Kamba Ramayanam ayothya kandam Part 2
கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்
7. குகப் படலம் 8. வனம் புகு படலம் 9. சித்திரகூடப் படலம் 10. பள்ளிபடைப் படலம் 11. ஆறு செல் படலம் 12. கங்கை காண் படலம் 13. திருவடி சூட்டு படலம் அயோத்தியா காண்டம்
7. குகப் படலம்
குகனின் அறிமுகம்
ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,
காயும் வில்லினன், கல் திரள் தோளினான். 1
துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர்-
அடியன், அல் செறிந்தன்ன நிறத்தினான்,
நெடிய தானை நெருங்கலின், நீர் முகில்
இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான். 2
கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை
பம்பை பம்பு படையினன், பல்லவத்து
அம்பன், அம்பிக்கு நாதன், அழி கவுள்
தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான். 3
காழம் இட்ட குறங்கினன், கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான், அரை
தாழ விட்ட செந் தோலன், தயங்குறச்
சூழ விட்ட தொடு புலி வாலினான். 4
பல் தொடுத்தன்ன பல் சூழ் கவடியன்,
கல் தொடுத்தன்ன போலும் கழலினான்,
அல் தொடுத்தன்ன குஞ்சியன், ஆளியின்
நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான். 5
பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். 6
கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன்,
நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன்,
பிச்சாரம் அன்ன பேச்சினன், இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான். 7
ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை இல் முகத்தினான்,
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,
கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான். 8
சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்,
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன், -
இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான். 9
இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல்
சுற்றம் அப் புறம் நிற்க, சுடு கணை
வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து,
அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன்,
நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான். 10
குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்
கூவா முன்னம், இளையோன் குறுகி, நீ
ஆவான் யார்? என, அன்பின் இறைஞ்சினான்;
தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன் என்றான். 11
குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல்
நிற்றி ஈண்டு என்று, புக்கு நெடியவன் - தொழுது, தம்பி,
கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன் என்றான். 12
இராமனைக் கண்டு வணங்கி குகன் தன் கையுறைப் பொருளை ஏற்க வேண்டுதல்
அண்ணலும் விரும்பி, என்பால் அழைத்தி நீ அவனை என்ன,
பண்ணவன், வருக என்ன, பரிவினன் விரைவில் புக்கான்;
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்; இருண்ட குஞ்சி
மண் உறப் பணிந்து, மேனி வளைத்து, வாய் புதைத்து நின்றான். 13
இராமன் இருக்கச் சொல்ல, குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்? என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்: 14
குகனது அன்பை இராமன் பாராட்டுதல்
அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ? என்றான். 15
விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல்
சிங்க ஏறு அனைய வீரன், பின்னரும் செப்புவான், யாம்
இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப்
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து, இனிது உன் ஊரில்
தங்கி, நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான். 16
குகனது வேண்டுகோள்
கார் குலாம் நிறத்தான் கூற, காதலன் உணர்த்துவான், இப்
பார் குலாம் செல்வ! நின்னை, இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான், இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய! செய்குவென் அடிமை என்றான். 17
குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல்
கோதை வில் குரிசில், அன்னான் கூறிய கொள்கை கேட்டான்;
சீதையை நோக்கி, தம்பி திருமுகம் நோக்கி, தீராக்
காதலன் ஆகும் என்று, கருணையின் மலர்ந்த கண்ணன்,
யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு, எம்மொடு என்றான். 18
அடிதொழுது உவகை தூண்ட அழைத்தனன், ஆழி அன்ன
துடியுடைச் சேனை வெள்ளம், பள்ளியைச் சுற்ற ஏவி,
வடி சிலை பிடித்து, வாளும் வீக்கி, வாய் அம்பு பற்றி,
இடியுடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான். 19
இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல்
திரு நகர் தீர்ந்த வண்ணம், மானவ! தெரித்தி என்ன,
பருவரல் தம்பி கூற, பரிந்தவன் பையுள் எய்தி,
இரு கண் நீர் அருவி சோர, குகனும் ஆண்டு இருந்தான், என்னே!
பெரு நிலக் கிழத்தி நோற்றும், பெற்றிலள் போலும் என்னா. 20
கதிரவன் மறைதல்
விரி இருட் பகையை ஓட்டி, திசைகளை வென்று, மேல் நின்று,
ஒரு தனித் திகிரி உந்தி, உயர் புகழ் நிறுவி, நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து, அருள்புரிந்து வீந்த
செரு வலி வீரன் என்னச் செங் கதிர்ச் செல்வன் சென்றான். 21
இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல்
மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி, வைகல்,
வேலைவாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்; வரி வில் ஏந்திக்
காலைவாய் அளவும், தம்பி இமைப்பிலன், காத்து நின்றான். 22
இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுது கண்ணீர் வழிய நிற்றல்
தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான். 23
கதிரவன் தோன்றலும் தாமரை மலர்தலும்
துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும்
மறக்குமா நினையல் அம்மா!- வரம்பு இல தோற்றும் மாக்கள்
இறக்குமாறு இது என்பான்போல் முன்னை நாள் இறந்தான், பின் நாள்,
பிறக்குமாறு இது என்பான்போல் பிறந்தனன்-பிறவா வெய்யோன். 24
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும்
வெஞ் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த; வேறு ஓர்
அஞ்சன நாயிறு அன்ன ஐயனை நோக்கி, செய்ய
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே. 25
குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல்
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி, நாமத்
தோள் முதற்கு அமைந்த வில்லான், மறையவர் தொடரப் போனான்,
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி, ஐய!
கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின் என்றான். 26
இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல்
ஏவிய மொழிகேளா, இழி புனல் பொழி கண்ணான்,
ஆவியும் உலைகின்றான், அடி இணை பிரிகல்லான்,
காவியின் மலர், காயா, கடல், மழை, அனையானைத்
தேவியொடு அடி தாழா, சிந்தனை உரை செய்வான்: 27
பொய்ம் முறை இலரால்; எம் புகல் இடம் வனமேயால்;
கொய்ம் முறை உறு தாராய்! குறைவிலெம்; வலியேமால்;
செய்ம் முறை குற்றேவல் செய்குதும்; அடியோமை
இம் முறை உறவு என்னா இனிது இரு நெடிது, எம் ஊர்; 28
தேன் உள; திணை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக்
கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?
நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்; 29
தோல் உள, துகில்போலும்; சுவை உள; தொடர் மஞ்சம்
போல் உள பரண்; வைகும் புரை உள; கடிது ஓடும்
கால் உள; சிலை பூணும் கை உள; கலி வானின்-
மேல் உள பொருளேனும், விரைவொடு கொணர்வேமால்; 30
ஐ-இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர், ஆணை
செய்குநர், சிலை வேடர்-தேவரின் வலியாரால்;
உய்குதும் அடியேம்-எம் குடிலிடை, ஒரு நாள், நீ
வைகுதி எனின் - மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான். 31
மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல்
அண்ணலும் அது கேளா, அகம் நிறை அருள் மிக்கான்,
வெண் நிற நகைசெய்தான்; வீர! நின்னுழை யாம் அப்
புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடு உற்று
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான். 32
குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்
சிந்தனை உணர்கிற்பான் சென்றனன், விரைவோடும்;
தந்தனன் நெடு நாவாய்; தாமரை நயனத்தான்
அந்தணர்தமை எல்லாம், அருளுதிர் விடை என்னா,
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா. 33
விடு, நனி கடிது என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34
பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட;
தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா! 35
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை,
காந்து இன மணி மின்ன, கடி கமழ் கமலத்தின்
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால்,
ஏந்தினள்; ஒரு தானே ஏற்றினள்; இனிது அப்பால். 36
இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்
அத் திசை உற்று, ஐயன், அன்பனை முகம் நோக்கி,
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன,
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா,
உத்தம! அடி நாயேன், ஓதுவது உளது என்றான். 37
நெறி, இடு நெறி வல்லேன்; நேடினென், வழுவாமல்,
நறியன கனி காயும், நறவு, இவை தர வல்லேன்;
உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடி வரை உம்மைப்
பிறிகிலென், உடன் ஏகப் பெறுகுவென் எனின் நாயேன்; 38
தீயன வகை யாவும் திசை திசை செல நூறி,
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்;
மேயின பொருள் நாடித் தருகுவென்; வினை முற்றும்
ஏயின செய வல்லேன்; இருளினும் நெறி செல்வேன்; 39
கல்லுவென் மலை; மேலும் கவலையின் முதல் யாவும்;
செல்லுவென் நெறி தூரம்; செறி புனல் தர வல்லேன்;
வில் இனம் உளென்; ஒன்றும் வெருவலென்; இருபோதும்-
மல்லினும் உயர் தோளாய்!- மலர் அடி பிரியேனால்; 40
திரு உளம் எனின், மற்று என் சேனையும் உடனே கொண்டு,
ஒருவலென் ஒரு போதும் உறைகுவென்; உளர் ஆனார்
மருவலர் எனின், முன்னே மாள்குவென்; வசை இல்லேன்;
பொரு அரு மணி மார்பா! போதுவென், உடன் என்றான். 41
குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்
அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;
என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன். 42
துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை, மன்னும் பிரிவு உளது என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 43
படர் உற உளன், உம்பி, கான் உறை பகல் எல்லாம்;
இடர் உறு பகை யா? போய், யான் என உரியாய் நீ;
சுடர் உறு வடி வேலாய்! சொல் முறை கடவேன் யான்;
வட திசை வரும் அந் நாள், நின்னுழை வருகின்றேன். 44
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன், உம்பி;
இங்கு உள கிளை காவற்கு யார் உளர்? உரைசெய்யாய்;
உன் கிளை எனது அன்றோ? உறு துயர் உறல் ஆமோ?
என் கிளை இது கா, என் ஏவலின் இனிது என்றான். 45
குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும்
பணி மொழி கடவாதான், பருவரல் இகவாதான்,
பிணி உடையவன் என்னும் பிரிவினன், விடைகொண்டான்;
அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும்
திணி மரம், நிறை கானில் சேணுறு நெறி சென்றார். 46
மிகைப் பாடல்கள்
நின்றான் நெஞ்சில் நிரம்புறும் அன்பால்,
இன்றே நின் பணி செய்திட, இறைவா!
நன்றே வந்தனென்; நாய் அடியேன் யான்
என்றே கூவினன்-எயிரினரின் இறையோன். 10-1
வெயில் விரி கனகக் குன்றத்து எழில் கெட விலகு சோதிக்
கயில் விரி வயிரப் பைம் பூண் கடுந் திறல் மடங்கல் அன்னான்
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும், அவளை, நாமே
எயிலுடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக! என்றான். 22-1
மறக் கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும், அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி,
துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி
இறுக்கும்நாள், எந்தை பாதம் எய்துவல் என்னப் போனாள். 22-2
மற்றவள் இறைஞ்சி ஏக, மா மலர்த் தவிசின் நீங்காப்
பொற்றொடி யோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி,
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி, இரு கண் நீர் அருவி சோர,
உற்ற ஓவியம் அது என்ன, ஒரு சிலை அதனின் நின்றான். 22-3
அயோத்தியா காண்டம்
8. வனம் புகு படலம்
இராமன், சிதை இலக்குவனுடன் காட்டு வழியில் பயணித்தல்
பூரியர் புணர் மாதர் பொது மனம் என, மன்னும்
ஈரமும், உளது, இல் என்று அறிவு அருள் இளவேனில்,
ஆரியன் வரலோடும், அமுது அளவிய சீதக்
கார் உறு குறி மானக் காட்டியது, அவண் எங்கும். 1
வெயில், இள நிலவேபோல், விரி கதிர் இடை வீச,
பயில் மரம் நிழல் ஈன, பனி புரை துளி மேகப்
புயல் தர, இள மென் கால் பூ அளவியது எய்த,
மயிலினம் நடம் ஆடும் வழி இனியன போனார். 2
வழியில் உள்ள இனிய காட்சிகளை இராமன் சீதைக்குக் காட்டுதல்
மன்றலின் மலி கோதாய்! மயில் இயல் மட மானே!-
இன் துயில் வதி கோபத்து இனம் விரிவன எங்கும்,
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள், குல மாலைப்
பொன் திணி மணி மானப் பொலிவன-பல-காணாய்! 3
பாண், இள மிஞிறு ஆக, படு மழை பணை ஆக,
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல்,
பூணியல்! நின சாயல் பொலிவது பல கண்ணின்
காணிய எனல் ஆகும், களி மயில்-இவை காணாய்! 4
சேந்து ஒளி விரி செவ் வாய்ப் பைங் கிளி, செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக் கோதுவ,-கவின் ஆரும்
மாந் தளிர் நறு மேனி மங்கை!-நின் மணி முன் கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின; இவை காணாய்! 5
நெய்ஞ் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றிக்
கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய்!- கருதின இனம் என்றே
மெய்ஞ் ஞிறை விரி சாயல் கண்டு, நின் விழி கண்டு,
மஞ்ஞையும் மட மானும் வருவன பல-காணாய்! 6
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும்
மா அலர் சொரி சூழல், துயில் எழு மயில் ஒன்றின்
தூவியின் மணம் நாற, துணை பிரி பெடை, தான் அச்
சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் காணாய்! 7
அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே!-
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம்
பொருந்தின களி வண்டின் பொலிவன, பொன் ஊதும்
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன;-இயல் காணாய்! 8
ஏந்து இள முலையாளே! எழுத அரு எழிலாளே!
காந்தளின் முகை கண்ணின் கண்டு, ஒரு களி மஞ்ஞை,
பாந்தள் இது என உன்னிக் கவ்விய படி பாரா,
தேம் தளவுகள் செய்யும் சிறு குறுநகை-காணாய்! 9
குன்று உறை வய மாவின் குருளையும், இருள் சிந்திப்
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும்,
அன்றில பிரிவு ஒல்லா; அண்டர்தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும் களியன பல-காணாய்! 10
அகில் புனை குழல் மாதே! அணி இழை எனல் ஆகும்
நகு மலர் நிறை மாலைக் கொம்புகள், நதிதோறும்
துகில் புரை திரை நீரில் தோய்வன, துறை ஆடும்
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல-காணாய்! 11
முற்றுறு முகை கிண்டி, முரல்கில சில தும்பி,
வில் திரு நுதல் மாதே! அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறு மலர் ஏறித் துயில்வன, சுடர் மின்னும்
பொன் தகடு உறு நீலம் புரைவன பல-காணாய்! 12
கூடிய நறை வாயில் கொண்டன, விழி கொள்ளா
மூடிய களி மன்ன, முடுகின நெறி காணா,
ஆடிய, சிறை மா வண்டு, அந்தரின், இசை முன்னம்
பாடிய பெடை கண்ணா வருவன பல-காணாய்! 13
கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன,
பொன் அணி நிற வேங்கை கோங்குகள், புது மென் பூ,
அன்ன மென் நடையாய்! நின் அளக நல் நுதல் அப்பும்
சின்ன மென் மலர் மானச் சிந்துவ பல-காணாய்! 14
மணம் கிளர் மலர், வாச மாருதம் வர வீச,
கணம் கிளர்தரு சுண்ணம், கல்லிடையன, கானத்து;
அணங்கினும் இனியாய்! உன் அணி வட முலை முன்றில்
சுணங்கினம் அவை மானத் துறுவன-அவை காணாய்! 15
அடி இணை பொறைகல்லா என்றுகொல், அதர் எங்கும்,
இடை இடை மலர் சிந்தும் இன மரம்?-இவை காணாய்!
கொடியினொடு இள வாசக் கொம்புகள், குயிலே! உன்
துடி புரை இடை நாணித் துவள்வன-அவை காணாய்! 16
வாள் புரை விழியாய்! உன் மலர் அடி அணி மானத்
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு-இவை காணாய்!
கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை-காணாய்!
தோள் புரை இள வேயின் தொகுதிகள்-அவை காணாய்! 17
பூ நனை சினை துன்றி, புள் இடை இடை பம்பி,
நால் நிற நளிர் வல்லிக் கொடி நவை இல பல்கி,
மான் இனம், மயில் மாலை, குயில் இனம், வதி கானம்-
தீ நிகர் தொழில் ஆடைத் திரை பொருவன-பாராய்! 18
இராமன் சீதைக்கு சித்திரகூட மலையை காட்டுதல்
என்று, நல் மடவாளோடு இனிதினின் விளையாடி,
பொன் திணி திரள் தோளான்; போயினன் நெறி; போதும்
சென்றது குடபால்; அத் திரு மலை இது அன்றோ?
என்றனன்; வினை வென்றோர் மேவு இடம் எனலோடும், 19
இராமனை எதிர்கொள்ள பரத்துவாச முனிவர் வருதல்
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன், நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான்,
பரத்துவன் எனும் நாமப் பர முனி, பவ நோயின்
மருத்துவன் அனையானை, வரவு எதிர்கொள வந்தான். 20
பரத்துவாச முனிவரின் பண்புகள்
குடையினன்; நிமிர் கோலன்; குண்டிகையினன்; மூரிச்
சடையினன்; உரி மானின் சருமன்; நல் மர நாரின்
உடையினன்; மயிர் நாலும் உருவினன்; நெறி பேணும்
நடையினன்; மறை நாலும் நடம் நவில் தரு நாவான்; 21
செந் தழல் புரி செல்வன்; திசைமுக முனி செவ்வே
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும்
அந்தணன்; உலகு ஏழும் அமை எனின், அமரேசன்
உந்தியின் உதவாமே, உதவிடு தொழில் வல்லான். 22
முனிவர் இராமன் வந்த காரணத்தை வினவுதல்
அம் முனி வரலோடும், அழகனும், அலர் தூவி
மும் முறை தொழுதான்; அம் முதல்வனும், எதிர்புல்லி,
இம் முறை உருவோ நான் காண்குவது? என உள்ளம்
விம்மினன்; இழி கண்ணீர் விழி வழி உக நின்றான். 23
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை; அது தீர,
புகல் இடம் எமது ஆகும் புரையிடை, இது நாளில்,
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என்-
இகல் அடு சிலை வீர!- இளையவனொடும்? என்றான். 24
இராமன் நடந்தது உரைக்க, முனிவரின் வருத்தம்
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான்;
நல் தவ முனி, அந்தோ! விதி தரு நவை! என்பான்,
இற்றது செயல் உண்டோ இனி? என, இடர் கொண்டான்,
பெற்றிலள் தவம், அந்தோ! பெரு நிலமகள் என்றான். 25
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும்
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா,
ஒப்பு அறும் மகன் உன்னை, உயர் வனம் உற ஏகு என்று,
எப் பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன்? என்றான். 26
முனிவரின் ஆசிரமத்துள் மூவரும் செல்லுதல்
அல்லலும் உள; இன்பம் அணுகலும் உள அன்றோ?
நல்லவும் உள; செய்யும் நவைகளும் உள; அந்தோ!
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா,
புல்லினன், உடனே கொண்டு, இனிது உறை புரை புக்கான். 27
முனிவரின் விருந்தோம்பல்
புக்கு, உறைவிடம் நல்கி, பூசனை முறை பேணி,
தக்கன கனி காயும் தந்து, உரைதரும் அன்பால்
தொக்க நல்முறை கூறி, தூயவன் உயிர்போலும்
மக்களின் அருள் உற்றான்; மைந்தரும் மகிழ்வு உற்றார். 28
இராமனை தம்முடன் தங்கியிருக்க முனிவர் வேண்டுதல்
வைகினர் கதிர் நாறும் அளவையின் மறையோனும்,
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான்,
செய்தனன் இனிது எல்லாம்; செல்வனை முகம் முன்னா,
கொய் குல மலர் மார்ப! கூறுவது உளது என்றான்; 29
நிறையும், நீர், மலர், நெடுங் கனி, கிழங்கு, காய் கிடந்த;
குறையும் தீயவை; தூயவை குறைவு இல; எம்மோடு
உறையும் இவ் வழி, ஒருங்கினில் உயர் தவம் முயல்வார்க்கு
இறையும், ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது; இன்னும், 30
கங்கையாளொடு கரியவள், நாமகள், கலந்த
சங்கம் ஆதலின், பிரியலென்; தாமரைச் செங்கண்
அம் கண் நாயக! அயனுக்கும், அரும் பெறல் தீர்த்தம்;
எங்கள் போலியர் தரத்தது அன்று; இருத்திர் ஈண்டு என்றான். 31
தங்க இயலாமை குறித்து இராமன் கூறுதல்
பூண்ட மா தவன், அம் மொழி விரும்பினன் புகல,
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு; நெடு நாள்,
மாண்ட சிந்தைய! இவ் வழி வைகுவென் என்றால்,
ஈண்ட யாவரும் நெருங்குவர் என்றனன் இராமன். 32
இராமனுக்கு முனிவரின் அறிவுரை
ஆவது உள்ளதே; ஐய! கேள்; ஐ-இரண்டு அமைந்த
காவதப் பொழிற்கு அப் புறம் கழிந்தபின், காண்டி;
மேவு காதலின் வைகுதிர்-விண்ணினும் இனிதால்;
தேவர் கைதொழும் சித்திர கூடம் என்று உளதே. 33
மூவரும் முனிவரிடம் விடைபெற்று யமுனைக் கரை அடைதல்
என்று காதலின் ஏயினன்; அடி தொழுது ஏத்தி,
கொன்றை வேய்ங் குழல் கோவலர் முல்லை, அம் குடுமி
சென்று செங் கதிர்ச் செல்வனும் நடு உற, சிறு மான்
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார். 34
மூவரும் யமுனையில் நீராடி உணவு உண்ணுதல்
ஆறு கண்டனர்; அகம் மகிழ்ந்து இறைஞ்சினர்; அறிந்து,
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார்;
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு, நீர் உண்டார்;
ஏறி ஏகுவது எங்ஙனம்? என்றலும், இளையோன், 35
தெப்பம் அமைத்து இலக்குவன் இருவரையும் அக்கரை சேர்த்தல்
வாங்கு வேய்ங் கழை துணித்தனன்; மாணையின் கொடியால்,
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து, அதன் உம்பரின், உலம்போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினான், அந்த நெடு நதி, இரு கையால் நீந்தி. 36
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான்
மாலை மால் வரைத் தோள் எனும் மந்தரம் திரிய,
காலை வேலையைக் கடந்தது, கழிந்த நீர் கடிதின்;
மேலை வேலையில் பாய்ந்தது, மீண்ட நீர் வெள்ளம். 37
மூவரும் பாலை நிலத்தை அடைதல்
அனையர், அப் புனல் ஏறினர்; அக் கரை அணைந்தார்;
புனையும் வற்கலைப் பொற்பினர் நெடு நெறி போனார்;
சினையும் மூலமும் முகடும் வெந்து, இரு நிலம் தீய்ந்து,
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடுஞ் சுரம் நேர்ந்தார். 38
இராமன் நினைவால் பாலை மாறிக் குளிர்தல்
நீங்கல் ஆற்றலள் சனகி என்று, அண்ணலும் நினைந்தான்;
ஓங்கு வெய்யவன், உடுபதி எனக் கதிர் உகுத்தான்;
தாங்கு வெங் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த;
பாங்கு வெங் கனல்; பங்கய வனங்களாய்ப் பரந்த; 39
வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள்,
பறித்து வித்திய மலர் எனக் குளிர்ந்தன; பசைந்த;
இறுத்து எறிந்தன வல்லிகள் இளந் தளிர் ஈன்ற;
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உகக் களித்த; 40
குழுமி மேகங்கள் குமுறின, குளிர் துளி கொணர்ந்த;
முழு வில் வேடரும், முனிவரின் முனிகிலர், உயிரை;
தழுவி நின்றன, பசி இல, பகை இல, தணிந்த,
உழுவையின் முலை மான் இளங் கன்றுகள் உண்ட; 41
கல் அளைக் கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு,
அல்லல் உற்றில, அலை புனல் கிடந்தன அனைய;
வல்லை உற்ற வேய், புற்றொடும் எரிவன, மணி வாழ்
புல் எயிற்று இளங் கன்னியர் தோள் எனப் பொலிந்த; 42
படர்ந்து எழுந்த புல், பசு நிறக் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன; கேகயம் தோகைகள் கிளர,
மடந்தைமார் என, நாடகம் வயிந்தொறும் நவின்ற;
தொடர்ந்து பாணரின் பாங்கு இசை முரன்றன தும்பி; 43
காலம் இன்றியும் கனிந்தன கனி; நெடுங் கந்தம்,
மூலம் இன்றியும் முகிழ்த்தன, நிலன் உற முழுதும்;
கோல மங்கையர் ஒத்தன, கொம்பர்கள்;-இன்பச்
சீலம் அன்றியும், செய் தவம் வேறும் ஒன்று உளதோ? 44
எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த;
வயின் வயின்தொறும், மணி நிறக் கோபங்கள் மலர்ந்த;
பயில் மரம்தொறும், பரிந்தன பேடையைப் பயிலும்
குயில் இரங்கின; குரங்கின; குருந்தம் நின்று அரும்பின முருந்தம். 45
பந்த ஞாட்புறு பாசறை, பொருள்வயின், பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத் தழுவினர், பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது-அக் கழலோர்
வந்த போது, அவர் மனம் எனக் குளிர்ந்தது-அவ் வனமே! 46
சித்திரகூட மலையை மூவரும் காணுதல்
வெளிறு நீங்கிய பாலையை மெல்லெனப் போனார்,
குளிறும் வான் மதிக் குழவி, தன் சூல் வயிற்று ஒளிப்ப,
பிளிறு மேகத்தைப் பிடி எனப் பெரும் பனைத் தடக் கை
களிறு நீட்டும் அச் சித்திர கூடத்தைக் கண்டார். 47
அயோத்தியா காண்டம்
9. சித்திரகூடப் படலம்
இராமன் சித்திரகூட மலையின் அழகை சீதைக்குக் காட்டி மகிழ்தல்
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து, ஒரு நெறி நின்ற
அனகன், அம் கனன், ஆயிரம் பெயருடை அமலன்,
சனகன் மா மடமயிற்கு அந்தச் சந்தனம் செறிந்த
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுறக் காட்டும். 1
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே!
தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல்,
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமஞ் சூல்
காளமேகமும் நாகமும் தெரிகில-காணாய்! 2
குருதி வாள் எனச் செவ் அரி பரந்த கண் குயிலே!
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை,
சுருதிபோல் தெளி மரகதக் கொழுஞ் சுடர் சுற்ற,
பருதி வானவன் பசும் பரி புரைவன-பாராய்! 3
வடம் கொள் பூண் முலை மட மயிலே! மதக் கதமா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமைதொறும் தொடக்கி,
தடங்கள் தோறும் நின்று ஆடுவ, தண்டலை அயோத்தி
நுடங்கு மாளிகைத் துகிற்கொடி நிகர்ப்பன-நோக்காய்! 4
உவரிவாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே!
துவரின் நீள் மணித் தடம்தொறும் இடம்தொறும் துவன்றி,
கவரி மால் நிற வால் புடை பெயர்வன, கடிதின்
பவள மால் வரை அருவியைப் பொருவிய-பாராய்! 5
சலம் தலைக்கொண்ட சீயத்தால், தனி மதக் கத மா
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில், மடவார்
புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில்
கலந்த முத்து என, வேழ முத்து இமைப்பன-காணாய்! 6
நீண்ட மால் வரை மதி உற, நெடு முடி நிவந்த
தூண்டு மா மணிச் சுடர் சடைக் கற்றையின் தோன்ற,
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடைப் பாகன்
காண் தகும் சடைக் கங்கையை நிகர்ப்பன-காணாய்! 7
தொட்ட வார் சுனை, சுடர் ஒளி மணியொடும் தூவி
விட்ட சென்றன, விடா மத மழை அன வேழம்
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன, வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன-பாராய்! 8
இழைந்த நூல் இணை மணிக் குடம் சுமக்கின்றது என்னக்
குழைந்த நுண் இடைக் குவி இள வன முலைக் கொம்பே!
தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப,
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்! 9
உருகு காதலின் தழைகொண்டு மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந் தேனினை முழைநின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை,
பருக, வாயினில், கையின்நின்று அளிப்பது-பாராய்! 10
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்,
களிப்பு இல் இந்தியத்து யோகியைக் கரக்கிலன்; அதுபோல்,
ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத் தெரிகின்ற
பளிக்கு அறைச் சில பரிமுக மாக்களைப்-பாராய்! 11
ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!
கூடுகின்றிலர், கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர், கொழுநரை உருகினர் நோக்கப்
பாடுகின்றன, கின்னர மிதுனங்கள்-பாராய்! 12
வில்லி வாங்கிய சிலை எனப் பொலி நுதல் விளக்கே!
வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம்,
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடுங் கவலை
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன-காணாய். 13
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே!
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி
அருவி நீர்கொடு வீச, தான் அப் புறத்து ஏறி,
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனைக்-காணாய்! 14
வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே!
சீறு வெங் கதிர் செறிந்தன, பேர்கல, திரியா
மாறு இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணிக்கல்-
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது-பாராய்! 15
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே!
நீல வண்டினம் படிந்து எழ, வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள், பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன-காணாய்! 16
வில் கொள் வாள் நுதல், விளங்கு இழை, இளந் தளிர்க் கொழுந்தே!
எல் கொள் மால் வரை உம்பரின், இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்தக்
கற்கள், வானிடை மீன் என வீழ்வன-காணாய்! 17
வரி கொள் ஒண் சிலை வயவர்தம் கணிச்சியின் மறித்த
பரிய கால் அகில் சுட, நிமிர் பசும் புகைப் படலம்,
அரிய வேதியர், ஆகுதிப் புகையொடும் அளவி,
கரிய மால் வரைக் கொழுந்து எனப் படர்வன-காணாய்! 18
நானம், நாள்மலர், நறை, அகில், நாவி, தேன், நாறும்
சோனை வார் குழற் சுமை பொறாது இறும் இடைத் தோகாய்!
வான யாறு மீன் மலர்ந்தன எனப் புனல் வறந்த
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன-காணாய்! 19
மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ,
செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ,
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமலப்
பஞ்சு அளாவிய சீறடிச் சுவடிகள்-பாராய்! 20
சுழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே!
கொழித்த மா மணி அருவியொடு இழிவன, கோலம்
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக நறு மலர்-காணாய்! 21
அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல்
பறை எடுத்து, ஒரு கடுவன் நின்று அடிப்பது-பாராய்!
பிறையை எட்டினள் பிடித்து, இதற்கு இது பிழை என்னா,
கறை துடைக்குறும் பேதை ஓர் கொடிச்சியைக்-காணாய்! 22
அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது
எடுத்து நம்தமக்கு இயம்புவ எனக், கரிந்து இருண்ட
தொடுத்த மாதவிச் சூழலில், சூர் அரமகளிர்
படுத்து வைகிய பல்லவ சயனங்கள்-பாராய்! 23
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேரிழை! நிறை தேன்
வனைந்த வேங்கையில், கோங்கினில், வயிந்தொறும் தொடுத்துக்
குனிந்த ஊசலில், கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி
கனிந்த பாடல் கேட்டு, அசுணமா வருவன-காணாய்! 24
இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்!
அலவும் நுண் துளி அருவி நீர், அரம்பையர் ஆட,
கலவை, சாந்து, செங் குங்குமம், கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன-பாராய்! 25
செம் பொனால் செய்து, குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது எனப் பொலி வன முலைக் கொடியே!
அம் பொன் மால் வரை, அலர் கதிர் உச்சி சென்று அணுகப்
பைம் பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது-பாராய்! 26
மடந்தைமார்களில் திலதமே! மணி நிறத் திணி கல்
தொடர்ந்த பாறையில், வேயினம் சொரி கதிர் முத்தம்
இடம்தொறும் கிடந்து இமைப்பன, எக்கு இளஞ் செக்கர்
படர்ந்த வானிடை, தாரகை நிகர்ப்பன-பாராய்! 27
குழுவு நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெங் கனல் கதுவியது ஒப்பன-பாராய்! 28
வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே!
தொளை கொள் தாழ் தடக் கைந் நெடுந் துருத்தியில் தூக்கி,
அளவு இல் மூப்பினர் அருந் தவர்க்கு, அருவி நீர் கொணர்ந்து,
களப மால் கரி குண்டிகைச் சொரிவன-காணாய்! 29
வடுவின் மா வகிர் இவை எனப் பொலிந்த கண் மயிலே!
இடுகு கண்ணினர், இடர் உறு மூப்பினர் ஏக,
நெடுகு கூனல் வால் நீட்டின, உருகுறு நெஞ்சக்
கடுவன், மா தவர்க்கு அரு நெறி காட்டுவ-காணாய்! 30
பாந்தள், தேர், இவை பழிபடப் பரந்த பேர் அல்குல்!
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயையக்
கூந்தல் மென் மயில் குறுகின நெடுஞ் சிறை கோலி,
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ-காணாய்! 31
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அருங்கலமே!
நலம்பெய் வேதியர் மார்பினுக்கு இயைவுற நாடி,
சிலம்பி, பஞ்சினில், சிக்கு அறத் தெரிந்த நூல், தே மாம்-
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன-பாராய்! 32
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே!
பெரிய மாக் கனி, பலாக் கனி, பிறங்கிய வாழை
அரிய மாக் கனி, கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப,
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன-காணாய்! 33
ஐவனக் குரல், ஏனலின் கதிர், இறுங்கு, அவரை,
மெய் வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி,
பொய் வணக்கிய மா தவர் புரைதொறும் புகுந்து, உன்
கை வணத்த வாய்க் கிள்ளை தந்து அளிப்பன-காணாய்! 34
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன-பாராய்! 35
அசும்பு பாய் வரை அருந் தவம் முடித்தவர், துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு, விண் தருவான்
விசும்பு தூர்ப்பன ஆம் என, வெயில் உக விளங்கும்
பசும்பொன் மானங்கள் போவன வருவன-பாராய்! 36
இராமன் அந்தணரின் விருந்தினனாதல்
இனைய யாவையும் ஏந்திழைக்கு இயம்பினன் காட்டி,
அனைய மால் வரை அருந் தவர் எதிர்வர, வணங்கி,
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான்-
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன். 37
கதிரவன் மறைய மாலைப் பொழுது வருதல்
மா இயல் உதயம் ஆம் துளப வானவன்,
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக
கா இயல் குட வரை, கால நேமிமேல்,
ஏவிய திகிர்போல், இரவி ஏகினான். 38
சக்கரம் தானவன் உடலில் தாக்குற,
எக்கிய சோரியின் பரந்தது, எங்கணும்
செக்கர்; அத் தீயவன் வாயின் தீர்ந்து, வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது, இந்துவே! 39
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரைப்
பூ நனி முகிழ்த்தன, புலரி போன பின்;
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ,
வான் எனும் மணித் தடம், மலர்ந்த எங்குமே! 40
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின;
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின;
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின;
அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான். 41
மூவரும் மலை வழிபாடு செய்தல்
மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில;
மை அறு நறு மலர் மலர்ந்தவாம் சில;
ஐயனோடு, இளவற்கும் அமுதனாளுக்கும்
கைகளும், கண்களும், கமலம் போன்றவே. 42
இலக்குவன் குடில் அமைக்க, இராமனும் சீதையும் குடிபுகல்
மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும்,
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என,
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய
சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான். 43
இலக்குவன் அமைத்த சாலை
நெடுங் கழைக் குறுந் துணி நிறுவி, மேல் நிரைத்து,
ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி, ஊழுற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே. 44
தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து, பின்,
பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்றுறப்
போக்கி, மண் எறிந்து, அவை புனலின் தீற்றியே. 45
வேறு இடம், இயற்றினன் மிதிலை நாடிக்கும்,
கூறின நெறி முறை குயிற்றி, குங்குமச்
சேறு கொண்டு அழகுறத் திருத்தி, திண் சுவர்
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே. 46
மயிலுடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து,
அயிலுடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து,
எயில் இளங் கழைகளால் இயற்றி, ஆறு இடு
செயலுடைப் புது மலர் பொற்பச் சிந்தியே. 47
சீதையோடு இராமன் சாலையில் குடி புகுதல்
இன்னணம் இளையவன் இழைத்த சாலையில்,
பொன் நிறத் திருவொடும் குடி புக்கான் அரோ!-
நல் நெடுந் திசைமுகன் அகத்தும், நம்மனோர்க்கு
உன்ன அரும் உயிருளும், ஒக்க வைகுவான். 48
சாலையில் இராமன் மகிழ்ந்திருத்தல்
மாயம் நீங்கிய சிந்தனை, மா மறை,
தூய பாற்கடல், வைகுந்தம், சொல்லல் ஆம்
ஆய சாலை, அரும் பெறல் அன்பினன்,
நேய நெஞ்சின் விரும்பி, நிரம்பினான். 49
சாலை அமைத்த இலக்குவனை நினைத்து இராமன் நெகிழ்தல்
மேவு கானம், மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன;
தா இல் எம்பி கை சாலை சமைத்தன-
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே? 50
என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, இரு
குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ இது போல்? என்றான்-
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான். 51
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்,
படரும் நல் அறம் பாலித்து, இரவியின்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் என்பது என்?
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான். 52
இலக்குவனின் பதில் உரை
அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும்
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்,
எந்தை! காண்டி, இடரினுக்கு அங்குரம்
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான். 53
இலக்குவனுக்கு இராமன் கூறிய ஆறுதல்
ஆக, செய்தக்கது இல்லை; அறத்தினின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான்
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா. 54
பின்னும், தம்பியை நோக்கி, பெரியவன்,
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு; இதற்கு
என்ன கேடு உண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை
உன்னு, மேல் வரும் ஊதியத்தோடு என்றான். 55
நோன்பு இருந்து இராமன் மகிழ்ந்திருத்தல்
தேற்றித் தம்பியை, தேவரும் கைதொழ,
நோற்று இருந்தனன், நோன் சிலையோன்; இப்பால்,
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர்
கூற்றின் உற்றது கூறலுற்றாம் அரோ. 56
மிகைப் பாடல்கள்
நெய் கொள் நீர் உண்டு, நெருப்பு உண்டு, நீண்டு, மைந் நிறைந்த
வை கொள் வேல் எனக் காலனும் மறுகுறும் கண்ணாய்!
மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய்! 36-1
விடம் கொள் நோக்கி! நின் இடையினை மின் என வெருவி,
படம் கொள் நாகங்கள் முழை புகப் பதைப்பன பாராய்!
மடங்கல் ஆளிகள் எனக் கொடு மழை இனம் முழங்க,
கடம் கொள் கார் மதக் கைம்மலை இரிவன காணாய்! 36-2
எய்த இன்னல் வந்த போது யாவரேனும் யாவையும்
செய்ய வல்லர் என்று கொள்க; சேண் நெறிக்கண் நீங்கிட,
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய; எம்பிதன்
கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே. 50-1
தினைத் துணை வயிறு அலாச் சிற்றெறும்புகள்
வனத்திடைக் கரிகளை வருத்தி வாழ்வன;
அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே;
மனத்து இடர் நீங்கினார் இல்லை, மன்னனே! 55-1
அயோத்தியா காண்டம்
10. பள்ளிபடைப் படலம்
பரதனிடம் தூதுவர் தம் வருகையை தெரிவித்தல்
பொரு இல் தூதுவர் போயினர், பொய் இலார்;
இரவும் நன் பகலும் கடிது ஏகினர்;
பரதன் கோயில் உற்றார், படிகாரிர்! எம்
வரவு சொல்லுதிர் மன்னவற்கே! என்றார். 1
பரதன் தூதுவரிடம் நலம் விசாரித்தல்
தூதர் வந்தனர், உந்தை சொல்லோடு என,
காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான்,
போதுக ஈங்கு என, புக்கு, அவர் கைதொழ,
தீது இலன்கொல் திரு முடியோன் என்றான். 2
தூதுவர் பதிலும், பரதனின் விசாரிப்பும்
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன்;
இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும்
உலைவு இல் செல்வத்தனோ? என, உண்டு என,
தலையின் ஏந்தினன், தாழ் தடக் கைகளே. 3
தூதுவர் திருமுகம் கொடுத்தல்
மற்றும் சுற்றத் துளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்தபின்,
இற்றது ஆகும், எழுது அரு மேனியாய்!
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார். 4
திருமுகம் பெற்ற பரதனின் மகிழ்ச்சி
என்று கூறலும், ஏத்தி இறைஞ்சினான்,
பொன் திணிந்த பொரு இல் தடக் கையால்,
நின்று வாங்கி, உருகிய நெஞ்சினான்
துன்று நாள்மலர்ச் சென்னியில் சூடினான். 5
தூதருக்கு பரதன் பரிசளித்தல்
சூடி, சந்தனம் தோய்த்துடைச் சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன்;
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்குக்
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன். 6
சத்துருக்கனனுடன் பரதன் அயோத்திக்கு புறப்படுதல்
வாள் நிலா நகை தோன்ற, மயிர் புறம்
பூண, வான் உயர் காதலின் பொங்கினான்,
தாள் நிலாம் மலர் தூவினன் - தம்முனைக்
காணலாம் எனும் ஆசை கடாவவே. 7
எழுக சேனை என்று ஏவினன்; எய்தினன்
தொழுது, கேகயர் கோமகன் சொல்லொடும்,
தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்;
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான். 8
பரத சேனையின் எழுச்சி
யானை சுற்றின; தேர் இரைத்து ஈண்டின;
மான வேந்தர் குழுவினர்; வாளுடைத்
தானை சூழ்ந்தன; சங்கம் முரன்றன;
மீன வேலையின் விம்மின, பேரியே. 9
கொடி நெருங்கின; தொங்கல் குழீஇயின;
வடி நெடுங் கண் மடந்தையர் ஊர் மடப்
பிடி துவன்றின; பூண் ஒளி பேர்ந்தன,
இடி துவன்றின மின் என, எங்குமே. 10
பண்டி எங்கும் பரந்தன; பல் இயம்
கொண்டு இயம்பின கொண்டலின்; கோதையில்
வண்டு இயம்பின; வாளியின் வாவுறும்
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே. 11
துளை முகத்தின் சுருதி விளம்பின;
உளை முகத்தின் உம்பரின் ஏகிட,
விளை முகத்தன வேலையின் மீது செல்
வளை முகத்தன வாசியும் வந்தவே. 12
வில்லின் வேதியர், வாள் செறி வித்தகர்,
மல்லின் வல்லர், சுரிகையின் வல்லவர்,
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர்,
தொல்லை வாரணப் பாகரும், சுற்றினார். 13
எறி பகட்டினம், ஆடுகள், ஏற்றை மா,
குறி கொள் கோழி, சிவல், குறும்பூழ், நெடும்
பொறி மயிர்க் கவுதாரிகள், போற்றுறு
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார். 14
நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில்,
பறந்து போதும்கொல் என்று, பதைக்கின்றார்,
பிறந்து, தேவர், உணர்ந்து, பெயர்ந்து முன்
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார். 15
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் எனத்
தான் அளைந்து தழுவின, தண்ணுமை;
தேன் அளைந்து செவி உற வார்த்தென,
வான் அளைந்தது, மாகதர் பாடலே. 16
ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை
வீறு கொண்டன, வேதியர் வாழ்த்து ஒலி;
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை
மாறு கொண்டன, வந்திகர் வாழ்த்து அரோ! 17
பரதன் தன் படையுடன் கோசல நாடு சேர்தல்
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி, ஏழ் பகல் நீந்தி, பின், எந்திரத்து
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான். 18
கோசல நாட்டின் அலங்கோல நிலை
ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோள்
தார் துறந்தன; தண் தலை நெல்லினும்,
நீர் துறந்தன; தாமரை நீத்தெனப்
பார் துறந்தனள், பங்கயச் செல்வியே. 19
பிதிர்ந்து சாறு பெருந் துறை மண்டிடச்
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி;
முதிர்ந்து, கொய்யுநர் இன்மையின், மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன, ஒண் மலர் ஈட்டமே. 20
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என
ஆய்ந்து, மள்ளர் அரிகுநர் இன்மையால்
பாய்ந்த சூதப் பசு நறுந் தேறலால்
சாய்ந்து, ஒசிந்து, முளைத்தன சாலியே. 21
எள் குலா மலர் ஏசிய நாசியர்,
புள் குலா வயல் பூசல் கடைசியர்,
கட்கிலார் களை; காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின், உயங்கினார். 22
ஓதுகின்றில கிள்ளையும்; ஓதியர்
தூது சென்றில, வந்தில, தோழர்பால்;
மோதுகின்றில பேரி, முழா; விழாப்
போதுகின்றில, பொன் அணி வீதியே. 23
பாடல் நீத்தன, பண்தொடர் பாண் குழல்;
ஆடல் நீத்த, அரங்கொடு அகன் புனல்;
சூடல் நீத்தன, சூடிகை; சூளிகை
மாடம் நீத்தன, மங்கல வள்ளையே. 24
நகை இழந்தன, வாள் முகம்; நாறு அகிற்
புகை இழந்தன, மாளிகை; பொங்கு அழல்
சிகை இழந்தன, தீவிகை; தே மலர்த்
தொகை இழந்தன, தோகையர் ஓதியே. 25
அலர்ந்த பைங் கூழ், அகன் குளக் கீழன,
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்,
உலர்ந்த-வன்கண் உலோபர் கடைத்தலைப்
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே. 26
நாவின் நீத்து அரு நல் வளம் துன்னிய,
பூவின் நீத்தென, நாடு, பொலிவு ஒரீஇ,
தேவி நீத்து அருஞ் சேண் நெறி சென்றிட,
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே. 27
நாட்டின் நிலை கண்ட பரதனின் துயரம்
என்ற நாட்டினை நோக்கி, இடர் உழந்து,
ஒன்றும் உற்றது உணர்ந்திலன், உன்னுவான்,
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா
நின்று நின்று, நெடிது உயிர்த்தான் அரோ! 28
பொலிவிழந்த நகரை பரதன் பார்த்தல்
மீண்டும் ஏகி, அம் மெய் எனும் நல் அணி
பூண்ட வேந்தன் திருமுகன், புந்திதான்
தூண்டு தேரினும் முந்துறத் தூண்டுவான்,
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான். 29
பரதன் கொடி இழந்த நகரை காணுதல்
அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய்; அமுது
உண்டு போதி என்று, ஒண் கதிர்ச் செல்வனை,
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன,
கண்டிலன், கொடியின் நெடுங் கானமே. 30
பரதன் கொடை முரசு ஒலி இல்லாத நகரை காணுதல்
ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும்,
வேட்ட, வேட்டவர் கொண்மின், விரைந்து எனக்
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன,
கேட்டிலன், முரசின் கிளர் ஓதையே. 31
பரதன் பரிசிலர் பரிசு பெறாத நகரைக் காணுதல்
கள்ளை, மா, கவர் கண்ணியன் கண்டிலன் -
பிள்ளை மாக் களிறும், பிடி ஈட்டமும்,
வள்ளைமாக்கள், நிதியும், வயிரியர்,
கொள்ளை மாக்களின் கொண்டனர் ஏகவே. 32
அந்தணர் பரிசில் பெறாமை கண்டு பரதன் இரங்குதல்
காவல் மன்னவன் கான்முனை கண்டிலன்-
ஆவும், மாவும், அழி கவுள் வேழமும்,
மேவு காதல் நிதியின் வெறுக்கையும்,
பூவின் வானவர் கொண்டனர் போகவே. 33
இனிய இசை ஒலி இல்லாத அயோத்தி நகர்
சூழ் அமைந்த சுரும்பும், நரம்பும், தம்
ஏழ் அமைந்த இசை இசையாமையால்,
மாழை உண் கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற, பொருநர் குழாங்களே. 34
மக்கள் இயக்கம் இல்லாமையால் பொலிவு இழந்த நகர வீதிகள்
தேரும், மாவும், களிறும், சிவிகையும்,
ஊரும் பண்டியும், ஊருநர் இன்மையால்,
யாரும் இன்றி, எழில் இல; வீதிகள்,
வாரி இன்றிய வாலுக ஆற்றினே. 35
நகரின் நிலை கண்ட பரதனின் கேள்வி
அன்ன தன்மை அக நகர் நோக்கினான்,
பின்னை, அப் பெரியோர் தம் பெருந்தகை,
மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது?
என்ன தன்மை? இளையவனே! என்றான். 36
நகரின் நிலை அழிவைக் குறித்தல்
வேற்று அடங்கலர் ஊர் என மெல்லிதால்;
சூல் தடங் கருங்கார் புரை தோற்றத்தான்
சேல் தடங் கண் திருவொடும் நீங்கிய
பால் தடங் கடல் ஒத்தது, பார் என்றான். 37
சத்துருக்கனனின் உரை
குரு மணிப் பூண் அரசிளங் கோளரி
இரு கை கூப்பி இறைஞ்சினன், எய்தியது
ஒரு வகைத்து அன்று உறு துயர்; ஊழி வாழ்
திரு நகர்த் திரு தீர்ந்தனன் ஆம் என்றான். 38
தயரதன் வாழுமிடத்தை பரதன் அடைதல்
அனைய வேலையில், அக் கடைத் தோரண
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள்
நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான்
தனையனும், தந்தை சார்விடம் மேவியான். 39
பரதன் தந்தையை மாளிகையில் காணாது துயருறுதல்
விருப்பின், எய்தினன், வெந் திறல் வேந்தனை,
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன்;
அருப்பம் அன்று இது என்று, ஐயுறவு எய்தினான்-
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான். 40
கைகேயி பரதனை அழைத்தல்
ஆய காலையில், ஐயனை நாடித் தன்
தூய கையின் தொழல் உறுவான் தனை,
கூயள் அன்னை; குறுகுதிர் ஈண்டு என,
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள். 41
கைகேயியை பரதன் வணங்க அவள் விசாரித்தல்
வந்து, தாயை அடியில் வணங்கலும்,
சிந்தை ஆரத் தழுவினள், தீது இலர்
எந்தை, என்னையர், எங்கையர்? என்றனள்;
அந்தம் இல் குணத்தானும், அது ஆம் என்றான். 42
தந்தை எங்கு உளார் என பரதன் வினாவுதல்
மூண்டு எழு காதலால், முளரித் தாள் தொழ
வேண்டினென், எய்தினென், உள்ளம் விம்முமால்;
ஆண் தகை நெடு முடி அரசர் கோமகன்
யாண்டையான்? பணித்திர் என்று, இரு கை கூப்பினான். 43
கைகேயியின் பதில்
ஆனவன் உரை செய, அழிவு இல் சிந்தையாள்,
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்
தேன் அமர் தெரியலான், தேவர் கைதொழ,
வானகம் எய்தினான்; வருந்தல் நீ என்றாள். 44
தயரதன் இறந்த செய்தி கேட்டு பரதன் மூர்ச்சித்தல்
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும்,
நெறிந்து அலர் குஞ்சியான், நெடிது வீழ்ந்தனன்;
அறிந்திலன்; உயிர்த்திலன்;-அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே. 45
பரதன் கைகேயியை கடிந்துரைத்தல்
வாய் ஒளி மழுங்க, தன் மலர்ந்த தாமரை
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர,
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல்,
நீ அலது உரைசெய நினைப்பார்களோ? என்றான். 46
பரதனின் புலம்பல்
எழுந்தனன்; ஏங்கினன்; இரங்கிப் பின்னரும்
விழுந்தனன்; விம்மினன்; வெய்து உயிர்த்தனன்;
அழிந்தனன்; அரற்றினன்; அரற்றி, இன்னன
மொழிந்தனன், பின்னரும்-முருகன் செவ்வியான். 47
அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறந்தனை ஆம் எனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ ? 48
சினக் குறும்பு எறிந்து, எழு காமத் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும் எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய்! மறந்து,
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்பாலதோ? 49
முதலவன் முதலிய முந்தையோர் பழங்
கதையையும் புதுக்கிய தலைவன்! கண்ணுடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய
புதல்வனை, எங்ஙனம் பிரிந்து போயினாய்? 50
செவ் வழி உருட்டிய திகிரி மன்னவ!-
எவ் வழி மருங்கினும் இரவலாளர் தாம்,
இவ் வழி உலகின் இல்; இன்மை நண்பினோர்
அவ் வழி உலகினும் உளர்கொலோ?-ஐயா! 51
பல் பகல் நிழற்றும் நின் கவிகைப் பாய் நிழல்
நிற்பன பல் உயிர் உணங்க, நீ நெடுங்
கற்பக நறு நிழல் காதலித்தியோ?-
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே! 52
இம்பர் நின்று ஏகினை; இருக்கும் சார்பு இழந்து,
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ?
சம்பரன் அனைய அத் தானைத் தானவர்,
அம்பரத்து இன்னமும் உளர்கொலாம்?-ஐயா! 53
இயம் கெழு தானையர் இறுத்த மாத் திறை,
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி, உம்பரின்,
அயம் கெழு வேள்வியோடு, அமரர்க்கு ஆக்கிய,
வயங்கு எரி வளர்க்கலை, வைக வல்லையோ? 54
ஏழ் உயர் மத களிற்று இறைவ! ஏகினை-
வாழிய கரியவன், வறியன் கை என,
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா
ஆழியை, இனி, அவற்கு அளிக்க எண்ணியோ? 55
பற்று இலை, தவத்தினின் பயந்த மைந்தற்கு
முற்று உலகு அளித்து, அது முறையின் எய்திய
கொற்றவன் முடி மணக் கோலம் காணவும்
பெற்றிலை போலும், நின் பெரிய கண்களால்? 56
பரதன் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளல்
ஆற்றலன், இன்னன பன்னி ஆவலித்து,
ஊற்று உறு கண்ணினன், உருகுவான்; தனைத்
தேற்றினன் ஒரு வகை; சிறிது தேறிய,
கூற்று உறழ் வரி சிலைக் குரிசில் கூறுவான். 57
இராமனை வணங்கிலாலன்றித் துயர் போகாது என பரதன் இயம்பல்
எந்தையும், யாயும், எம் பிரானும், எம் முனும்,
அந்தம் இல் பெருங் குணத்து இராமன்; ஆதலால்,
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்,
சிந்தை வெங் கொடுந் துயர் தீர்கலாது என்றான். 58
கைகேயி இராமன் கானகம் சென்றதைக் கூறல்
அவ் உரை கேட்டலும், அசனிஏறு என,
வெவ் உரை வல்லவள், மீட்டும் கூறுவாள்;
தெவ் அடு சிலையினாய்! தேவி, தம்பி, என்று
இவ் இருவோரொடும் கானத்தான் என்றான். 59
பரதன் துயருறுதல்
வனத்தினன் என்று, அவள் இசைத்த மாற்றத்தை
நினைத்தனன்; இருந்தனன், நெருப்புண்டான் என;
வினைத் திறம் யாது இனி விளைப்பது? இன்னமும்
எனைத்து உள கேட்பன துன்பம், யான்? என்றான். 60
இராமன் வனம் சென்ற காரணத்தை பரதன் வினாவுதல்
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல், அப்
பூங் கழல் காலவன் வனத்துப் போயது,
தீங்கு இழைத்த - அதனினோ? தெய்வம் சீறியோ?
ஓங்கிய விதியினோ? யாதினோ? எனா. 61
தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர் என்றான். 62
கைகேயின் பதில் உரை
குருக்களை இகழ்தலின் அன்று; கூறிய
செருக்கினால் அன்று; ஒரு தெய்வத்தாலும் அன்று;
அருக்கனே அனைய அவ் அரசர் கோமகன்
இருக்கவே, வனத்து அவன் ஏகினான் என்றாள். 63
பரதன் மீண்டும் வினாவுதல்
குற்றம் ஒன்று இல்லையேல், கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல், தெய்வத்தால் அன்றேல்,
பெற்றவன் இருக்கவே, பிள்ளை கான் புக
உற்றது என்? தெரிதர உரைசெய்வீர்? என்றான். 64
கைகேயி தான் பெற்ற வரம் பற்றி கூறல்
வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து என்றான். 65
பரதனின் சீற்றம்
சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே! 66
துடித்தன கபோலங்கள்; சுற்றும் தீச் சுடர்
பொடித்தன மயிர்த் தொளை; புகையும் போர்த்தது;
மடித்தது வாய்; நெடு மழைக் கை, மண் பக
அடித்தன, ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே. 67
பாதங்கள் பெயர்தொறும், பாரும் மேருவும்,
போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு,
மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. 68
அஞ்சினர் வானவர்; அவுணர் அச்சத்தால்
துஞ்சினர் எனைப் பலர்; சொரி மதத் தொளை
எஞ்சின, திசைக் கரி; இரவி மீண்டனன்;
வெஞ் சினக் கூற்றும், தன் விழி புதைத்தே! 69
இராமனுக்கு அஞ்சி பரதன் தன் தாயைக் கொல்லாது விடுதல்
கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன்;
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான்: 70
பரதன் கைகேயியை பழித்துரைத்தல்
மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்? 71
நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ? 72
மாளவும் உளன், ஒரு மன்னன் வன் சொலால்;
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன்; ஆயினால்,
கோள் இல அறநெறி! குறை உண்டாகுமோ? 73
சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்,
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு
பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு எனும்,
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ ? 74
கவ்வு அரவு இது என இருந்திர்; கற்பு எனும்
அவ் வரம்பு அழித்து, உமை அகத்துளே வைத்த
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து,
இவ் வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ? 75
நோயீர் அல்லீர்; நும் கணவன் தன் உயிர் உண்டீர்;
பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்!
தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே! 76
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால், உயிரோடும்
தின்றும், தீரா வன் பழி கொண்டீர்; திரு எய்தி
என்றும் நீரே வாழ உவந்தீர்; அவன் ஏக,
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே! 77
இறந்தான் தந்தை, ஈந்த வரத்துக்கு இழிவு என்னா;
அறந்தான் ஈது என்று, அன்னவன் மைந்தன், அரசு எல்லாம்
துறந்தான்; தாயின் சூழ்ச்சியின், ஞாலம், அவனோடும்
பிறந்தான், ஆண்டான் என்னும் இது, என்னால் பெறலாமே? 78
மாளும் என்றே தந்தையை உன்னான்; வசை கொண்டாள்
கோளும் என்னாலே எனல் கொண்டான்; அது அன்றேல்.
மீளும் அன்றே? என்னையும், மெய்யே உலகு எல்லாம்
ஆளும் என்றே போயினன் அன்றோ?- அரசு ஆள்வான். 79
ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால்
யாதானும் தான் ஆக; எனக்கே பணி செய்வான்,
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்னப்
போதாதோ, என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா? 80
உய்யா நின்றேன் இன்னமும்; என்முன் உடன் வந்தான்,
கை ஆர் கல்லைப் புல் அடகு உண்ண, கலம் ஏந்தி,
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு, அமுது என்ன,
நெய்யோடு உண்ண நின்றது, நின்றார் நினையாரோ? 81
வில் ஆர் தோளான் மேவினன், வெங் கானகம் என்ன,
நல்லான் அன்றே துஞ்சினன்; நஞ்சே அனையாளைக்
கொல்லேன், மாயேன்; வன் பழியாலே குறைவு அற்றேன்-
அல்லேனோ யான்! அன்பு உடையார்போல் அழுகின்றேன். 82
பாரோர் கொள்ளார்; யான் உயிர் பேணிப் பழி பூணேன்;
தீராது ஒன்றால் நின் பழி; ஊரில் திரு நில்லாள்;
ஆரோடு எண்ணிற்று? ஆர் உரைதந்தார்? அறம் எல்லாம்
வேரோடும் கேடு ஆக முடித்து, என் விளைவித்தாய்? 83
கொன்றேன், நான் என் தந்தையை, மற்று உன் கொலை வாயால்-
ஒன்றோ? கானத்து அண்ணலே உய்த்தேன்; உலகு ஆள்வான்
நின்றேன்; என்றால், நின் பிழை உண்டோ ? பழி உண்டோ ?
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ ? 84
கண்ணாலே, என் செய் வினை, இன்னும் சில காண்பார்;
மண்ணோர் பாராது எள்ளுவர்; வாளா பழி பூண்டாய்;
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று
எண்ணா நின்றேன்; அன்றி இரேன், என் உயிரோடே. 85
பரதன் தான் இனி செய்யப்போவது பற்றி உரைத்தல்
ஏன்று, உன் பாவிக் கும்பி வயிற்றினிடை வைகித்
தோன்றும் தீராப் பாதகம் அற்று, என் துயர் தீர,
சான்றும்தானே நல் அறம் ஆக, தகை ஞாலம்
மூன்றும் காண, மா தவம் யானே முயல்கின்றேன். 86
கைகேயிக்கு பரதனின் அறிவுரை
சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன்; செயல் எல்லாம்
மறந்தாய் செய்தாய் ஆகுதி; மாயா உயிர் தன்னைத்
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி; உலகத்தே
பிறந்தாய் ஆதி; ஈது அலது இல்லைப் பிறிது என்றான். 87
கோசலையின் திருவடி வணங்க பரதல் செல்லுதல்
இன்னணம், இனையன இயம்பி, யானும், இப்
பன்ன அருங் கொடு மனப் பாவிபாடு இரேன்;
துன்ன அருந் துயர் கெட, தூய கோசலை
பொன் அடி தொழுவென் என்று, எழுந்து போயினான். 88
பரதன் கோசலையின் திருவடியில் வீழ்ந்து வணங்குதல்
ஆண்தகை, கோசலை அருகர் எய்தினன்;
மீண்டும், மண் கிழிதர வீழ்ந்து, கேழ் கிளர்
காண் தகு தடக் கையின் கமலச் சீறடி
பூண்டனன்; கிடந்தனன்; புலம்பினான் அரோ! 89
பரதனின் இரங்கல் உரை
எந்தை எவ் உலகு உளான்? எம் முன் யாண்டையான்?
வந்தது, தமியென், இம் மறுக்கம் காணவோ?
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும்,
அந்தரத்து அமரரும் அழுது சோரவே. 90
அடித்தலம் கண்டிலென் யான், என் ஐயனை;
படித்தலம் காவலன், பெயரற்பாலனோ?
பிடித்திலிர் போலும் நீர்; பிழைத்திரால் எனும்-
பொடித்தலம் தோள் உறப்புரண்டு சோர்கின்றான். 91
கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற
நொடிகுவென் யான்; அது நுவல்வது எங்ஙனம்?
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன்,
முடிகுவென், அருந் துயர் முடிய என்னுமால், 92
இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்,
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால்-
மரகத மலை என வளர்ந்த தோளினான். 93
வாள்தொடு தானையான் வானில் வைகிட,
காடு ஒரு தலைமகன் எய்த, கண் இலா
நாடு ஒரு துயரிடை நைவதே எனும்-
தாள் தொடு தடக் கை அத் தருமமே அனான். 94
பரதன் தூயன் என அறிந்த கோசலையின் உரை
புலம்புறு குரிசில்தன் புலர்வு நோக்கினாள்,
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை;
நிலம் பொறை ஆற்றலன், நெஞ்சம் தூய்து எனா,
சலம் பிறிது உற, மனம் தளர்ந்து, கூறுவாள்: 95
கோசலை பரதனை வினாவுதல்
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேறும் சிந்தையாள்,
கைகயர் கோமகள் இழைத்த கைதவம்,
ஐய! நீ அறிந்திலை போலுமால்? என்றாள். 96
கோசலையின் சொல்லால் துயருற்ற பரதனின் சூளுரை
தாள் உறு குரிசில், அத் தாய் சொல் கேட்டலும்,
கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான்,
நாள் உறு நல் அறம் நடுங்க, நாவினால்
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான்: 97
அறம் கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன்,
பிறன்கடை நின்றவன், பிறரைச் சீறினோன்,
மறம்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மா தவர்க்கு அருந் துயரம் சூழ்ந்துளோன். 98
குரவரை, மகளிரை, வாளின் கொன்றுளோன்,
புரவலன் தன்னொடும் அமரில் புக்கு உடன்
விரவலர் வெரிநிடை விழிக்க, மீண்டுளோன்,
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன், 99
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவன், அறநெறி அந்தணாளரில்
பிழைத்தவன், பிழைப்பு இலா மறையைப் பேணலாது,
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன். 100
தாய் பசி உழந்து உயிர் தளரத், தான் தனி,
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்,
நாயகன் பட நடந்தவனும், நண்ணும் அத்
தீ எரி நரகத்துக் கடிது செல்க, யான். 101
தாளினில் அடைந்தவர்தம்மை, தற்கு ஒரு
கோள் உற, அஞ்சினன் கொடுத்த பேதையும்,
நாளினும் அறம் மறந்தவனும், நண்ணுறும்
மீள அரு நரகிடைக் கடிது வீழ்க, யான். 102
பொய்க் கரி கூறினோன், போருக்கு அஞ்சினோன்,
கைக் கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன்,
எய்த்த இடத்து இடர் செய்தோன், என்று இன்னோர் புகும்
மெய்க்கொடு நரகிடை விரைவின் வீழ்க, யான். 103
அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்,
மைந்தரைக் கொன்றுளோன், வழக்கில் பொய்த்துளோன்,
நிந்தனை தேவரை நிகழ்த்தினோன், புகும்
வெந் துயர் நரகத்து வீழ்க, யானுமே. 104
கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோ ன்,
மன்றிடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன்,
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே. 105
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்க, தன் உயிர் கொண்டு ஓடினோன்,
சோறு தன் அயலுளோர் பசிக்கத் துய்த்துளோன்,
ஏறும் அக் கதியிடை யானும் ஏறவே. 106
எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃகினன், உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்,
அஃகல் இல் அறநெறி ஆக்கியோன் பொருள்
வெஃகிய மன்னன், வீழ் நரகின் வீழ்க, யான். 107
அழிவு அரும் அரசியல் எய்தி, ஆகும் என்று,
இழி வரு சிறு தொழில் இயற்றி, ஆண்டு, தன்
வழி வரு தருமத்தை மறந்து, மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக, யான். 108
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர்
எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற,
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக் கொள
அஞ்சின மன்னவன் ஆக யானுமே. 109
கன்னியை அழி செயக் கருதினோன், குரு
பன்னியை நோக்கினோன், பருகினோன் நறை,
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும்
இன்னவர் உறு கதி என்னது ஆகவே. 110
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன்,
ஆண் அலன், பெண் அலன், ஆர்கொலாம்? என
நாணலன், நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன், பிறர் பழி பிதற்றி, ஆக யான், 111
மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன்,
சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன்,
நறியன அயலவர் நாவில் நீர் வர
உறு பதம் நுங்கிய ஒருவன், ஆக யான். 112
வில்லினும் வாளினும் விரிந்த ஆண் தொழில்
புல்லிடை உகுத்தனென், பொய்ம்மை யாக்கையைச்
சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய
இல்லிடை இடு பதம் ஏற்க, என் கையால். 113
ஏற்றவற்கு, ஒரு பொருள் உள்ளது, இன்று என்று
மாற்றலன், உதவலன், வரம்பு இல் பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக்
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க, யான். 114
பிணிக்கு உறு முடை உடல் பேணி, பேணலார்த்
துணிக் குறு வயிர வாள் தடக் கை தூக்கிப் போய்,
மணிக் குறு நகை இள மங்கைமார்கள் முன்,
தணிக்குறு பகைஞரைத் தாழ்க, என் தலை. 115
கரும்பு அலர் செந் நெல் அம் கழனிக் கான நாடு
அரும் பகை கவர்ந்து உண, ஆவி பேணினென்,
இரும்பு அலர் நெடுந் தளை ஈர்த்த காலொடும்,
விரும்பலர் முகத்து, எதிர் விழித்து நிற்க, யான். 116
பரதனைத் தழுவி கோசலை அழுதல்
தூய வாசகம் சொன்ன தோன்றலை,
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் வரக் கண்ட பொம்மலாள்
ஆய காதலால், அழுது புல்லினாள். 117
செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும்,
அம்மை தீமையும், அறிதல் தேற்றினாள்;
கொம்மை வெம் முலை குமுறு பால் உக,
விம்மி விம்மி நின்று, இவை விளம்புவாள்: 118
கோசலை பரதனை வாழ்த்துதல்
முன்னை நும் குல முதலுளோர்கள்தாம்,
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா! என்று, வாழ்த்தினாள்-
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள். 119
சத்துருக்கனன் கோசலையை வணங்கலும், வசிட்டனின் வருகையும்
உன்ன நைந்து நைந்து, உருகும் அன்புகூர்
அன்னை தாளில் வீழ்ந்து, இளைய அண்ணலும்,
சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்;
இன்ன வேலைவாய், முனிவன் எய்தினான். 120
வசிட்டனை பரதன் வணங்கலும், வசிட்டன் தழுவி அழுதலும்
வந்த மாதவன் தாளில், வள்ளல் வீழ்ந்து,
எந்தை யாண்டையான்? இயம்புவீர்? எனா,
நொந்து மாழ்கினான்; நுவல்வது ஓர்கிலா
அந்த மா தவன் அழுது புல்லினான். 121
கோசலை பரதனை தயரதனுக்கு இறுதிக் கடன் செய்யச் சொல்லுதல்
மறு இல் மைந்தனே! வள்ளல், உந்தையார்,
இறுதி எய்தி நாள் ஏழ்-இரண்டின;
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று,
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள். 122
பரதன் வசிட்டனுடன் சென்று தந்தையின் திருவுருவை நோக்கல்
அன்னை ஏவினாள், அடி இறைஞ்சினான்;
பொன்னின் வார் சடைப் புனிதனோடும் போய்,
தன்னை நல்கி, அத் தருமம் நல்கினான்
பன்னு தொல் அறப் படிவம் நோக்கினான். 123
தயரதனின் திருமேனி கண்டு பரதன் புலம்பல்
மண்ணின்மேல் விழுந்து அலறி மாழ்குவான்,
அண்ணல், ஆழியான், அவனி காவலான்,
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை,
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான். 124
தயரதன் உடலை விமானத்தில் வைத்து, யானையின் மீது கொண்டு செல்லுதல்
பற்றி, அவ்வயின் பரிவின் வாங்கினார்,
சுற்றும் நான்மறைத் துறை செய் கேள்வியார்;
கொற்ற மண்கணை குமுற, மன்னனை,
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர். 125
கரை செய் வேலைபோல், நகரி, கை எடுத்து,
உரை செய் பூசலிட்டு, உயிர் துளங்குற,
அரச வேலை சூழ்ந்து, அழுது, கைதொழ,
புரசை யானையில் கொண்டு போயினார். 126
சாவுப் பறை முதலியன ஒலித்தல்
சங்கு பேரியும், தழுவு சின்னமும்
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ,
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் எனப்
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே. 127
தயரதன் உடல் சரயு நதி அடைதல்
மாவும், யானையும், வயங்கு தேர்களும்,
கோவும், நான் மறைக் குழுவும், முன் செல,
தேவிமாரொடும் கொண்டு, தெண் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார். 128
இறுதிக் கடன் செய பரதனை அழைத்தல்
எய்தி, நூலுளோர் மொழிந்த யாவையும்
செய்து, தீக் கலம் திருத்தி, செல்வனை,
வெய்தின் ஏற்றினார்; வீர! நுந்தைபால்
பொய் இல் மாக் கடன் கழித்தி போந்து என்றார். 129
கடன் செய்ய எழுந்த பரதனை வசிட்டன் தடுத்துரைத்தல்
என்னும் வேலையில் எழுந்த வீரனை,
அன்னை தீமையால் அரசன் நின்னையும்,
துன்னு துன்பத்தால், துறந்து போயினான்,
முன்னரே என முனிவன் கூறினான். 130
பரதன் துயர் மிகுதியால் புலம்பி அழுதல்
துறந்து போயினான் நுந்தை; தோன்றல்! நீ
பிறந்து, பேர் அறம் பிழைத்தது என்றபோது,
இறந்து போயினான்; இருந்தது, ஆண்டு, அது
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொலாம். 131
இடிக்கண் வாள் அரா இடைவது ஆம் எனா,
படிக்கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான்,
தடுக்கல் ஆகலாத் துயரம் தன்னுளே
துடிக்க, விம்மி நின்று அழுது சொல்லுவான்: 132
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே?
இரவிதன் குலத்து, எந்தை முந்தையோர்
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன்;
அரசு செய்யவோ ஆவது ஆயினேன்! 133
பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம்
தா இல் மன்னர், தம் தரும நீதியால்
தேவர் ஆயினார்; சிறுவன் ஆகியே,
ஆவ! நான் பிறந்து அவத்தன் ஆனவா? 134
துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்;
என்னை! என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா! 135
வசிட்டன் சத்துருக்கனனைக் கொண்டு தயரதனுக்கு இறுதிக்கடன் செய்வித்தல்
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்,
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்-
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான். 136
தயரதன் தேவியர் தீக்குளித்து நற்கதி பெறுதல்
இழையும் ஆரமும் இடையும் மின்னிட,
குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள் தாம்
தழை இல் முண்டகம் தழுவி கானிடை
முழையில் மஞ்ஞைபோல், எரியில் மூழ்கினார். 137
அங்கி நீரினும் குளிர, அம்புயத்
திங்கள் வாள் முகம் திரு விளங்குற,
சங்கை தீர்ந்து, தம் கணவர் பின் செலும்
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார். 138
ஈமக் கடன் முடித்துப் பரதன் மனை சேர்தல்
அனைய மா தவன், அரசர் கோமகற்கு
இனைய தன்மையால் இயைவ செய்த பின்,
மனையின் எய்தினான் - மரபின் வாழ்வினை
வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான். 139
பத்து நாட்கள் சடங்குகள் நடைபெறுதல்
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என,
மைந்தன், வெந் துயர்க் கடலின் வைகினான்;
தந்தை தன்வயின் தருமம் யாவையும்,
முந்து நூலுளோர் முறையின் முற்றினான். 140
வசிட்டனும் மந்திரக்கிழவரும் பரதனிடம் வருதல்
முற்றும் முற்றுவித்து உதவி, மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடரத் தோன்றினான்,
வெற்றி மா தவன் - வினை முடித்த அக்
கொற்ற வேல் நெடுங் குமரற் கூறுவான்: 141
மன்னர் இன்றியே வையம் வைகல்தான்
தொன்மை அன்று எனத் துணியும் நெஞ்சினார்,
அன்ன மா நிலத்து அறிஞர் தம்மொடும்,
முன்னை மந்திரக் கிழவர் முந்தினார். 142
மிகைப் பாடல்கள்
ஆய காதல் தனையனைத் தந்த அத்
தூய தையல் தொழிலுறுவார், உனைக்
கூயள் அன்னை என்றே சென்று கூறலும்,
ஏய அன்பினன் தானும் சென்று எய்தினான். 41-1
தீ அன கொடியவள் செய்த செய்கையை
நாயினேன் உனரின், நல் நெறியின் நீங்கலாத்
தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதி அதனின் வீழ்க, யான். 116-1
உந்து போன தடந் தேர் வலானொடும்,
மந்திரப் பெருந் தலைவர், மற்றுளோர்,
தந்திரத் தனித் தலைவர், நண்பினோர்,
வந்து சுற்றும் உற்று, அழுது மாழ்கினார். 125-1
என்று கொண்டு மாதவன் இயம்பலும்,-
நின்று நின்று தான் நெடிது உயிர்த்தனன்;
நன்று, நன்று! எனா நகை முகிழ்த்தனன்;-
குன்று குன்றுறக் குலவு தோளினான். 131-1
அன்னதாக, அங்கு, ஆறு பத்து எனச்
சொன்ன ஆயிரம் தோகைமார்களும்,
துன்னி வந்தனர்-சோர்வு இலாது, அவர்
மின்னும் வாள் எரி மீது வீழவே. 136-1
அயோத்தியா காண்டம்
11. ஆறு செல் படலம்
மந்திரக் கிழவோர் முதலியோர் அரசவையை அடைதல்
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும், ஆண்டையான் என,
விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்;
பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர். 1
மந்திரக் கிழவரும், நகர மாந்தரும்,
தந்திரத் தலைவரும், தரணி பாலரும்,
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்,
சுந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார். 2
சுமந்திரன் முனிவரைக் குறிப்பாக நோக்குதல்
சுற்றினர் இருந்துழி, சுமந்திரப் பெயர்ப்
பொன் தடந் தேர் வலான், புலமை உள்ளத்தான்,
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான்,
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான். 3
முனிவர் சுமந்திரனின் குறிப்பை உணர்தல்
நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை,
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன்,
காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம் எனக்
கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்: 4
பரதனுக்கு வசிட்டன் அரசின் சிறப்பை உரைத்தல்
வேதியர், அருந்தவர், விருத்தர், வேந்தர்கள்
ஆதியர் நின்வயின் அடைந்த காரியம்,
நீதியும் தருமமும் நிறுவ; நீ இது,
கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால். 5
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது; அறிதி; ஐய! நீ
இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது,
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால்! 6
வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம்,
நள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும்
தெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின்,
உள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே. 7
தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்,
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம். 8
முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்,
மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை,
நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன,
இறைவரை இல்லன யாவும் காண்கிலம். 9
பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து, வான் புகழினர், இன்று காறும் கூக்
காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால்,
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால். 10
உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்;
வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ
அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது
சிந்தனை எமக்கு எனத் தெரிந்து கூறினான். 11
வசிட்டன் சொல் கேட்ட பரதனின் அவல நிலை
தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய் எனச்
செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும்,
நஞ்சினை நுகர் என, நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் - அருவிக் கண்ணினான். 12
நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும்
இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்;
ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர,
தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்: 13
அரசவைக்கு பரதன் தன் கருத்தை எடுத்தியம்புதல்
மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல்
தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல்,
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்,
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ? 14
அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,
நடைவரும் தன்மை நீர், நன்று இது என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது
கடை வரும் தீ நெறிக் கலியின் ஆட்சியோ! 15
வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில்
பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்,
மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம்
காத்தவர் உளர் எனின், காட்டிக் காண்டிரால். 16
நல் நெறி என்னினும், நான் இந் நானில
மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்;
அன்னவன் தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால். 17
அன்று எனின், அவனொடும் அரிய கானிடை
நின்று, இனிது இருந்தவம், நெறியின் ஆற்றுவென்;
ஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்
என்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை. 18
பரதனை அரசவையோர் புகழ்தல்
ஆன்ற பேர் அரசனும் இருப்ப, ஐயனும்
ஏன்றனன், மணி முடி ஏந்த; ஏந்தல் நீ,
வான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்? 19
ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும்,
வேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ?
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்,
வாழிய நின் புகழ்! என்று வாழ்த்தினார். 20
சத்துருக்கனனிடம் இராமனை அழைத்து வருதல் பற்றி முரசு
அறிவிக்க பரதன் கூறுதல்
குரிசிலும், தம்பியைக் கூவி, கொண்டலின்
முரசு அறைந்து, இந் நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு என்பது சாற்றி, தானையை,
விரைவினில் எழுக! என, விளம்புவாய் என்றான். 21
சத்துருக்கனன் உரை கேட்ட மக்களின் மகிழ்ச்சி
நல்லவன் உரைசெய, நம்பி கூறலும்,
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல்லென இரைத்ததால் - உயிர் இல் யாக்கை அச்
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே. 22
அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள
புவித்தலை உயிர் எலாம், இராமன் பொன் முடி
கவிக்கும் என்று உரைக்கவே, களித்ததால்-அது
செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்? 23
படு முரசு அறைந்தனர், பரதன் தம்முனைக்
கொடி நகர்த் தரும்; அவற் கொணரச் சேனையும்
முடுகுக என்ற சொல் மூரி மா நகர்,
உடுபதி வேலையின் உதயம் போன்றதே! 24
எழுந்தது பெரும் படை - எழு வேலையின்,
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி, முந்து எழ,
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க்
கழிந்தது துயர், நெடுங் காதல் தூண்டவே. 25
சேனையின் எழுச்சி
பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும்,
மண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி
விண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள்,
கண்ணினை மறைத்தன, கமலத் தோனையே. 26
ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி;
காசையின் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே. 27
படியொடு திரு நகர் துறந்து, பல் மரம்
செடியொடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம்
கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்
பிடியொடு நடந்தன-பெருங் கை வேழமே. 28
சேற்று இள மரை மலர் சிறந்தவாம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்-
ஏற்று இளம் பிடிக்குலம்-இகலி, இன் நடை
தோற்று, இள மகளிரைச் சுமப்ப போன்றவே. 29
வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச்
சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன;
கோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா
மாதரின் நுடங்குவ, வரம்பு இல் கோடியே. 30
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென,
அண்ணல் வெங்கதிரவன், அளவு இல் மூர்த்தி ஆய்,
மண்ணிடை இழிந்து ஒரு வழிக் கொண்டாலென,
எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார். 31
தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக்
கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல்,
ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்தது, பதாதிப் பௌவமே. 32
தாரையும் சங்கமும், தாளம் கொம்பொடு
பார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும்,
பேரியும், இயம்பல சென்ற - பேதைமைப்
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே. 33
தா அரு நாண் முதல் அணி அலால், தகை
மே வரு கலங்களை வெறுத்த மேனியர்,
தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என, மகளிர் போயினார். 34
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை,
பொதி பல கவிகக மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே. 35
செல்லிய செலவினால், சிறிய திக்கு எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்,
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, ஓர்
மெல்லியல் என்றவர் மெலியரே கொலாம்? 36
தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில,
குங்குமம் கொட்டில, கோவை முத்து இல,-
பொங்கு இளங் கொங்கைகள் - புதுமை வேறு இல
தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய. 37
இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன - குவவுத் தோள்களே. 38
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன - கொற்றம் முற்றுவான்,
கறை அறக் கழுவிய கால வேலையே. 39
விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல், தார் ஒலி இல் தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி,
அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே. 40
மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்!-
புல்கிய மணிவடம் பூண்கிலாமையால்,
ஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே. 41
கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள
தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்;
காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான்
ஆம் என, நிகழ்ந்தது - அவ் அளவு இல் சேனையை. 42
மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்?
கண்ணினும் மனத்தினும், கமலத்து அண்ணல்தன்
எண்ணினும், நெடிது - அவண் எழுந்த சேனையே! 43
அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு
மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த்
தலைவனை நிகர்த்தது - அத் தயங்கு தானையே. 44
அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா
செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள்
மறிகடல் ஒத்தது - அவ் அயோத்தி மாநகர். 45
பெருந்திரை நதிகளும், வயலும், பெட்புறு
மரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத்
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அருந்தெரு ஒத்தது - அப் படை செல் ஆறு அரோ! 46
தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை
ஏர்கள் தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால்-
கார்கள் தாம் என மிகக் கடுத்த கைம்மலை
வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே. 47
ஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல்,
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால்-
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே. 48
மத்தளம் முதலிய வயங்கு பல் இயம்
ஒத்தன சேறலின், உரை இலாமையின்,
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது - அப் படையின் ஈட்டமே. 49
ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை,
ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது -
காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே. 50
கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம்-
அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில, மகளிர் கொங்கையே? 51
மரவுரி அணிந்து பரதன் சத்துருக்கனனுடன் தேரில் செல்லுதல்
இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும்,
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்;
பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும்,
நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான். 52
பரதனுடன் தாயரும் வருதல்
தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின்
ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும்,
தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப்
போயினன் - திரு நகர்ப் புரிசை வாயிலே. 53
சத்துருக்கனன் கூனிய துன்புறுத்தப் பற்ற, பரதன் விலக்கல்
மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்,
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்: 54
முன்னையர் முறை கெட முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து, என் சினத்தைத் தீர்வெனேல்,
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால்,
அன்னை என்று, உணர்ந்திலென், ஐய! நான் என்றான். 55
ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல்
வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்,
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்!
போதும் நாம் என்று கொண்டு, அரிதின் போயினான். 56
இராமன் தங்கிய சோலையில் பரதன் தங்குதல்
மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட,
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான். 57
இராமன் தங்கிய புல்லணை அருகில் பரதன் மண்ணில் இருத்தல்
அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன்,
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்,
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான். 58
ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி என, தானும் ஏகினான் -
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண் தகு கரிகளும் தொடர, காலினே. 59
அயோத்தியா காண்டம்
12. கங்கை காண் படலம்
பரதன் கங்கைக் கரையை அடைதல்
பூவிரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான். 1
கங்கையை சென்று சேர்ந்த சேனையின் மிகுதியும் சிறப்பும்
எண்ண அருஞ் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது,
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெங் கரி மதத்து அருவி பாய்தலால்,
உண்ணவும், குடையவும், உரித்து அன்று ஆயதே. 2
அடிமிசைத் தூளி புக்கு, அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்;
நெடிது உயிர்த்து உண்டவும், நீந்தி நின்றவும்,
பொடிமிசைப் புரண்டவும், புரவி ஈட்டமே. 3
பாலை ஏய் நிறத்தொடு, பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங் கடல், ஓடிற்று இல்லையால்;-
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையே மடுத்தது, அக் கங்கை வெள்ளமே. 4
கான் தலை நண்ணிய காளைபின் படர்
தோன்றலை, அவ் வழித் தொடர்ந்து சென்றன-
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே. 5
பரதன் சேனையுடன் வருதல் கண்ட குகனின் ஐயமும் சீற்றமும்
அப் படை கங்கையை அடைந்த ஆயிடை,
துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப் படை எடுத்தது? என்று, எடுத்த சீற்றத்தான். 6
குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் -
நகை மிக, கண்கள் தீ நாற, நாசியில்
புகை உற, குனிப்புறும் புருவப் போர்விலான். 7
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான்
ஐ-ஐந் நூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான், வில்லின் கல்வியான். 8
கட்டிய சுரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
கிட்டியது அமர் எனக் கிளரும் தோளினான். 9
எலி எலாம் இப் படை; அரவம், யான் என,
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் -
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே. 10
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் -
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அருங் கடையுகம் தனில், அசனி மா மழை
கருங் கடல் கிளர்ந்தெனக் கலந்து சூழவே. 11
தன் சேனைக்கு குகன் இட்ட கட்டளை
தோன்றிய புளிஞரை நோக்கி, சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென், என் உயிர்த் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம் என்றான். 12
துடி எறி; நெறிகளும், துறையும், சுற்றுற
ஒடியெறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்;
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி, பட எனா, பெயர்த்தும் கூறுவான்: 13
குகனின் வீர உரை
அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், நாய்க்குகன் என்று, எனை ஓதாரோ? 14
ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்று, அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ? 15
முன்னவன் என்று நினைந்திலன்; மொய் புலி அன்னான் ஓர்
பின்னவன் நின்றனன் என்றிலன்; அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது? இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில், வேடர் விடும் சரம் வாயாவோ? 16
பாவமும் நின்ற பெரும் பழியும், பகை நண்போடும்,
ஏவமும், என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ?
ஆவது போக, என் ஆர் உயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது, சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ? 17
அருந் தவம் என் துணை ஆள, இவன் புவி ஆள்வானோ?
மருந்துஎனின் அன்று உயிர், வண் புகழ் கொண்டு, பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை உகந்தவர்தம்மொடு போகாதே
இருந்தது நன்று, கழிக்குவென், என் கடன் இன்றோடே. 18
தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும்,
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ?
வெம்பிய வேடர் உளீர்! துறை ஓடம் விலக்கீரோ?
நம்பி முன்னே, இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ? 19
போன படைத் தலை வீரர்தமக்கு இரை போதா இச்
சேனை கிடக்கிடு; தேவர் வரின், சிலை மா மேகம்
சோனை பட, குடர் சூறை பட, சுடர் வாளோடும்
தானை பட, தனி யானை பட, திரள் சாயேனோ? 20
நின்ற கொடைக் கை என் அன்பன் உடுக்க நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை, என் அம்பாலே
கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை கொண்டு ஓடி,
துன்று திரைக் கடல், கங்கை மடுத்து இடை தூராதோ? 21
ஆடு கொடிப் படை சாடி, அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது, பார் எனும் இப் புகழ் மேவீரோ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி, எடுத்தது காணீரோ? 22
மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும்
கோ முனியத் தகும் என்று, மனத்து இறை கொள்ளாதே,
ஏ முனை உற்றிடில், ஏழு கடற் படை என்றாலும்,
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ? 23
என்பன சொல்லி, இரும்பு அன மேனியர் ஏனோர்முன்,
வன் பணை வில்லினன், மல் உயர் தோளினன், வாள் வீரற்கு
அன்பனும், நின்றனன்; நின்றது கண்டு, அரிஏறு அன்ன
முன்பனில் வந்து, மொழிந்தனன், மூரிய தேர் வல்லான்: 24
குகனைப் பற்றி சுமந்திரன் பரதனுக்கு உரைத்தல்
கங்கை இரு கரை உடையான்; கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்; வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க் குகன் என்னும் குறி உடையான். 25
கல் காணும் திண்மையான்; கரை காணாக் காதலான்;
அற்கு ஆணி கண்டனைய அழகு அமைந்த மேனியான்;-
மல் காணும் திரு நெடுந் தோள் மழை காணும் மணி நிறத்தாய்!-
நிற் காணும் உள்ளத்தான், நெறி எதிர் நின்றனன் என்றான். 26
குகனைக் காண வடகரைக்கு பரதன் விரைதல்
தன் முன்னே, அவன் தன்மை, தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலாத் திரு மனத்தான்,
மன் முன்னே தழீஇக் கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென், யானே சென்று என எழுந்தான். 27
பரதன் நிலை கண்ட குகன் திடுக்கிடுதல்
என்று எழுந்த தம்பியொடும், எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக் குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்; துண்ணென்றான். 28
வற்கலையின் உடையானை, மாசு அடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான். 29
நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு? என்றான். 30
குகனும் தனியே வடகரை அடைதல்
உண்டு இடுக்கண் ஒன்று உடையான், உலையாத அன்பு உடையான்,
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம்
கண்டு, உணர்ந்து, பெயர்கின்றேன்; காமின்கள் நெறி என்னா,
தண் துறை, ஓர் நாவாயில், ஒரு தனியே தான் வந்தான். 31
பரதனும் குகனும் ஒருவரை ஒருவர் வணங்கித் தழுவுதல்
வந்து எதிரே தொழுதானை வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும், அவன் அடிவீழ்ந்தான்;
தந்தையினும் களிகூரத் தழுவினான் - தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான். 32
பரதனிடம் குகன் வந்த காரணம் கேட்டல்
தழுவின புளிஞர் வேந்தன் தாமரைச் செங்கணானை,
எழுவினும் உயர்ந்த தோளாய்! எய்தியது என்னை? என்ன,
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும்
வழுவினன்; அதனை நீக்க, மன்னனைக் கொணர்வான் என்றான். 33
குகன் பரதனை வணங்கிப் பாராட்டுதல்
கேட்டனன், கிராதர் வேந்தன்; கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி,
மீட்டும், மண் அதனில் வீழ்ந்தான்; விம்மினன், உவகை வீங்க;
தீட்ட அரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன், பொய் இல் உள்ளத்தன், புகலலுற்றான்: 34
தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
தீவினை என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா! 35
என் புகழ்கின்றது, ஏழை எயினனேன்? இரவி என்பான் -
தன் புகழ்க் கற்றை, மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்,
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய்-உயர் குணத்து உரவுத் தோளாய்! 36
பரதனிடம் குகன் கொண்ட பேரன்பு
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி,
புனை சுழல், புலவு வேற் கை, புளிஞர்கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான்; ஆர் அவற்கு அன்பு இலாதார்?-
நினைவு அருங் குணம்கொடு அன்றோ, இராமன்மேல் நிமிர்ந்த காதல்? 37
இராமன் தங்கிய இடம் பற்றி பரதன் குகனிடம் வினாவுதல்
அவ் வழி அவனை நோக்கி, அருள்தரு வாரி அன்ன
செவ் வழி உள்ளத்து அண்ணல், தென் திசைச் செங் கை கூப்பி,
எவ் வழி உறைந்தான் நம்முன்? என்றலும், எயினர் வேந்தன்,
இவ் வழி, வீர! யானே காட்டுவல்; எழுக! என்றான். 38
இராமன் தங்கிய இடத்தைக் கண்ட பரதனின் நிலை
கார் எனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல், வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான் -
வார் மணிப் புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான். 39
இயன்றது, என் பொருட்டினால், இவ் இடர் உனக்கு என்ற போழ்தும்,
அயின்றனை, கிழங்கும் காயும் அமுது என; அரிய புல்லில்
துயின்றனை எனவும், ஆவி துறந்திலென்; சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே! 40
இலக்குவனின் செயல்கள் பற்றி குகனிடம் பரதன் வினாவுதல்
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான்! அந்
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே போந்தவன், பொழுது நீத்தது
யாண்டு? என, இனிது கேட்டான்; எயினர்கோன், இதனைச் சொன்னான்: 41
இலக்குவன் செயல் பற்றி குகனின் பதில் உரை
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும், வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!-கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம் என்றான். 42
பரதனின் துயர் உரை
என்பத்தைக் கேட்ட மைந்தன், இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில், யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன்; அவன், அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ ? அழகிது, என் அடிமை! என்றான். 43
தென் கரை சேர்க்க, குகனை பரதன் வேண்டுதல்
அவ் இடை, அண்ணல்தானும், அன்று, அரும் பொடியின் வைகி,
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர் கோமா அன்!
இவ் இடை, கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின், எம்மை
வெவ் இடர்க் கடல் நின்று ஏற்றி, வேந்தன்பால் விடுத்தது என்றான். 44
குகன் கட்டளைப்படி நாவாய்கள் வருதல்
நன்று எனப் புளிஞர் வேந்தன் நண்ணினன் தமரை; நாவாய்
சென்று இனித் தருதிர் என்ன, வந்தன-சிவன் சேர் வெள்ளிக்
குன்று என, குனிக்கும் அம் பொன் குவடு என, குபேரன் மானம்
ஒன்று என, நாணிப் பல் வேறு உருவு கொண்டனைய ஆன. 45
நாவாய்களின் தோற்றப் பொலிவு
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய்,
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன-கலந்த எங்கும்,-
அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின், அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன. 46
பரதன் சேனையோடு கங்கையை கடத்தல்
வந்தன, வரம்பு இல் நாவாய்; வரி சிலைக் குரிசில் மைந்த!
சிந்தனை யாவது? என்று, சிருங்கிபேரியர்கோன் செப்ப,
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி,
எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி, விரைவின் என்றான். 47
குரிசிலது ஏவலால், அக் குரகதத் தேர் வலானும்,
வரிசையின் வழாமை நோக்கி, மரபுளி வகையின் ஏற்ற,
கரி, பரி, இராதம், காலாள், கணக்கு அறு கரை இல் வேலை,
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே! 48
இடிபடு முழக்கம் பொங்க, இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப, ஊழி இறுதியின் மொய்ப்ப போலக்
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின, நெடுங் கை வேழம். 49
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி,
வங்க நீர்க் கடலும் வந்து தன் வழிப் படர, மானப்
பொங்கு வெங் களிறு நூக்க, கரை ஒரீஇப் போயிற்று அம்மா-
கங்கையும் இராமற் காணும் காதலது என்ன மாதோ! 50
பாங்கின் உத்தரியம் மானப் படர் திரை தவழ, பாரின்
வீங்கு நீர் அழுவம் தன்னுள், விழு மதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற, ஒளித்து அவண் உயர்ந்த கும்பம்,
பூங் குழற் கங்கை நங்கை முலை எனப் பொலிந்த மாதோ! 51
கொடிஞ்சொடு தட்டும், அச்சும், ஆழியும், கோத்த மொட்டும்,
நெடுஞ் சுவர்க் கொடியும், யாவும், நெறி வரு முறையின் நீக்கி,
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றிச் சென்ற-
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என-வயிரத் தேர்கள்! 52
நால்-இரண்டு ஆய கோடி, நவை இல் நாவாய்கள் மீதா,
சேல் திரண்டனைய ஆய கதியொடும், நிமிரச் சென்ற-
பால் திரண்டனைய மெய்ய, பயம் திரண்டனைய நெஞ்ச,
கால் திரண்டனைய கால, கடு நடைக் கலினப் பாய் மா. 53
மகளிர் ஓடத்தில் செல்லுதல்
ஊடு உற நெருக்கி, ஓடத்து, ஒருவர்முன் ஒருவர் கிட்டி,
சூடகத் தளிர்க் கைம் மாதர் குழுமினர் துவன்றித் தோன்ற,
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம் கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன, மிடைந்தன குவவுக் கொங்கை. 54
பொலங் குழை மகளிர், நாவாய்ப் போக்கின் ஒன்று ஒன்று தாக்க,
மலங்கினர்; இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர, அங்கும் இங்கும்
கலங்கலின், வெருவிப் பாயும் கயற்குலம் நிகர்த்த, கண்கள். 55
இயல்வு உறு செலவின் நாவாய், இரு கையும் எயினர் தூண்ட,
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள், மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அறத் தளிப்ப, உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா! 56
மரக்கலங்கள் சென்று வரும் காட்சி
இக் கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து, வெஃகி,
அக் கரை அடைய வீசி, வறியன அணுகும் நாவாய்-
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கிப் போக்கி,
அக் கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா! 57
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த
முகிழுடை முரண் மாத் தண்டு கூம்பு என, முகிலின் வண்ணத்
துகிலொடு தொடுத்த செம் பொன் தகட்டிடை தொடுத்த முத்தின்
நகு கொடி நெடிய பாயா, நவ் எனச் சென்ற நாவாய். 58
ஆனனம் கமலத்து அன்ன, மின் அன்ன, அமுதச் செவ் வாய்,
தேன் நனை, குழலார் ஏறும் அம்பிகள் சிந்து முத்தம்
மீன் என, விரிந்த கங்கை விண் என, பண்ணை முற்றி
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ! 59
துளி படத் துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற,
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு எனச் செல்லும் நாவாய்,
களியுடை மஞ்ஞை அன்ன, கனங் குழை, கயல் கண், மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட, உயிர் படைத்தனவே ஒத்த. 60
முனிவர் வான் வழியாக கங்கையை அடைதல்
மை அறு விசும்பில், மண்ணில், மற்றும் ஓர் உலகில், முற்றும்
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ? கீழோர்
செய் வினை நாவாய் ஏறித் தீண்டலர்; மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக, தேவரின் முனிவர் போனார். 61
அனைவரும் கங்கையை கடத்தல்
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும், எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும், மகளிர் வெள்ளமும்,
செறி திரைக் கங்கை, பின் கிடக்கச் சென்றவே. 62
நாவாயில் பரதன் ஏறுதல்
கழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து, மேல் ஏறினான் தானும் ஏறினான். 63
பரதன் குகனுக்கு கோசலையை அறிமுகம் செய்தல்
சுற்றத்தார், தேவரொடும் தொழ நின்ற கோசலையைத் தொழுது நோக்கி,
கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்? என்று குகன் வினவ, கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றாளைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான் பிறத்தலால், துறந்த பெரியாள் என்றான். 64
பரதன் கோசலைக்கு குகனை அறிமுகம் செய்தல்
என்றலுமே, அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை, இவன் யார்? என்று,
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ, கழல் கால் மைந்தன்,
இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும் இளையவற்கும், எனக்கும், மூத்தான்;
குன்று அனைய திரு நெடுந் தோள் குகன் என்பான், இந் நின்ற குரிசில் என்றான். 65
கோசலை குகனையும் பரதனுக்கு சகோதரனாக்குதல்
நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்; நாடு இறந்து காடு நோக்கி,
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து, நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங் காலம் அளித்திர் என்றாள். 66
பரதன் குகனுக்கு சுமித்திரையை அறிமுகம் செய்தல்
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை நோக்கி, ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை என்ன, நெறி திறம்பாத் தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான் தன் இளந் தேவி; யாவர்க்கும் தொழுகுலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப் பயந்த பெரியாள் என்றான். 67
குகன் கைகேயியை யார் என வினவுதல்
சுடு மயானத்திடை தன் துணை ஏக, தோன்றல் துயர்க் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி ஏக, கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம், தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால், அளந்தாளை, ஆர் இவர்? என்று உரை என்ன, குரிசில் கூறும்: 68
பரதன் கைகேயியை அறிமுகம் செய்தல்
படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும் செவிலியை, தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும் உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும் உலகத்தே, ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை,அறிந்திலையேல்,இந்நின்றாள் என்னை ஈன்றாள்.69
குகன் கைகேயியை வணங்குதலும், தோணி கரை சேர்தலும்
என்னக் கேட்டு, அவ் இரக்கம் இலாளையும்
தன் நல் கையின் வணங்கினன் தாய் என;
அன்னப் பேடை சிறை இலது ஆய்க் கரை
துன்னிற்று என்னவும் வந்தது, தோணியே. 70
தாயர் பல்லக்கில் வர, பரதன் முதலியோர் நடந்து செல்லல்
இழிந்த தாயர் சிவிகையின் ஏற, தான்,
பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான் -
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் -
கழிந்தனன், பல காவதம் காலினே. 71
பரத்துவாச முனிவர் பரதனை எதிர் கொள்ளல்
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்,
அருத்தி கூர, அணுகினன்; ஆண்டு, அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான். 72
மிகைப் பாடல்கள்
வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான்; வணங்காமுன்,
சந்த நெடுந் திரள் புயத்தான் தழுவினான்; தழுவியபின்,
இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய்-இமையோர் தம்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய்! 32-1
ஏறினர் இளவலோடு, இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும் உரிய சுற்றமும்;
பேறு உள பெரு நதி நீங்கி, பெட்பொடும்
கூறு தென் கரையிடைக் குழீஇய போதிலே. 63-1
தன் அன தம்பியும், தாயர் மூவரும்,
சொன்ன தேர் வலவனும், தூய தோழனும்,
துன்னியர் ஏறலும், துழா துடுப்பு எனும்
நல்நயக் காலினால் நடத்தல் மேயினான். 63-2
அயோத்தியா காண்டம்
13. திருவடி சூட்டு படலம்
தன்னை வணங்கிய பரதனுக்கு பரத்துவாச முனிவர் ஆசி கூறி வினாவுதல்
வந்த மா தவத்தோனை, அம் மைந்தனும்
தந்தை ஆம் எனத் தாழ்ந்து, வணங்கினான்;
இந்து மோலி அன்னானும் இரங்கினான்,
அந்தம் இல் நலத்து ஆசிகள் கூறினான். 1
எடுத்த மா முடி சூடி, நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது? என்றான். 2
பரதன் பதிலால் பரத்துவாசன் மகிழ்தல்
சினக் கொடுந் திறல் சீற்ற வெந் தீயினான்,
மனக் கடுப்பினன், மா தவத்து ஓங்கலை,
எனக்கு அடுத்தது இயம்பிலை நீ என்றான்;
உனக்கு அடுப்பது அன்றால், உரவோய்! என்றான். 3
மறையின் கேள்வற்கு மன் இளந் தோன்றல், பின்,
முறையின் நீங்கி, முது நிலம் கொள்கிலேன்;
இறைவன் கொள்கிலன் ஆம் எனின், யாண்டு எலாம்
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான். 4
உரைத்த வாசகம் கேட்டலும், உள் எழுந்து
இரைத்த காதல் இருந் தவத்தோர்க்கு எலாம்,
குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்ததால்-
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே. 5
பரதன் உடன்வந்தோர்க்கும் சேனைக்கும் பரத்துவாசன் விருந்து அளித்தல்
ஆய காதலோடு ஐயனைக் கொண்டு, தன்
தூய சாலை உறைவிடம் துன்னினான்;
மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா,
தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான். 6
துறந்த செல்வன் நினைய, துறக்கம்தான்
பறந்து வந்து படிந்தது; பல் சனம்,
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றாரென,
மறந்து வைகினர், முன்னைத் தம் வாழ்வு எலாம். 7
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என,
அந்தரத்தின் அரம்பையர், அன்பினர்,
வந்து உவந்து எதிர் ஏத்தினர்; மைந்தரை,
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார். 8
நானம் நன்கு உரைத்தார்; நளிர் வானிடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்;
தான மாமணிக் கற்பகம் தாங்கிய
ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார். 9
கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார்,
செம்பொனின் கல ராசி திருத்தினார்;
அம்பரத்தின் அரம்பையர், அன்பொடும்,
உம்பர்கோன் நுகர் இன் அமுது ஊட்டினார். 10
அஞ்சு அடுத்த அமளி, அலத்தகப்
பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவ
நஞ்சு அடுத்த நயனியர், நவ்வியின்
துஞ்ச, அத்தனை மைந்தரும் துஞ்சினார். 11
ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என,
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார்-
வேந்தர் ஆதி, சிவிகையின் வீங்கு தோள்
மாந்தர்காறும், வரிசை வழாமலே. 12
மாதர் யாவரும், வானவர் தேவியர்
கோது இல் செல்வத்து வைகினர்-கொவ்வை வாய்த்
தீது இல் தெய்வ மடந்தையர், சேடியர்,
தாதிமார் எனத் தம் பணி கேட்பவே. 13
நந்து அம் நந்தவனங்களில், நாள் மலர்க்
கந்தம் உந்திய கற்பகக் காவினின்று,
அந்தர் வந்தென, அந்தி தன் கை தர,
மந்த மந்த நடந்தது வாடையே. 14
மான்று, அளிக் குலம் மா மதம் வந்து உண,-
தேன் தளிர்த்த கவளமும், செங் கதிர்
கான்ற நெல் தழைக் கற்றையும், கற்பகம்
ஈன்று அளிக்க, நுகர்ந்தன-யானையே. 15
நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்;
கர கதக் கரி கால் நிமிர்ந்து உண்டன;
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல்
குரகதத்தின் குழாங்களும் கொண்டவே. 16
பரதன் காய் கிழங்கு போன்றவை உண்டு, புழுதியில் தங்குதல்
இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான்,
அன்ன காயும், கிழங்கும், உண்டு, அப் பகல்
பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான். 17
சூரியன் தோன்றுதல்
நீல வல் இருள் நீங்கலும், நீங்குறும்
மூலம் இல் கனவின் திரு முற்றுற,
ஏலும் நல் வினை துய்ப்பவர்க்கு ஈறு செல்
காலம் என்னக் கதிரவன் தோன்றினான். 18
பரதனின் படைகள் தம் நிலையை அடைதல்
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என
பாறி வீந்தது செல்வம்; பரிந்திலர்,
தேறி முந்தைத் தம் சிந்தையர் ஆயினார்,
மாறி வந்து பிறந்தன்ன மாட்சியார். 19
பரதன் சேனையுடன் பாலை நிலத்தை கடத்தல்
காலை என்று எழுந்தது கண்டு, வானவர்,
வேலை அன்று; அனிகமே என்று விம்முற,
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ,
பாலை சென்று அடைந்தது - பரதன் சேனையே. 20
எழுந்தது துகள்; அதின், எரியும் வெய்யவன்
அழுந்தினன்; அவிப்ப அரும் வெம்மை ஆறினான்;
பொழிந்தன கரி மதம், பொடி வெங் கானகம்
இழிந்தன, வழி நடந்து ஏற ஒணாமையே. 21
வடியுடை அயிற் படை மன்னர் வெண்குடை,
செடியுடை நெடு நிழல் செய்ய, தீப் பொதி
படியுடைப் பரல் உடைப் பாலை, மேல் உயர்
கொடியுடைப் பந்தரின், குளிர்ந்தது எங்குமே. 22
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான், நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு, காதலின்
உருகிய தளிர்த்தன-உலவை ஈட்டமே. 23
பரதன் படைகள் சித்திரகூடத்தை அடைதல்
வன் நெறு பாலையை மருதம் ஆம் எனச்
சென்றது; சித்திரகூடம் சேர்ந்ததால்-
ஒன்று உரைத்து, உயிரினும் ஒழுக்கம் நன்று எனப்
பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே. 24
தூளியின் படலையும், துரகம், தேரொடு,
மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும்,
ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும்,
கோள் இரும் படை இது என்று, உணரக் கூறவே. 25
பரதன் சேனையின் எழுச்சி கண்ட இலக்குவனின் சீற்றம்
எழுந்தனன், இளையவன்; ஏறினான், நிலம்
கொழுந்து உயர்ந்தனையது ஓர் நெடிய குன்றின் மேல்;
செழுந் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக்
கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான். 26
பரதன், இப் படைகொடு, பார்கொண்டவன், மறம்
கருதி, உள் கிடந்தது ஓர் கறுவு காதலால்,
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான்; இது
சரதம்; மற்று இலது எனத் தழங்கு சீற்றத்தான். 27
இராமனை அடைந்து இலக்குவன் சீற்றத்துடன் உரைத்தல்
குதித்தனன்; பாரிடை; குவடு நீறு எழ
மிதித்தனன்; இராமனை விரைவின் எய்தினான்;
மதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில்
பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான் என்றான். 28
போர்க் கோலம் பூண்டு இலக்குவன் வீர உரை
கட்டினன் சுரிகையும் கழலும்; பல் கணைப்
புட்டிலும் பொறுத்தனன்; கவசம் பூட்டு அமைத்து
இட்டனன்; எடுத்தனன் வரி வில்; ஏந்தலைத்
தொட்டு, அடி வணங்கி நின்று, இனைய சொல்லினான்: 29
இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள்
பருமையும், அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும், நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும், கண்டு, இனி உவத்தி, உள்ளம் நீ. 30
படர் எலாம் படப் படும் பரும யானையின்
திடர் எலாம் உருட்டின, தேரும் ஈர்த்தன,
குடர் எலாம் திரைத்தன, குருதி ஆறுகள்
கடர் எலாம் மடுப்பன, பலவும் காண்டியால். 31
கருவியும், கைகளும், கவச மார்பமும்,
உருவின; உயிரினோடு உதிரம் தோய்வு இல
திரிவன-சுடர்க் கணை-திசைக் கை யானைகள்
வெருவரச் செய்வன; காண்டி, வீர! நீ. 32
கோடகத் தேர், படு குதிரை தாவிய,
ஆடகத் தட்டிடை, அலகை அற்று உகு
கேடகத் தடக் கைகள் கவ்வி, கீதத்தின்
நாடகம் நடிப்பன-காண்டி; நாத! நீ. 33
பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து, நான் இமைப்பின் நீக்கலால்,
விண் முதுகு உளுக்கவும், வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி-வள்ளல்! நீ. 34
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய்
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும்,
கவந்தமும், உலகம் நின் கையது ஆயது என்று
உவந்தன குனிப்பன காண்டி, உம்பர்போல். 35
சூழி வெங் கட கரி, துரக ராசிகள்,
பாழி வன் புயத்து இகல் வயவர், பட்டு அற,
வீழி வெங் குருதியால் அலைந்த வேலைகள்
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால். 36
ஆள் அற; அலங்கு தேர் அழிய; ஆடவர்
வாள் அற; வரி சிலை துணிய; மாக் கரி
தாள் அற, தலை அற; புரவி தாளொடும்
தோள் அற-வடிக் கணை தொடுப்ப-காண்டியால். 37
தழைத்த வான் சிறையன, தசையும் கவ்வின,
அழைத்த வான் பறவைகள், அலங்கு பொன் வடிம்பு
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப்
புழைத்த வான் பெரு வழி போக-காண்டியால். 38
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும்
இரு நிலம் ஆள்கை விட்டு, இன்று, என் ஏவலால்
அரு நரகு ஆள்வது காண்டி-ஆழியாய்! 39
வையகம் துறந்து வந்து அடவி வைகுதல்
எய்தியது உனக்கு என, நின்னை ஈன்றவள்
நைதல் கண்டு உவந்தவள், நவையின் ஓங்கிய
கைகயன் மகள், விழுந்து அரற்றக் காண்டியால். 40
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்!
விரைஞ்சு ஒரு நொடியில், இவ் அனிக வேலையை
உரம் சுடு வடிக் கணை ஒன்றில் வென்று, முப்
புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான் என்றான். 41
இலக்குவனுக்கு பரதனைப் பற்றி இராமன் தெளிவுறுத்தல்
இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ,
கலக்குவென் என்பது கருதினால் அது,
விலக்குவது அரிது; அது விளம்பல் வேண்டுமோ?-
புலக்கு உரித்து ஒரு பொருள், புகலக் கேட்டியால்: 42
நம் குலத்து உதித்தவர், நவையின் நீங்கினர்
எங்கு உலப்புறுவர்கள்? எண்ணின், யாவரே
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்?-
பொங்கு உலத் திரளொடும் பொருத தோளினாய்! 43
எனைத்து உள மறை அவை இயம்பற்பாலன,
பனைத் திரள் கரக் கரிப் பரதன் செய்கையே;
அனைத் திறம் அல்லன அல்ல; அன்னது
நினைத்திலை, என் வயின் நேய நெஞ்சினால். 44
பெருமகன் என்வயின் பிறந்த காதலின்
வரும் என நினைகையும், மண்ணை என்வயின்
தரும் என நினைகையும் தவிர, தானையால்
பொரும் என நினைகையும் புலமைப்பாலதோ? 45
பொன்னொடும், பொரு கழல் பரதன் போந்தனன்,
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே,
என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ?-
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்! 46
சேண் உயர் தருமத்தின் தேவை, செம்மையின்
ஆணியை, அன்னது நினைக்கல் ஆகுமோ?
பூண் இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டு, எனைக்
காணிய; நீ இது பின்னும் காண்டியால். 47
சேனையைத் தவிர்த்து சத்துருக்கனனுடன் பரதன் இராமனை நெருங்குதல்
என்றனன், இளவலை நோக்கி, ஏந்தலும்
நின்றனன்; பரதனும், நிமிர்ந்த சேனையை,
பின் தருக என்று, தன் பிரிவு இல் காதலின்,
தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான். 48
பரதன் நிலையைக் கண்ட இராமன், இலக்குவனனிடம் கூறுதல்
தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன்; அவலம் ஈது என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான், முடிய நோக்கினான். 49
கார்ப் பொரு மேனி அக் கண்ணன் காட்டினான்,
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய! நீ,
தேர்ப் பெருந் தானையால் பரதன் சீறிய
போர்ப் பெருங் கோலத்தைப் பொருந்த நோக்கு எனா. 50
இலக்குவன் நெஞ்சழிந்து நிற்றல்
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் -
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர,
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே. 51
பரதன் இராமனின் திருவடி வணங்குதல்
கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனன், நலத்தின் நீங்கினாள்,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். 52
அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர் அடி வந்து வீழ்ந்தனன் -
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னரே. 53
இராமன் உள்ளம் கலங்கி பரதனை தழுவுதல்
உண்டுகொல் உயிர்? என ஒடுங்கினான் உருக்
கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண் எனும்
புண்டரீகம் பொழி புனல், அவன் சடா
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே. 54
அயாவுயிர்த்து, அழு கணீர் அருவி மார்பிடை,
உயாவுற, திரு உளம் உருக, புல்லினான் -
நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான் -
தயா முதல் அறத்தினைத் தழீஇயது என்னவே. 55
தந்தை இறந்தது கேட்டு இராமன் கலங்குதல்
புல்லினன் நின்று, அவன் புனைந்த வேடத்தைப்
பல் முறை நோக்கினான்; பலவும் உன்னினான்;
அல்லலின் அழுங்கினை; ஐய! ஆளுடை
மல் உயர் தோளினான் வலியனோ? என்றான். 56
அரியவன் உரைசெய, பரதன், ஐய! நின்
பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக்
கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு
உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான் என்றான். 57
விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல்,
புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம்,
கண்ணொடு மனம், சுழல் கறங்கு போல ஆய்,
மண்ணிடை விழுந்தனன் - வானின் உம்பரான். 58
இரு நிலம் சேர்ந்தனன்; இறை உயிர்த்திலன்;
உரும் இனை அரவு என, உணர்வு நீங்கினான்;
அருமையின் உயிர் வர, அயாவுயிர்த்து, அகம்
பொருமினன்; பல் முறைப் புலம்பினான் அரோ: 59
தந்தையை நினைத்து இராமன் புலம்புதல்
நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே!
எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி, வாய்மைக்கு ஆர் உளரே மற்று? என்றான். 60
சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி,
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி,
எற் பெற்று, நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ?-
கொல் பெற்ற வெற்றிக் கொலை பெற்ற கூர் வேலோய்! 61
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க,
பொன் உயிர்க்கு தாரோய்!- பொறை உயிர்த்த ஆறு இதுவோ?
உன் உயிர்க்குக் கூற்றாய் உலகு ஆள உற்றேனோ?-
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய்! 62
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை, இந்தியர்கள்
வெம் பவத்தின் வீய, தவம் இழைத்தவாறு ஈதோ?-
சம்பரப் பேர்த் தானவனைத் தள்ளி, சதமகற்கு, அன்று,
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய்! 63
வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி
பூண்டு, இவ் உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன்,
மாண்டு முடிவது அல்லால், மாயா உடம்பு இது கொண்டு
ஆண்டு வருவது, இனி, யார் முகத்தே நோக்கவோ? 64
தேன் அடைந்த சோலைத் திரு நாடு கைவிட்டுக்
கான் அடைந்தேன் என்னத் தரியாது, காவல! நீ
வான் அடைந்தாய்; இன்னம் இருந்தேன் நான், வாழ்வு உகந்தே!-
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய்! 65
வண்மை இயும், மானமும், மேல் வானவர்க்கும் பேர்க்கிலாத்
திண்மை இயும், செங்கோல் நெறியும், திறம்பாத
உண்மை இயும், எல்லாம் உடனே கொண்டு ஏகினையே!-
தண்மை இ தகை மதிக்கும் ஈந்த தனிக் குடையோய்! 66
பலரும் இராமனை பரிகரித்தல்
என்று எடுத்துப் பற்பலவும் பன்னி, இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும் குலவுத் தோள் கோளரியை,
வன் தடக் கைத் தம்பியரும், வந்து அடைந்த மன்னவரும்,
சென்று எடுத்துத் தாங்கினார்; மா வதிட்டன் தேற்றினான். 67
முனிவர்கள் இராமனை நெருங்குதல்
பன்ன அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம்
பின்னு சடையோரும், பேர் உலகம் ஓர் ஏழின்
மன்னவரும், மந்திரியர் எல்லாரும், வந்து அடைந்தார்;
தன் உரிமைச் சேனைத் தலைவோரும்தாம் அடைந்தார். 68
வசிட்டனின் உரை
மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து,
சுற்றும் இருந்த அமைதியினில், துன்பு உழக்கும்
கொற்றக் குரிசில் முகம் நோக்கி, கோ மலரோன்
பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான்: 69
துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை, பொருந்தும் மன்னுயிர்க்கு;
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதே
மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ? 70
உண்மை இல் பிறவிகள், உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில் தழுவின எனும்
வண்மையை நோக்கிய, அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ? 71
பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்?
மறு அது கற்பினில் வையம் யாவையும்
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டு அவற்கு, இரங்கல் வேண்டுமோ? 72
சீலமும், தருமமும், சிதைவு இல் செய்கையாய்!
சூலமும், திகிரியும், சொல்லும், தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? 73
கண் முதல் காட்சிய, கரை இல் நீளத்த,
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன,
மண் முதல் பூதங்கள் மாயும் என்றபோது,
எண்முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ? 74
புண்ணிய நறு நெயில், பொரு இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில், விதி என் தீயினில்,
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்,
அண்ணலே! அவிவதற்கு, ஐயம் யாவதோ? 75
இவ் உலகத்தினும் இடருளே கிடந்து,
அவ் உலகத்தினும் நரகின் ஆழ்ந்து, பின்
வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள்,
எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ? 76
உண்டுகொல் இது அலது உதவி நீ செய்வது?
எண் தகு குணத்தினாய்! தாதை என்றலால்,
புண்டரீகத் தனி முதற்கும் போக்கு அரு
விண்டுவின் உலகிடை விளங்கினான் அரோ! 77
இராமனிடம் தந்தைக்கு நீர்க்கடன் செய்யுமாறு வசிட்டன் உரைத்தல்
ஐய! நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை;
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ ?
செய்வன வரன் முறை திருத்தி, சேந்த நின்
கையினால் ஒழுக்குதி கடன் எலாம் என்றான். 78
விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப் பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால் என்றான். 79
இராமன் நீர்க்கடன் செய்தல்
என்றபின், ஏந்தலை ஏந்தி வேந்தரும்,
பொன் திணிந்தன சடைப் புனிதனோடும் போய்ச்
சென்றனர், செறி திரைப் புனலில்; செய்க என,
நின்றனர்; இராமனும் நெறியை நோக்கினான். 80
புக்கனன் புணலிடை, முழுகிப் போந்தனன்,
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட, தான்,
முக் கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்-
ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான். 81
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி, பின்,
மான மந்திரத்தவர், மன்னர், மா தவர்
ஏனையர் பிறர்களும், சுற்ற ஏகினன்;
சானகி இருந்த அச் சாலை எய்தினான். 82
சீதையின் பாதங்களில் பரதன் வீழ்ந்து புலம்புதல்
எய்திய வேலையில், தமியள் எய்திய
தையலை நோக்கினன்; சாலை நோக்கினான்;
கைகளின் கண்மலர் புடைத்து, கால்மிசை,
ஐயன், அப் பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ! 83
வெந் துயர் தொடர்தர விம்மி விம்மி, நீர்
உந்திய நிரந்தரம்; ஊற்று மாற்றில;
சிந்திய-குரிசில் அச் செம்மல் சேந்த கண்-
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே! 84
இராமன் சீதைக்கு தயரதன் இறந்ததை கூறுதல்
அந் நெடுந் துயர் உறும் அரிய வீரனைத்
தன் நெடுந் தடக் கையால் இராமன் தாங்கினான்;
நல் நெடுங் கூந்தலை நோக்கி, நாயகன்,
என் நெடும் பிரிவினால், துஞ்சினான் என்றான். 85
சீதையின் துக்கம்
துண்ணெனும் நெஞ்சினாள்; துளங்கினாள்; துணைக்
கண் எனும் கடல் நெடுங் கலுழி கான்றிட,
மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள்,
பண் எனும் கிளவியால் பன்னி, ஏங்கினாள். 86
கல் நகு திரள் புயக் கணவன் பின் செல,
நல் நகர் ஒத்தது, நடந்த கானமும்;
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால்
அன்னமும் துயர்க் கடல் அடிவைத்தாள் அரோ! 87
முனி பத்தினிகள் சீதையை நீராட்டுதல்
ஆயவள்தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர்,
தாயரின், முனிவர்தம் தருமப் பன்னியர்;
தூய நீர் ஆட்டினர்; துயரம் நீக்கினர்;
நாயகற் சேர்த்தினர்; நவையுள் நீங்கினார். 88
சுமந்திரனும் தாயரும் வருதல்
தேன் தரும் தெரியல் அச் செம்மல் நால்வரை
ஈன்றவர் மூவரோடு, இருமை நோக்குறும்
சான்றவர் குழாத்தொடும், தருமம் நோக்கிய
தோன்றல்பால், சுமந்திரன் தொழுது தோன்றினான். 89
இராமனும், தாயாரும் ஏனையோரும் அழுதல்
எந்தை யாண்டையான் இயம்புவீர்? எனா,
வந்த தாயர்தம் வயங்கு சேவடிச்
சிந்தி நின்றனன், சேந்த கண்ண நீர்-
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான். 90
தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ,
ஓய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார்;
ஆய சேனையும், அணங்கனார்களும்,
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார். 91
சீதையைத் தழுவி தாயர் வருந்துதல்
பின்னர் வீரரைப் பெற்ற பெற்றி அப்
பொன் அனார்களும், சனகன் பூவையைத்
துன்னி, மார்பு உறத் தொடர்ந்து புல்லினார்;
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார். 92
அனைவரும் இராமனிடம் வந்து சேர்தல்
சேனை வீரரும், திரு நல் மா நகர்
மான மாந்தரும், மற்றுளோர்களும்,
ஏனை வேந்தரும், பிறரும், யாவரும்,-
கோனை எய்தினார்-குறையும் சிந்தையார். 93
கதிரவன் மறைதல்
படம் செய் நாகணைப் பள்ளி நீங்கினான்
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால்,
தடம் செய் தேரினான், தானும் நீரினால்
கடம் செய்வான் என, கடலில் மூழ்கினான். 94
மறுதினம் அனைவரும் சூழ்ந்திருக்க இராமன் பரதனை வினாவுதல்
அன்று தீர்ந்தபின், அரச வேலையும்,
துன்று செஞ் சடைத் தவரும், சுற்றமும்,
தன் துணைத் திருத் தம்பிமார்களும்,
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான், 95
வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால்,
சரதம் நின்னதே; மகுடம் தாங்கலாய்,
விரத வேடம், நீ என்கொல் வேண்டினாய்?
பரத! கூறு எனாப் பரிந்து கூறினான். 96
பரதன் தன் கருத்தை உரைத்தல்
என்றலும் பதைத்து எழுந்து, கைதொழா
நின்று, தோன்றலை நெடுது நோக்கி, நீ
அன்றி யாவரே அறத்து உளோர்? அதில்
பின்றுவாய் கொலாம்? என்னப் பேசுவான்: 97
மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும்,
நினக்கு ஒன்றா நிலை நிறுவி, நேமியான்-
தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால்,
எனக்கு ஒன்றா, தவம் அடுப்பது எண்ணினால்? 98
நோவது ஆக இவ் உலகை நோய் செய்த
பாவகாரியின் பிறந்த பாவியேன்,
சாவது ஓர்கிலேன்; தவம் செய்வேன் அலேன்;
யாவன் ஆகி, இப் பழிநின்று ஏறுவேன்? 99
நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்,
பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள்
துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர்
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ? 100
பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம்
துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால்,
மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று
அறம் தின்றான் என, அரசு அது ஆள்வெனோ? 101
தொகை இல் அன்பினால் இறைவன் துஞ்ச, நீ
புகையும் வெஞ் சுரம் புகுத, புந்தியால்
வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ, யான்
பகைவனேகொலாம்? இறவு பார்க்கின்றேன்! 102
உந்தை தீமையும், உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்,
எந்தை! நீங்க, மீண்டு அரசு செய்க எனா,
சிந்தை யாவதும் தெரியக் கூறினான். 103
பரதன் வேண்டுகோளுக்கு இராமனின் மறுப்பு உரை
சொற்ற வாசகத் துணிவு உணர்ந்த பின்,
இற்றதோ இவன் மனம்? என்று எண்ணுவான்,
வெற்றி வீர! யான் விளம்பக் கேள் எனா,
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான்: 104
முறையும், வாய்மையும், முயலும் நீதியும்,
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம்
துறையுள் யாவையும், சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால். 105
பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,
விரவு சீலமும், வினையின் மேன்மையும்,-
உர விலோய்!-தொழற்கு உரிய தேவரும்,
குரவரே எனப் பெரிது கோடியால். 106
அந்த நல் பெருங் குரவர் ஆர் எனச்
சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால்,
தந்தை தாயர் என்று இவர்கள் தாம் அலால்,
எந்தை! கூற வேறு எவரும் இல்லையால். 107
தாய் வரம் கொள, தந்தை ஏவலால்,
மேய நம் குலத் தருமம் மேவினேன்;
நீ வரம் கொளத் தவிர்தல் நீர்மையோ?-
ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய்! 108
தனையர் ஆயினார் தந்தை தாயரை
வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ?
நினையல் ஓவிடா நெடிய வன் பழி
புனைதலோ?-ஐய! புதல்வர் ஆதல்தான். 109
இம்மை, பொய் உரைத்து, இவறி, எந்தையார்
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள, யான்,
கொம்மை வெம் முலைக் குவையின் வைகி வாழ்
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ? 110
வரன் நில் உந்தை சொல் மரபினால், உடைத்
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்,
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்,
அரசு நின்னதே; ஆள்க என்னவே,- 111
தான் கொடுக்க இராமனை முடிசூட்டுமாறு பரதன் வேண்டல்
முன்னர் வந்து உதித்து, உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ, பிறந்த பார்
என்னது ஆகில், யான் இன்று தந்தனென்;
மன்ன! போந்து நீ மகுடம் சூடு எனா. 112
மலங்கி வையகம் வருந்தி வைக, நீ,
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ?
கலங்குறாவனம் காத்தி போந்து எனா,
பொலம் குலாவு தாள் பூண்டு, வேண்டினான். 113
பரதனை அரசாட்சி ஏற்க இராமன் கட்டளையிடுதல்
பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு
அசைந்த எந்தையார் அருள, அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ? 114
வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம்,
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ?
தீமைதான், அதின் தீர்தல் அன்றியே,
ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே? 115
எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ
தந்த பாரகம் தன்னை, மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால். 116
மன்னவன் இருக்கவேயும், மணி அணி மகுடம் சூடுக
என்ன, யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி;
அன்னது நினைந்தும், நீ என் ஆணையை மறுக்கலாமோ?
சொன்னது செய்தி; ஐய! துயர் உழந்து அயரல் என்றான். 117
வசிட்டனின் உரை
ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும், உரைக்கலுற்ற
பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கி, பண்டு
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு அறச் சிந்தை நோக்கி,
வள்ளியோய்! கேட்டி என்னா, வசிட்ட மாமுனிவன் சொன்னான்: 118
கிளர் அகன் புனலுள் நின்று, அரி, ஒர் கேழல் ஆய்,
இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ-
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே. 119
ஆதிய அமைதியின் இறுதி, ஐம் பெரும்
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்கபின்,
நாதன் அவ் அகன் புனல் நல்கி, நண்ண அருஞ்
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான். 120
ஏற்ற இத் தன்மையின், அமரர்க்கு இன் அமுது
ஊற்றுடைக் கடல்வணன் உந்தி உந்திய
நூற்று இதழ்க் கமலத்தில், நொய்தின் யாவையும்
தோற்றுவித்து உதவிட, முதல்வன் தோன்றினான். 121
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது
உன் தனிக் குலம்; முதல் உள்ள வேந்தர்கள்
இன்று அளவினும் முறை இகந்துளார் இலை;
ஒன்று உளது உரை இனம்; உணரக் கேட்டியால். 122
இத இயல் இயற்றிய குரவர் யாரினும்,
மத இயல் களிற்றினாய்! மறுஇல் விஞ்சைகள்
பதவிய இருமையும் பயக்க, பண்பினால்
உதவிய ஒருவனே, உயரும் என்பரால். 123
என்றலால், யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்,
அன்று எனாது, இன்று எனது ஆணை; ஐய! நீ
நன்று போந்து அளி, உனக்கு உரிய நாடு என்றான். 124
இராமனின் தன்னிலை விளக்கம்
கூறிய முனிவனைக் குவிந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது, செங்கணான்,
ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை
கூறுவது உளது எனக் கூறல் மேயினான்: 125
சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய்
போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான்-
தேன் தரு மலருளான் சிறுவ!-செய்வென் என்று
ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? 126
தாய் பணித்து உவந்தன, தந்தை, செய்க என
ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத்
தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா
நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ? 127
முன் உறப் பணித்தவர் மொழியை யான் என
சென்னியில், கொண்டு, அது செய்வென் என்றதன்
பின்னுறப் பணித்தனை; பெருமையோய்! எனக்கு
என் இனிச் செய்வகை? உரைசெய் ஈங்கு என்றான். 128
தானும் காடு உறைவதாக பரதன் உரைத்தல்
முனிவனும், உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி என இருந்தனன்; இளைய மைந்தனும்,
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு; நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான். 129
தேவர்களின் உரை
அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார்,
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்: 130
ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப்
போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்;
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம்
காத்தல் உன் கடன்; இவை கடமை என்றனர். 131
இராமன் வானவர் உரைப்படி பரதனை அரசாள கட்டளையிடுதல்
வானவர் உரைத்தலும், மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி, பார் எனா,
தான் அவன் துணை மலர்த் தடக் கை பற்றினான். 132
பரதன் உடன்படுதல்
ஆம் எனில், ஏழ்-இரண்டு ஆண்டில் ஐய! நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி, நானிலம்
கோ முறை புரிகிலை என்னின், கூர் எரி
சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன். 133
பரதன் கருத்திற்கு இராமன் உடன்படுதல்
என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர்
துன்பு இலன்; அவனது துணிவை நோக்கினான்
அன்பினன், உருகினன்; அன்னது ஆக என்றான்-
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான். 134
பரதன் இராமனின் திருவடிகளைப் பெற்று முடிமேற் சூடிச் செல்லல்
விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், அரிது என எண்ணி, ஏங்குவான்,
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். 135
அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலம் இறைஞ்சினன், பரதன் போயினான்-
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். 136
அனைவரும் திரும்புதல்
ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும்,
சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும்,
வான் தரு சேனையும், மற்றும் சுற்றுற,
மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான். 137
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்;
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்;
விண்டு உறை தேவரும் விலகிப் போயினார்;
கொண்டல் தன் ஆணையால் குகனும் போயினான். 138
இராமனின் பாதுகை ஆட்சி செய்ய, பரதன் நந்தியம் பதியில் தங்குதல்
பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்;
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்;
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான். 139
நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்,
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான். 140
இராமன் தென் திசை நோக்கிச் செல்லுதல்
குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால்,
நின்றவர் நலிவரால், நேயத்தால் எனா,
தன் துணைத் தம்பியும் தானும் தையலும்
தென் திசை நெறியினைச் சேறல் மேயினான். 141
மிகைப் பாடல்கள்
அன்ன காதல் அருந் தவர், ஆண் தகை!
நின்னை ஒப்பவர் யார் உளர், நீ அலால்?
என்ன வாழ்த்திடும் ஏல்வையில், இரவியும்
பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டதே. 5-1
இன்ன ஆய எறி கடல் சேனையும்,
மன்னர் யாவரும், மன் இளந் தோன்றலும்,
அன்ன மா முனியோடு எழுந்து, ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம். 19-1
ஐய! நின்னுடைய அன்னை மூவரும்,
வைய மன்னரும், மற்றும் மாக்களும்,
துய்ய நாடு ஒரீஇத் தோன்றினார்; அவர்க்கு
உய்ய நல் அருள் உதவுவாய் என்றான். 89-1
கங்குல் வந்திடக் கண்டு, யாவரும்
அங்கணே துயில் அமைய, ஆர் இருள்
பொங்கு வெம் பகை, போக மற்றை நாள்,
செங் கதிர் குண திசையில் தோன்றினான். 94-1
வானின் நுந்தை சொல் மரபினால் உடைத்தானம் நின்னது என்று இயைந்த தன்மையால்,ஊனினில் பிறந்து உரிமையாகையின்யான் அது ஆள்கிலேன் என, அவன் சொல்வான். 111-1