Kamba Ramayanam aaraniya kandam Part 1
கம்பராமாயணம் ஆரணிய காண்டம்
1. விராதன் வதைப் படலம் 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 3. அகத்தியப் படலம் 4. சடாயு காண் படலம் 5. சூர்ப்பணகைப் படலம் 6. கரன் வதைப் படலம் 7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் கடவுள் வாழ்த்து
பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன், முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவுஅரோ. 0
1. விராதன் வதைப் படலம்
இராமன் இலக்குவன் சீதையொடு அத்திரி முனிவர் ஆசிரமம் அடைதல்
முத்து இருத்தி, அவ் இருந்தனைய மொய்ந் நகையொடும்,
சித்திரக் குனி சிலைக் குமரர், சென்று அணுகினார்-
அத்திரிப் பெயர் அருந் தவன் இருந்த அமைதி,
பத்திரப் பழுமரப் பொழில் துவன்று, பழுவம். 1
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற, திரள் பொன்
கைக் குறுங் கண் மலைபோல், குமரர் காமம் முதல் ஆம்
முக் குறும்பு அற எறிந்த வினை, வால், முனிவனைப்
புக்கு இறைஞ்சினர், அருந் தவன் உவந்து புகலும்: 2
குமரர்! நீர் இவண், அடைந்து உதவு கொள்கை எளிதோ?
அமரர் யாவரொடும், எவ் உலகும் வந்த அளவே!
எமரின் யார் தவம் முயன்றவர்கள்? என்று உருகினன் -
தமர் எலாம் வர, உவந்தனைய தன்மை முனிவன். 3
முவரும் தண்டக வனம் புகல்
அன்ன மா முனியொடு அன்று, அவண் உறைந்து, அவன் அரும்
பன்னி, கற்பின் அனசூயை பணியால், அணிகலன்,
துன்னு தூசினொடு சந்து, இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி, உயர் தண்டக வனம் புகுதலும். 4
விராதன் எதிர்ப்படல்
எட்டொடு எட்டு மத மா கரி, இரட்டி அரிமா,
வட்ட வெங் கண் வரை ஆளி பதினாறு, வகையின்
கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒரு கைத்
தொட்ட முத் தலை அயில் தொகை, மிடல் கழுவொடே, 5
செஞ் சுடர்ச் செறி மயிர்ச் சுருள் செறிந்த செனியன்,
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்ததென, மா
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில்
பஞ்சு பட்டது பட, படியின்மேல் முடுகியே. 6
புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க, மழை சூழ்
விண் துளங்கிட, விலங்கல்கள் குலுங்க, வெயிலும்
கண்டு, உளம் கதிர் குறைந்திட, நெடுங்கடல் சுலாம்
மண் துளங்க, வய அந்தகன் மனம் தளரவே. 7
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற,
பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட,
செக்கர் வான் மழை நிகர்க்க, எதிர் உற்ற செருவத்து
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே, 8
படையொடு ஆடவர்கள், பாய் புரவி, மால் கயிறு, தேர்,
நடைய வாள் அரிகள், கோள் உழுவை, நண்ணிய எலாம்
அடைய வாரி, அரவால் முடி, அனேக வித, வன்
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே. 9
குன்று துன்றின எனக் குமுறு கோப மதமா
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தடக் கை உதவ,
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு பால்
மென்று, தின்று, விளியாது விரியும் பசியொடே, 10
பன்னகாதிபர் பணா மணி பறித்து, அவை பகுத்
தென்ன, வானவர் விமானம் இடையிட்டு அரவிடைத்
துன்னு கோளினொடு தாரகை, தொடுத்த துழனிச்
சன்னவீரம் இடை மின்னு தட மார்பினொடுமே. 11
பம்பு செக்கர், எரி, ஒக்கும் மயிர் பக்கம் எரிய,
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து, ஒளி குலாம்
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை, எயிறு ஒண்
கிம்புரிப் பெரிய தோள்வளையொடும் கிளரவே. 12
தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ,
பொங்கு வெங் கொடுமை என்பது புழுங்கி எழ, மா
மங்கு பாதகம், விடம், கனல், வயங்கு திமிரக்
கங்குல், பூசி வருகின்ற கலி காலம் எனவே, 13
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகுறச்
சுற்றி, வாரண உரித் தொகுதி நீவி தொடர,
கொற்றம் மேவு திசை யானையின் மணிக் குலமுடைக்
கற்றை மாசுணம் விரித்து வரி, கச்சு ஒளிரவே. 14
செங் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய்,
வெங் கண் அங்கவலயங்களும், இலங்க விரவிச்
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்
கங்கணங்களும், இலங்கிய கரம் பிறழவே, 15
முந்து வெள்ளிமலை பொன்னின் மலையொடு முரண,
பந்து முந்து கழல் பாடுபட ஊடு படர்வோன்,
வந்து மண்ணினிடையோன் எனினும், வானினிடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன். 16
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு, புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன்; உரும் ஒத்த குரலன்;
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணிதப்
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான். 17
சார வந்து, அயல் விலங்கினன் - மரங்கள் தறையில்
பேர, வன் கிரி பிளந்து உக, வளர்ந்து இகல் பெறா
வீர வெஞ் சிலையினோர் எதிர், விராதன் எனும் அக்
கோர வெங் கண் உரும் ஏறு அன கொடுந் தொழிலினான். 18
சீதையை விராதன் கவர்தல்
நில்லும், நில்லும் என வந்து, நிணம் உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு வாய் முழை திறந்து,
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை, ஒரு கை,
சொல்லும் எல்லையில், முகந்து உயர் விசும்பு தொடர, 19
காளை மைந்தர் அது கண்டு, கதம் வந்து கதுவ,
தோளில் வெஞ் சிலை இடங் கொடு தொடர்ந்து, சுடர் வாய்
வாளி தங்கிய வலங் கையவர், வஞ்சனை; அடா!
மீள்தி; எங்கு அகல்தி என்பது விளம்ப, அவனும், 20
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்;
ஏதி யாவதுவும் இன்றி, உலகு யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர் தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது என்று புகல, 21
இராமன் போர் தொடுத்தல்
வீரனும் சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக,
போர் அறிந்திலன் இவன்; தனது பொற்பும் முரணும்
தீரும், எஞ்சி என, நெஞ்சின் உறு சிந்தை தெரிய,
பார வெஞ் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே. 22
இலை கொள் வேல் அடல் இராமன், எழு மேக உருவன்,
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு, திரை நீர்,
மலைகள், நீடு தலம், நாகர் பிலம், வானம் முதல் ஆம்
உலகம் ஏழும், உரும் ஏறு என ஒலித்து உரறவே, 23
விராதன் இராம இலக்குவனரை எதிர்த்தல்
வஞ்சகக் கொடிய பூசை நெடு வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு பாவையை விடா,
நெஞ்சு உளுக்கினன், என, சிறிது நின்று நினையா,
அஞ்சனக் கிரி அனான் எதிர் அரக்கன் அழலா, 24
பேய்முகப் பிணி அற, பகைஞர் பெட்பின் உதிரம்
தோய் முகத்தது, கனத்தது, சுடர்க் குதிரையின்
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும்
தீ முகத் திரி சிகைப் படை திரித்து எறியவே. 25
திசையும், வானவரும், நின்ற திசை மாவும், உலகும்,
அசையும், ஆலம் என, அன்ன அயில் மின்னி வரலும்,
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால்
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே. 26
இற்றது இன்றொடு இவ் அரக்கர் குலம் என்று, பகலே,
வெற்ற விண்ணிடை நின்று நெடு மீன் விழுவபோல்,
சுற்று அமைந்த சுடர் எஃகம் அது இரண்டு துணியா
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே. 27
சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு, சிறிதும்
போர் ஒடுங்கலன், மறம்கொடு புழுங்கி, நிருதன்
பார் ஒடுங்குறு கரம்கொடு பருப்பதம் எலாம்
வேரொடும் கடிது எடுத்து, எதிர் விசைத்து, விடலும், 28
வட்டம் இட்ட கிரி அற்று உக, வயங்கு வயிரக்
கட்டு அமைந்த கதிர் வாளி, எதிரே கடவலால்,
விட்ட விட்ட மலை மீள, அவன் மெய்யில், விசையால்
பட்ட பட்ட இடம் எங்கும், உடல் ஊறுபடலும், 29
ஓம் அ ராமரை, ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை, நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா-அணை துறந்து தரை நின்றவரை, ஓர்
மா மராமரம் இறுத்து, அது கொடு எற்ற வரலும், 30
ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால்
வேறு வேறு துணிசெய்து, அது விழுத்து, விசையால்
மாறு மாறு, நிமிர் தோளிடையும் மார்பினிடையும்
ஆறும் ஆறும் அயில் வெங் கணை அழுத்த, அவனும், 31
மொய்த்த முள் தனது உடல்-தலை தொளைப்ப, முடுகி,
கைத்தவற்றின் நிமிரக் கடிது கன்றி, விசிறும்
எய்த்த மெய்ப் பெரிய கேழல் என, எங்கும் விசையின்
தைத்த அக் கணை தெறிப்ப, மெய் சிலிர்த்து, உதறவே, 32
எரியின் வார் கணை இராமன் விட, எங்கும் நிலையாது
உருவி ஓட, மறம் ஓடுதல் செயா உணர்வினான்,
அருவி பாயும் வரைபோல் குருதி ஆறு பெருகிச்
சொரிய, வேக வலி கெட்டு, உணர்வு சோர்வுறுதலும், 33
விராதன் தோள் துணித்தல்
மெய் வரத்தினன், மிடல்-படை விடப் படுகிலன்;
செய்யும் மற்றும் இகல் என்று, சின வாள் உருவி, வன்
கை துணித்தும் என, முந்து கடுகி, படர் புயத்து,
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற, நிருதன், 34
உண்டு எழுந்த உணர்வு அவ்வயின் உணர்ந்து, முடுகி,
தண்டு எழுந்தனைய தோள்கொடு சுமந்து, தழுவி,
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி,
கொண்டு எழுந்தனன் - விழுந்து இழி கொழுங் குருதியான். 35
முந்து வான் முகடு உற, கடிது முட்டி, முடுகி,
சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன் அரோ-
வந்து மேருவினை நாள்தொறும் வலம்செய்து உழல்வோர்,
இந்து சூரியரை ஒத்து, இருவரும் பொலியவே. 36
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய்
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன், அறம்
சிவண தன்ன சிறைமுன் அவரொடு, ஏகு செலவித்து
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன் அரோ. 37
மா தயா உடைய தன் கணவன், வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந்தனள்; புலர்ந்து, பொடியில்,
கோதையோடும் ஒசி கொம்பு என, விழுந்தனள்-குலச்
சீதை, சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள். 38
பின்னை, ஏதும் உதவும் துணை பெறாள்; உரை பெறாள்;
மின்னை ஏய் இடை நுடங்கிட, விரைந்து தொடர்வாள்;
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு,
என்னையே நுகர்தி என்றனள் - எழுந்து விழுவாள். 39
அழுது, வாய் குழறி, ஆர் உயிர் அழுங்கி, அலையா,
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து, இளையவன்
தொழுது, தேவி துயர் கூர விளையாடல் தொழிலோ?
பழுது, வாழி என, ஊழி முதல்வன் பகர்வுறும்: 40
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி, இனிதின்
போகல் நன்று என நினைந்தனென்; இவன், பொரு இலோய்!
சாகல் இன்று பொருள் அன்று என, நகும் தகைமையோன்,
வேக வெங் கழலின் உந்தலும், விராதன் விழவே, 41
விராதன் சாபம் நீங்கி விண்ணில் எழல்
தோள் இரண்டும் வடி வாள்கொடு துணித்து,விசையால்
மீளி மொய்ம்பினர் குதித்தலும், வெகுண்டு,புருவத்
தேள் இரண்டும் நெரிய, சினவு செங் கண் அரவக்
கோள் இரண்டு சுடரும் தொடர்வதின், குறுகலும், 42
புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல் பொலிந்து வரவும்,
விண்ணிடைப் படர்தல் விட்டு, எழு விகற்பம் நினையா,
எண்ணுடைக் குரிசில் எண்ணி, இளையோய்! இவனை, இம்
மண்ணிடைக் கடிது பொத்துதல் வழக்கு எனலுமே, 43
மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய்,
நதம் உலாவு நளி நிர்வயின் அழுந்த, நவை தீர்
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று
உதவு சேவடியினால், அமலன், உந்துதலுமே, 44
பட்ட தன்மையும் உணர்ந்து, படர் சாபம் இட, முன்
கட்ட வன் பிறவி தந்த, கடை ஆன, உடல்தான்
விட்டு, விண்ணிடை விளங்கினன்-விரிஞ்சன் என ஓர்
முட்டை தந்ததனில் வந்த முதல் முன்னவனினே. 45
பொறியின் ஒன்றி, அயல் சென்று திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும்,
அறிவு வந்து உதவ, நம்பனை அறிந்து, பகர்வான்: 46
விராதன் துதி
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ?
ஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப்
பூதங்கள்தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ? 47
கடுத்த கராம் கதுவ, நிமிர் கை எடுத்து, மெய் கலங்கி,
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள, உறு துயரால்,
அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே! பரமே! என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப, நீயோ அன்று ஏன்? என்றாய்? 48
புறங் காண, அகம் காணப் பொது முகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமா அன்! இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய, நீயேயோ கடவாய்தான்? 49
துறப்பதே தொழிலாகத் தோன்றினோர் தோன்றியக்கால்,
மறப்பரோ தம்மை அது அன்றாகில், மற்று அவர் போல்
பிறப்பரோ? எவர்க்கு தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ!
இறப்பதே, பிறப்பதே, எனும் விளையாட்டு இனிது உகந்தோய்! 50
பனி நின்ற பெரும் பிறவிக் கடல் கடக்கும் புணை பற்றி,
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும், நன்றி என்ன,
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின்,
இனி, நின்ற முதல் தேவர் என்கொண்டு, என் செய்வாரே? 51
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி,
மாயாத வானவர்க்கும், மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும்,
நீ ஆதி முதல் தாதை, நெறி முறையால் ஈன்ற எடுத்த
தாய் ஆவார் யாவரே?-தருமத்தின் தனி மூர்த்தி! 52
நீ ஆதி பரம்பரமும்: நின்னவே உலகங்கள்;
ஆயாத சமயமும் நின் அடியவே; அயல் இல்லை;
தீயாரின் ஒளித்தியால்; வெளி நின்றால் தீங்கு உண்டோ ?
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ? 53
தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய!
நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என்கொலோ?-வாராதே வர வல்லாய்! 54
பன்னல் ஆம் என்று உலகம் பலபலவும் நினையுமால்;
உன் அலால் பெருந் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே;
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்மாட்டு அருந் தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ? 55
பொரு அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்,
இரு வினையும் உடையார் போல், அருந் தவம் நின்று இயற்றுவார்;
திரு உறையும் மணி மார்ப! நினக்கு என்னை செயற்பால?
ஒரு வினையும் இல்லார்போல் உறங்குதியால் - உறங்காதாய்! 56
அரவு ஆகிச் சுமத்தியால், அயில் எயிற்றின் ஏந்துதியால்,
ஒரு வாயில் விழுங்குதியால், ஓர் அடியால் ஒளித்தியால்-
திரு ஆன நிலமகளை; இஃது அறிந்தால் சீறாளோ,
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள்? 57
மெய்யைத் தான் சிறிது உணர்ந்து, நீ விதித்த மன்னுயிர்கள்,
உய்யத்தான் ஆகாதோ? உனக்கு என்ன குறை உண்டோ ?
வையத்தார், வானத்தார், மழுவாளிக்கு அன்று அளித்த
ஐயத்தால், சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர்; ஐயா! 58
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ; அவை உன்னை
முன்னம் ஆர் ஒதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ?
என்ன மா மாயம் இவை?-ஏனம் ஆய் மண் இடந்தாய்! 59
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந் தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும்,
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ. 60
விராதன் வரலாறு
இற்று எலாம் இயம்பினான்
நிற்றலோடும், நீ இவ்வாறு
உற்றவாறு உணர்த்து எனா,
வெற்றியான் விளம்பினான். 61
கள்ள மாய வாழ்வு எலாம்
விள்ள, ஞானம் வீசு தாள்
வள்ளல், வாழி! கேள் எனா,
உள்ளவாறு உணர்த்தினான்: 62
இம்பர் உற்று இது எய்தினேன்
வெம்பு விற் கை வீர! பேர்
தும்புரு; தனதன் சூழ்
அம்பரத்து உளேன் அரோ; 63
கரக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால்,
இரக்கம் இன்றி ஏவினான்;
அரக்கன் மைந்தன் ஆயினேன்; 64
அன்ன சாபம் மேவி நான்,
இன்னல் தீர்வது ஏது எனா,
நின்ன தாளின் நீங்கும் என்று,
உன்னும் எற்கு, உணர்த்தினான்; 65
அன்று மூலம், ஆதியாய்!
இன்று காறும் ஏழையேன்
நன்று தீது நாடலேன்;
தின்று, தீய தேடினேன்; 66
தூண்ட நின்ற தொன்மைதான்
வேண்ட நின்ற வேத நூல்
பூண்ட நின் பொலம் கொள் தாள்
தீண்ட, இன்று தேறினேன்; 67
திறத்தின் வந்த தீது எலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை, ஊழியாய்!
பொறுத்தி என்று போயினான். 68
மூவரும் முனிவர் வாழ் சோலை அடைதல்
தேவு காதல் சீரியோன்
ஆவி போயினான் எனா,
பூ உலாவு பூவையோடு
ஏ வலாரும் ஏகினார். 69
கை கொள் கால வேலினார்,
மெய் கொள் வேத மெய்யர் வாழ்
மொய் கொள் சோலை, முன்னினார்;
வைகலானும் வைகினான். 70
மிகைப் பாடல்கள்
ஆதியானிடம் அமர்ந்தவளை அன்பின் அணையா,
ஏதில் இன்னல் அனசூயையை இறைஞ்ச, இறையோய்!
வேத கீதம் அவை வெண் கடல் வெறிப்பு அரு புவி
ஓது முன் பிறவி ஒண் மதி தண்டம் உமிழ்வோய். 3-1
உன்ன அங்கி தர, யோகிபெலை யோக சயனன் -
தன்னது அன்ன சரிதத் தையல் சமைத்த வினை இன்று
உன்னி, உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி. 3-2
பருதியைத் தரும் முன் அத்திரி பதத்து அனுசனைக்
கருதி உய்த்திடுதல் காணுதி, கவந்த பெலையோய்
சுருதி உய்த்த கலனைப் பொதி சுமந்து கொள் எனா,
தருதல் அங்கு அணைச் சயத்து அரசி சாரும் எனலும். 3-3
பாற்கடல் பணிய பாம்பு அணை பரம் பரமனை
ஏற்கை ஏத்தி இவண் எய்துதலின், என்னை எதிர
வாற்கலன் பொதி அசைந்தென கரத்தின் அணையா,
ஊர்க்க முன், பணி உவந்து அருள் எனப் பெரிதுஅரோ. 3-4
அன்றது அக் கடல் அளித்து அகல நின்று அளிதுஅரோ;
சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின் அரோ;
வென்று இதற்கு மொழி மேல் இடுதல் வேண்டுதல் அரோ;
இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ. 3-5
யோசனைப் புகுத யோகி முனி யோக வரையின்
பாச பத்திர் இடர் பற்று அற அகற்று பழையோர்
ஓசை உற்ற பொருள் உற்றன எனப் பெரிது உவந்து,
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண். 4-1
ஆதி நான்மறையினாளரை அடித்தொழில் புரிந்து
ஏது நீரில் இடை எய்தியது நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர துடர்ச்சி மடவார்
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே. 4-2
விண்ணை ஆளி செய்த மாயையினில் மெய் இல் மடவார்
அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம்
என்ன உன்னி, அதை எய்தினர் இறைஞ்சி, அவனின்
அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன் அரோ. 4-3
ஆடு அரம்பை நீடு அரங்கு-
ஊடு நின்று பாடலால்,
ஊடு வந்து கூட, இக்
கூடு வந்து கூடினேன். 62-1
வலம்செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அக்
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன். 64-1
வெம்பு விற்கை வீர! நீ
அம்பரத்து நாதனால்,
தும்புருத்தன் வாய்மையால்,
இம்பர் உற்றது ஈதுஅரோ. 65-1
ஆரணிய காண்டம்
2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
மூவரும் சபரங்கன் தவக்குடில் அடைதல்
குரவம், குவி கோங்கு, அலர் கொம்பினொடும்,
இரவு, அங்கண், உறும் பொழுது எய்தினரால்-
சரவங்கன் இருந்து தவம் கருதும்,
மரவம் கிளர், கோங்கு ஒளிர், வாச வனம். 1
வந்தனன் வாசவன்
செவ் வேலவர் சென்றனர்; சேறல் உறும்
அவ் வேலையின் எய்தினன்-ஆயிரமாம்,
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர், கண்ணினன், விண்ணவர் கோன். 2
அன்னச் செலவின், படிமேல், அயல் சூழ்
பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளிமேல்
மின்னின் செறி கற்றை விரிந்தனபோல்,
பின்னிச் சுடரும், பிறழ், பேர் ஒளியான்; 3
வானில் பொலி தோகையர் கண்மலர் வண்
கானில் படர் கண்-களி வண்டொடு, தார்
மேனித் திரு நாரதன் வீணை இசைத்
தேனில் படியும் செவி வண்டு உடையான்; 4
அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும், நூல்
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா
முனைவன்; முது தேவரில் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலங் கழலான்; 5
செம் மா மலராள் நிகர் தேவியொடும்,
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள்
வெம் மா மிசையான்; விரி வெள்ளி விளங்கு
அம் மா மலை அண்ணலையே அனையான்; 6
தான், இன்று அயல் நின்று ஒளிர் தண் கதிரோன்,
யான் நின்றது என்? என்று, ஒளி எஞ்சிட, மா
வான் நின்ற பெரும் பதம் வந்து, உரு ஆய்
மேல் நின்றென, நின்று ஒளிர் வெண் குடையான்; 7
திசை கட்டிய மால் கரி தெட்ட மதப்
பசை கட்டின, கிட்டின பற்பல போர்
விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர்
இசை கட்டிய ஒத்து இவர், சாமரையான்; 8
தேரில் திரி செங் கதிர் தங்குவது ஒர்
ஊர் உற்றது எனப் பொலி ஒண் முடியான்;
போர் வித்தகன்; நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி மாலையினான்; 9
செற்றி, கதிரின் பொலி செம் மணியின்
கற்றைச் சுடர் விட்டு எரி கஞ்சுகியான்;
வெற்றித் திருவின் குளிர் வெண் நகைபோல்
சுற்றிக் கிளரும் சுடர் தோள்வளையான்; 10
பல் ஆயிரம் மா மணி பாடம்உறும்
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகைதாம்
எல்லாம் உடன் ஆய் எழலால், ஒரு தன்
வில்லால், ஒளிர் மேகம் எனப் பொலிவான்; 11
மானா உலகம்தனில், மன்றல் பொரும்,
தேன் நாறு, நலம் செறி, தொங்கலினான்;
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம்
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான்; 12
வெல்லான் நசையால், விசையால், விடு நாள்,
எல் வான் சுடர் மாலை இராவணன்மேல்,
நெல் வாலும் அறாத, நிறம் பிறழா,
வல் வாய் மடியா, வயிரப் படையான்;- 13
இந்திரனை சரபங்கன் வரவேற்றல்
நின்றான். எதிர் நின்ற நெடுந் தவனும்
சென்றான், எதிர்கொண்டு; சிறப்பு அமையா,
என்தான் இவண் எய்தியவாறு?எனலும்,
பொன்றாத பொலங் கழலோன் புகலும்: 14
நின்னால் இயல் நீதி நெடுந் தவம், இன்று,
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான்
அந் நான்முகன், நின்னை அழைத்தனனால்;
பொன் ஆர் சடை மாதவ! போதுதியால்; 15
எந்தாய்! உலகு யாவையும் எவ் உயிரும்
தந்தான் உறையும் நெறி தந்தனனால்;
நந்தாத பெருந் தவ! நாடுஅது நீ
வந்தாய்எனின், நின் எதிரே வருவான்; 16
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை, யான்
சொல்லாவகை, நீ உணர் தொன்மையையால்;
நல்லாளுடனே நட, நீ எனலும்,
அல்லேன் என, வால் அறிவான் அறைவான்: 17
சொல் பொங்கு பெரும் புகழோடு! தொழில் மாய்
சிற்பங்களின் வீவன சேர்குவெனோ?
அற்பம் கருதேன்; என் அருந் தவமோ
கற்பம் பல சென்றது; காணுதியால்; 18
சொற்றும் தரம் அன்று இது; சூழ் கழலாய்!
பெற்றும், பெறுகில்லது ஓர் பெற்றியதே
மற்று என் பல? நீ இவண் வந்ததனால்,
முற்றும் பகல்தானும் முடிந்துளதால்; 19
சிறு காலை இலா, நிலையோ திரியா,
குறுகா, நெடுகா, குணம் வேறுபடா,
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா, நெறி எய்துவென்;- வான் உடையாய்! 20
என்று, இன்ன விளம்பிடும் எல்லையின்வாய்,
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா,
ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார்,
நின்று, என்னைகொல் இன்னது? எனா நினைவார்: 21
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிரக்
கம்பக் கரி நின்றது கண்டனமால்;
இம்பர், தலை மா தவர்பால், இவன் ஆம்
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா, 22
மானே அனையாளொடு மைந்தனை அப்
பூ நேர் பொழிலின் புறமே நிறுவா,
ஆன்ஏறு என, ஆள் அரிஏறு இது என,
தானே அவ் அகன் பொழில் சாருதலும், 23
இந்திரன் துதி
கண்தாம் அவை ஆயிரமும் கதுவ,
கண் தாமரைபோல் கரு ஞாயிறு எனக்
கண்டான், இமையோர் இறை- காசினியின்
கண்தான், அரு நான்மறையின் கனியை. 24
காணா, மனம் நொந்து கவன்றனனால்,
ஆண் நாதனை, அந்தணர் நாயகனை,
நாள் நாளும் வணங்கிய நன் முடியால்,
தூண் ஆகிய தோள்கொடு, அவன்-தொழுவான், 25
துவசம் ஆர் தொல் அமருள், துன்னாரைச் செற்றும்,
சுருதிப் பெருங் கடலின் சொல் பொருள் கற்பித்தும்,
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும்,
திரு அளித்தும், வீடு அளித்தும், சிங்காமைத் தங்கள்
கவசம் ஆய், ஆர் உயிர் ஆய், கண் ஆய், மெய்த் தவம் ஆய்,
கடை இலா ஞானம் ஆய், காப்பானைக் காணா,
அவசம் ஆய், சிந்தை அழிந்து, அயலே நின்றான்,
அறியாதான் போல, அறிந்த எலாம் சொல்வான்: 26
தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற
சுடரே! தொடக்கு அறுத்தோர் சுற்றமே! பற்றி
நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம்
நிலயமே! வேதம் நெறி முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே! பகையால்
அலைப்புண்டு அடியேம் அடி போற்ற, அந் நாள்
ஈந்த வரம் உதவ எய்தினையே? எந்தாய்!
இரு நிலத்தவோ, நின் இணை அடித் தாமரைதாம்? 27
மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை;
வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;
மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை;
முதல் இடையொடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;
தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால்,
சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,
காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே;
கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ ? 28
நாழி, நரை தீர் உலகு எலாம் ஆக,
நளினத்து நீ தந்த நான்முகனார்தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால், என்றும்
உலவாப் பெருங் குணத்து எம் உத்தமனே! மேல்நாள்,
தாழி தரை ஆக, தண் தயிர் நீர் ஆக,
தட வரையே மத்து ஆக, தாமரைக் கை நோவ
ஆழி கடைந்து, அமுதம் எங்களுக்கே ஈந்தாய்;
-அவுணர்கள்தாம்நின் அடிமை அல்லாமை உண்டோ ? 29
ஒன்று ஆகி, மூலத்து உருவம் பல ஆகி,
உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி
சென்று ஆசறும் காலத்து அந் நிலையது ஆகி,
திறத்து உலகம்தான் ஆகி, செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே! எங்கள்
நவை தீர்க்கும் நாயகமே! நல் வினையே நோக்கி
நின்றாரைக் காத்தி; அயலாரைக் காய்தி;
நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே? 30
வல்லை வரம்பு இல்லாத மாய வினைதன்னால்
மயங்கினரோடு எய்தி, மதி மயங்கி, மேல்நாள்,
அல்லை இறையவன் நீ ஆதி என, பேதுற்று
அலமருவேம்; முன்னை அறப் பயன் உண்டாக,
எல்லை வலயங்கள் நின்னுழை என்று, அந் நாள்
எரியோனைத் தீண்டி, எழுவர் என நின்ற
தொல்லை முதல் முனிவர், சூளுற்ற போதே,
தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ? -எந்தாய்! 31
இன்னன பல நினைந்து, ஏத்தினன் இயம்பா,
துன்னுதல் இடை உளது என நனி துணிவான்,
தன் நிகர் முனிவனை, தர விடை என்னா,
பொன் ஒளிர் நெடு முடிப் புரந்தரன் போனான். 32
மூவரும் சரபங்கன் தவக்குடில் சேர்தல்
போனவன் அக நிலை புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான்;
ஆனவன் அடி தொழ, அருள் வர, அழுதான்
தானுடை இட வகை தழுவினன், நுழைவான். 33
ஏழையும் இளவலும் வருக என, இனிதா
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால்,
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக,
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான். 34
அவ் வயின், அழகனும் வைகினன் -அறிஞன்
செவ்விய அற உரை செவிவயின் உதவ,
நவ்வியின் விழியவளொடு, நனி இருளைக்
கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின். 35
விலகிடு நிழலினன், வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன், இசையன திசை தோய்,
அலகிடல் அரிய, தன் அவிர் கர நிரையால்,
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான். 36
சரபங்கன் உயர்பதம் அடைதல்
ஆயிடை, அறிஞனும், அவன் எதிர் அழுவத்
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்,
நீ விடை தருக என நிறுவினன், நெறியால்,
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான். 37
வரி சிலை உழவனும், மறை உழவனை, நீ
புரி தொழில் எனை? அது புகலுதி எனலும்,
திருமகள் தலைவ! செய் திருவினை உற, யான்
எரி புக நினைகுவென்; அருள் என, இறைவன்: 38
யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ?-
மான் வரு தனி உரி மார்பினை! எனலும்,
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன்
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான்: 39
ஆயிர முகம் உள தவம் அயர்குவென், யான்;
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன்;
போயின இரு வினை; புகலுறு விதியால்
மேயினை; இனி ஒரு வினை இலை;-விறலோய்! 40
இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா
வந்தனன், மருவுதி மலர் அயன் உலகம்;
தந்தனென் என, அது சாரலென்,-உரவோய்!-
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன். 41
ஆதலின், இது பெற அருள் என உரையா,
காதலி அவளொடு கதழ் எரி முழுகி,
போதலை மருவினன், ஒரு நெறி-புகலா
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன். 42
தேவரும், முனிவரும், உறுவது தெரிவோர்,
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர்,
ஏவரும், அறிவினில் இரு வினை ஒருவி,
போவது கருதும் அவ் அரு நெறி புக்கான். 43
அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிதுஎனின், இறுதியில் அவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ? 44
ஆரணிய காண்டம்
3. அகத்தியப் படலம்
மூவரும் தவக்குடிலில் இருந்து நீங்கல்
அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின்,
இனியவர், இன்னலின் இரங்கும் நெஞ்சினர்,
குனி வரு திண் சிலைச் குமரர், கொம்பொடும்,
புனிதனது உறையுள்நின்று அரிதின் போயினார். 1
மலைகளும், மரங்களும், மணிக் கற்பாறையும்,
அலை புனல் நதிகளும், அருவிச் சாரலும்,
இலை செறி பழுவமும், இனிய சூழலும்,
நிலை மிகு தடங்களும், இனிது நீங்கினார். 2
தண்டக வனத்தில் வாழும் தவமுனிவர்களின் மகிழ்ச்சி
பண்டைய அயன் தரு பாலகில்லரும்,
முண்டரும், மோனரும், முதலினோர்கள், அத்
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனை, களிக்கும் சிந்தையார். 3
கனல் வரு கடுஞ் சினத்து அரக்கர் காய, ஒர்
வினை பிறிது இன்மையின், வெதும்புகின்றனர்;
அனல் வரு கானகத்து, அமுது அளாவிய
புனல் வர, உயிர் வரும் உலவை போல்கின்றார். 4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார்;
தீ வரு வனத்திடை இட்டுத் தீர்ந்தது ஓர்
தாய் வர, நோக்கிய கன்றின் தன்மையார். 5
கரக்க அருங் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்,
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கிச் சோருநர்,
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார், ஒரு
மரக்கலம் பெற்றென, மறுக்கம் நீங்கினார். 6
தெரிஞ்சுற நோக்கினர்- செய்த செய் தவம்
அருஞ் சிறப்பு உதவ, நல் அறிவு கைதர,
விரிஞ்சுறப் பற்றிய பிறவி வெந் துயர்ப்
பெருஞ் சிறை வீடு பெற்றனைய பெற்றியார். 7
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம்
பூண்டுளர் ஆயினும், பொறையின் ஆற்றலால்,
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்;
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்அரோ. 8
முனிவர்கள் மூவரையும் வாழ்த்தி, தம் குறை கூறல்
எழுந்தனர், எய்தினர், இருண்ட மேகத்தின்
கொழுந்து என நின்ற அக் குரிசல் வீரனை;
பொழிந்து எழு காதலின் பொருந்தினார், அவன்
தொழும்தொறும் தொழும்தொறும், ஆசி சொல்லுவார். 9
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி, இவ் வயின்
நனி உறை என்று, அவற்கு அமைய நல்கி, தாம்
தனி இடம் சார்ந்தனர்; தங்கி, மாதவர்
அனைவரும் எய்தினர், அல்லல் சொல்லுவான். 10
எய்திய முனிவரை இறைஞ்சி, ஏத்து உவந்து,
ஐயனும் இருந்தனன்; அருள் என்? என்றலும்,
வையகம் காவலன் மதலை! வந்தது ஓர்
வெய்ய வெங் கொடுந் தொழில் விளைவு கேள் எனா, 11
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்,
அரக்கர் என்று உளர் சிலர், அறத்தின் நீங்கினார்,
நெருக்கவும், யாம் படர் நெறி அலா நெறி
துரக்கவும், அருந் தவத் துறையுள் நீங்கினேம். 12
வல்லியம் பல திரி வனத்து மான் என,
எல்லியும் பகலும், நொந்து இரங்கி ஆற்றலெம்;
சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம்;
வில் இயல் மொய்ம்பினாய்! வீடு காண்டுமோ? 13
மா தவத்து ஒழுகலெம்; மறைகள் யாவையும்
ஓதலெம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்;
மூதெரி வளர்க்கிலெம்; முறையின் நீங்கினோம்;
ஆதலின், அந்தணரேயும் ஆகிலேம்! 14
இந்திரன் எனின், அவன் அரக்கர் ஏயின
சிந்தையில் சென்னியில், கொள்ளும் செய்கையான்;
எந்தை! மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார்?
வந்தனை, யாம் செய்த தவத்தின் மாட்சியால். 15
உருளுடை நேமியால் உலகை ஓம்பிய
பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா
இருளுடை வைகலெம்; இரவி தோன்றினாய்;
அருளுடை வீர! நின் அபயம் யாம் என்றார். 16
இராமன் அபயம் அளித்தல்
புகல் புகுந்திலரேல்; புறத்து அண்டத்தின்
அகல்வரேனும், என் அம்பொடு வீழ்வரால்;
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா,
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான். 17
வேந்தன் வீயவும், யாய் துயர் மேவவும்,
ஏந்தல் எம்பி வருந்தவும், என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும், யான் வனம்
போந்தது, என்னுடைப் புண்ணியத்தால் என்றான். 18
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி தொலையேன்எனின்,
இறந்துபோகினும் நன்று; இது அல்லது,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? 19
நிவந்த வேதியர் நீவிரும், தீயவர்
கவந்தபந்தக் களிநடம் கண்டிட,
அமைந்த வில்லும் அருங் கணைத் தூணியும்
சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால். 20
ஆவுக்கு ஆயினும், அந்தணர்க்கு ஆயினும்,
யாவர்க்கு ஆயினும், எளியவர்க்கு ஆயினும்,
சாவப்பெற்றவரே, தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். 21
சூர் அறுத்தவனும், சுடர் நேமியும்,
ஊர் அறுத்த ஒருவனும், ஓம்பினும்,
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர்என்றான். 22
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட,
இரைத்த காதலர், ஏகிய இன்னலர்,
திரித்த கோலினர், தே மறை பாடினர்;
நிருத்தம் ஆடினர்; நின்று விளம்புவார்; 23
தோன்றல்! நீ முனியின், புவனத் தொகை
மூன்று போல்வன முப்பது கோடி வந்து
ஏன்ற போதும், எதிர் அல; என்றலின்
சான்றலோ, எம் தவப் பெரு ஞானமே. 24
அன்னது ஆகலின், ஏயின ஆண்டு எலாம்,
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் எனச்
சொன்ன மா தவர் பாதம் தொழுது, உயர்
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான். 25
பத்து ஆண்டுகள் இனிது கழிதல்
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு, அவண்,
மைந்தர், தீது இலர் வைகினர்; மா தவர்
சிந்தை எண்ணி, அகத்தியற் சேர்க என,
இந்து - நன்னுதல் தன்னொடும் ஏகினார். 26
அகத்தியனைக் காணச் செல்லும் இராமனைச் சுதீக்கணன் உபசரித்தல்
விடரகங்களும், வேய் செறி கானமும்,
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார்;
சுடரும் மேனிச் சுதீக்கணன் என்னும் அவ்
இடர் இலான் உறை சோலை சென்று, எய்தினார். 27
அருக்கன் அன்ன முனிவனை அவ் வழி,
செருக்கு இல் சிந்தையர், சேவடி தாழ்தலும்,
இருக்க ஈண்டு என்று, இனியன கூறினான்;
மருக் கொள் சோலையில் மைந்தரும் வைகினார். 28
வைகும் வைகலின், மாதவன், மைந்தன்பால்
செய்கை யாவையும் செய்து, இவண், செல்வ! நீ
எய்த யான் செய்தது எத் தவம்? என்றனன்;
ஐயனும், அவற்கு அன்பினன் கூறுவான்; 29
சொன்ன நான்முகன்தன் வழித் தோன்றினர்
முன்னையோருள், உயர் தவம் முற்றினார்
உன்னின் யார் உளர்? உன் அருள் எய்திய
என்னின் யார் உளர், இற் பிறந்தார்? என்றான். 30
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு, எதிர்,
நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான்:
அவம் இலா விருந்து ஆகி, என்னால் அமை
தவம் எலாம் கொளத் தக்கனையால் என்றான். 31
மறைவலான் எதிர், வள்ளலும் கூறுவான்:
இறைவ! நின் அருள் எத் தவத்திற்கு எளிது?
அறைவது ஈண்டு ஒன்று; அகத்தியற் காண்பது ஓர்
குறை கிடந்தது, இனி எனக் கூறினான். 32
நல்லதே நினைந்தாய்; அது, நானும் முன்
சொல்லுவான் துணிகின்றது; தோன்றல்! நீ
செல்தி ஆண்டு; அவற் சேருதி; சேர்ந்தபின்,
இல்லை, நின்வயின் எய்தகில்லாதவே. 33
அன்றியும் நின் வரவினை ஆதரித்து,
இன்றுகாறும் நின்று ஏமுறுமால்; அவற்
சென்று சேருதி; சேருதல், செவ்வியோய்!
நன்று தேவர்க்கும்; யாவர்க்கும் நன்று எனா, 34
இராமன் அகத்தியனைக் காணல்
வழியும் கூறி, வரம்பு அகல் ஆசிகள்
மொழியும் மா தவன் மொய்ம் மலர்த் தாள் தொழா,
பிழியும் தேனின் பிறங்கு அருவித் திரள்
பொழியும் சோலை விரைவினில் போயினார். 35
ஆண்தகையர் அவ் வயின் அடைந்தமை அறிந்தான்;
ஈண்டு, உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த,
மாண்ட வரதன் சரண் வணங்க, எதிர் வந்தான் -
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான். 36
பண்டு, அவுணர் மூழ்கினர்; படார்கள் என வானோர்,
எண் தவ! எமக்கு அருள்க எனக் குறையிரப்பக்
கண்டு, ஒரு கை வாரினன் முகந்து, கடல் எல்லாம்
உண்டு, அவர்கள் பின், உமிழ்க என்றலும், உமிழ்ந்தான். 37
தூய கடல் நீர் அடிசில் உண்டு, அது துரந்தான்;
ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்;
மாய-வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக்
காயம் இனிது உண்டு, உலகின் ஆர் இடர் களைந்தான். 38
யோகமுறு பேர் உயிர்கள்தாம், உலைவுறாமல்
ஏகு நெறி யாது? என, மிதித்து அடியின் ஏறி,
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்
நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39
மூசு அரவு சூடு முதலோன், உரையின், மூவா
மாசு இல் தவ! ஏகு என, வடாது திசை மேல்நாள்
நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா,
ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40
உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி,-
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங் கண்
தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்-தந்தான். 41
அகத்தியன், இராமனை வரவேற்று, அளவளாவல்
விண்ணினில், நிலத்தினில், விகற்ப உலகில், பேர்
எண்ணினில், இருக்கினில், இருக்கும் என யாரும்
உள் நினை கருத்தினை, உறப் பெறுவெனால், என்
கண்ணினில் எனக் கொடு களிப்புறு மனத்தான். 42
இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும்
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு
அரைத்தும், அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று
உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான். 43
உய்ந்தனர் இமைப்பிலர்; உயிர்த்தனர் தவத்தோர்;
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள்; ஆனா
வெந் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான்
வந்தனன் மருத்துவன் என, தனி வலிப்பான். 44
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து
ஊன் நுகர் அரக்கர் உருமைச் சுடு சினத்தின்
கான அனலைக் கடிது அவித்து, உலகு அளிப்பான்,
வான மழை வந்தது என, முந்துறு மனத்தான். 45
கண்டனன் இராமனை வர; கருணை கூர,
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய, நின்றான் -
எண் திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்ய,
குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46
நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்;
அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால்,
நன்று வரவு என்று, பல நல் உரை பகர்ந்தான்-
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். 47
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற,
காதல் மிக நின்று, எழில் கமண்டலுவின் நல் நீர்
மா தவர்கள் வீசி, நெடு மா மலர்கள் தூவ,
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான். 48
பொருந்த, அமலன் பொழிலகத்து இனிது புக்கான்;
விருந்து அவன் அமைத்தபின், விரும்பினன்; விரும்பி,
இருந் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து, என்
அருந் தவம் முடித்தனை; அருட்கு அரச! என்றான். 49
என்ற முனியைத் தொழுது, இராமன், இமையோரும்,
நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும்,
உன் தன் அருள் பெற்றிலர்கள்; உன் அருள் சுமந்தேன்;
வென்றனென் அனைத்து உலகும்; மேல் இனி என்? என்றான். 50
தண்டக வனத்து உறைதி என்று உரைதரக் கொண்டு,
உண்டு வரவு இத் திசை என, பெரிது உவந்தேன்;
எண் தகு குணத்தினை! எனக் கொடு, உயர் சென்னித்
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்: 51
ஈண்டு உறைதி, ஐய! இனி, இவ் வயின் இருந்தால்,
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய்;
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால்,
மாண்டு உக மலைந்து, எமர் மனத் துயர் துடைப்பாய்; 52
வாழும் மறை; வாழும் மனு நீதி; அறம் வாழும்;
தாழும் இமையோர் உயர்வர்; தானவர்கள் தாழ்வார்;
ஆழி உழவன் புதல்வ! ஐயம் இலை; மெய்யே;
ஏழ் உலகும் வாழும்; இனி, இங்கு உறைதி என்றான். 53
செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தித்
தருக்கு அழிதர, கடிது கொல்வது சமைந்தேன்;
வருக்க மறையோய்! அவர் வரும் திசையில் முந்துற்று
இருக்கை நலம்; நிற்கு அருள் என்? என்றனன் இராமன். 54
இராமனுக்கு அகத்தியன் வில், கணை புட்டில் வழங்குதல்
விழுமியது சொற்றனை; இவ் வில் இது இவண், மேல்நாள்
முழுமுதல்வன் வைத்துளது; மூஉலகும், யானும்,
வழிபட இருப்பது; இது தன்னை வடி வாளிக்
குழு, வழு இல் புட்டிலொடு கோடி என, நல்கி, 55
இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா. 56
பஞ்சவடியின் சிறப்பு
ஓங்கும் மரன் ஓங்கி, மலை ஓங்கி, மணல் ஓங்கி,
பூங் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மி,
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின்
பாங்கர் உளதால், உறையுள் பஞ்சவடி - மஞ்ச! 57
கன்னி இள வாழை கனி ஈவ; கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள; தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள; போதா,
அன்னம் உள, பொன் இவளொடு அன்பின் விளையாட. 58
மூவரும் அகத்தியனிடம் விடைபெற்றுச் செல்லுதல்
ஏகி, இனி அவ் வயின் இருந்து உறைமின் என்றான்;
மேக நிற வண்ணனும் வணங்கி, விடை கொண்டான்;
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின்
போக, முனி சிந்தை தொடர, கடிது போனான். 59
மிகைப் பாடல்கள்
அருந் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து ஒருவன், பொன்றிலாப்
பெருந்தவம் செய்தவன், பெற்ற மாட்சியால்
வருந்தினெம் நெடும் பகல்-வரத!-யாம் எலாம். 14-1
தேவர்கள் தமைத் தினம் துரந்து, மற்று அவர்
தேவியர்தமைச் சிறைப்படுத்தி, திக்கு எலாம்
கூவிடத் தடிந்து, அவர் செல்வம் கொண்ட போர்
மா வலித் தசமுகன் வலத்துக்கு யார் வலார்? 14-2
அவன் வலி படைத்து, மற்று அரக்கர் யாவரும்,
சிவன் முதல் மூவரை, தேவர் சித்தரை,
புவனியின் முனிவரை, மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர்-இறைவ!-இன்னுமே. 14-3
ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல்
மேய போர் அரக்கரே மேவல் அல்லதை,
தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து
ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம், ஐயா! 14-4
வெள்ளியங் கிரியிடை விமலன் மேலை நாள்,
கள்ளிய அரக்கரைக் கடிகிலேன் எனா,
ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான்; கடற்
பள்ளிகொள்பவன் பொருது இளைத்த பான்மையான். 14-5
நான் முகன் அவர்க்கு நல் மொழிகள் பேசியே
தான் உறு செய் வினைத்தலையில் நிற்கின்றான்;
வானில் வெஞ் சுடர் முதல் வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அருஞ் சிறைப்பட்டு மீண்டுளார். 14-6
என்று, பினும், மா தவன் எடுத்து இனிது உரைப்பான்;
அன்று, அமரர் நாதனை அருஞ் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச முகப் பதகன் ஆதி
வன் திறல் அரக்கர் வளிமைக்கு நிகர் யாரே! 53-1
ஆயவர்கள் தங்கள் குலம் வேர் அற மலைந்தே,
தூய தவ வாணரொடு தொல் அமரர்தம்மை
நீ தனி புரந்திடுதல் நின் கடனது என்றான்;
நாயகனும், நன்று! என அவற்கு நவில்கின்றான். 53-2
ஆரணிய காண்டம்
4. சடாயு காண் படலம்
கழுகின் வேந்தன் சடாயுவை காணல்
நடந்தனர் காவதம் பலவும்; நல் நதி
கிடந்தன, நின்றன; கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன, துவன்றின; சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே. 1
உருக்கிய சுவணம் ஒத்து, உதயத்து உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம்
தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் சிறை
விரித்து இருந்தனன் என, விளங்குவான் தனை, 2
முந்து ஒரு கரு மலை முகட்டு முன்றிலின்
சந்திரன் ஒளியொடு தழுவச் சார்த்திய,
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய,
மந்தரகிரி என வயங்குவான் தனை. 3
மால் நிற விசும்பு எழில் மறைய, தன் மணிக்
கால் நிறச் சேயொளி கதுவ, கண் அகல்
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்தென, பொலிகின்றான் தனை, 4
தூய்மையன், இருங் கலை துணிந்த கேள்வியன்,
வாய்மையன், மறு இலன், மதியின் கூர்மையன்,
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்
சேய்மையின் நோக்குறு சிறு கணான் தனை, 5
வீட்டி வாள் அவுணரை, விருந்து கூற்றினை
ஊட்டி, வீழ் மிச்சில் தான் உண்டு, நாள்தொறும்
தீட்டி, மேல் இந்திரன் சிறு கண் யானையின்
தோட்டிபோல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான் தனை, 6
கோள் இரு-நாலினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரிபோல் ஆரத்தான் தனை,
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய
வாள் இரவியின் பொலி மௌலியான் தனை, 7
சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை,
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை,
சிற்பம் கொள் பகல் எனக் கடிது சென்று தீர்
கற்பங்கள் எனைப் பல கண்டுளான் தனை, 8
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று, அது
தாங்கலது இரு நிலம் தாழ்ந்து தாழ்வுற
வீங்கிய வலியினில் இருந்த வீரனை-
ஆங்கு அவர் அணுகினர், அயிர்க்கும் சிந்தையார். 9
ஒருவரை ஒருவர் ஐயுறல்
இறுதியைத் தன் வயின் இயற்ற எய்தினான்
அறிவு இலி அரக்கன் ஆம்; அல்லனாம் எனின்,
எறுழ் வலிக் கலுழனே? என்ன உன்னி, அச்
செறி கழல் வீரரும், செயிர்த்து நோக்கினார். 10
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை,
அனையவன் தானும் கண்டு, அயிர்த்து நோக்கினான் -
வினை அறு நோன்பினர் அல்லர்; வில்லினர்;
புனை சடை முடியினர்; புலவரோ? எனா. 11
புரந்தரன் முதலிய புலவர் யாரையும்
நிரந்தரம் நோக்குவென்; நேமியானும், அவ்
வரம் தரும் இறைவனும், மழுவலாளனும்,
கரந்திலர் என்னை; யான் என்றும் காண்பெனால். 12
காமன் என்பவனையும், கண்ணின் நோக்கினேன்;
தாமரைச் செங் கண் இத் தடங் கை வீரர்கள்
பூ மரு பொலங் கழற் பொடியினோடும், ஒப்பு
ஆம் என அறிகிலென்; ஆர்கொலாம் இவர்? 13
உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்;
மலர்மகட்கு உவமையாளோடும் வந்த இச்
சிலை வலி வீரரைத் தெரிகிலேன் எனா, 14
கரு மலை செம் மலை அனைய காட்சியர்;
திரு மகிழ் மார்பினர்; செங் கண் வீரர்தாம்,
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை, இருவரும் ஒத்துளார் அரோ. 15
யார்? எனச் சடாயு வினவல்
எனப் பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான்,
சினப் படை வீரர்மேல் செல்லும் அன்பினான்,
கனப் படை வரி சிலைக் காளை நீவிர் யார்?
மனப்பட, எனக்கு உரைவழங்குவீர் என்றான். 16
தயரதன் மைந்தர் என அறிந்த சடாயு மகிழ்தல்
வினவிய காலையில், மெய்ம்மை அல்லது
புனை மலர்த் தாரவர் புகல்கிலாமையால்,
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான்,
வனை கழல் தயரதன், மைந்தர் யாம் என்றார். 17
உரைத்தலும், பொங்கிய உவகை வேலையன்,
தரைத்தலை இழிந்து, அவர்த் தழுவு காதலன்,
விரைத் தடந் தாரினான், வேந்தர் வேந்தன் தன்,
வரைத் தடந் தோள் இணை வலியவோ? என்றான். 18
தயரதன் மறைவு அறிந்த சடாயுவின் துயரம்
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன்
துறக்கம் உற்றான் என, இராமன் சொல்லலும்,
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான்;
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான். 19
தழுவினர், எடுத்தனர், தடக் கையால்; முகம்
கழுவினர் இருவரும், கண்ணின் நீரினால்;
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும்,
அழிவுறு நெஞ்சினன், அரற்றினான் அரோ. 20
பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக் குடைக்கும் பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற
கரவல் அருங் கற்பகமும், உடுபதியும், கடல் இடமும், களித்து வாழ-
புரவலர்தம் புரவலனே! பொய்ப் பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!-
இரவலரும், நல் அறமும், யானும், இனி என் பட நீத்து ஏகினாயே? 21
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த
நிலம் காவல் அது கிடக்க, நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின்
நலம் காண் நடந்தனையோ? நாயகனே! தீவினையேன், நண்பினின்றும்,
விலங்கு ஆனேன் ஆதலினால்,விலங்கினேன்;இன்னும் உயிர்விட்டிலேனால். 22
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனைத் தடிந்த அந் நாள்,
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய, நீ உடல்; நான் ஆவி என்று
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய்! செப்பினாய்; திறம்பா, நின் சொல்;
உயிர் கிடக்க, உடலை விசும்பு ஏற்றினார், உணர்வு இறந்த கூற்றினாரே. 23
எழுவது ஓர் இசை பெருக, இப்பொழுதே, ஒப்பு அரிய எரியும் தீயில்
விழுவதே நிற்க, மட மெல்லியலார்- தம்மைப்போல் நிலத்தின்மேல் வீழ்ந்து
அழுவதே யான்? என்னா, அறிவுற்றான் என எழுந்து, ஆங்கு அவரை நோக்கி,
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர்! கேண்மின் என முறையின் சொல்வான்: 24
சடாயு இறக்கத் துணிதல்
அருணன் தன் புதல்வன் யான்; அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன்; ஆழி
இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன் உயிர்த் துணைவன்; இமையோரோடும்
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;-
தருணம் கொள் பேர் ஒளியீர்!-சம்பாதிபின் பிறந்த சடாயு என்றான். 25
ஆண்டு அவன் ஈது உரைசெய்ய, அஞ்சலித்த மலர்க்கையார் அன்பினோடும்
மூண்ட பெருந் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்க்கண் மொய்த்த நீரார்,-
பூண்ட பெரும் புகழ் நிறுவி; தம் பொருட்டால் பொன்னுலகம் புக்க தாதை,
மீண்டனன்வந்தான்அவனைக்கண்டனரே ஒத்தனர்-அவ்விலங்கல்தோளார். 26
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உறத் தழுவி, மக்காள்! நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர்; உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும், தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம்; பீழை பாராது,
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல்,இத் துயரம் மறவேன் என்றான். 27
சடாயுவை இராம இலக்குவர் தடுத்தல்
உய்விடத்து உதவற்கு உரியானும், தன்
மெய் விடக் கருதாது, விண் ஏறினான்;
இவ் இடத்தினில், எம்பெருமாஅன்! எமைக்
கைவிடின், பினை யார் களைகண் உளார்? 28
தாயின், நீங்க அருந் தந்தையின், தண் நகர்
வாயின், நீங்கி, வனம் புகுந்து, எய்திய
நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை
நீயும் நீங்குதியோ?-நெறி நீங்கலாய்! 29
என்று சொல்ல, இருந்து அழி நெஞ்சினன்,
நின்ற வீரரை நோக்கி நினைந்தவன்,
அன்று அது என்னின், அயோத்தியின், ஐயன்மீர்
சென்றபின் அவற் சேர்குவென் யான் என்றான். 30
சடாயு இராம இலக்குவர் வனம் புகுந்த காரணத்தை வினாவுதல்
வேந்தன் விண் அடைந்தான் எனின், வீரர் நீர்
ஏந்து ஞாலம் இனிது அளியாது, இவண்
போந்தது என்னை? புகுந்த என்? புந்தி போய்க்
காந்துகின்றது, கட்டுரையீர் என்றான். 31
தேவர், தானவர், திண் திறல் நாகர், வேறு
ஏவர் ஆக, இடர் இழைத்தார் எனின்,-
பூ அராவு பொலங் கதிர் வேலினீர்!-
சாவர் ஆக்கி, தருவென் அரசு என்றான். 32
இராமன் இலக்குவனுக்கு குறிப்பால் விடையிறுத்தல்
தாதை கூறலும், தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன்; அவனும், தன் சிற்றவை-
மாதரால் வந்த செய்கை, வரம்பு இலா
ஓத வேலை, ஒழிவு இன்று உணர்த்தினான். 33
இராமனை சடாயு போற்றுதல்
உந்தை உண்மையன் ஆக்கி, உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக்கொண்டு, தாரணி,
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே!
எந்தை வல்லது யாவர் வல்லார்? எனா, 34
அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்
புல்லி, மோந்து, பொழிந்த கண்ணீரினன்,
வல்லை மைந்த! அம் மன்னையும் என்னையும்
எல்லை இல் புகழ் எய்துவித்தாய் என்றான். 35
சடாயு சீதையைப் பற்றி வினவி அறிதல்
பின்னரும், அப் பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்;
மன்னர் மன்னவன் மைந்த! இவ் வாணுதல்
இன்னள் என்ன இயம்புதியால் என்றான். 36
அல் இறுத்தன தாடகை ஆதியா,
வில் இறுத்தது இடை என, மேலைநாள்
புல் இறுத்தது யாவும் புகன்று, தன்
சொல் இறுத்தனன் - தோன்றல்பின் தோன்றினான். 37
பஞ்சவடியில் தங்க உள்ளதை இராமன் உரைத்தல்
கேட்டு உவந்தனன், கேழ் கிளர் மௌலியான்;
தோட்டு அலங்கலினீர்! துறந்தீர், வள
நாட்டின்; நீவிரும் நல்நுதல்தானும் இக்
காட்டில் வைகுதிர்; காக்குவென் யான் என்றான். 38
இறைவ! எண்ணி, அகத்தியன் ஈந்துளது,
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்
துறையுள் உண்டு ஒரு குழல்; அச் சூழல் புக்கு
உறைதும் என்றனன் -உள்ளத்து உறைகுவான். 39
மூவரும் பஞ்சவடி சேர்தல்
பெரிதும் நன்று; அப் பெருந் துறை வைகி, நீர்
புரிதிர் மா தவம்; போதுமின்; யான் அது
தெரிவுறுத்துவென் என்று, அவர், திண் சிறை
விரியும் நீழலில் செல்ல, விண் சென்றனன். 40
ஆய சூழல் அறிய உணர்த்திய
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்
போய பின்னை, பொரு சிலை வீரரும்
ஏய சோலை இனிது சென்று எய்தினார். 41
வார்ப் பொற் கொங்கை மருகியை, மக்களை,
ஏற்பச் சிந்தனையிட்டு,-அவ் அரக்கர்தம்
சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் -சேக்கையில்
பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான். 42
மிகைப் பாடல்கள்
தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள்,
தொக்க பதின்மூவரை அக் காசிபனும் புணர்ந்தனன்; அத் தோகைமாருள்,
மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈன்றாள்;
மைக்கருங்கண்திதி என்பாள் அதின் இரட்டி அசுரர்தமைவயிறு வாய்த்தாள்.24-1
தானவரே முதலோரைத் தனு பயந்தாள்; மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால்; சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள்; தெரிக்குங்காலை,
மானமுடைக் குரோதவசை கழுதை, மரை,ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள். 24-2
மழை புரை பூங் குழல் விநதை, வான், இடி, மின், அருணனுடன் வயிநதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறுமுதல் பெரும் பறவை தம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல், காடை, பல பிறவும் ஈன்றாள்;
கழை எனும் அக்கொடி பயந்தாள், கொடியுடனே செடி முதலாக் கண்ட எல்லாம். 24-3
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி, உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும்மாது இளைஈந்தாள்,செலசரம் ஆகியபலவும்,தெரிக்குங்காலை.24-4
அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை, கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கந்துருவுடனே, குரோதவசை, தாம்பிரை, ஆம் மட நலார்கள்,
விதி முறையே, இவை அனைத்தும் பயந்தனர்கள்; விநதை சுதன் அருணன் மென் தோள்,
புது மதி சேர் நுதல், அரம்பைதனைப் புணர, உதித்தனம் யாம், புவனிமீதே. 24-5
என்று உரைத்த எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித் தொழுது, கண்
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக-
நின்று, மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார். 27-1
ஆரணிய காண்டம்
5. சூர்ப்பணகைப் படலம்
கோதாவரி நதியின் பொலிவு
புவியினுக்கு அணி ஆய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி,
அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி என, கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார். 1
வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய, வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி, ஊழின்
தெண் திரைக் கரத்தின் வாரி, திரு மலர் தூவி, செல்வர்க்
கண்டு அடி பணிவது என்ன, பொலிந்தது கடவுள் யாறு. 2
எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து, ஏங்கி ஏங்கி,
பழுவ நாள் குவளைச் செவ்விக் கண் பனி பரந்து சோர,
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி,
அழுவதும் ஒத்ததால், அவ் அலங்கு நீர் ஆறு மன்னோ. 3
இராமனும் சீதையும் கண்டு மகிழ்ந்த இயற்கைக் காட்சிகள்
நாளம் கொள் நளினப் பள்ளி, நயனங்கள் அமைய, நேமி
வாளங்கள் உறைவ கண்டு, மங்கைதன் கொங்கை நோக்கும்,
நீளம் கொள் சிலையோன்; மற்றை நேரிழை, நெடிய நம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள், சுடர் மணித் தடங்கள் கண்டாள். 4
ஓதிமம் ஒதுங்க, கண்ட உத்தமன், உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கி, சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாதுஅவள்தானும், ஆண்டு வந்து, நீர் உண்டு, மீளும்
போதகம் நடப்ப நோக்கி, புதியது ஓர் முறுவல் பூத்தாள். 5
வில் இயல் தடக் கை வீரன், வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்,
வல்லிகள் நுடங்கக் கண்டான், மங்கைதன் மருங்குல் நோக்க,
எல்லிஅம் குவளைக் கானத்து, இடை இடை மலர்ந்து நின்ற
அல்லிஅம் கமலம் கண்டாள், அண்ணல்தன் வடிவம் கண்டாள். 6
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்,
பனி தரு தெய்வப் பஞ்சவடி எனும், பருவச் சோலைத்
தனி இடம் அதனை நண்ணி, தம்பியால் சமைக்கப்பட்ட
இனிய பூஞ் சாலை எய்தி இருந்தனன் இராமன். இப்பால், 7
இராமனைச் சூர்ப்பணகை காணல்
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்,
மேலைநாள் உயிரொடும் பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய நோய் அனாள். 8
செம் பராகம் படச் செறிந்த கூந்தலாள்,
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள்,
உம்பர் ஆனவர்க்கும், ஒண் தவர்க்கும், ஓத நீர்
இம்பர் ஆனவர்க்கும், ஓர் இறுதி ஈட்டுவாள், 9
வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ் வனத்து வைகுவாள்,
நொய்தின் இவ் உலகு எலாம் நுழையும் நோன்மையாள்,-
எய்தினள், இராகவன் இருந்த சூழல்வாய். 10
எண் தகும் இமையவர், அரக்கர் எங்கள்மேல்
விண்டனர்; விலக்குதி என்ன, மேலைநாள்
அண்டசத்து அருந் துயில் துறந்த ஐயனைக்
கண்டனள், தன் கிளைக்கு இறுதி காட்டுவாள். 11
சூர்ப்பணகையின் வியப்பு
சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்;
இந்திரற்கு ஆயிரம் நயனம்; ஈசற்கு
முந்திய மலர்க் கண் ஓர் மூன்று; நான்கு தோள்,
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள். 12
கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்
இற்றவன், அன்றுதொட்டு இன்றுகாறும், தான்
நல் தவம் இயற்றி, அவ் அனங்கன், நல் உருப்
பெற்றனனாம் எனப் பெயர்த்தும் எண்ணுவாள். 13
தரங்களின் அமைந்து, தாழ்ந்து, அழகின் சார்பின;
மரங்களும் நிகர்க்கல; மலையும் புல்லிய;
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின்
கரங்களே, இவன் மணிக் கரம் என்று உன்னுவாள். 14
வில் மலை வல்லவன் வீரத் தோளொடும்
கல் மலை நிகர்க்கல; கனிந்த நீலத்தின்
நல் மலை அல்லது, நாம மேருவும்
பொன்மலை ஆதலால், பொருவலாது என்பாள். 15
தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேள் உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான்
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
நீளிய அல்ல கண்; நெடிய, மார்பு! என்பாள். 16
அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் வாள் முகம்,
பொதி அவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ?
கதிர் மதி ஆம் எனின், கலைகள் தேயும்; அம்
மதி எனின், மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால். 17
எவன் செய, இனிய இவ் அழகை எய்தினோன்?
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான்;
நவம் செயத்தகைய இந் நளின நாட்டத்தான்
தவம் செய, தவம் செய்த தவம் என்? என்கின்றாள். 18
உடுத்த நீர் ஆடையள், உருவச் செவ்வியள்,
பிடித் தரு நடையினள், பெண்மை நன்று; இவன்
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர்
பொடித்தன போலும், இப் புல் என்று உன்னுவாள். 19
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியைக்
காணலனேகொலாம், கதிரின் நாயகன்?
சேண் எலாம் புல் ஒளி செலுத்தி, சிந்தையில்
நாணலம், மீமிசை நடக்கின்றான் என்றாள். 20
குப்புறற்கு அரிய மாக் குன்றை வென்று உயர்
இப் பெருந் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர்
ஒப்பு என, உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ?
துப்பினில் துப்புடை யாதைச் சொல்லுகேன்? 21
நல் கலை மதி உற வயங்கு நம்பிதன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற,
வற்கலை நோற்றன; மாசு இலா மணிப்
பொன்-கலை நோற்றில போலுமால் என்றாள். 22
தொடை அமை நெடு மழைத் தொங்கல் ஆம் எனக்
கடை குழன்று, இடை நெறி, கரிய குஞ்சியைச்
சடை எனப் புனைந்திலன் என்னின், தையலா-
ருடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள். 23
நாறிய நகை அணி நல்ல, புல்லினால்,
ஏறிய செவ்வியின் இயற்றுமோ? எனா,
மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான்
வேறு ஒரு மணியினால் விளங்குமோ? என்பாள். 24
கரந்திலன், இலக்கணம் எடுத்துக் காட்டிய,
பரம் தரு நான்முகன்; பழிப்பு உற்றான் அரோ-
இரந்து, இவன் இணை அடிப் பொடியும், ஏற்கலாப்
புரந்தான், உலகு எலாம் புரக்கின்றான் என்றாள். 25
சூர்ப்பணகையின் காம வேட்கை
நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள,
ஏத்தவும், பரிவின் ஒன்று ஈகலான், பொருள்
காத்தவன், புகழ் எனத் தேயும் கற்பினாள். 26
வான் தனில், வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள்; புலர்ந்தனள்; புழுங்கும் நெஞ்சினள்;
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள், பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள். 27
நின்றனள்-இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென்; அன்றுஎனின், அமுதம் உண்ணினும்
பொன்றுவென்; போக்கு இனி அரிது போன்ம் எனா,
சென்று, எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள். 28
சூர்ப்பணகை மந்திரத்தால் அழகியாதல்
எயிறுடை அரக்கி, எவ் உயிரும் இட்டது ஓர்
வயிறுடையாள் என மறுக்கும்; ஆதலால்,
குயில் தொடர் குதலை, ஓர் கொவ்வை வாய், இள
மயில் தொடர் இயலி ஆய், மருவல் நன்று எனா, 29
பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா,
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள்;
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள், செவ்வியள்,
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள். 30
சூர்ப்பணகையின் நடை அழகு
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள். 31
பொன் ஒழுகு பூவில் உறை பூவை, எழில் பூவை,
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள்,
கன்னி எழில் கொண்டது, கலைத் தட மணித் தேர்,
மின் இழிவ தன்மை, இது, விண் இழிவதுஎன்ன, 32
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனி பெற்று, விளை காமம் நிறை வாசத்
தேனின் மொழி உற்று, இனிய செவ்வி நனி பெற்று, ஓர்
மானின் விழி பெற்று, மயில் வந்ததுஎன,-வந்தாள். 33
இராமனும் வியத்தல்
நூபுரமும், மேகலையும், நூலும், அறல் ஓதிப்
பூ முரலும் வண்டும், இவை பூசலிடும் ஓசை-
தாம் உரைசெய்கின்றது; ஒரு தையல் வரும் என்னா,
கோ மகனும், அத் திசை குறித்து, எதிர் விழித்தான். 34
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன,
வண்ண முலை கொண்டு, இடை வணங்க வரு போழ்தத்து
எண் அருளி, ஏழைமை துடைத்து, எழு மெய்ஞ்ஞானக்
கண் அருள்சேய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான். 35
பேர் உழைய நாகர்-உலகில், பிறிது வானில்,
பாருழையின், இல்லது ஒரு மெல் உருவு பாரா,
ஆருழை அடங்கும்? அழகிற்கு அவதி உண்டோ ?
நேரிழையர் யாவர், இவர் நேர்? என நினைத்தான். 36
சூர்ப்பணகை இராமன் அருகில் வந்து நிற்றல்
அவ் வயின், அவ் ஆசை தன் அகத்துடைய அன்னாள்,
செவ்வி முகம் முன்னி, அடி செங்கையின் இறைஞ்சா,
வெவ்விய நெடுங் கண்-அயில் வீசி, அயல் பாரா,
நவ்வியின் ஒதுங்கி, இறை நாணி, அயல் நின்றாள். 37
இராமன்-சூர்ப்பணகை உரையாடல்
தீது இல் வரவு ஆக, திரு! நின் வரவு; சேயோய்!
போத உளது, எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ?
ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு? என்றான்,
வேத முதல்; பேதை அவள் தன் நிலை விரிப்பாள்: 38
பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி; முப்புரங்கள் செற்ற
சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை; திக்கின்
மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை எடுத்து, உலகம் மூன்றும்
காவலோன் பின்னை; காமவல்லி ஆம் கன்னி என்றாள். 39
அவ் உரை கேட்ட வீரன், ஐயுறு மனத்தான், செய்கை
செவ்விதுஅன்று; அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர, செங்கண்
வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின்
இவ் உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான். 40
தூயவன் பணியாமுன்னம் சொல்லுவாள், சோர்வு இலாள்; அம்
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன்,
ஆய்வுறு மனத்தேன் ஆகி, அறம் தலைநிற்பது ஆனேன்;
தீவினை தீய நோற்றுத் தேவரின் பெற்றது என்றாள். 41
இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின், உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின்,
சுமையுறு செல்வத்தோடும் தோன்றலை; துணையும் இன்றி,
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என்? தையல்! என்றான். 42
வீரன் அஃது உரைத்தலோடும், மெய் இலாள், விமல! யான் அச்
சீரியரல்லார் மாட்டுச் சேர்கிலென்; தேவர்பாலும்
ஆரிய முனிவர்பாலும் அடைந்தனென்; இறைவ! ஈண்டு ஓர்
காரியம் உண்மை, நின்னைக் காணிய வந்தேன் என்றாள். 43
அன்னவள் உரைத்தலோடும், ஐயனும், அறிதற்கு ஒவ்வா
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறிப் பால அல்ல;
பின் இது தெரியும் என்னா, பெய் வளைத் தோளி! என்பால்
என்ன காரியத்தை? சொல்; அஃதுஇயையுமேல் இழைப்பல் என்றான். 44
தாம் உறு காமத் தன்மை தாங்களே உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால், அருங் குல மகளிர்க்கு அம்மா!
ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன்? யாரும் இல்லேன்;
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி என்றாள். 45
சேண் உற நீண்டு, மீண்டு, செவ் அரி சிதறி, வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து, நானாவிதம் புரண்டு, இருண்ட வாள்-கண்
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும்,
நாண் இலள், ஐயள், நொய்யள்; நல்லளும் அல்லள் என்றாள். 46
பேசலன், இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள்;
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம் மகள், புகன்ற என்கண்
ஆசை கண்டருளிற்று உண்டோ ? அன்று எனல் உண்டோ ? என்னும்
ஊசலின் உலாவுகின்றாள்; மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள்: 47
எழுத அரு மேனியாய்! ஈண்டு எய்தியது அறிந்திலாதேன்;
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி,
பழுது அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக,
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் என்றாள். 48
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;
சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன் என்றான். 49
ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக் கற்பின் எம் மோய்,
தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல்;
போர் அணி பொலம் கொள் வேலாய்! பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின், என் உயிர் காண்பென் என்றாள். 50
அருத்தியள் அனைய கூற, அகத்துறு நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல் உண்டாட்டம் கொண்டான்,
வருத்தம் நீங்கு அரக்கர்தம்மில் மானிடர் மணத்தல், நங்கை!
பொருத்தம் அன்று என்று, சாலப் புலமையோர் புகல்வர் என்றான். 51
பராவ அருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது,
இராவணன் தங்கை என்றது ஏழைமைப் பாலது என்னா,
அரா-அணை அமலன் அன்னாய்! அறிவித்தேன் முன்னம்; தேவர்ப்
பராவினின் நீங்கினேன், அப் பழிபடு பிறவி என்றாள். 52
ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன், ஊங்கில்
ஒருவனோ குபேரன், நின்னொடு உடன்பிறந்தவர்கள்; அன்னார்
தருவரேல், கொள்வென்; அன்றேல், தமியை வேறு இடத்துச் சார;
வெருவுவென்;-நங்கை! என்றான்; மீட்டு அவள் இனைய சொன்னாள்: 53
காந்தர்ப்பம் என்பது உண்டால்; காதலின் கலந்த சிந்தை
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம்;
ஏந்தல்-பொன்-தோளினாய்! ஈது இயைந்தபின், எனக்கு மூத்த
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும்; வேறும் ஓர் உரை உண்டு என்றாள். 54
முனிவரோடு உடையர், முன்னே முதிர் பகை; முறைமை நோக்கார்;
தனியை நீ; ஆதலால், மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த
வினையம் ஈது அல்லது இல்லை; விண்ணும் நின் ஆட்சி ஆக்கி,
இனியர் ஆய், அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள். 55
நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின் நலம் பெற்றேன்; நின்னோடு
ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன்; ஒன்றோ,
திரு நகர் தீர்ந்த பின்னர், செய் தவம் பயந்தது? என்னா,
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான். 56
சீதையைக் கண்ட சூர்ப்பணகையின் எண்ணங்கள்
விண்ணிடை, இம்பர், நாகர், விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம்
கண்ணிடை ஒளியின் பாங்கர், கடி கமழ் சாலைநின்றும்,
பெண்ணிடை அரசி, தேவர் பெற்ற நல் வரத்தால், பின்னர்
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள், வந்தாள். 57
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி, உருவில் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க, நோக்கி,
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள். 58
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான்;
உரு இங்கு இது உடையர் ஆக, மற்றையோர் யாரும் இல்லை;
அரவிந்த மலருள் நீங்கி, அடி இணை படியில் தோய,
திரு இங்கு வருவாள் கொல்லோ? என்று அகம் திகைத்து நின்றாள். 59
பண்பு உற நெடிது நோக்கி, படைக்குநர் சிறுமை அல்லால்,
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள்;
கண் பிற பொருளில் செல்லா; கருத்து எனின், அஃதே; கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால், என்படும் பிறருக்கு? என்றாள். 60
பொரு திறத்தானை நோக்கி, பூவையை நோக்கி, நின்றாள்;
கருத மற்று இனி வேறு இல்லை; கமலத்துக் கடவுள்தானே,
ஒரு திறத்து உணர நோக்கி, உருவினுக்கு, உலகம் மூன்றின்
இரு திறத்தார்க்கும், செய்த வரம்பு இவர் இருவர் என்றாள். 61
பொன்னைப் போல் பொருஇல் மேனி, பூவைப் பூ வண்ணத்தான், இம்
மின்னைப் போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன்;
தன்னைப் போல் தகையோர் இல்லா, தளிரைப்போல் அடியினாளும்,
என்னைப் போல் இடையே வந்தாள்; இகழ்விப்பென் இவளை என்னா, 62
சீதையை அரக்கி என சூர்ப்பணகை கூறல்
வரும் இவள் மாயம் வல்லள்; வஞ்சனை அரக்கி; நெஞ்சம்
தெரிவு இல; தேறும் தன்மை, சீரியோய்! செவ்விது அன்றால்;
உரு இது மெய்யது அன்றால்; ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென்; எய்திடாமல் விலக்குதி, வீர! என்றாள். 63
ஒள்ளிது உன் உணர்வு; மின்னே! உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார்?
தெள்ளிய நலத்தினால், உன் சிந்தனை தெரிந்தது; அம்மா!
கள்ள வல் அரக்கி போலாம் இவளும்? நீ காண்டி என்னா,
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட, வீரன் நக்கான். 64
சூர்ப்பணகை வெகுள, இராமன் அவளை விரட்டுதல்
ஆயிடை, அமுதின் வந்த, அருந்ததிக் கற்பின் அம் சொல்
வேய் இடை தோளினாளும், வீரனைச் சேரும் வேலை,
நீ இடை வந்தது என்னை? நிருதர்தம் பாவை! என்னா,
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும். 65
அஞ்சினாள்; அஞ்சி அன்னம், மின் இடை அலச ஓடி,
பஞ்சின் மெல் அடிகள் நோவப் பதைத்தனள்; பருவக் கால
மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்ன,
குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள் தழுவிக் கொண்டாள். 66
வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும்,
விளைவன தீமையே ஆம் என்பதை உணர்ந்து, வீரன்,
உளைவன இயற்றல்; ஒல்லை உன் நிலை உணருமாகில்,
இளையவன் முனியும்; நங்கை! ஏகுதி விரைவில் என்றான். 67
பொற்புடை அரக்கி, பூவில், புனலினில், பொருப்பில், வாழும்
அற்புடை உள்ளத்தாரும், அனங்கனும், அமரர் மற்றும்,
எற் பெறத் தவம் செய்கின்றார்; என்னை நீ இகழ்வது என்னே,
நல் பொறை நெஞ்சில் இல்லாக் கள்வியை நச்சி? என்றாள். 68
தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள்; தான் இக்
கல் நெடு மனத்தி சொல்லும், கள்ள வாசகங்கள் என்னா,
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம்போல், மிதிலைவேந்தன்
பொன்னொடும் புனிதன் போய், அப் பூம் பொழிற் சாலை புக்கான். 69
மனம் நைந்து ஏகிய சூர்ப்பணகை
புக்க பின் போனது என்னும் உணர்வினள்; பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள்; ஒன்றும் உயிர்த்திலள்; ஒடுங்கி நின்றாள்;
தக்கிலன்; மனத்துள் யாதும் தழுவிலன்; சலமும் கொண்டான்;
மைக் கருங் குழலினாள்மாட்டு அன்பினில் வலியன் என்பாள். 70
நின்றிலள்; அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள்;
இன்று, இவன் ஆகம் புல்லேன் எனின், உயிர் இழப்பென் என்னா,
பொன் திணி சரளச் சோலை, பளிக்கரைப் பொதும்பர் புக்காள்;
சென்றது, பரிதி மேல் பால்; செக்கர் வந்து இறுத்தது அன்றே. 71
சூர்ப்பணகையின் காமம்
அழிந்த சிந்தையளாய் அயர்வாள்வயின்,
மொழிந்த காமக் கடுங் கனல் மூண்டதால்-
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே. 72
தாடகைக் கொடியாள் தட மார்பிடை,
ஆடவர்க்கு அரசன் அயில் அம்புபோல்,
பாடவத் தொழில் மன்மதன் பாய் கணை
ஓட, உட்கி, உயிர் உளைந்தாள் அரோ! 73
கலை உவா மதியே கறி ஆக, வன்
சிலையின் மாரனைத் தின்னும் நினைப்பினாள்,
மலையமாருத மா நெடுங் கால வேல்
உலைய மார்பிடை ஊன்றிட, ஓயுமால். 74
அலைக்கும் ஆழி அடங்கிட, அங்கையால்,
மலைக் குலங்களின், தூர்க்கும் மனத்தினாள்;
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா
மலைக்க, நீங்கும் மிடுக்கு இலள்; மாந்துவாள். 75
பூ எலாம் பொடி ஆக, இப் பூமியுள்
கா எலாம் ஒடிப்பென் என, காந்துவாள்;
சேவலோடு உறை செந் தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச, நடுங்குவாள். 76
அணைவு இல் திங்களை நுங்க, அராவினைக்
கொணர்வென், ஓடி எனக் கொதித்து உன்னுவாள்;
பணை இன் மென் முலைமேல் பனி மாருதம்
புணர, ஆர் உயிர் வெந்து புழுங்குமால். 77
கைகளால், தன் கதிர் இளங் கொங்கைமேல்,
ஐய தண் பனி அள்ளினள், அப்பினாள்;
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால். 78
அளிக்கும் மெய், உயிர், காந்து அழல் அஞ்சினாள்;
குளிக்கும் நீரும் கொதித்து எழ, கூசுமால்;
விளிக்கும் வேலையை, வெங் கண் அனங்கனை,
ஒளிக்கல் ஆம் இடம் யாது? என, உன்னுமால். 79
வந்து கார் மழை தோன்றினும், மா மணிக்
கந்து காணினும், கைத்தலம் கூப்புமால்;
இந்து காந்தத்தின் ஈர நெடுங் கலும்
வெந்த காந்த, வெதுப்புறு மேனியாள். 80
வாம மா மதியும் பனி வாடையும்,
காமனும், தனைக் கண்டு உணராவகை,
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ்
சேம மால் வரையின் முழை சேருமால். 81
அன்ன காலை, அழல் மிகு தென்றலும்
முன்னின் மும்மடி ஆய், முலை வெந்து உக,
இன்னவா செய்வது என்று அறியாது, இளம்
பொன்னின் வார் தளிரில் புரண்டாள் அரோ. 82
வீரன் மேனி வெளிப்பட, வெய்யவள்,
கார் கொள் மேனியைக் கண்டனளாம் என,
சோரும்; வெள்கும்; துணுக்கெனும்; அவ் உருப்
பேருங்கால், வெம் பிணியிடைப் பேருமால். 83
ஆகக் கொங்கையின், ஐயன் என்று, அஞ்சன
மேகத்தைத் தழுவும்; அவை வெந்தன
போகக் கண்டு புலம்பும், அப் புன்மையாள்-
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம்கொலோ? 84
சூர்ப்பணகை காம வெறியால் புலம்புதல்
ஊழி வெங் கனல் உற்றனள் ஒத்தும், அவ்
ஏழை ஆவி இறந்திலள்; என்பரால்
ஆழியானை அடைந்தனள், பின்னையும்
வாழலாம் எனும் ஆசை மருந்தினே. 85
வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என்
நெஞ்சு புக்கு, எனது ஆவத்து நீக்கு எனும்;
அஞ்சனக் கிரியே! அருளாய் எனும்;
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள். 86
காவியோ, கயலோ, எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும்கொலோ? எனும்-
ஆவி ஓயினும், ஆசையின் ஓய்வு இலாள். 87
மாண்ட கற்புடையாள் மலர் மா மகள்,
ஈண்டு இருக்கும் நல்லாள் மகள் என்னுமால்;
வேண்டகிற்பின் அனல் வர மெய்யிடைத்
தீண்டகிற்பது அன்றோ, தெறும் காமமே? 88
ஆன்ற காதல் அஃது உற எய்துழி,
மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம்
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன்
தோன்றினான் என, வெய்யவன் தோன்றினான். 89
விடியல் காண்டலின், ஈண்டு, தன் உயிர் கண்ட வெய்யாள்,
படி இலாள் மருங்கு உள்ள அளவு, எனை அவன் பாரான்;
கடிதின் ஓடினென் எடுத்து, ஒல்லைக் கரந்து, அவள் காதல்
வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா, 90
வந்து, நோக்கினள்; வள்ளல் போய், ஒரு மணித் தடத்தில்
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள்; தம்பி,
இந்து நோக்கிய நுதலியைக் காத்து, அயல், இருண்ட,
கந்தம் நோக்கிய, சோலையில் இருந்தது காணாள். 91
தனி இருந்தனள்; சமைந்தது என் சிந்தனை; தாழ்வுற்று
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என, எண்ணா,
துனி இருந்த வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள்;
கனி இரும் பொழில், காத்து, அயல் இருந்தவன் கண்டான். 92
இலக்குவன் சூர்ப்பணகையின் உறுப்பு அறுத்தல்
நில் அடீஇ என, கடுகினன், பெண் என நினைத்தான்;
வில் எடாது, அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த
சில் வல் ஓதியைச் செங் கையில் திருகுறப் பற்றி,
ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி கிளர் சுற்று-வாள் உருவி, 93
ஊக்கித் தாங்கி, விண் படர்வென் என்று உருத்து எழுவாளை,
நூக்கி, நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும், முறையால்
போக்கி, போக்கிய சினத்தொடும், புரி குழல் விட்டான். 94
சூர்ப்பணகையின் ஓலம்
அக் கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை,
திக்கு அனைத்தினும் சென்றது; தேவர்தம் செவியும்
புக்கது; உற்றது புகல்வது என்? மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று, உருகியது உலகம். 95
கொலை துமித்து உயர் கொடுங் கதிர் வாளின், அக் கொடியாள்
முலை துமித்து, உயர் மூக்கினை நீக்கிய மூத்தம்,
மலை துமித்தென, இராவணன் மணியுடை மகுடத்
தலை துமித்தற்கு நாள் கொண்டது, ஒத்தது, ஒர் தன்மை. 96
அதிர, மா நிலத்து, அடி பதைத்து அரற்றிய அரக்கி-
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர், வெங் கதப் போர்
எதிர் இலாதவர், இறுதியின் நிமித்தமா எழுந்து, ஆண்டு,
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து,-உயர்ந்தாள். 97
உயரும் விண்ணிடை; மண்ணிடை விழும்; கிடந்து உழைக்கும்;
அயரும்; கை குலைத்து அலமரும்; ஆர் உயிர் சோரும்;
பெயரும்; பெண் பிறந்தேன் பட்ட பிழை எனப் பிதற்றும்;-
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத் தொல் குடிப் பிறந்தாள். 98
ஒற்றும் மூக்கினை; உலை உறு தீ என உயிர்க்கும்;
எற்றும் கையினை, நிலத்தினில்; இணைத் தடங் கொங்கை
பற்றும்; பார்க்கும்; மெய் வெயர்க்கும்; தன் பரு வலிக் காலால்
சுற்றும்; ஓடும்; போய், சோரி நீர் சொரிதரச் சோரும். 99
ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதிச்
சேற்று வெள்ளத்துள் திரிபவள், தேவரும் இரிய,
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி,
ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி நின்று; அழைத்தாள். 100
சூர்ப்பணகை உறவினர்களைக் கூவி உதவி கோரல்
நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ? 101
புலிதானே புறத்து ஆக, குட்டி கோட்படாது என்ன,
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ? ஊழியினும்
சலியாத மூவர்க்கும், தானவர்க்கும், வானவர்க்கும்,
வலியானே! யான் பட்ட வலி காண வாராயோ? 102
ஆர்த்து, ஆனைக்கு-அரசு உந்தி, அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது, அவனைப் போர் தொலைத்து,
வேர்த்தானை, உயிர் கொண்டு மீண்டானை, வெரிந் பண்டு
பார்த்தானே! யான் பட்ட பழி வந்து பாராயோ? 103
காற்றினையும், புனலினையும், கனலினையும், கடுங் காலக்
கூற்றினையும், விண்ணினையும், கோளினையும், பணி கொண்டற்கு
ஆற்றினை நீ; ஈண்டு, இருவர் மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ, உன் வலத்தை? சிவன் தடக்கை வாள் கொண்டாய்! 104
உருப் பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும், உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடிய, பொருப்பு இடிய, தோள் நிமிர்த்த வலியோனே! 105
தேனுடைய நறுந் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்
தான் உடைய இராவணற்கும், தம்பியர்க்கும், தவிர்ந்ததோ?
ஊனுடைய உடம்பினர் ஆய், எம் குலத்தோர்க்கு உணவு ஆய
மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி? அம்மா! 106
மரன் ஏயும் நெடுங் கானில் மறைந்து உறையும் தாபதர்கள்
உரனையோ? அடல் அரக்கர் ஓய்வேயோ? உற்று எதிர்ந்தார்.
அரனேயோ? அரியேயோ? அயனேயோ? எனும் ஆற்றல்
கரனேயோ! யான் பட்ட கையறவு காணாயோ? 107
இந்திரனும், மலர் அயனும், இமையவரும், பணி கேட்ப,
சுந்தரி பல்லாண்டு இசைப்ப, உலகு ஏழும் தொழுது ஏத்த,
சந்திரன்போல் தனிக் குடைக்கீழ் நீ இருக்கும் சவை நடுவே
வந்து, அடியேன் நாணாது, முகம் காட்ட வல்லேனோ? 108
உரன் நெரிந்துவிழ, என்னை உதைத்து, உருட்டி, மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க, நான் கிடந்து புலம்புவதோ?
கரன் இருந்த வனம் அன்றோ? இவை படவும் கடவேனோ?-
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ! அண்ணாவோ!! 109
நசையாலே, மூக்கு இழந்து, நாணம் இலா நான் பட்ட
வசையாலே, நினது புகழ் மாசுண்டது ஆகாதோ?-
திசை யானை விசை கலங்கச் செருச் செய்து, மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ! இராவணவோ!! 110
கானம் அதினிடை, இருவர், காதொடு மூக்கு உடன் அரிய,
மானமதால், பாவியேன், இவண் மடியக் கடவேனோ?-
தானவரைக் கரு அறுத்து, சதமகனைத் தளை இட்டு,
வானவரைப் பணி கொண்ட மருகாவோ! மருகாவோ!! 111
ஒரு காலத்து, உலகு ஏழும் உருத்து எதிர, தனு ஒன்றால்,
திருகாத சினம் திருகி, திசை அனைத்தும் செல நூறி,
இரு காலில், புரந்தரனை இருந் தளையில் இடுவித்த
மருகாவோ! மானிடவர் வலி காண வாராயோ? 112
கல் ஈரும் படைத் தடக் கை, அடல், கர தூடணர் முதலா,
அல் ஈரும் சுடர் மணிப் பூண், அரக்கர் குலத்து அவதரித்தீர்!
கொல் ஈரும் படைக் கும்பகருணனைப்போல், குவலயத்துள்
எல்லீரும் உறங்குதிரோ? யான் அழைத்தல் கேளீரோ? 113
இராமனிடம் முறையிட வந்த சூர்ப்பணகை
என்று, இன்ன பல பன்னி, இகல் அரக்கி அழுது இரங்கி,
பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து,
நின்று, அந்த நதியகத்து, நிறை தவத்தின் குறை முடித்து,
வன் திண் கைச் சிலை நெடுந் தோள் மரகதத்தின் மலை வந்தான். 114
வந்தானை முகம் நோக்கி, வயிறு அலைத்து, மழைக் கண்ணீர்,
செந் தாரைக் குருதியொடு செழு நிலத்தைச் சேறு ஆக்கி,
அந்தோ! உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால்
எந்தாய்! யான் பட்டபடி இது காண் என்று, எதிர் விழுந்தாள். 115
விரிந்து ஆய கூந்தலாள், வெய்ய வினை யாதானும்
புரிந்தாள் என்பது, தனது பொரு அரிய திருமனத்தால்
தெரிந்தான்; இன்று, இளையானே இவளை நெடுஞ் செவியொடு மூக்கு
அரிந்தான் என்பதும் உணர்ந்தான்; அவளை, நீயார்? என்றான். 116
அவ் உரை கேட்டு, அடல் அரக்கி, அறியாயோ நீ, என்னை?
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான்;
வெவ் இலை வேல் இராவணனாம், விண் உலகம் முதல் ஆக
எவ் உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள். 117
தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய, தவம் இயற்ற
யாம் இருந்த நெடுஞ் சூழற்கு என் செய வந்தீர்? எனலும்,
வேம் இருந்தில் எனக் கனலும் வெங் காம வெம் பிணிக்கு
மா மருந்தே! நெருநலினும் வந்திலெனோ யான்? என்றாள். 118
செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன,
கொங்கைகளும், குழைக்காதும், கொடிமூக்கும், குறைந்து, அழித்தால்,
அம் கண் அரசே! ஒருவர்க்கு அழியாதோ அழகு? என்றாள். 119
இராமன் சூர்ப்பணகை இழைத்த பிழை என்ன கேட்க இலக்குவன் விடையளித்தல்
மூரல் முறுவலன், இளைய மொய்ம்பினோன் முகம் நோக்கி,
வீர! விரைந்தனை, இவள் தன் விடு காதும், கொடி மூக்கும்,
ஈர, நினைந்து இவள் இழைத்த பிழை என்? என்று இறை வினவ,
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி, சொல்லுவான்: 120
தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ? தீவினையோர்
கூட்டம்தான் புறத்து உளதோ? குறித்த பொருள் உணர்ந்திலனால்;
நாட்டம்தான் எரி உமிழ, நல்லாள்மேல் பொல்லாதாள்
ஓட்டந்தாள்; அரிதின் இவள் உடன்று எழுந்தாள் என உரைத்தான். 121
சூர்ப்பணகை மறுத்துரைத்தல்
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பாமுன், இகல் அரக்கி,
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப, சினம் திருகி,
சூல் தவளை, நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட!
மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம்? என்றாள். 122
இராமன் ஓடிப் போகச் சொல்லியும் சூர்ப்பணகை தன்னை ஏற்குமாறு வேண்டுதல்
பேடிப் போர் வல் அரக்கர் பெருங் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம்; இன்று, தீ மாற்றம் சில விளம்பி,
வீடிப் போகாதே; இம் மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப் போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு, அவள் உரைப்பாள்: 123
நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர்
கரை இறந்தோர், இராவணற்குக் கரம் இறுக்கும் குடி என்றால்,
விரையும் இது நன்று அன்று; வேறு ஆக யான் உரைக்கும்
உரை உளது, நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள்: 124
ஆக்க அரிய மூக்கு, உங்கை அரியுண்டாள் என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார்; நாகரிகர் அல்லாமை,
மூக்கு அரிந்து, நும் குலத்தை முதல் அரிந்தீர்; இனி, உமக்குப்
போக்கு அரிது; இவ் அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே! 125
வான் காப்போர், மண் காப்போர், மா நகர் வாழ் உலகம்-
தான் காப்போர், இனி தங்கள் தலை காத்து நின்று, உங்கள்
ஊன் காக்க உரியார் யார்? என்னை, உயிர் நீர் காக்கின்,
யான் காப்பென்; அல்லால், அவ் இராவணனார் உளர்! என்றாள். 126
காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார்;
ஆவல் பேர் அன்பினால், அறைகின்றேன் ஆம் அன்றோ?
தேவர்க்கும் வலியான் தன் திருத் தங்கையாள் இவள்; ஈண்டு
ஏவர்க்கும் வலியாள் என்று, இளையானுக்கு இயம்பீரோ?. 127
மாப் போரில் புறங் காப்பேன்; வான் சுமந்து செல வல்லேன்;
தூப் போல, கனி பலவும், சுவை உடைய, தர வல்லேன்;
காப்போரைக் கைத்து என்? நீர் கருதியது தருவேன்; இப்
பூப் போலும் மெல்லியலால் பொருள் என்னோ? புகல்வீரே. 128
குலத்தாலும், நலத்தாலும், குறித்தனவே கொணர்தக்க
வலத்தாலும், மதியாலும், வடிவாலும், மடத்தாலும்,
நிலத்தாரும், விசும்பாரும், நேரிழையார், என்னைப்போல்
சொலத்தான் இங்கு உரியாரைச் சொல்லீரோ, வல்லீரேல்? 129
போக்கினீர் என் நாசி; போய்த்து என்? நீர் பொறுக்குவிரேல்,
ஆக்குவென் ஓர் நொடி வரையில்; அழகு அமைவென்; அருள்கூறும்
பாக்கியம் உண்டுஎனின், அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ ?
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ? 130
விண்டாரே அல்லாரோ, வேண்டாதார்? மனம் வேண்டின்,
உண்டாய காதலின், என் உயிர் என்பது உமது அன்றோ?
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ?
கொண்டாரே கொண்டாடும் உருப் பெற்றால், கொள்ளீரோ? 131
சிவனும், மலர்த்திசைமுகனும்; திருமாலும், தெறு குலிசத்து-
அவனும், அடுத்து ஒன்றாகி நின்றன்ன உருவோனே!
புவனம் அனைத்தையும், ஒரு தன் பூங் கணையால் உயிர் வாங்கும்
அவனும், உனக்கு இளையானோ? இவனேபோல் அருள் இலனால் 132
பொன் உருவப் பொரு கழலீர்! புழை காண, மூக்கு அரிவான் பொருள் உண்டோ ?
இன் உருவம் இது கொண்டு, இங்கு இருந்துஒழியும் நம் மருங்கே; ஏகாள் அப்பால்;
பின், இவளை அயல் ஒருவர் பாரார் என்றே, அரிந்தீர்; பிழை செய்தீரோ?
அன்னதனை அறிந்து அன்றோ, அன்பு இரட்டி பூண்டது நான்? அறிவு இலேனோ? 133
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின்,
அப் பழியால், உலகு அனைத்தும், நும் பொருட்டால் அழிந்தன ஆம்; அறத்தை நோக்கி,
ஒப்பழியச் செய்கிலார் உயர் குலத்துத் தோன்றினோர்; உணர்ந்து, நோக்கி,
இப் பழியைத் துடைத்து உதவி, இனிது இருத்திர், என்னொடும் என்று, இறைஞ்சி நின்றாள். 134
இராமன் அச்சுறுத்தி சூர்ப்பணகையை அகற்றல்
நாடு அறியாத் துயர் இழைத்த நவை அரக்கி, நின் அன்னைதன்னை நல்கும்
தாடகையை, உயிர் கவர்ந்த சரம் இருந்தது; அன்றியும், நான் தவம் மேற்கொண்டு,
தோள் தகையத் துறு மலர்த் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான், தோன்றி நின்றேன்;
போடு,அகல,புல் ஒழுக்கை;வல் அரக்கி! என்று இறைவன் புகலும்,பின்னும்: 135
தரை அளித்த தனி நேமித் தயரதன் தன் புதல்வர் யாம்; தாய்சொல் தாங்கி,
விரை அளித்த கான் புகுந்தேம்; வேதியரும் மா தவரும் வேண்ட, நீண்டு
கரை அளித்தற்கு அரிய படைக் கடல் அரக்கர் குலம் தொலைத்து, கண்டாய், பண்டை,
வரை அளித்த குல மாட, நகர் புகுவேம்; இவை தெரிய மனக்கொள் என்றான். 136
நெறித் தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே, நெடிய தேவர்
மறித்தார்; ஈண்டு, இவர் இருவர்; மானிடவர் என்னாது, வல்லை ஆகின்,
வெறித் தாரை வேல் அரக்கர், விறல் இயக்கர், முதலினர், நீ, மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும், கொணருதியேல், நின் எதிரே கோறும் என்றான். 137
சூர்ப்பணகை மீண்டும் வற்புறுத்துதல்
கொல்லலாம் மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம்; கொற்ற முற்ற
வெல்லலாம்; அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம்;-மேல் வாய் நீங்கி,
பல் எலாம் உறத் தோன்றும் பகு வாயள் என்னாது, பார்த்திஆயின்,
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட! கேள் என்று நிருதி கூறும்: 138
காம்பு அறியும் தோளானைக் கைவிடீர்; என்னினும், யான் மிகையோ? கள்வர்
ஆம், பொறி இல், அடல் அரக்கர் அவரோடே செருச் செய்வான் அமைந்தீர் ஆயின்,
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து, அவற்றைத் தடுப்பென் அன்றே?
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ? 139
உளம் கோடல் உனை இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல், நிருதரோடும்
களம் கோடற்கு உரிய செருக் கண்ணியக்கால், ஒரு மூவேம் கலந்தகாலை,
குளம் கோடும் என்று இதுவும் உறுகோளே? என்று உணரும் குறிக்கோள் இல்லா
இளங்கோவோடு எனை இருத்தி, இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையேன் என்றாள். 140
பெருங் குலா உறு நகர்க்கே ஏகும் நாள், வேண்டும் உருப் பிடிப்பேன்; அன்றேல்,
அருங் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம்; இளையவன் தான், அரிந்த நாசி
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ? என்பானேல், இறைவ! ஒன்றும்
மருங்கு இலாதவளோடும் அன்றோ, நீ, நெடுங் காலம் வாழ்ந்தது என்பாய். 141
சூர்ப்பணகை அச்சுறுத்தி அகலள்
என்றவள்மேல், இளையவன் தான், இலங்கு இலை வேல் கடைக்கணியா, இவளை ஈண்டு
கொன்று களையேம் என்றால், நெடிது அலைக்கும்; அருள் என்கொல்? கோவே! என்ன,
நன்று, அதுவே ஆம் அன்றோ? போகாளேல் ஆக! என நாதன் கூற,
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார்; உயிர் இழப்பென், நிற்கின் என, அரக்கி உன்னா, 142
ஏற்ற நெடுங் கொடி மூக்கும், இரு காதும், முலை இரண்டும், இழந்தும், வாழ
ஆற்றுவனே? வஞ்சனையால், உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ?
காற்றினிலும் கனலினிலும் கடியானை, கொடியானை, கரனை, உங்கள்
கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன் என்று, சலம்கொண்டு போனாள். 143
மிகைப் பாடல்கள்
கண்டு தன் இரு விழி களிப்ப, கா ....கத்து
எண் தரும் புளகிதம் எழுப்ப, ஏதிலாள்
கொண்ட தீவினைத் திறக் குறிப்பை ஓர்கிலாள்
அண்டர் நாதனை, இவன் ஆர்? என்று உன்னுவாள். 11-1
பொன்னொடு மணிக் கலை சிலம்பொடு புலம்ப,
மின்னொடு மணிக் கலைகள் விம்மி இடை நோவ,
துன்னு குழல் வன் கவரி தோகை பணிமாற,
அன்னம் என, அல்ல என, ஆம் என, நடந்தாள். 33-1
ஆரணிய காண்டம்
6. கரன் வதைப் படலம்
சூர்ப்பணகை கரன் தாள் விழுந்து கதறி முறையிடல்
இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசை,
சொரிந்த சோரியள், கூந்தலள், தூம்பு எனத்
தெரிந்த மூக்கினள், வாயினள், செக்கர்மேல்
விரிந்த மேகம் என விழுந்தாள் அரோ. 1
அழுங்கு நாள் இது என்று, அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி எனத் தனித்து ஏங்குவாள்;
முழங்கு மேகம் இடித்த வெந் தீயினால்
புழுங்கு நாகம் எனப் புரண்டாள் அரோ. 2
வாக்கிற்கு ஒக்க, புகை முத்து வாயினான்
நோக்கி, கூசலர், நுன்னை இத் தன்மையை
ஆக்கிப் போனவர் ஆர்கொல்? என்றான்-அவள்
மூக்கின் சோரி முழீஇக் கொண்ட கண்ணினான். 3
இருவர் மானிடர்; தாபதர்; ஏந்திய
வரி வில், வாள், கையர்; மன்மதன் மேனியர்;
தரும நீரர்; தயரதன் காதலர்;
செருவில் நேரும் நிருதரைத் தேடுவார். 4
ஒன்றும் நோக்கலர் உன் வலி; ஓங்கு அறன்
நின்று நோக்கி, நிறுத்தும் நினைப்பினார்;
வென்றி வேற் கை நிருதரை வேர் அறக்
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார். 5
மண்ணில், நோக்க அரு வானினில், மற்றினில்,
எண்ணி நோக்குறின், யாவரும் நேர்கிலாப்
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை, என்
கண்ணின் நோக்கி உரைப்ப அருங் காட்சியாள்; 6
கண்டு, நோக்க அருங் காரிகையாள்தனைக்
கொண்டு போவன், இலங்கையர் கோக்கு எனா,
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு, அவர்
துண்டம் ஆக்கினர், மூக்கு எனச் சொல்லினாள். 7
கரன் கொதித்து எழுதல்
கேட்டனன் உரை; கண்டனன் கண்ணினால்,
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை;
காட்டு எனா, எழுந்தான், எதிர் கண்டவர்
நாட்டம் தீய;-உலகை நடுக்குவான். 8
எழுந்து நின்று, உலகு ஏழும் எரிந்து உகப்
பொழிந்த கோபக் கனல் உக, பொங்குவான்;
கழிந்து போயினர் மானிடர் என்னுங்கால்,
அழிந்ததோ இல் அரும் பழி? என்னுமால். 9
பதினான்கு வீரர்கள் போரிடச் செல்லுதல்
வருக, தேர்! எனும் மாத்திரை, மாடுளோர்,
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார்
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார்,
தருக இப் பணி எம் வயின் தான் என்றார். 10
சூலம், வாள், மழு தோமரம், சக்கரம்,
கால பாசம், கதை, பொரும் கையினார்;
வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார்;
ஆலகாலம் திரண்டன்ன ஆக்கையார். 11
வெம்பு கோபக் கனலர் விலக்கினார்,
நம்பி! எம் அடிமைத் தொழில் நன்று எனா,
உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ?
இம்பர்மேல் இனி யாம் உளெமோ? என்றார். 12
நன்று சொல்லினிர்; நான் இச் சிறார்கள்மேல்
சென்று போர் செயின், தேவர் சிரிப்பரால்;
கொன்று, சோரி குடித்து, அவர் கொள்கையை
வென்று மீளுதிர் மெல்லியலோடு என்றான். 13
என்னலோடும், விரும்பி இறைஞ்சினார்;
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என,
அன்னர் பின் படர்வார் என, ஆயினார்;
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார். 14
சூர்ப்பணகை அரக்கர்க்கு இராமனைக் காட்டுதல்
துமிலப் போர் வல் அரக்கர்க்குச் சுட்டினாள்,
அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமிலப் பாத நினைவில் இருந்த அக்
கமலக் கண்ணனை, கையினில் காட்டினாள். 15
எற்றுவாம் பிடித்து; ஏந்துதும் என்குநர்,
பற்றுவாம் நெடும் பாசத்தின் என்குநர்,
முற்றுவாம் இறை சொல் முறையால் எனா,
சுற்றினார்-வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார். 16
இராமன் போருக்கு எழுதல்
ஏத்து வாய்மை இராமன், இளவலை,
காத்தி தையலை என்று, தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு இல் தடக் கையால்,
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான். 17
வாங்கி, வாளொடு வாளி பெய் புட்டிலும்
தாங்கி, தாமரைக் கண்ணன், அச் சாலையை
நீங்கி, இவ்வழி நேர்மின், அடா! எனா,
வீங்கு தோளன் மலைதலை மேயினான். 18
நால்வரும் வீழ்தல்
மழுவும், வாளும், வயங்கு ஒளி முச் சிகைக்
கழுவும், கால வெந் தீ அன்ன காட்சியார்,
எழுவின் நீள் தடக் கை எழு நான்கையும்,
தழுவும் வாளிகளால், தலம் சார்த்தினான். 19
மரங்கள்போல், நெடு வாளொடு தோள் விழ,
உரங்களான் அடர்ந்தார்; உரவோன் விடும்
சரங்கள் ஓடின தைக்க, அரக்கர் தம்
சிரங்கள் ஓடின; தீயவள் ஓடினாள். 20
வெங்கரன் வெகுண்டு எழுதல்
ஒளிறு வேல் கரற்கு, உற்றது உணர்த்தினாள்-
குளிறு கோப வெங் கோள் அரிமா அட,
களிறு எலாம் பட, கை தலைமேல் உற,
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள். 21
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என,
பொங்கு அரத்தம் விழிவழிப் போந்து உக,
வெங் கரப் பெயரோன், வெகுண்டான், விடைச்
சங்கரற்கும் தடுப்ப அருந் தன்மையான். 22
அழை, என் தேர்; எனக்கு ஆங்கு, வெம் போர்ப் படை;
உழையர் ஓடி, ஒரு நொடி ஓங்கல்மேல்,
மழையின், மா முரசு எற்றுதிர், வல் என்றான் -
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான். 23
பறை ஒலி கேட்டு நான்கு படையும் எழுதல்
பேரி ஓசை பிறத்தலும், பெட்புறு
மாரி மேகம் வரம்பு இல வந்தென,
தேரின் சேனை திரண்டது; தேவர்தம்
ஊரும், நாகர் உலரும் உலைந்தவே. 24
போர்ப் பெரும் பணை பொம் என் முழக்கமா,
நீர்த் தரங்கம் நெடுந் தடந் தோள்களா,
ஆர்த்து எழுந்தது-இறுதியில், ஆர் கலிக்
கார்க் கருங் கடல் கால் கிளர்ந்தென்னவே. 25
காடு துன்றி, விசும்பு கரந்தென
நீடி, எங்கும் நிமிர்ந்த நெடுங் கொடி-
ஓடும் எங்கள் பசி என்று, உவந்து, எழுந்து,
ஆடுகின்ற அலகையின் ஆடவே, 26
தறியின் நீங்கிய, தாழ் தடக் கைத் துணை,
குறிகொளா, மத வேழக் குழு அனார்,
செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும்
பொறியின், கான் எங்கும் வெங் கனல் பொங்கவே. 27
முருடு இரண்டு முழங்குறத் தாக்கு ஒலி
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக,
அருள் திரண்ட அருக்கன் தன்மேல், அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே. 28
தலையில், மாசுணம், தாங்கிய தாரணி
நிலை நிலாது, முதுகை நெளிப்புற,
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய
மலை எலாம், ஒரு மாடு தொக்கென்னவே. 29
வல்லியக் குழாங்களோ? மழையின் ஈட்டமோ?
ஒல் இபத் தொகுதியோ? ஓங்கும் ஓங்கலோ?
அல்ல, மற்று அரிகளின் அனிகமோ? என,
பல் பதினாயிரம் படைக் கை வீரரே. 30
ஆளிகள் பூண்டன, அரிகள் பூண்டன,
மீளிகள் பூண்டன, வேங்கை பூண்டன,
ஞாளிகள் பூண்டன, நரிகள் பூண்டன,
கூளிகள் பூண்டன, குதிரை பூண்டன, 31
ஏற்றுஇனம் ஆர்த்தன, ஏனம் ஆர்த்தன,
காற்றுஇனம் ஆர்த்தன, கழுதை ஆர்த்தன,
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும்
பாற்றுஇனம் ஆர்த்தன, பணிலம் ஆர்த்தன. 32
தேர்இனம் துவன்றின; சிறு கண் செம் முகக்
கார்இனம் நெருங்கின; காலின், கால் வரு
தார்இனம் குழுமின;-தடை இல் கூற்று எனப்
பேர்இனம் கடல் எனப் பெயருங்காலையே. 33
அரக்கரின் போர்க் கருவிகள்
மழுக்களும், அயில்களும், வயிர வாள்களும்,
எழுக்களும், தோமரத் தொகையும், ஈட்டியும்,
முழுக்களும், முசுண்டியும், தண்டும், முத் தலைக்
கழுக்களும், உலக்கையும், காலபாசமும். 34
குந்தமும், குலிசமும், கோலும், பாலமும்,
அந்தம் இல் சாபமும், சரமும், ஆழியும்,
வெந் தொழில் வலயமும், விளங்கு சங்கமும்
பந்தமும் கப்பணப் படையும், பாசமும். 35
ஆதியின், அருக்கனும் அனலும் அஞ்சுறும்
சோதிய, சோரியும் தூவும் துன்னிய,-
ஏதிகள் மிடைந்தன,-இமையவர்க்கு எலாம்
வேதனை கொடுத்தன, வாகை வேய்ந்தன. 36
அரக்கர் படையும், படைத் தலைவர்களும்
ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர்;
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்;
தீ எரி விழியினர்;-நிருதர் சேனையின்
நாயகர், பதின்மரோடு அடுத்த நால்வரே. 37
ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்
கூறின ஒரு படை; குறித்த அப் படை
ஏறின ஏழினது இரட்டி என்பரால்-
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார். 38
உரத்தினர்; உரும் என உரறும் வாயினர்;
கரத்து எறி படையினர்; கமலத்தோன் தரும்
வரத்தினர்; மலை என, மழை துயின்று எழு
சிரத்தினர்; தருக்கினர்; செருக்கும் சிந்தையார்; 39
விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர்;
கண் அளவிடல் அரு மார்பர்; காலினால்,
மண் அளவிடு நெடு வலத்தர்; வானவர்
எண் அளவிடல் அருஞ் செரு வென்று ஏறினார். 40
இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை
சிந்தின தெறித்து உக, செறிந்த தோளினார்;
அந்தகன், அடி தொழுது அடங்கும் ஆணையார்;
வெந் தழல் உருவு கொண்டனைய மேனியார். 41
குலமும், பாசமும், தொடர்ந்த செம் மயிர்ச்
சாலமும், தறுகணும், எயிறும், தாங்கினார்,
ஆலமும் வெளிது எனும் நிறத்தர்; ஆற்றலால்,
காலனும், காலன் என்று, அயிர்க்கு காட்சியார். 42
கழலினர்; தாரினர்; கவச மார்பினர்;
நிழலுறு பூணினர்; நெறித்த நெற்றியர்;
அழலுறு குஞ்சியர்; அமரை வேட்டு, உவந்து,
எழலுறு மனத்தினர்; ஒருமை எய்தினார். 43
மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும்,
விருப்புறா, முகத்து எதிர் விழிக்கின், வெந்திடும்;
உருப் பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும்,
செருப் பெறாத் தினவுறு சிகரத் தோளினார். 44
குஞ்சரம், குதிரை, பேய், குரங்கு, கோள் அரி,
வெஞ் சினக் கரடி, நாய், வேங்கை, யாளி என்று,
அஞ்சுற, கனல் புரை மிகத்தர்; ஆர்கலி
நஞ்சு தொக்கெனப் புரை நயனத்தார்களும்- 45
எண் கையர்; எழு கையர்; ஏழும் எட்டும் ஆய்க்
கண் கனல் சொரிதரு முகத்தர்; காலினர்;
வண் கையின் வளைத்து, உயிர் வாரி, வாயின் இட்டு
உண்கையில் உவகையர்; உலப்பு இலார்களும். 46
இயக்கரின் பறித்தன, அவுணர் இட்டன,
மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின,
துய்க்கு இல் கந்தர்ப்பரைத் துரந்து வாரின,
நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின. 47
கொடி, தழை, கவிகை, வான், தொங்கல், குஞ்சரம்
படியுறு பதாகை, மீ விதானம், பல் மணி
இடையிலாது எங்கணும் இசைய மீமிசை
மிடைதலின், உலகு எலாம் வெயில் இழக்கவே. 48
படைகள் இராமன் இருப்பிடத்தை அடைதல்
எழுவரோடு எழுவர் ஆம், உலகம் ஏழொடு ஏழ்
தழுவிய வென்றியர், தலைவர்; தானையர்-
மழுவினர்; வாளினர்; வயங்கு சூலத்தர்;
உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார். 49
வில்லினர்; வாளினர்; இதழின்மீது இடும்
பல்லினர்; மேருவைப் பறிக்கும் ஆற்றலர்;
புல்லினர் திசைதொறும்; புரவித் தேரினர்;
சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார். 50
தூடணன், திரிசிராத் தோன்றல், ஆதியர்
கோடணை முரசினம் குளிறு சேனையர்
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர்
பாடவ நிலையினர், பலரும் சுற்றினர். 51
ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி,
வான் தொடர் மேருவை வளைத்ததாம் என,
ஊன்றின தேரினன், உயர்ந்த தோளினன்,
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே. 52
அசும்புறு மத கரி, புரவி, ஆடகத்
தசும்புறு சயந்தனம், அரக்கர் தாள், தர,
விசும்புறு தூளியால், வெண்மை மேயின-
பசும்பரி, பகலவன், பைம் பொன் தேர் அரோ. 53
வனம் துகள்பட்டன, மலையின் வான் உயர்
கனம் துகள்பட்டன, கடல்கள் தூர்ந்தன,
இனம் தொகு தூளியால், இசைப்பது என் இனி?-
சினம் தொகு நெடுங் கடற் சேனை செல்லவே. 54
நிலமிசை, விசும்பிடை, நெருக்கலால், நெடு
மலைமிசை மலை இனம் வருவபோல் மலைத்
தலைமிசை, தலைமிசை, தாவிச் சென்றனர்-
கொலைமிசை நஞ்சு எனக் கொதிக்கும் நெஞ்சினார். 55
வந்தது சேனை வெள்ளம், வள்ளியோன் மருங்கு-மாயா
பந்த மா வினையம் மாளப் பற்று அறு பெற்றி யோர்க்கும்
உந்த அரு நிலையது ஆகி, உடன் உறைந்து உயிர்கள் தம்மை
அந்தகர்க்கு அளிக்கும் நோய்போல், அரக்கி முன் ஆக அம்மா! 56
தூரியக் குரலின், வானின் முகிற் கணம் துணுக்கம்கொள்ள;
வார் சிலை ஒலியின், அஞ்சி, உரும் எலாம், மறுக்கம்கொள்ள;
ஆர்கலி, ஆர்ப்பின், உட்கி அசைவுற; அரக்கர் சேனை,
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே. 57
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த, வழியில் யாண்டும்
ஓய்வில, நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின, உலைந்த கண்ண,
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய, சென்று,
வேய் தெரிந்து உரைப்ப போன்ற-புள்ளொடு விலங்கும் அம்மா! 58
தூளியின் படலை வந்து தொடர்வுற, மரமும் தூறும்
தாள் இடை ஒடியும் ஓசை சடசட ஒலிப்ப, கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி
மீளி மொய்ம்பினரும், சேனை மேல்வந்தது உளது என்று உன்னா, 59
இராமன் போருக்கு எழுதல்
மின் நின்ற சிலையன், வீரக் கவசத்தன், விசித்த வாளன்,
பொன் நின்ற வடிம்பின் வாளிப் புட்டிலன், புகையும் நெஞ்சன்
நில்; நின்று காண்டி, யான் செய் நிலை என, விரும்பி நேரா
முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன், மொழியலுற்றான். 60
நெறி கொள் மா தவர்க்கு, முன்னே நேர்ந்தனென்; நிருதர் ஆவி
பறிக்குவென் யானே என்னும் பழமொழி பழுதுறாமே,
வெறி கொள் பூங் குழலினாளை, வீரனே! வேண்டினேன் யான்,
குறிக்கொடு காத்தி; இன்னே கொல்வென்; இக் குழுவை என்னா. 61
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை
கரன் படை என்பது எண்ணி, கரு நிறக் கமலக்கண்ணன்,
சரம் படர் புட்டில் கட்டி, சாபமும் தரித்தான்; தள்ளா
உரம் படர் தோளில் மீளாக் கவசம் இட்டு, உடைவாள் ஆர்த்தான். 62
போர் செய்ய தனக்கு அருள இராமனை இலக்குவன் வேண்டல்
மீள அருஞ் செருவில், விண்ணும் மண்ணும் என்மேல் வந்தாலும்,
நாள் உலந்து அழியும் அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னே?
ஆளியின் துப்பினாய்! இவ் அமர் எனக்கு அருளிநின்று, என்
தோளினைத் தின்னுகின்ற சோம்பினைத் துடைத்தி என்றான். 63
இலக்குவன் வேண்டுகோளை இராமன் மறுத்து, போர் செய்யச் செல்லல்
என்றனன் இளைய வீரன்; இசைந்திலன் இராமன், ஏந்தும்
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணரக் கொண்டான்;
அன்றியும், அண்ணல் ஆணை மறுக்கிலன்; அங்கை கூப்பி-
நின்றவன், இருந்து கண்ணீர் நிலன் உறப் புலர்கின்றாள்பால். 64
குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர,
தழையுறு சாலைநின்றும், தனிச் சிலை தரித்த மேரு,
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண,
முழையின்நின்று எழுந்து செல்லும் மடங்கலின், முனிந்து, சென்றான். 65
சூர்ப்பணகை இராமனை சுட்டுதல்
தோன்றிய தோன்றல்தன்னைச் சுட்டினள் காட்டி, சொன்னாள்-
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெந் தீ இது என்ன,
தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள்-
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன், இகல் இராமன் என்றே. 66
கரன் தானே மோதுவதாகக் கூறுதல்
கண்டனன், கனகத் தேர்மேல், கதிரவன் கலங்கி நீங்க,
விண்டனன் நின்ற, வென்றிக் கரன் எனும் விலங்கல் தோளான்;
மண்டு அமர் யானே செய்து, இம் மானிடன் வலியை நீக்கி,
கொண்டனென் வாகை என்று, படைஞரைக் குறித்துச் சொன்னான். 67
மானிடன் ஒருவன்; வந்த வலி கெழு சேனைக்கு, அம்மா!
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை,
யானுடை வென்றி என் ஆம்? யாவரும் கண்டு நிற்றிர்;
ஊனுடை இவனை, யானே, உண்குவென் உயிரை என்றான். 68
தீய நிமித்தம் கண்ட அகம்பன் அறிவுரை
அவ் உரை கேட்டு வந்தான், அகம்பன் என்று அமைந்த கல்விச்
செவ்வியான் ஒருவன்; ஐய; செப்புவேன்! செருவில் சால
வெவ்வியர் ஆதல் நன்றே; வீரரில் ஆண்மை வீர!
இவ் வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று, இயம்பலுற்றான். 69
குருதி மா மழை சொரிந்தன, மேகங்கள் குமுறி;
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது; பாராய்-
கருது வீர!-நின் கொடிமிசைக் காக்கையின் கணங்கள்
பொருது வீழ்வன, புலம்புவ, நிலம் படப் புரள்வ; 70
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன; வயவர்
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன; தூங்கி
மீளி மொய்ம்புடை இவுளி வீழ்கின்றன; விரவி,
ஞாளியோடு நின்று, உளைக்கின்ற நரிக் குலம் பலவால்; 71
பிடி எலாம் மதம் பெய்திட, பெருங் கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு; உலகமும் கம்பிக்கும்; உயர் வான்
இடியும் வீழ்ந்திடும்; எரிந்திடும் பெருந்திசை; எவர்க்கும்
முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும். 72
இனைய ஆதலின், மானிடன் ஒருவன் என்று, இவனை
நினையலாவது ஒன்று அன்று அது;-நீதியோய்!-நின்ற
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்;
புனையும் வாகையாய்! பொறுத்தி, என் உரை எனப் புகன்றான். 73
உரைத்த வாசகம் கேட்டலும், உலகு எலாம் உலையச்
சிரித்து, நன்று நம் சேவகம்! தேவரைத் தேய
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள், அமர் வேண்டி
இரைத்து வீங்குவ, மானிடற்கு எளியவோ? என்றான். 74
என்னும் மாத்திரத்து, எறி படை இடி எனா இடியா
மன்னர் மன்னவன் மதலையை, வளைந்தன-வனத்து
மின்னும் வால் உளை மடங்கலை, முனிந்தன வேழம்
துன்னினாலென, சுடு சினத்து அரக்கர் தம் தொகுதி. 75
இராமனின் அம்பால் படை எல்லாம் அழிதல்
வளைந்த காலையில், வளைந்தது, அவ் இராமன் கை வரி வில்;
விளைந்த போரையும் ஆவதும் விளம்புவதும்; விசையால்
புளைந்த பாய் பரி புரண்டன; புகர் முகப் பூட்கை
உளைந்த, மால் வரை உரும் இடி பட ஒடிந்தென்ன. 76
சூலம் அற்றன; அற்றன சுடர் மழு; தொகை வாள்
மூலம் அற்றன; அற்றன முரண் தண்டு; பிண்டி
பாலம் அற்றன; அற்றன பகழி; வெம் பகு வாய்
வேலும் அற்றன; அற்றன வில்லொடு பல்லம். 77
தொடி துணிந்தன தோளொடு; தோமரம் துணிந்த;
அடி துணிந்தன கட களிறு; அச்சோடு, நெடுந் தேர்,
கொடி துணிந்தன; குரகதம் துணிந்தன; குல மா
முடி துணிந்தன; துணிந்தன, முளையோடு முசலம். 78
கருவி மாவொடு, கார் மதக் கைம்மலைக் கணத்து ஊடு-
உருவி மாதிரத்து ஓடின, சுடு சரம்; உதிரம்
அருவி மாலையின் தேங்கினது; அவனியில் அரக்கர்
திருஇல் மார்பகம் திறந்தன; துறந்தன சிரங்கள். 79
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், கோடி, என்று உணரா
துன்று பத்திய, இராகவன் சுடு சரம் துரப்ப,
சென்று, பத்திரத் தலையின மலை திரண்டென்ன,
கொன்று, பத்தியில் குவித்தன பிணப் பெருங் குன்றம். 80
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ,
சூடு கொண்டன எனத் தொடர் குருதி மீத் தோன்ற,
ஆடுகின்ற அறுகுறை; அயில் அம்பு, விண்மேல்
ஓடுகின்றன, உயிரையும் தொடர்வன ஒத்த. 81
கைகள் வாளொடு களம்பட, கழுத்து அற, கவச
மெய்கள் போழ்பட, தாள் விழ, வெருவிட, நிருதர்
செய்ய மாத் தலை சிந்திட, திசை உறச் சென்ற-
தையலார் நெடு விழி எனக் கொடியன கரங்கள். 82
மாரி ஆக்கிய வடிக் கணை, வரை புரை நிருதர்
பேர் யாக்கையின் பெருங் கரை வயின் தொறும் பிறங்க,
ஏரி ஆக்கின; ஆறுகள் இயற்றின; நிறையச்
சோரி ஆக்கின; போக்கின; வனம் எனும் தொன்மை. 83
அலை மிதந்தன குருதியின் பெருங் கடல், அரக்கர்
தலை மிதந்தன; நெடுந் தடி மிதந்தன; தடக் கைம்-
மலை மிதந்தன; வாம் பரி மிதந்தன; வயப் போர்ச்
சிலை மிதந்தன; மிதந்தன; கொடி நெடுந் தேர்கள். 84
ஆய காலையில், அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர்,
தீய வார் கணை முதலிய தெறு சினப் படைகள்,
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம்
தூய தாரைகள் சொரிவன ஆம் என, சொரிந்தார். 85
சொரிந்த பல் படை துணிபட, துணிபட, சரத்தால்
அரிந்து போந்தன சிந்திட, திசை திசை அகற்றி,
நெரிந்து பார்மகள் நெளிவுற, வனம் முற்றும் நிறைய,
விரிந்த செம் மயிர்க் கருந் தலை மலை என வீழ்ந்தான். 86
கவந்த பந்தங்கள் களித்தன, குளித்த கைம்மலைகள்,
சிவந்த பாய்ந்த வெங் குருதியில், திருகிய சினத்தால்
நிவந்த வெந் தொழில் நிருதர்தம் நெடு நிணம் தெவிட்டி,
உவந்த, வன் கழுது; உயிர் சுமந்து உளுக்கியது உம்பர். 87
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர்,
கருடன் அஞ்சுறு, கண் மணி காகமும் கவர்ந்த;
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ?
அருள் தரும் திறத்து அறல் அன்றி, வலியது உண்டாமோ? 88
பல் ஆயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும்
வில்லாளனை முனியா, வெயில் அயில் ஆம் என விழியா,-
கல் ஆர் மழை, கண மா முகில் கடை நாள், விழுவனபோல்,
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார், வினை செய்தார். 89
எறிந்தார் என, எய்தார் என, நினைந்தார் என, எறிய
அறிந்தார் என, அறியாவகை, அயில் வாளியின் அறுத்தான்;
செறிந்தாரையும், பிரிந்தாரையும், செறுத்தாரையும், சினத்தால்
மறிந்தாரையும், வலித்தாரையும், மடித்தான் -சிலை பிடித்தான். 90
வானத்தன, கடலின் புற வலயத்தன; மதி சூழ்
மீனத்தன; மிளிர் குண்டல வதனத்தன மிடல் வெங்
கானத்தன; மலையத்தன; திசை சுற்றிய கரியின்
தானத்தன-காகுத்தன சரம் உந்திய சிரமே. 91
மண் மேலன; மலை மேலன; மழை மேலன; மதி தோய்
விண் மேலன; நெடு வேலையின் மேல் கீழன; மிடலோர்
புண் மேலன;-குருதிப் பொழி திரை ஆறுகள் பொங்க,
திண் மேருவை நகு மார்பினை உருவித் திரி சரமே. 92
பொலந் தாரினர், அனலின் சிகை பொழி கண்ணினர், எவரும்
வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார், சர மழையால்
உலந்தார்; உடல் கடலோடு உற, உலவா உடல் உற்றார்;
அலந்தார் நிசிசரர் ஆம் என, இமையோர் எடுத்து ஆர்த்தார். 93
ஈரல் செறி கமலத்தன, இரதத் திரள் புளினம்,
வீரக் கரி முதலக் குலம், மிதக்கின்றன உதிக்கும்
பாரக் குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா,
மூரித் திரை உதிரக் குளம் முழுகிக் கழுது எழுமே. 94
அழைத்தார் சிலர், அயர்த்தார் சிலர், அழிந்தார் சிலர், கழிந்தார்,
உழைத்தார் சிலர், உயிர்த்தார் சிலர், உருண்டார் சிலர், புரண்டார்;
குழைத் தாழ் திரைக் குருதிக் கடல் குளித்தார் சிலர், கொலை வாய்
மழைத் தாரைகள் படப் பாரிடை மடிந்தார் சிலர், உடைந்தார். 95
போர்க்களத்தில் படைத் தலைவர்கள் முந்துதல்
உடைந்தார்களை நகைசெய்தனர், உருள் தேரினர், உடன் ஆய்
அடைந்தார், படைத் தலைவீரர்கள் பதினால்வரும்; அயில் வாள்
மிடைந்தார், நெடுங் கடல்-தானையர், மிடல் வில்லினர், விரிநீர்
கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் எனக் கொடியார். 96
நாகத் தனி ஒரு வில்லியை, நளிர் முப்புரர், முன் நாள்
மாகத்திடை வளைவுற்றனர் என, வள்ளலை மதியார்,
ஆகத்து எழு கனல் கண்வழி உக, உற்று எதிர் அழன்றார்;
மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார், செரு விளைத்தார். 97
எய்தார் பலர்; எறிந்தார் பலர்; மழு ஓச்சினர்; எழுவால்
பொய்தார் பலர்; புடைத்தார் பலர்; கிடைத்தார் பலர்; பொருப்பால்
பெய்தார் மழை; பிதிர்த்தார் எரி;-பிறை வாள் எயிற்று அரக்கர்-
வைதார் பலர்; தெழித்தார் பலர்; மலை ஆம் என வளைத்தார். 98
தேர் பூண்டன விலங்கு யாவையும், சிலை பூண்டு எழு கொலையால்,
பார் பூண்டன; மத மா கரி பலி பூண்டன; புரிமா
தார் பூண்டன, உடல் பூண்டில தலை; வெங்கதிர் தழிவந்து
ஊர் பூண்டன பிரிந்தாலென, இரிந்தார் உயிர் உலைந்தார். 99
மால் பொத்தின, மறவோர் உடன் மழை பொத்தின; வழி செம்-
பால் பொத்தின, நதியின் கிளர் படி பொத்தின; படர் வான் -
மேல் பொத்தின குழி விண்ணவர், விழி பொத்தினர்; விரை வெங்
கால் பொத்தினர் நமன் தூதுவர், கடிது உற்று, உயிர் கவர்வார். 100
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய்,
நாய் ஏறின, தலைமேல் நெடு நரி ஏறின; எரி கால்
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர், வந்தார்,
தீ ஏறு, இகல் அரி ஏறு என, முகில் ஏறு எனச் செறிந்தார். 101
தலை சிந்தின; விழி சிந்தின; தழல் சிந்தின; தரைமேல்
மலை சிந்தினபடி சிந்தின, வரி சிந்துரம்; மழைபோல்
சிலை சிந்தின கணை சிந்தின, திசை சிந்தின; திசையூடு
உலை சிந்தின, பொறி சிந்தின, உயிர் சிந்தின, உடலம். 102
படைப் பெருந் தலைவரும், படைத்த தேர்களும்
உடைத் தடம் படைகளும், ஒழிய, உற்று எதிர்
விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர், வீரன் வாளியால்
முடைத்த வெங் குருதியின் கடலில் மூழ்கினார். 103
சுற்றுற நோக்கினர், தொடர்ந்த சேனையில்
அற்றன தலை எனும், ஆக்கை கண்டிலர்;
தெற்றினர் எயிறுகள்; திருகினார் சினம்;
முற்றினர் இராமனை, முடுகு தேரினார். 104
ஏழ்-இரு தேரும் வந்து, இமைப்பின் முன்பு, இடை
சூழ்வன, கணைகளின் துணிய நூறினான்;
ஆழியும், புரவியும், ஆளும் அற்று, அவை
ஊழி வெங் கால் எறி ஓங்கல் ஒத்தவே. 105
அழிந்தன தேர்; அவர் அவனி கீண்டு உக,
இழிந்தனர்; வரி சிலை எடுத்த கையினர்;
ஒழிந்தனர்; சரங்களை உருமின் ஏறு எனப்
பொழிந்தனர், பொழி கனல் பொடிக்கும் கண்ணினார். 106
நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால்
ஈறுசெய்து, அவர் சிலை ஏழொடு ஏழையும்
ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால்
கூறுசெய்து, அமர்த் தொழில் கொதிப்பை நீக்கினான். 107
வில் இழந்து, அனைவரும் வெகுளி மீக்கொள,
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார்,
ஒல்லியில் உருத்து, உயர் விசும்பில் ஓங்கி நின்று
எல் உயர் பொறி உக, எறிதல் மேயினார். 108
கலைகளின் பெருங் கடல், கடந்த கல்வியான்
இலை கொள் வெம் பகழி ஏழ்-இரண்டும் வாங்கினான்;
கொலை கொள் வெஞ் சிலையொடு புருவம் கோட்டினான்;
மலைகளும் தலைகளும் விழுந்த, மண்ணினே. 109
திரிசிரா சினந்து மேல் வருதல்
படைத் தலைத் தலைவர்கள் படலும், பல் படை
புடைத்து, அடர்ந்து, எதிர் அழல் புரையும் கண்ணினார்,
கிடைத்தனர், அரக்கர்கள்; கீழும் மேலும் மொய்த்து
அடைத்தனர் திசைகளை; அமரர் அஞ்சினார். 110
முழங்கின பெரும் பணை, மூரி மால் கரி;
முழங்கின வரி சிலை முடுகு நாண் ஒலி;
முழங்கின சங்கொடு புரவி; மொய்த்து உற
முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு அரோ. 111
வெம் படை, நிருதர், வீச விண்ணிடை மிடைந்த, வீரன்
அம்பு இடை அறுக்க, சிந்தி அற்றன படும்; என்று, அஞ்சி,
உம்பரும் இரியல் போனார்; உலகு எலாம் உலைந்து சாய்ந்த;
கம்பம் இல் திசையில் நின்ற களிறும், கண் இமைத்த அன்றே. 112
அத் தலைத் தானையன், அளவு இல் ஆற்றலன்,
முத் தலைக் குரிசில், பொன் முடியன்; முக்கணான்
கைத்தலைச் சூலமே அனைய காட்சியான்;
வைத் தலைப் பகழியால் மழை செய் வில்லினான். 113
அன்னவன் நடுவுற, ஊழி ஆழி ஈது
என்ன வந்து, எங்கணும் இரைத்த சேனையுள்,
தன் நிகர் வீரனும், தமியன், வில்லினன்,
துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான். 114
பெருஞ் சேனையோடு திரிசிரா எதிர்த்தல்
ஓங்கு ஒளி வாளினன், உருமின் ஆர்ப்பினன்,
வீங்கிய கவசத்தன், வெய்ய கண்ணினன்-
ஆங்கு-அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக, தேர்
தாங்கினன் இராமனும், சரத்தின் தானையால். 115
தாள் இடை அற்றன; தலையும் அற்றன;
தோள் இடை அற்றன; தொடையும் அற்றன;
வாள் இடை அற்றன; மழுவும் அற்றன;
கோள் இடை அற்றன; குடையும் அற்றன. 116
கொடி யொடு கொடுஞ்சு இற, புரவிக் கூட்டு அற,
படியொடு படிந்தன, பருத்த தேர்; பணை
நெடிய வன் கட கரி புரண்ட, நெற்றியின்
இடியொடு முறிந்து வீழ் சிகரம் என்னவே. 117
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர்;
கொற்ற வெஞ் சிலை சரம் கோத்து வாங்குவார்
இற்றவர், இறாதவர் எழுந்து, விண்ணினைப்
பற்றின மழை எனப் படை வழங்குவார். 118
கேடகத் தடக் கைய, கிரியின் தோற்றத்த,
ஆடகக் கவசத்த, கவந்தம் ஆடுவ-
பாடகத்து அரம்பையர் மருள, பல்வித
நாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே. 119
கவரி வெண் குடை எனும் நுரைய; கைம்மலைச்
சுவரன; கவந்தம் ஆழ் சுழிய; தண் துறை
பவர் இனப்படு மணி குவிக்கும் பண்ணைய;
உவரியைப் புதுக்கின-உதிர-ஆறுஅரோ. 120
சண்ட வெங் கடுங் கணை தடிய, தாம், சில
திண் திறல் வளை எயிற்று அரக்கர், தேவர் ஆய்,
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும்
கண்டனர், தம் உடல்-கவந்த நாடகம். 121
ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர்-
தூய வெங் கடுங் கணை துணித்த தங்கள் தோள்,
பேய் ஒருதலை கொள, பிணங்கி, வாய்விடா
நாய் ஒருதலை கொள-நகையுற்றார், சிலர். 122
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர்
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார்
நிருதர் தம் பெரும் படை நெடிது; நின்றவன்
ஒருவன் என்று, உள்ளத்தில் உலைவுற்றார், சிலர். 123
கைக் களிறு அன்னவன் பகழி, கண்டகர்
மெய்க் குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின-
மைக் கரு மனத்து ஒரு வஞ்சன், மாண்பு இலன்,
பொய்க் கரி கூறிய கொடுஞ் சொல் போலவே. 124
அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன் மயம் ஆக்கும் தன்மைபோல்
வஞ்சகத்து அரக்கரை வளைத்து, வள்ளல்தான்
செஞ் சரத் தூய்மையால், தேவர் ஆக்கினான். 125
வலம் கொள் போர், மானிடன் வலிந்து கொன்றமை,
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என
சலம்கொள் போர் அரக்கர்தம் உருக்கள் தாங்கின,
இலங்கையின் உற்ற, அக் குருதி ஆறு அரோ. 126
திரிசிரா இரு சிரம் இழத்தல்
சூழ்ந்த தார் நெடும் படை, பகழி சுற்றுறப்
போழ்ந்து உயிர் குடித்தலின், புரளப் பொங்கினான்,
தாழ்ந்திலன் முத் தலைத் தலைவன், சோரியின்
ஆழ்ந்த தேர், அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான். 127
ஊன்றிய தேரினன் உருமின் வெங் கணை,
வான் தொடர் மழை என, வாய்மை யாவர்க்கும்
சான்று என நின்ற அத் தரும மன்னவன்
தோன்றல்தன் திரு உரு மறையத் தூவினான். 128
தூவிய சரம் எலாம், துணிய, வெங் கணை
ஏவினன் இராமனும்; ஏவி, ஏழ்-இரு
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து,
ஆவி, வெம் பாகனை, அழித்து மாற்றினான். 129
அன்றியும், அக் கணத்து, அமரர் ஆர்த்து எழ,
பொன் தெரி வடிம்புடைப் பொரு இல் வாளியால்,
வன் தொழில் தீயவன் மகுட மாத் தலை
ஒன்று ஒழித்து, இரண்டையும் உருட்டினான் அரோ. 130
முத்தலைவன் அத்தலை ஒரு தலையுடன் பொருதல்
தேர் அழிந்து, அவ் வழி, திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும், மறம் பிழைத்திலன்;
வார் அழிந்து உமிழ் சிலை, வான நாட்டுழிக்
கார் இழிந்தாலென, கணை வழங்கினான். 131
ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை
தோற்றிய வில்லொடும் தொடர, மீமிசைக்
காற்று இடை அழித்தென, கார்முகத்தையும்
மாற்ற அரும் பகழியால், அறுத்து மாற்றினான். 132
வில் இழந்தனன் என்னினும், விழித்த வாள் முகத்தின்
எல் இழந்திலன்; இழந்திலன் வெங் கதம், இடிக்கும்
சொல் இழந்திலன்; தோள் வலி இழந்திலன்; சொரியும்
கல் இழந்திலன்; இழந்திலன் கறங்கு எனத் திரிதல். 133
ஆள் இரண்டு-நூறு உள என, அந்தரத்து ஒருவன்
மூள் இரும் பெரு மாய வெஞ் செரு முயல்வானை,
தாள் இரண்டையும் இரண்டு வெங் கணைகளால் தடிந்து,
தோள் இரண்டையும் இரண்டு வெங் கணைகளால் துணித்தான். 134
நிருதர் சேனை
அற்ற தாளொடு தோளிலன், அயில் எயிறு இலங்க,
பொற்றை மா முழைப் புலாலுடை வாயினின், புகுந்து
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன்; பரிவான்,
கொற்ற வார் சரத்து, ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான். 135
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும், செறிந்த
நிருதர் ஓடினர், தூடனன் விலக்கவும் நில்லார்;-
பருதி வாளினர், கேடகத் தடக் கையர், பரந்த
குருதி நீரிடை, வார் கழல் கொழுங் குடர் தொடக்க. 136
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப,
பணத்தின்மேல் நிலம் குழியுற, கால் கொடு பதைப்பார்
நிணத்தின்மேல் விழுந்து அழுந்தினர் சிலர்; சிலர் நிவந்த
பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர், உயிர் கொடு பிழைப்பார். 137
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட,
ஓய்ந்துளார் சிலர்; உலந்தனர் உதிர நீர் ஆற்றில்
பாய்ந்து, கால் பறித்து அழுந்தினர் சிலர்; சிலர் பயத்தால்
நீந்தினார், நெடுங் குருதி அம் கடல் புக்கு நிலையார். 138
மண்டி ஓடினார் சிலர், நெடுங் கட கரி வயிற்றுப்
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார்,
தொண்டை நீங்கிய கவந்தத்தை, துணைவ! நீ எம்மைக்
கண்டிலேன் எனப் புகல் என, கை தலைக் கொள்வார். 139
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார்,
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டாலென, அழிவார்;
உச்ச வீரன் கைச் சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவத்
தச்சு நின்றன கண்டனர், அவ் வழித் தவிர்ந்தார். 140
தூடணன் வீர உரை கூறல்
அனையர் ஆகிய அரக்கரை, ஆண் தொழிற்கு அமைந்த
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்மின் என்னா,
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என, நின்றே,
துனையும் வாம் பரித் தேரினன் தூடணன் சொன்னான். 141
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும்
கொச்சை மாந்தரைக் கோல் வளை மகளிரும் கூசார்;
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி,
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அருந் துணை ஆமோ? 142
பூ அராவு வேல் புரந்தரனோடுதான், பொன்றா
மூவரோடுதான் முன் நின்று முட்டிய சேனையில்
ஏவர் ஓடினர் இராக்கதர்? நுமக்கு இடைந்து ஓடும்
தேவரோடு கற்றறிந்துளிரோ? மனம் திகைத்தீர்! 143
இங்கு ஓர் மானிடற்கு, இத்தனை வீரர்கள், இடைந்தீர்;
உம் கை வாளொடு போய் விழுந்து, ஊர் புகலுற்றீர்;
கொங்கை மார்பிடைக் குளிப்புறக் களிப்புறு கொழுங் கண்
நங்கைமார்களைப் புல்லுதிரோ? நலம் நுகர்வீர்! 144
செம்பு காட்டிய கண் இணை பால் எனத் தெளிந்தீர்!
வெம்பு காட்டிடை நுழைதொறும், வெரிந் உறப் பாய்ந்த
கொம்பு காட்டுதிரோ, தட மார்பிடைக் குளித்த
அம்பு காட்டுதிரோ, குல மங்கையர்க்கு? அம்மா! 145
ஏக்கம் இங்கு இதன்மேலும் உண்டோ ? இகல் மனிதன்
ஆக்கும் வெஞ் சமத்து, ஆண்மை அவ் அமரர்க்கும் அரிதாத்
தாக்க அரும் புயத்து உம் குலத் தலைமகன் தங்கை
மூக்கொடு அன்றி, நும் முதுகொடும் போம் பழி முயன்றீர். 146
ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ? அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ?-வெறிப் போர்த்
தீர வாழ்க்கையின் தெவ்வரைச் செருவிடைப் பறித்த
வீர வாட் கையீர்!-எங்ஙனம் வாழ்திரோ? விளம்பீர். 147
தூடணனை இராமன் எதிர்த்தல்
என்று, தானும், தன் எறி கடற் சேனையும், இறை, நீர்
நின்று காண்டிர் என் நெடுஞ் சிலை வலி என நேராச்
சென்று தாக்கினன், தேவரும் மருள்கொண்டு திகைத்தார்;
நன்று! காத்தி என்று, இராமனும் எதிர் செல நடந்தான். 148
ஊடு அறுப்புண்ட, மொய்படை; கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட, குஞ்சரம்; கொடிஞ்சொடு கொடியின்
காடு அறுப்புண்ட, கால் இயல் தேர்; கதிர்ச் சாலி
சூடு அறுப்புண்ட எனக் கழுத்து அறுப்புண்ட, துரகம். 149
துருவி ஓடின, உயிர் நிலை, சுடு சுரம், துரந்த;
கருவி ஓடின, கச்சையும் கவசமும் கழல;
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக;
உருவி ஓடின, கேடகத் தட்டொடும் உடலம். 150
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு, அரக்கர்தம் ஆவி
தோய்ந்த; தோய்வு இலாப் பிறை முகச் சரம் சிரம் துமித்த;
காய்ந்த வெஞ் சரம் நிருதர்தம் கவச மார்பு உருவப்
பாய்ந்த; வஞ்சகர் இதயமும் பிளந்தன; பல்லம். 151
தூடணன் விடு சுடு சரம் யாவையும் துணியா,
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா
ஆடல் கொண்டனன், அளப்ப அரும் பெரு வலி அரக்கர்
கூடி நின்ற அக் குரை கடல் வறள்படக் குறைத்தான். 152
ஆர்த்து எழுந்தனர் வானவர்; அரு வரை மரத்தொடு
ஈர்த்து எழுந்தன, குருதியின் பெரு நதி; இராமன்
தூர்த்த செஞ் சரம் திசைதொறும் திசைதொறும் தொடர்ந்து
போர்த்த வெஞ் சினத்து அரக்கரைப் புரட்டின, புவியில் 153
தோன்றும் மால் வரைத் தொகை எனத் துவன்றிய நிணச் சேறு
ஆன்ற பாழ் வயிற்று அலகையைப் புகல்வது என்? அமர் வேட்டு
ஊன்றினார் எலாம் உலைந்தனர்; ஒல்லையில் ஒழிந்தார்;
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து, மெய்ம் மறந்தான். 154
களிறு, தேர், பரி, கடுத்தவர், முடித் தலை, கவந்தம்,
ஒளிறு பல் படை, தம் குலத்து அரக்கர்தம் உடலம்,
வெளிறு சேர் நிணம், பிறங்கிய அடுக்கலின் மீதாக்
குளிறு தேர் கடிது ஓட்டினன் தூடணன், கொதித்தான். 155
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல்
பிறங்கி நீண்டன, கணிப்பு இல; பெருங் கடு விசையால்;
கறங்கு போன்றுளது ஆயினும், பிணப் பெருங் காட்டில்
இறங்கும், ஏறும்; அத் தேர் பட்டது யாது என இசைப்பாம்? 156
அரிதின் எய்தினன் -ஐ-ஐந்து கொய் உளைப் பரியால்
உருளும் ஆழியது ஒரு தனித் தேரினன், மேகத்து
இருளை நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன்
தெருளும் வார் கணைக் கூற்று எதிர், ஆவி சென்றென்ன. 157
தூடணனின் வீழ்ச்சி
சென்ற தேரையும், சிலையுடை மலை எனத் தேர்மேல்
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி,
நன்று-நன்று, நின் நிலை என, அருள், இறை நயந்தான்
என்ற காலத்து, அவ் வெய்யவன் பகழி மூன்று எய்தான். 158
தூர வட்ட எண் திசைகளைத் தனித்தனி சுமக்கும்
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்கப்
பேர விட்டவன், நுதல் அணி ஓடையின் பிறங்கும்
வீர பட்டத்தில் பட்டன, விண்ணவர் வெருவ. 159
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து, இராமன்
செய்த சேயொளி முறுவலன், கடுங் கணை தெரிந்தான்;
நொய்தின், அங்கு அவன் நொறில் பரித் தேர் பட நூறி,
கையில் வெஞ் சிலை அறுத்து, ஒளிர் கவசமும் கடிந்தான். 160
தேவர் ஆர்த்து எழ, முனிவர்கள் திசைதொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க் கடல் முழக்கு என ஓங்க,
கா அடா இது, வல்லையேல், நீ என, கணை ஒன்று
ஏவினான்; அவன் எயிறுடை நெடுந் தலை இழந்தான். 161
வெகுண்ட கரன் திரண்ட படையுடன் போர்க்கு வரல்
தம்பி தலை அற்ற படியும், தயரதன் சேய்
அம்பு படையைத் துணிபடுத்ததும், அறிந்தான்
வெம்பு படை விற் கை விசயக் கரன் வெகுண்டான்-
கொம்பு தலை கட்டிய கொலைக் கரியொடு ஒப்பான். 162
அந்தகனும் உட்கிட, அரக்கர் கடலோடும்
சிந்துரம், வயப் புரவி, தேர், திசை பரப்பி,
இந்துவை வளைக்கும் எழிலிக் குலம் என, தான்
வந்து, வரி விற் கை மத யானையை வளைத்தான். 163
அடங்கல் இல் கொடுந் தொழில் அரக்கர், அவ் அனந்தன்
படம் கிழிதர, படிதனில், பலவிதப் போர்
கடம் கலுழ் தடங் களிறு, தேர், பரி, கடாவி,
தொடங்கினர்; நெடுந்தகையும் வெங் கணை துரந்தான். 164
துடித்தன கடக் கரி, துடித்தன பரித் தேர்
துடித்தன முடித் தலை; துடித்தன தொடித் தோள்;
துடித்தன மணிக் குடர்; துடித்தன தசைத் தோள்;
துடித்தன கழல்-துணை; துடித்தன இடத் தோள். 165
வாளின் வனம், வேலின் வனம் வார் சிலை வனம் திண்
தோளின் வனம், என்று இவை துவன்றி, நிருதப் போர்
ஆளின் வனம் நின்றதனை, அம்பின் வனம் என்னும்
கோளின் வன வன் குழுவினின், குறைபடுத்தான். 166
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம் தான்
மீன் உருவும்; மேருவை விரைந்து உருவும்; மேல் ஆம்
வான் உருவும்; மண் உருவும், வாள் உருவி வந்தார்
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ? 167
அன்று இடை வளைந்தவர் குலங்களொடு அடங்கச்
சென்று உலைவுறும்படி, தெரிந்து கணை சிந்த
மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரைக்
கொன்றனர், நுகர்ந்த பொருளின், கடிது கொன்ற. 168
கடுங் கரன் எனப் பெயர் படைத்த கழல் வீரன்,
அடங்கலும் அரக்கர் அழிவுற்றிட, அழன்றான்,
ஒடுங்கல் இல் நிணக் குருதி ஓதம் அதில் உள்ளான்,
நெடுங் கடலில் மந்தரம் என, தமியன் நின்றான். 169
கரனும் இராமனும் மோதுதல்
செங் கண் எரி சிந்த, வரி வில் பகழி சிந்த,
பொங்கு குருதிப் புணரியுள், புகையும் நெஞ்சன்-
கங்கமொடு காகம் மிடைய, கடலின் ஓடும்
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின்மிசை-வந்தான். 170
செறுத்து, இறுதியில் புவனி தீய எழு தீயின்,
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை,
கறுத்த மணிகண்டர் கடவுட்சிலை கரத்தால்
இறுத்தவனும், வெங் கணை தெரிந்தனன், எதிர்ந்தான். 171
தீ உருவ, கால் விசைய, செவ்வியன, வெவ் வாய்,
ஆயிரம் வடிக் கணை அரக்கர்பதி எய்தான்;
தீ உருவ, கால் விசைய, செவ்வியன், வெவ் வாய
ஆயிரம் வடிக் கணை இராமனும் அறுத்தான். 172
ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான்;
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும், எய்தான்;
சூழ் சுடர் வடிக் கணை அவற்று எதிர் தொடுத்தே,
ஆழி வரி விற் கரனும், அன்னவை அறுத்தான். 173
கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான்;
வள்ளல் உருவைப் பகழி மாரியின் மறைத்தான்;
உள்ளம் உலைவுற்று, அமரர் ஓடினார் ஒளித்தார்;
வெள் எயிறு இதழ்ப் பிறழ, வீரனும் வெகுண்டான். 174
இற்றது இராமனின் வில்
முடிப்பென் இன்று, ஒரு மொய் கணையால் எனா,
தொடுத்து நின்று, உயர் தோள் உற வாங்கினான்;
பிடித்த திண் சிலை, பேர் அகல் வானிடை
இடிப்பின் ஓசை பட, கடிது இற்றதே. 175
வெற்றி கூறிய வானவர், வீரன் வில்
இற்ற போது, துணுக்கம் உற்று ஏங்கினார்,
மற்று ஓர் வெஞ் சிலை இன்மை மனக் கொளா,
அற்றதால் எம் வலி என, அஞ்சினார். 176
இராமன் வருணன் கொடுத்த வரிசிலை வாங்குதல்
என்னும் மாத்திரத்து, ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும், தனிமையும், சிந்தியான்;
மன்னர் மன்னவன் செம்மல், மரபினால்,
பின் உறத் தன் பெருங் கரம் நீட்டினான். 177
கண்டு நின்று, கருத்து உணர்ந்தான் என,
அண்டர் நாதன் தடக் கையில், அத் துணை,
பண்டு போர் மழுவாளியைப் பண்பினால்,
கொண்ட வில்லை, வருணன் கொடுத்தனன். 178
கொடுத்த வில்லை, அக் கொண்டல் நிறத்தினான்
எடுத்து வாங்கி, வலம் கொண்டு, இடக் கையில்
பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம்
துடித்தவால், இடக் கண்ணொடு தோளுமே. 179
போரில் கரன் மடிதல்
ஏற்றி நாண், இமையாமுன் எடுத்து, அது
கூற்றினாரும் குனிக்க, குனித்து, எதிர்
ஆற்றினான் அவன் ஆழி அம் தேர், சரம்
நூற்றினால், நுண் பொடிபட, நூறினான். 180
எந்திரத் தடந் தேர் இழந்தான்; இழந்து
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து, அம்பு எலாம்
சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும்
மந்தரத்தில் மழையின் வழங்கினான். 181
தாங்கி நின்ற தயரத ராமனும்,
தூங்கு தூணியிடைச் சுடு செஞ் சரம்
வாங்குகின்ற வலக் கை ஓர் வாளியால்,
வீங்கு தோளோடு பாரிடை வீழ்த்தினான். 182
வலக் கை வீழ்தலும், மற்றைக் கையால் வெற்றி
உலக்கை, வானத்து உரும் என, ஓச்சினான்;
இலக்குவற்கு முன் வந்த இராமனும்
விலக்கினான், ஒரு வெங் கதிர் வாளியால். 183
விராவரும் கடு வெள் எயிறு இற்றபின்
அரா அழன்றது அனைய தன் ஆற்றலால்
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான்;
இராமன் அங்கு ஓர் தனிக் கணை ஏவினான். 184
வரம் அரக்கன் படைத்தலின், மாயையின்,
உரமுடைத் தன்மையால், உலகு ஏழையும்,
பரம் முருக்கிய பாவத்தினால், வலக்
கரம் என, கரன் கண்டம் உற்றான் அரோ. 185
வானவர் மகிழ்ச்சி
ஆர்த்து எழுந்தனர், ஆடினர், பாடினர்,
தூர்த்து அமைந்தனர், வானவர் தூய மலர்;
தீர்த்தனும் பொலிந்தான், கதிரோன் திசை
போர்த்த மென் பனி போக்கியது என்னவே. 186
செய்வினை முடித்துச் செய்யவள் அணுகல்
முனிவர் வந்து முறை முறை மொய்ப்புற,
இனிய சிந்தை இராமனும் ஏகினான்,
அனிக வெஞ் சமத்து ஆர் உயிர் போகத் தான்
தனி இருந்த உடல் அன்ன, தையல்பால். 187
விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக,
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார். 188
மூத்தம் ஒன்றில் முடித்தவர் மொய் புண்ணீர்
நீத்தம் ஓடி, நெடுந் திசை நேர் உற,
கோத்த வேலைக் குரல் என, வானவர்
ஏத்த, வீரன் இனிது இருந்தான் அரோ. 189
சூர்ப்பணகை அழுது புலம்பி, இலங்கை ஏகுதல்
இங்கு நின்றது உரைத்தும்; இராவணன்
தங்கை தன் கை, வயிறு தகர்த்தனள்;
கங்குல் அன்ன கரனைத் தழீஇ, நெடும்
பொங்கு வெங் குருதிப் புரண்டாள் அரோ. 190
ஆக்கினேன் மனத்து ஆசை; அவ் ஆசை என்
மூக்கினோடு முடிய, முடிந்திலேன்;
வாக்கினால், உங்கள் வாழ்வையும் நாளையும்
போக்கினேன்; கொடியேன் என்று போயினாள். 191
அலங்கல் வேற் கை அரக்கரை ஆசு அறக்
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள், உயர்
கலங்கு சூறை வன் போர் நெடுங் கால் என,
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள். 192
மிகைப் பாடல்கள்
ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்; அறுத்தான் அறுத்தான் என் மூக்கை;
கூற்றே கூற்றே என் உடலை, குலையும் குலையும்; அது கண்டீர்;
காற்றே தீய எனத் திரியும் கரனே! கரனுக்கு இளையோரே!
தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே. 7-1
பத்துடன் ஆறு எனப் பகுத்த ஆயிரம்
வித்தக வரத்தர்கள் வீர வேள்வியில்
முத் தலைக் குரிசிலுக்கு அன்று முக்கணான்
அத்துணைப் படைத்து அவன் அருள் உற்றுளார். 35-1
ஆறு நூறாயிரம் கோடி ஆழித் தேர்,
கூறிய அவற்றினுக்கு இரட்டி குஞ்சரம்,
ஏறிய பரி அவற்று இரட்டி, வெள்ளம் நூறு
ஈறு இல் ஆள், கரன் படைத் தொகுதி என்பரால். 38-1
நடந்து தன் இரு கரத்தினில் நலம் பெறும் சிலைவாய்
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன்; தொகைப்படும் அண்டம்
இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது; அங்கு இறைவனும் இமைப்பில்
மிடைந்த வெஞ் சரம் மழை விடு தாரையின் விதைத்தான். 148-1
விழுந்த வெம் படை தூடணன் சிரம் என வெருவுற்று
அழிந்த சிந்தையர் திசை திசை ஓடினர் அரக்கர்;
எழுந்த காதலின் இடைவிடாது, இமையவர், முனிவர்,
பொழிந்து பூ மழை போற்றினர்; இறைவனைப் புகழ்ந்தார். 161-1
ஆரணிய காண்டம்
7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்
சூர்ப்பணகை வந்த போது இராவணன் இருந்த நிலை
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள், போர் இராமன் துங்க
வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,
திரைப் பரவைப் பேர் அகழித் திண் நகரில் கடிது ஓடி, சீதை தன்மை
உரைப்பென் எனச் சூர்ப்பணகை வர, இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ. 1
நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
உலைவு இலா வகை இழைத்த தருமம் என, நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தெரிப்பது,ஒரு புனை மணிமண்டபம் அதனில் பொலிய மன்னோ.2
புலியின் அதள் உடையானும், பொன்னாடை புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு யாவர், இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை,தடிக்கும் முலை,வேய் இளந்தோள்,சேயரிக்கண் வென்றிமாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ. 3
வண்டு அலங்கு நுதல் திசைய வயக் களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்-தோள்
விண் தலங்கள் உற வீங்கி, ஓங்கு உதய மால் வரையின் விளங்க, மீதில்
குண்டலங்கள், குல வரையை வலம்வருவான் இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும், நால்-ஐந்து ஆய்ப் பொலிந்த என வயங்க மன்னோ. 4
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க, வயிரக் குன்றத்
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற, ஆன்ற
நாள் எலாம் புடை, தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட
கோள் எலாம் கிடந்த நெடுஞ்சிறை அன்ன நிறை ஆரம் குலவ மன்னோ. 5
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர்
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால்,
தேய்வுறத் தேய்வுறப் பெயர்ந்து, செஞ் சுடர்
ஆய் மணிப் பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே. 6
மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர்,
ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல்போல்,
தேவரும் அவுணரும் முதலினோர், திசை
தூவிய நறு மலர்க் குப்பை துன்னவே. 7
இன்னபோது, இவ் வழி நோக்கும் என்பதை
உன்னலர், கரதலம் சுமந்த உச்சியர்,
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்
துன்னினர், முறை முறை துறையில் சுற்றவே. 8
மங்கையர் திறத்து ஒரு மாற்றம் கூறினும்,
தங்களை ஆம் எனத் தாழும் சென்னியர்,
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர்,
சிங்க ஏறு என, திறல் சித்தர் சேரவே. 9
அன்னவன் அமைச்சரை நோக்கி, ஆண்டு ஒரு
நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்,
என்னைகொல் பணி? என இறைஞ்சுகின்றனர்,
கின்னரர், பெரும் பயம் கிடந்த நெஞ்சினர். 10
பிரகர நெடுந் திசைப் பெருந் தண்டு ஏந்திய
கரதலத்து அண்ணலைக் கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என, நடுங்கும் நாவினர்,
உரகர்கள், தம் மனம் உலைந்து சூழவே. 11
திசை உறு கரிகளைச் செற்று, தேவனும்
வசையுறக் கயிலையை மறித்து, வான் எலாம்
அசைவுறப் புரந்தரன் அடர்ந்த தோள்களின்
இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே. 12
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே
பாணிகள் பணி செய, பழுது இல் பண் இடை
வீணையின் நரம்பிடை விளைத்த தேமறை,
வாணியின் நாரதன், செவியின் வார்க்கவே. 13
மேகம் என் துருத்தி கொண்டு, விண்ணவர் தருவும் விஞ்சை
நாகமும் சுரந்த தீந் தேன் புனலோடும் அளாவி, நவ்வித்
தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும்
சீகர மகர வேலைக் காவலன், சிந்த மன்னோ. 14
நறை மலர்த் தாதும் தேனும், நளிர் நெடு மகுட கோடி
முறை முறை அறையச் சிந்தி முரிந்து உகும் மணியும் முத்தும்,
தறையிடை உகாதமுன்னம் தாங்கினன் தழுவி வாங்கி,
துறைதொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப மன்னோ. 15
மின்னுடை வேத்திரக் கையர், மெய் புகத்
துன் நெடுங் கஞ்சுகத் துகிலர், சோர்விலர்,
பொன்னொடு வெள்ளியும், புரந்தராதியர்க்கு
இன் இயல் முறை முறை இருக்கை ஈயவே. 16
சூலமே முதலிய துறந்து, சுற்றிய
சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன்,
தோலுடை நெடும் பணை துவைக்குந்தோறு எலாம்,
காலன் நின்று, இசைக்கும் நாள் கடிகை கூறவே. 17
நயம் கிளர் நான நெய் அளாவி, நந்தல் இல்
வியன் கருப்பூரம் மென் பஞ்சின் மீக்கொளீஇ
கயங்களில் மரை மலர்க் காடு பூத்தென,
வயங்கு எரிக் கடவுளும், விளக்கம் மாட்டவே. 18
அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து, நல்
புதிது அலர் கற்பகத் தருவும், பொய் இலாக்
கதிர் நெடு மணிகளும், கறவை ஆன்களும்,
நிதிகளும், முறை முறை நின்று, நீட்டவே. 19
குண்டலம் முதலிய குலம் கொள் போர் அணி
மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால்,
உண்டுகொல் இரவு, இனி உலகம் ஏழினும்?
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே. 20
கங்கையே முதலிய கடவுட் கன்னியர்
கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட,
செங் கையில் அரிசியும் மலரும் சிந்தினர்,
மங்கல முறை மொழி கூறி, வாழ்த்தவே. 21
ஊருவில் தோன்றிய உயிர் பெய் ஓவியம்
காரினில் செருக்கிய கலாப மஞ்ஞைபோல்
வார் விசிக் கருவியோர் வகுத்த பாணியின்,
நாரியர், அரு நடம் நடிப்ப, நோக்கியே. 22
இருந்தனன்-உலகங்கள் இரண்டும் ஒன்றும், தன்
அருந் தவம் உடைமையின், அளவு இல் ஆற்றலின்
பொருந்திய இராவணன், புருவக் கார்முகக்
கருந் தடங் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே. 23
சூர்ப்பணகையைக் கண்ட இலங்கை மாந்தரின் துயரம்
தங்கையும், அவ் வழி, தலையில் தாங்கிய
செங் கையள், சோரியின் தாரை சேந்து இழி
கொங்கையள், மூக்கிலள், குழையின் காதிலள்,
மங்குலின் ஒலி படத் திறந்த வாயினள். 24
முடையுடை வாயினள், முறையிட்டு, ஆர்த்து எழு
கடையுகக் கடல் ஒலி காட்டக் காந்துவாள்,
குட திசைச் செக்கரின் சேந்த கூந்தலாள்,
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள். 25
தோன்றலும், தொல் நகர் அரக்கர் தோகையர்,
ஏன்று எதிர், வயிறு அலைத்து, இரங்கி ஏங்கினார்;
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள்,
தான் தனியவள் வர, தரிக்க வல்லரோ? 26
பொருக்கென நோக்கினர், புகல்வது ஓர்கிலர்,
அரக்கரும், இரைந்தனர்; அசனி ஆம் எனக்
கரத்தொடு கரங்களைப் புடைத்து, கண்களில்
நெருப்பு எழ விழித்து, வாய் மடித்து, நிற்கின்றார். 27
இந்திரன் மேலதோ? உலகம் ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ? ஆழியானதோ?
சந்திரமௌலிபால் தங்குமேகொலோ,
அந்தரம்? என்று நின்று அழல்கின்றார் சிலர். 28
செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர்?
முப் புறத்து உலகமும் அடங்க மூடிய
இப் புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது;
அப் புறத்து அண்டத்தோர் ஆர்? என்றார் சிலர். 29
என்னையே! இராவணன் தங்கை என்றபின்,
அன்னையே என்று, அடி வணங்கல் அன்றியே,
உன்னவே ஒண்ணுமோ, ஒருவரால்? இவள்
தன்னையே அரிந்தனள், தான் என்றார் சிலர். 30
போர் இலான் புரந்தரன், ஏவல் பூண்டனன்;
ஆர் உலாம் நேமியான், ஆற்றல் தோற்றுப்போய்
நீரினான்; நெருப்பினான், பொருப்பினான்; இனி
ஆர் கொலாம் ஈது? என, அறைகின்றார் சிலர். 31
சொல்-பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ?
இற்பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள்;
கற்பு இறந்தாள் என, கரன்கொலாம் இவள்
பொற்பு அறையாக்கினன்போல்? என்றார் சிலர். 32
தத்து உறு சிந்தையர், தளரும் தேவர் இப்
பித்து உற வல்லரே? பிழைப்பு இல் சூழ்ச்சியார்
முத் திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார்
இத் திறம் புணர்த்தனர் என்கின்றார் சிலர். 33
இனி ஒரு கற்பம் உண்டுஎன்னில் அன்றியே,
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ?
பனி வரும் கானிடைப் பழிப்பு இல் நோன்புடை
முனிவரர் வெகுளியின் முடிபு என்றார் சிலர். 34
கரை அரு திரு நகர்க் கருங் கண் நங்கைமார்
நிரை வளைத் தளிர்க் கரம் நெரிந்து நோக்கினர்;
பிரை உறு பால் என, நிலையின் பின்றிய
உரையினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார். 35
முழவினில் வீணையில், முரல் நல் யாழினில்
தழுவிய குழலினில், சங்கில் தாரையில்
எழு குரல் இன்றியே, என்றும் இல்லது ஓர்
அழு குரல் பிறந்தது, அவ் இலங்கைக்கு அன்றுஅரோ. 36
கள்ளுடை வள்ளமும், களித்த தும்பியும்,
உள்ளமும், ஒரு வழிக் கிடக்க ஓடினார்-
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார்-
தள்ளுறும் மருங்கினர், தழீஇக் கொண்டு ஏகினார். 37
நாந்தக உழவர்மேல் நாடும் தண்டத்தர்,
காந்திய மனத்தினர், புலவி கைம்மிகச்
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக,
வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர். 38
பொன் -தலை மரகதப் பூகம் நேர்வு உறச்
சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின்
முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார்
சிற்றிடை அலமரத் தெருவு சேர்கின்றார். 39
எழு என, மலை என, எழுந்த தோள்களைத்
தழுவிய வளைத் தளிர் நெகிழ, தாமரை
முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள்
பொழிதர, சிலர் உளம் பொருமி விம்முவார். 40
நெய்ந் நிலைய வேல் அரசன், நேருநரை இல்லான்
இந் நிலை உணர்ந்த பொழுது, எந் நிலையம்? என்று,
மைந் நிலை நெடுங் கண் மழை வான் நிலையது ஆக,
பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர், புரண்டார். 41
மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார்;
கனம் தலை வரும் குழல் சரிந்து, கலை சோர,
நனந் தலைய கொங்கைகள் ததும்பிட, நடந்தார்;-
அனந்தர் இள மங்கையர்-அழுங்கி அயர்கின்றார். 42
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இதுகொல்? என்று, தளர்கின்றார்,
கொங்கை இணை செங் கையின் மலைந்து,-குலை கோதை
மங்கையர்கள்-நங்கை அடி வந்து விழுகின்றார். 43
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல, என்றும்
வலங் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா;
நலம் கையில் அகன்றதுகொல், நம்மின்? என நைந்தார்;
கலங்கல் இல் கருங் கண் இணை வாரி கலுழ்கின்றார். 44
அண்ணன் இராவணன் அடிகளில் அரக்கி வீழ்தல்
என்று, இனைய வன் துயர் இலங்கைநகர், எய்த,
நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட,
குன்றின் அடி வந்து படி கொண்டல் என, மன்னன்
பொன் திணி கருங் கழல் விழுந்தனள், புரண்டாள். 45
மூடினது இருட் படலம் மூஉலகும் முற்ற;
சேடனும் வெருக்கொடு சிரத் தொகை நெளித்தான்;
ஆடின குலக் கிரி; அருக்கனும் வெயர்த்தான்;
ஓடின திசைக் கரிகள்; உம்பரும் ஒளித்தார். 46
விரிந்த வலயங்கள் மிடை தோள் படர, மீதிட்டு
எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப,
நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற,
திரிந்த புவனங்கள்; வினை, தேவரும், அயர்த்தார். 47
தென் திசை நமன்தனொடு தேவர் குலம் எல்லாம்,
இன்று இறுதி வந்தது நமக்கு என, இருந்தார்,
நின்று உயிர் நடுங்கி, உடல் விம்மி, நிலை நில்லார்,
ஒன்றும் உரையாடல் இலர், உம்பரினொடு இம்பர். 48
யார் செய்தது இது என இராவணன் வினவல்
மடித்த பில வாய்கள் தொறும், வந்து புகை முந்த,
துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப,
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல, மேகத்து
இடித்த உரும் ஒத்து உரறி, யாவர் செயல்? என்றான். 49
கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார்;
மீனுடை நெடுங் கொடியினோன் அனையர்; மேல் கீழ்
ஊனுடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா
மானிடர்; தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள். 50
இராவணன் நடந்தது கூற வேண்டுதல்
செய்தனர்கள் மானிடர் என, திசை அனைத்தும்
எய்த நகை வந்தது; எரி சிந்தின; கண் எல்லாம்,
நொய்து அலர் வலித் தொழில்; நுவன்ற மொழி ஒன்றோ?
பொய் தவிர்; பயத்தை ஒழி; புக்க புகல் என்றான். 51
சூர்ப்பணகை இராம இலக்குவர் குறித்துக் கூறுதல்
மன்மதனை ஒப்பர், மணி மேனி; வட மேருத்
தன் எழில் அழிப்பர், திரள் தாலின் வலிதன்னால்,
என், அதனை இப்பொழுது இசைப்பது? உலகு ஏழின்
நல் மதம் அழிப்பர், ஓர் இமைப்பின், நனி, வில்லால். 52
வந்தனை முனித்தலைவர்பால் உடையார்; வானத்து
இந்துவின் முகத்தர்; எறி நீரில் எழு நாளக்
கந்த மலரைப் பொருவு கண்ணர்; கழல், கையர்;
அந்தம் இல் தவத் தொழிலர்; ஆர் அவரை ஒப்பார்? 53
வற்கலையர்; வார் கழலர்; மார்பின் அணி நூலர்;
விற் கலையர்; வேதம் உறை நாவர்; தனி மெய்யர்;
உற்கு அலையர்; உன்னை ஓர் துகள்-துணையும் உன்னார்;
சொற் கலை எனத் தொலைவு இல் தூணிகள் சுமந்தார். 54
மாரர் உளரே இருவர், ஓர் உலகில் வாழ்வார்?
வீரர் உளரே, அவரின் வில் அதனின் வல்லார்?
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள், ஐயா?
ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார். 55
ஆறு மனம் அஞ்சினம், அரக்கரை எனச் சென்று
ஏறு நெறி அந்தணர் இயம்ப, உலகு எல்லாம்
வேறும் எனும் நுங்கள் குலம், வேரொடும் அடங்கக்
கோறும் என, முந்தை ஒரு சூளுறவு கொண்டார். 56
தராவலய நேமி உழவன், தயரதப் பேர்ப்
பராவ அரு நலத்து ஒருவன், மைந்தர்; பழி இல்லார்;
விராவ அரு வனத்து, அவன் விளம்ப, உறைகின்றார்;
இராமனும் இலக்குவனும் என்பர், பெயர் என்றாள். 57
இராவணன் தன்னையே பழித்து மொழிதல்
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர்; அறிந்தும், உயிர் வாழ்வார்;
விருந்து அனைய வாளொடும், விழித்து, இறையும் வெள்காது,
இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு, இன்னும். 58
கொற்றம் அது முற்றி, வலியால் அரசு கொண்டேன்;
உற்ற பயன் மற்று இதுகொலாம்? முறை இறந்தே
முற்ற, உலகத்து முதல் வீரர் முடி எல்லாம்
அற்ற பொழுதத்து, இது பொருந்தும் எனல் ஆமே? 59
மூளும் உளது ஆய பழி என்வயின் முடித்தோர்
ஆளும் உளதாம்; அவரது ஆர் உயிரும் உண்டாம்;
வாளும் உளது; ஓத விடம் உண்டவன் வழங்கும்
நாளும் உள; தோளும் உள; நானும் உளென் அன்றோ? 60
பொத்துற உடற்பழி புகுந்தது என நாணி,
தத்துறுவது என்னை? மனனே! தளரல் அம்மா!
எத் துயர் உனக்கு உளது? இனி, பழி சுமக்க,
பத்து உள தலைப் பகுதி; தோள்கள் பல அன்றே? 61
என்ன செய்தான் கரன் என இராவணன் வினவுதல்
என்று உரைசெயா, நகைசெயா, எரி விழிப்பான்
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால்
கொன்றிலர்களா, நெடிய குன்றுடைய கானில்
நின்ற கரனே முதலினோர் நிருதர்? என்றான். 62
சூர்ப்பணகை நடந்தது நவிலல்
அற்று அவன் உரைத்தலோடும், அழுது இழி அருவிக்கண்ணள்,
எற்றிய வயிற்றள், பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள்
சுற்றமும் தொலைந்தது, ஐய! நொய்து என, சுமந்த கையள்,
உற்றது தெரியும்வண்ணம், ஒருவகை உரைக்கலுற்றாள்; 63
சொல் என்று என் வாயில் கேட்டார்; தொடர்ந்து ஏழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார், கரன் முதல் காளை வீரர்;
எல் ஒன்று கமலச் செங் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில், கடிகை மூன்றில், ஏறினர் விண்ணில் என்றாள். 64
தாருடைத் தானையோடும் தம்பியர், தமியன் செய்த
போரிடை, மடிந்தார் என்ற உரை செவி புகாதமுன்னம்,
காரிடை உருமின், மாரி, கனலொடு பிறக்குமாபோல்
நீரொடு நெருப்புக் கான்ற, நிரை நெடுங் கண்கள் எல்லாம். 65
நீ செய்த பிழை யாது என இராவணன் வினவல்
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி,
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,
நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல், நின்னை, இன்னே,
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய? என்றான். 66
என்வயின் உற்ற குற்றம், யாவர்க்கும் எழுத ஒணாத
தன்மையன் இராமனோடு தாமரை தவிரப் போந்தாள்
மின்வயின் மருங்குல் கொண்டாள், வேய்வயின் மென் தோள் கொண்டாள்
பொன்வயின் மேனி கொண்டாள், பொருட்டினால் புகுந்தது என்றான். 67
சீதையின் அழகை சூர்ப்பணகை விரித்துரைத்தல்
ஆர் அவள்? என்னலோடும், அரக்கியும், ஐய! ஆழித்
தேர், அவள் அல்குல்; கொங்கை, செம் பொன் செய் குலிகச் செப்பு;
பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் படைத்தது அம்மா!
பேர் அவள், சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள்; 68
காமரம் முரலும் பாடல், கள் எனக் கனிந்த இன் சொல்;
தே மலர் நிறைந்த கூந்தல்; தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத்
தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்;
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ? 69
மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை ஒக்கும் வடிந்த கூந்தல்;
பஞ்சு ஒக்கும் அடிகள்; செய்ய பவளத்தின் விரல்கள்; ஐய!
அம் சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள் வதனம் மை தீர்
கஞ்சத்தின் அளவிற்றேனும், கடலினும் பெரிய கண்கள்! 70
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதைச்சொல்; இவ்
வாசம் நாறு ஓதியாளைக் கண்டவன், வவ்வல் ஆற்றான்
பேசல் ஆம் தகைமைத்து அல்லாப் பெரும் பிணி பிணிப்ப, நீண்ட
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன், அவ் உருவம் அம்மா! 71
தெவ் உலகத்தும் காண்டி; சிரத்தினில் பணத்தினோர்கள்
அவ் உலகத்தும் காண்டி; அலை கடல் உலகில் காண்டி;
வெவ் உலை உற்ற வேலை, வாளினை, வென்ற கண்ணாள்
எவ் உலகத்தாள்? அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதால்! 72
தோளையே சொல்லுகேனோ? சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ? அல்லவை வழுத்துகேனோ?
மீளவும் திகைப்பதல்லால், தனித்தனி விளம்பல் ஆற்றேன்;
நாளையே காண்டி அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னோ? 73
வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ ?
நெல் ஒக்கும் புல் என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ! 74
இந்திரன் சசியைப் பெற்றான்; இரு-மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும்
செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்;
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா! 75
பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்;
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை-
மாகத் தோள் வீர!-பெற்றால், எங்ஙனம் வைத்து வாழ்தி! 76
பிள்ளைபோல் பேச்சினாளைப் பெற்றபின், பிழைக்கலாற்றாய்;
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி; ஐய!
வள்ளலே! உனக்கு நல்லேன்; மற்று, நின் மனையில் வாழும்
கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே! 77
தேர் தந்த அல்குல் சீதை, தேவர்தம் உலகின், இம்பர்,
வார் தந்த கொங்கையார்தம் வயிறு தந்தாளும் அல்லள்;
தார் தந்த கமலத்தாளை, தருக்கினர் கடைய, சங்க
நீர் தந்தது; அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே. 78
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த,
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடை, சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடும் நீ; உன் வாளை வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும் வண்ணம், இராமனைத் தருதி என்பால். 79
தருவது விதியே என்றால், தவம் பெரிது உடையரேனும்,
வருவது வரும் நாள் அன்றி, வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும், உருவமும், மார்பும், தோள்கள்
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி, நீ எந்தாய்! 80
அன்னவள்தன்னை நின்பால் உய்ப்பல் என்று எடுக்கலுற்ற
என்னை, அவ் இராமன் தம்பி இடைப் புகுந்து, இலங்குவாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான்; முடிந்தது என் வாழ்வும்; உன்னின்
சொன்னபின், உயிரை நீப்பான் துணிந்தனென் என்னச் சொன்னாள். 81
இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்
கோபமும், மறனும், மானக் கொதிப்பும், என்று இனைய எல்லாம்
பாபம் நின்ற இடத்து நில்லாப் பெற்றிபோல், பற்று விட்ட,
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின், புக்க
தாபமும் காமநோயும் ஆர் உயிர் கலந்த அன்றே. 82
கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான். 83
சிற்றிடச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்
உற்று, இரண்டு ஒன்று ஆய் நின்றால், ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ ? மறக்கல் ஆம் வழி மற்று யாதோ?
கற்றவர் ஞானம் இன்றேல், காமத்தைக் கடக்கல் ஆமோ? 84
மயிலுடைச் சாயலாளை வஞ்சியாமுன்னம், நீண்ட
எயிலுடை இலங்கை நாதன், இதயம் ஆம் சிறையில் வைத்தான்;
அயிலுடை அரக்கன் உள்ளம், அவ் வழி, மெல்ல மெல்ல,
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல், வெதும்பிற்று அன்றே. 85
விதியது வலியினாலும், மேல் உள விளைவினாலும்,
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்,
கதி உறு பொறியின் வெய்ய காம நோய், கல்வி நோக்கா
மதியிலி மறையச் செய்த தீமைபோல், வளர்ந்தது அன்றே. 86
பொன் மயம் ஆன நங்கை மனம் புக, புன்மை பூண்ட
தன்மையோ-அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ-
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்?
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே? 87
எழுந்தனன் இருக்கை நின்று; ஆண்டு, ஏழ் உலகத்துள்ளோரும்
மொழிந்தனர் ஆசி; ஓசை முழங்கின, சங்கம் எங்கும்,
பொழிந்தன பூவின் மாரி; போயினர் புறத்தோர் எல்லாம்
அழிந்து ஒழிசிந்தையோடும் ஆடகக் கோயில் புக்கான். 88
இராவணனின் முற்றிய காம நோய்
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளிப் பாங்கர்,
தேவிமார் குழுவும் நீங்கச் சேர்ந்தனன்; சேர்தலோடும்,
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும், குயமும், புக்குப்
பாவியா, கொடுத்த வெம்மை பயப்பயப் பரந்தது அன்றே. 89
நூக்கல் ஆகலாத காதல் நூறு நூறு கோடி ஆய்ப்
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென்
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் எட்டும் வென்ற தோள்,
ஆக்கை, தேய, உள்ளம் நைய, ஆவி வேவது ஆயினான். 90
தாது கொண்ட சீதம் மேவு சாந்து, சந்த மென் தளிர்,
போது, கொண்டு அடுத்தபோது, பொங்கு தீ மருந்தினால்,
வேது கொண்டதென்ன, மேனி வெந்து வெந்து, விம்மு தீ
ஊது வன் துருத்திபோல், உயிர்த்து உயிர்த்து, உயங்கினான். 91
தாவியாது, தீது எனாது, தையலாளை மெய் உறப்
பாவியாத போது இலாத பாவி-மாழை, பானல், வேல்,
காவி, ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால்
ஆவி சால நொந்து நொந்து-அழுங்குவானும் ஆயினான். 92
பரம் கிடந்த மாதிரம் பரித்த, பாழி யானையின்
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன் -
மரம் குடைந்த தும்பிபோல், அனங்கன் வாளி வந்து வந்து
உரம் குடைந்து, நொந்து நொந்து உளைந்து உளைந்து-ஒடுங்கினான். 93
கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை
நின்றது, உண்டு கண்டது என்று, அழிந்து அழுங்கும் நீர்மையான்
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல, மல்லிகைத்
தென்றல் வந்து எதிர்ந்த போது, சீறுவானும் ஆயினான். 94
இராவணன் ஒரு குளிர் சோலை அடைதல்
அன்ன காலை, அங்கு நின்று, எழுந்து, அழுங்கு சிந்தையான்,
இன்ன ஆறு செய்வென் என்று, ஓர் எண் இலான், இரங்குவான்;
பன்னு கோடி தீப மாலை, பாலை யாழ் பழித்த சொல்
பொன்னனார், எடுக்க, அங்கு ஓர் சோலையூடு போயினான். 95
மாணிக்கம், பனசம், வாழை, மரகதம்; வயிரம், தேமா;
ஆணிப் பொன், வேங்கை; கோங்கம் அரவிந்தராகம்; பூகம்
சேண் உய்க்கும் நீலம்; சாலம் குருவிந்தம்; தெங்கு வெள்ளி
பாணித் தண் பளிங்கு, நாகம், பாடலம் பவளம் மன்னோ. 96
வான் உற நிவந்த செங் கேழ் மணி மரம் துவன்றி, வான்
மீனொடு மலர்கள் தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா,
தேன் உகு, சோலை நாப்பண், செம்பொன் மண்டபத்துள், ஆங்கு ஆர்
பால் நிற அமளி சேர்ந்தான்; பையுள் உற்று உயங்கி நைவான். 97
கனிகளின், மலரின், வந்த கள் உண்டு களிகொள் அன்னம்,
வனிதையர் மழலை இன்சொல் கிள்ளையும், குயிலும், வண்டும்,
இனியன மிழற்றுகின்ற யாவையும், இலங்கை வேந்தன்
முனியும் என்று அவிந்த வாய; மூங்கையர் போன்ற அன்றே. 98
பருவத்தால் வாடை தந்த பசும் பனி, அனங்கன் வாளி
உருவிப் புக்கு ஒளித்த புண்ணில், குளித்தலும், உளைந்து விம்மி,
இருதுத்தான் யாது அடா? என்று இயம்பினன்; இயம்பலோடும்
வெருவிப் போய், சிசிரம் நீக்கி, வேனில் வந்து இறுத்தது அன்றே. 99
வன் பணை மரமும், தீயும், மலைகளும் குளிர வாழும்
மென் பனி எரிந்தது என்றால், வேனிலை விளம்பலாமோ?
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ?-
இன்பமும் துன்பம்தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே? 100
மாதிரத்து இறுதிகாறும், தன் மனத்து எழுந்த மையல்-
வேதனை வெப்பும் செய்ய, வேனிலும் வெதுப்பும் காலை,
யாது இது இங்கு? இதனின் முன்னைச் சீதம் நன்று; இதனை நீங்கி,
கூதிர் ஆம் பருவம் தன்னைக் கொணருதிர் விரைவின் என்றான். 101
கூதிர் வந்து அடைந்தகாலை, கொதித்தன குவவுத் திண் தோள்;
சீதமும் சுடுமோ? முன்னைச் சிசிரமேகாண் இது என்றான்;
ஆதியாய்! அஞ்சும் அன்றே, அருள் அலது இயற்ற? என்ன,
யாதும், இங்கு, இருதுஆகாது; யாவையும் அகற்றும் என்றான். 102
என்னலும், இருது எல்லாம் ஏகின; யாவும் தம்தம்
பன் அரும் பருவம் செய்யா, யோகிபோல் பற்று நீத்த;
பின்னரும், உலகம் எல்லாம், பிணி முதல் பாசம் வீசித்
துன் அருந் தவத்தின் எய்தும் துறக்கம்போல், தோன்றிற்று அன்றே. 103
கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க,
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி, எரிந்தது அன்றே-
காலத்தால் வருவது ஒன்றோ? காமத்தால் கனலும் வெந் தீ
சீலத்தால் அவிவது அன்றி, செய்யத்தான் ஆயது உண்டோ? 104
இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்
நாரம் உண்டு எழுந்த மேகம், தாமரை வளையம், நானச்
சாரம் உண்டு இருந்த சீதச் சந்தனம், தளிர், மென் தாதோடு,
ஆரம், உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான்; அயல் நின்றாரை
ஈரம் உண்டு என்பர் ஓடி, இந்துவைக் கொணர்மின் என்றான். 105
வெஞ் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும்
நெஞ்சு இலன், ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி,
அஞ்சலை; வருதி; நின்னை அழைத்தனன் அரசன் என்ன,
சஞ்சலம் துறந்துதான், அச் சந்திரன் உதிக்கலுற்றான். 106
அயிர் உறக் கலந்த நல் நீர் ஆழிநின்று, ஆழி இந்து-
செயிர் உற்ற அரசன், ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில்
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் -செல்லுமாபோல்
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் - உதயம் செய்தான். 107
பராவ அருங் கதிர்கள் எங்கும் பரப்பி, மீப் படர்ந்து, வானில்
தராதலத்து, எவரும் பேண, அவனையே சலிக்கும் நீரால்,
அரா-அணைத் துயிலும் அண்ணல், காலம் ஓர்ந்து, அற்றம் நோக்கி,
இராவணன் உயிர்மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன, 108
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரிப்
பருகின, பரந்து பாய்ந்த நிலாச் சுடர்ப் பனி மென் கற்றை,
நெரியுறு புருவச் செங் கண் அரக்கற்கு, நெருப்பின் நாப்பண்
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே. 109
மின் நிலம் திரிந்தது அன்ன விழுநிலா-மிதிலை சூழ்ந்த
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா,
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை, நாளும் தோலாத்
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என-சுட்டது அன்றே. 110
கருங் கழல் காலன் அஞ்சும் காவலன், கறுத்து நோக்கி,
தரும் கதிர்ச் சீத யாக்கைச் சந்திரன்-தருதிர் என்ன,
முருங்கிய கனலின், மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து,
அருங் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள்? என்றான். 111
அவ் வழி, சிலதர் அஞ்சி, ஆதியாய்! அருள் இல்லாரை
இவ் வழித் தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால்;
செவ் வழிக் கதிரோன் என்றும் தேரின்மேல் அன்றி வாரான்;
வெவ் வழித்து எனினும், திங்கள், விமானத்தின் மேலது என்றார். 112
இராவணன் நிலவைப் பழித்தல்
பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காமக்
குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான்; மதியாலே,
தண் அம் தாமரையின் தனிப் பகைஞன் என்னும் தன்மை, ஒருதானே,
உணர்ந்தான்; உணர்வுற்று, அவன்மேல் இட்டு, உயிர்தந்து உய்க்க உரைசெய்வான். 113
தேயாநின்றாய்; மெய் வெளுத்தாய்; உள்ளம் கறுத்தாய்; நிலை திரிந்து
காயா நின்றாய்; ஒரு நீயும், கண்டார் சொல்லக் கேட்டாயோ?
பாயா நின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால்
ஓயா நின்றேன்; உயிர் காத்தற்கு உரியார் யாவர்?-உடுபதியே! 114
ஆற்றார் ஆகின், தம்மைக் கொண்டு அடங்காரோ? என் ஆர் உயிர்க்குக்
கூற்றாய் நின்ற குலச் சனகி குவளை மலர்ந்த தாமரைக்குத்
தோற்றாய்; அதனால் அகம் கரிந்தாய்; மெலிந்தாய்; வெதும்பத் தொடங்கினாய்
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால், வெற்றி ஆக வற்று ஆமோ? 115
இராவணனின் ஆணைப்படி பகலும் பகலவனும் வருதல்
என்னப் பன்னி, இடர் உழவா, இரவோடு இவனைக் கொண்டு அகற்றி;
முன்னைப் பகலும் பகலோனும் வருக என்றான்; மொழியாமுன்
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த; ஒரு நொடியில்
பன்னற்கு அரிய பகலவனும் பகலும் வந்து பரந்தவால். 116
இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின், அவிர் செம்பொன்
உருக்கி அனைய கதிர் பாய, அனல்போல் விரிந்தது உயர் கமலம்;
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா, அடாத பொருள் எய்திச்
செருக்கி, இடையே, திரு இழந்த சிறியோர் போன்ற, சேதாம்பல். 117
நாணிநின்ற ஒளி மழுங்கி, நடுங்காநின்ற உடம்பினன் ஆய்,
சேணில் நின்று புறம் சாய்ந்து, கங்குல்-தாரம் பின்செல்ல,
பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுதப் போவான், புகழ் வேந்தர்
ஆணை செல்ல, நிலை அழிந்த அரசர் போன்றான்-அல்-ஆண்டான். 118
மணந்த பேர் அன்பரை, மலரின் சேக்கையுள்
புணர்ந்தவர் இடை ஒரு வெகுளி பொங்கலால்,
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று
உணர்ந்திலர்; கனவினும் ஊடல் தீர்ந்திலர். 119
தள்ளுறும் உயிரினர், தலைவர் நீங்கலால்,
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர்-
கொள்ளையின் அலர் கருங் குவளை நாள்மலர்
கள் உகுவன என, கலுழும் கண்ணினார். 120
அணைமலர்ச் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர்,
பணைகளைத் தழுவிய பவள வல்லிபோல்,
இணை மலர்க் கைகளின் இறுக, இன் உயிர்த்
துணைவரைத் தழுவினர், துயில்கின்றார் சிலர். 121
அளி இனம் கடம்தொறும் ஆர்ப்ப, ஆய் கதிர்
ஒளிபட உணர்ந்தில, உறங்குகின்றன;
தெளிவுஇல இன் துயில் விளையும் சேக்கையுள்
களிகளை நிகர்த்தன, களி நல் யானையே. 122
விரிந்து உறை துறைதொறும் விளக்கம் யாவையும்
எரிந்து இழுது அஃகல, ஒளி இழந்தன-
அருந் துறை நிரம்பிய உயிரின் அன்பரைப்
பிரிந்து உறைதரும் குலப் பேதைமாரினே. 123
புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது புல்லியும்,
வனைந்தில வைகறை மலரும் மா மலர்;
நனந் தலை அமளியில் துயிலும் நங்கைமார்
அனந்தரின் நெடுங் கணோடு ஒத்த ஆம் அரோ. 124
இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும்
நிச்சயம், பகலும் தம் இமைகள் நீக்கல-
பிச்சையும் இடுதும் என்று, உணர்வு பேணலா
வச்சையர் நெடு மனை வாயில் மானவே. 125
நஞ்சு உறு பிரிவின, நாளின் நீளம் ஓர்
தஞ்சு உற விடுவது ஓர் தயாவு தாங்கலால்,
வெஞ் சிறை நீங்கிய வினையினார் என,
நெஞ்சு உறக் களித்தன-நேமிப்புள் எலாம். 126
நாள்மதிக்கு அல்லது, நடுவண் எய்திய
ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன
மாண் வினைப் பயன்படா மாந்தர் வாயில் சேர்
பாணரின் தளர்ந்தன-பாடல்-தும்பியே. 127
அரு மணிச் சாளரம் அதனினூடு புக்கு
எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும்,
மருளொடு தெருளுறும் நிலையர், மங்கையர்-
தெருளுற மெய்ப் பொருள் தெரிந்திலாரினே. 128
ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர்,
நாவலர் இயற்றிய நாழி நாம நூல்
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும்,
கூவுறு கோழியும், துயில்வு கொண்டவே. 129
இனையன உலகினில் நிகழும் எல்லையில்,
கனை கழல் அரக்கனும், கண்ணின் நோக்கினான்;
நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால்;
அனைய அத் திங்களே ஆகுமால் என்றான். 130
திங்களோ அன்று இது; செல்வ! செங் கதிர்
பொங்கு உளைப் பச்சை அம் புரவித் தேரதால்;
வெங் கதிர் சுடுவதே அன்றி, மெய் உறத்
தங்கு தண் கதிர் சுடத் தகாது என்றார் சிலர். 131
இராவணன் கதிரவனைப் போகச்சொல்லி கவின் பிறையைக் கொணரச் சொல்லுதல்
நீலச் சிகரக் கிரி அன்னவன், நின்ற வெய்யோன்,
ஆலத்தினும் வெய்யன்; அகற்றி, அரற்றுகின்ற
வேலைக் குரலைத் தவிர்க என்று விலக்கி, மேலை
மாலைப் பிறைப் பிள்ளையைக் கூவுதிர் வல்லை என்றான். 132
சொன்னான் நிருதர்க்கு இறை; அம் மொழி சொல்லலோடும்,
அந் நாளில் நிரம்பிய அம் மதி, ஆண்டு ஓர் வேலை,
முந் நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால்,
எந் நாளும் அருந் தவம் அன்றி, இயற்றல் ஆமோ? 133
பிறையைக் குறை கூறல்
குடபாலின் முளைத்தது கண்ட குணங்கள்-தீயோன்
வடவாஅனல்; அன்று எனின், மண் பிடர் வைத்த பாம்பின்
விட வாள் எயிறு; அன்று எனின், என்னை வெகுண்டு, மாலை
அட, வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே. 134
தாது உண் சடிலத் தலை வைத்தது-தண் தரங்கம்
மோதும் கடலிற்கிடை முந்து பிறந்தபோதே,
ஓதும் கடுவைத் தன் மிடற்றில் ஒளித்த தக்கோன்,
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே? 135
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள், ஓடித்
திருமு இச் சிறு மின் பிறை தீமை குறைந்தது இல்லை-
கருமைக் கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின்
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ ? 136
கன்னக் கனியும் இருள்தன்னையும் காண்டும் அன்றே?
முன்னைக் கதிர் நன்று; இது அகற்றுதிர்; மொய்ம்பு சான்ற
என்னைச் சுடும் என்னின், இவ் ஏழ் உலகத்தும் வாழ்வோர்
பின்னைச் சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ ? 137
இராவணன் இருளினை ஏசுதல்
ஆண்டு, அப் பிறை நீங்கலும், எய்தியது அந்தகாரம்;
தீண்டற்கு எளிது ஆய், பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி,
வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி,
காண்டற்கு இனிதாய், பல கந்து திரட்டல் ஆகி. 138
முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என்? முற்றும் முற்றிப்
பொருள் தீங்கு இல் கேள்விச் சுடர் புக்கு வழங்கல் இன்றிக்
குருடு ஈங்கு இது என்ன, குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி,
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அவ் அந்தகாரம். 139
விள்ளாது செறிந்து இடை மேல் உற ஓங்கி, எங்கும்
நள்ளா இருள் வந்து, அகன் ஞாலம் விழுங்கலோடும்,
எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது
உள்ளாது, உமிழ்ந்தான், விடம் உண்ட ஒருத்தன் என்றான். 140
வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும்
ஆலத்தின் அடங்குவது அன்று இது; அறிந்து உணர்ந்தேன்;
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும்
காலக் கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே. 141
சீதையின் உருவெளிப்பாடு காண்டல்
அம்பும் அனலும் நுலையாக் கன அந்தகாரத்
தும்பு, மழைக்கொண்டு,-அயல் ஒப்பு அரிது ஆய துப்பின்
கொம்பர்-குரும்பைக் குலம் கொண்டது, திங்கள் தாங்கி,
வெம்பும் தமியேன்முன், விளக்கு என, தோன்றும் அன்றே! 142
மருளூடு வந்த மயக்கோ? மதி மற்றும் உண்டோ?
தெருளேம்; இது என்னோ? திணி மை இழைத்தாலும் ஒவ்வா
இருளூடு, இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீலச்
சுருளோடும் வந்து, ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே! 143
புடை கொண்டு எழு கொங்கையும், அல்குலும், புல்கி நிற்கும்
இடை, கண்டிலம்; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம்;
விடம் நுங்கிய கண் உடையார் இவர்; மெல்ல மெல்ல,
மட மங்கையர் ஆய், என் மனத்தவர் ஆயினாரே. 144
பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரைக்
கண்டேன்; இவர் போல்வது ஓர் பெண் உருக் கண்டிலேனால்;
உண்டே எனின், வேறு இனி, எங்கை உணர்த்தி நின்ற,
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே. 145
பூண்டு இப் பிணியால் உறுகின்றது, தான் பொறாதாள்,
தேண்டிக் கொடு வந்தனள்; செய்வது ஓர் மாறும் உண்டோ ?
காண்டற்கு இனியாள் உருக் கண்டவட் கேட்கும் ஆற்றால்,
ஈண்டு, இப்பொழுதே, விரைந்து, எங்கையைக் கூவுக என்றான். 146
என்றான் எனலும், கடிது ஏகினர் கூவும் எல்லை
வன் தாள் நிருதக் குலம் வேர் அற மாய்த்தல் செய்வாள்,
ஒன்றாத காமக் கனல் உள் தெறலோடும், நாசி,
பொன் தாழ் குழைதன்னொடும் போக்கினள் போய்ப் புகுந்தாள். 147
இராவணன்-சூர்ப்பணகை உரையாடல்
பொய்ந் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி,
நெய்ந் நின்ற கூர் வாளவன், நேர் உற நோக்கு; நங்காய்!
மைந் நின்ற வாள்-கண் மயில் நின்றென வந்து, என் முன்னர்
இந் நின்றவள் ஆம்கொல், இயம்பிய சீதை? என்றான். 148
செந் தாமரைக் கண்ணொடும், செங் கனி வாயினோடும்,
சந்து ஆர் தடந் தோளோடும், தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலத்தொடும், அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும், அவ் வல் வில் இராமன் என்றாள். 149
பெண்பால், உரு நான், இது கண்டது; பேதை! நீ ஈண்டு,
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி; என்னே!
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை,
மண்பாலவரேகொல், விளைப்பவர் மாயை? என்றான். 150
ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி,
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு,
ஏன்று, உன் எதிரே, விழி நோக்கும் இடங்கள்தோறும்,
தோன்றும், அனையாள்; இது தொல் நெறித்து ஆகும் என்றாள். 151
அன்னாள் அது கூற, அரக்கனும், அன்னது ஆக;
நின்னால் அவ் இராமனைக் காண்குறும் நீர் என்? என்றான்;
எந்நாள், அவன் என்னை இத் தீர்வு அரும் இன்னல் செய்தான்
அந் நாள்முதல், யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள். 152
ஆம் ஆம்; அது அடுக்கும்; என் ஆக்கையொடு ஆவி நைய
வேமால்; வினையேற்கு இனி என் விடிவு ஆகும்? என்ன,
கோமான்! உலகுக்கு ஒரு நீ, குறைகின்றது என்னே?
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி, போதி என்றாள். 153
என்றாள் அகன்றாள்; அவ் அரக்கனும் ஈடழிந்தான்;
ஒன்றானும் உணர்ந்திலன்; ஆவி உலைந்து சோர்ந்தான்;
நின்றாரும் நடுங்கினர்; நின்றுள நாளினாலே
பொன்றாது உளன் ஆயினன்; அத்துணைபோலும் அன்றே. 154
சந்திரகாந்த மண்டபம் சமைவித்து இராவணன் அதனுள் சார்தல்
இறந்தார் பிறந்தார் என, இன் உயிர் பெற்ற மன்னன்,
மறம் தான் உணர்ந்தான், அவண், மாடு நின்றாரை நோக்கி,
கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே,
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க எனச் செப்புக என்றான். 155
வந்தான் நெடு வான் உறை தச்சன்; மனத்து உணர்ந்தான்;
சிந்தாவினை அன்றியும், கைவினையாலும் செய்தான் -
அம் தாம நெடுந் தறி ஆயிரத்தால் அமைத்த
சந்து ஆர் மணி மண்டபம், தாமரையோனும் நாண. 156
காந்தம், அமுதின் துளி கால்வன, கால மீனின்
வேந்தன் ஒளி அன்றியும், மேலொடு கீழ் விரித்தான்;
பூந் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான்;
ஏந்தும் மணிக் கற்பகச் சீதளக் கா இழைத்தான். 157
ஆணிக்கு அமை பொன் கை, மணிச் சுடர் ஆர் விளக்கம்
சேண் உற்ற இருள் சீப்ப, அத் தெய்வ மடந்தைமார்கள்
பூணின் பொலிவார் புடை ஏந்திட, பொங்கு தோளான்
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான். 158
அல் ஆயிரகோடி அடுக்கியது ஒத்ததேனும்,
நல்லார் முகம் ஆம், நளிர் வால் நிலவு ஈன்ற, நாமப்
பல் ஆயிரகோடி பனிச் சுடர் ஈன்ற, திங்கள்
எல்லாம் உடன் ஆய், இருள் ஓட இரித்தது அன்றே. 159
பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற
கற்பத் தருவின் கதிர் நாள் நிழற் கற்றை நாற,
அல் பற்று அழிய, பகல் ஆக்கியதால் -அருக்கன்
நிற்பத் தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ? 160
ஊறு, ஓசை, முதல் பொறி யாவையும், ஒன்றின் ஒன்று
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன்; செய்கை ஓரான்;
வேறு ஆய பிறப்பிடை, வேட்கை விசித்தது ஈர்ப்ப,
மாறு ஓர் உடல் புக்கென, மண்டபம் வந்து புக்கான். 161
தண்டல் இல் தவம் செய்வோர், தாம் வேண்டிய, தாயின் நல்கும்
மண்டல மகர வேலை அமுதொடும் வந்ததென்ன,
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம் பொன்
தண் தளிர் மலரின் செய்த சீதளச் சேக்கை சார்ந்தான். 162
இராவணன் தென்றலைச் சீறுதல்
நேரிழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி
வேரி அம் சரளச் சோலை வேனிலான் விருந்து செய்ய,
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்தென, ஒருவர் ஆவி,
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே. 163
சாளரத்தூடு வந்து தவழ்தலும், தரித்தல் தேற்றான்;
நீள் அரத்தங்கள் சிந்தி, நெருப்பு உக, நோக்கும் நீரான்;
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வரக் கண்டன்ன
கோள் உறக் கொதித்து விம்மி, உழையரைக் கூவிச் சொன்னான். 164
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினைக் குப்புற்றென்ன,
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ?
ஏவலின் அன்றி, தென்றல் எவ் வழி எய்திற்று? என்னா,
காவலின் உழையர் தம்மைக் கொணருதிர் கடிதின் என்றான். 165
அவ் வழி, உழையர் ஓடி, ஆண்டு அவர்க் கொணர்தலோடும்,
வெவ் வழி அமைந்த செங் கண் வெருவுற நோக்கி, வெய்யோன்
செவ் வழி தென்றலோற்குத் திருத்தினீர் நீர் கொல்? என்ன,
இவ் வழி இருந்தகாலைத் தடை அவற்கு இல்லை என்றார். 166
வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால்,
மாண்டது போலும் கொள்கை, யானுடை வன்மை? வல்லைத்
தேண்டி, நீர் திசைகள்தோறும் சேணுற விசையில் செல்குற்று,
ஈண்டு, இவன் தன்னைப் பற்றி, இருஞ் சிறை இடுதிர் என்றான். 167
இராவணன் மாரீசனை அடைதல்
காற்றினோன் தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை;
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால், குறித்த ஆற்றால்,
வேல் தரும் கருங் கட் சீதை மெய் அருள் புனையேன் என்றால்,
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரைக் கொணர்திர் என்றான். 168
ஏவின சிலதர் ஓடி, ஏ எனும் துணையில், எங்கும்
கூவினர்; கூவலோடும் குறுகினர்-கொடித் திண் தேர்மேல்,
மாவினில், சிவிகை தன்மேல், மழை மதக் களிற்றின் -வையத்
தேவரும், வானம் தன்னில் தேவரும், சிந்தை சிந்த. 169
வந்த மந்திரிகளோடு மாசு அற மனத்தின் எண்ணி,
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன், தெளிவு இல் நெஞ்சன்,
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில், ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான். 170
மிகைப் பாடல்கள்
பரிக்கும் அண்டப் பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை
உரைக்கு உவமை பெற, குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர்
இருக்கும் அரித் தவிசு எவைக்கும் நாயகம் ஈது எனக் குறித்து அங்கு இமையோர் தச்சன்
அருக்கர் வெயில் பறித்து அமைத்த அரிமுகத்தின் மணிப் பீடத்து அமர்ந்தான் மன்னோ. 2-1
பொருப்பினையும் கடந்த புயப் பரப்பினிடைப் பொழி கதிரின் ஒளி குலாவி,
பரப்பும் இருட் குறும்பு எறித்த பகல் ஒளியும் கெடத் துரந்து, பருவ மேகத்து
உருப் பயில் இந்திர நீலச் சோதி தளைத்து, உலகம் எலாம் உவந்து நோக்க,
திருப் பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ மன்னோ. 5-1
இலங்கு மரகதப் பொருப்பின் மருங்கு தவழ் இளங் கதிரின் வெயில் சூழ்ந்தென்ன,
அலங்கு செம்பொன் இழைப்பயிலும் அருந்துகிலின் பொலிந்த அரைத்தவத்தின் மீது,
நலம் கொள் சுடர்த்தொகை பரப்பும் நவமணிப்பத்தியின் இழைத்தநலம் ஆர்கச்சு
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி வாள் மருங்கினிடைத் தொடர மன்னோ. 5-2
வானுலகு அளிக்கும் புரந்தரன் ஆதி, மருவும் எண் திசைப் படு நிருபர்
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே, அன்ன மென் புள் உருத் தாங்கி,
தான் இடைவிடாது தசமுகத்து அரக்கன் பதத்து இடைத் தாழ்ந்து தாழ்ந்து எழல்போல்
பால் நிறக் கவரி மயிர்க் குலம் கோடி பாங்கினில் பயின்றிட மன்னோ. 5-3
தேவ கன்னியர்கள், இயக்கர் தம் குலத்துத் தெரிவையர், சித்தர் மங்கையர்கள்
மேவ அருந் திறல் சேர் நாகர் மெல்லியர்கள் விளங்கு கந்திருவர், மேல் விஞ்சைக்
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள், ஆதியாய்க் கணிப்பு இல் பல் கோடிப்
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி, பலாண்டு இசை பரவிட மன்னோ. 5-4
தண் கதிர் பொழியும் ஓர் தவள மா மதி
விண் பிரிந்து இரு நிலத்து இருந்து, வேறு வேறு
எண் கடந்து உரு எடுத்து இருளை ஓட்டல்போல்
வெண் குடைத் தோகை பல கோடி மேவவே. 7-1
ஏவலின் புரி தொழில் எவையும் செய்து, செய்து
ஓவு இலர், துயர்க் கடற்கு ஒழிவு காண்கிலர்
மேவரும் பெரும் பயம் பிடித்து, விண்ணவர்
தாவினர், தலைத் தலை தாழ்ந்து நிற்கவே. 7-2
வியக்கும் முப் புவனமும் வெகுண்டு, மேலைநாள்
கயக்கிய கடுந் திறல் கருத்துளே கிடந்து,
உயக்கிய பயத்தினர் அவுணரோடு மற்று
இயக்கரும் திசை திசை இறைஞ்சி நிற்கவே. 11-1
பெருந் திசை இரிந்திடப் பெயர்த்தும் வென்ற நாள்,
பருந் திறல் புயம் பிணிப்புண்டு, பாசத்தால்,
அருந் தளைப்படும் துயர் அதனுக்கு அஞ்சியே
புரந்தரன் களாஞ்சி கை எடுத்துப் போற்றவே. 11-2
கடி நகர் அழித்துத் தன் காவல் மாற்றிய
கொடியவன் தனக்கு உளம் குலைந்து கூசியே,
வட திசைப் பரப்பினுக்கு இறைவன் மா நெதி
இடு திறை அளந்தனன், இரந்து நிற்கவே. 15-1
நிகர் அறு புவனம் மூன்று என நிகழ்த்திய
தொகையினில் தொகுத்திடு அண்டச் சூழலில்
வகையினைக் குரு முறை மரபின் வஞ்சியாப்
புகரவன் விரித்து எடுத்து இயம்பிப் போகவே. 15-2
மதியினில் கருதும் முன் அந்து வேண்டின
எது விதப் பொருள்களும் இமைப்பின் நல்கியே,
திதி முதல் அங்கம் அஞ்சுஅவையும் தெற்றென,
விதி முறை பெறத் தனி விளம்பிப் போகவே. 15-3
உரிய நும் குலத்து உளேன் ஒருவன் யான் எனப்
பரிவுறும் பழமைகள் எடுத்துப் பன்னியே,
விரை மலர் சிதறி, மெய் அன்பு மீக்கொளா,
நிருதி அங்கு அடிமுறை காத்து நிற்கவே. 17-1
என்ற பொழுதில், கடிது எழுந்து அலறி, வாய் விட்டு,
அன்று அருகு நின்ற பல தேவர் கணம் அஞ்ச,
புன் தொழில் அரக்கர் மனதில் புகை எழும்ப,
கன்றிய மனத்தன் கழறுற்றிடுவதானாள். 49-1
என்பதை மனக் கொடு இடர் ஏறிய கருத்தாள்,
முன்ப! உன் முகத்தின் எதிர் பொய் மொழியகில்லேன்;
நின் பதம்; நின் ஆணை இது; நீ கருதுவாய் என்று
அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள். 51-1
ஈது அவர்கள் தங்கள் செயல் என்று அவள் உரைப்ப,
கோது உறு மனத்து எரி பிறந்து, குறை நாளில்
மோது வடவைக் கனல் முகந்து, உலகம் எல்லாம்
காதுற சினத்தன் இதனைக் கழறுகின்றான். 57-1
இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்பக் கேட்ட
கொற்ற வாள் அரக்கன் முன்னே, கொண்ட வெங் கோபத் தீயில்
கொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும்
அற்றதால்; பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும் வேறாயது அன்றே. 81-1