42. சென்னிப்பத்து - சிவவிளைவு
(திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்)
தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான்
தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே. 579
அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மேயச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே. 580
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே. 581
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 582
மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான்
வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 583
சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுந் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 584
பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 585
புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் துய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 586
வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான்
அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 587
முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தனைச்
சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணியினோ
சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 588
திருச்சிற்றம்பலம்
1.20 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - நட்டபாடை
206 தடநில வியமலை நிறுவியொர்
தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை
கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன்
விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர்
மறையவர் நிறைதிரு மிழலையே. 1.20.1
207 தரையொடு திவிதல நலிதரு
தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு
திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி
பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு
பெறுதிடர் வளர்திரு மிழலையே. 1.20.2
208 மலைமகள் தனையிகழ் வதுசெய்த
மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம்
அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர்
களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதில்புடை தழுவிய
திகழ்பொழில் வளர்திரு மிழலையே. 1.20.3
209 மருவலர் புரமெரி யினின்மடி
தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு
கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட
விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி
மலிதர வளர்திரு மிழலையே. 1.20.4
210 அணிபெறு வடமர நிழலினி
லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு
மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில
மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக
ரறுபத முரல்திரு மிழலையே. 1.20.5
211 வசையறு வலிவன சரவுரு
வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி
வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு
மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி
பொழின்மலி தருதிரு மிழலையே. 1.20.6
212 நலமலி தருமறை மொழியொடு
நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன்
மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர்
கெடவுதை செய்தவர னுறைபதி
()திலகமி தெனவுல குகள்புகழ்
தருபொழி லணிதிரு மிழலையே.
() திலதமிதென என்றும் பாடம். 1.20.7
213 அரனுறை தருகயி லையைநிலை
குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல்
நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர்
வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு
சிவனுறை பதிதிரு மிழலையே. 1.20.8
214 அயனொடும் எழிலமர் மலர்மகள்
மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர்
படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய
வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது
தவழ்தர வுயர்திரு மிழலையே. 1.20.9
215 இகழுரு வொடுபறி தலைகொடு
மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன
லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர்
செறிவொடு திகழ்திரு மிழலையே. 1.20.10
216 சினமலி கரியுரி செய்தசிவ
னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை
தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின்
மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர
இருநில னிடையினி தமர்வரே. 1.20.11
திருச்சிற்றம்பலம்