MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    11. திருத்தெள்ளேணம்
    (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

    திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
    உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
    ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
    திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 235

    திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
    கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
    அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும்
    திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 236

    அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
    தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
    உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம்
    சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 237

    அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
    பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
    நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
    சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 238

    அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்
    உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்
    கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த
    திருவந்த வாபாடிக் தெள்ளேணங் கொட்டாமோ. 239

    அரையாடு நாகம் அசைத்தபின் அவனியின்மேல்
    வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்
    உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
    திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 240

    ஆவா அரிஅயன்இந்திரன் வானோர்க் கரியசிவன்
    வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித்தாண்டுகொண்டான்
    பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே
    தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 241

    கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்
    அறம்பாவ மென்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
    மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத்
    திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 242

    கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால்
    பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி
    மின்னோர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்
    தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 243

    கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
    புனவே யனவளைத் தோளியோடும் புகுந்தருளி
    நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்
    சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 244

    கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே
    அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியினமேல்
    மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய
    செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 245

    முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட
    அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு
    பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி
    தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 246

    பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்
    ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
    நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்
    சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 247

    மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே
    நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன்
    பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவாகத்தால்
    சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 248

    உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
    பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை
    மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியாம்
    திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 249

    புத்தன் பரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும்
    பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த
    அத்தன் அணிதில்லை அம்பலவண் அருட்கழல்கள்
    சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. 250

    உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
    சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும்
    கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும்
    செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 251

    வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும்
    தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு
    ஊன்கெட் டுயிர்கெட்டுணவுகெட்டென் உள்ளமும்போய்
    நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 252

    விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து
    மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்
    கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித்
    தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 253

    குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள்
    நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்
    அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
    சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 254

    திருச்சிற்றம்பலம்