MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    3.107 திருநாரையூர்
    பண் - பழம்பஞ்சுரம்
    திருச்சிற்றம்பலம்

    1145 கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
    உடலிடை யிற்பொடிப் பூசவல்லான் உமையோ டொருபாகன்
    அடலிடை யிற்சிலை தாங்கியெய்த அம்மான் அடியார்மேல்
    நடலைவி னைத்தொகை தீர்த்துகந் தானிடம் நாரையூர்தானே. 3.107.1
    1146. விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றை
    பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமான் எரியாடி
    நண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்
    றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே. 3.107.2
    1147. தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையான் இழைதோன்றும்
    பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதி
    நாடொரு காலமுஞ் சேரநின்ற திருநாரை யூரானைப்
    பாடுமின் நீர்பழி போகும்வண்ணம் பயிலும் உயர்வாமே. 3.107.3
    1148. வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்
    பெண்ணில மர்ந்தொரு கூறதாய பெருமான் அருளார்ந்த
    அண்ணல்மன் னியுறை கோயிலாகும் அணிநாரை யூர்தன்னை
    நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே. 3.107.4
    1149. வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
    ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி
    நானம ரும்பொரு ளாகிநின்றான் திருநாரை யூரெந்தை
    கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே. 3.107.5
    1150. கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
    அக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாக
    நக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவிப்
    புக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே. 3.107.6
    1151. ஊழியும் இன்பமுங் காலமாகி உயருந் தவமாகி
    ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
    நாழிகை யும்பல ஞாயிறாகி நளிர்நாரை யூர்தன்னில்
    வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே. 3.107.7
    1152. கூசமி லாதரக் கன்வரையைக் குலுங்க எடுத்தான்றோள்
    நாசம தாகி இறஅடர்த்த விரலான் கரவாதார்
    பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோன் இடம்போலுந்
    தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே. 3.107.8
    1153. பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்
    ஆமள வுந்திரிந் தேத்திக்காண்டல் அறிதற் கரியானூர்
    பாமரு வுங்குணத் தோர்கள்ஈண்டிப் பலவும் பணிசெய்யுந்
    தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே. 3.107.9
    1154. வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை
    உற்றரை யோர்கள் உரைக்குஞ்சொல்லை உணரா தெழுமின்கள்
    குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் தொழிலாரப்
    பெற்றர வாட்டி வரும்பெருமான் திருநாரை யூர்சேர்வே. 3.107.10
    1155. பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்
    சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை யூரான்மேற்
    பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாக
    வாடிய சிந்தையி னார்க்குநீங்கும் அவலக் கடல்தானே. 3.107.11

    திருச்சிற்றம்பலம்