MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    29. அருட்பத்து - மகாமாயா சுத்தி
    (திருப்பெருந்துறையில் அருளியது -
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

    சோதியே சுடரே சூழொளி விளக்கே
    சுரிசூழற் பணைமுலை மடந்தை
    பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய்
    பங்கயத் தயனுமா லறியா
    நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
    நிறைமலர்க் குருந்தமே வியசீர்
    ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என் றரு ளாயே. 458

    நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
    கண்ணனே விண்ணுளோர் பிரானே
    ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி
    உலகெலாந் தேடியுந் காணேன்
    திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே. 459

    எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா
    ஏலவார் குழலிமார் இருவர்
    தங்கள் நாயகனே தக்கநற்காமன்
    தனதுடல் தழலெழ விழித்த
    செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றருளாயே. 460

    கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்
    கண்ணனும் நண்ணுதற்கரிய
    விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
    வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
    திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே. 461

    துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
    துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
    பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு
    பொங்கொளி தங்குமார் பின்னே
    செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே. 462

    துப்பனே தூயாய் தூயவெண்ணீறு
    துதைந்தெழு துளங்கொளி வயிரத்
    தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
    உறுசுவை துளிக்கும் ஆரமுதே
    செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே. 463

    மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
    மேலவர் புரங்கள் மூன்றெரித்த
    கையனே காலாற் காலனைத் காய்ந்த
    கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
    செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே. 464

    முத்தனே முதல்வா முக்கணா முனிவா
    மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
    பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
    பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
    சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே. 465

    மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
    மறுமையோ டிம்மையுங் கெடுத்த
    பொருளணே புனிதா பொங்குவா ளரவங்
    கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
    தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே. 466

    திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
    டென்னுடை யெம்பிரான் என்றென்
    றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
    அலைகடல் அதனுளே நின்று
    பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
    போதராய் என்றளு ளாயே. 467

    திருச்சிற்றம்பலம்