MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  6. திருவிழாச்சருக்கம். (363-415)

  எண்ணிலிருந்தவரெந்தைநடந்தொழுதின்பார
  மண்ணில்வணங்கியிணங்கருமன்பொடுவாழ்நாளிற்
  றிண்ணியசிந்தைகளொன்றிநினைந்தருடேர்வாரா
  யண்ணன்மருங்குயர்புங்கவர்சங்கமமர்ந்தார்கள்.

  இ-ள். எண்ணிறந்த பெரியரிஷிகள் எம்பிரானாருடைய ஆநந்தநிருத்தஞ் சேவித்துக்
  களிகூர்ந்து பூதலத்திலே சாட்டாங்கமாக நமஸ்கரித்து ஒப்பரிய அன்புடனே
  வாழுநாளில் திடசித்தங்களினாலே யொத்து விசாரித்து தம்பிரானார் திருவருள்
  எப்படியென்றறிவாராகி வந்து சிதம்பரநாதருக்கு அருகாகப் பெரியோர் இயாவருந்
  திருக்கூட்டமாகி யிருந்தார்கள்-எ-று. (6-1)

  சங்கமிருந்தபினங்கமர்புண்டரிகத்தாளோ
  னிங்கரசன்றருமைந்தரின்முந்தையனிப்பார்மெய்ப்
  பொங்கருள்கொண்டுபுரப்பவனிப்புவிமுற்காவற்
  பங்கமிறம்பியர்தம்பதியென்றுரைபாரித்தான்.

  இ-ள். அக்கூட்டத்தார் அப்படியிருந்தபின் அவ்விடத்துப்பொருந்தின வியாக்கிரபாதர்
  இவ்விடத்துக் கௌடதேசன் தந்த குமாரரில் முந்தின குமாரனாகிய இரணியவன்மன்
  இந்தத் தேசத்தைச் சத்தியமான சிவாக்கினையின் பெருமையினாலே செங்கோல்
  நடத்தக்கடவன், குற்றமில்லாத இப்பூமியின் முறைமைக்குத் தம்பிமார்கள் தங்கள்
  தேசத்துக்கு முதற்காவலாக இருக்கக்கடவர்களென்று அவர்கள் பதியாகிய கௌட
  தேசத்துக்குக் கர்த்தாராகக்கடவரென்கிற வார்த்தையை யாவரும் கேட்ப
  விரித்துரைத்தார்-எ-று. (6-2)

  உருகுபதஞ்சலிமன்னுபமன்னியனன்மாமன்
  றிருவுடையந்தணர்யாருமுளந்துரைசெய்யச்சீ
  ரிரணியவன்மனைமுன்மரபின்மணமேய்வித்தே
  மருவியமன்றயன்மண்டபமொன்றுவகுப்பித்தார்.

  இ-ள். இரணியவன்மனை யடிமைகொண்டு தேவகாரியமுடிய இராச்சியங் கொடுத்த
  திருவருளின் பெருமை கண்டு நீராளமாயுருகின பதஞ்சலி, பாலியத்திலே
  திருப்பாற்கடல் பெற்றுக் கிருஷ்ணனுக்கு விசேடதீக்ஷை பண்ணி மற்றுமுண்டான
  எண்ணிறந்த பெருமை பொருந்தின உபமன்னியபகவான், அவருடைய
  நல்லமாதுலனாகிய வசிட்டர் திருவுடையந்தணராகுந் தில்லை மூவாயிரவர்
  மற்றுமுள்ள தெய்வரிஷிகள் யாவரும் பிரியத்துடனே அவ்வண்ணமே
  செய்யக்கடவதென்று சொல்ல கீர்த்திமானாகிய இரணியவன்மாவையிராச
  நீதிக்குப்பொருந்த விவாகஞ் செய்வித்துச் சிதம்பரத்துக்கருகாக அவனுக்குப்
  பொருந்தின இடத்திலே ஒரு அபிஷேக மண்டபமுங் கட்டுவித்தார் -எ-று. (6-3)

  மற்றதின்மங்கலமாலைகடோரணம்வாழ்தீபம்
  பொற்றவிசெண்பலகைக்குலநெய்பொரிபுற்பூநூல்
  சுற்றியகும்பமுடன்கலசம்பலசூழ்வித்தே
  யற்றிகழ்வொன்றுசடங்கதிவாசமமைத்தார்கள்.

  இ-ள். அந்தமண்டபத்தில் மங்கலார்த்தமான தருப்பை மாலைகள் மாவிலைத்
  தோரணங்கள், தூண்டாவிளக்குகள் கனகசிங்காதனம் அட்டமங்கலப் பலகைத்திரள்
  தருப்பை குசைத்தூறு இவைமுதலான புற்கள், நெய் பொரி பொற்பூ-வெள்ளிப்பூ -
  கோட்டுப்பூ - கொடிப்பூ - நீர்ப்பூ - நிலப்பூ - முதலானவைநூல் சுற்றிய பிரதான
  கும்பமுடன் பலகலசம் வைத்து ஓரிராத்திரி முழுவதும் அதிவாச கிருத்தியம்
  விளங்கப் பண்ணினார்கள்-எ-று. (6-4)

  காலைதொடங்கிநடந்துசடங்குகணித்தோதும்
  வேலையின்மங்கலநீடபிடேகம்வியந்தாடி
  மூலமுயங்கியமாமுடிதார்முதுவாள்பெற்றங்
  கேலவிருந்தபினிட்டனராண்டொன்றிரண்டென்று.

  இ-ள். உதயகாலந் துவக்கி ஓமநடந்து முடித்துச் சோதிஷியர்கள் எண்ணியிட்ட
  முகூர்த்தத்தில் மங்கலார்த்தமாய் இருக்கிற நவதீர்த்தங்களினாலே மிக அபிடேகம்
  பண்னிப் பாரம்பரியமான மகத்தானமணி மகுடம் ஆத்திமாலை பழைய வீரகட்கம்
  வியாக்கிரபாதர் கையினால் கொடுக்கப்பெற்று அந்தமண்டபத்திலே சிங்காதனத்திலே
  இருந்தபின் ஆண்டொன்றிரண்டென்று திருவாண்டெழுத்திட்டான் -எ-று. (6-5)

  சிந்தைம கிழ்ந்தெதிர் வந்தனை தன்றந யன்செய்யத்
  தந்தைம கிழ்ந்துத ழீஇவள ராசிக டானல்கிப்
  புந்தியி லங்குபு லிப்பதி காவல் புரப்பாயென்
  றந்தமின் முந்துபு லிக்கொடி யங்கைய கத்துய்த்து.

  இ-ள். சிந்தைகளிகூர்ந்து தன்னருட்புதல்வனான இரணியவன்மச் சக்கரவர்த்தி யெதிரே
  வந்து நமஸ்கரிக்க அருட்பிதாவகிய வியாக்கிரபாதர் பிரியத்துடனே தழுவிக்கொண்டு
  மிகுந்த ஆசிர்வாதஞ்செய்து அறிவுக்கறிவான வியாக்கிரபுரத்தைக் காத்தளிப்பாயாக
  வென்று முடிவில்லாத பழைய வெற்றிப் புலிக்கொடியை யழகிய கைத்தலத்திலே
  திருவுளம் பற்றிக்கொடுத்து-எ-று. (6-6)

  போதுக வென்று வலங்கொடு புக்கருண் மிக்காடு
  நாதன்மு னன்மலர் சிந்திவ ணங்கந யந்தண்ணல்
  பாதமி ரண்டுமெ டுத்தவன் முச்சிப ரிப்பித்தா
  னோதமெ ழுந்தென யாவரு மோகையு ரைத்தார்கள்.

  இ-ள். வருகவென்று பிரதக்ஷணமாகக் கொண்டுசென்று உள்ளேபுகுந்து அருள் மிக
  ஆநந்தநிருத்தஞ் செய்யும் சிதம்பரநாதர் சந்நிதியிலே நல்ல புட்பாஞ்சலிபண்ணி
  நமஸ்கரிக்கக் கற்பித்துத் தம்பிரானார் திருப்பாதுகை இரண்டினையுமெடுத்து
  இரணியவன்மன் சிரசிலே வியாக்கிர பாதமகாரிஷி தரிப்பித்தார். அப்போது
  சமுத்திரமு குளித்தெழுந்தாற்போலத் தேவரிஷி பூதகண மனிதர்முதலான
  யாவரும் பிரிய வார்த்தைகள் சொன்னார்கள் -எ-று. (6-7)

  ஈறில்பெ ருந்தன மென்னவை நின்னவை யிப்பார்மே
  லாறினி லொன்றுகொ ளஞ்சினி லொன்றுகொ ளத்தாவிப்
  பேறுபி றந்தடி யேன்மர போர்கள் பிழைத்தாலுங்
  கூறரு மன்புகொ டுத்தடி மைப்பணி கொள்கென்றான்.

  இ-ள். என்னுடைய பூர்வார்ச்சிதமான முடிவில்லாத சகல ஐசுவரியமும் தேவரீருக்காகக்
  கடவன இந்தப் பூமியிலே ஆறிலொன்று தேவரீர் கடமை கொண்டருளும் நின்ற
  அஞ்சுகூறிலே யொருகூறு அடியேனுக்கு இகத்துக்குச் சீவன வுபாயமாகத் தந்தருளும்
  இப்பெற்றியிலேவந்து என்வமிசத்திலே பிறந்த நின்னுடைய அடியார்கள் குற்றங்கள்
  செய்தாலும் பொறுத்தருளிச் சொல்லுதற்கு அரிதாகிய பக்தியையுண்டாக்கி அடிமைத்
  தொழில் கொண்டருள்வீரென்று வேண்டிக் கொண்டான் -எ-று. (6-8)

  அண்ணலு மவ்வகை செய்குவ மென்றருள் செயபோதிற்
  கண்ணமர் தாரைகள் காரைநி கர்ப்பக் கரைவுற்றங்
  கெண்ணரு மின்னரு ளெய்தியி றைஞ்சியெ ழுஞ்சேயைத்
  திண்ணிய நன்முனி கொண்டுடை யானடி சேர்வித்தான்.

  இ-ள். தேவநாதரும் அப்படிச் செய்வோமென்று திருவுளம் பற்றினகாலத்துப் பொருந்தின
  கண்ணீர்த்தாரைமழையொப்ப நீராளமாய் உருகி அவர் எண்ணரிதாகிய இனிய
  அருள்பெற்று நமஸ்கரித்து எழுந்திருந்து அவ்விடத்திலே நிற்கிற குமாரனை
  ஞானவீரரான நல்ல வியாக்கிரபாத மகாரிஷி கொண்டுசென்று ஸ்ரீ மூலத்தானமுடைய
  தம்பிரானார் சீர்பாதங்களை அணுகுவித்தார்-எ-று. (6-9)

  அங்கும் வணங்கி வணக்கரு மானையை மேல்கொண்டு
  மங்கல மாநகர் சூழ்வர மாமுனி தானேவச்
  சங்கவி யங்கண் முழங்க வலங்கொடு தார்மார்பன்
  பொங்கிய பங்கய மாதமர் கோயி லுட்புக்கான்.

  (இ-ள்.) சீர்மூலத்தானமுடைய சிவபெருமான் சந்நிதியிலே நமஸ்கரிப்பித்துப் பாகரால்
  வணக்கரிய மத்தகசத்தின் மேற்கொண்டு மங்கலமாய் மகத்தாயிருக்கிற சிதம்பரநகரைப்
  பிரதக்ஷிணம்வர வியாக்கிரபாதர் கற்பிக்கச் சங்க வாத்தியங்கள் முழங்க ஆத்திமாலை
  மார்பனான இரணியவன்மன் பிரதக்ஷிணம் வந்து கற்புமிகுந்த இராசலட்சுமி யுறைகின்ற
  திருமாளிகைக்குள்ளே புகுந்தான். (6-10)

  தார்புனை யாரணி செம்பிய னெம்பியர் தானல்கும்
  பாரும தூரும தாகவெ னாவணி தார்பட்டம்
  போர்தரு சாமரை தோரைக ணீள்குடை பொற்பீடந்
  தேரணி மாவய மாநிதி யாதிகள் சேர்வித்தான்.

  (இ-ள்.) தாராகத்தொடுத்த ஆத்திமாலையை அணிந்த இரணியவன்மனானவன் தம்பிமாரை
  அழைத்து உங்களுக்கு நலம்பொருந்தின தேசமுங்கௌட தேசமாகக்கடவது படைவீடும்
  கடகமேயாகக் கடவதென்று கற்பித்து ஆபரணமும் மாலையுங் கொடுததுப் பட்டங்கட்டி
  பொருந்திவீசும் உபய சாமரையும் பீலிக்குடை தவளச்சத்திரம் பொற்பீடந் தேர்நிரை
  மகத்தானவாறுபோல மதஅருவி பாயும் யானைகள் குதிரைகள் பதாதிகள் முதலானவையுங்
  கொடுத்தான்.--எ-று (6-11)

  வென்றிந டந்தொழு தம்பியர் வந்தடி மேல்வீழ்வுற்
  றன்றவர் சென்றபின் மன்றம்வ ணங்கிய வன்றந்தை
  முன்றொழு தந்தணர் வந்தனை மாளிகை முற்செய்வா
  னின்றரு ளென்றவை யெங்குமி லங்கவெ டுப்பித்தான்.

  (இ-ள்) அந்தத் தம்பிமார் சிதம்பர நாதருடைய வெற்றிபொருந்தின ஆநந்தக் கூத்தை
  வணங்கி வந்து தன்னையும் வந்து நமஸ்கரித்து அனுப்பிக்கொண்டு போகத் தக்கவர்களை
  அனுப்பப் போனபின் சிதம்பர மூர்த்தியினுடைய சேவை பண்ணின இரணியவன்மனானவன்
  தன்னுடைய பிதாவாகிய வியாக்கிரபாதரை முன்தொழுது தில்லைவாழந்தணரை
  யவரவர் திருமாளிகையிலே சென்று நமஸ்கரித்துத் திருமாளிகைகளுங் கட்டுகிறதற்குத்
  திருவுளம்பற்றுமென்று அநுஞ்ஞை பெற்றுக் கொண்டுவந்து எவ்விடத்தும் விளங்க
  மூவாயிரந் திருமாளிகை கட்டி முடிக்கத் தொடங்கினான் - எ-று. (6-12)

  ஏழ்நிலை மாளிகை சூளிகை சாளர மேரார்சீர்
  வாழ்மதி றோரண வாயில்க டேரணி மாவீதி
  சூழ்வுற மேருவி னேர்பல கோலிய சோழேசன்
  றாழ்வுடன் மாதவர் யாரையு நீள்குடி சார்வித்தான்.

  (இ-ள்) எழுநிலை மாளிகையாகச் சமைத்து மகுடங்கள் வைத்துப் பலகணி வைத்து
  அழகுநிறைந்த மதில் வாழ்வு பெறப்பண்ணி நிலைத்தோரணம் பொருந்தின வாசல்கள்
  நிலைத்தர் நிறைந்தபெரிய திருவீதிகள் சுற்றும்பொருந்த இப்படி மகாமேருவையொத்த
  திருமாளிகை கட்டின இரணியவன்மச் சக்கரவர்த்தி தாழ்ச்சியுடனே மகாத
  பசுகளையுடைய திருவுடைய அந்தணரை யெல்லாரையுங் குடியேற்றுவித்தான்
  - எ-று. (6-13)

  இற்றகு பண்டமி லங்கநி லங்களை யேய்வித்து
  மற்றவர் தம்மிலொ ருத்தனி ருத்தம கிழ்ந்தாடும்
  பற்றரு சின்மய வம்பர மும்பர்ப ரிந்தாகம்
  பெற்றப யன்றிரு வம்பல மொன்றுசெ யப்பெற்றான்.

  (இ-ள்) இல்வாழ்க்கைக்கு வேண்டத்தக்க பதார்த்த பண்டங் கொடுக்கும்படி
  நிலங்களுண்டாக்கிக் கொடுத்து அந்தத் திருவுடை யந்தணருக் குள்ளே ஒருவரான
  சிதம்பரநாதர் நிருத்தஞ்செய்யும் பசுபாசஞானத்தால் அறியப்படாத ஞானமயமாகிய
  அம்பலத்தைத் தேவர்கள் ஆதரத்துடனே பெற்ற பிரயோசனமாக ஒப்பற்ற
  பொன்னம்பலத்தைத் தானுந் திருப்பணி செய்யப்பெற்றான். (6-14)

  பொன்னணி மாநவ மாமணி யாதி பொருப்பாக
  முன்னர்கொ ணர்ந்துகு வித்தருள் பெற்றமு னிச்செல்வன்
  றன்னிசை வோடுயர் வானவர் கம்மியர் தம்மைக்கொண்
  டுன்னரு மம்பல மொன்றுச மைத்தணி யொப்பித்து.

  (இ-ள்.) சுவர்நம் ஆபரணம் மகத்தான நவரத்தின முதலான வெல்லாம் மலை
  போலே முன்னேகொண்டுவந்து குவித்துத் தம்பிரானார் திருவருள் பெற்ற
  வியாக்கிரபாதர் அநுமதியுடனே பெரிய தெய்வத்தச்சரைக்கொண்டு மனத்துக்கு
  எட்டாத ஒப்பற்ற அம்பலமொன்று சமைத்து அழகுபெற அலங்கரித்து-எ-று. (
  6-15)

  காணவி லக்கவொ ழுங்கணி வித்தவை கைக்கொண்டு
  பூணும ணிக்குற டொத்தத ளத்தியல் பொற்பாரத்
  தூணிரை யுத்திர நற்பல கைத்திர டொல்சேர்வைக்
  கோணமர் கைத்தொகை முச்சிய ணைத்தணி கொல்வித்து.

  (இ-ள்) கண்ணியமென்றும் போதராணமென்றும் இரண்டு வகையாகச் சொல்லும்
  இவைகளில் கண்ணியத்தின் வகைப்படியிலே புபாநாதித் தூபியந்தமான உயரத்தைக்
  கண்ணியத்திலே இத்தனை அங்கிஷ மின்னவ்வயவமென்று கற்பித்துக்கொண்ட
  பட்டோலை செய்து கையிலேபிடித்துக்கொண்டு அதிட்டா நவசத்தாலே
  அதிட்டாநத்துக்குப் பொருந்த உட்பீடமென்கிற பணியை இரத்தினங்களினாலே
  செய்து அதிட்டாநத்துக்குச் சொன்ன கூற்றிலே அதிட்டானம்பன் மணிகளாலேபண்ணி
  அதிட்டானம் பண்ணிமுடிந்த விடத்திலே பொற்பலகையாக நன்றாகத் தளமிசைத்து
  இதின்மேற்றுணுக்குச் சொன்ன கூற்றிலே பிரமகாந்தம் விஷ்ணுகாந்தம் -
  உருத்திரகாந்தம்-சூரியகாந்தம்-சூரியகண்டு பேதம் - சந்திரகாந்தம் - வியாளபாதம்-
  அத்திபாதம் – சிங்கபாதம் – இவை முதலாயுள்ள பலதூண்களைப்பற்றி
  யடைவேநிறுத்திப் பலவகைப் போதிகையுமுட்பட நிறுத்திப் பிரஸ்தாரத்திற்
  சொன்ன கண்ணியத்திலே யுத்திரத்தினவயவங்களுக் கங்க போதத்தின
  வயவங்களுங்கூடப் பலகாற்சாதனம் பண்ணி வித்தார்த்திலங்கிசத்தில் அங்கிச
  வழியிலே கைக்கு நீளங்கொண்டு இந்தக் கையழகுபொருந்த வக்கிரமாகவெட்டி
  முகந்தாயதே சேர்ப்பித்து இதுக்கு அக்கிரத்துக்கு அணித்தாகச் சந்திர காந்தத்திலே
  யதனைப்பலகாற் சாதனம் பண்ணுவித்து இதின்மேலே தூபிக்குச்சொன்ன
  அங்கிஷத்தாலே தூபிப்பிரதிஷ்டை பண்ணினான் -எ-று. (6-16)

  பன்மணிமாலைகள்கொண்டணிதொங்கல்பயிற்சிச்சூழ்
  பொன்மலிமுன்மதில்கோபுரவாயில்பொருந்தச்செய்
  தென்மலமங்கவருங்கருமூலவிறைக்கும்பொற்
  றன்மயமாமொளிராலயமொன்றுசமைப்பித்தான்.

  (இ-ள்) பல இரத்தின மாலைகளைக்கொண்டு அழகுபெற நிரைசிறக்க நாற்றிப்
  பிரதமாவரன முதலான பொன்மதில்களும் அந்தமதில்களில் கோபுரங்கள்
  பிரதிபந்தம் பாதபந்தம்-பாதம் போதம் முகமாலை பக்கசாலை கூடம் பஞ்சரம்
  அந்தராளம் கும்பலதைவிருத்த சூடிதம் தோரணம் கண்டம் வேதிகை சிகரம்
  பூரணகும்பம் தூபி இந்தவகைப் பொற்சொரூபமாகவாசல் கடோறும் விதிப்படிப்
  பொருந்தச்செய்து பசுபாசஞானங்கள் நீங்கத் தோன்றி அருளின் கருமூலகாரணனென்கிற
  திருநாமத்தையுடையரான ஸ்ரீமூலத்தானமுடைய தம்பிரானார்க்கும் ஞானமயமான
  கனகாலயம் ஒப்பறக்கற்பித்தான் -எ-று. (6-17)

  வேறு.

  இன்னவகைதிருப்பணிகள்பலவுஞ்செய்தவிரணியவன்
  மனைமுனிவாயாருமேத்திப்,
  பன்னரியபுகழ்கூறிநீறுசாத்திப்பாந்தகலை
  வழிவழிபாடதற்குப்பல்க,
  மன்னுவகையினினிவந்தவகுப்புநாதன்வைத்த
  பணியெனமுனியைவணங்கிவாழ்த்திச்,
  சென்னியிலஞ் சலிசெயதிங்களித்ததன்றோதிருந்து
  தவமெனக்கென்றான் சென்கோன்மன்னன்.

  (இ-ள்) இந்தப்பிரகாரம் கனகமயமாகப் பஞ்சவருணத்துக் குட்பட்ட திருச்சிற்றம்பலம்
  ஈசுவரி ஆலயம் புண்டரீகப் புட்கரணி மற்றுமுள்ள மண்டபங்களும் ஆவரணத்துக்குப்
  புறத்தில் வியாக்கிரபாத பதஞ்சலி பூதப் பசாசுகாள் மூவாயிரவர் பிரமதேவர்களாற்
  குவிக்கப்பட்ட சிவலிங்க மூர்த்திகளுக்கு ஆலயமுதலான மண்டபங்கள்
  கோபுரமதில்கள் முதலான திருப்பணிகள் பலவிதமாகச் செய்வித்த இரணியவன்ம
  சக்கரவர்த்தியை ரிஷிகளெல்லாரும் புகழ்ந்து ஆசீர்வாதஞ் சொல்லித் திருநீறுசார்த்தி
  விரிந்த ஆகமங்களில் நித்திய பூசைக்குச்சொன்ன பக்தியின் கட்டளைப்படித்
  தம்பிரானார் அருளிச் செய்தபடி யென்று வியாக்கிரபாதாநுக்கிரகிக்க அவரை
  நமஸ்கரித்துத் துதித்து முகத்தாவிலே யஞ்சலியத்தனாய்த் தேவரீர் கற்பித்ததன்றோ
  அடியேனுக்குக் குற்றமற்ற தபசென்று இரணியவன்மன் சொன்னான் -எ-று. (6-18)

  இத்தகையமுனிவருடனொருநாண்மன்னனிலங்கிய
  பேரம்பலத்தினிருந்துநூலின்,
  வைத்தமுறையிறைவற்குமஞ்சனந்தூய்
  மலரமுதுமுதலானமல்கவைத்து,
  நித்தவிழாவெழவேண்டுஞ்செல்வநல்கிநிலவு
  பதஞ்சலிமுனியானிறுத்துவித்த,
  புத்தகமின் புறமுனிவர் யானையேற்றிப்பொற்கோயில்
  வலங்கொண்டுபுகுவித்தார்கள்.

  (இ-ள்) இப்படிமகத்தான வியாக்கிரபாதர் பதஞ்சலி மூவாயிரவர் முதலான
  ரிஷிகளுடனே இரணியவன் மனொருநாள் அப்பேரம்பலத்திலிருந்து
  பூசாபத்தியிற் சொன்ன கிரமத்திலே தம்பிரானார்க்குத் திருமஞ்சனந்
  திருப்பள்ளித்தாமம் நைவேத்திய முதலானவை குறைவறக் கற்பித்து
  நித்தியோச்சலம் நடத்துவதற்கு வேண்டியவெல்லாம் கட்டளை செய்வித்துக்
  கொடுத்துப் பிரசித்தரான பதஞ்சலி மகாரிஷியினாலே சங்கிக்கப்பட்ட
  சிந்தாந்த இரத்நாவலியென்கிற ஆகம ஏட்டை யதிப்பிரியத்துடனே ரிஷிகளெல்லாரும்
  யானைப் பிடரியின்மீது வைத்துப் பொற்கோயிலைப் பிரதக்ஷணமாக
  வருவித்துள்ளே புகுவித்தார்கள் - எ-று. (6-19)

  மனங்குளிரவன்னவர்கள்பின்னுமுன்னூன்
  மருவியநைமித்திகங்கள்வகுப்பான்மாதத்
  தினங்கடொறுமுணர்ந்துமதுமாதமேவத்தி
  ருந்துதமநகவிதியைச்செலுத்துமுன்னா,
  வனங்கனதுவளநகரமணையுங்காலையந்நகர்போன்
  மன்னவனிங் கமைக்க வென்ன,
  வினங்கொ ளிருஞ்சனங்கள்பணிந்தின்பமெய்தியெந்தை
  திருவசந்தவிழா வெழுவித்தார்கள்.

  (இ-ள்) இரணியவன்மன் சித்தங்களிகூர இதுவுமன்றி அந்தரிஷிகள் அந்த ஆகமத்திற்
  பொருந்தின நைமித்தியங்கள் வகுப்பறுக்கும்படிக்கு மாதம் நக்ஷத்திரங்களி னடைவே
  மாதபூசை விசாரித்துச் சித்திரைமாதம் பொருந்தக் குற்றமற்ற தமநகவிதியாகிய
  கொழுந்து சார்த்துங்கிரியையை முடிதற்கு முன்னாக்கக் காமராசன் தனதான்
  பட்டின பிரவேசம் பண்ணுகிற காலத்திலே அந்தப்பட்டினத்தின் சவுபாக்கியம்
  போல இந்தநகரியையு மிராசாவே யலங்கரிப்பாயாகவென்று ரிஷிகள்கற்பிக்க
  இராசாவுக்கு இஷ்டமானபிரதமமனுஷசியர் நமஸ்கரித்துச் சித்தங்களிகூர்ந்து
  தம்பிரானாருடைய வசந்தோற்சவம் மிகவும் நடத்துவித்தார்கள். (6-20)

  விரிந்தபுதுப் புனல்விளையாட் டாடி மாதம்
  விரவுதிரு வாண்டெழுந்து விழவு மோங்கப்
  பொருந்தும்வகை புரிந்தாடி புரட்டா திக்குட்
  புகழ்பதினான் கட்டமிக ளொன்றிற் பூசை
  தருந்தகுதி மிகுதிகுறை தவறு நீங்கத்
  தந்துநவந் தருபந்தர் சமைத்தி யாகம்
  பரந்தவிர தாங்கமுடன் பவித்தி ரத்தைப்
  பயில்வித்தைப் பசிப்பூரப் பரிச மைத்தார்.

  (இ-ள்) பரந்த புதுப்புனல் விளையாட்டு ஆடிமாதத்திலேகூடத் திருவாண்டெழுத்
  திட்டுத் திருநாளும் விளங்கப்பொருந்த நடத்தமுடித்து ஆடி முதல் புரட்டாசிக்
  குட்படக் கற்பித்துச் சதுர்த்தசியிலாவது அட்டமியிலாவது ஒன்றிலொன்றிலே
  நித்திய பூசைக்குக் கற்பித்தபடியில் ஏற்றக் குறைச்சலறக் குற்றந்தீர முன்னூலொரு
  நூலான ஒன்பது நூலான இருபத்தேழிழையாலே பந்துமாலையாகப் பண்ணி
  அங்குரார்ப்பனம் மண்டபபூசையா கெச்சுனை வேதிகார்ச்சனை அக்கினிகாரியம்
  ஸ்தாலிபாகம் பவுத்திராதிவாசம் வினியோகம் சயனம் பிரார்த்தானம் மண்டபபூசை
  அக்கினி காரியமுதலாக விரிந்த பவுத்திரவுதாங்கத்துடனே பவுத்திரஞ்சார்த்தி
  ஐப்பசி பூரத் திருநாளைக்குக் கட்டளை பண்ணுவித்தான் -எ-று. (6-21)


  அந்தமிலெண் ணான்கறமுந் திருக்கண் சாத்தி
  யவற்றின்மிகத் தனித்தென்னை யாண்ட வன்னை
  யெந்தைபிரான் மைந்தர்களோ டெழுச்சி கொள்ள
  வெழுந்தருளி வருந்திருநோன் பியைய வைத்துச்
  சிந்தையின்மா லயனாண வெழுந்த செந்தீத்
  திரளுருவண் ணலைநோக்கித் #திகழ்க ணங்கள்
  வந்தெவையு மழலாக மல்கல் போலும்
  வளங்கொடிரு விளக்கீடு விளங்க வைத்தார்.

  இ-ள். முடிவில்லாத முப்பத்திரண்டறமுந் திருக்கண்சார்த்தி யருளி அந்த
  முப்பத்திரண்டறத்திலும் பார்க்க மிகுதியாக என்னைத் தனியே ஆண்டு
  கொண்டருளிய உலக மாதாவாகிய சிவகாமசுந்தரி முன்னும் செகற்பிதாவாகிய
  சிதம்பரமூர்த்தி பின்னும் விநாயகர் சுப்பிரமணியர் யவர்க்குப் பின்னுமாகத்
  தண்டுசார்த்தி யெழுந்தருளி வருகிற திருப்பூரத் திருநாள் நடத்திவித்துப் பிரமா
  விஷ்ணுக்கள் மனதின் அகங்காரங்கள் கீழ்ப்பட மேலிட்ட தழற்பிழம்பான
  சோதிலிங்கத்தைத் தியானித்துவந்த கணங்கள் எல்லாம் அந்தத் தழல்
  வடிவுபெற்றுச் சோதிலிங்கத்திலொத்த வளவை பொருந்திய தீபோற்சவத்தை
  விளங்க நடத்தினான் -எ-று. (6-22)

  மார்கழியா திரைநாளின் முனிவ ரெல்லாம்
  வந்துதடம் படிந்துபொது வணங்கி வாழ்த்திப்
  பார்தகுமா தொழுதகன்றார் முன்ன மென்று
  பன்னமுனி மன்னவனீர் பயிற்று மிந்தச்
  சீர்தருமா தினமென்னத் தில்லை வாழுந்
  திருவுடையந் தணரெந்தை திருநா ளென்று
  சார்தருமா நவதீர்த்த நீத்தங் கொண்டு
  தஞ்சனமஞ் சனவிழவு தருவித் தார்கள்.
  --------------------------------
  திரளுருவண்ணலென்பது சொக்கப்பனை,
  # திகழ்கணங்களென்பது திருக்கோயினிறையவிட்ட திருவிளக்கு

  இ-ள் திருமார்கழித்திருவாதிரை நக்ஷத்திரத்திலே ரிஷிகளெல்லாரும் வந்து
  சிவகங்கையிலே ஸ்நாநஞ்செய்து சிதம்பரசேவைபண்ணி தோத்திரஞ்செய்து
  பூமியிலே அட்டாங்கமாக நமஸ்கரித்து முத்தராய்ப் போனார்கள் முன்னாளிலே
  என்று வியாக்கிரபாதர்சொல்ல இரணியவன்மச் சக்கரவர்த்தியானவன்
  நீங்களிந்தத் திருநாளைவிதிப்படியே நடத்துங்களென்றுசொல்லத் தில்லைவாழுந்
  திருவுடையந்தணர்கள் யாரும் எம்முடைய தம்பிரானார் திருநக்ஷத்திரம் என்று
  பிரியப்பட்டுக்கொண்டு தந்தமுடைய பாவங்கள் போகவந்து சிவகங்கைபணிந்து
  சிதம்பரக்ஷேத்திரத்திலுண்டான நவதீர்த்தமும் அது நீங்கலாக மற்றுமுண்டாகிய
  எண்ணிறந்த தீர்த்தவெள்ளமெல்லாமுங்கொண்டு அருளின தண்ணளிபோன்ற
  திருமஞ்சனத் திருநாள் நடத்தினார்கள்-எ-று.

  இதில் சிதம்பரத்தில் தீர்த்தங்களுக்குவகை பாம்போடை புலிவாவி நந்தன்
  குட்டம் பாளைமான் சிவகங்கை பந்தன்கேணி தென்புனல்சேர்கொள்ளிடம்
  சீர்மணி முத்தாறு திரைஅலைக்குய்யமிவை முதலாயுள்ளவாம், பயிலுவனவாவி
  யாவுந்தில்லை அம்பலத்தைச்சூழ்த லயன்மாலொக்கும் பூம்புனல்சேர் புண்டரிகப்
  பொய்கைமன்றிற் புனிதன்அருளெனப் புலவர் புகன்றாரென்றே என்பதனாற்
  கண்டுகொள்க. (6-23)

  போனகமால் வரைபோன்மா நிவேர னத்தைப்
  பொருந்தியதைப் பூசத்திற் புணர்வித் தேத்தி
  யீனமிலா முனியரசன் றன்னை நோக்கி
  யிமையவர்க ளனைவரும்வந் தேத்தி வாழ்த்து
  மானியென வருமாண்டி லானி மாதத்
  தருள்விரவுத் திரத்தினம்வந் தணுகிற் றென்னத்
  தேனகுதா ரணிமன்ன னிறைஞ்சி யானித்
  திருநாளிங் கெழவிழவு செய்க வென்றான்.

  இ-ள் சோற்றுமலைபோல மகத்தான நிவேதனமாகிய திருப்பாவாடையைத்
  தைமாதத்திற் பொருந்தின பூசத்திலே விதிப்படி பொருந்த அமுதுசெய்யப்
  பண்ணித் துதித்துக் குறைவற்ற தவத்தையுடைய வியாக்கிரபாதர் இரணிய
  வன்மனைப் பார்த்துத் தேவர்கள் எல்லாரும் பூலோகத்திலே வந்து நமஸ்கரித்துத்
  தோத்திரஞ் செய்யும் ஆனிமாதத்திலே யாயிருக்கும் மாதோகலைவம்
  என்னத்தக்கதாக மற்ற வருஷத்தில் அருள்பொருந்துந் திரு வானியுத்திரம்
  வந்தணித்தான தென்றுசொல்ல வண்டுமகிழும் ஆத்திமாலையையுடைய
  இரணிய வன்மச் சக்கரவர்த்தி வியாக்கிர பாதரை நமஸ்கரித்துவந்து
  ஆனித்திருநாளில் இரதோற்சவமிர்தத் திருப்டைவீட்டுக் கொழிந்தில்லை
  யெனத்தக்கதாக நடத்துங்கள் என்று பிரதான மந்திரிகளோடே
  சொன்னான்.-எ-று (6-24)

  தாரும்பா ருந்தரித்த தடந்தோ ளானுந்
  தாவிலரு முனிவர்களுந் தலைவன் முன்னின்
  றீரொன்பான் முதலான வோரொன் பானா
  ளெந்தைபிரான் றிருவெழுச்சி யின்ப மெய்த
  வாரும்பா ருள்ளோரும் வானுள் ளோரு
  மாலயனு மேலவரு மலங்க ணீங்கி
  யாரும்பா தம்பணிதற் கென்று வாயி
  லிலங்கவிடைக் கொடிவலங்கொண் டேற்று வித்தார்.

  இ-ள். ஆத்திமாலையையும் பூமியையுந்தரித்த புயத்தையுடைய இரணிய வன்மச்
  சக்கரவர்த்தியும் குற்றமில்லாத மகாரிஷிகளும் ஆத்மநாயகரான சிதம்பரநாதர்
  முன்னின்று பதினெட்டு நாள் முதலான ஒன்பதுநாளாகிய இருபத்தேழு நாளும்
  என்னுடைய பிதாவான தம்பிரானார் திருநாள்தொழுது கண்களிகூர வாருங்கள்
  பூமியிலுண்டான மனுஷரும் சுவர்க்கத்திலுண்டான தேவர்களும் பிரமரிஷிகளும்
  உருத்திர மகேசுராதிகளும் உங்கள் பாசங்கள் நீங்கி யெல்லாரும் தம்பிரானார்
  சீர்பாத சேவை பண்ணுதற்கென்று பேரிகை தாடன முதலான
  தேவதாவாகனத்தைப்பண்ணி இடபக்கொடியை பிரதக்ஷணமாகக்
  கொண்டுவந்து ஏற்றுவித்தார்கள் -எ-று. (6-25)

  மண்ணுலகி னுண்ணிறைந்த மைந்தர் மாதர்
  வானவர்க ளரமகளிர் மற்றுள் ளோரு
  மெண்ணரிய மகிழ்ச்சியுடன் றிசைக டோறு
  வெய்துவார்வெய் தகுநோயி ரித்தோ மென்பார்
  கண்ணிறைபொற் கோபுரங்கை தொழுது வீழ்வார்
  கனகமயத் திருவீதி கண்டு வாழ்வா
  ரண்ணல்பொதுப் பணிந்தயர்வார் நடமுன் போற்றி
  யாடுவார் பாடுவா ராயி னார்கள்.

  இ-ள். பூலோகத்தில் ஸ்திரீ புருஷர்களாயுள்ளவர்களும் தேவலோகத்திலுள்ள
  தேவர்களும் தெய்வ ஸ்திரீகளும் மகேசுராதிகளும் எண்ணரிதான பிரியத்
  தோடும் பத்துத் திசையிலும் வந்து பொருந்துவார் சநந வியாதியைத்துறந்தோ
  மென்பார் காட்சிக்கு நிறைந்த பொற்கோபுரங்களைக் கும்பிட்டு நமஸ்கரிப்பார்
  பொன்மயமான திருவீதிகளைக்கண்டு பெருவாழ்வு பெற்றுவாழ்வார் தம்பிரானாரைச்
  சிதம்பரத்தை நமஸ்கரித்துத் தம்மை மறந்துநிற்பார் ஆநந்த நிருத்தத்தைக்
  கண்டுதுதித்து ஆநந்த பரவசரா யாடுவாரும் பாடுவாரு மாயினார்கள்-எ-று.
  (6-26)

  வேறு.

  இப்பெற் றியில்வரு மெத்திக் கினருமி தெம்மிற் றகுவென நம்மிற்றுத்
  துய்ப்பொய்ப் பிறவிக டுய்த்தற் கெனமகிழ் துணிவால் வருபவ ரணிவாழத்
  தப்பற் றுயர்தவ மூவா யிரவர் கடாவா மறையொடு தேவாரக்
  கைப்பற் றியபணி முற்றப் புலிமுனி கழலான் விழவிழு தொழில் செய்வான்.

  இ-ள். இந்தப்பேறுபெறும் எல்லாத்திசையிலுள்ளோரும் இந்தப் பாக்கியம் பசுபாசஞான
  நீங்கினவர்களுக்கல்லவோ கிடைக்குமென்று அகங்காரங்களை நீங்கித் தீரப்புசித்துத்
  தொலைக்க வேண்டின சஞ்சிதாதிகளில் தோற்றம் நஷ்டமிடுதற்கு நிச்சயமென்று
  வருகிறவடியார் நிறைவாழ்வுபெற விச்சின்ன மில்லாத பெரிய தபசுகளை
  யுடையரான மூவாயிரவர் ஒழியாத வைதிக சைவமந்திரங்களுடனே சோடச
  உபசார முதலான பூசைக்கு வேண்டினவைகள் சேர வியாக்கிரபாத மகாரிஷி
  பாதபத்தரான இரணியவன்மன் மாதோற்சவத் துக்குத்தக்க திருநாட்படிகளைச்
  சோடிப்பான் - எ-று. (6-27)

  நண்ணித் தினகரன் முதலோர் கிழமை கொணல்மார் நவமணி யணிமேவப்
  பண்ணிப் பரிகல் முதலா யினபகர் திருவா சிகையரி பயில்பீடம்
  விண்ணிற் றிகழ்தரு மகரத் தொழிலின விரிவெண் குடையிடை கொடியென்றென்
  றண்ணற் குரியன வெண்ணற் கரியன வம்பொற் படிதிரு முன்புய்த்தார்.

  இ-ள். விதிப்படிக்குப்பொருந்த நாயிற்றுக்கிழமைமுதலான ஏழுவாரத்துக்கும்
  மாணிக்கம் முத்துப் பவளம் மரகதம் புட்பராகம் வயிரம் இந்திரநீலம் கோமேதகம்
  வைடூரியம் இந்த இரத்தினம் ஏழு கிழமைக்குமாகவும் எண்ணிறந்த திருவாபரணம்
  அந்தந்த வாரப்படியாகப் பண்ணிப் பரிகல முதலானவனைகளும் சுடர்ததிருவாசிகை
  வட்டப்பூச் சத்திரப்பூ முதலாகச் சொல்லுந் திருவாசிகை களும் வீரசிங்காதனங்களும்
  ஆகாசத்தில் விளங்கும் மகரத்தொழிலையுடைய கொடிவிரிந்த வெண்கொற்றக்குடை
  நடுவே பொருந்துங் கொடிகள் என்றென்று வெகுவிதமாகச் சொல்லப்பட்ட
  பரமசிவத்துக்குரியனவும் எண்ணுதற்கரியனவு மாகிய சத்திரசாமரங்க ளெண்ணிறந்தன
  பொற்படியாகப் பண்ணுவித்துச் சந்நிதியிலே கொண்டுவந்து குவித்தார் -எ-று. (6-28)

  கடமா றெனவு மிழகளி யானையி னணிகதிர்மா மணிநிலை தருதேர்முற்,
  றிடமாய் நடைபெறு வடமால் வரைபுரை சிலதேர் கவரியி னிரைதோரை,
  மிடைவான் முகிறொடு கொடியா டைகள்விட விழியா ரிசைவளர் மொழியார்பொற்,
  படகா திகணட மிடுவா ரொலிகடல் பலவா மெனநனி பயில்வித்தார்.

  இ-ள்.மதங்க ளாற்றுக்கால்போல ஊறிவரு மத்தகசங்களின் நிரைகள் ஒளிபொருந்தின
  திவ்விய ரத்தினங்களினாலே பண்ணப்பட்ட நிலைத்தேர் முன்னே திடமாக நடக்குந்
  தொழிலைப்பெற்ற பெரிய மகாமேருவை ஒப்பான சில தேர்கள் சாமரநிரைகள்-
  பீலிக்குடைகள்-நெருங்கி யுயர்ந்து மேகங்களையளாவினது கிற்பதாகைகள்
  ஆலாலம் போன்ற விழியார் சங்கீதம்பொருந்தி வரும் வார்த்தையுடையவர்கள்
  பொலிவினை யுடைத்தாகிய படகாதி வாத்தியகாரர் நிருத்தமாடுவார்களா
  லுண்டாகப்பட்ட ஆரவாரம் அநேகங் கடல்போல மிகப்பண்ணுவித்தார் -எ-று. (6-29)

  மேவும்பர் கண்மிடை மகுடஞ் சொரிமணி விலகிப் பொலிதிரு வலகிட்டுத்
  தூவண் புனன்மது மலர்வெண் பொரிநனி துதைவித் தெழின்மறு குயர்தெற்றி
  பாவுந் துகில்பொதி யுறவங் கமுதணி பல்கும் பமுநிலை வளர்செம்பொற்
  றீபங் களுமலி தரமங் கலவணி திகழத் திசைதொறு நிகழ்வித்து.

  இ-ள். இரதோற்சவத்துத் திருவீதியில் வந்துபொருந்துந் தேவர்கள் நெருக்கத்தினாலே
  உதிர்ந்த மகுட ரத்தினங்களை யிருமருங்குந் தள்ளி நன்றாகத் திருவலகினாலே
  திருவலகிட்டுச் சுத்தஞ்செய்தியாக சலங்களினாலே இடையறத் தெளித்துப்
  பரிமளபுட்பங்கள் வெண்பொரிகளிவை-களினாலே மிகவு நிறைத்து அழகு
  பொருந்திய திருவீதியி லவரவாவாயில்தோறு மிட்டவுயர்ந்த வேதிகையிற்
  பொருந்தின காவணத்தில் அஸ்தர பரிவேஷிதமாய்ச் சலபூரிதமான
  பலபூரணகும்பங்களும், நிலைபொருந்தின பொற்குத்து விளக்குகளுமதில்
  விளங்குந் தீபங்களும் வளமைதர இப்படிச் சொல்லப்பட்ட மங்கலாத்தமானவை
  யெல்லாமொளி சிறக்க நாலு வீதிகடோறுஞ் செய்வித்து -எ-று. (6-30)

  பொற்பா லிகைமுளை பொலிவித் தளவறு களபப் புதுவிரை மெழுகிச்சீ
  ரிற்பார் மணவணி தரவா யில்கள் கமுகேரார் கதலிகள் சேர்வித்து
  வெற்பா மெனமுகில் வரவா ரணநிரை வெருவா வெதிர்பொரு கரமானக்
  கற்பா வியநெடு நிலைமா ளிகைமணி கட்டா வளர்கொடி விட்டார்கள்.

  இ-ள். பொற்பாலிகைகளிலே யங்குரார்ப்பணம்பண்ணி அளவிறந்த சந்தன
  கஸ்தூரி கர்ப்பூரமிருகம தாதிகளினாலே மெழுகிச்சீர் விளங்கும் இவ்விடங்கள்
  தோறும் கலியாணவொழுங்கு சிறக்க எழுநிலை மாளிகை வாயில்கள்தோறும்
  கமுகும் வாழையும் அழகுபெறநாட்டி மலையென்று சொல்லி மேகம்படியவரப்
  பயப்படாமல் எதிர்ப்பட்டு யானைகளது துதிக்கையினால் தள்ளியும் வீசியும்
  அடித்தும் பிடித்தும் பொருமாறுபோல நவரத்தின வொளிபரந்த நெடுநிலை
  மாளிகைகள் தோறும் நீளிய கொடிகளினாலே மணிகளைக் கட்டிப் பறக்க
  விட்டார்கள் -எ-று. (6-31)

  இடமால் வரைநிரை கணநா தர்களுட னிறையா மெனவெழு நிலைநீடு
  மடமா னவைதொறு மதிமர் சுணநதி மருவா வளர்சடை யினர்பாதத்
  தடைவார் வடகலை தொடர்வார் திருவமு தடுவா ரடுவன வடைவாவைத்
  திடுவா ரரகர விடுவார் வரவர வெண்டா னறவெதிர் கொண்டார்கள்.

  இ-ள். இடமாகிய பெரியகயிலாசத்தி லெழுந்தருளியிருக்கிற ஸ்ரீகண்ட பரமேசுரரும்
  அவரைச் சேவித்திருக்கிற கணநாதர்களும்போல வெழுநிலை யுயர்ந்த வெழுநூறு
  மடங்கள்தோறும் சந்திரன் சர்ப்பம் கங்கை பொருந்தாத நீண்ட சடாதாரிகளும்
  அவர்களை நமஸ்கரிக்கிறவர்களும் ஆகமசாஸ்திரம் படிக்கிறவர்களும் திருவமுது
  சமைக்குமவரும் சமைத்தவமுதைப் பந்திவைத்துப் படைப்பாருமான இவர்கள்
  அரகர வென்றுவரு மெண்ணிறந்த பேர்களை வாருங்களென்று எதிர்கொண்டு
  ற்பார்களாயினார் -எ.று. (6-32)

  விண்ணோர் வனிதையர் மகவான் முனிவர்கள் விரிபா ரிடமிகு கணநாதர்
  மண்ணோ ரெனவுரு வினராய் வழிபட மதமார் கயமுகன் முதனாளோ
  ரெண்ணா ரளவறு கனிபான் முதலிய விசைவித் தவையவன் மிசைவித்துப்
  பண்ணோ டியன்மொழி யவளோ டிறைதரு பரவும் பவனிகள் பயில்வித்தார்.

  இ-ள். தேவமாதர்கள் இந்திரன் ரிஷிகள் பூதங்கள் மிகுந்தகணநாதர்கள்
  இவர்களெல்லாரும் மனுஷ வேடத்தைக் கொண்டு திருநாளில் ஊழியம்பண்ண
  மதமார்ந்த வேழமுக விக்கிநேசுரருக்கு ஒவ்வொன்றெண்ணிறந்த முப்பழம்
  திரட்டுப்பால் பணியாரமுதலான அவலோடுகூட்டி முதல்திருநாளி லமுது
  செய்யப் பண்ணிப் பண்ணுடனே பொருந்தின திருவார்த்தையையுடைய
  சிவகாமசவுந்தரி அம்மையுடன் தேவராசனான தம்பிரானாரெல்லாரும்
  பரவக் காட்சிதந்தருளுந் திருப்பவனிகள் நாள்தோறும் விருஷயாகம்
  துவசாரோகணம் பேரிதாடனம் அங்குரார்ப்பணம் யாகசாலை அஸ்திரயாகம்
  பெரிதான மயாநக் கிரமம் பரிவேடம் நீராசநம் கவுத்துக பந்தனம்
  தீர்த்தசங்கிரகணம் சூரணோற் சவம் தீர்த்தத் துவசாரோகணம் தபனம்
  ஆனவப் பதினாறங்கம் முன்னடந்த வங்கம் நீங்கலான அங்கங்களும் சிறக்க
  ஆயுதபாணியர் குதிரையணியாகவும், அதன்பின் யானையணியாகவும்,
  அதன்பின்பு பசுபதாதிகளாகவும், அவர்பின் தேவர்களான சோடசபத்ததியி
  லுள்ளவர்களாகவும் அவர்பின் கணபதி சுப்பிரமணியராகவும், அவர்பின்
  உருத்திரகணிகையராகவும், அவர்பின் காயகராகவும் அவர்பின் நிருத்தக்காரராகவும்,
  அவர்பின் மத்தளாதி வாத்தியக் காரராகவும், விதிப்படியே யணிவகுத்து இந்த
  அணிக்குப்பின்பாகத் தம்பிரானார் பார்வதி சகிதராக எழுந்தருளவும்
  தம்பிரானாரைச் சூழத் திக்குப்பாலர்களும், ஆயுதமூர்த்திகளும், சேவித்துவரவும்,
  வியாக்கிரபாத பதஞ்சலிமுனி முதலாயுள்ள ரிஷிகள் திருப்புறக்கொடை சேவிக்கவும்,
  தக்க திருநாளை நடத்துவித்தார்- (6-33)

  செழுவான் மதிபுனை பவனா னியில்வரு திருநாள்
  விழவெழு பொழுதாரத்
  தொழுவார் பிறிவரு நிலையா னினைவொரு
  துணிவான் மொழியொரு பொருடோயவற்
  றெழலா லழிவுறு தொழிலால் விழிமழை
  யிசைவா லிருபய னிலதாவுற்
  றழியா தகமலி கசிவா லருளை யடைந்தா
  ரினையர் மிடைந்தார்கள்.

  இ-ள். வளமைநீட்டித்த சந்திரசேகரனான திருவம்பலமுடைய தம்பிரானார்
  ஆனித்திருநாளி லெழுந்தருளப் புறப்பட்ட வவதாரத்திலே அநுபவ சித்தமான
  பரமாநந்தசுகத்தை வெளிப்படக் கண்ணாரக் கண்டுதொழுவார் எண்ணிறந்த
  பேர் இரண்டற்ற நிலையினாலே அந்நியமின்றி யோருணர்வாதலால் வாசனையாற்
  பண்ணுகிற தோத்திரங்களுக்குச் சுட்டில்லாத படியாலே யொரு பொருளிற்
  பொருந்தாமல் தழுதழுத்தலால் பிரதக்ஷிண நமஸ்காராதி கன்மங்களு நழுவுதலால்
  கண்ணீர் மழைத்தாரை கொள்ளுதலால் இதவகிதமில்லாத படியினாலே
  யொன்றைப்பற்றி மயங்காமல் ஞாநாநந்தக் களிப்பினாலே அருளாகக் மானமுத்தாத்து
  மாக்களாநந்தங் கோடிபேர் நெருங்கிச் சேவித்தார்கள்-எ-று. (6-34)

  மன்றா டியதிரு நடரா சனதுயர் மணிமா ளிகைவெளி வளர்வானிற்
  குன்றா விறன்மணி முடிவா னவரணி குழுமா னுடர்திர ளொடுகூடி
  நின்றா லெனவகி னயமே வியவுரு நேசத் தவரவர் பாசத்தே
  சென்றாய் நிழலெழு மொளிமே னியிலென உயருத் திரவிழ வயர்வுற்றார்

  இ-ள். மன்றி லாடியருளிய நிருத்தராசருடைய பெரிய திருமாளிகையின் உள்ளாடு
  வெளியிலே உயர்ந்த சுவர்க்கத்தில் குறையாத வீரத்தன்மையையுடைய மணிமுடிவானவரது
  திரட்சியான மிகுந்த மக்கட் கூட்டத்துடனே கூடி தங்களிடத்துத் தேசோரூபத்திலே
  இவர் ரட்சியாவண்ணம் பிரதிபலிக்க நின்றாற் போலவும் தம்பிரானார் சாத்திக்கழித்த
  சாந்துதரித்த வடிவுடைய பத்தசனங்கள் தந்தம்முடைய பாசத்தினொளி திரண்டு நிழலெழுந்தாற்
  போலவும் நெற்றியிலே விளங்கும் பெரியதிருவானி யுத்திரத் திருநாளை துவசாரோகணத்தை
  யாநந்தமாக நடத்தி முடித்தார்கள்--எ-று. (6-35)

  அருணற் புரவல னெதிரமுற் கதைமுனி யறைவா னொருநிரு தனைவேறற்
  கிரணத் திறல்கரு விருளிற் றரவர விகலா னெனவெறி கயிறாலே
  மரணத் தினையுற வருணற் கதுபழி வழியா யொருகடி வடிவாகிச்
  சரணத் திருகரம் விரவக் களமொடு சந்தித் திடுநெறி பந்தித்து.

  இ-ள். அருள்சிறந்த நல்ல இரணியவன்மச் சக்கரவர்த்திக்கு வியாக்கிர பாதர்
  பூர்வகதையொன்று அநுக்கிரகிப்பார் ஒரு நிசாசரனைவெல்லும்படிக்கு யுத்தஞ்செய்து
  வெல்லுமுபாயங் கற்பிக்க இராத்திரி இருளிலே வருண குருவாகக் கபட வேடத்தைக்கொண்டு
  மாற்றான் வந்தானென்று எறியப்பட்ட பாசத்தினாலே குருக்கள் மரணத்தைப் பொருந்த
  வருணனுக்கு அந்தக்குருநாசமான பிரமகத்திபாமான பழியொரு பிசாசுரூபமாகிக்
  கையையுங் காலையுங் கட்டிக் கழுத்திலேயேறிட்டு முழங்கால்- முழங்கை-தலையெலாங்
  கூட்டி யொன்றோடொன்று சந்திக்கக் குண்டு கட்டாகக் கழலாமற்கட்டி.-எ-று. (6-36)

  காரார் கடலிடை நெடுநா ளிடுமிடர் கடிவா னொருவரின் முடியாதாய்
  நீரா யினபெற லரிதாய் மழைவிழ நினையா தலமர நிலன்வானோர்
  வீரா மடவர லருகா நடமிடு விரகா விரைவிரி தருகொன்றைத்
  தாரா வருணன் துயர்பா தகவிடர் தவிரா யெனநனி தொழுதார்கள்.

  இ-ள். கருமைபொருந்தின நடுக்கடலிலே கட்டுடனே கொண்டுபோயப்போ -
  நெடுநாளாக வருந்துந் துக்கமாகிய இந்தப் பாசத்தை நீக்கும்படி யொருத்தராலு
  முடியாதாகி மழைபெய்தற்கு நினைவுமற்று வருணன் மோகித்துக் கிடக்கத்
  தண்ணீரென்பது கிடையாமல் நிலத்திலுள்ளோரும், வானிலுள்ளோரும், புரமெரித்த
  தீரனே சத்தி இடத்திலே பிரியத்தையுடையவனே கூத்தாடவல்ல சதுரனே மணம்
  விரிந்த கொன்றை மாலையுடையவனே வருணனுடைய மகா பாதகமான துக்கத்தை
  நீக்கி யருளுவாயென்று மிகுதியாகத் துதித்து நமஸ்கரித்து வேண்டிக்கொண்டார்கள் -
  எ-று. (6-37)

  தேசிற் பொலிபொது நிறையற் புதனொலி செறிநற் கடலெதிர் திகழ்வற்றுப்
  பாசத் தளையற வருளச் சலபதி பரவித் தினமிது படிவுற்றோ
  ராசற் றுயர்கதி யடையக் கடவுளு மணுகப் பெறவர மதுபெற்றான்
  மாசித் திருமக மெனமற் றதுதக மலிபொற் கொடியது பொலிவித்தார்.

  இ-ள். எல்லாப் பிரகாசித்தலு மேலான பிரகாசத்தையுடைய சிதம்பரத்திலே பரிபூரணராயிருக்கிற
  அற்புதரான சிதம்பரமூர்த்தி ஆரவாரம்பொருந்தின நல்ல கடலுக்கெதிரே யெழுந்தருளிப் பாசபந்த
  மற்றுப்போம்படி கடாட்சித் தருள வருணனானவன் மிகவுந்துதித்து இந்தநாளிலே யாரொருவ
  ரிந்தந் துறையிலே ஸ்நானஞ் செய்கிறார்களோ அவர்கள் பந்தபாசநீங்கிப் பரமுத்தி பெறவுந்
  தம்பிரானர்வந்து திருக்கண் சாத்தியருளவும் வரம்பெற்றான் அதுமாசித்
  திருமகத்திலேயாயிருக்குமென்று வியாக்கிரபாதர்சொல்ல மாசிமகத் திருநாட்பொருந்த
  விதிப்படியிலே விளங்கக் கொடியேற்றுவித்தார்கள்- (6-38)

  எத்தன் மையினல முய்க்குஞ் சலபதி யிறைசேர்ந் தரவர முறுநாளோர்
  பத்தொன் பதுவிழ வுய்க்கும் படிகளி பயிலுங் கயமுக னயிலுந்தேன்
  மொய்த்தங் கொளிர்கனி யப்பம் பயறவன் முதலா யினபல வுதவாவாழ்
  நித்தம் பொலிவிழ வத்தன் றரமிக நெஞ்சார் கறைவுற நைஞ்சார்கள்.

  இ-ள். எல்லாப் பிரகாசத்திலுஞ் சுகப்பிராப்த்தி பெற்ற வருணன் தம்பிரானார் கடற்கரைக்கு
  எழுந்தருள வரம் பெற்றநாள் இருபதென்ன முன்னே திருநாள் விக்கினம் வராமல் நடப்பதற்கு
  மதம்பொருநதின யானைமுகத்தை யுடைய விக்கிநேசுவரருக்கு அமுதுசெய்யத் தக்கதான தேன்
  பல வன்னங்களையுடைய எண்ணிறந்த பழம் திருப்பணியாரம் பயறு அவல் முதலாயுள்ள
  பதார்த்தங்களை யமுது செய்யப்பண்ணி நித்தியம் பெருவாழ்வு மிக்க திருநாட்பாவனி
  தம்பிரானாரெழுந்தருளி யாவர்க்குங் காட்சி கொடுத்தருளக் கண்டோர் யாவரும் நீராளமாக
  நெஞ்சங்கரைந்து தம்மையிழந்து எண்ணிறந்த பேர்களுருகினார்கள்-எ-று. (6-39)

  கண்ணா யிரமுடை யவன்மா தவன்மலி கமலா லயன்முத லெனலாகும்
  விண்ணா டுடையவர் வடநீ டணிமுலை விடவாள் விழியுடை மடவாரா
  ற்ண்ணா யிரமுனி கணநா தருமறை யிசைநா ரதரணி யெனையோரிம்
  மண்ணாள் பவருட னண்ணா வளர்திரு மன்றா வருள்புரி யென்றார்கள்.

  இ-ள். இந்திரன் விஷ்ணு மிகுந்த கமலாசனன் முதலெண்ணதத்தக்க தேவலோகத்திலுள்ளவர்கள்
  எல்லோரும் கச்சுவிடாத வாபரணம் பொருந்தின முலைகளையும் விடமும் வாளுமொத்த
  விழிகளையுமுடைய தெய்வமாதர்கள் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் கணநாதர்களும்
  வேதங்களிசை பொருந்தின நாரதர் அணிபொருந்தின ஒழிந்த தெய்வரிஷிகள் இந்தப்பூமியில்
  மனுஷருடனே கூடிக்கொண்டு ஞான நேய மிகுந்த சிதம்பரநாதனே எங்களையும் கடாட்சித்தருளென்று
  வேண்டிக் கொண்டார்கள்-எ-று. (6-40)

  புகழும் பவனிக ளகமின் புறுநெறி புனிதன் றரவிழி புனல்கொண்டிட்
  டிகழும் பரகதி யெனவந் தரனதெ ழுச்சிக் கமரர் பழிச்சிக்கைத்
  திகழஞ் சலியொடு மிகுமங் கலவணி செய்வித் தலர்தட மேவிச்சே
  ரகமங் ககறர வமுதந் தருகுழி யாடிக் கடல்வழி சோடித்தார்.

  இ-ள். எல்லாருந் தோத்திரம் பண்ணப்பட்ட திருப்பவனிகள் மனங்களி கூருமாறு அநாதி
  சுத்தராயிருக்கிற சிதம்பரமூர்த்தி தந்தருள்விழி நீர்த்தாரை கொண்டு திருட்டி கோசரமான
  பரமசுகமங்கில்லாத படியினாலே முத்தாத்த மாக்களாலே பரகதியிகழப்படுமென்று
  தேவர்களெல்லா மிங்கேவந்து பரமாநந்த மூர்த்தியுடைய திருவெழுச்சிக்குப் பிரீதராயத்
  தோத்திரஞ்செய்து அஞ்சலியத்தத்துடனே மிகுந்த மங்கலாத்தமான பதார்த்தன்களைக்
  கூட்டித் திருவீதிப் பெருவழியைப் பொருந்தின பாவங்களைப் போக்குகிற அவ்விரதமான
  தீர்த்த சலங்களிலே ஸ்நானம் பண்ணிக் கடலுளெழுந்தருளுகிற வழியை மங்கலமாகக்
  கோடித்தார்கள்-எ-று. (6-41)

  ஆணைத் திரள்கட லடையக் கருமுகி லணியிற் பொலிவுற வரவஞ்சோ
  சேனைத் தொகைநதி யோதத் தினுமிசை திகழப் புயறுயில் பயிறாழைக்
  கானத் தெழுமெழு காலுய்த் தெனவிழு கைதைத் துகள்வனை யெய்தககுத்
  தேனக் கனவன மானப் பொழிமழை சேரும் வகைதரு திருவீதி.

  இ-ள். திருப்பவனி சேவித்து முன்னே சென்ற யானை யணிகடலுக்குள்ளே அநேகந்
  தூரஞ்சென்ற வளவில் கடலிலே படிகிற மேகபந்தியிலும் பெருத்த காட்சியுண்டாக
  ஆர்ப்பரவம் பொருந்தின பதாதி சமுத்திரத்திலே சமுகமாகச் செல்லுவது ஆறுகளெல்லா
  மொருமுகப் படக்கூடி சமுத்திரத்திலே செல்லும் பிரவாகத்திலு மேலிட்டு முழங்கிச்
  செல்ல மேகங்கள் நித்திரையைப் பயிலுந் தாழைக்காட்டில் நின்று எழுந்தோறும்
  எழுந்தோறுந் தள்ளிப் போடுந் தாழைப்பூவின் நீறானது சுரபுன்னைப் பூங்கொத்திலே
  மேக பரிசத்தினாலே நெகிந்துவிழப் பூமியிலே தேனுடைந்து விழுந்தாற்போலச் சொரியு
  மிதுசத்தியமாகப் பொழிநிற மழையை யொக்க ஆறோடிவந்த சேறாடும் வகுபபைத்
  தருந்திருவீதி - எ-று (6-42)

  கொத்தார் மலரளி குலவும் புள்ளொலி குழுமித் திசைதொறும் விழிமுத்தத்
  தொத்தார் துதிவளர் தொண்டத் திரளொடு சூலப் படைதிசை யடைகாவற்
  பத்தா யுதவுரு வினர்சூழ் படையொடு பயிறூ ரியமிக வுயர்வானோ
  ரித்தா ரணியின ருடனே விரவிமுன் னேவற் கொடுபுடை சேவித்தார்.

  இ-ள். பூங்கொத்துகளில் நிறைந்தவண்டுகளினிசை அந்நிலத்திலுண்டான பக்ஷிகளுடைய
  ஆரவாரத்துடனே கூடின திக்குகடோறும் ஆநந்தக் கண்ணீராகிய முத்துமாலை நிரம்பின
  தோத்திரமிகப்பண்ணு மடியார் கூட்டத்துடனே சிவாஸ்திரமுஞ் சிவாஸ்திரத்தைச் சூழுந்
  தேச திக்கில் காவலாகிய தேசாயுத ரூபிகளுந் தம்பிரானாரைச் சூழ்ந்து புறக்காவலாக
  வருந் தொண்ணூற்றெட்டு ஆயுதங்களையுந் தரித்த எண்ணிறந்த சேனையுடனே
  பொருந்தினவநேசகோடி வாத்திய மிகமுழங்க மேலான சுவர்க்கத்திலுள்ள தேவர்களிந்தப்
  பூமியிலுள்ள மனுஷருடனே கலந்து அநாதியிலே தங்களுக்குக் காவல்கற்பித்த முறைமையிலே
  அந்தந்தத் தானங்களைக் கைக்கொண்டு சேவித்து வந்தார்கள். (6-43)

  வருமா தெரிபவ ரெனவான் மிசையெழ வளரா வளைதலை யினவாய்முத்
  தருமா மணிதிமி னுரைவாழ் சலசர மலையா வரைபுரை திரைமோதிப்
  பொருமா மிகவிரை தருமா கடலிடை புளினத் தலைதகு வெளியுற்றுத்
  திருமா லறிவரு பெருமா னணைவகை திகழுஞ் சலபதி யெதிர்கொண்டான்.

  இ-ள். தம்பிரானார் எழுந்தருளிவருகிற பிரதாபத்தை ஆதரத்துடனே கண்டவர்களைப்போல
  ஆகாசமளவாக உயர்ந்து களித்தெழுந்திருந்து வணங்கின தலையையுடையதாகி முத்துக்கள்
  அரிய மகத்தான நவரத்தினங்கள் மரக் கலங்கள் நுரை தன்னிடத்தில் வாழுமகரமச்ச
  முதலானவைகளை யலைத்துத் தள்ளிப்போட்டு மலைகளையொத்த திரைகளினாலே
  கரையை மோதிப் பொருமாறுபோல மிகவு மார்ப்பரவத்தைத் தருகிற கடற்கரையில்
  மணற்குன்றின் மேலுண்டான வெளியளவாகச் சென்றேறி விட்டுணுவினால் தவப்பலத்திலு
  மறிவரிய தம்பிரானாரெழுந்தருளுகிற சவுபாக்கியத்தின் விரிவைப் பாசநீங்கி விளங்கும்
  வருணராசனெதிர்கொண்டான்- எ-று. (6-44)

  கட்டங் கியவொளி தெளியச் சலபதி காணும் பொழுதிடை யடைதுன்பக்
  கட்டங் கறவருள் சரணங் களிலலை கரமின் புறவிழு மழுவும்பொற்
  கட்டங் கமுமுடை யவன்முன் பொலிமலி கடன்மண் டியவவர் களுமாயைக்
  கட்டங் கழிவுற மிகுமன் பிறையொடு கற்றா வெனவருள் பெற்றார்கள்.

  இ-ள். தன்னிடத்திலே தியானரூபமாயிருக்கிற பிரகாசந் திருட்டிகோசரமாகத் திருமேனிகொண்
  டெழுந்தருளக்கண்ட வவதரத்திலே வருணன் அந்தராயத்திலே பொருந்தின திரைக்கரங்கள்
  முன்னாக ஆநந்தத்துடனே நமஸ்கரிக்க குருத்துரோக பாசபந்தத்தை நீக்கியருளிய
  திருவம்பலமுடைய தம்பிரானார் ஸ்ரீபாதத்திலே மழுவுந்தேசிட்டமான கட்டங்கமு
  மாயுதமுமாவுடைய தம்பிரானார் சந்நிதியிலே யாரவாரமிகுத்த சமுத்திராஸ்நானம்
  பண்ணின பத்தசனங்களும் மாயாபாசபந்த மவ்விடத்திலே யற்றுப் போகிறதிறத்தைப்
  பொருந்தத் தங்களிடத்தில் தம்பிரானார் வைத்தருளிய மிகுந்த காருண்ணிய மெங்ஙனமெனில்
  புனிற்றீற்றுப் பசுப்போலவுந் தாங்களிளங்கன்று போலவும் மிகுந்த திருவருளைப்பெற்றார்கள்
  - எ.று. (6-45)

  குரையார் கடல்குட கரைமே லொளிவளர் குணபா லுளவள னெடுநீளத்
  திரையார் கரமலி கலனா நவமணி திரண்மா நிதியகி றுகில்சீரை
  நரையார் கவரிகள் விரையார் தருமத நற்பூ நிறைபுனல் கர்ப்பூரம்
  வரையார் மதகரி நிறையா திகளொடு வாழ்பொற் றிருவடி சூழ்விப்ப.

  இ-ள். ஆரவாரம் அதிகரித்த கடல்மேற் கரையின்மேல் பிரகாச மிகுந்த கீழ்க்கரையிலுள்ள
  வளமையுடனே மிகவு நீண்ட திரைக் கரங்களினாலே படகு முதல் சொங்கீறான
  எண்ணிறந்த மரக்கலம் அங்குண்டான நவரத்தினங்கள் விலையில்லாத பட்டு
  வத்திரங்கள் அகில் சீனத்திலுண்டான அபூர்வ வஸ்துக்கள் வெண் சாமரங்கள் மணவிய
  சவ்வாது முதலானவைகள் குங்குமப்பூ பனி நீர்ச்செம்புகள் கர்ப்பூரவகை
  மலைகளிலுயர்ந்திருக்கிற மத்தகசங்கள் முதலான பின்னும் எண்ணிறந்த வகைகளெடுத்துக்
  கொண்டுவந்து எல்லார்க்கும் வாழ்வு கொடுத்தருளும் செங்கமலப் பொற்பாதத்திலே
  காணிக்கையிட்டான். (6-46)

  பாசத்தளையறுதுறையுற்றிமையவர்படியிற்படிபவருடனாடிப்
  பூசற்றொழில்புரிதிரைநற்பொலிவுயர்புளினத்தலைதகுவெளியுற்றுத்
  தேசத்தவரொலிகடலிற்பொலியொலிசின்னத்தொலியிசைமன்னச்சீர்
  வாசப்பொழிலிடையாறிக்கணவர்கள்வானோரொடுகழிவழிவந்தார்

  இ-ள் பாசமறுத்தான் துறையிலே யெழுந்தருளித் தேவர்கள் பூமியிற் பொருந்தின
  மனிதரிவர்களுடனே திருமஞ்சனஞ் செய்தருளி இருந்து இந்தத் தேசத்தில் மானிடராக
  ஒன்றுக்கொன்று மாறிப் பொருந்தொழிலைச் செய்யுந் திரைகள் மிக விளங்கியோங்கு
  மணறச்குன்றின்மேல் நல்ல வெளியிலே யெழுந்தருளி இருந்து இந்தத் தேசத்தில்
  மனுஷாவாக்கிலெழு மகாவோசை சமுத்திரத்தில் மிகுந்த ஓசை திருச்சின்னங்களினோசை
  மகரந்தங்களைப் பொருந்த இலக்குமிகரமான மணவிய பூங்காவின் நடுநிழலிலே அரக்கர்
  கணநாதர்கள் தேவர்கள் சேவித்துவரக் கழிகள் பொருந்தும் வழியளவாக
  வெழுந்தருளினார்-எ-று (6-47)

  அன்றன்றலைகடல்வளனங்களவிலபடிகொண்டடியிணைதொழு தன்பா,
  லின்றென்றிடவரமென்றும்பெறவரமிறைதாவெனவிரைவுடனெய்தி,
  மின்றங்கியகழறுதிகொண்டருளொடுவிரவுஞ்சலபதிவிடைகொண்டான்,
  புன்றண்கதிர்மதிபுனையும்பரன்மிகு பொன்னம் பலமதனுள்புக்கான்.

  இ-ள் அந்தத்திவசத்தில் சமுத்திர பாரிசத்தில் பூர்வபதார்த்தங்களள விறந்தன கொண்டுவந்து
  கழிக்கரையிலே தம்பிரானார் சீர்பாதத்திலே காணிக்கையாகவிட்டு நமஸ்கரித்துத்
  தேவரீருடைய கிருபையானாலே யினி மேல்வருகிற மாசிமகத்துத் திருநக்ஷத்திரங்கள்தோறும்
  இந்தமாசிமக நக்ஷத்திரத்தைப்போல அடியார்களு மியானுமிந்தச் சவுபாக்கியத்தைப்
  பெறத்தக்கதாகச் சுவாமியே திருவுளம்பற்றி யருளவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்து
  வேண்டிக்கொண்ட வரமுமுடனே பெற்றுச் சுத்தபிரகாசம்பொருந்தின ஸ்ரீபாதங்களைத்
  துதித்து நமஸ்கரித்துத் தம்பிரானார் அருளினாலே சேவித்துவந்த வருணன் மீண்டுபோனான்
  குளிர்ந்த பாலசந்திரனை-யணிந்தருளும் ஞானத்துக்குமேலான நேயமாக சிதம்பரேசுரனார்
  பாசாதீதமான ஞானமயமாகிய சிதம்பரத்தில் எழுந்தருளினார்-எ-று (6-48)

  என்றென்றிகழ்வறுமாதந்தருதினம்யாவும்புகழ்விழவெழவாழ்வுற்
  றொன்றும்புலிமுனியுரகந்தருதவனொளிருங்கனகமதுருவாகி
  முன்றங்கியபுரவலனங்கிகள்வளர்மூவாயிரவர்கடேவாரு
  மன்றங்கியவிருமன்றந்தொழுதுவரந்தான்விரவவிருந்தார்கள்.

  இ-ள் இந்த வகையிலே குற்றமற்ற மாதங்களிலுந் தினங்களிலும் யாவரும் புகழ்கின்ற திருவிழா
  முதலியவற்றை நடத்தி மனப்பிரியத்துடனே வாழ்வு பொருந்தும் வியாக்கிரபாத முனியும்
  பதஞ்சலி மகாரிஷியும் பிரகாசமான கனகவடிவாகி முன்னே பொருந்தின இரணியவன்மச்
  சக்கரவர்த்தியும் முத்தீவளர்க்கும் மூவாயிரவர்களும் திவ்வியமான சிதம்பரேசுரர் பொருந்தின
  கனகசபையை நமஸ்கரித்து நன்மை பொருந்த விருந்தார்கள் -எ-று (6-49)

  ஈரா றுயிருடன் மூவா றமரு மெழுத்துப் புகன்முதல் வரியென்றுந்
  தாரா தரமென வுலகோர் பலகலை தருமா விரணிய வருமாமுற்
  சீரார் தரவரு திருநாள் படிமுதல் சிலநாள் வழிசெல்வ மிகநவியக்
  கூரார் படையின னருளா லரசர்கள் கொண்டா டிடுநெறி கண்டார்கள்.

  இ-ள் அகரமுதல் ஔகார மீறான பன்னிரண்டுயிரும் ககரமுதல் னகரமீறான பதினெடட்டு
  மெய்யுமெனச் சொல்லுகின்ற முதலெழுத்துகள் முப்பதுமே காரணமாக எக்காலமும்
  கைம்மாறு வேண்டாது பயன்தருமேகத்தையொப்பாக உலகத்திலுள்ளவர்களுக்கு
  ஆதாரமாகிப் பலவகைப்பட்ட கலைகளுமுண்டானது போல ஆதியில் இரணியவன்மச்
  சக்கிரவர்த்தியால் நித்தியநைமித்திய முதலியவை சிறப்புப்பெறச் சிலநாள் நடந்துவரப்
  பிற்காலத்தில் கூர்மையுள்ள மழுப்படை தாங்கிய நடேசர் திருவருளால் சோழராசர்கள்
  திருவருட்செல்வம்பெருகுமாறு அவற்றைவிசேஷமாக யாவருங்கொண்டாடும்படி
  நடத்திவந்தனர்கள் - எ-று. (6-50)

  சொற்றா னுமைபொரு ளரனா மிகுபொரு டுணிவா லவரரு டொகுமாலிப்
  பொற்றா மரைமலர் விரைசூழ் புனலணி புலியூர் வளநகர் புகழ்தாமங்
  கற்றா ருரைசெயல் பெற்றார் செவிகொடு கவர்வார் பொருள்விரி பகர்வார்சீ
  ருற்றா ரிருவினை யற்றார் மிகுபரி வுடையார் திருவடி யடைவாரே.

  இ-ள் சொல்உமையாகவும், பொருள் சிவபெருமானாவும், வேதாகமங்கள் நிச்சயித்த
  மிகுந்த பொருட்டுணிவாதலால் அவர்களிரண்டு பேரநுக்கிரகமுமிந்த நூலிற்
  குடிகொண்டிருத்தலாற் கனக தாமரை மலரினது பரிமளஞ்சூழும் தீர்த்தங்கள்
  பொருந்திய பெரும்பற்றப் புலியூரென்னும் வளப்பத்தையுடைய திருப்படை
  வீட்டைப்புகழும் பாமாலையைக் கற்றாரும் பாடஞ்சொல்லுஞ் செயலைப் பெற்றாரும்
  செவிகொண்டு கேட்பாரும் இப்பொருள் விரிவைச் சொல்வாரும் செல்வத்தைப்பெறுவார்
  பாவ புண்ணிய வாதனையினின்றும் நீங்குவார் பரமசிவனிடத்தில் மிகுந்த பத்தியுடையவராவார்
  திருவடியை யடைவார். (6-51)
  ---------
  மிகுபரியுடையார் என்பதற்கு ஆன்மாக்களிடத்தில் அளவில்லாத கருணையுடையவராகிய
  நடேசரெனினுமமையும்.

  செடிசேர் பொழிலணி புலியூர் வளநகர் செல்வம் பெருகுக திருமன்றிற்
  கொடிசேர் விடையின னடிசே ரொளிதெளி குறிகூ டுக்குழு மறைசூழ்க
  பொடிசேர் வடிவின ரடிசேர் முடியினர் புனல்சே ரிருவிழி யினராகி
  யடிசேர் பவரடி முடிசூ டிடுநெறி யாள்வா னடியவர் வாழ்வாரே.

  இ-ள். சிறுசண்பகமுதலிய விருட்சங்கள் தங்கிய பொழில்சூழ்ந்த புலியூர் என்னும்
  பெருமைபொருந்திய சிவக்ஷேத்திரம் அருட்செல்வத்துடன் ஓங்குக சிற்சபையில்
  இடபக்கொடியையுடைய நடேசரது ஸ்ரீபாதங்களை யடைதற் கேதுவான சிவஞானத்தைத்
  தெளிகின்ற சைவசமயமார்க்கம் உலகமெங்கும் பரவுக. திரண்ட வைதிக மார்க்கந்தழைக.
  நீறணிந்தருளும் திருமேனியையுடையவராய்ச் சிற்சபாமத்தியி லாநந்த நிருத்தஞ்செய்யும்
  நீலகண்ட பரமேசுவரரால் திருவடி தீக்ஷை பெற்றவர்களாகிய ஜீவன்முத்தர்களும்
  ஆநந்தபாஷ்பா தாரைதாரையாய்ப்பொழியும் விழியினராகித் திருவடிசேர்பவர் பாதங்களைச்
  சிரசிற்சூடிடும் நெறியாள்வானுக்குரிய மற்றை அடியவர்களும் வாழ்வாராக. (6-52)

  மழைவ ழங்குக மன்னவ னோங்குக
  பிழையில் பல்வள னெல்லாம் பிறங்குக
  தழைக வஞ்செழுத் தோசை தரையெலாம்
  பழைய வைதிக சைவம் பரக்கவே. (6-53)

  திருச்சிற்றம்பலம்.
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  திருவிழாச்சருக்கம் முற்றிற்று.
  ஆக சருக்கம் -6- இதில்- திருவிருத்தம்-415
  கோயிற்புராணம் முற்றிற்று.