MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு
    (தில்லையில் அருளியது - கட்டளைக் கலித்துறை)

    பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்
    ஒருவரை ஒன்றுமில்லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித்
    தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
    ஒருவரை யன்றி உருவறியா தென்றன் உள்ளமதே. 526

    சதுரை மறந்தறி மால்கொள்வார் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
    கதிரை மறைத்தனன் சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
    குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
    மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே. 527

    நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்
    பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
    ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார்
    பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ லேசென்று பேணுமினே. 528

    செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு
    இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம் எக் காலத்துள்ளும்
    அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
    எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே. 529

    காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய
    ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
    ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு
    மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே. 530

    ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத்
    தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன்
    வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான்
    பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே. 531

    மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
    போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்
    காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ்
    சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே. 532

    அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக்
    கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப்
    பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே
    முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. 533

    விரவிய தீவினை மேலைப் பிறப்புழுந் நீர்கடக்கப்
    பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்
    புரவியின் மேல்வரப் புத்திக் கொளப் பட்ட பூங்கொடியார்
    மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே. 534

    கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும் வென்றிருந்தழகால்
    வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும் ஓர் மீனவன்பால்
    ஏற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே
    தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே. 535

    திருச்சிற்றம்பலம்