MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    3.71 திருவைகாவூர் - திருவிராகம்
    பண் - சாதாரி
    திருச்சிற்றம்பலம்

    759 கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால்
    ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந்
    தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
    வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே. 3.71.1
    760. அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்
    விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
    புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
    வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே. 3.71.2
    761. ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்
    ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
    ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார்
    வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே. 3.71.3
    762. இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந்
    தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
    முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
    மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே. 3.71.4
    763. வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
    ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
    மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
    மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே. 3.71.5
    764. நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்
    செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம்
    அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய்
    மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே. 3.71.6
    765. நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற்
    தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
    நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர
    வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே. 3.71.7
    766. கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
    ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங்
    கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
    வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே. 3.71.8
    767. அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
    எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ்
    சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
    வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே. 3.71.9
    768. ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
    பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந்
    தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
    வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே. 3.71.10
    769. முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச்
    செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய்
    உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப்
    பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே. 3.71.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வில்லவனேசர், தேவியார் - வளைக்கைவல்லியம்மை.

    திருச்சிற்றம்பலம்