26. அதிசியப் பத்து - முத்தி இலக்கணம்
(திருப்பெருந்துறையில் அருளியது -
அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்)
வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திரத்திடை நைவேனை
ஒப்பிலாதான உவமணி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து
அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 428
நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏதமே பிறந்திறந்துழல்வேன் என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற
ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 429
முன்னை என்னுடை வல்வினை போயிடமுக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதியதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 430
பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம்இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே
செத்துப் போய்அருநரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 431
பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்றுகுடிகெடு கின்றேனை
இரவு நின்றெறி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 432
எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே
நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடுநல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 433
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 434
நீக்கி முன்னென்னைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 435
உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல்
பற்றலாவ தோர் நிலையிலாப் பரம்பொருள் அகப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்த்திடும் பித்தர்சொல் தெளியாமே
அந்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 436
இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடிலிதுவித்தைப்
பொருளெனக்களித் தருநரகத்திடை விழப்புகுகின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே. 437
திருச்சிற்றம்பலம்