல்போலும் என்றார்கள்- எ-று. (4-48)
தாணுவை முன்னர்ச் சாருநர் கண்ணிற் றகநட்டம்
பேணுவ தாகப் பெருகு வரம்பெற் றனரென்றா
லாணையெ னாமென் றாரறி வார்நா மினியன்பிற
காணுநர் காணுங் காலம் வகுத்தல் கடனென்று.
இ-ள். சிதம்பரேசுரர் சந்நிதி முன்னர் வந்தவர் கட்புலனுக்குக் காண அநவரத நிருத்தத்தைத்
தொழுவதாகப் பெருத்தவரம் பதஞ்சலி முனிவர் பெற்றனர் என்றால் திவ்விய ஆக்கினை
யேதாமென்று யாவரறிவார் அன்பினால் தரிசிப்பார்க்குத் தரிசிக்குங் காலங் கற்பித்தல்
நமக்கு இனிக் கடனென்று குறித்து- எ-று. (4-49)
அங்கக முற்றுந் தங்கினர் காவல யற்காவ
லெங்கணு மொய்க்கும் பாரிட மும்ப ரிடைக்காவல்
பொங்குசி னத்திண் கூளிகள் காளி புறக்காவ
றங்குவ ருக்கந் தம்மினெ ருக்கந் தகுவித்து.
இ-ள். காலம் வகுக்கில் காவல்முதல வேண்டுமாதலில் அவ்விடத்தில் கெற்பகிரக முழுவதுந்
அநந்தாதிகளாகிய தாங்களே காவலாகவும், அதற்கயலான இரண்டாமிடமெங்கணும் நிறையும்
பூதாதிகள் காவலாகவும் அதற்கு மூன்றாவதாகிய இடையில் இந்திராதிகளாகிய தேவர்கள்
காவலாகவும் அதற்கு நாலாவதாகிய புறத்தில் மிகுந்த சினத்தினையுடைய பேய்களுங்
காளிகளுங் காவலாகவும் இப்படியிருக்கும் தங்கள் வருக்கத்தில் நெருக்கமாக விருக்கக்
கற்பித்து- எ-று. (4-50)
காலையு முச்சிக் காலமும் வானோ ரேனோர்சீர்
மாலையின் மைக்கட் பூவையர் தாமே வளர்கங்குன்
ஞாலந ரர்க்கெக் காலமும் யாரு நணுகாத
வேலைக ளத்தற் கிச்சையி ருப்பா மிகுவித்தார்.
இ-ள். விடியற்காலமும் மத்தியானகாலமுந் தேவர்களும் இருடிகளுஞ் சிறப்புடைய
சாயுங்காலத்தில் மைக்கண்ணுடைய தேவமாதரும் இருள் வளராநின்ற ராத்திரி காலங்
கணநாதரும் பூலோகத்து மானிடருக்கு முன்சொன்ன நான்கு காலமும் தரிசிக்கவும்
எவரும் வாராத காலங்கள் தம்பிரானார்க்கு இச்சையிலிருப்பாகவுங் கற்பித்தார்-
எ-று. (4-51)
நிலையமிதற்கிங்கிதுநிலையென்றான்மன்றேறி
யலைவறநிற்கும்படியுமுவந்தானென்றான்முற்
கலைஞரைக்கும்பொருள்ளவன்றேவந்தோவித்
தலைவன்முயக்கஞ்சகலர்மயக்கந்தானாமால்.
இ-ள். தமது நிருத்தத்திற்கு சுழுமுனா ஸ்தானமானசிதம்பரமே இடமென்றார்.
அன்றியும் பொன்னம்பலத்தில நவரதமும் அசைவற நிற்கும்படி மகிழ்ந்தார்
என்றால் அநாதியே வேதாகமங்களின் வழியே யாகாதிகள் முதலானவற்றில்
வல்ல கலைஞானிகளுரைக்கும் பொருள் அதற்கு அளவன்று, ஆதலால் இந்தத்
தம்பிரானார் திருவுள்ளப்பாங்கு சகலர்க்கு மயக்கமாம்- எ-று. (4-52)
பூவமர்வோனும்பொருகடலோனும்புத்தேளுந்
தேவர்கள்கோனுந்திருமுனிதானுந்திகழ்நாகர்
காவலனேயிக்கருணைநடங்காண்வரவைத்தாய்க்
கேவல்செய்வோமற்றென்செயவல்லோமென்றார்கள்.
இ-ள். பூவில் இருப்போனாகிய பிரமனும், அலைபொருதுங் கடலுடையோனாகிய
விஷ்ணுவுந், தேவர்களும் தேவர்களுக் கரசனாகிய இந்திரனும், அழகியமுனியாகிய
வியாக்கிரபாதரும், விளங்கப்பட்ட நாகராஜனாகிய பதஞ்சலி பகவானே-இந்தக்
காருண்ணிய நிருத்தஞ் சருவான் மாக்களுக்குங் காட்சி பெறக் கற்பித்தாய் உனக்கு
நாங்கள் ஏவல் செய்வோமல்லது வேறென செயக்கடவோ மென்றார்கள் - எ-று. (4-53)
இப்பரிசாமிங்கிவரொடுபூதம்பேய்காளி
முப்புரிநூலோர்பூமகள்விண்ணோர்முதலாகத்
தப்பருமெல்லைக்குடசிவலிங்கந்தாபித்துத்
துப்புறழ்மேனிச்சோதியைநாளுந்தொழுநாளில்.
இ-ள். இப்பரிசாகிய வியாக்கிரபரதமாமுனி பதஞ்சலிமாமுனி அரிபிரமேந்திராதிகளுடனே
பூதம்-பேய்-காளி-தில்லை மூவாயிரவர் இலக்குமி தேவர் முதலானோர் முத்தி வழுவாத
சிதம்பரத்தின் எல்லைக்குள்ளே சிவலிங்க ஸ்தாபனஞ்செய்து செம்பவளக் குன்றொத்த
திருமேனியுடைய தம்பிரானாரை நாள்தோறும் பூசித்துத் தோத்திரஞ் செய்துகொண்டிருக்குங்
காலத்தில். (4-54)
வீசிய கங்கைக் கங்கைவி டாவந் தர்வேதித்
தேசமி லங்கத் திசைமுகன் யாகஞ் செய்தற்குப்
பூசைவ ழங்கிப் புவியுழு தப்புப் பூரித்துற்
றாசறு துங்கச் சாலைக ளின்பத் தமைவித்து.
இ-ள். திரைவீசிய கங்கைக்கரை நீங்காத அந்தர் வேதிப் பிரதேசம் விளங்க பிரமா யாகஞ்
செய்யக்கருதி அவ்விடத்தில் இந்திராதி முதலாயுள்ள தேவதைகளுக்கும் பூசை பண்ணி
பூமியை யுழுது தண்ணீர் நிறையக்கட்டி ஒருப்பட்டு விதிமுறையில் குற்றமற்ற பெரிய
யாகசாலைகளை மனோகரமாகச் செய்வித்து- எ-று. (4-55)
திருமலி வித்துப் பறவை படுத்துச் சிலகுண்டங்
கருதி நிறுத்திப் பசுநிரை கட்டப் பெறுகம்பஞ்
சருநெய் குசைப்புற் சமிதை சிருக்குச் சிருவந்தண்
பருதி பொரிப்பொற் குவைபழ வெற்புப் பலகொண்டு.
இ-ள். இலக்குமி முதலானோரை ஸ்தாபனம்பண்ணி பருந்துபடுத்து விதிப்படியிலுண்டான
குண்டங்களைக் கருடன்மேல் அந்தந்தத் தானங்களில் விதிப்படி அமைத்துப் பசுக்கள்கட்டக்
கம்பங்கள்-சரு-நெய்-குசைப்புல்-சமிதைகள் –சிருக்குச் சிருவம், குளிர்ந்த பருதி, பொரி
பொற்குவியல், பழ முதலானவை எல்லாப் பதார்த்தங்களையும் பலமலைபோலக்
குவித்துக்கொண்டு- எ-று. (4-56)
சிந்தைம கிழ்ந்தும் பரைவர வேள்விச் செயல்செய்வோர்
மந்திர மோதிப் பாவக சோமா வருணாவா
முந்துமு ராரி வாதிமி ராரி வாமூவா
விந்திரன் வாவா சங்கரன் வாவா வென்றார்கள்.
இ-ள். சித்தங்களிகூர்ந்து யாகத்தொழில் செய்வோர் தேவர்களை வரும்படிக்கு
மந்திரம் ஓதி பின்னும் அவரவர் மந்திரங்களைச் சொல்லி அக்கினி தேவனே-
சந்திரனே-வருணனே வா, எக்கியத்துக்கு முதலான விஷ்ணுவே வா, அந்தகார
சத்துருவாகிய ஆதித்தனே வா, மூப்பு இளமையில்லாத இந்திரனே வாவா,
சங்கரனே வாவா என்று ஆவாகனம் பண்ணினார்கள்- எ-று. (4-57)
யாரும ணைந்தா ரின்றினி யென்னா மிதுவென்றேன்
றோருமு னன்பார் யாவரு மின்பா ரொளிர்தில்லைச்
சேரவி ருந்தார் போதுமி னென்றே சென்றேயு
நாரத கொண்டே மீளுக வென்றான் மறைநாவான்.
இ-ள். ஆவாகனம் பண்ணின தேவர்கள் யாவரும் இங்குவந்து பொருந்தினார்களில்லை
இனி யான் துடங்கின யாகம் ஏதாய் முடியும் என்றென்று பலகாலும் விசாரித்து
உணருமுன் இங்கு வரவேண்டின அன்பையுடைய யாவரும் பிரியத்துடனே விளங்கிய
சிதம்பரத்திலே கூடி இருக்கக் கண்டோம் யாகத்துக்கு வாருமென்று நீர்போயாகிலும்
நாரதரே அழைத்துக் கொண்டு மீள்வாயாக வென்று சொன்னார் பிரமதேவர்-- எ-று. (4-58)
நயமுனியும்போய்நடவதிபன்றாடொழுதொல்லைச்
சயமலிதில்லைத்தாபதர்விண்ணோர்தமைநீர்காள்
பயன்மலியாகத்தனைவருமெய்தப்பணிநீயென்
றயனுரைசெய்தானென்றுரைசெய்தானனைவர்க்கும்.
இ-ள். நாரதமுனிவரும் சிதம்பரத்திலே சென்று நடராசன் ஸ்ரீபாதந் தரிசனம்
பண்ணிச் சடுதியிலே வந்து ஞான வீரமிகுத்த தில்லைவாழ்ந்தணரையும்
தேவர்களையுங் கண்டு நீங்கள் புத்தி முத்திப்பயன் மிகுந்த யாகத்துக்கு
எல்லாரும் வரத்தக்கதாக நீ கற்பியென்று பிரமா சொல்லி என்னை வரவிட்டார்
என்று அனைவர்க்கும் சொன்னார்-- எ-று. (4-59)
நாரதனார்சொற்றேவர்கள்கேளாநகைசெய்தெம்
பேரவிதீயிற்றூவுகயாமேபெறுவோமிப்
பாரினினாளும்பேரருளாளன்பரதத்தே
னாரமுதுண்போமினியவியுண்போமன்றென்றார்.
இ-ள். நாரதமுனிவர் வார்த்தையைக்கேட்டுத் தேவர்கள் நகைத்து எங்களுடைய
அவிர்ப் பாகத்தை எங்கள் முகமாகிய அக்கினியிலே ஓமம் பண்ணக் கடவர் அதை
நாங்கள் பெற்றுக் கொள்வோம் இந்தப் பூமியிலே நாள்தோறும் தம்பிரானுடைய
நிருத்தா நந்தத் தேன் பருகுகின்றோம் அதை ஒழிந்து இனியுங்கள் அவிர்ப்பாகங்
கொள்ளோம் என்றார்கள்- எ-று.
உங்களவியை நெருப்பிலே போடும் எங்களுக்கு வேண்டாம் அந்தப் பதமென
ஒருபொருள் நிகழ்ந்தமை கண்டுகொள்க. (4-60)
மற்றவர்தஞ்சொற்பெற்றவனும்போய்மலரோன்முன்
சொற்றனனந்தக்கொற்றவன்யாமுஞ்சொன்னால்வந்
திற்றைமகங்கைப்பற்றுவரென்றேயிறைவாழும்
பொற்றிகழ்தொல்லைத்தில்லையினெல்லைபுகுந்துற்றான்.
இ-ள். அந்தத்தேவர்கள் வார்த்தையைக் கேட்ட நாரதமுனிவரும் மீளப் போய்ப்
பிரமாவின் முன்பே அவர்கள் சொன்னபடியே சொன்னார், அந்த வார்த்தையைக்
கேட்ட பிரமாவானவர் நாரதர் போய் மீண்டதும் ஒழிய இரண்டாவது நாமும்
சென்றால் இங்குவந்து இன்று நடத்துகிற யாகத்தைக்கொண் டு முடிப்பர் என்று
யோசித்து அநாதியே தம்பிரானார் திருநடஞ் செய்யும் பொலிவு விளங்குந்
பழைய தில்லை வனத்தினெல்லையைச் சென்று கிட்டினார்- எ-று. (4-61)
மலரவனுந்தாபதரெதிர்கொண்டாரெனவாழ்வுற்
றலைபுனல்சென்றாடியபினெழுந்தாரழலாடு
நிலயம்வணங்காநிகழ்சிவகங்காதரநீறார்
தலைவபுயங்காபரணவிரங்காய்தகவென்றான்.
இ-ள். பிரமாவைப் பிரமரிஷிகள்யாவரும் எதிர்கொண்டார்கள். எதிர்கொண்ட
மாத்திரத்திலே நம்முடைய எண்ணம் முடியுமெனப் பிரமா மிகவும் பிரியமுற்றுப்
பொற்றாமரைப் பொய்கையிலே ஸ்நானஞ்செய்து நியமம் முடித்து எழுந்துசென்று
தீயாடுங் கூத்தனை நமஸ்கரித்து விளங்காநின்ற சுத்தனே, கங்காதரனே, நீறுசார்ந்த
திருமேனித் தலைவனே, நாகாபரணனே, என்னையும் அடியாருடன்கூட இரங்கி அருள்
என்று விண்ணப்பஞ் செய்தார்-எ-று.
இரங்காய் சரணென்று பாடமாகில் தேவரீர்பாதத்திலே சரண்புக இரங்கி அருள்
வீரென்று பொருளுரைக்க. (4-62)
வேதனும்வேள்விக்கேதிகழ்வானாய்விடைகொண்டே
தீதறமூலத்தானமிறைஞ்சிச்சிவலிங்கச்
சோதியைமேவச்செய்யிடமெங்குந்தொழுதன்பிற்
போதுகவென்றப்புலிமுனிசாலைக்குள்புக்கான்.
இ-ள். பிரமாவும் யாகம் பண்ணி முடிக்கக் கருத்தராய் நடேசமூர்த்தியை நமஸ்கரித்து
விடைபெற்றுக்கொண்டு யாகத்திற்கு விக்கினம் வராமல் ஸ்ரீமூலத்தானமுடைய
தம்பிரானாரையும் நமஸ்கரித்து வேண்டிக்கொண்டு திருப்புலீச்சர முதலான
எங்குமுள்ள சிவலிங்கத் தானமெல்லாந் தொழுது அன்பினாலே வாருமென்று
அழைத்து வியாக்கிரபாதர் கைப்பற்றிக் கொண்டு அவர் பன்ன சாலைக்குள்ளே
புகுந்தார்- எ-று. (4-63)
இந்திரன்விண்ணோர்புலிமுனிநாகர்க்கிறையோன்மெய்ச்
சிந்தையரேனோர்சூழவிருப்பத்திகழ்போத
னந்தமிலாதீர்மகமுயல்வேனானனைவீரும்
வந்தணைவானீர்தந்திடுவீரேவரமென்றான்.
இ-ள். இந்திரன் தேவர்கள் வியாக்கிரபாதர் பதஞ்சலி கேவல சகலம் நீங்கின சுத்த
இருடிகள் மற்றுமுண்டானவர்கள் சூழ்ந்து இருப்ப நடுவே தேசஸ் உடனேவிளங்கின
பிரமாவானவர் எல்லாரையும் பார்த்து முடிவில்லாத சிவபத்தியையுடைய நீங்கள்
யாவரும் யான் பண்ணுகிற யாகத்துக்கு வந்து அநுக்கிரகம் பண்ணும்படி வரந்தருவீர்
என்று கேட்டார்- எ-று. (4-64)
பூமகனெண்ணம்புகறருபோதுட்பொருளுன்னி
யோமெனவோதாதவனிதரானாரயனும்பர்
கோமகனீயுட்கொண்டதெனென்னக்குளிர்கஞ்சத்
தேமலிதாரோய்செப்பியதன்றோசெயலென்றான்.
இ-ள். பிரமதேவர் தாம் நினைத்து வந்த காரியம் சொன்னவளவில் அதில் பிரயோசனம்
பொசிப்பு மாத்திரமே யாதலால் அதில் அபேட்சையற்றுப் பொருந்தாமல் தலை
கவிழ்ந்திருந்தார்கள். பிரமா இந்திரனைப் பார்த்து உனது அபிப்பிராயம்
என்னையென்று கேழ்க்கக் குளிர்ந்த பரிமளம் வீசிய தாமரைமாலையை யுடையவரே
நீர் அநுக்கிரகித்த தன்றோ எனக்கும் பொருத்தமென்றான்- எ-று. (4-65)
அங்கவனின்சொற்கொண்டுதுவண்டுள்ளயன்வேள்விக்
கெங்கணுமின்பத்தாபதருண்டாயினுமெந்தைக்
குங்கடமன்புக்கொப்பவரின்றென்றன்றோயா
னிங்குவருந்திற்றின்றெனநின்றங்கிரவுற்று.
இ-ள். அவ்விடத்துத் தேவேந்திரன் அநுமதிபண்ணின பிரிய வார்த்தையை
உட்கொண்டு தில்லை வாழந்தணர் அநுமதிபண்ணாத இதற்குச் சித்தங் கலங்கிப்
பிரமா யாகத்துக்கு நன்றாக உபதரிசனம் பண்ண எவ்விடத்தும் நல்ல பிராமணருண்டாயினும்
எம்முடைய தம்பிரானிடத்தில் உங்களைப்போலப் பக்தியை யுடையவர்கள் வேறில்லை
என்பதினாலல்லவோ யான் இவ்விடத்திலே வந்து வருந்தி யுங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்
என்று பலகாலும் இரந்துசொல்லி- எ-று. (4-66)
பூவமர்வோனப்புலிமுனிகைப்பொன்முகிழ்பற்றி
யாவதெனானேதூதனுமானாலமர்தில்லைத்
தாபதரனார்யாரையுமாவாழ்தருமவேள்விக்
கேவுதனீயேமேவுதலன்றோவியல்பென்றான்.
இ-ள். கமலாசனர் அந்த வியாக்கிரபாதருடைய முகிழ்போன்ற ஸ்ரீ அத்தத்தைப்
பற்றிக்கொண்டு சொல்லுகிறார் நீரே பராமுகமாயிருந்தால் எந்தக் காரியம் நிறைவேறும்.
யானே தூதனுமாய் வந்தென் காரியஞ் சொல்லினமையால் தில்லை வனத்தில் பொருந்தின
பிரமரிஷிகள் எல்லாரையும் பெரிய லட்சுமி கரமானயாகத்துக்கு என்னுடனே கூட வரவிடுதலை
நீரேற்றுக் கொண்டு செய்வதன்றோ கிரமம் என்றார் - எ-று. (4-67)
கோகனதன்சொற்கொண்டுபுலிக்கான்முனிகோப
மோகமிலின்பத்தாபதர்மூவாயிரவோரு
மாகருமன்றத்தேகனையாமிங்கினிநுங்கட
காகவணங்கப்போய்வருவீரென்றறிவித்து.
இ-ள். பிரமாசொன்ன வார்த்தையை வியாக்கிரபாதர் உட்கொண்டு குரோதமோ காதிகளை
நீங்கின சத்திய ஞானத்துடனே கூடியிருக்கிற பிரமரிஷிகள் மூவாயிரவோரும் இந்திராதி
தேவர்களும் கேட்ப யாம் இன்று முதலாக உங்களுக்காக நீங்கள் போய் வருமளவும்
ஒப்பில்லாத சிதம்பரமூர்த்தியைத் திரிசந்தியும் நமஸ்கரிப்போம் நமக்காகப் போய்
வாருங்களென்று அறிவித்து. (4-68)
போதுகவென்றப்புலிமுனிபோதன்பொதுமேவுஞ்
சோதியைவந்தித்தருள்விரவெய்தத்தொழுதொல்லோர்
நாதனொடன்புற்றகலநினைப்போர்நமனோடு
மேதகுமெய்யும்போமினியென்றேவிடைகொண்டார்.
இ-ள். வருகவென்று வியாக்கிரபாதர் பிரமா இவர்கள் சிதம்பரமூர்த்தியை நமஸ்கரித்து
நிகழ்ந்த காரியம் விண்ணப்பஞ் செய்து திருவருள் பெறத் தொழுகிற பழைய பிரமரிஷி
தேவர்கள் ஆகிய இவர்கள் ஆத்ம நாயகனுடனே இரண்டற அன்புறக் கலந்து போகத்
துணிவோர் யமனுடனே தூலசரீரமும் போவதுபோலப் போனார்கள் - எ-று. (4-69)
சென்றபினந்தத்திருமுனியுஞ்சீரரவோனும்
பின்றிகழ்வேணிப்பிஞ்ஞகன்மன்றம்பிரியாத
வொன்றியசிந்தைத்தாபதர்மீள்வுற்றுடன்வாழ்வ
தென்றுகொலோவந்திடுநெறியேதோவெனநொந்து.
இ-ள். மூவாயிரம் பிரமரிஷிகளும் பிரமா உடனே சென்றபின்பு வியாக்கிரபாதரும்,
பதஞ்சலியும், பின்தாழ்ந்து விளங்குகின்ற சடைக் கற்றையையுடைய பிஞ்ஞகனாடும்
சிதம்பரத்திலே யொன்றி இருக்கிற சித்த பாகத்தையுடைய பிரமரிஷிகள் மூவாயிரவோரும்
மீண்டு எம்முடனே களிகூர்ந்து வாழுநாள் என்று உண்டாமோ அவர்களை அழைக்கும்
உபாயம் ஏதோவென்று விதனப்பட்டுக் கொண்டு-- எ-று. (4-70)
அந்தமிலின்பத்தெந்தைபிரானாரமர்நாளிற்
சிந்தைவிளங்கத்தில்லைவிளங்கத்தேனாருங்
கந்தவலங்கற்சுந்தரசிங்கக்கவுடேசன்
வந்தமைசந்தச்செந்தொடையான்மேல்வருவிப்பாம்.
இ-ள். முடிவில்லாத பேரின்பத்தையுடைய- எந்தை பிரானாகிய- வியாக்கிர பாதரும்
பதஞ்சலியு மிவ்வாறிருக்கு நாளில் தனக்குச் சித்த சுத்தியுண்டாகவும் தில்லைத்தலம்
விளங்கவும் தேனிறைந்த வாசனையையுடைய மாலை யணிந்த சுந்தரனாகிய
சிங்கவன்மனெனும் கவுட தேசத்தான் சிதம்பரத்திற்கு வந்தமையை அழகு பொருந்திய
செம்மையாகிய செய்யுட்களினாலே மேற் சொல்லுவாம்-- எ-று. (4-71)
நடராசச்சருக்க முற்றிற்று.
ஆக திருவிருத்தம்-228