MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம்
    (தில்லையில் அருளியது -
    எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

    மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப்
    புலனைந்தின் வழியடைத் தமுதே
    ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி
    உள்ளவா காணவந்தருளாய்
    தேறலின் தெளிவே சிவபெருமானே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
    இன்பமே என்னுடை அன்பே. 388

    அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
    ஆனந்த மாய்க் கசிந்துருக
    என்பாம் அல்லா இன்னருள் தந்தாய்
    யானிதற் கிலனொர்கைம்மாறு
    முன்புமாய்ப் பின்னும் முழுதுமாய்ப்
    பரந்த முத்தனே முடிவிலா முதலே
    தென்பெருந்துறையாய் சிவபெருமானே
    சீருடைச் சிவபுரத்தரைசே. 389

    அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
    அப்பனே ஆவியோ டாக்கை
    புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப்
    பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே
    திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே
    யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390

    உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்
    உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
    இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
    எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே
    திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக்
    குறுகினேற் கினியென்ன குறையே. 391

    குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
    ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
    மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தேன்
    மனத்திடை மின்னிய மன்னே
    சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும்
    திருப்பெருந்துறையுறை சிவனே
    இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
    இனியுன்னை யென்னிரக் கேனே. 392

    இரந்திரந் துருக என்மனத் துள்ளே
    ஏகின்ற சோதியே இமையோர்
    சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
    திருப்பெருந்துறையுறை சிவனே
    நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால்
    ஆயவை அல்லையாய் ஆங்கே
    கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
    கண்ணுறங் கண்டுகொண்டின்றே. 393

    இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக்
    தெழுகின்ற ஞாயிறே போன்று
    நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
    நீயலால் பிறிது மற்றின்மை
    சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்
    திருப்பெருந்துறையுறை சிவனே
    ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை
    யாருன்னை அறியகிற்பாரே. 394

    பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
    பரந்ததோர் படரொளிப் பரப்பே
    நீருறு தீயே நினைவதேல் அரிய
    நின்மலா நின்னருள் வெள்ளச்
    சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    ஆருற வெனக்கிய காரய லுள்ளார்
    ஆனந்தம் ஆக்குமென் சோதி. 395

    சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
    ஒருவனே சொல்லுதற் கரிய
    ஆதியே நடுவே அந்தமே பந்தம்
    அறுக்கும் ஆனந்தமா கடலே
    தீதிலா நன்மைத் திருவருட்குன்றே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்
    வந்துநின் இணையடி தந்தே. 396

    தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்
    சங்கரா ஆர்கொலோ சதுரர்
    அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
    யாதுநீ பெற்றதொன் றென்பால்
    சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
    திருப்பெருந்துறையுறை சிவனே
    எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
    யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. 397

    திருச்சிற்றம்பலம்