MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    3.78 திருவேதிகுடி - திருவிராகம்
    பண் - சாதாரி
    திருச்சிற்றம்பலம்

    835 நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்
    ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந்
    தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
    வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே. 3.78.1
    836. சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
    மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
    துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
    வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே. 3.78.2
    837. போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
    வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
    சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
    வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே. 3.78.3
    838. காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
    தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
    பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
    வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே. 3.78.4
    839. சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்
    தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
    கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
    மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே. 3.78.5
    840. செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
    தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
    வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
    வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே. 3.78.6
    841. உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
    துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
    கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
    மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே. 3.78.7
    842. உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
    அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
    முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
    விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே. 3.78.8
    843. பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்
    தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
    பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
    மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே. 3.78.9
    844. வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
    தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
    அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
    வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே. 3.78.10
    845. கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
    பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
    சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
    அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே. 3.78.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.

    திருச்சிற்றம்பலம்