3. 006 திருக்கொள்ளம்பூதூர்
ஈரடிமேல் வைப்பு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
56 கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 01
57. கோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 02
58. குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 03
59. குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர்த்
தவள நீறணி தலைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 04
60. கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 05
61. ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 06
62. ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 07
63. குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 08
64. பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 09
65. நீர கக்கழனிக் கொள்ளம் பூதூர்த்
தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 10
66. கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய்
என்றும் வானவ ரோடிருப்பாரே. 11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வில்வவனேசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
இது ஓடக்காரனில்லாமல் அவ்வோடம் ஆற்றிற்சென்று
கரைசேரும்படி அருளிச்செய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்