Kamba Ramayanam Sundara kandam Part 1
கம்பராமாயணம் சுந்தர காண்டம்
1. கடல் தாவு படலம் 2. ஊர் தேடு படலம் 3. காட்சிப் படலம் 4. உருக் காட்டு படலம் 5. சூடாமணிப் படலம் 6. பொழில் இறுத்த படலம் சுந்தர காண்டம்
கடவுள் வாழ்த்து
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் - கை வில் ஏந்தி,
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்! 0
1. கடல் தாவு படலம்
துறக்க நாட்டை இலங்கை என்று அனுமன் ஐயுற்றுத் தெளிதல்
ஆண்தகை, ஆண்டு, அவ் வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்;
ஈண்டு, இதுதான்கொல் வேலை இலங்கை? என்று ஐயம் எய்தா,
வேண்டு அரு விண்ணாடு என்ணும் மெய்ம்மை கண்டு, உள்ளம் மீட்டான்;
காண் தகு கொள்கை உம்பர் இல் என, கருத்துள் கொண்டான். 1
இலங்கையைக் கண்ட அனுமன் ஆர்த்தல்
கண்டனன், இலங்கை மூதூர்க் கடி பொழில் கனக நாஞ்சில்
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியின் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும் எல்லாம்;
அண்டமும் திசைகள் எட்டும் அதிர, தோள் கொட்டி ஆர்த்தான். 2
அப்போது மயேந்திர மலையில் நிகழ்ந்த குழப்பம்
வன் தந்த வரி கொள் நாகம், வயங்கு அழல் உமிழும் வாய,
பொன் தந்த முழைகள்தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான. 3
புகல் அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளைச் சீயம் பொங்கி,
உகல் அருங் குருதி கக்கி, உள்ளுற நெரிந்த; ஊழின்,
அகல் இரும் பரவை நாண அரற்றுறு குரல ஆகி,
பகல் ஒளி கரப்ப, வானை மறைத்தன, பறவை எல்லாம். 4
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற, முறை கால் தள்ள,
மை அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய, மஞ்சின்
மெய் உறத் தழீஇய, மெல்லென் பிடியொடும், வெருவலோடும்,
கை உற மரங்கள் பற்றி, பிளிறின-களி நல் யானை. 5
பொன் பிறழ் சிமயக் கோடு பொடியுற, பொறியும் சிந்த,
மின் பிறழ் குடுமிக் குன்றம் வெரிந் உற விரியும் வேலை,
புன் புற மயிரும் பூவா, கண்புலம் புறத்து நாறா,
வன் பறழ் வாயில் கவ்வி, வல்லியம் இரிந்த மாதோ. 6
தேக்கு உறு சிகரக் குன்றம் திரிந்து மெய்ந் நெரிந்து சிந்த,
தூக்குறு தோலர், வாளர், துரிதத்தின் எழுந்த தோற்றம்,
தாக்குறு செருவில், நேர்ந்தார் தாள் அற வீச, தாவி,
மேக்குற விசைத்தார் என்னப் பொலிந்தனர்-விஞ்சை வேந்தர். 7
தாரகை, சுடர்கள், மேகம், என்று இவை தவிரத் தாழ்ந்து,
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்,
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு என, குமிழி, பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே! 8
தாது உகு நறு மென் சாந்தம், குங்குமம், குலிகம், தண் தேன்,
போது உகு பொலன் தாது, என்று இத் தொடக்கத்த யாவும் பூசி,
மீது உறு சுனை நீர் ஆடி, அருவி போய் உலகின் வீழ்வ,
ஓதிய குன்றம் கீண்டு குருதி நீர் சொரிவது ஒத்த. 9
கடல் உறு மத்து இது என்ன, கார் வரை திரியும்காலை,
மிடல் உறு புலன்கள் வென்ற மெய்த் தவர் விசும்பின் உற்றார்;
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி, முற்றா
உடல் உறு பாசம் வீசாது, உம்பர் செல்வாரை ஒத்தார். 10
வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும், நடுக்கம் எய்தி,
மயில் இயல் தளிர்க் கை மாதர் தழீஇக் கொளப் பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித் தனி கடுத்தல் செய்தார். 11
ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண,
சீறிய மனத்தர், தெயவ மடந்தையர் ஊடல் தீர்வுற்று
ஆறினர், அஞ்சுகின்றார், அன்பரைத் தழுவி உம்பர்
ஏறினர், இட்டு நீத்த பைங் கிளிக்கு இரங்குகின்றார். 12
தேவர் முதலோர் விடைதர அனுமன் கடலைக் கடக்க விரைதல்
இத் திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும்
முத் திறத்து உலகத்தாரும், முறை முறை விரைவில் மொய்த்தார்,
தொத்து உறு மலரும், சாந்தும், சுண்ணமும், இனைய தூவி,
வித்தக! சேறி என்றார்; வீரனும், விரைவது ஆனான். 13
குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல்
வெறுவிது; விசயம் வைகும் விலங்கல்-தோள் அலங்கல் வீர!
சிறிது இது என்று இகழற்பாலை அல்லை; நீ சேறி என்னா,
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான், பொருப்பை ஒப்பான். 14
காலை ஊன்றி எழுந்த போது மலையிலும் கடலிலும் நிகழ்ந்த மாறுதல்கள்
இலங்கையின் அளவிற்று அன்றால், இவ் உரு எடுத்த தோற்றம்;
விலங்கவும் உளது அன்று என்று, விண்ணவர் வியந்து நோக்க,
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து, அடித் துணை அழுத்தலோடும்,
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ! 15
வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மாதை
தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்
கால் விசைத் தடக் கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்
மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச-வீரன். 16
ஆயவன் எழுதலோடும், அரும் பணை மரங்கள் யாவும்,
வேய் உயர் குன்றும், வென்றி வேழமும், பிறவும், எல்லாம்,
நாயகன் பணி இது என்னா, நளிர் கடல் இலங்கை, தாமும்
பாய்வன என்ன, வானம் படர்ந்தன, பழுவம் மான. 17
இசையுடை அண்ணல் சென்ற வேகத்தால், எழுந்த குன்றும்,
பசையுடை மரனும், மாவும், பல் உயிர்க் குலமும், வல்லே
திசை உறச் சென்று சென்று, செறி கடல் இலங்கை சேரும்
விசை இலவாக, தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த. 18
மாவொடு மரனும், மண்ணும், வல்லியும், மற்றும் எல்லாம்,
போவது புரியும் வீரன் விசையினால், புணரி போர்க்கத்
தூவின; கீழும் மேலும் தூர்த்தன; சுருதி அன்ன
சேவகன் சீறாமுன்னம் சேதுவும் இயன்ற மாதோ! 19
கீண்டது வேலை நல் நீர்; கீழ் உறக் கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட, மணிகள் மின்ன,
ஆண்தகை அதனை நோக்கி, அரவினுக்கு அரசன் வாழ்வும்
காண்தகு தவத்தென் ஆனேன் யான்! எனக் கருத்துள் கொண்டான். 20
வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையைக் கிழிய வீசி,
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர்,
உய்தும் நாம் என்பது என்னே? உறு வலிக் கலுழன் ஊழின்
எய்தினான் ஆம் என்று அஞ்சி, மறுக்கம் உற்று, இரியல்போனார். 21
துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அற, சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய, ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்துற்று, இலங்கைமேல் தவழ்ந்த மாதோ. 22
வானில் செல்லும் அனுமனின் தோற்றம்
இடுக்கு உறு பொருள்கள் என் ஆம்? எண் திசை சுமந்த யானை,
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன், நாகம்
ஒடுக்குறு காலை, வன் காற்று அடியொடும் ஒடித்த அந் நாள்,
முடுக்குறக் கடலில் செல்லும் முத்தலைக் கிரியும் ஒத்தான். 23
கொட்புறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,
கண்புலன் கதுவல் ஆகா வேகத்தான், கடலும் மண்ணும்
உட்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்
புட்பக விமானம்தான் அவ் இலங்கைமேல் போவது ஒத்தான். 24
விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்ச, செல்லும் மாருதி, மறம் உள் கூர,
அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னம் என்னா,
கண்ணுதல் ஒழியச் செல்லும் கைலைஅம் கிரியும் ஒத்தான். 25
மாணி ஆம் வேடம் தாங்கி, மலர் அயற்கு அறிவு மாண்டு, ஓர்
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம், அறம் பொருள் நிரப்பும் அண்ணல்,
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலைச் சிறுவன்தன்னைக்
காணிய, விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான். 26
மழை கிழித்து உதிர, மீன்கள் மறி கடல் பாய, வானம்
குழைவுற, திசைகள் கீற, மேருவும் குலுங்க, கோட்டின்
முழையுடைக் கிரிகள் முற்ற, முடிக்குவான், முடிவுக் காலத்து
அழிவுறக் கடுக்கும் வேகத் தாதையும் அனையன் ஆனான். 27
தடக் கை நால்-ஐந்து பத்துத் தலைகளும் உடையான்தானே
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவப் பயன் அறுதலோடும்,
கெடக் குறி ஆக, மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி,
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான். 28
புறத்து உறல் அஞ்சி, வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி,
மறத் தொழில் அரக்கன் வாழும் மா நகர், மனுவின் வந்த
திறத் தகை இராமன் என்னும் சேவகற் பற்றி, செல்லும்
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான். 29
கேழ் உலாம் முழு நிலாவின் கிளர் ஒளி இருளைக் கீற,
பாழி மா மேரு நாண, விசும்பு உறப் படர்ந்த தோளான்,
ஆழி சூழ் உலகம் எல்லாம் அருங் கனல் முருங்க உண்ணும்
ஊழி நாள், வட பால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான். 30
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட,
குடல் எலாம் அவுணர் சிந்த, குன்று எனக் குறித்து நின்ற
திடல் எலாம் தொடர்ந்து செல்ல, சேண் விசும்பு ஒதுங்க, தெய்வக்
கடல் எலாம் கலங்க, தாவும் கலுழனும் அனையன் ஆனான். 31
வாலை உயர்த்தி அனுமன் வானில் சென்ற காட்சி
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்குற, அடுக்கு நாகர்
மேலின் மேல் நின்றகாறும் சென்ற கூலத்தன், விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக் கால
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள, சென்றான். 32
வெளித்துப் பின் வேலை தாவும் வீரன் வால், வேதம் ஏய்க்கும்
அளி, துப்பின் அனுமன் என்று ஓர் அருந் துணை பெற்றதாயும்,
களித்துப்புன் தொழில்மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று,
ஒளித்து, பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே. 33
மேருவை முழுதும் சூழ்ந்து, மீதுற்ற வேக நாகம்,
கார் நிறத்து அண்ணல் ஏவ, கலுழன் வந்துற்ற காலை
சோர்வுறு மனத்தது ஆகி, சுற்றிய சுற்று நீங்கிப்
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது, அப் பிறங்கு பேழ் வால். 34
அனுமனின் வேகமும், கைகளின் தோற்றமும்
குன்றோடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சீயம்,
சென்றுறு வேகத் திண் கால் எறிதர, தேவர் வைகும்
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள், விசையின் தம்மின்
ஒன்றோடு ஒன்று உடையத் தாக்கி, மாக் கடல் உற்ற மாதோ. 35
வலங் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்கியது, ஏகுவான்தன் கருத்து என்கொல்? என்னும் கற்பால்;
விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர்
இலங்கையின் அளவு அன்று என்னா, இம்பர் நாடு இரிந்தது அன்றே. 36
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்னத்
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும்,
ஆசையை உற்ற வேலை கலங்க, அன்று, அண்ணல் யாக்கை
வீசிய காலின் வீந்து மிதந்தன, மீன்கள் எல்லாம். 37
பொரு அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது, வேகம்
தருவன தடக் கை, தள்ளா நிமிர்ச்சிய, தம்முள் ஒப்ப,
ஒருவு அருங் குணத்து வள்ளல் ஓர் உயிர்த் தம்பி என்னும்
இருவரும் முன்னர்ச் சென்றால் ஒத்த, அவ் இரண்டு பாலும். 38
கடலில் இருந்து எழுந்த மைந்நாகத்தை உந்திவிட்டு, அனுமன் செல்லுதல்
இந் நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை,
திந் நாக மாவில், செறி கீழ்த் திசைக் காவல் செய்யும்
கைந் நாகம், அந் நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற,
மைந் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே. 39
மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப,
ஓயா அருவித் திரள் உத்தரியத்தை ஒப்ப,
தீயோர் உளர் ஆகியகால், அவர் தீமை தீர்ப்பான்,
மாயோன் மகரக் கடல் நின்று எழு மாண்பது ஆகி, 40
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க, இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் ஓங்கிக்
கொழுந்து ஓடி நின்ற கொழுங் குன்றை வியந்து நோக்கி,
அழுங்கா மனத்து அண்ணல், இது என்கொல்? எனா அயிர்த்தான். 41
நீர் மேல் படரா, நெடுங் குன்று நிமிர்ந்து நிற்றல்
சீர் மேல் படராது என, சிந்தை உணர்ந்து, செல்வான்,
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி, விண்ணோர்
ஊர் மேல் படர, கடிது, உம்பரின்மீது உயர்ந்தான். 42
மைந்நாகம் மானிட வடிவில் வந்து உரைத்தல்
உந்தா முன் உலைந்து, உயர் வேலை ஒளித்த குன்றம்,
சிந்தாகுலம் உற்றது; பின்னரும் தீர்வு இல் அன்பால்
வந்து ஓங்கி, ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி,
எந்தாய்! இது கேள் என, இன்ன இசைத்தது அன்றே; 43
வேற்றுப் புலத்தோன் அலென்; ஐய! விலங்கல் எல்லாம்
மாற்றுச் சிறை என்று, அரி வச்சிரம் மாண ஓச்ச,
வீற்றுப் பட நூறிய வேலையின், வேலை உய்த்து,
காற்றுக்கு இறைவன் எனைக் காத்தனன், அன்பு காந்த. 44
அன்னான் அருங் காதலன் ஆதலின், அன்பு தூண்ட,
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை,
பொன் ஆர் சிகரத்து, இறை ஆறினை போதி என்னா,
உன்னா உயர்ந்தேன் - உயர்விற்கும் உயர்ந்த தோளாய்! 45
கார் மேக வண்ணன் பணி பூண்டனன்; காலின் மைந்தன்,
தேர்வான் வருகின்றனன், சீதையை; தேவர் உய்யப்
பேர்வான் அயல் சேறி; இதில் பெறும் பேறு இல் என்ன,
நீர் வேலையும் என்னை உரைத்தது - நீதி நின்றாய்! 46
விருந்து உண்டு செல்ல மைந்நாகம் வேண்டுதல்
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி,
இற்றே, இறை எய்தினை, ஏய்த்தது கோடி, என்னால்;
பொன்-தார் அகல் மார்ப! தம் இல்லுழை வந்தபோதே,
உற்றார் செயல் மற்றும் உண்டோ ? என, உற்று உரைத்தான். 47
மீண்டு வரும்போது விருந்து உண்பென் என கூறி அனுமன் அகல்தல்
உரைத்தான் உரையால், இவன் ஊறு இலன் என்பது உன்னி,
விரைத் தாமரை வாள் முகம் விட்டு விளங்க, வீரன்
சிரித்தான், அளவே; சிறிது அத் திசை செல்ல நோக்கி,
வரைத் தாள் நெடும் பொன் குடுமித் தலை, மாடு கண்டான். 48
வருந்தேன்; அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும், என் ஆசை நிரப்பி அல்லால்;
பெருந் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே
இருந்தேன்; நுகர்ந்தேன்; இதன்மேல் இனி ஈவது என்னோ? 49
முன்பில் சிறந்தார், இடை உள்ளவர், காதல் முற்றப்
பின்பில் சிறந்தார், குணம் நன்று; இது பெற்ற யாக்கைக்கு
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே?
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்கண் உண்டே? 50
ஈண்டே கடிது ஏகி, இலங்கை விலங்கல் எய்தி,
ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றி, என் ஆற்றல் கொண்டே,
மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி, மெய்ம்மை
பூண்டான் அவன் கண்புலம் பின்பட, முன்பு போனான். 51
நீர் மாக் கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா,
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவாப் பதத்து, என்
தேர் மேல் குதிகொண்டவன், இத் திறன் சிந்தைசெய்தான்
ஆர்மேல்கொல்? என்று எண்ணி, அருக்கனும் ஐயம் உற்றான். 52
சுரசை தோன்றுதலும், அனுமன் அவளை வென்று விரைதலும்
மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று,
ஆன்றுற்ற வானோர் குறை நேர, அரக்கி ஆகித்
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள். 53
பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு, பெட்பின் ஓங்கி,
கோள் வாய் அரியின் குலத்தாய்! கொடுங் கூற்றும் உட்க
வாழ்வாய்! எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்கொல்? என்னா,
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள். 54
தீயே எனல் ஆய பசிப்பிணி தீர்த்தல் செய்வாய்
ஆயே, விரைவுற்று எனை அண்மினை, வண்மையாள!
நீயே இனி வந்து, என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்; வழி மற்று இலை, வானின் என்றாள். 55
பெண்பால் ஒரு நீ; பசிப் பீழை ஒறுக்க நொந்தாய்;
உண்பாய் எனது ஆக்கையை; யான் உதவற்கு நேர்வல்-
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால்,
நண்பால் எனச் சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள், 56
காய்ந்து, ஏழ் உலகங்களும் காண, நின் யாக்கைதன்னை,
ஆர்ந்தே பசி தீர்வென்; இது ஆணை என்று அன்னள் சொன்னாள்;
ஓர்ந்தானும், உவந்து, ஒருவேன்; நினது ஊழ் இல் பேழ் வாய்
சேர்ந்து ஏகுகின்றேன்; வலையாம்எனின் தின்றிடு என்றான். 57
அக்காலை, அரக்கியும், அண்டம் அனந்தம் ஆகப்
புக்கால் நிறையாத புழைப் பெரு வாய் திறந்து,
விக்காது விழுங்க நின்றாள்; அது நோக்கி வீரன்,
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான். 58
நீண்டான் உடனே சுருங்கா, நிமிர் வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று, ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர்,
மீண்டான்; அது கண்டனர் விண் உறைவோர்கள்; எம்மை
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய், நெடிது ஆசி சொன்னார். 59
விண்ணவர் ஆசியுடன் அனுமன் மேற்செல்லல்
மின்மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி,
தன் மேனியளாய், அவன், தாயினும் அன்பு தாழ,
என் மேல் முடியாதன? என்று, இனிது ஏத்தி நின்றாள்;
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து, போனான்- 60
கீதங்கள் இசைத்தனர் கின்னரர்; கீதம் நின்ற
பேதங்கள் இயம்பினர் பேதையர்; ஆடல் மிக்க
பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன; பூசுரேசர்
வேதங்கள் இயம்பினர்; தென்றல் விருந்து செய்ய, 61
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப,
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும்
கந்தார வீணைக் களி செஞ் செவிக் காது நுங்க. 62
வழியை அடைத்து நின்ற அங்காரதாரையை அனுமன் வினவல்
வெங் கார் நிறப் புணரி வேறேயும் ஒன்று அப்
பொங்கு ஆர்கலிப் புனல் தரப் பொலிவதே போல்,
இங்கு ஆர் கடத்திர் எனை? என்னா, எழுந்தாள்,
அங்காரதாரை, பெரிது ஆலாலம் அன்னாள். 63
காதக் கடுங் குறி கணத்து இறுதி கண்ணாள்,
பாதச் சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப,
வேதக் கொழுஞ் சுடரை நாடி, நெடு மேல்நாள்,
ஓதத்தின் ஓடும் மதுகைகடவரை ஒத்தாள். 64
துண்டப் பிறைத் துணை எனச் சுடர் எயிற்றான்;
கண்டத்திடைக் கறையுடைக் கடவுள், கைம்மா
முண்டத்து உரித்த உரியால், முளரிவந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள். 65
நின்றாள் நிமிர்ந்து, அலை நெடுங் கடலின் நீர் தன்
வன் தாள் அலம்ப, முடி வான் முகடு வவ்வ;
அன்று, ஆய்திறத்தவன், அறத்தை அருளோடும்
தின்றாள் ஒருத்தி இவள் என்பது தெரிந்தான். 66
பேழ் வாயகத்து அலது, பேர் உலகம் மூடும்
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா
ஆழ்வான், அணுக்கன், அவள் ஆழ் பில வயிற்றைப்
போழ்வான் நினைத்து, இனைய வாய்மொழி புகன்றான்: 67
சாயா வரம் தழுவினாய்; தழிய பின்னும்,
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்;
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய்;
நீ யாரை? என்னை இவண் நின்ற நிலை? என்றான். 68
பெண்பால் எனக் கருது பெற்றி ஒழி; உற்றால்,
விண்பாலவர்க்கும், உயிர் வீடுறுதல் மெய்யே;
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும்,
உண்பேன் ஒருத்தி; அது ஒழிப்பது அரிது என்றாள். 69
அவள் உதரத்துள் புகுந்து, குடர் கொண்டு வான்வழி ஏகுதல்
திறந்தாள் எயிற்றை, அவள்; அண்ணல் இடை சென்றான்;
அறம்தான் அரற்றியது, அயர்ந்து அமரர் எய்த்தார்,
இறந்தான் எனக் கொடு; ஓர் இமைப்பு அதனின் முன்னம்,
பிறந்தான் என, பெரிய கோள் அரி பெயர்ந்தான். 70
கள் வாய் அரக்கி கதற, குடர் கணத்தில்
கொள், வார், தடக் கையன் விசும்பின்மிசை கொண்டான்;
முள் வாய் பொருப்பின் முழை எய்தி, மிக நொய்தின்,
உள் வாழ் அரக் கொடு எழு திண் கலுழன் ஒத்தான். 71
சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்,
ஏகா, அரக்கி குடர் கொண்டு, உடன் எழுந்தான்,
மா கால் விசைக்க, வடம் மண்ணில் உற, வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான். 72
ஆர்த்தார்கள் வானவர்கள்; தானவர் அழுங்கா
வேர்த்தார்; விரிஞ்சனும் வியந்து, மலர் வெள்ளம்
தூர்த்தான்; அகன் கயிலையில் தொலைவு இலோனும்
பார்த்தான்; முனித் தலைவர் ஆசிகள் பகர்ந்தார். 73
மாண்டாள் அரக்கி; அவள் வாய் வயிறுகாறும்
கீண்டான்; இமைப்பினிடை மேரு கிரி கீழா
நீண்டான்; வயக் கதி நினைப்பின் நெடிது என்னப்
பூண்டான்; அருக்கன் உயர் வானின் வழி போனான். 74
இராம நாமமே இடர்கள் திர்ப்பது என்று அவன் உறுதி பூணுதல்
சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ?
முற்றா முடிந்த நெடு வானினிடை, முந்நீ-
ரில் தாவி, எற்று எனினும், யான் இனி இலங்கை
உற்றால், விலங்கும் இடையூறு என, உணர்ந்தான். 75
ஊறு, கடிது ஊறுவன; ஊறு இல் அறம் உன்னா,
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர,
ஏறும் வகை எங்கு உள்ளது? இராம! என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல் என வலித்தான். 76
பவள மலையில் பாய்ந்து, அனுமன் இலங்கையை நோக்கல்
தசும்புடைக் கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா,
அசும்புடைப் பிரசத் தெய்வக் கற்பக நாட்டை அண்மி,
விசும்பிடைச் செல்லும் வீரன் விலங்கி வேறு, இலங்கை மூதூர்ப்
பசுஞ் சுடர்ச் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான். 77
மேக்குறச் செல்வோன் பாய, வேலைமேல் இலங்கை வெற்பு
நூக்குறுத்து, அங்கும் இங்கும் தள்ளுற, நுடங்கும் நோன்மை,
போக்கினுக்கு இடையூறு ஆகப் புயலொடு பொதிந்த வாடை
தாக்குற, தகர்ந்து சாயும் கலம் எனத் தக்கது அன்றே. 78
மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,
விண்ணிடை, உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான். 79
மிகைப் பாடல்கள்
சென்றனன், இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி-திண் தோள்
வன் திறம் அனுமன் - வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி,
பொன் திணி சிகர கோடி மயேந்திரப் பொருப்பின் ஏறி,
நின்றிடும் தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ? 79-1
இமையவர் ஏத்த வாழும் இராவணன் என்னும் மேலோன்
அமம திரு நகரைச் சூழ்ந்த அளக்கரைக் கடக்க, வீரன்,
சுமை பெறு சிகர கோடித் தொல் மயேந்திரத்தின், வெள்ளிச்
சிமையமேல் நின்ற தேவன் தன்மையின், சிறந்து நின்றான்.
[இவ்விரு பாடல்கள் இப் படலத்தின் முதற் செய்யுளாகிய ஆண்தகை
ஆண்டு எனத் துவங்கும் பாடலின் முன்னர்க் காணப்படுகின்றன. இவற்றோடு
கிட்கிந்தா காண்டத்தின் மயேந்திரப் படலத்தின் இறுதியிலுள்ள நான்கு
செய்யுட்களும் (26-29) வரிசை முறை மாறியும் ஒரு சுவடியில் உள்ளன.] 79-2
பெருஞ் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும்-
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட மிதித்தலோடும்-
அருஞ் சினம் அடங்கி, தம்தம் மாதரைத் தழுவி, அங்கம்
நெரிஞ்சுற, கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம் நுங்க, 7-1
நூல் ஏந்து கேள்வி நுகரார், புலன் நோக்கல் உற்றார்
போல், ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க,
கால் ஆழ்ந்து அழுந்திக் கடல் புக்குழி, கச்சம் ஆகி,
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்பு மான, 40-1
தள்ளற்கு அரு நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க,
எள்ளற்கு அரு நல் நிறம் எல்லை இலாத புல்ல,
வள்ளல் கடலைக் கெட நீக்கி, மருந்து வவ்வி,
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க, 40-2
ஆன்று ஆழ் நெடு நீரிடை, ஆதியொடு அந்தம் ஆகித்
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட, முந்து தோன்றி,
மூன்று ஆம் உலகத்தொடும், முற்று உயிர் ஆய மற்றும்,
ஈன்றானை ஈன்ற சுவணத் தனி அண்டம் என்ன, 40-3
இந் நீரின், என்னைத் தரும் எந்தையை எய்தி அன்றி,
செந் நீர்மை செய்யேன் என, சிந்தனை செய்து, நொய்தின்
அந் நீரில் வந்த முதல் அந்தணன் ஆதி நாள் அம்
முந்நீரில் மூழ்கி, தவம் முற்றி முளைத்தவாபோல், 40-4
பூவால் இடையூறு புகுந்து, பொறாத நெஞ்சின்
கோ ஆம் முனி சீறிட, வேலை குளித்த எல்லாம்
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அந் நாள்,
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன, 40-5
நிறம் குங்குமம் ஒப்பன, நீல் நிறம் வாய்ந்த நீரின்
இறங்கும் பவளக் கொடி சுற்றின, செம் பொன் ஏய்ந்த
பிறங்கும் சிகரம் படர் முன்றில்தொறும், பிணாவோடு
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர, 40-6
கூன் சூல் முதிர் இப்பி குரைக்க, நிரைத்த பாசி
வான் சூல் மழை ஒப்ப, வயங்கு பளிங்கு முன்றில்,
தான் சூலி நாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம்
மீன் சூழ்வரும் அம் முழு வெண் மதி வீறு, கீற, 40-7
பல் ஆயிரம் ஆயிரம் காசுஇனம் பாடு இமைக்கும்
கல் ஆர் சிமயத் தடங் கைத்தலம் நீண்டு காட்டி,
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி, வயங்கு தோற்றத்து
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து, எழுகின்றது என்ன, 40-8
மனையில் பொலி மாக நெடுங் கொடி மாலை ஏய்ப்ப,
வினையின் திரள் வெள் அருவித் திரள் தூங்கி வீழ,
நினைவின் கடலூடு எழலோடும், உணர்ந்து நீங்காச்
சுனையில், பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள, 40-9
கொடு நாவலொடு இரண்டு குலப் பகை, குற்றம் மூன்றும்,
சுடு ஞானம் வெளிப்பட, உய்ந்த துயக்கு இலார்போல்,
விட நாகம் முழைத்தலை விம்மல் உழந்து, வீங்கி,
நெடு நாள், பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப, 40-10
செவ் வான் கதிரும், குளிர் திங்களும், தேவர் வைகும்
வெவ் வேறு விமானமும், மீனொடு மேகம், மற்றும்,
எவ் வாய் உலகத்தவும், ஈண்டி இருந்த; தம்மின்
ஒவ்வாதன ஒத்திட, ஊழி வெங் காலும் ஒத்தான். 51-1
வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப,
நீள் ஒத்து உயர் வாலின், விசும்பு நிரம்பு மெய்யன்,
கோள் ஒத்த பொன் மேனி; விசும்பு இரு கூறு செய்யும்
நாள் ஒத்தது; மேல் ஒளி கீழ் இருள் உற்ற, ஞாலம். 52-1
விண்ணோர் அது கண்டனர், உள்ளம் வியந்து மேல்மேல்
கண் ஓடிய நெஞ்சினர், காதல் கவற்றலாலே,
எண்ணோடு இயைந்து துணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறை இன்னன பெற்றி உணர்த்தினாரால். 52-2
பரவுக் குரல், பணிலக் குரல், பணையின் குரல், பறையின்
விரவுக் குரல், சுருதிக் குரல், விசயக் குரல், விரவா,
அரவக் குலம் உயிர் உக்கு உக, அசனிக் குரல் அடு போர்
உரவுக் கருடனும் உட்கிட, உயிர்க்கின்றன-ஒருபால். 62-1
வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ,
ஏனோரும் நின்று, சயம் உண்டு என இயம்ப,
தான் ஓர் பெருங் கருடன் என்ன, எதிர் தாவிப்
போனான், விரைந்து, கடிதே போகும் எல்லை, 62-2
நல் நகர் அதனை நோக்கி, நளினக் கைம் மறித்து, நாகர்
பொன்னகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது, அம்மா!
அந் நகர் இதனின் நன்றேல், அண்டத்தை முழுதும் ஆள்வான்
இந் நகர் இருந்து வாழ்வான்? இது அதற்கு ஏது என்றான். 79-1
மாண்டது ஓர் நலத்திற்று ஆம் என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்;
வேண்டிய வேண்டின் எய்தி, வெறுப்பு இன்றி, விழைந்து துய்க்கும்
ஈண்ட அரும் போக இன்பம் ஈறு இலது யாண்டுக் கண்டாம்,
ஆண்டு அது துறக்கம்; அஃதே அரு மறைத் துணிவும் அம்மா! 79-2
உட் புலம் எழு நூறு என்பர் ஓசனை; உலகம் மூன்றில்
தெட்புறு பொருள்கள் எல்லாம் இதனுழைச் செறிந்த என்றால்,
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும், நோக்கும்
கண்புலம் வரம்பிற்று ஆமே? காட்சியும் கரையிற்று ஆமே? 79-3
என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந் தோள் வீரன்
நின்றனன், நெடிய வெற்பின்; நினைப்ப அரும் இலங்கை மூதூர்
ஒன்றிய வடிவம் கண்டு, ஆங்கு, உளத்திடைப் பொறுக்கல்ஆற்றான்;
குன்று உறழ் புயத்து மேலோன் பின்னரும் குறிக்கலுற்றான். 79-4
சுந்தர காண்டம்
2. ஊர் தேடு படலம்
இலங்கையின் மாட்சி
பொன் கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?
மின் கொண்டு அமைத்த? வெயிலைக் கொடு சமைத்த?
என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத-
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம். 1
நாகாலயங்களொடு நாகர் உலகும், தம்
பாகு ஆர் மருங்கு துயில்வென்ன உயர் பண்பு;
ஆகாயம் அஞ்ச, அகல் மேருவை அனுக்கும்
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற. 2
மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி,
மீகாரம் எங்கணும் நறுந் துகள் விளக்கி,
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி,
பாகு ஆய செஞ் சொலவர் வீசுபடு காரம். 3
பஞ்சி ஊட்டிய பரட்டு, இசைக் கிண்கிணிப் பதுமச்
செஞ் செவிச் செழும் பவளத்தின் கொழுஞ் சுடர் சிதறி,
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து, அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ. 4
நான நாள் மலர்க் கற்பக நறு விரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த, தாள் ஆறுடைப் பறவை
தேன் அவாம் விரைச் செழுங் கழுநீர்த் துயில்செய்ய,
வான யாறு தம் அரமியத் தலம்தொறும் மடுப்ப. 5
குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய,
மழலை மென் மொழி, கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்,
சுழலும் நல் நெடுந் தட மணிச் சுவர்தொறும் துவன்றும்
நிழலும், தம்மையும், வேற்றுமை தெரிவு அரு நிலைய, 6
இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின், அச் சொல்லும் மாசுண்ணும்;
அனையது ஆம் எனின், அரக்கர்தம் திருவுக்கும் அளவை
நினையலாம்? அன்றி, உவமையும் அன்னதாய் நிற்கும்! 7
மணிகள் எத்துணை பெரியவும், மால் திரு மார்பின்
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால்;
திணியும் நல் நெடுந் திருநகர், தெய்வ மாத் தச்சன்
துணிவின் வந்தனன், தொட்டு அழகு இழைத்த அத் தொழில்கள். 8
மரம் அடங்கலும் கற்பகம்; மனை எலாம் கனகம்;
அரமடந்தையர் சிலதியர், அரக்கியர்க்கு; அமரர்
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர்; ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது; தவம் செய்த தவமால். 9
தேவர் என்பவர் யாரும், இத் திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர்; செய்கிலாதவர் எவர் என்னின்,
மூவர்தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும்!
தா இல் மா தவம் அல்லது, பிறிது ஒன்று தகுமோ? 10
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின், புறம் போய்
நேர் இயன்ற வன் திசைதொறும் நின்ற மா நிற்க,
ஆரியம் தனி ஐங் கரக் களிறும், ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேவருமே, இந் நகர் தொகாத. 11
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும்
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது, இவ் ஊர்;
ஆழி அண்டத்தின் அருக்கன்தன் அலங்கு தேர்ப் புரவி
ஏழும் அல்லன, ஈண்டு உள குதிரைகள் எல்லாம். 12
தழங்கு பேரியின் அரவமும், தகை நெடுங் களிறு
முழங்கும் ஓதையும், மூரி நீர் முழக்கொடு முழங்கும்;
கொழுங் குழல் புதுக் குதலையர் நூபுரக் குரலும்,
வழங்கு பேர் அருஞ் சதிகளும், வயின்தொறும் மறையும். 13
மரகதத்தினும், மற்று உள மணியினும், வனைந்த
குரகதத் தடந் தேர்இனம்அவை பயில் கொட்டில்
இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்,
நரகம் ஒக்குமால் நல் நெடுந் துறக்கம், இந் நகர்க்கு, 14
திருகு வெஞ் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்;
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது; -அழகைப்
பருகும் இந் நகர்த் துன் ஒளி பாய்தலின், -பசும் பொன்
உருகுகின்றது போன்று உளது, உலகு சூழ் உவரி. 15
தேனும், சாந்தமும், மான்மதச் செறி நறுஞ் சேறும்,
வான நாள்மலர்க் கற்பக மலர்களும், வய மாத்
தான வாரியும், நீரொடு மடுத்தலின், தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும், அவ் வேலை. 16
தெய்வத் தச்சனைப் புகழ்துமோ? செங் கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன்
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ? அறியாத
தொய்யல் சிந்தையேம், யாவரை எவ்வகை துதிப்பேம்? 17
நீரும், வையமும், நெருப்பும், மேல் நிமிர் நெடுங் காலும்,
வாரி வானமும், வழங்கல ஆகும், தம் வளர்ச்சி;
ஊரின் இந் நெடுங் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்,
மேரு எங்ஙனம் விளர்க்குமோ, முழுமுற்றும் வெள்கி? 18
முன்னம் யாவரும், இராவணன் முனியும் என்று எண்ணி,
பொன்னின் மா நகர் மீச் செலான் கதிர் எனப் புகல்வார்-
கன்னி ஆரையின் ஒளியினில், கண் வழுக்குறுதல்
உன்னி, நாள்தொறும் விலங்கினன் போதலை உணரார். 19
தீய செய்குநர் தேவரால்; அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா,
காயம் என்னும் அக் கணக்கு அறு பதத்தையும் கடக்க
ஏயும் நன் மதில் இட்டனன் - கயிலையை எடுத்தான். 20
கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி
மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கைநின்று அகத்தின்! 21
கொண்ட வான் திரைக் குரை கடல் இடையதாய், குடுமி
எண் தவா விசும்பு எட்ட நின்று, இமைக்கின்ற எழிலால்,
பண்டு அரா-அணைப் பள்ளியான் உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்து இருந்தது, இவ் அணி நகர் அமைதி. 22
இலங்கை மாந்தரின் பெருமித செல்வ வாழ்வு
பாடுவார் பலர் என்னின், மற்று அவரினும் பலரால்
ஆடுவார்கள்; மற்று அவரினும் பலர் உளர், அமைதி
கூடுவாரிடை இன்னியம் கொட்டுவார்; முட்டு இல்
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார். 23
வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்;
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர்; அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார்; தொடர்ந்தால்,
ஏனை நாகியர் அரு நடக் கிரியை ஆய்ந்திருப்பார். 24
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி,
உழையர் என்ன நின்று, உதவுவ நிதியங்கள்; ஒருவர்
விழையும் போகமே, இங்கு இது? வாய்கொடு விளம்பின்,
குழையும்; நெஞ்சினால் நினையினும், மாசு என்று கொள்ளும். 25
பொன்னின் மால் வரைமேல் மணி பொழிந்தன பொருவ,
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ் முறை உரைக்க,
பன்னி, நாள் பல பணி உழந்து, அரிதினின் படைத்தான் -
சொன்ன வானவர் தச்சன் ஆம், இந் நகர் துதிப்பான். 26
மகர வீணையின், மந்தர கீதத்தின், மறைந்த,
சகர வேலையின் ஆர் கலி; திசைமுகம் தடவும்
சிகர மாளிகைத் தலம்தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின, முகிற் குலம் அனைத்தும். 27
பளிக்கு மாளிகைத் தலம்தொறும், இடம்தொறும், பசுந் தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள்தோறும்,
அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி,
களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன். 28
தேறல் மாந்தினர்; தேன் இசை மாந்தினர்; செவ் வாய்
ஊறல் மாந்தினர்; இன உரை மாந்தினர்; ஊடல்
கூறல் மாந்தினர்; அனையவர்த் தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர்-அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர். 29
எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில்
கறுத்த மேனியில் பொலிந்தன; ஊடலில் கனன்று
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுளப் பஞ்சி
குறித்த கோலங்கள் பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி. 30
விளரிச் சொல்லியர் வாயினால், வேலையுள் மிடைந்த
பவளக் காடு எனப் பொலிந்தது; படை நெடுங் கண்ணால்,
குவளைக் கோட்டகம் கடுத்தது; குளிர் முகக் குழுவால்,
முளரிக் கானமும் ஒத்தது-முழங்கு நீர் இலங்கை. 31
எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய், இன்றுகாறும்
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால்,
அழிந்துநின்று ஆவது என்னே? அலர் உளோன் ஆதியாக
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம், அரக்கருக்கு உறையும் போதா. 32
காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்
ஆயத்தார்; வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றா
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ? மற்றுஓர்
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல். 33
கழல் உலாம் காலும், கால வேல் உலாம் கையும், காந்தும்
அழல் உலாம் கண்ணும், இல்லா ஆடவர் இல்லை; அன்னார்
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால், பஞ்சி குன்றா
மழலை யாழ்க் குதலைச் செவ்வாய் மாதரும் இல்லை மாதோ. 34
கள் உறக் கனிந்த பங்கி அரக்கரைக் கடுத்த - காதல்
புன் உறத் தொடர்வ, மேனி புலால் உறக் கடிது போவ,
வெள் உறுப்பு எயிற்ற, செய்ய தலையன, கரிய மெய்ய,
உள் உறக் களித்த, குன்றின் உயர்ச்சிய,-ஓடை யானை. 35
வள்ளி நுண் மருங்குல் என்ன, வானவர் மகளிர், உள்ளம்
தள்ளுற, பாணி தள்ளா நடம் புரி தடங் கண் மாதர்,
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர், தாம் வெள்குகின்றார்-
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார். 36
ஒறுத்தலோ நிற்க; மற்று, ஓர் உயர் படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம்? மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே?
கறுத்த வாள் அரக்கிமாரும், அரக்கரும், கழித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும், இவ் வீதி எல்லாம். 37
வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்
கடங்களும், கலின மா விலாழியும், கணக்கு இலாத
இடங்களின் இடங்கள்தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம்
அடங்கியது என்னில், என்னே! ஆழியின் ஆழ்ந்தது உண்டோ ? 38
விற் படை பெரிது என்கேனோ? வேற் படை மிகும் என்கேனோ?
மற் படை உடைத்து என்கேனோ? வாட் படை வலிது என்கேனோ?
கற்பணம், தண்டு, பிண்டிபாலம் என்று இனைய காந்தும்
நன் படை பெரிது என்கேனோ? - நாயகற்கு உரைக்கும் நாளில். 39
குறுகிய வடிவுடன் அனுமன் பவளக் குன்றில் தங்குதல்
என்றனன், இலங்கை நோக்கி, இனையன பலவும் எண்ணி-
நின்றனன்; அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா,
தன் தகை அனைய மேனி சுருக்கி, அச் சரளச் சாரல்
குன்றிடை இருந்தான்; வெய்யோன் குட கடல் குளிப்பதுஆனான். 40
செறிந்த பேரிருள்
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான்,
ஆய்வினை மனத்து இலான், அறிஞர் சொல் கொளான்,
வீவினை நினைக்கிலான், ஒருவன், மெய் இலான்,
தீவினை என, இருள் செறிந்தது எங்குமே. 41
கரித்த மூன்று எயிலுடைக் கணிச்சி வானவன்,
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை,
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனனாம் என, பொலியும் பொற்பதே. 42
அணங்கு அரா அரசர் கோன், அளவு இல் ஆண்டு எலாம்,
பணம் கிளர் தலைதொறும் உயிர்த்த பாய் விடம்
உணங்கல் இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து,
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே, 43
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை,
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும்,
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே, 44
இருளிலும் அரக்கர் இயங்குதல்
அவ் வழி, அவ் இருள் பரந்த ஆயிடை,
எவ் வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்;
செவ் வழி மந்திரத் திசையர் ஆகையால்,
வெவ் வழி இருள் தர, மிதித்து, மீச்செல்வார். 45
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார்; எழில்
சந்திரன் உலகினைச் சார்குவார்; சலத்து
அந்தகன் உறையுளை அணுகுவார்; அயில்
வெந் தொழில் அரக்கனது ஏவல் மேயினார். 46
பொன்னகர் மடந்தையர், விஞ்சைப் பூவையர்,
பன்னக வனிதையர், இயக்கர் பாவையர்,
முன்னின பணி முறை மாறி முந்துவார்,
மின் இனம் மிடைந்தென, விசும்பின் மீச்செல்வார். 47
தேவரும், அவுணரும், செங் கண் நாகரும்,
மேவரும் இயக்கரும், விஞ்சை வேந்தரும்,
யாவரும், விசும்பு இருள் இரிய ஈண்டினார்,
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார். 48
சித்திரப் பத்தியின் தேவர் சென்றனர்,
இத்துணைத் தாழ்த்தனம்; முனியும் என்று, தம்
முத்தின் ஆரங்களும், முடியும், மாலையும்,
உத்தரீயங்களும், சரிய ஓடுவார். 49
நிலவின் பொலிவு
தீண்ட அருந் தீவினை தீக்கத் தீந்து போய்,
மாண்டு, அற உலர்ந்தது, மாருதிப் பெயர்
ஆண்தகை மாரி வந்து அளிக்க, ஆயிடை,
ஈண்டு அறம் முளைத்தென, முளைத்தது இந்துவே. 50
வந்தனன் இராகவன் தூதன்; வாழ்ந்தனன்
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா,
அந்தம் இல் கீழ்த் திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே. 51
கற்றை வெண் கவரிபோல், கடலின் வெண் திரை
சுற்றும் நின்று அலமர, பொலிந்து தோன்றிற்றால்-
இற்றது என் பகை என, எழுந்த இந்திரன்
கொற்ற வெண் குடை எனக் குளிர் வெண் திங்களே. 52
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால், திரை
முரிந்து உயர் பாற்கடல் முகந்து, மூரி வான்
சொரிந்ததே ஆம் என, துள்ளும் மீனொடும்
விரிந்தது, வெண் நிலா, மேலும் கீழுமே. 53
அருந் தவன் சுரபியே ஆதி வான்மிசை
விரிந்த பேர் உதயமா, மடி வெண் திங்களா,
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா,
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே. 54
எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில, மறித்தும் போகில,
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி, ஆய் கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற, மீன் எலாம். 55
எல்லியின் நிமிர் இருட் குறையும், அவ் இருள்
கல்லிய நிலவின் வெண் முறியும், கவ்வின;
புல்லிய பகை எனப் பொருவ போன்றன-
மல்லிகை மலர்தொறும் வதிந்த வண்டு எலாம். 56
வீசுறு பசுங் கதிர்க் கற்றை வெண் நிலா
ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது,
காசு உறு கடி மதில் இலங்கைக் காவல் ஊர்த்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே. 57
இகழ்வு அரும் பெருங் குணத்து இராமன் எய்தது ஓர்
பகழியின் செலவு என, அனுமன் பற்றினால்,
அகழ் புகுந்து, அரண் புகுந்து, இலங்கை, அன்னவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே. 58
மதிலின் மாண்பு கண்டு அனுமன் வியத்தல்
அவ் வழி, அனுமனும், அணுகலாம் வகை
எவ் வழி என்பதை, உணர்வின் எண்ணினான்;
செவ் வழி ஒதுங்கினன், தேவர் ஏத்தப் போய்,
வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான். 59
ஆழி அகழ் ஆக, அருகா அமரர் வாழும்
ஏழ் உலகின் மேலை வெளிகாறும் முகடு ஏறி,
கேழ் அரிய பொன் கொடு சமைத்த, கிளர் வெள்ளத்து
ஊழி திரி நாளும் உலையா, மதிலை உற்றான். 60
கலங்கல் இல் கடுங் கதிர்கள், மீது கடிது ஏகா,
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின், அன்றால்;
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே,
விலங்கி அகல்கின்றன, விரைந்து என, வியந்தான். 61
தெவ் அளவு இலாத; இறை தேறல் அரிது அம்மா!
அவ்வளவு அகன்றது அரண், அண்டம் இடை ஆக
எவ் அளவின் உண்டு வெளி! ஈறும் அது! என்னா,
வெவ் வள அரக்கனை மனக் கொள வியந்தான். 62
மடங்கல் அரிஏறும் மத மால் களிறும் நாண
நடந்து, தனியே புகுதும் நம்பி, நனி மூதூர்-
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணைக்
கடுந் திசையின் வாய் அனைய - வாயில் எதிர் கண்டான். 63
மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைந்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?
நீர் புகு கடற்கு வழியோ? என நினைந்தான். 64
ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்,
ஊழின் முறை இன்றி, உடனே புகும்; இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்,
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான். 65
வாயில் காவலை அனுமன் வியத்தல்
வெள்ளம் ஒரு நூறொடு இரு நூறும் மிடை வீரர்,
கள்ள வினை வெவ் வலி அரக்கர், இரு கையும்
முள் எயிறும் வாளும் உற, முன்னம் முறை நின்றார்;
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான். 66
சூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,
கால வரி வில், பகழி, கப்பணம், முசுண்டி,
கோல், கணையம், நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,
பாலம், முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார். 67
அங்குசம், நெடுங் கவண், அடுத்து உடல் வசிக்கும்
வெங் குசைய பாசம், முதல் வெய்ய பயில் கையர்;
செங் குருதி அன்ன செறி குஞ்சியர், சினத்தோர்,
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார். 68
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும்
விளக்குஇனம் இருட்டினை விழுங்கி ஒளி கால,
உளக் கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்,
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான். 69
எவ் அமரர், எவ் அவுணர், ஏவர் உளர்,-என்னே!-
கவ்வை முது வாயிலின் நெடுங் கடை கடப்பார்?
தெவ்வர் இவர்; சேமம் இது; சேவகனும் யாமும்
வெவ் அமர் தொடங்கிடின், எனாய் விளையும்? என்றான். 70
கருங் கடல் கடப்பது அரிது அன்று; நகர் காவற்
பெருங் கடல் கடப்பது அரிது; எண்ணம் இறை பேரின்,
அருங் கடன் முடிப்பது அரிது ஆம்; அமர் கிடைக்கின்,
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள் என நினைத்தான். 71
அனுமன் மதில்மேல் தாவிச் செல்ல முயல்தல்
வாயில் வழி சேறல் அரிது; அன்றியும், வலத்தோர்;
ஆயில், அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால்;
காய் கதிர் இயக்கு இல் மதிலைக் கடிது தாவிப்
போய், இந் நகர் புக்கிடுவென் என்று, ஓர் அயல் போனான். 72
இலங்கைமாதேவி அனுமனைத் தடுத்தல்
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர்
வாழ்நாள் அன்னாள்-போவதின் மேலே வழி நின்றாள்,
தூண் ஆம் என்னும் தோள் உடையானை,-சுடரோனைக்
காணா வந்த கட்செவி என்னக் கனல் கண்ணாள். 73
எட்டுத் தோளாள்; நாலு முகத்தாள்; உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள்; சுழல் கண்ணாள்;
முட்டிப் போரில், மூஉலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும் காலன் வலத்தாள்; சுமை இல்லாள்; 74
பாராநின்றாள், எண் திசைதோறும், பலர் அப்பால்
வாராநின்றாரோ? என; மாரி மழையேபோல்
ஆராநின்றாள்; நூபுரம் அச்சம் தரு தாளாள்;
வேரா நின்றாள்; மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள்; 75
வேல், வாள், சூலம், வெங் கதை, பாசம், விளி சங்கம்,
கோல், வாள், சாபம், கொண்ட கரத்தாள்; வட குன்றம்
போல்வாள்; திங்கள்-போழின் எயிற்றாள்; புகை வாயில்
கால்வாள்; காணின், காலனும் உட்கும் கதம் மிக்காள். 76
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள்; அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள்; அருள் இல்லாள்;
அம் சுவணத்தின் உத்தரியத்தாள்; அலை ஆரும்
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்; 77
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள்; தெளி நூல் யாழ்
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள்; அறை தும்பி
கந்தாரத்தின் இன் இசை பாடிக் களி கூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள்; 78
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்
நல்லாள்; அவ் ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்;-
நில்லாய்! நில்லாய்! என்று உரை நேரா, நினையாமுன்
வல்லே சென்றாள்; மாருதி கண்டான், வருக என்றான். 79
ஆகா செய்தாய்! அஞ்சலை போலும்? அறிவு இல்லாய்!
சாகா மூலம் தின்று உழல்வார்மேல் சலம் என் ஆம்?
பாகு ஆர் இஞ்சிப் பொன் மதில் தாவிப் பகையாதே;
போகாய் என்றாள்-பொங்கு அழல் என்னப் புகை கண்ணாள். 80
அனுமனும் இலங்காதேவியும் உரையாடுதல்
களியா உள்ளத்து அண்ணல், மனத்தில் கதம் மூள,
விளியா நின்றே, நீதி நலத்தின் வினை ஓர்வான்,
அளியால் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்;
எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு? என்றான். 81
என்னாமுன்னம், ஏகு என, ஏகாது, எதிர் மாற்றம்
சொன்னாயே? நீ யாவன் அடா? தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர், எய்தற்கு; அளி உற்றால்,
உன்னால் எய்தும் ஊர்கொல் இவ் ஊர்? என்று, உற நக்காள். 82
நக்காளைக் கண்டு, ஐயன், மனத்து ஓர் நகை கொண்டான்;
நக்காய்! நீ யார்? ஆர் சொல வந்தாய்? உனது ஆவி
உக்கால் ஏது ஆம்? ஓடலை? என்றாள்; இனி, இவ் ஊர்
புக்கால் அன்றிப் போகலென் என்றான், புகழ் கொண்டான். 83
இலங்காதேவியின் சிந்தனை
வஞ்சம் கொண்டான்; வானரம் அல்லன்; வரு காலன்
துஞ்சும், கண்டால் என்னை; இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்ட கண்ணுதலைப்போல் நகுகின்றான்
நெஞ்சம் கண்டே, கல் என நின்றே, நினைகின்றாள்; 84
இருவரும் பொருதல்
கொல்வாம்; அன்றேல், கோளுறும் இவ் ஊர் எனல் கொண்டாள்,
வெல்வாய் நீயேல், வேறி என, தன் விழிதோறும்,
வல் வாய்தோறும், வெங் கனல் பொங்க, மதி வானில்
செல்வாய் என்னா, மூவிலைவேலைச் செல விட்டாள். 85
தடித்து ஆம் என்னத் தன் எதிர் செல்லும் தழல் வேலைக்
கடித்தான், நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன்போல்,
ஒடித்தான் கையால்-உம்பர் உவப்ப, உயர் காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண்ணென,-எண்ணம் பிழையாதான். 86
இற்றுச் சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்,
மற்றும் தெய்வப் பல் படை கொண்டே மலைவாளை
உற்று, கையால், ஆயுதம் எல்லாம் ஒழியாமல்
பற்றிக் கொள்ளா, விண்ணில் எறிந்தான், பழி இல்லான். 87
வழங்கும் தெய்வப் பல் படை காணாள், மலைவான்மேல்,
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள்-
கழங்கும் பந்தும் குன்றுகொடு ஆடும் கரம் ஒச்சித்
தழங்கும் செந் தீச் சிந்த அடித்தாள் - தகவு இல்லாள். 88
அனுமன் அறைய இலங்கைமாதேவி மண்ணில் வீழ்தல்
அடியாமுன்னம், அம் கை அனைத்தும் ஒரு கையால்
பிடியா, என்னே? பெண் இவள்; கொல்லின் பிழை என்னா,
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான்; உயிரோடும்,
இடிஏறு உண்ட மால் வரைபோல், மண்ணிடை வீழ்ந்தாள். 89
விழுந்தாள் நொந்தாள்; வெங் குருதிச் செம்புனல் வெள்ளத்து
அழுந்தா நின்றாள்; நான்முகனார்தம் அருள் ஊன்றி
எழுந்தாள்; யாரும், யாரையும், எல்லா உலகத்தும்,
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று, இவை சொன்னாள்: 90
இலங்கைமாதேவி தன் வரலாறு கூறல்
ஐய! கேள்; வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக
எய்தி, இம் மூதூர் காப்பன்; இலங்கைமாதேவி என் பேர்;
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து, இந்தச் சிறுமை செய்தேன்;
உய்தி என்று, அளித்திஆயின், உணர்த்துவல் உண்மை என்றாள். 91
எத்தனை காலம் காப்பன், யான் இந்த மூதூர்? என்று, அம்
முத்தனை வினவினேற்கு, முரண் வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம்அதனால் தீண்டிக் காய்ந்த அன்று, என்னைக் காண்டி;
சித்திர நகரம், பின்னை, சிதைவது திண்ணம் என்றான். 92
அன்னதே முடிந்தது; ஐய, அறம் வெல்லும்; பாவம் தோற்கும்
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்; உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி என்னாப் புகழ்ந்து, அவள் இறைஞ்சிப் போனாள். 93
இலங்கையுள் அனுமன் புகுதல்
வீரனும், விரும்பி நோக்கி, மெய்ம்மையே; விளைவும் அஃது என்று,
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்
பூரியர் இலங்கை மூதூர்ப் பொன் மதில் தாவிப் புக்கான் -
சீரிய பாலின் வேலைச் சிறு பிரை தெறித்தது அன்னான். 94
இலங்கையின் ஒளிச் சிறப்பை வியத்தல்
வான் தொடர், மணியின் செய்த, மை அறு, மாட கோடி
ஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அழகை நோக்கி,
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்
தோன்றினன் கொல்லோ? என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான். 95
மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற
மெய்ம்மையை உணர்ந்து, நாணா, மிகை என விலங்கிப் போனான்;
இம் மதில் இலங்கை நாப்பண் எய்துமேல், தன் முன் எய்தும்
மின்மினி அல்லனோ, அவ் வெயில் கதிர் வேந்தன்? அம்மா! 96
பொசிவுறு பசும் பொன் குன்றில், பொன் மதில் நடுவண் பூத்து,
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு இல் இவ் இலங்கை மூதூர், ஆர் இருள் இன்மையாலோ,
நிசிசரர் ஆயினார், இந் நெடு நகர் நிருதர் எல்லாம்? 97
நகரினுள் அனுமன் மறைந்து சென்ற வகை
என்றனன் இயம்பி, வீதி ஏகுதல் இழுக்கம் என்னா,
தன் தகை அனைய மேனி சுருக்கி, மாளிகையில் சார,
சென்றனன் - என்ப மன்னோ - தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என, அயோத்தி வேந்தன் புகழ் என, குலவு தோளான். 98
ஆத் துறு சாலைதோறும், ஆனையின் கூடம்தோறும்,
மாத் துறு மாடம்தோறும், வாசியின் பந்திதோறும்,
காத்து உறு சோலைதோறும், கருங் கடல் கடந்த தாளான்,
பூந்தொறும் வாவிச் செல்லும் பொறி வரி வண்டின், போனான். 99
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணிப் பித்திப் பத்தி
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால், காலின் தோன்றல்,
கரியன்ஆய், வெளியன் ஆகி, செய்யன் ஆய், காட்டும்-காண்டற்கு
அரியன்ஆய், எளியன் ஆய், தன் அகத்து உறை அழகனேபோல். 100
அனுமன் பற்பல நிலையிலுள்ள அரக்கர்களைக் காணுதல்
ஈட்டுவார், தவம் அலால் மற்று ஈட்டினால், இயைவது இன்மை
காட்டினார் விதியார்; அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!-
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய, பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர்; ஆடுவார் அரக்கர் மாதர். 101
கானக மயில்கள் என்ன, களி மட அன்னம் என்ன,
ஆனைக் கமலப் போது பொலிதர, அரக்கர் மாதர்,
தேன் உகு சரளச் சோலை, தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்,
வானவர் மகளிர் ஆட்ட, மஞ்சனம் ஆடுவாரை- 102
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ்,
அலத்தகத் தளிர்க்கை நோவ, அளந்து எடுத்து அமைந்த பாடல்
கலக்குற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள்,
மலர்க்கையால், மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை- 103
சந்தப் பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில், தம்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை,
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை- 104
திருத்திய பளிக்கு வேதி, தெள்ளிய வேல்கள் என்ன,
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கருங் கயல், செம்மை காட்ட,
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம
அருத்திய பயிர்க்கு நீர்போல், அரு நறவு அருந்துவாரை- 105
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள,
தூதுளங் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற,
மாதரும் மைந்தர் தாமும், ஒருவர்பால் ஒருவர் வைத்த
காதல்அம் கள் உண்டார்போல், முறை முறை களிக்கின்றாரை- 106
வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா வாசப் புனை நறுங் கலவை பூசி,
அற்புத வடிக் கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி, அம் பொற்
கற்பகம் கொடுக்க வாங்கி, கலன் தெரிந்து அணிகின்றாரை- 107
புலி அடு மதுகை மைந்தர் புதுப் பிழை உயிரைப் புக்கு
நலிவிட, அமுத வாயால் நச்சு உயிர்த்து, அயில் கண் நல்லார்,
மெலிவுடை மருங்குல் மின்னின் அலமர, சிலம்பு விம்மி
ஒலிபட, உதைக்கும்தோறும், மயிர்ப் புளகு உறுகின்றாரை- 108
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து, வாய் வெண்மை ஊறி,
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப, வேர் பொடிப்ப, தூய
வெள்ளிடை மருங்குலார், தம் மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கி, கணவரைக் கனல்கின்றாரை- 109
ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்
வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110
நலன் உறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்
முலை உறு கலவை தீய, முள் இலா முளரிச் செங் கேழ்
மலர்மிசை மலர் பூத்தென்ன, மலர்க்கையால் வதனம் தாங்கி,
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை- 111
ஏதிஅம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,
தாது இயங்கு அமளிச் சேக்கை, உயிர் இலா உடலின் சாய்வார்,
மா துயர்க் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,
தூதியர் முறுவல் நோக்கி, உயிர் வந்து துடிக்கின்றாரை- 112
சங்கொடு, சிலம்பும், நூலும், பாத சாலகமும் தாழ,
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப, இல் உறை தெய்வம் போற்றி,
கொங்கு அலர் கூந்தல், செவ் வாய், அரம்பையர் பாணி கொட்டி
மங்கல கீதம் பாட, மலர்ப் பலி வகுக்கின்றாரை- 113
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய, யாணர்க்
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,
முழை தொடர் சங்கு, பேரி, முகில் என முழங்க, மூரி
மழை தொடர் மஞ்ஞை என்ன, விழாவொடு வருகின்றாரை- 114
பள்ளியில், மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி,
ஒள்ளிய கலவிப் பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்,
மெள்ளவே இமையை நீக்கி, அஞ்சன இழுது வேய்ந்த
கள்ள வாள் நெடுங் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை- 115
ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்
தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள, ஏகி,
ஆவியும் தாமுமே புக்கு, அருங் கதவு அடைக்கின்றாரை- 116
கின்னர மிதுனம் பாட, கிளர் மழை கிழித்துத் தோன்றும்
மில் என, தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து,
பன்னக மகளிர் சுற்றிப் பலாண்டு இசை பரவ, பண்ணைப்
பொன் நகர் வீதிதோறும், புது மனை புகுகின்றாரை- 117
கோவையும் குழையும் மின்ன, கொண்டலின் முரசம் ஆர்ப்ப,
தேவர் நின்று ஆசி கூற, முனிவர் சோபனங்கள் செப்ப,
பாவையர் குழாங்கள் சூழ, பாட்டொடு வான நாட்டுப்
பூவையர் பலாண்டு கூற, புது மணம் புணர்கின்றாரை- 118
அனுமன் கும்பகருணனைக் காணுதல்
இயக்கியர், அரக்கிமார்கள், நாகியர், எஞ்சு இல் விஞ்சை
முயல் கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை-
மயக்கு அற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும்,
கயக்கம் இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான். 119
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது; உம்பரின்
வாசவன் மணி முடி கவித்த மண்டபம்
ஏசுற விளங்கியது; இருளை எண் வகை
ஆசையின் நிலைகெட, அலைக்கல் ஆன்றது. 120
அன்னதன் நடுவண், ஓர் அமளி மீமிசை,
பன்னக அரசு என, பரவைதான் என,
துன் இருள் ஒருவழித் தொக்கது ஆம் என,
உன்ன அருந் தீவினை உருக் கொண்டென்னவே, 121
முன்னிய கனை கடல் முழுகி, மூவகைத்
தன் இயல் கதியொடு தழுவி, தாது உகு
மன் நெடுங் கற்பக வனத்து வைகிய
இன் இளந் தென்றல் வந்து இழுகி ஏகவே. 122
வானவர் மகளிர் கால் வருட, மா மதி
ஆனனம் கண்ட, மண்டபத்துள் ஆய் கதிர்க்
கால் நகு, காந்தம் மீக் கான்ற காமர் நீர்த்
தூ நிற நறுந் துளி முகத்தில் தூற்றமே. 123
மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்,
வாசலின் புறத்திடை நிறுவி, வன்மையால்,
நாசியின் அளவையின் நடத்த, கண்டவன்
கூசினன்; குதித்தனன், விதிர்த்த கையினான். 124
பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்
கேழ் இல் வெங் கொடியவன் உயிர்ப்பு-கேடு இலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே. 125
பகை என, மதியினைப் பகுத்து, பாடு உற
அகை இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என,
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்புப் பொங்கிய
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே, 126
தடை புகு மந்திரம் தகைந்த நாகம்போல்,
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் -
கடை யுக முடிவு எனும் காலம் பார்த்து, அயல்
புடை பெயரா நெடுங் கடலும் போலவே. 127
இராவணனோ எனச் சினந்து பின் அவன் அல்லன் என அறிந்து அனுமன்
சினம் தணிதல்
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, அரக்கர்
கோ எனா நின்ற குணம்இலி இவன் எனக் கொண்டான்;
கா வல் நாட்டங்கள் பொறி உக, கனல் எனக் கனன்றான்;
ஏவனோ இவன்? மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான்! 128
குறுகி நோக்கி, மற்று, அவன் தலை ஒருபதும், குறித்த
இறுகு திண் புயம் இருபதும், இவற்கு இலை என்னா,
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெங் கனலி,
அறிவு எனும் பெரும் பரவைஅம் புனலினால், அவித்தான். 129
பிற இடங்களில் தேடல்
அவித்து நின்று, எவன் ஆயினும் ஆக என்று, அங்கை
கவித்து, நீங்கிடச் சில பகல் என்பது கருதா,
செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன், அனையவன் உறையுளைக் கடந்தான். 130
மாட கூடங்கள், மாளிகை ஒளிகை, மகளிர்
ஆடு அரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபம், முதல் பலவும்
நாடி ஏகினன் - இராகவன் புகழ் எனும் நலத்தான். 131
மணி கொள் வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்,
கணிகொள் நாளத்தில், கால் என, புகை என, கலக்கும்;
நுணுகும், வீங்கும்;-மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்?-
அணுவில் மேருவில் ஆழியான் எனச் செலும், அனுமன். 132
அனுமன் வீடணன் மாளிகை புகுதலும், அவன் நல்லன் எனத் தேர்ந்து
செல்லுதல்
ஏந்தல், இவ் வகை, எவ் வழிமருங்கினும் எய்தி,
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான்,
வேந்தர், வேதியர், மேல் உளோர், கீழ் உளோர், விரும்பப்
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான். 133
பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்து, பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது என, அவர் உரு மேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான். 134
உற்று நின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்;
குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன் எனக் கொண்டான்;
செற்றம் நீங்கிய மனத்தினன், ஒரு சிறைச் சென்றான்;
பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடைப் புக்கான். 135
இந்திரசித்தின் வீரப் பொலிவை வியந்து மேலே போதல்
முந்து அரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம் பல கடந்து, தன் மனத்தின் முன் செல்வான்,
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான். 136
ஏதி ஏந்திய தடக் கையர், பிறை எயிறு இலங்க
மூதுரைப் பெருங் கதைகளும் பிதிர்களும் மொழிவார்,
ஓதில், ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர்,
காது வெஞ் சினக் களியினர், காவலைக் கடந்தான். 137
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறுவகை முகமும்,
திக்கு நோக்கிய புயங்களும், சில கரந்தனையான்
ஒக்க, நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப்
புக்கு நோக்கினன் - புகை புகா வாயிலும் புகுவான். 138
வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?-
அளையில் வாள் அரி அனையவன் - யாவனோ? அறியேன்;
இளைய வீரனும், ஏந்தலும், இருவரும், பலநாள்
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான். 139
இவனை இன் துணை உடைய போர் இராவணன், என்னே,
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் எனப் புகறல்?
சிவனை, நான்முகத்து ஒருவனை, திரு நெடுமால் ஆம்
அவனை, அல்லவர் நிகர்ப்பவர் என்பதும், அறிவோ? 140
என்று, கைம் மறித்து, இடை நின்று காலத்தை இகப்பது
அன்று; போவது என்று, ஆயிரம் ஆயிரத்து அடங்காத்
துன்று மாளிகை ஒளிகள் துரிசு அறத் துருவிச்
சென்று தேடினன், இந்திரசித்தினைத் தீர்ந்தான். 141
அக்கன் மாளிகை கடந்து போய், மேல், அதிகாயன்
தொக்க கோயிலும் தம்பியர் இல்லமும் துருவி,
தக்க மந்திரத் தலைவர் மா மனைகளும் தாவிப்
புக்கு நீங்கினன், இராகவன் சரம் என, புகழோன். 142
இடைநகர் அகழியைக் கண்ட அனுமனின் வியப்பு
இன்னர் ஆம் இரும் பெரும் படைத் தலைவர்கள் இருக்கைப்
பொன்னின் மாளிகை ஆயிர கோடியும் புக்கான்,
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான்,
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான். 143
தனிக் கடக் களிறு என ஒரு துணை இலான் தாய
பனிக் கடல் பெருங் கடவுள் தன் பரிபவம் துடைப்பான்,
இனி, கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று, இசைத்தான் -
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன், அகழியைக் கண்டான். 144
பாழி நல் நெடுங் கிடங்கு எனப் பகர்வரேல் பல பேர்,
ஊழிக்காலம் நின்று, உலகு எலாம் கல்லினும் உலவாது;
ஆழி வெஞ் சினத்து அரக்கனை அஞ்சி, ஆழ் கடல்கள்
ஏழும், இந் நகர் சுலாயகொலாம் என, இசைத்தான். 145
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான்,
தாய வேலையின் இரு மடி விசைகொடு தாவிப்
போய காலத்தும் போக்கு அரிது என்பது புகன்றான் -
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான். 146
இடைநகர் அகழியின் ஏற்றம்
மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழத்
தூக்கினாலன்ன தோயத்ததுஆய், துயர்
ஆக்கினான் படை அன்ன அகழியை,
வாக்கினால் உரைவைக்கலும் ஆகுமோ? 147
ஆனை மும் மதமும், பரி ஆழியும்,
மான மங்கையர் குங்கும வாரியும்,
நானம் ஆர்ந்த நறைக் குழல் ஆவியும்,
தேனும், ஆரமும், தேய்வையும், நாறுமால், 148
உன்னம், நாரை, மகன்றில், புதா, உளில்,
அன்னம், கோழி, வண்டானங்கள், ஆழிப்புள்,
கின்னரம், குரண்டம், கிலுக்கம், சிரல்,
சென்னம், காகம், குணாலம், சிலம்புமே. 149
நலத்த மாதர் நறை அகில், நாவியும்,
அலத்தகக் குழம்பும், செறிந்து, ஆடிய
இலக்கணக் களிறோடு, இள மெல் நடைக்
குலப் பிடிக்கும், ஓர் ஊடல் கொடுக்குமால். 150
நறவு நாறிய நாள் நறுந் தாமரை
துறைகள்தோறும் முகிழ்த்தன தோற்னுமால் -
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு
உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ? 151
பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி
விளிம்பும், வெள்ளமும், மெய் தெரியாது, மேல் -
தெளிந்த சிந்தையரும், சிறியார்களோடு
அளிந்தபோது, அறிதற்கு எளிது ஆவரோ? 152
நீலமே முதல் நல் மணி நித்திலம்,
மேல கீழ, பல் வேறு ஒளி வீசலால்,
பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ? என, காட்டுமே. 153
அகழியைக் கடந்து நகரினுள் அனுமன் தேடுதல்
அன்ன வேலை அகழியை, ஆர்கலி
என்னவே கடந்து, இஞ்சியும், பிற்பட,
துன்ன அருங் கடி மா நகர் துன்னினான்;
பின்னர் எய்திய தன்மையும், பேசுவாம்: 154
கரிய நாழிகை பாதியில், காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம் பதி,
ஒருவனே, ஒரு பன்னிரு யோசனைத்
தெருவு மும்மை நூறாயிரம் தேடினான். 155
இலங்கையில் நடு நிசி
வேரியும் அடங்கின; நெடுங் கடல் விளம்பும்,
பாரியும் அடங்கின; அடங்கியது பாடல்;
காரியம் அடங்கினர்கள், கம்மியர்கள்; மும்மைத்
தூரியம் அடங்கின; தொடங்கியது உறக்கம். 156
இறங்கின, நிறம் கொள் பரி; ஏமம் உற எங்கும்
கறங்கின, மறம் கொள் எயில் காவலர் துடிக் கண்;
பிறங்கு இணர் நறுங் குழலர் அன்பர் பிரியாதோர்,
உறங்கினர், பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார். 157
வடம் தரு தடங் கொள் புய மைந்தர், கலவிப் போர்
கடந்தனர்; இடைந்தனர், களித்த மயில் போலும்
மடந்தையர் தடந் தன முகட்டிடை மயங்கிக்
கிடந்தனர்; நடந்தது, புணர்ச்சி தரு கேதம். 158
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்;
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்;
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்,
தூம நறையின் துறை பயின்றிலர், துயின்றார். 159
பண் இமை அடைத்த, பல கள்-பொருநர் பாடல்;
விண் இமை அடைத்தென, விளைந்தது இருள்; வீணை
தண் இமை அடைத்தன; தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன; அடைத்தன கபாடம். 160
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தென்றல், உணர்வு உண்டு அயல் உலாவ,
சொரிந்தன கருங் கண், வரு துள்ளி தரு வெள்ளம்;
எரிந்தன, பிரிந்தவர்தம் எஞ்சு தனி நெஞ்சம். 161
இளக்கர் இழுது எஞ்ச, விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தென்றல், பகை சோர உயர்வோரின்;
அளக்கரொடு அளக்க அரிய ஆசை உற வீசா,
விளக்கு இனம் விளக்குமணி மெய் உறு விளக்கம். 162
நித்தம் நியமத் தொழிலர் ஆய், நிறையும் ஞானத்து
உத்தமர் உறங்கினர்கள்; யோகியர் துயின்றார்;
மத்த மத வெங் களிறு உறங்கின; மயங்கும்
பித்தரும் உறங்கினர்; இனிப் பிறரிது என ஆம்? 163
அகநகரினுள் சென்று அனுமன் தேடுதல்
ஆய பொழுது, அம் மதில் அகத்து, அரசர் வைகும்
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவிப் போய்,
தீயவன் இருக்கை அயல், செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் - வினைப் பகையை வென்றான். 164
போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களா,
தாரகைக் குழுவின் தழுவித் தொடர்,
நாரியர்க்கு உறைவு ஆம், இடம் நண்ணினான். 165
முயல் கருங் கறை நீங்கிய மொய்ம் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்,
இயக்கர் மங்கையர், யாவரும் ஈண்டினார்,
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான். 166
தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்,
இழைந்த நூலினும், இன் இளங்காலினும்,
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்-
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான். 167
இராவணனுக்கு உரிய இயக்க மாதர்களின் நிலைமை
அத்திரம் புரை யானை அரக்கன்மேல்
வைத்த சிந்தையர், வாங்கும் உயிர்ப்பிலர்,
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற,
சித்திரங்கள் என, இருந்தார் சிலர். 168
அள்ளல் வெஞ் சர மாரனை அஞ்சியோ?
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ?
கள்ளம் என்கொல்? அறிந்திலம் - கண் முகிழ்த்து,
உள்ளம் இன்றி, உறங்குகின்றார் சிலர். 169
பழுது இல் மன்மதன் எய் கணை பல் முறை
உழுத கொங்கையர், ஊசல் உயிர்ப்பினர்,
அழுது செய்வது என்? ஆணை அரக்கனை
எழுதலாம்கொல்? என்று, எண்ணுகின்றார் சிலர். 170
ஆவது ஒன்று அருளாய்; எனது ஆவியைக்
கூவுகின்றிலை; கூறலை சென்று எனா,
பாவை பேசுவதுபோல், கண் பனிப்பு உற,
பூவையோடும் புலம்புகின்றார் சிலர். 171
ஈரத் தென்றல் இழுக மெலிந்து, தம்
பாரக் கொங்கையைப் பார்த்தனர்; பாதகன்
வீரத் தோள்களின் வீக்கம் நினைந்து, உயிர்
சோரச் சோரத் துளங்குகின்றார் சிலர். 172
நக்க செம் மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில், பல் பகல்
ஒக்க ஆசை உலக்க உலந்தவர்,
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர். 173
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
நாளினால், செவியில் புகும் நாம யாழ்த்
தேளினால், திகைப்பு எய்துகின்றார் சிலர். 174
கவ்வு தீக் கணை, மேருவைக் கால் வளைத்து,
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து, தம் மா முலை வவ்விய
செவ்வி கண்டு, குலாவுகின்றார் சிலர். 175
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
ஆவினான் புகழ், அம் கை நரம்பினால்
நாடி, நால் பெரும் பண்ணும் நயப்பு உறப்
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர். 176
இராவணனின் உரிமை மகளிராம் அரக்கியரின் நிலைமை
இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய்,
அனையவன் குலத்து ஆயிழையார் இடம்
நினைவின் எய்தினன் - நீதியின் எய்தினான். 177
எரி சுடர் மணியின் செங் கேழ் இள வெயில் இடைவிடாது
விரி இருள் பருகி, நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து,
அரிவையர் குழுவும் நீங்க, ஆசையும் தாமுமே ஆய்,
ஒரு சிறை இருந்து, போன உள்ளத்தோடு ஊடுவாரும். 178
நகை எரிக் கற்றை நெற்றி நாவி தோய்ந்தனைய ஓதி,
புகை எனத் தும்பி சுற்ற, புது மலர்ப் பொங்கு சேக்கை
பகை என ஏகி, யாணர்ப் பளிங்குடைச் சீதப் பள்ளி,
மிகை ஒடுங்காத காம விம்மலின், வெதும்புவாரும். 179
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக,
குவியும் மீன் ஆரம் ஆக, மின் கொடி மருங்குல் ஆக,
கவிர் ஒளிச் செக்கர் கற்றை ஓதியா, மழை உண் கண்ணா,
அவிர் மதி நெற்றி, ஆக, அந்தி வான் ஒக்கின்றாரும். 180
பானல் உண் கண்ணும் வண்ணப் படி முறை மாற, பண்ணைச்
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர,
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி,
வான மீன் கையின் வாரி, மணிக் கழங்கு ஆடுவாரும். 181
உழை உழைப் பரந்த வான யாற்றுநின்று, உம்பர் நாட்டுக்
குழை முகத்து ஆயம், தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி,
இழை தொடுத்து இலங்கும் மாடத்து, இடை தடுமாற ஏறி,
மழை பொதுத்து, ஒழுகு நீரால், மஞ்சனம் ஆடுவாரும். 182
பன்னக அரசர் செங் கேழ்ப் பணா மணி வலிதின் பற்றி,
இன் உயிர்க் கணவன் ஈந்தான்; ஆம் என, இருத்தி, விஞ்சை
மன்னவர் முடியும், பூணும், மாலையும், பணையம் ஆக,
பொன் அணி பலகைச் சூது, துயில்கிலர் பொருகின்றாரும். 183
தென் நகு குடம், உள்-பாடல், சித்தியர் இசைப்ப, தீம் சொல்
பன்னக மகளிர் வள் வார்த் தண்ணுமைப் பாணி பேண,
பொன்னகர்த் தரளப் பந்தர், கற்பகப் பொதும்பர், பொன்-தோள்
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் 184
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட, அருவி உண் கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர், செய்வது ஓரார்,
வீணையும், குழலும், தம்தம் மிடறும், வேற்றுமையின் தீர்ந்த,
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உகப் பாடுவாரும். 185
தண்டலை வாழை அன்ன குறங்கிடை, அல்குல் தட்டில்,
கொண்ட பூந் துகிலும், கோவைக் கலைகளும், சோர, கூர்ங் கள்
உண்டு அலமந்த கண்ணார், ஊசலிட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீச, குரவையில் குழறுவாரும். 186
நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி,
பிச்சரின் பிதற்றி, அல்குல் பூந் துகில் கலாபம் பீறி,
குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள, குழுக் கொண்டு ஈண்டி,
சச்சரிப் பாணி கொட்டி, நிறை தடுமாறுவாரும். 187
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற, அறிவு தள்ளி,
பயிர் உற, தெய்வம் என் மேல் படிந்தது; பார்மின்! என்னா,
உயிர் உயிர்த்து, இரண்டு கையும் உச்சிமேல் உயர் நீட்டி,
மயிர் சிலிர்த்து, உடலம் கூசி, வாய் விரித்து ஒடுங்குவாரும். 188
இத் திறத்து அரக்கிமார்கள் ஈர்-இரு கோடி ஈட்டம்
பத்தியர் உறையும், பத்திப் படர் நெடுந் தெருவும் பார்த்தான்;
சித்தியர் உறையும் மாடத் தெருவும் பின்னாகச் சென்றான்;
உத் திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான். 189
விஞ்சை மகளிரின் நிலை
வளர்ந்த காதலர், மகரிகை நெடு முடிஅரக்கனை வரக் காணார்,
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட, உயிரொடு தடுமாறி,
களம் தவா நெடுங் கருவியில், கைகளில், செயிரியர், கலைக் கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக, அலமரலுறுகின்றார். 190
புரியும் நல் நெறி முனிவரும், புலவரும், புகல் இலாப் பொறைகூர,
எரியும் வெஞ் சினத்து இகல் அடு கொடுந் திறல் இராவணற்கு, எஞ் ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு, பனித் திங்கள்
சொரியும் வெங் கதிர் துணை முலைக் குவை சுட, கொடிகளின் துடிக்கின்றார். 191
சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை, திரிந்து சிந்தனை சிந்த,
முறுகு காதலின் வேதனை உழப்பவர், முயங்கிய முலை முன்றில்
இறுகு சாந்தமும், எழுதிய குறிகளும், இன் உயிர்ப் பொறை ஈர,
மறுகு வாட் கண்கள் சிவப்புற நோக்கினர்; வயிர்த்தனர்; உயிர்க்கின்றார். 192
அனுமன் மண்டோ தரியைக் கண்டு, சீதையோ என ஐயுற்று, தெளிதல்
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு-இரண்டு அமை கோடித்
தூய மாளிகை நெடுந் தெருத் துருவிப் போய், தொலைவு இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெருங் கோயிலை நண்ணுவான், கண்டனன், நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம். 193
கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாவினன், காரணம் கடை நின்றது;
உண்டு வேறு ஒரு சிறப்பு; எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளைக்
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்? குல மணி மனைக்கு எல்லாம்
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது! என, வியப்புற்றான். 194
அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, ஆதியர், மலர்க் காமன்
சரம் பெய் தூணிபோல் தளிர் அடி தாம் தொட, சாமரை பணிமாற,
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர், காமரம் கனி யாழின்
நரம்பின் இன் இசை செவி புக, நாசியில் கற்பக விரை நாற,- 195
விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும், கீழ்மையர் வெகுள்வுற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது?என்று ஐயுறு பீழையால்,பெருந்தென்றல்,
உழையர் கூவ, புக்கு, ஏகு என, பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும்-
பழையம் யாம் என, பண்பு அல செய்வரோ பருணிதர், பயன் ஓர்வார்? 196
இன்ன தன்மையின், எரி மணி விளக்கங்கள் எழில் கெடப் பொலிகின்ற
தன்னது இன் ஒளி தழைப்புறத் துயில்வுறு தையலை, தகைவு இல்லான்,
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து, அகத்து எழு வெந் தீ,
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து, இவை சொன்னான்:
197
எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க;
அற்பு வான் தளை இற் பிறப்புஅதனொடும் இகந்து தன் அருந் தெய்வக்
கற்பு நீங்கிய கனங் குழை இவள் எனின், காகுத்தன் புகழோடும்
பொற்பும் யானும்,இவ் இலங்கையும் அரக்கரும்,பொன்றுதும் இன்றுஎன்றான்.
198
மானுயர்த் திரு வடிவினள் அவள்; இவள் மாறு கொண்டனள்; கூறின்,
தான் இயக்கியோ? தானவர் தையலோ? ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ? நினைந்தது மிகை என்றான். 199
இலக்கணங்களும் சில உள என்னினும், எல்லை சென்று உறுகில்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று, எடுத்து அறைகுவது, இவள் யாக்கை;
மலர்க் கருங் குழல் சோர்ந்து, வாய் வெரீஇ, சில மாற்றங்கள் பறைகின்றாள்;
உலக்கும் இங்கு இவள் கணவனும்; அழிவும், இவ்வியன் நகர்க்கு உளது! என்றான்.
200
இராவணன் மனையுள் அனுமன் புகுதலும், தீக்குறி காணலும்
என்று உணர்ந்துநின்று ஏமுறும் நிலையினில், நிற்க இத் திறன் என்னா,
பின்று சிந்தையன் பெயர்ந்தனன்; அம் மனை பிற்பட, பெரு மேருக்
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகைதன்னில்
சென்று புக்கனன், இராவணன் எடுப்பு அருங் கிரி எனத் திரள் தோளான். 201
நிலம் துடித்தன; நெடு வரை துடித்தன; நிருதர்தம் குல மாதர்
பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,
வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்
கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள். 202
புக்கு நின்று, தன் புலன் கொள நோக்கினன்; பொரு அருந் திரு உள்ளம்
நெக்கு நின்றனன்; நீங்கும், அந்தோ இந்த நெடு நகர்த் திரு! என்னா,
எக் குலங்களின் யாவரே ஆயினும், இரு வினை எல்லோர்க்கும்
ஒக்கும்; ஊழ் முறை அல்லது, வலியது ஒன்று இல் என, உணர்வுற்றான். 203
துயிலும் இராவணனைக் கண்ட அனுமன் சினந்து அவனைக் கொல்ல
நினைத்தல்
நூல்-பெருங்கடல் நுணங்கிய கேள்வியன், நோக்கினன்; மறம் கூரும்
வேல்-பெருங்கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில்,
பால்-பெருங்கடல் பல் மணிப் பல் தலைப் பாப்புடைப் படர் வேலை
மால்-பெருங்கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன், துயில்வானை- 204
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட, இரவு எனும் பெயர் வீய,
முழை கொள் மேருவின் முகட்டிடைக் கனகனை முருக்கிய முரண் சீயம்,
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி,முன்,துயில்வது ஓர் தகையானை-205
ஆய பொன்-தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று
தூய வெண் கவரித் திரள் இயக்கிட, சுழி படு பசுங் காற்றின்,
மீய கற்பகத் தேன்துளி விராயன வீழ்தொறும், நெடு மேனி
தீய, நல் தொடிச் சீதையை நினைதொறும் உயிர்த்து, உயிர் தேய்வானை- 206
குழந்தை வெண் மதிக் குடுமியின் நெடு வரை குலுக்கிய குலத் தோளைக்
கழிந்து புக்கு, இடை கரந்தன, அனங்கன் வெங்கடுங் கணை பல பாய,
உழந்த வெஞ் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற
பழந் தழும்பினுக்கு இடை இடையே, சில பசும் புண்கள் அசும்பு ஊற, 207
சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு தண் தமிழ்ப் பசுந் தென்றல்,
ஏந்து காம வெங் கனல் உயிர்த்து, இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற,
காந்தள் மெல் விரல் சனகிமேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட,
பாந்தள் நீங்கிய முழை என, குழைவுறு நெஞ்சு பாழ்பட்டானை- 208
கொண்ட பேர் ஊக்கம் மூள, திசைதொறும் குறித்து மேல்நாள்
மண்டிய செருவில், மானத் தோள்களால் வாரி வாரி
உண்டது தெவிட்டி, பேழ் வாய்க் கடைகள்தோறு ஒழுகிப் பாயும்
அண்டர் தம் புகழின் தோன்றும், வெள் எயிற்று அமைதியானை- 209
வெள்ளி வெண் சேக்கை வெந்து, பொறி எழ, வெதும்பும் மேனி
புள்ளி வெண் மொக்குள் என்னப் பொடித்து வேர் கொதித்துப் பொங்க,
கள் அவிழ் மாலைத் தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப,
ஒள்ளிய மாலை தீய, உயிர்க்கின்ற உயிர்ப்பினானை- 210
தே இயல் நேமியானின், சிந்தை மெய்த் திருவின் ஏக,
பூ இயல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவானை,
காவி அம் கண்ணிதன்பால் கண்ணிய காதல் நீரின்,
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை- 211
மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை,
நகும் தகை முகத்தன், காதல் நடுக்குறு மனத்தன், வார் தேன்
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே
புகுந்தனள் அன்றோ? என்று, மயிர் புறம் பொடிக்கின்றானை- 212
மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூறுமேனும்,
குன்று ஒழித்து ஒரு மாக் குன்றின் அரிதின் சேர் கொள்கை போல,
வன் தொழில் கொற்றப் பொன்-தோள் மணந்து, அரு மயிலே அன்னார்,
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக, அரிய தோள் ஒழுக்கினானை- 213
தழுவா நின்ற கருங் கடல்மீது உதயகிரியில் சுடர் தயங்க
எழுவான் என்ன, மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய்,
முழு வானவர்ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர்
மழு வாள், நேமி, குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை- 214
தோடு உழுத தார் வண்டும், திசை யானை மதம் துதைந்த வண்டும், சுற்றி,
மாடு உழுத நறுங் கலவை வயக் களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள,
கோடு உழுத மார்பானை, கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி,
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை- 215
கண்டனன்; காண்டலோடும், கருத்தின் முன் காலச் செந் தீ
விண்டன கண்கள்; கீண்டு வெடித்தன, கீழும் மேலும்;-
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான்-
திண் தலை பத்தும், தோள்கள் இருபதும், தெரிய நோக்கி. 216
தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என்
தாள் ஆற்றலால் இடித்து, தலை பத்தும் தகர்த்து, இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய், முடியேனே! 217
நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான்? நன்னுதலைப்
பிடித்து, வாழ் அரக்கனார், யான் கண்டும் பிழைப்பாரோ?
ஒடித்து வான் தோள் அனைத்தும், தலை பத்தும் உதைத்து உருட்டி,
முடித்து, இவ் ஊர் முடித்தால், மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக! 218
ஆய்ந்து பார்த்து, அனுமன் கோபம் தணிதல்
என்று, ஊக்கி, எயிறு கடித்து, இரு கரனும் பிசைந்து, எழுந்து,
நின்று, ஊக்கி உணர்ந்து உரைப்பான், நேமியோன் பணி அன்றால்;
ஒன்று ஊக்கி, ஒன்றுஇழைத்தல், உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால்;
பின் தூக்கின், இது சாலப் பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான். 219
ஆலம் பார்த்து உண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர்எனினும்,
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ?-
மூலம் பார்க்குறின், உலகை முற்றுவிக்கும் முறை தெரினும்,
காலம் பார்த்து, இறை வேலை கடவாத கடல் ஒத்தான். 220
இற்றைப் போர்ப் பெருஞ் சீற்றம் என்னோடும் முடிந்திடுக;
கற்றைப் பூங் குழலாளைச் சிறை வைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது, ஒரு குரங்கு என்றால், முனை வீரன்
கொற்றப் போர்ச் சிலைத் தொழிற்குக் குறை உண்டாம் என, குறைந்தான். 221
அந் நிலையான், பெயர்த்த் உரைப்பான்; ஆய் வளைக் கை அணிஇழையார்
இந் நிலையானுடன் துயில்வார் உளர்அல்லர்; இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை; பூவை
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்! 222
சீதையைக் காணாமையால் இலங்கையை அழித்து, தானும் மாள அனுமன்
எண்ணுதல்
என்று எண்ணி, ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா,
குன்று அன்ன தோளவன்தன் கோமனை பிற்பட, பெயர்ந்தான்;
நின்று எண்ணி உன்னுவான், அந்தோ! இந் நெடு நகரில்
பொன் துன்னும் மணிப் பூணாள் இலள் என்ன, பொருமுவான். 223
கொன்றானோ கற்பு அழியாக் குல மகளை? கொடுந் தொழிலால்
தின்றானோ? எப் புறத்தே செறிந்தானோ, சிறை? சிறியேன்
ஒன்றானும் உணரகிலேன்; மீண்டு, இனிப் போய் என் உரைக்கேன்?
பொன்றாத பொழுது, எனக்கு, இக் கொடுந் துயரம் போகாதால். 224
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன்; கவிகுலக் கோன்,
கொண்டு வரும் என்று இருக்கும்; யான் இழைத்த கோள் இது வால்;
புண்டரிக நயனத்தான்பால், இனி, யான் போவேனோ?
விண்டவரோடு உடன் வீயாது, யான் வாளா விளிவேனோ? 225
கண்ணிய நாள் கழிந்துளவால்; கண்டிலமால் கனங்குழையை;
விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி, விரைந்த யான்
எண்ணியது முடிக்ககிலேன்; இனி முடியாது இருப்பேனோ?
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழைநின்றும் போயதால். 226
ஏழு நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இவ் இலங்கை
வாழும் மா மன் உயிர், யான் காணாத மற்று இல்லை;
ஊழியான் பெருந் தேவி ஒருத்தியுமே யான் காணேன்;
ஆழி தாய், இடர்-ஆழியிடையே வீழ்ந்து, அழிவேனோ? 227
வல் அரக்கன்தனைப் பற்றி, வாயாறு குருதி உக,
கல் அரக்கும் கரதலத்தால், காட்டு என்று காண்கேனோ?
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும், இவ் ஊரும்,
மெல் அரக்கின் உருகி உக, வெந் தழலால் வேய்கேனோ? 228
வானவரே முதலோரை வினவுவெனேல், வல் அரக்கன்-
தான் ஒருவன் உளன் ஆக, உரைசெய்யும் தருக்கு இலரால்,
ஏனையர்கள் எங்கு உரைப்பார்? எவ்வண்ணம் தெரிகேனோ?
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன்? 229
எருவைக்கு முதல் ஆய சம்பாதி, இலங்கையில், அத்
திருவைக் கண்டனென் என்றான்; அவன் உரையும் சிதைந்ததால்;
கரு வைக்கும் நெடு நகரைக் கடலிடையே கரையாதே,
உருவைக் கொண்டு, இன்னமும் நான், உளென் ஆகி உழல்கேனோ? 230
வடித்து ஆய் பூங் குழலாளை, வான் அறிய, மண் அறிய,
பிடித்தான் இவ் அடல் அரக்கன் எனும் மாற்றம், பிழையாதால்;
எடுத்து ஆழி இலங்கையினை இருங் கடல் இட்டு, இன்று, இவனை
முடித்தாலே, யான் முடிதல் முறை மன்ற! என்று உணர்வான். 231
தேடி அலைந்த அனுமன் ஒரு சோலையைக் காணல்
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய், தன்
உள் உறையும் ஒருவனைப்போல், எம் மருங்கும் உலாவுவான்;
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான்,
கள் உறையும் மலர்ச் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான். 232
மிகைப் பாடல்கள்
அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று, அகல் வான்
கண்ட, அத் தனிக் கடி நகர் நெடு மனை; கதிர்கட்கு
உண்டு, அ(வ்) ஆற்றல் என்று உரைப்பு அரிது! ஒப்பிடின், தம் முன்
விண்ட வாய்ச் சிறு மின்மின் என்னவும் விளங்கா. 15-1
வானும் நிலனும் பெறுமாறு, இனி, மற்றும் உண்டோ -
கானும், பொழிலும், இவை செங் கனகத்தினாலும்,
ஏனைம் மணியாலும் இயற்றியவேனும், யாவும்
தேனும், மலரும், கனியும், தரச் செய்த செய்கை? 17-1
ஊறு மிகவே உறினும், யானும் அமர் தேரேன்,
தேறல் இல் அரக்கர் புரி தீமைஅது தீர்வுற்று,
ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால்,
மாறும் மதி வேறு பிறிது இல் என மதித்தான். 71-1
கண்ட வனப்பான், மேனி கரக்கும் கருமத்தான்,
கொண்டல் செறிப்பான், வானரம் என்றும் கொளல் அன்றே;
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும்;
சண்டை கொடுத்தும் கொள்வன் எனத் தான் சலம் உற்றாள். 84-1
ஆயவன் அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள், முன்நாள்
மாய மா நகரம் தன்னை வகுத்து, அயன் என்னும் மேலாம்
தூயவன் என்னை நோக்கி, சுந்தரி! காப்பாய் என்று, ஆங்கு,
ஏயினன், இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற, 91-1
இத் திறம் அனந்த கோடி இராக்கதக் குழுவின் உள்ளார்
தத்தம செய்கை எல்லாம் தனித் தனி நோக்கி, தாங்காது,
எத் திறம் இவர்தம் சீரை எண்ணுவது? எனவே, அண்ணல்
உத்தமன் தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான். 118-1
கிடந்தனன், வடவரை கிடந்தபோல்; இரு
தடம் புயம் திசைகளை அளக்கத் தாங்கிய
உடம்பு உறு முயற்சியின் உறங்கினான், கடை
இடம் பெறு தீவினை யாவும் ஏத்தவே. 121-1
குடம் தரும் செவிகளும், குன்றம் நாணுறத்
தடந் தரு கரங்களும், தாளும், தாங்குறாக்
கிடந்தது ஓர் இருள் எனக் கிடந்துளான்தனை
அடைந்தனன், அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான். 127-1
சுந்தர காண்டம்
3. காட்சிப் படலம்
அசோகவனத்துள் அனுமன் புகுதல்
மாடு நின்ற அம் மணி மலர்ச் சோலையை மருவி,
தேடி, இவ் வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;
வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி. 1
என்று, சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார்;
அன்று, அ(வ்)வாள் அரக்கன் சிறை அவ் வழி வைத்த-
துன்று அல் ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான் துணிந்தாம். 2
சீதையின் துயர நிலை
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு இருந்தாள்;
கல் மருங்கு, எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
நல் மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,
மென் மருங்குல்போல், வேறு உள அங்கமும் மெலிந்தாள். 3
துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்;
வெயிலிடைத் தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்;
மயில் இயல், குயில் மழலையாள், மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலிக் குழாத்து அகப்பட்டதன்னாள். 4
விழுதல், விம்முதல், மெய்உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழத்து உயிர்த்தல்,
அழுதல், அன்றி, மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள். 5
தழைத்த பொன் முலைத் தடம் கடந்து, அருவி போய்த் தாழப்
புழைத்த போல, நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால்,
இழைக்கும், நுண்ணிய மருங்குலாள், இணை நெடுங் கண்கள்,
மழைக்கண் என்பது காரணக் குறி என வகுத்தாள். 6
அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம்
கரிய காண்டலும், கண்ணின் நீர் கடல் புகக் கலுழ்வாள்;
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவு கொண்டாலன்ன பிணியாள். 7
துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
ஒப்பினாள் தனை நினைதொறும், நெடுங் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அருந் துயர் உயிர்ப்புடை யாக்கை
வெப்பினால் புலர்ந்து, ஒரு நிலை உறாத மென் துகிலாள். 8
அரிது-போகவோ, விதி வலி கடத்தல்! என்று அஞ்சி,
பரிதிவானவன் குலத்தையும், பழியையும், பாரா,
சுருதி நாயகன், வரும் வரும் என்பது ஓர் துணிவால்
கருதி, மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள். 9
கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உறக் கவ்வி,
சுமமயுடைக் கற்றை, நிலத்திடைக் கிடந்த தூ மதியை
அமைய வாயில் பெய்து, உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின்,
குமையுறத் திரண்டு, ஒரு சடை ஆகிய குழலாள். 10
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்;
தூவி அன்னம் மென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்;
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள். 11
கொல்லாது கொல்லும் நினைவுகள்
கண்டிலன் கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர்? உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம்? எனக் குழையா,
புண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள். 12
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன்; மற்று உளரோ,
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள்? இப் பிறப்பில்
காண்டலோ அரிது என்று, என்று, விம்முறும்; கலங்கும்;
மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தாலென, மெலிவாள். 13
என்னை, நாயகன், இளவலை, எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு, அறிவு இலள் எனத் துறந்தானோ?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ? என்று, என்று, முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து, ஆர் உயிர் பதைப்பாள். 14
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்? என்று அழுங்கும்;
விருந்து கண்டபோது என் உறுமோ? என்று விம்மும்;
மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு? என்று மயங்கும்-
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள். 15
வன்கண் வஞ்சனை அரக்கர், இத்துணைப் பகல் வையார்;
தின்பர்; என் இனிச் செயத்தக்கது? என்று, தீர்ந்தானோ?
தன் குலப் பொறை தன் பொறை எனத் தணிந்தானோ?
என்கொல் எண்ணுவேன்? என்னும்-அங்கு, இராப் பகல் இல்லாள். 16
பெற்ற தாயரும், தம்பியும், பெயர்த்தும் வந்து எய்தி,
கொற்ற மா நகர்க் கொண்டு இறந்தார்களோ? குறித்துச்
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி, அந் நகர் துன்னான்,
உற்றது உண்டு எனா, படர் உழந்து, உறாதன உறுவாள். 17
முரன் எனத் தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர்போல்,
வரனும், மாயமும், வஞ்சமும், வரம்பு இல வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம்? எனப் பொருமா,
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் எனக் கவல்வாள். 18
இராமனைப் பற்றிய பழைய நினைவுகள்
தெவ் மடங்கிய சேண் நிலம்-கேகயர்-
தம் மடந்தை-உன் தம்பியது ஆம் என,
மும் மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம் மடங்கலை உன்னி, வெதும்புவாள். 19
மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்,
இந் திருத் துறந்து ஏகு என்ற போதினும்,
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். 20
தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
வாங்கு கோல வடவரை வார் சிலை,
ஏங்கு மாத்திரத்து, இற்று இரண்டாய் விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள். 21
இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய
பல் நலம் பதினாயிரம் படை,
கன்னல் மூன்றில், களப் பட, கால் வளை
வில் நலம் புகழ்ந்து, ஏங்கி வெதும்புவாள். 22
ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள். 23
மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
கைத்தலங்களை, கைகளின் நீக்கி, வேறு
உய்த்த போது, தருப்பையில் ஒண் பதம்
வைத்த வேதிகைச் செய்தி மனக்கொள்வாள். 24
உரம் கொள் தே மலர்ச் சென்னி, உரிமை சால்
வரம் கொள் பொன் முடி, தம்பி வனைந்திலன்,
திரங்கு செஞ் சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி, இரங்குவாள். 25
பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்,
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து, அவன்
கருத்தின் ஆசைக் கரை இன்மை கண்டு, இறை
சிரித்த செய்கை நினைந்து, அழு செய்கையாள். 26
மழுவின் வானினன், மன்னரை மூ-எழு
பொழுதில் நூறி, புலவு உறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரி வில்
தழுவும் மேன்மை நினைந்து, உயிர் சாம்புவாள். 27
ஏக வாளி அவ் இந்திரன் காதல் மேல்
போக ஏவி, அது கண் பொடித்த நாள்,
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய
வேக வென்றியைத் தன் தலைமேல் கொள்வாள். 28
வெவ் விராதனை மேவு அருந் தீவினை
வவ்வி, மாற்ற அருஞ் சாபமும் மாற்றிய
அவ் இராமனை உன்னி, தன் ஆர் உயிர்
செவ்விராது, உணர்வு ஓய்ந்து, உடல் தேம்புவாள்,- 29
திரிசடை தவிர பிற காவல் அரக்கியர் துயில் கொள்ளுதல்
இருந்தனள்; திரிசடை என்னும் இன் சொலின்
திருந்தினாள் ஒழிய, மற்று இருந்த தீவினை
அருந் திறல் அரக்கியர், அல்லும் நள் உறப்
பொருந்தலும், துயில் நறைக் களி பொருந்தினார். 30
சீதை நல் நிமித்தம் பற்றி திரிசடையிடம் கூறல்
ஆயிடை, திரிசடை என்னும், அன்பினால்
தாயினும் இனியவள்தன்னை நோக்கினாள்,
தூய நீ கேட்டி, என் துணைவி ஆம் எனா,
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள்; 31
நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச்
சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?-
பொலந் துடி மருங்குலாய்!-புருவம், கண், முதல்
வலம் துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன். 32
முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,
துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,
இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்
நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய். 33
மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்:
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்,
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்
துறந்து, கான் புகுந்த நாள், வலம் துடித்ததே. 34
நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள், வலம் துடித்த; வாய்மையால்
எஞ்சல; ஈண்டு தாம் இடம் துடிக்குமால்;
அஞ்சல் என்று இரங்குவாய்! அடுப்பது யாது? என்றாள். 35
திரிசடை நற்குறிப் பயன் உரைத்தல்
என்றலும், திரிசடை, இயைந்த சோபனம்!
நன்று இது! நன்று! எனா, நயந்த சிந்தையாள்,
உன் துணைக் கணவனை உறுதல் உண்மையால்;
அன்றியும், கேட்டி என்று, அறைதல் மேயினாள்: 36
உன் நிறம் பசப்பு அற, உயிர் உயிர்ப்புற,
இன் நிறத் தேன் இசை, இனிய நண்பினால்,-
மின் நிற மருங்குலாய்! - செவியில், மெல்லென,
பொன் நிறத் தும்பி வந்து, ஊதிப் போயதால். 37
ஆயது தேரின், உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்;
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம்; என்
வாயது கேள் என, மறித்தும் கூறுவாள்: 38
துயில்இலை ஆதலின், கனவு தோன்றல;
அயில்விழி! அனைய கண் அமைந்து நோக்கினேன்;
பயில்வன பழுது இல; பழுதின் நாடு என;
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்; 39
எண்ணெய் பொன் முடிதொறும் இழுகி, ஈறு இலாத்
திண் நெடுங் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்,
அண்ணல் அவ் இராவணன், அரத்த ஆடையன்,
நண்ணினன், தென்புலம்-நவை இல் கற்பினாய்! 40
மக்களும், சுற்றமும், மற்றுளோர்களும்,
புக்கனர் அப் புலம்; போந்தது இல்லையால்;
சிக்கு அற நோக்கினென்; தீய, இன்னமும்
மிக்கன, கேட்க என, விளம்பல் மேயினாள்: 41
ஆண் தகை இராவணன் வளர்க்கும் அவ் அனல்
ஈண்டில; பிறந்தவால், இனம் கொள் செஞ் சிதல்;
தூண்ட அரு மணி விளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால், வான ஏறு எறிய, கீழை நாள். 42
பிடி மதம் பிறந்தன; பிறங்கு பேரியும்,
இடி என முழங்குமால், இரட்டல் இன்றியே;
தடியுடை முகிற்குலம் இன்றி, தா இல் வான்
வெடிபட அதிருமால்; உதிரும், மீன் எலாம். 43
வில்-பகல் இன்றியே, இரவு விண்டு அற,
எல் பகல் எறித்துளது என்னத் தோன்றுமால்:
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும் புலவு காலுமால். 44
திரியுமால், இலங்கையும் மதிலும்; திக்கு எலாம்
எரியுமால்; கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியுமால்; மங்கல கலசம் சிந்தின
விரியுமால்; விளக்கினை விழுங்குமால், இருள். 45
தோரணம் முறியுமால், துளங்கி; சூழி மால்
வாரணம் முறியுமால், வலத்த வாள் மருப்பு;
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறலின் பொங்குமால். 46
விண் தொடர் மதியினைப் பிளந்து, மீன் எழும்;
புண் தொடர் குருதியின் பொழியுமால் மழை;
தண்டொடு, திகிரி, வாள், தனு, என்று இன்னன,
மண்டு அமர் புரியுமால், ஆழி மாறு உற. 47
மங்கையர் மங்கலத் தாலி, மற்றையோர்
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே,
கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால்,
இங்கு, இதின் அற்புதம், இன்னும் கேட்டியால்: 48
மன்னவன் தேவி, அம் மயன் மடந்தைதன்
பின் அவிழ் ஓதியும், பிறங்கி வீழ்ந்தன;
துன் அருஞ் சுடர் சுடச் சுறுக்கொண்டு ஏறிற்றால்;
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே. 49
என்றனள் இயம்பி, வேறு இன்னும் கேட்டியால்,
இன்று, இவண், இப்பொழுது, இயைந்தது ஓர் கனா:
வன் துணைக் கோள்அரி இரண்டு மாறு இலாக்
குன்றிடை உழுவைஅம் குழுக் கொண்டு ஈண்டியே. 50
வரம்பு இலா மத கரி உறையும் அவ் வனம்
நிரம்புற வளைந்தன; நெருக்கி நேர்ந்தன;
வரம்பு அறு பிணம்படக் கொன்ற; மாறு இலாப்
புரம் புக இருந்தது ஓர் மயிலும், போயதால். 51
ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி, செய்யவள்,
நாயகன் திருமனைநின்று, நண்ணுதல்
மேயினள், வீடணன் கோயில்;-மென் சொலாய்! 52
பொன் மனை புக்க அப் பொரு இல் போதினில்,
என்னை நீ உணர்த்தினை; முடிந்தது இல் என,
அன்னையே! அதன் குறை காண் என்று, ஆயிழை,
இன்னமும் துயில்க என, இரு கை கூப்பினாள். 53
சீதையின் இருக்கையை அனுமன் காணுதல்
இவ் இடை, அண்ணல் அவ் இராமன் ஏவிய
வெவ் விடை அனைய போர் வீரத் தூதனும்,
அவ் இடை எய்தினன், அரிதின் நோக்குவான்,
நொவ் இடை மடந்தைதன் இருக்கை நோக்கினான். 54
அரக்கியர் துயிலுணர்ந்து சீதையைச் சுற்றி நிற்றல்
அவ் வயின் அரக்கியர் அறிவுற்று, அம்மவோ!
செவ்வை இல் துயில் நமைச் செகுத்தது ஈது! எனா,
எவ் வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார்-
வெவ் அயில், மழு, எழு, சூல வெங் கையார். 55
எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர்,
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர்,
பெண் எனப் பெயர் கொடு திரியும் பெற்றியர்,
துண்ணெனத் துயில் உணர்ந்து, எழுந்து சுற்றினார். 56
சீதை தேம்புதலும், மரத்தின்மேலிருந்து அனுமன் காணுதலும்
ஆயிடை, உரை அவிந்து, அழகன் தேவியும்,
நீ அனையவர் முகம் நோக்கித் தேம்பினாள்;
நாயகன் தூதனும், விரைவில் நண்ணினான்,
ஓய்விலன், உயர் மரப் பனையின் உம்பரான். 57
அரக்கியர்; அயில் முதல் ஏந்தும் அங்கையர்;
நெருக்கிய குழுவினர்; துயிலும் நீங்கினர்;
இருக்குநர் பலர்; இதற்கு ஏது என்? எனா,
பொருக்கென அவரிடைப் பொருந்த நோக்கினான். 58
விரி மழைக் குலம் கிழித்து ஒளிரும் மின் என,
கரு நிறத்து அரக்கியர் குழுவில், கண்டனன்-
குரு நிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை. 59
கடக்க அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள்,
மடக் கொடிச் சீதையாம் மாதரேகொலாம்?
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர்ப் பெருந்
தடத்திடை இருந்தது ஓர் அன்னத் தன்மையாள். 60
அரக்கியர் நடுவில் இருப்பவள் சீதைதான் என அனுமன் அறிதல்
எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்,
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில,
கள்ள வாள் அரக்கன் அக் கமலக் கண்ணனார்
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா! 61
மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்;
ஆவதே; ஐயம் இல்; அரவின் நீங்கிய
தேவனே அவன்; இவள் கமலச்செல்வியே. 62
அனுமனின் குதூகலம்
வீடினதுஅன்று அறன்; யானும் வீகலேன்;
தேடினென் கண்டனென்; தேவியே! எனா,-
ஆடினன்; பாடினன்; ஆண்டும் ஈண்டும் பாய்ந்து,
ஓடினன்; உலாவினன்;-உவகைத் தேன் உண்டான். 63
சீதையின் தூய்மை கண்டு அனுமன் வியத்தல்
மாசுண்ட மணி அனாள், வயங்கு வெங் கதிர்த்
தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்;
காசுண்ட கூந்தலாள் கற்பும், காதலும்
ஏசுண்டது இல்லையால்; அறத்துக்கு ஈறு உண்டோ ? 64
புனை கழல் இராகவன் பொன் புயத்தையோ?
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும்
சனகர்தம் குலத்தையோ? யாதைச் சாற்றுகேன்? 65
தேவரும் பிழைத்திலர்; தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர்; அறமும் ஈறு இன்றால்;
யாவது இங்கு இனிச் செயல் அரியது, எம்பிராற்கு?
ஆவ! என் அடிமையும் பிழைப்பு இன்றாம்அரோ. 66
கேழ் இலாள் நிறை இறை கீண்டதாம் எனின்,
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள,
ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன்;
வாழிய உலகு, இனி வரம்பு இல் நாள் எலாம்! 67
வெங் கனல் முழுகியும், புனலுள் வீக்கியும்,
நுங்குவ, அருந்துவ, நீக்கி, நோற்பவர்
எங்கு உளர்?-குலத்தில் வந்து, இல்லின் மாண்புடை
நங்கையர் மனத் தவம் நவிலற்பாலதோ? 68
பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மைபோல்
நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால்;
மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றில, அவன் கமலக் கண்களே! 69
முனிபவர் அரக்கியர், முறையின் நீங்கினார்;
இனியவள்தான் அலாது, யாரும் இல்லையால்;
தனிமையும், பெண்மையும், தவமும், இன்னதே!-
வனிதையர்க்கு ஆக, நல் அறத்தின் மாண்பு எலாம்! 70
தருமமே காத்ததோ? சனகன் நல் வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ? 71
செல்வமோ அது? அவர் தீமையோ இது?
அல்லினும் பகலினும் அமரர் ஆட் செய்வார்,
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது? உறுகண் யாது இனி?
வெல்லுமோ தீவினை, அறத்தை மெய்ம்மையால்? 72
இராவணன் அங்கே தோன்றுதல்
என்று, இவை இனையன எண்ணி, வண்ண வான்
பொன் திணி நெடு மரப் பொதும்பர் புக்கு, அவண்
நின்றனன்; அவ் வழி நிகழ்ந்தது என் எனின்,
துன்று பூஞ் சோலைவாய் அரக்கன் தோன்றினான். 73
இராவணனின் பெருமிதத் தோற்றம்
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழித் திரண்டன சிவண,
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க,
சகர நீர் வேலை தழுவிய கதிரின், தலைதொறும் தலைதொறும் தயங்கும்
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப, கங்குலும் பகல்பட, வந்தான். 74
உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர, மேனகை வெள்ளடை உதவ,
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர் குழாம் புடை சுற்ற,
கருப்புரச் சாந்தும், கலவையும், மலரும், கலந்து உமிழ் பரிமளகந்தம்,
மருப்புடைப் பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப;
75
நான நெய் விளக்கு நால்-இரு கோடி, நங்கையர் அங்கையில் ஏந்த,
மேல் நிவந்து எழுந்த மணியுடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க,
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்ப, கிண்கிணி கலையொடும் கலிப்ப,
பால் நிறத்து அன்னக் குழாம் படர்ந்தென்னப் பற்பல மங்கையர் படர; 76
அந்தரம் புகுந்தது உண்டு என,முனிவுற்று,அருந் துயில் நீங்கினான்;ஆண்டைச்
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறுஞ் சோலையின் தனையோ?
வந்தது இங்கு யாதோ? யாரொடும் போமோ? என்று, தம் மனம் மறுகுதலால்,
இந்திரன் முதலோர், இமைப்பிலா நாட்டத்து யாவரும், உயிர்ப்பு அவிந்திருப்ப;
77
நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிறப் பட்டின் மாலை உத்தரியம் பண்புற, பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ,
சூல் நிறக் கொண்மூக் கிழித்து இடை துடிக்கும் மின் என,மார்பில் நூல்துளங்க;78
தோள்தொறும் தொடர்ந்த, மகரிகை வயிரக் கிம்புரி வலய மாச் சுடர்கள்
நாள்தொறும் சுடரும் கலி கெழு விசும்பில், நாளொடு கோளினை நக்க,
நாள்தொறும் தொடர்ந்த தழங்கு பொற்கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ,
கேள்தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முகமலர் இரவினும் கிளர; 79
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிறத் தூசு, கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ;
மின் நிறக் கதிரின் சுற்றிய பசும் பொன் விரல்தலை அவிர் ஒளிக் காசின்
கல் நிறக் கற்றை, நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின; 80
சன்னவீரத்த கோவை வெண் தரளம், ஊழியின் இறுதியில் தனித்த
பொன் நெடுவரையில் தொத்திய கோளும், நாளும் ஒத்து, இடை இடை பொலிய;
மின் ஒளிர் மௌலி உதய மால்வரையின் மீப்படர் வெங் கதிர்ச் செல்வர்
பன்னிருவரினும், இருவரைத் தவிர்வுற்று, உதித்தது ஓர் படி, ஒளி பரப்ப;
81
பயில் எயிற்று இரட்டைப் பணை மருப்பு ஒடிய, படியினில் பரிபவம் சுமந்த
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிரக் காவல் மால் யானை,
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடந் தோள் கனகனது உயர் வரம் கடந்த
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின், நின்று
அஞ்ச;82
அம் கயல் கருங் கண் இயக்கியர், துயக்கு இல் அரம்பையர், விஞ்சையர்க்கு
அமைந்த
நங்கையர், நாக மடந்தையர், சித்த நாரியர், அரக்கியர், முதலாம்,
குங்குமக் கொம்மைக் குவி முலை, கனிவாய், கோகிலம் துயர்ந்த மென் குதலை,
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க; 83
தொளை உறு புழை வேய்த் தூங்கு இசைக் கானம் துயலுறாது ஒரு நிலை தொடர,
இளையவர் மிடறும் இந் நிலை இசைப்ப, கின்னரர் முறை நிறுத்து எடுத்த
கிளை உறு பாடல், சில்லரிப் பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி,
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப, அண்டமும் வையமும், அளப்ப; 84
அன்ன பூஞ் சதுக்கம், சாமரை, உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த,
உன்னரும் பொன்னின், மணியினின் புனைந்த இழைக் குலம், மழைக் கருங் கடைக்
கண்,
மின் இடை, செவ் வாய், குவி முலை, பணைத் தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி,
நல் நிறக் காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப; 85
தந்திரி நெறியில் தாக்குறு கருவி தூக்கினர் எழுவிய சதியின்,
முந்துறு குணிலோடு இயைவுறு குறட்டில், சில்லரிப் பாண்டிலில், முறையின்,
மந்தர கீதத்து இசைப் பதம் தொடர, வகை உறு கட்டளை வழாமல்,
அந்தர வானத்து அரம்பையர், கரும்பின் பாடலார், அருகு வந்து ஆட; 86
அந்தியில், அநங்கன், அழல்படத் துரந்த அயின்முகப் பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்தென்ன, வெண் மதிப் பசுங் கதிர் விரவ,
மந்த மாருதம் போய் மலர்தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வருதேன்
சிந்து நுண் துளியின் சீகரத் திவலை, உருக்கிய செம்பு எனத் தெறிப்ப; 87
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும், இறுகலா வன முலை இரட்டை
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும், குறு நகைக் குமுத வாய் மகளிர்
மழை புரை ஒண் கண் செங் கடை ஈட்டம், மார்பினும் தோளினும், மலைய; 88
மாலையும், சாந்தும், கலவையும், பூணும், வயங்கு நுண் தூசொடு, காசும்,
சோலையின் தொழுதிக் கற்பகத் தருவும், நிதிகளும், கொண்டு பின் தொடர,
பாலின் வெண் பரவைத் திரை கருங் கிரிமேல் பரந்தெனச் சாமரை பதைப்ப,
வேலைநின்று உயரும் முயல் இல்வெண் மதியின்,வெண்குடை மீதுறவிளங்க;89
ஆர்கலி அகழி, அரு வரை, இலங்கை, அடி பெயர்த்து இடுதொறும் அழுந்த,
நேர்தரும் பரவைப் பிறழ் திரை, தவழ்ந்து நெடுந் தடந் திசைதொறும் நிமிர,
சார்தரும் கடுவின் எயிறுடைப் பகு வாய் அனந்தனும் தலை தடுமாற,
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை, முதுகு உளுக்குற்றனள் முரல; 90
கேடகத்தோடு, மழு, எழு, சூலம், அங்குசம், கப்பணம், கிடுகோடு,
ஆடகச் சுடர் வாள், அயில், சிலை, குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும்,
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர், தட வரை பொறுக்கும்
குடகத் தடக் கை, சுடு சினத்து, அடு போர், அரக்கியர் தலைதொறும், சுமப்ப;
91
விரிதளிர், முகை, பூ, கொம்பு, அடை, முதல், வேர் இவை எலாம், மணி, பொனால்,
விரிந்த
தரு உயர் சோலை திசைதொறும் கரியத் தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ,
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும், திகைப்புறு சிந்தையான், கெடுத்தது
ஒரு மணி நேடும் பல் தலை அரவின், உழைதொறும், உழைதொறும், உலாவி; 92
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை,
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன், அமைவுற நோக்கி,
வினையமும் செயலும், மேல் விளை பொருளும், இவ் வழி விளங்கும் என்று எண்ணி,
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன், வந்து அயல் மறைந்தே. 93
ஆயிடை, அரக்கன் அரம்பையர் குழுவும், அல்லவும், வேறு அயல் அகல,
மேயினன், பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி; ஆண்டு, அவள், வெருவி,
போயின உயிரளாம் என நடுங்கி, பொறி வரி, எறுழ் வலி, புகைக் கண்,
காய் சின, உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என, கரைந்தாள். 94
மூவர் மனநிலை
கூசி ஆவி குலைவுறுவாளையும்,
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்,
காசு இல் கண் இணை சான்று எனக் கண்டனன்-
ஊசல் ஆடி உளையும் உளத்தினான். 95
அனுமன் சானகியைத் தன் மனத்துள் வாழ்த்துதல்
வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல் அறம்! என்று உற வாழ்த்தினான்-
ஊழிதோறும் புதிது உறும் கீர்த்தியான். 96
இராவணன் சீதையை இரத்தல்
அவ் இடத்து அருகு எய்தி, அரக்கன்தான்,
எவ் இடத்து எனக்கு இன் அருள் ஈவது?
நொவ் இடைக் குயிலே! நுவல்க என்றனன்,
வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான். 97
ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று, இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்,
ஆசைப்பாடும் அந் நானும் அடர்த்திட,
கூசிக் கூசி, இனையன கூறினான்: 98
இன்று இறந்தன; நாளை இறந்தன;
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று, இறந்தபின் கூடுதியோ?-குழை
சென்று, இறங்கி, மறம் தரு செங் கணாய்! 99
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என்
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில்,
திலகமே! உன் திறத்து அனங்கன் தரு
கலகம் அல்லது, எளிமையும் காண்டியோ? 100
பூந் தண் வார் குழல் பொன் கொழுந்தே! புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை; இன் உயிர்க்
காந்தன் மாண்டிலன், காடு கடந்து போய்,
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ? 101
நோற்கின்றார்களும், நுண் பொருள் நுண்ணிதின்
பார்க்கின்றாரும், பெறும் பயன் பார்த்தியேல்,
வார்க் குன்றா முலை! என் சொல், மவுலியால்
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால். 102
பொருளும், யாழும், விளரியும், பூவையும்,
மருள, நாளும், மழலை வழங்குவாய்!
தெருளும் நான்முகன் செய்தது, உன் சிந்தையின்
அருளும், மின் மருங்கும், அரிது ஆக்கியோ? 103
ஈண்டு நாளும், இளமையும், மீண்டில;
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய;
வேண்டு நாள் வெறிதே விளிந்தால், இனி,
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ? 104
இழவு, எனக்கு, உயிர்க்கு எய்தினும் எய்துக,
குழை முகத்து நின் சிந்தனை கோடினால்;
பழக நிற்புறும் பண்பு இவை, காமத்தோடு,
அழகினுக்கு, இனி யார் உளர் ஆவரே? 105
பெண்மையும், அழகும், பிறழா மனத்
திண்மையும், முதல் யாவையும், செய்ய ஆய்,
கண்மையும் பொருந்தி, கருணைப் படா
வண்மை என்கொல், சனகரின் மடந்தையே! 106
வீட்டும் காலத்து அலறிய மெய்க் குரல்
கேட்டும், காண்டற்கு இருத்திகொல்?- கிள்ளை! நீ-
நாட்டுங்கால், நெடு நல் அறத்தின் பயன்
ஊட்டும் காலத்து, இகழ்வது உறும்கொலோ? 107
தக்கது என் உயிர் வீடு எனின், தாழ்கிலாத்
தொக்க செல்வம் தொலையும்; ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி, வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ? 108
தேவர் தேவியர் சேவடி கைதொழும்
தா இல் மூஉலகின் தனி நாயகம்
மேவுகின்றது, நுன்கண்; விலக்கினை;
ஏவர் ஏழையர் நின்னின், இலங்கிழாய்? 109
குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி; அருளுதியால் எனா,
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன்,
படியின் மேல் விழுந்தான், பழி பார்க்கலான். 110
சீதை சொன்ன வெய்ய மாற்றங்கள்
காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவாமுன்னம்,
தீய்ந்தன செவிகள்; உள்ளம் திரிந்தது; சிவந்த சோரி
பாய்ந்தன, கண்கள்; ஒன்றும் பரிந்திலள், உயிர்க்கும்; பெண்மைக்கு
ஏய்ந்தன அல்ல, வெய்ய, மாற்றங்கள் இனைய சொன்னாள்: 111
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்,
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம், கற்பின்மேல் கண்டது உண்டோ ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல, வெய்ய
சொல்; இது தெரியக் கேட்டி, துரும்பு! எனக் கனன்று, சொன்னாள். 112
மேருவை உருவல் வேண்டின், விண் பிளந்து ஏகல் வேண்டின்,
ஈர்-எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன் பகழி வல்லது; அறிந்து இருந்து, -அறிவு இலாதாய்!-
சீரியஅல்ல சொல்லி, தலை பத்தும் சிந்துவாயோ? 113
அஞ்சினை ஆதலான், அன்று, ஆரியன் அற்றம் நோக்கி,
வஞ்சனை மான் ஒன்று ஏவி, மாயையால் மறைந்து வந்தாய்;
உஞ்சனை போதி ஆயின், விடுதி; உன் குலத்துக்கு எல்லாம்
நஞ்சினை எதிர்ந்தபோது, நோக்குமே நினது நாட்டம்? 114
பத்து உள தலையும், தோளும், பல பல பகழி தூவி,
வித்தக வில்லினாற்கு, திருவிளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கம் ஆகும்; அல்லது, செருவில் ஏற்கும்
சத்தியை போலும்?-மேல் நாள், சடாயுவால் தரையில் வீழ்ந்தாய்! 115
தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளு நீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய்; அன்றுஎனின், இறத்தி அன்றே?
நோற்ற நோன்பு, உடைய வாழ் நாள், வரம், இவை நுனித்த எல்லாம்,
கூற்றினுக்கு அன்றே? வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ ? 116
பெற்றுடை வாளும் நாளும், பிறந்துடை உரனும், பின்னும்
மற்றுடை எவையும், தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை,
வில் தொடை இராமன் கோத்து விடுதலும், விலக்குண்டு, எல்லாம்
இற்று இடைந்து இறுதல் மெய்யே; -விளக்கின் முன் இருள் உண்டாமோ? 117
குன்று நீ எடுத்த நாள், தன் சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவத் தனிச் சரம் துரந்த மேரு,
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது, இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா! 118
மலை எடுத்து, எண் திசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ,
சிலை எடுத்து இளையவன் நிற்கச் சேர்ந்திலை;
தலை எடுத்து, இன்னமும், மகளிர்த் தாழ்தியோ? 119
ஏழை! நின் ஒளித்துறை இன்னது ஆம் என,
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள்,
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ?
ஊழியும் திரியும்; உன் உயிரொடு ஓயுமோ? 120
சீதை நயமொழிகளாலும் அறநெறி காட்டுதல்
வெஞ் சின அரக்கரை வீய்த்து வீயுமோ?
வஞ்சனை நீ செய, வள்ளல் சீற்றத்தால்,
எஞ்சல் இல் உலகு எலாம் எஞ்சும், எஞ்சும்! என்று
அஞ்சுகின்றேன்; இதற்கு அறனும் சான்றுஅரோ! 121
அங்கண் மா ஞாலமும், விசும்பும், அஞ்ச வாழ்
வெங்கணாய்!-புன் தொழில் விலக்கி மேற்கொளாய்;
செங் கண் மால், நான்முகன், சிவன், என்றே கொலாம்,
எங்கள் நாயகனையும் நினைந்தது?-ஏழை, நீ! 122
மானுயர் இவர் என மனக் கொண்டாய்எனின்,
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் -
தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின்,
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால். 123
இருவர் என்று இகழ்ந்தனை என்னின், யாண்டு எல்லை,
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான்;
செரு வரும்காலை, என் மெய்ம்மை தேர்தியால்-
பொரு அருந் திரு இழந்து, அநாயம் பொன்றுவாய். 124
பொற்கணான், தம்பி, என்று இனைய போர்த் தொழில்
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர், வேறு உளார்,
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும்,
இற்கணார் இறந்திலர்; இறந்து நீங்கினார். 125
பூவிலோன் ஆதியாக, புலன்கள் போம் நெறியில் போகாத்
தேவரோ, அவுணர்தாமோ, நிலை நின்று வினையின் தீர்ந்தார்?
ஏவல் எவ் உலகும் செல்வம் எய்தினார் இசையின், ஏழாய்!
பாவமோ? முன் நீ செய்த தருமமோ? தெரியப் பாராய்! 126
இப் பெருஞ் செல்வம் நின்கண் ஈந்த பேர் ஈசன், யாண்டும்
அப் பெருஞ் செல்வம் துய்ப்பான், நின்று மா தவத்தின் அன்றே?
ஒப்பு அருந் திருவும் நீங்கி, உறவொடும் உலக்க உன்னி,
தப்புதி அறத்தை; ஏழாய்! தருமத்தைக் காமியாயோ? 127
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும், மாண்டார்,
அறம் திறம்பினரும், மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே?
பிறந்து இறந்து உழலும் பாசப் பிணக்குடைப் பிணியின் தீர்ந்தார்,
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர், பிறர் யார்? சொல்லாய்! 128
தென் தமிழ் உரைத்தோன் முன்னாத் தீது தீர் முனிவர் யாரும்,
புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம்; நோற்கிலெம்; புகுந்த போதே,
கொன்று அருள்; நின்னால் அன்னார் குறைவது சரதம்; கோவே!
என்றனர்; யானே கேட்டேன்; நீ அதற்கு இயைவ செய்தாய். 129
உன்னையும் கேட்டு, மற்று உன் ஊற்றமும், உடைய நாளும்,
பின்னை இவ் அரக்கர் சேனைப் பெருமையும், முனிவர் பேணிச்
சொன்னபின், உங்கை மூக்கும், உம்பியர் தோளும் தாளும்,
சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ? 130
ஆயிரம் தடக்கையால் நின் ஐந் நான்கு கரமும் பற்றி,
வாய் வழி குருதி சோரக் குத்தி வான் சிறையில் வைத்த
தூயவன் வயிரத் தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம்
நீ அறிந்திலையோ?-நீதி நிலை அறிந்திலாத நீசா! 131
கடிக்கும் வல் அரவும் கேட்கும், மந்திரம்; களிக்கின்றோயை,
அடுக்கும், ஈது அடாது என்று, ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி,
இடிக்குநர் இல்லை; உள்ளார், எண்ணியது எண்ணி, உன்னை
முடிக்குநர்; என்றபோது, முடிவு அன்றி முடிவது உண்டோ ? 132
இராவணனின் சீற்றம்
என்று அறத் துறை கேட்டலும், இருபது நயனம்
மின் திறப்பன ஒத்தன; வெயில் விடு பகு வாய்
குன்று இறத் தெழித்து உரப்பின; குறிப்பது என்? காமத்
தின் திறத்தையும் கடந்தது, சீற்றத்தின் தகைமை. 133
வளர்ந்த தாளினன்; மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன்; அனல் சொரி கண்ணினன்; இவளைப்
பிளந்து தின்பென் என்று உடன்றனன்; பெயர்ந்தனன்; பெயரான்;
கிளர்ந்த சீற்றமும், காதலும், எதிர் எதிர் கிடைப்ப. 134
இராவணனது நிலை கண்ட அனுமன் உளத்து எழுந்த சிந்தனை
அன்ன காலையில், அனுமனும், அருந்ததிக் கற்பின்,
என்னை ஆளுடை நாயகன், தேவியை, என் முன்,
சொன்ன நீசன், கை தொடுவதன்முன், துகைத்து உழக்கி,
பின்னை, நின்றது செய்குவென் என்பது பிடித்தான். 135
தனியன் நின்றனன்; தலை பத்தும் கடிது உகத் தாக்கி,
பனியின் வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சி,
புனித மா தவத்து அணங்கினைச் சுமந்தனென் போவென்,
இனிதின் என்பது நினைந்து, தன் கரம் பிசைந்திருந்தான். 136
சீற்றம் தணிந்த இராவணன் சீதையை நோக்கி மீண்டும் பேசுதல்
ஆண்டு, அ(வ்) வாள் அரக்கன் அகத்து, அண்டத்தை அழிப்பான்
மூண்ட கால வெந் தீ என முற்றிய சீற்றம்,
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற, நிலையின்
மீண்டு நின்று, ஒரு தன்மையால் இனையன விளம்பும்: 137
கொல்வென் என்று உடன்றேன்; உன்னைக் கொல்கிலென்; குறித்துச் சொன்ன
சொல் உள; அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரியச் சொல்லின்,
ஒல்வது ஈது; ஒல்லாது ஈது என்று, எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ ?
வெல்வதும் தோற்றல்தானும் விளையாட்டின் விளைந்த, மேல்நாள். 138
ஒன்று கேள், உரைக்க: நிற்கு ஓர் உயிர் என உரியோன்தன்னைக்
கொன்று கோள் இழைத்தால், நீ நின் உயிர் விடின், கூற்றம் கூடும்;
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி,
அன்று நான் லஞ்சம் செய்தது; ஆர், எனக்கு அமரில் நேர்வார்? 139
மான் என்பது அறிந்து போன மானிடர்ஆவார், மீண்டு,
யான் என்பது அறிந்தால் வாரார்; ஏழைமை, எண்ணி நோக்கல்;
தேன் என்பது அறிந்த சொல்லாய்! தேவர்தாம் யாவரே, எம்
கோன் என்பது அறிந்த பின்னை, திறம்புவார், குறையின் அல்லால்? 140
வென்றோரும் இருக்க; யார்க்கும் மேலவர், விளிவு இலாதோர்,
என்றோரும் இருக்க; அன்றே, இந்திரன் ஏவல் செய்ய,
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன், யானே!
மென் தோளாய்! இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ ? 141
மூவரும் தேவர்தாமும் முரண் உக முற்றும் கொற்றம்,
பாவை! நின் பொருட்டினால் ஓர் பழி பெற, பயன் தீர் நோன்பின்
ஆ இயல் மனிதர்தம்மை அடுகிலேன்; அவரை ஈண்டுக்
கூவி நின்று, ஏவல் கொள்வேன்; காணுதி-குதலைச் சொல்லாய்! 142
சிற்றியல், சிறுமை ஆற்றல், சிறு தொழில், மனிதரோடே
முற்றிய தா இல் வீர முனிவு என்கண் விளையாதேனும்,
இற்றை, இப் பகலில், நொய்தின், இருவரை ஒரு கையாலே
பற்றினென்கொணரும் தன்மை காணுதி;-பழிப்பு இலாதாய்! 143
இராவணன் சீதையை அச்சுறுத்திச் செல்லுதல்
பதவிய மனிதரேனும், பைந்தொடி! நின்னைத் தந்த
உதவியை உணர நோக்கின், உயிர்க் கொலைக்கு உரியர் அல்லர்;
சிதைவுறல் அவர்க்கு வேண்டின், செய் திறன் நேர்ந்தது எண்ணின்,
இதன் நினக்கு ஈதே ஆகின், இயற்றுவல்; காண்டி! இன்னும், 144
பள்ள நீர் அயோத்தி நண்ணி, பரதனே முதலினோர், ஆண்டு
உள்ளவர்தம்மை எல்லாம் உயிர் குடித்து, ஊழித் தீயின்
வெள்ள நீர் மிதிலையோரை வேர்அறுத்து, எளிதின் எய்திக்
கொள்வென், நின் உயிரும்; என்னை அறிந்திலை-குறைந்தநாளோய்! 145
ஈது உரைத்து, அழன்று பொங்கி, எரி கதிர் வாளை நோக்கி,
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது;
ஆதலின், பின்னை, நீயே அறிந்தவாறு அறிதி என்னா,
போது அரிக் கண்ணினாளை அகத்து வைத்து, உரப்பிப் போனான். 146
தீய அரக்கிமார்கள் சீதையை அதட்டுதல்
போயினன் அரக்கன்; பின்னை, பொங்கு அரா நுங்கிக் கான்ற
தூய வெண் மதியம் ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றி,
தீய வல் அரக்கிமார்கள், தெழித்து, இழித்து, உரப்பி, சிந்தை
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான், உடன்று மிக்கார். 147
முன் முன் நின்றார், கண் கனல் சிந்த முடுகுற்றார்;
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி,
கொல்மின்! கொல்மின்! கொன்று குறைத்து, குடர் ஆரத்
தின்மின்! தின்மின்! என்று தெழித்தார், சிலர் எல்லாம். 148
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்,
ஐயன், வேதம் ஆயிரம் வல்லோன், அறிவாளன்,
மெய் அன்பு உன்பால் வைத்துளது அல்லால், வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல்? என்றார், சிலர் எல்லாம். 149
மண்ணில் தீய மானுயர் தத்தம் வழியோடும்,
பெண்ணில் தீயோய்! நின் முதல் மாயும் பிணி செய்தாய்,
புண்ணில் கோல் இட்டாலன சொல்லி; பொது நோக்காது
எண்ணிக் காணாய், மெய்ம்மையும் என்றார், சிலர் எல்லாம். 150
புக்க வழிக்கும், போந்த வழிக்கும், புகை வெந் தீ
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ? உணர்வு இல்லாய்!
இக் கணம் இற்றாய்; உன் இனம் எல்லாம் இனி வாழா;
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார், சிலர் எல்லாம். 151
திரிசடை சொல்லால் சீதை தேறுதல்
இன்னோரன்ன எய்திய காலத்து, இடை நின்றாள்,
முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு, அம்மா!
பின்னே, வாளா பேதுறுவீரேல், பிழை என்றாள்,
அன்னே, நன்று! என்றாள்; அவர் எல்லாம் அமைவுற்றார். 152
அறிந்தார், அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல;
பிறிந்தார் சீற்றம்; மன்னனை அஞ்சிப் பிறிகில்லார்;
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார்;
நெறிந்து ஆர் ஓதிப் பேதையும் ஆவி நிலை நின்றாள். 153
மிகைப் பாடல்கள்
எயிலின் உட்படு நகரின் யோசனை எழு-நூறும்
அயிலினின் படர் இலங்கை மற்று அடங்கலும் அணுகி,
மயல் அறத் தனி தேடிய மாருதி, வனசக்
குயில் இருந்த அச் சோலை கண்டு, இதயத்தில் குறித்தான். 1-1
அஞ்சனத்து ஒளிர் அமலனை மாயையின் அகற்றி,
வஞ்சகத் தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து,
இஞ்சி உட்படும் இலங்கையின் சிறையில் வைத்திட, ஓர்
தஞ்சம் மற்று இலை; தான் ஒரு தனி இருந்து அயர்வாள். 2-1
கண்ணின் நீர்ப் பெருந் தாரைகள் முலைத் தடம் கடந்து
மண்ணின்மீதிடைப் புனல் என வழிந்து அவை ஓட,
விண்ணை நோக்குறும்; இரு கரம் குவிக்கும்; வெய்து உயிர்க்கும்;
எண்ணும்; மாறு இலாப் பிணியினால் இவை இவை இயம்பும்; 10-1
மாய மானின்பின் தொடர்ந்த நாள், மாண்டனன் என்று
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன்
போய், அவன் செயல் கண்டு, உடல் பொன்றினன் ஆகும்;
ஆயது இன்னது என்று அறிந்திலேன் என்று என்றும் அயர்வாள். 16-1
இன்ன எண்ணி, இடர் உறுவாள் மருங்கு,
உன் ஒர் ஆயிர கோடி அரக்கியர்
துன்னு காவலுள், தூய திரிசடை
என்னும் மங்கை துணை இன்றி, வேறு இலாள். 29-1
தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக் கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனது ஆவி பெற்று உய்ந்துளாள். 29-2
அன்னள் ஆய அருந்ததிக் கற்பினாள்
மன்னு சோலையில் மாருதியும் வர,
தன் இடம் துடித்து எய்துற, சானகி
என்னும் மங்கை, இனிது இருந்தாள்அரோ. 29-3
தாட்சி இன்று என், திரிசடையும், சாலவும்
மாட்சியின் அமைந்தது, மலர் உளாள் தொழும்
காட்சியாய்! இக் குறி கருதும் காலையில்,
ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய். 32-1
மீட்டும், அத் திரிசடை என்னும் மென் சொலாள்,
தோள் தடம் பொரு குழைத் தொண்டைத் தூய்மொழி!
கேட்டி; வெங் கடு எனாக் கிளர் உற்பாதம்ஆய்,
நாட்டினை; யாவரும் நடுக்கம் காண்டுமால். 53-1
வயிற்றிடை வாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்கு இடை இடை, யானை, யாளி, பேய்,
துயில் கொள் வெம் பிலன் என, தொட்ட வாயினர். 55-1
ஒருபது கையினர், ஒற்றைச் சென்னியர்;
இருபது தலையினர், இரண்டு கையினர்;
வெருவரு தோற்றத்தர்; விகட வேடத்தர்;
பருவரை என, முலை பலவும் நாற்றினர். 55-2
சிரம் ஒரு மூன்றினார்; திருக்கு மூன்றினார்;
கரம் ஒரு மூன்றினார்; காலும் மூன்றினார்;
உரம் உறு வன முலை வெரிநின் மூன்று உளார்;
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார். 55-3
சூலம், வாள், சக்கரம், தோட்டி, தோமரம்,
கால வேல், கப்பணம், கற்ற கையினர்;
ஆலமே உருவு கொண்டனைய மேனியர்;
பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார். 55-4
கரி, பரி, வேங்கை, மாக் கரடி, யாளி, பேய்,
அரி, நரி, நாய், என அணி முகத்தினர்;
வெரிந் உறு முகத்தினர்; விழிகள் மூன்றினர்;
புரிதரு கொடுமையர்; புகையும் வாயினர். 55-5
என்ன வாழ்த்திய மாருதி, ஈது நாம்
இன்னும் காண்டும் என, மறைந்து எய்தினான்;
சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும்
அன்னை வைகுறும் அவ் இடத்து ஆயினான். 96-1
இன்று நாளை அருளும் திருவருள்
என்று கொண்டு, இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனை கூடுதியோ? குழை
தின்று உறங்கி மறம் தவாச் செல்வியே! 99-1
என்றனன், எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி,
நி.....லத் தாவி நிலன் ஒளி கலனில் தோய,
மின்தனை மின் சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ, மெல்லச்
சென்று, அவன் தன்னைச் சார்ந்தாள், மயன் அருள் திலகம் அன்னாள். 145-1
பொருக்கென அவனி....க....கொடி முறுவல் பூப்ப,
அரக்கர் கோமகனை நோக்கி, ஆண்மை அன்று; அழகும் அன்றால்-
செருக்கு உறு தவத்தை, கற்பின் தெய்வத்தை, திருவை, இன்னே
வெருக் கொளச் செய்வது! ஐயா! என, இவை விளம்பலுற்றாள்: 145-2
செம் மலர்த் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார்,
வெம்மை உற்று உன்மேல் வீழ்வார், வெள்கியே நகை செய்து ஓத,
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்தன்னை
அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே. 145-3
புலத்தியன் மரபின் வந்து புண்ணியம் புரிந்த மேன்மைக்
குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ? என்றும் கொள்ளாய்!
வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு என, மதிப்பி 145-4
வாச மென் குழலினாரால், மண்ணினில், வானில், யார்க்கும்
நாசம் வந்து ஏன்று....... மறைகளே நலிலும் மாற்றம்,
பூசல் வண்டு உறையும் தாராய்! அறிந்தும் நீ, புகழால், பொற்பால்,
தேசுடையவளோ, என்னின், சீதையும்? 145-5
அஞ்சுவித்தானும், ஒன்றால் அறிவுறத் தேற்றியானும்,
வஞ்சியின் செவ்வியாளை வசித்து, என்பால் வருவீர்; அன்றேல்,
நஞ்சு உமக்கு ஆவென் என்னா, நகை இலா முகத்து, பேழ் வாய்,
வெஞ் சினத்து அரக்கிமார்க்கு, வேறுவேறு உணர்த்திப் போனான். 146-1
என்றார்; இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாறக்
கன்றாநின்றார், காலும் எயிற்றார், கனல் கண்ணார்;
ஒன்றோ? மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா!
பொன்றா வஞ்சம் கொண்டவர் இன்னும் புகல்கின்றார்; 151-1
கொல்வான் உற்றோர் பெற்றியும், யாதும் குறையாதான்
வெல்வான், நம்கோன்; தின்னுமின்; வம்! என்பவர் மெய்யும்,
வல் வாய் வெய்யோன் ஏவலும், எல்லாம் மனம் வைத்தாள்,
நல்லாள்; நல்ல கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள். 151-2
தீயோர் செய்கைதானும், இராமன் ஒரு தேவித்
தாயாள் துன்பும், மாருதி கண்டே தளர்வு எய்தி,
மாயாது ஒன்றே அன்றி, மனத்தே மலி துன்பத்து
ஓயாது உன்னிச் சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான். 153-1
சுந்தர காண்டம்
4. உருக் காட்டு படலம்
அனுமன் விஞ்சையால் அரக்கியர் உறங்குதல்
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே; தெறு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார்;
வேண்டத் துஞ்சார் என்று, ஒரு விஞ்ஞை வினை செய்தான்;
மாண்டு அற்றாராம் என்றிட, எல்லாம் மயர்வு உற்றார். 1
தூங்காத காவலர் தூங்குதல் கண்ட சீதையின் புலம்பல்
துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள்; துயர் ஆற்றாள்;
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள், நெகுகின்றாள்;
அஞ்சா நின்றாள், பல் நெடு நாளும் அழிவுற்றாள்,
எஞ்சா அன்பால், இன்ன பகர்ந்து, ஆங்கு, இடர் உற்றாள். 2
கரு மேகம், நெடுங் கடல், கா அனையான்
தருமே, தமியேன் எனது ஆர் உயிர் தான்?
உரும்ஏறு உமிழ் வெஞ் சிலை நாண் ஒலிதான்
வருமே? உரையாய், வலியாய் வலியே! 3
கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர்; நினையா
வில்லாளனை, யாதும் விளித்திலிரோ? 4
தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர்; எனது ஆவி அறிந்திலிரோ?
நிழல் வீரை அனானுடனே நெடுநாள்
உழல்வீர்; கொடியீர்! உரையாடிலிரோ? 5
வாராது ஒழியான் எனும் வண்மையினால்,
ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன்;
தீராய் ஒரு நாள் வலி -சேவகனே!
நாராயணனே! தனி நாயகனே! 6
தரு ஒன்றிய கான் அடைவாய்; தவிர் நீ;
வருவென் சில நாளினில்; மா நகர்வாய்
இரு என்றனை; இன் அருள்தான் இதுவோ?
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ? 7
பேணும் உணர்வே! உயிரே! பெரு நாள்
நாண் இன்று உழல்வீர்; தனி நாயகனைக்
காணும் துணையும் கழிவீர்அலிர்; நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ? 8
முடியா முடி மன்னன் முடிந்திடவும்,
படி ஏழும் நெடுந் துயர் பாவிடவும்,
மடியா நெறி வந்து வளம் புகுதும்
கொடியார் வரும் என்று, குலாவுவதோ? 9
சீதை உயிர் விடத் துணிதல்
என்று என்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள்;
ஒன்று என் உயிர் உண்டுஎனின், உண்டு இடர்; யான்
பொன்றும் பொழுதே, புகழ் பூணும் எனா, 10
பொறை இருந்து ஆற்றி, என் உயிரும் போற்றினேன்,
அறை இருங் கழலவற் காணும் ஆசையால்;
நிறை இரும் பல் பகல், நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனை, அப் புனிதன் தீண்டுமோ? 11
உன்னினர் பிறர் என உணர்ந்தும், உய்ந்து, அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்,
மன் உயிர் காத்து, இருங் காலம் வைகினேன்;
என்னின், வேறு அரக்கியர், யாண்டையார்கொலோ? 12
சொல் பிரியாப் பழி சுமந்து தூங்குவேன்;
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்றுஅரோ!
கற்புடை மடந்தையர், கதையில் தான் உளோர்,
இல் பிரிந்து உய்ந்தவர், யாவர் யான் அலால்? 13
பிறர் மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது என்று, உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்;
புறன் அலர், அவன் உற, போது போக்கி, யான்,
அறன் அலது இயற்றி, வேறு என் கொண்டு ஆற்றுகேன்? 14
எப் பொழுது, இப் பெரும் பழியின் எய்தினேன்,
அப் பொழுதே, உயிர் துறக்கும் ஆணையேன்;
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத, யான்,
துப்பு அழிந்து உய்வது, துறக்கம் துன்னவோ? 15
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர்,
வன் பழி சுமக்கினும் சுமக்க; வான் உயர்,
துன்பு அழி, பெரும் புகழ்க் குலத்துள் தோன்றினேன்;
என் பழி துடைப்பவர், என்னின் யாவரே? 16
வஞ்சனை மானின் பின் மன்னைப் போக்கி, என்
மஞ்சனை வைது, பின் வழிக் கொள்வாய் எனா,
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென் இருத்தலும், உலகம் கொள்ளுமோ? 17
வல் இயல் மறவர், தம் வடுவின் தீர்பவர்,
வெல்லினும் வெல்க, போர்; விளிந்து வீடுக;
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்,
சொல்லிய என் பழி அவரைச் சுற்றுமோ? 18
வருந்தல் இல் மானம், மா அனைய மாட்சியர்
பெருந் தவம் மடந்தையர் முன்பு, பேதையேன்,
கருந் தனி முகிலினைப் பிரிந்து, கள்வர் ஊர்
இருந்தவள், இவள் என, ஏச நிற்பெனோ? 19
அற்புதன், அரக்கர்தம் வருக்கம் ஆசு அற,
வில் பணி கொண்டு, அருஞ் சிறையின் மீட்ட நாள்,
இல் புகத் தக்கலை என்னில், யானுடைக்
கற்பினை, எப் பரிசு இழைத்துக் காட்டுகேன்? 20
மாதவிப் பொதும்பர் புக்க சீதையின் முன், அனுமன் தோன்றுதல்
ஆதலான், இறத்தலே அறத்தின் ஆறு எனா,
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்;
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று, ஒரு
போது உலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள். 21
கண்டனன் அனுமனும்; கருத்தும் எண்ணினான்;
கொண்டனன் துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,
அண்டர் நாயகன் அருள் தூதன் யான் எனா,
தொண்டை வாய் மயிலினைத் தொழுது, தோன்றினான். 22
இராமன் தூதன் யான் என அனுமன் மொழிதல்
அடைந்தனென் அடியனேன், இராமன் ஆணையால்;
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பு இலர்; தவத்தை மேவலால்,
மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன். 23
ஈண்டு நீ இருந்ததை, இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன்; அதற்குக் காரணம்
வேண்டுமே? அரக்கர்தம் வருக்கம் வேரொடு
மாண்டில; ஈது அலால், மாறு வேறு உண்டோ ? 24
ஐயுறல்; உளது அடையாளம்; ஆரியன்
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள;
கைஉறு நெல்லியங் கனியின் காண்டியால்;
நெய் உறு விளக்கு அனாய்! நினையல் வேறு என்றான். 25
அனுமனைக் கண்டு தெளிந்த சீதை அவனைப் பற்றி வினவல்
என்று அவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி,
நின்றவன் நிருதன் அல்லன்; நெறி நின்று; பொறிகள் ஐந்தும்
வென்றவன்; அல்லனாகில், விண்ணவன் ஆக வேண்டும்;
நன்று உணர்வு உரையன்; தூயன்; நவை இலன் போலும்! என்னா, 26
அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ ? 27
என நினைத்து, எய்த நோக்கி, இரங்கும் என் உள்ளம்; கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்;
நினைவுடைச் சொற்கள் கண்ணீர் நிலம் புக, புலம்பா நின்றான்;
வினவுதற்கு உரியன் என்னா, வீர! நீ யாவன்? என்றாள். 28
அனுமன் தன் வரலாறு கூறல்
ஆய சொல் தலைமேல் கொண்ட அங்கையன், அன்னை! நின்னைத்
தூயவன் பிரிந்த பின்பு தேடிய துணைவன், தொல்லைக்
காய் கதிர்ச் செல்வன் மைந்தன், கவிக்குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன், சுக்கிரீவன் என்றுஉளன், நவையின் தீர்ந்தான். 29
மற்று, அவன் முன்னோன் வாலி; இராவணன் வலி தன் வாலின்
இற்று உகக் கட்டி, எட்டுத் திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன்; தேவர் வேண்ட, வேலையை, விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய, அமுது எழ கடைந்த தோளான். 30
அன்னவன்தன்னை, உம் கோன், அம்பு ஒன்றால் ஆவி வாங்கி,
பின்னவற்கு அரசு நல்கி, துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன்தனக்கு, நாயேன், மந்திரத்து உள்ளேன்; வானின்
நல் நெடுங் காலின் மைந்தன்; நாமமும் அனுமன் என்பேன். 31
எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன; உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப; வேலை தனித் தனி கடக்கும் தாள;
குழுவின, உம்கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி,
வழு இல, செய்தற்கு ஒத்த - வானரம் வானின் நீண்ட. 32
துப்பு உறு பரவை ஏழும், சூழ்ந்த பார் ஏழும், ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர் நாடும், உம்பர்நின்று இம்பர்காறும்,
இப் புறம் தேடி நின்னை எதிர்ந்திலஎன்னின், அண்டத்து
அப் புறம் போயும் தேட, அவதியின் அமைந்து போன. 33
புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள், பொதிந்துதூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகலக் குறியினாலே,
வென்றியான் அடியேன்தன்னை வேறு கொண்டு இருந்து கூறி,
தென் திசைச் சேறி என்றான்; அவன் அருள் சிதைவது ஆமோ? 34
கொற்றவற்கு, ஆண்டு, காட்டிக் கொடுத்த போது, அடுத்த தன்மை,
பெற்றியின் உணர்தற்பாற்றோ? உயிர் நிலை பிறிதும் உண்டோ?
இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழிந்து நீத்த
மற்றை நல் அணிகள்காண், உன் மங்கலம் காத்த மன்னோ! 35
ஆயவன் தன்மை நிற்க; அங்கதன், வாலி மைந்தன்,
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை
மேயின படர்ந்து தீர, அனையவன் விடுத்தான் என்னை,
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன், பழியை வென்றான். 36
அனுமன் இராமனின் வடிவழகை விவரித்தல்
எய்து அவன் உரைத்தலோடும், எழுந்து, பேர் உவகை ஏற,
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க,
உய்தல் வந்து உற்றதோ? என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்,
ஐய! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி? என்றாள். 37
படி உரைத்து, எடுத்துக் காட்டும் படித்து அன்று, படிவம்; பண்பில்
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும், முன்னர்;
துடிஇடை! அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா,
அடிமுதல் முடியின் காறும், அறிவுற அனுமன் சொல்வான். 38
சேயிதழ்த் தாமரை என்று, சேண் உளோர்
ஏயினர்; அதன் துணை எளியது இல்லையால்,
நாயகன் திருஅடி குறித்து நாட்டுறின்;
பாய் திரைப் பவளமும் குவளைப் பண்பிற்றால்! 39
தளம் கெழு கற்பக முகிழும், தண் துறை
இளங் கொடிப் பவளமும் கிடக்க; என் அவை?
துளங்கு ஒளி விரற்கு எதிர், உதிக்கும் சூரியன்
இளங் கதிர் ஒக்கினும் ஒக்கும்-ஏந்திழாய்! 40
சிறியவும் பெரியவும் ஆகி, திங்களோ,
மறு இல பத்து உளஅல்ல; மற்று இனி;
எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில;
அறிகிலென், உகிர்க்கு, யான், உவமம் ஆவன. 41
பொருந்தில நிலனொடு, போந்து கானிடை
வருந்தினஎனின், அது நூலை மாறு கொண்டு
இருந்தது; நின்றது, புவனம் யாவையும்
ஒருங்கு உடன் புணர; அஃது உரைக்கற்பாலதோ? 42
தாங்கு அணைப் பணிலமும் வளையும் தாங்கு நீர்
வீங்கு அணைப் பணிமிசை மேகம் அன்னவன்
பூங் கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு,
ஆம் கணைக்கு ஆவமோ, ஆவது? அன்னையே! 43
அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்து அணைவன பெயரும், பொற்புடை,
மறம் கிளர் மத கரிக் கரமும் நாணின,
குறங்கினுக்கு உவமை, இவ் உலகில் கூடுமோ? 44
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலஞ் சுழி என்றலும் புன்மை; பூவொடு
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர், இனி,
இலஞ்சியும் போலும்? வேறு உவமை யாண்டுஅரோ? 45
பொரு அரு மரகதப் பொலன் கொள் மால் வரை
வெருவுற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவு அற நோற்றனள் என்னின், பின்னை, அத்
திருவினின் திரு உளார் யாவர்? தெய்வமே! 46
நீடுறு கீழ்த் திசை நின்ற யானையின்
கோடு உறு கரம் என, சிறிது கூறலாம்,
தோடு உறு மலர் எனச் சுரும்பு சுற்று அறாத்
தாள் தொடு தடக் கை; வேறு உவமை சாலுமே? 47
பச்சிலைத் தாமரை பகல் கண்டால் எனக்
கைச் செறி முகிழ் உகிர், கனகன் என்பவன்
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில்
நிச்சயம்; அன்று எனின், ஐயம் நீக்குமே? 48
திரண்டில; ஒளி இல; திருவின் சேர்வு இல;
முரண் தரு மேரு வில் முரிய மூரி நாண்
புரண்டில; புகழ் இல; பொருப்பு என்று ஒன்று போன்று
இரண்டு இல; புயங்களுக்கு உவமம் ஏற்குமோ? 49
கடற் படு பணிலமும், கன்னிப் பூகமும்,
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ-உரகப் பள்ளியான்
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க, எங்களால்? 50
அண்ணல்தன் திரு முகம் கமலம் ஆம் எனின்,
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்?
தண் மதி ஆம் என உரைக்கத் தக்கதோ,
வெண் மதி பொலிந்து அது மெலிந்து தேயுமால்? 51
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ் வாய்
நாரம் உண்டு அலர்ந்த, செங் கேழ் நளினம் என்று உரைக்க நாணும்;
ஈரம் உண்டு, அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும்,
மூரல் வெண் முறுவல் பூவாப் பவளமோ, மொழியற்பாற்றே? 52
முத்தம் கொல்லோ? முழு நிலவின் முறியின் திறனோ? முறை அமுதச்
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின்
வித்து முளைத்த அங்குரம்கொல்? வேறே சிலகொல்? மெய்ம் முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்? 53
எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின்
விள்ளா முழு மா நிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ?
தள்ளா ஓதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா, வள்ளல் திரு மூக்கிற்கு; உவமை பின்னும் குணிப்பு ஆமோ? 54
பனிக்க, சுரத்து, கரன் முதலோர் கவந்தப் படையும், பல் பேயும்,
தனிக் கைச் சிலையும், வானவரும், முனிவர் குழுவும், தனி அறனும்,
இனிக் கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்-இரண்டும்,
குனிக்க, குனித்த புருவத்துக்கு உவமம், நீயே, கோடியால். 55
வரு நாள் தோன்றும் தனி மறுவும், வளர்வும், தேய்வும், வாள் அரவம்
ஒரு நாள் கவ்வும் உறு கோளும், இறப்பும், பிறப்பும் ஒழிவுற்றால்,
இரு-நால் பகலின் இலங்கு மதி, அலங்கல் இருளின் எழில் நிழற் கீழ்ப்
பெரு நாள் நிற்பின், அவன் நெற்றிப் பெற்றித்து ஆகப் பெறும் மன்னோ! 56
நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்
பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ? 57
புல்லல் ஏற்ற திருமகளும், பூவும், பொருந்தப் புலி ஏழும்
எல்லை ஏற்ற நெடுஞ் செல்வம் எதிர்ந்த ஞான்றும், அஃது இன்றி
அல்லல் ஏற்ற கானகத்தும், அழியா நடையை, இழிவான
மல்லல் ஏற்றின் உளது என்றால், மத்த யானை வருந்தாதோ? 58
இன்ன மொழிய, அம் மொழி கேட்டு, எரியின் இட்ட மெழுகு என்ன,
தன்னை அறியாது அயர்வாளை, தரையின் வணங்கி, நாயகனார்
சொன்ன குறி உண்டு; அடையாளச் சொல்லும் உளவால், அவை, தோகை
அன்ன நடையாய், கேட்க! என, அறிவன் அறைவான் ஆயினான். 59
இராமன் உரைத்த அடையாள மொழிகளைச் சீதைக்கு அனுமன் கூறுதல்
நடத்தல் அரிது ஆகும் நெறி; நாள்கள் சில; தாயர்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என, அச் சொற்கு,
உடுத்த துகிலோடும், உயிர் உக்க உடலோடும்,
எடுத்த முனிவோடும், அயல் நின்றதும் இசைப்பாய். 60
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி, நிறை செல்வம்
பூண்டு, அதனை நீங்கி, நெறி போதலுறு நாளின்,
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்,
யாண்டையது கான்? என, இசைத்ததும் இசைப்பாய். 61
எள் அரிய தேர் தரு சுமந்திரன்! இசைப்பாய்,
வள்ளல் மொழி வாசகம்; மனத் துயர் மறந்தாள்;
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும்,
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி, பெயர்த்தும். 62
இராமபிரானது திரு ஆழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சி
மீட்டும் உரை வேண்டுவன இல்லை என, மெய்ப் பேர்
தீட்டியது; தீட்ட அரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது என, நேர்ந்தனன் எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். 63
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ?
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ?
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்ததுகொல் என்கோ?
திறம் தெரிவது என்னைகொல், இ(ந்)நல் நுதலி செய்கை? 64
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்;
பழந் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்;
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்;
உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். 65
வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந் தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? 66
மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர்
நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்
நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்;
மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். 67
நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது, ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம்; மெய்யே!
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில், வேதிகை செய் தெய்வ மணிகொல்லோ? 68
இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! 69
சீதை அனுமனை வாழ்த்துதல்
இத் தகையள் ஆகி, உயிர் ஏமுற விளங்கும்,
முத்த நகையாள், விழியில் ஆலி முலை முன்றில்
தத்தி உக, மென் குதலை தள்ள, உயிர் தந்தாய்!
உத்தம! எனா, இனைய வாசகம் உரைத்தாள்: 70
மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்,
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமைதானும் நல்கினை, இசையோடு என்றாள். 71
பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி என்றாள். 72
இராம இலக்குவரைப் பற்றிச் சீதை வினாவ, அனுமன் விடை கூறல்
மீண்டு உரை விளம்பலுற்றாள், விழுமிய குணத்தோய்! வீரன்
யாண்டையான், இளவலோடும்? எவ் வழி எய்திற்று உன்னை?
ஆண்தகை, அடியேன் தன்மை யார் சொல, அறிந்தது? என்றாள்;
தூண் திரள் தடந் தோளானும், உற்றது சொல்லலுற்றான்: 73
உழைக் குலத் தீய மாய உருவு கொண்டு, உறுதல் செய்தான்,
மழைக் கரு நிறத்து மாய அரக்கன், மாரீசன் என்பான்;
இழைத் தட மார்பத்து அண்ணல் எய்ய, போய், வையம் சேர்வான்
அழைத்தது அவ் ஓசை; உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால். 74
இக் குரல் இளவல் கேளாது ஒழிக என, இறைவன் இட்டான்
மெய்க் குரல் சாபம்; பின்னை, விளைந்தது விதியின் வெம்மை;
பொய்க் குரல் இன்று, பொல்லாப் பொருள் பின்பு பயக்கும் என்பான்,
கைக் குரல் வரி வில்லானும், இளையவன் வரவு கண்டான். 75
கண்ட பின், இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த
புண்டரிகக் கணானும், உற்றது புகலக் கேட்டான்;
வண்டு உறை சாலை வந்தான், நின் திரு வடிவு காணான்,
உண்டு உயிர், இருந்தான்; இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ? 76
தேண்டி நேர் கண்டேன்; வாழி! தீது இலன் எம் கோன்; ஆகம்
பூண்ட மெய் உயிரே போக, அப் பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை; அழிவு உண்டாமோ?
ஈண்டு நீ இருந்தாய்; ஆண்டு, அங்கு, எவ் உயிர் விடும் இராமன்? 77
அந் நிலை ஆய அண்ணல், ஆண்டு நின்று, அன்னை! நின்னைத்
துன் இருங் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி,
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்,
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான். 78
வந்து, அவன் மேனி நோக்கி, வான் உயர் துயரின் வைகி,
எந்தை! நீ உற்ற தன்மை இயம்பு என, இலங்கை வேந்தன்,
சுந்தரி! நின்னைச் செய்த வஞ்சனை சொல்லச் சொல்ல,
வெந்தன உலகம் என்ன, நிமிர்ந்தது சீற்ற வெந் தீ. 79
சீறி, இவ் உலகம் மூன்றும் தீந்து உக, சின வாய் அம்பால்
நூறுவென் என்று, கை வில் நோக்கியகாலை, நோக்கி,
ஊறு ஒரு சிறியோன் செய்ய, முனிதியோ உலகை? உள்ளம்
ஆறுதி என்று, தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி, 80
எவ் வழி ஏகியுற்றான்? யாண்டையான்? உறையுள் யாது?
செவ்வியோய், கூறுக! என்ன, செப்புவான் உற்ற செவ்வி,
வெவ்விய விதியின் கொட்பால், வீடினன் கழுகின் வேந்தன்,
எவ்விய வரி விற் செங் கை இருவரும், இடரின் வீழ்ந்தார். 81
அயர்த்தவர், அரிதின் தேறி, ஆண் தொழில் தாதைக்கு, ஆண்டு,
செயத் தகு கடன்மை யாவும், தேவரும் மருளச் செய்தார்;
கயத் தொழில் அரக்கன் தன்னை நாடி, நாம் காண்டும் என்னா,
புயல் தொடு குடுமிக் குன்றும், கானமும், கடிது போனார். 82
அவ் வழி, நின்னைக் காணாது, அயர்த்தவர் அரிதின் தேறி,
செவ்வழி நயனம், செல்லும் நெடு வழி சேறு செய்ய,
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்,
இவ் வழி இனைய பன்னி, அறிவு அழிந்து, இரங்கலுற்றான். 83
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்?
பொன் மொய்த்த தோளான், மயல் கொண்டு, புலன்கள் வேறாய்,
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனேபோல்,
உன்மத்தன் ஆனான், தனை ஒன்றும் உணர்ந்திலாதான். 84
போது ஆயினபோது, உன் தண் புனல் ஆடல் பொய்யோ?
சீதா, பவளக் கொடி அன்னவள்-தேடி, என்கண்
நீ தா; தருகிற்றிலையேல், நெருப்பு ஆதி! என்னா,
கோதாவரியைச் சினம் கொண்டனன், கொண்டல் ஒப்பான். 85
குன்றே! கடிது ஓடினை, கோமளக் கொம்பர் அன்ன
என் தேவியைக் காட்டுதி; காட்டலைஎன்னின், இவ் அம்பு
ஒன்றே அமையும், உனுடைக் குலம் உள்ள எல்லாம்
இன்றே பிளவா, எரியா, கரி ஆக்க என்றான். 86
பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ,
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண்! என்னா,
நன் மான்களை நோக்கி, நும் நாமமும் மாய்ப்பென் இன்றே,
வில் மாண் கொலை வாளியின் என்று, வெகுண்டு நின்றான். 87
வேறுற்ற மனத்தவன், இன்ன விளம்பி நோவ,
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று, உயிர் பெற்று, இயல்பும் சில தேறலுற்றான். 88
வந்தான் இளையானொடு, வான் உயர் தேரின் வைகும்
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும்
சந்து ஆர் தடங் குன்றினில்; தன் உயிர்க் காதலோனும்,
செந் தாமரைக் கண்ணனும், நட்டனர் தேவர் உய்ய. 89
உண்டாயதும், உற்றதும், முற்றும் உணர்த்தி, உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற, போழ்தின்,
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை, யாங்கள் காட்ட,
கண்டான், உயர் போதமும் வேதமும் காண்கிலாதான். 90
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை;
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன், தூய நின்கண்
அணி கண்டுழியே, அமுதம் தெளித்தாலும் ஆறாப்
பிணி கொண்டது; பண்டு அது உண்டு ஆயினும், பேர்ப்பது அன்றால். 91
அயர்வு உற்று, அரிதின், தெளிந்து, அம் மலைக்கு அப் புறத்து ஓர்
உயர் பொன் கிரி உற்று உளன், வாலி என்று ஓங்கல் ஒப்பான்,
துயர்வு உற்று அவ் இராவணன் வாலிடைப் பண்டு தூங்க,
மயர்வு உற்ற பொருப்பொடு, மால் கடல் தாவி வந்தான். 92
ஆயானை, ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின்
தூயான்வயின், அவ் அரசு ஈந்தவன், சுற்று சேனை
மேயான் வருவான் என விட்டனன்; மேவுகாறும்
ஏயான், இருந்தான், இடைத் திங்கள் இரண்டு இரண்டும். 93
பின் கூடிய சேனை பெருந் திசை பின்ன ஆக,
வில் கூடு நுதல் திரு! நின்னிடை மேவ ஏவி,
தெற்கு ஊடுருவக் கடிது ஏவினன் என்னை என்ன,
முன் கூடின கூறினன், காலம் ஓர் மூன்றும் வல்லான். 94
இராமனது நிலை எண்ணிய சீதையின் மன நிலை
அன்பினன் இவ் உரை உணர்த்த, ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்,
என்பு உற உருகினள்; இரங்கி ஏங்கினள்;
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள். 95
கடல் கடந்தது பற்றி சீதை வினவ அனுமன் விடையளித்தல்
நையுறு சிந்தையள், நயன் வாரியின்
தொய்யல் வெஞ் சுழியிடைச் சுழிக்கும் மேனியள்,
ஐய! நீ அளப்ப அரும் அளக்கர் நீந்திலை
எய்தியது எப் பரிசு? இயம்புவாய்! என்றாள். 96
சுருங்குஇடை! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடை உணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல் கடந்தனென், காலினால் என்றான். 97
இத் துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை;
தத்தினை கடல்; அது, தவத்தின் ஆயதோ?
சித்தியின் இயன்றதோ? செப்புவாய் என்றாள்-
முத்தினும், நிலவினும், முறுவல் முற்றினாள். 98
அனுமன் கடல் கடந்த தன் பேர் உருவைக் காட்டுதல்
சுட்டினன், நின்றனன் - தொழுத கையினன்;
விட்டு உயர் தோளினன்; விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடு முகடு எய்தி, நீளுமேல்
முட்டும் என்று, உருவொடு வளைந்த மூர்த்தியான். 99
செவ் வழிப் பெருமை என்று உரைக்கும் செம்மைதான்,
வெவ் வழிப் பூதம் ஓர் ஐந்தின் மேலதோ?
அவ் வழித்து அன்று, எனின், அனுமன் பாலதோ?
எவ் வழித்து ஆகும்? என்று எண்ணும் ஈட்டதே. 100
ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய
மெய்த் துறு மரம்தொறும் மின்மினிக் குலம்
மொய்த்து உளவாம் என, முன்னும் பின்னரும்,
தொத்தின தாரகை, மயிரின் சுற்று எலாம். 101
கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய,
விண்தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மைய,
குண்டலம் இரண்டும், அக் கோளின் மாச் சுடர்
மண்டலம் இரண்டொடும், மாறு கொண்டவே. 102
ஏண் இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா
ஆணியை, அனுமனை, அமைய நோக்குவான்,
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா,
நாண் உறும் - உலகு எலாம் அளந்த நாயகன். 103
எண் திசை மருங்கினும், உலகம் யாவினும்,
தண்டல் இல் உயிர் எலாம் தன்னை நோக்கின;
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன், தானும், தன் கமலக் கண்களால். 104
எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின், இலங்கை ஆழ் கடல்
விழுந்தது; நிலமிசை விரிந்த வெண் திரை
தழைந்தன; புரண்டன மீனம்தாம் எலாம். 105
பேர் உருவை ஒடுக்குமாறு அனுமனைச் சீதை வேண்டுதல்
வஞ்சிஅம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்,
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்;
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள்,
அஞ்சினேன் இவ் உரு; அடக்குவாய் என்றாள். 106
முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழு இலது உலகு; இனி, குறுகுவாய் என்றாள்,-
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினளாம் என, தளிர்க்கும் சிந்தையாள். 107
எளிய உருவு காட்டிய அனுமனைச் சீதை பாராட்டுதல்
ஆண்தகை அனுமனும், அருளது ஆம் எனா,
மீண்டனன், விசும்பு எனும் பதத்தை மீச் செல்வான்,
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டல் இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள். 108
இடந்தாய் உலகை மலையோடும், எடுத்தாய் விசும்பை, இவை சுமக்கும்
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய், எனினும், பயன் இன்றால்;
நடந்தாய் இடையே என்றாலும், நாண் ஆம் நினக்கு; நளிர் கடலைக்
கடந்தாய் என்றல் என் ஆகும்?-காற்றே அனைய கடுமையாய்! 109
ஆழி நெடுங் கை ஆண்தகைதன் அருளும், புகழும், அழிவு இன்றி,
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு, ஒருவன் நீயே உளை ஆனாய்;-
பாழி நெடுந் தோள் வீரா!-நின் பெருமைக்கு ஏற்ப, பகை இலங்கை
ஏழு கடற்கும் அப் புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ? 110
அறிவும் ஈதே, உரு ஈதே; ஆற்றல் ஈதே, ஐம் புலத்தின்
செறிவும் ஈதே, செயல் ஈதே, தேற்றம் ஈதே, தேற்றத்தின்
நெறியும் ஈதே, நினைவு ஈதே, நீதி ஈதே, நினக்கு என்றால்,
வெறியர் அன்றோ, குணங்களான் விரிஞ்சன் முதலாம் மேலானோர்? 111
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி, வீரற்குப்
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி,
உன்னாநின்றே உடைகின்றேன், ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்;
என்னே? நிருதர் என் ஆவர், நீயே எம் கோன் துணை என்றால்? 112
மாண்டேன் எனினும் பழுது அன்றே; இன்றே, மாயச் சிறைநின்றும்
மீண்டேன்; என்னை ஒறுத்தாரைக் குலங்களோடும் வேர் அறுத்தேன்,
பூண்டேன் எம் கோன் பொலங் கழலும்; புகழே அன்றி, புன் பழியும்
தீண்டேன் என்று, மனம் மகிழ்ந்தாள், திருவின் முகத்துத் திரு ஆனாள்.
113
அனுமனின் பணிமொழி
அண்ணற் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான், அருந்ததியே!
வண்ணக் கடலினிடைக் கிடந்த மணலின் பலரால்; வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத் தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவல் கூவல் பணி செய்வேன். 114
வானரப் படையின் சிறப்பை அனுமன் எடுத்துரைத்தல்
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை? இவ் வேலைப்
பள்ளம், ஒரு கை நீர் அள்ளிக் குடிக்க, சாலும் பான்மையதோ?
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ,
உள்ள துணையும் உளது ஆவது? அறிந்த பின்னும் உளது ஆமோ? 115
வாலி இளவல், அவன் மைந்தன், மயிந்தன், துமிந்தன், வயக் குமுதன்,
நீலன், இடபன், குமுதாக்கன், பனசன், சரபன், நெடுஞ் சாம்பன்,
காலன் அனைய துன்மருடன், காம்பன், கயவன், கவயாக்கன்,
ஞாலம் அறியும் நளன், சங்கன், விந்தன், துவிந்தன், மதன் என்பான்; 116
தம்பன், தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று
இம்பர் உலகொடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன் கை
அம்பின் உதவும் படைத் தலைவர்; அவரை நோக்கின், இவ் அரக்கர்,
வம்பின் முலையாய்! உறை இடவும் போதார்; கணக்கு வரம்பு உண்டோ ? 117
மிகைப் பாடல்கள்
சுற்றிய கொடி ஒன்றைத் துணித்து, தூயள், ஓர்
பொன் தடங் கொம்பினில் பூட்டி, பூமியே!
நல் தவம் உடையள் யான்ஆகின், நாயகன்
வெற்றி சேர் திருவடி மேவுவேன் என்றாள். 21-1
என்று அருந்ததி, மனத்து, எம்மை ஆளுடைத்
துன்ற அருங் கற்பினாள், சுருதி நாயகன்
பொன் தரு மலர்ப் பதம் வழுத்தி, பூங் கொடி
தன் தனிக் கழுத்திடைத் தரிக்கும் ஏல்வையின். 21-2
எய்தினள், பின்னும் எண்ணாத எண்ணி, ஈங்கு
உய் திறம் இல்லை! என்று ஒருப்பட்டு, ஆங்கு ஒரு
கொய் தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல்வையில், தவத்தின் பெற்றியால், 21-3
தோன்றினன், தனது உருக் காண; தூயவன்,
மூன்று உலகினுக்கும் ஓர் அன்னை, மொய்ம் மலர்
தேன் திகழ் திருவடி சென்னியால் தொழுது,
ஆன்ற பேர் அன்பு கொண்டு, அறைதல்மேயினான்: 22-1
நோக்கினேன்; அரக்கியர், நுனிப்பு இல் கோடியர்,
நீக்கினர் துயிலினை; நின்னைக் காணுதற்கு
ஆக்கிய காலம் பார்த்து, அயல் மறைந்து, பின்
தாக்கு அணங்கு அவர் துயில் கண்டு, சார்ந்துளேன். 23-1
நிலை பெற, அயன் இருந்து, இயற்று நீலத்தின்
சிலை மணி வள்ளமும் உவமை சேர்கல;
அலவன், அது என்பரால், அறிவு இலோர்; அவர்
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ ? 43-1
எள்ளற்கு அரிய நிலை ஆகி, இயைந்து தம்மில் இணை உரு ஆய்,
தள்ளப்படாத தகை ஆகி, சார் கத்திரிகை வகை ஒழுகா,
அள்ளற் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற
வள்ளைத் தண்டின் வனப்பு அழித்த, மகரம் செறியாக் குழை என்றான். 49-1
தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர்த் தம்பியோடும்,
நவம் தந்த குன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி,
கவந்தன் தனது ஆவி கவர்ந்து, ஒருக்காலும் நீங்காச்
சிவம் தந்து, மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான். 88-1
சென்றேன் அடியேன், உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும்
அன்றே, அரக்கர் வருக்கம் உடன் அடைவது; அல்லாது, அரியின் கை
மன்றே கமழும் தொடை அன்றே, நிருதர் குழுவும் மாநகரும்?
என்றேஇறைஞ்சி,பின்னரும்,ஒன்றுஇசைப்பான்உணர்ந்தான்,ஈறுஇல்லான்.117-1
சுந்தர காண்டம்
5. சூடாமணிப் படலம்
சீதையை இராமனிடம் சேர்க்க எண்ணிய அனுமனின் விண்ணப்பம்
உண்டு துணை என்ன எளிதோ உலகின்? அம்மா!
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள்;
அண்ட முதல் நாயகனது ஆவி அனை யாளைக்
கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான். 1
கேட்டி, அடியேன் உரை; முனிந்தருளல்; கேள் ஆய்!
வீட்டியிடும் மேல், அவனை வேறல் வினை அன்றால்;
ஈட்டி இனி என் பல; இராமன் எதிர், நின்னைக்
காட்டி, அடி தாழ்வென்; அது காண்டி; இது காலம்; 2
பொன் திணி பொலங்கொடி! என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க; துயர் விட்டாய்,
இன் துயில் விளைக்க; ஓர் இமைப்பின், இறை வைகும்
குன்றிடை, உனைக் கொடு குதிப்பென்; இடை கொள்ளேன். 3
அறிந்து, இடை, அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்,
முறிந்து உதிர நூறி, என் மனச் சினம் முடிப்பேன்;
நெறிந்த குழல்! நின் நிலைமை கண்டும், நெடியோன்பால்,
வெறுங் கை பெயரேன் - ஒருவராலும் விளியாதேன். 4
இலங்கையொடும் ஏகுதிகொல் என்னினும், இடந்து, என்
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து, எதிர் தடுப்பான்
விலங்கினரை நூறி, வரி வெஞ் சிலையினோர்தம்
பொலங் கொள் கழல் தாழ்குவென்; இது, அன்னை! பொருள் அன்றால். 5
அருந்ததி! உரைத்தி-அழகற்கு அருகு சென்று, உன்
மருந்து அனைய தேவி, நெடு வஞ்சர் சிறை வைப்பில்,
பெருந் துயரினோடும், ஒரு வீடு பெறுகில்லாள்,
இருந்தனள் எனப் பகரின், என் அடிமை என் ஆம்? 6
புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்,
விண்டவர் வலத்தையும் விரித்து உரைசெய்கேனோ?
கொண்டு வருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி கொண்டேன்;
கண்டு வருகிற்றிலென் எனக் கழறுகேனோ? 7
இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால், இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி, நிருதக் குலம் முடித்து, வினை முற்றிப்
பொருக்க அகல்க என்னினும், அது இன்று புரிகின்றேன். 8
இந்துநுதல்! நின்னொடு இவண் எய்தி, இகல் வீரன்,
சிந்தை உறு வெந் துயர் தவிர்ந்து, தெளிவோடும்,
அந்தம் இல் அரக்கர் குலம் அற்று அவிய நூறி,
நந்தல் இல் புவிக்கண் இடர், பின் களைதல் நன்றால். 9
வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்
பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்
ஏறு, கடிது என்று, தொழுது இன் அடி பணிந்தான். 10
அனுமனின் வேண்டுகோளைச் சீதை மறுத்தல்
ஏய நல் மொழி எய்த விளம்பிய
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு,
ஆய தன்மை அரியது அன்றால் என,
தூய மென்சொல் இனையன சொல்லுவாள்; 11
அரியது அன்று; நின் ஆற்றலுக்கு ஏற்றதே!
தெரிய எண்ணினை; செய்வதும் செய்தியே;
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு, அது, என்
பெரிய பேதைமைச் சில் மதிப் பெண்மையால். 12
வேலையின்னிடையே வந்து, வெய்யவர்,
கோலி, நின்னொடும் வெஞ் சரம் கோத்தபோது,
ஆலம் அன்னவர்க்கு அல்லை, எற்கு அல்லையால்;
சாலவும் தடுமாறும்; தனிமையோய்! 13
அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ் சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என்பது என்? வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை, நீயும் நினைத்தியோ? 14
கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில்
அண்டர் ஏவரும் நோக்க, என் ஆக்கையைக்
கண்ட வாள் அரக்கன் விழி, காகங்கள்
உண்டபோது அன்றி, யான் உளென் ஆவெனோ? 15
வெற்றி நாணுடை வில்லியர் வில் தொழில்
முற்ற, நாண் இல் அரக்கியர், மூக்கொடும்
அற்ற நாணினர் ஆயின போது அன்றி,
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ? 16
பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரை ஆகிலதேஎனின்,
இற்பிறப்பும், ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்? 17
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். 18
வேறும் உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால், இடை
ஆறும் ஐம் பொறி நின்னையும், ஆண் எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ? 19
தீண்டினான்எனின், இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர் மெய்யின்? இமைப்பின்முன்
மாண்டு தீர்வென் என்றே, நிலம் வன் கையால்
கீண்டு கொண்டு, எழுந்து ஏகினன், கீழ்மையால். 20
மேவு சிந்தை இல் மாதரை மெய் தொடின்,
தேவு வன் தலை சிந்துக நீ என,
பூவில் வந்த புராதனனே புகல்
சாவம் உண்டு; எனது ஆர் உயிர் தந்ததால். 21
அன்ன சாவம் உளது என, ஆண்மையான்,
மின்னும் மௌலியன், மெய்ம்மையன், வீடணன்
கன்னி, என்வயின் வைத்த கருணையாள்,
சொன்னது உண்டு, துணுக்கம் அகற்றுவான். 22
ஆயது உண்மையின், நானும் - அது அன்று எனின்,
மாய்வென் மன்ற;-அறம் வழுவாது என்றும்,
நாயகன் வலி எண்ணியும், நானுடைத்
தூய்மை காட்டவும், இத்துணை தூங்கினேன். 23
ஆண்டுநின்றும், அரக்கன் அகழ்ந்து கொண்டு,
ஈண்டு வைத்தது, இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலைநின்றது;
காண்டி, ஐய! நின் மெய் உணர் கண்களால். 24
தீர்விலேன், இது ஒரு பகலும்; சிலை
வீரன் மேனியை மானும் இவ் வீங்கு நீர்
நார நாள்மலர்ப் பொய்கையை நண்ணுவேன்,
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால். 25
ஆதலான், அது காரியம் அன்று; ஐய!
வேத நாயகன்பால், இனி, மீண்டனை
போதல் காரியம் என்றனள் பூவை; அக்
கோது இலானும், இனையன கூறினான்: 26
அனுமன் சீதையைப் புகழ்ந்து, இராமனிடம் யாது கூறவேண்டும் என வினவல்
நன்று! நன்று! இவ் உலகுடை நாயகன்
தன் துணைப் பெருந்தேவி தவத் தொழில்
என்று சிந்தை களித்து, உவந்து, ஏத்தினான் -
நின்ற சங்கை இடரொடு நீங்கினான். 27
இருளும் ஞாலம் இராவணனால்; இது
தெருளும், நீ இனிச் சில் பகல் தங்குறின்;
மருளும் மன்னவற்கு, யான் சொலும் வாசகம்
அருளுவாய் என்று, அடியின் இறைஞ்சினான். 28
அனுமனிடம் சீதை மனம் கசந்து சொன்ன செய்திகள்
இன்னும், ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னை நோக்கிப் பகர்ந்தது, நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை; இதனை மனக் கொள் நீ. 29
ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர்
தாரம்தான் அலளேனும், தயா எனும்
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும், தன்
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய். 30
ஏத்தும் வென்றி இளையவற்கு, ஈது ஒரு
வார்த்தை கூறுதி: மன் அருளால் எனைக்
காத்து இருந்த தனக்கே கடன், இடை
கோத்த வெஞ் சிறை வீடு என்று கூறுவாய். 31
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்;
இங்கு வந்திலனேஎனின், யாணர் நீர்க்
கங்கை யாற்றங்கரை, அடியேற்கும், தன்
செங் கையால் கடன் செய்க என்று செப்புவாய். 32
மாமியர்க்குச் சொன்ன செய்தி
சிறக்கும் மாமியர் மூவர்க்கும், சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்,
அறத்தின் நாயகன்பால்; அருள் இன்மையால்
மறக்கும்ஆயினும், நீ மறவேல், ஐயா! 33
மீண்டும் இராமனுக்குச் செய்தி சொல்லுதல்
வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
இந்த, இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற, செவ் வரம்
தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய். 34
ஈண்டு நான் இருந்து, இன் உயிர் மாயினும்,
மீண்டு வந்து பிறந்து, தன் மேனியைத்
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம்
வேண்டினாள், தொழுது என்று விளம்புவாய். 35
அரசு வீற்றிருந்து ஆளவும், ஆய் மணிப்
புரசை யானையின் வீதியில் போதவும்,
விரசு கோலங்கள் காண விதி இலேன்;
உரை செய்து என்னை? என் ஊழ்வினை உன்னுவேன். 36
தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்
அன்னை நோய்க்கும், பரதன் அங்கு ஆற்றுறும்
இன்னல் நோய்க்கும், அங்கு ஏகுவது அன்றியே,
என்னை நோக்கி, இங்கு, எங்ஙனம் எய்துமோ? 37
எந்தை, யாய், முதலிய கிளைஞர் யார்க்கும், என்
வந்தனை விளம்புதி; கவியின் மன்னனை,
சுந்தரத் தோளனைத் தொடர்ந்து, காத்துப் போய்,
அந்தம் இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய். 38
அனுமன் சீதையைத் தேற்றுதல்
இத் திறம் அனையவள் இயம்ப, இன்னமும்,
தத்துறல் ஒழிந்திலை, தையல் நீ! எனா,
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை,
ஒத்தன, தெரிவுற உணர்த்தினான்அரோ: 39
வீவாய், நீ இவண்; மெய் அஃதே?
ஓய்வான், இன் உயிர், உய்வானாம்!
போய், வான் அந்நகர் புக்கு அன்றோ?
வேய்வான் மௌலியும்? மெய் அன்றோ? 40
கைத்து ஓடும் சிறை, கற்போயை
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம்!
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்!
இத்தோடு ஒப்பது யாது உண்டே? 41
நல்லோய்! நின்னை நலிந்தோரைக்
கொல்லோம், எம் உயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல, எம் கோனும்
வில்லோடும் செல வேண்டாவோ? 42
நீந்தா இன்னலில் நீந்தாமே,
தேய்ந்து ஆறாத பெருஞ் செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால், எம்மின் உயர்ந்தார் யார்? 43
நன்று ஆய் நல்வினை நல்லோரைத்
தின்றார் தம் குடர் பேய் தின்னக்
கொன்றால் அல்லது, கொள்ளேன் நாடு
என்றானுக்கு, இவை ஏலாவோ? 44
மாட்டாதார் சிறை வைத்தோயை,
மீட்டாம் என்கிலம் மீள்வாமேல்,
நாட்டார், நல்லவர், நல் நூலும்
கேட்டார், இவ் உரை கேட்பாரோ? 45
பூண்டாள் கற்புடையாள் பொய்யாள்,
தீண்டா வஞ்சகர் தீண்டாமுன்,
மாண்டாள் என்று, மனம் தேறி
மீண்டால், வீரம் விளங்காதோ? 46
கெட்டேன்! நீ உயிர் கேதத்தால்
விட்டாய்என்றிடின், வெவ் அம்பால்,
ஒட்டாரோடு, உலகு ஓர் ஏழும்
சுட்டாலும், தொலையா அன்றோ? 47
முன்னே, கொல்வான் மூஉலகும்,
பொன்னே ஓங்கிய போர் வில்லான்,
என்னே! நின் நிலை ஈது என்றால்,
பின்னே, செம்மை பிடிப்பானோ? 48
கோள் ஆனார் உயிர் கோளோடும்,
மூளா வெஞ் சினம், முற்று ஆகா;
மீளாவேல், அயல் வேறு உண்டோ ?
மாளாதோ புவி வானோடும்? 49
தாழித் தண் கடல்தம்மோடும்,
ஏழுக்கு ஏழ் உலகு எல்லாம், அன்று,
ஆழிக் கையவன் அம்பு, அம்மா!
ஊழித் தீ என உண்ணாவோ? 50
படுத்தான், வானவர் பற்றாரை;
தடுத்தான், தீவினை; தக்கோரை
எடுத்தான்; நல்வினை, எந் நாளும்
கொடுத்தான் என்று, இசை கொள்ளாயோ? 51
சில் நாள் நீ இடர் தீராதாய்
இன்னா வைகலின், எல்லோரும்
நல் நாள் காணுதல் நன்று அன்றோ-
உன்னால் நல் அறம் உண்டானால்? 52
புளிக்கும் கண்டகர் புண்ணீருள்
குளிக்கும் பேய் குடையும்தோறும்,
ஒளிக்கும் தேவர் உவந்து, உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ? 53
ஊழியின் இறுதியின் உரும் எறிந்தென,
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி
தாழ் இருங் குருதியால், தரங்க வேலைகள்
ஏழும் ஒன்றாக நின்று, இரைப்பக் காண்டியால். 54
சூல் இரும் பெரு வயிறு அலைத்துச் சோர்வுறும்
ஆலிஅம் கண்ணியர் அறுத்து நீத்தன,
வாலியும் கடப்ப அரு வனப்ப, வான் உயர்
தாலி அம் பெரு மலை தயங்கக் காண்டியால். 55
விண்ணின் நீளிய நெடுங் கழுதும், வெஞ் சிறை
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும்,
புண்ணின் நீர்ப் புணரியில் படிந்து, பூவையர்
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்பக் காண்டியால். 56
கரம் பயில் முரசுஇனம் சுறங்க, கை தொடர்
நரம்பு இயல் இமிழ் இசை நவில, நாடகம்
அரம்பையர் ஆடிய அரங்கின், ஆண் தொழில்
குரங்குகள் முறை முறை முனிப்பக் காண்டியால். 57
புரை உறு புன் தொழில் அரக்கர் புண் மொழி
திரை உறு குருதி யாறு ஈர்ப்பச் செல்வன,
வரை உறு பிணப் பெரும் பிறக்கம் மண்டின,
கரை உறு நெடுங் கடல் தூர்ப்பக் காண்டியால். 58
வினையுடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக,
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான்,
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால்,
கனகம் நீடு இலங்கை நின்று உருகக் காண்டியால். 59
தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின,
பாக்கியம் அனைய நின் பழிப்பு இல் மேனியை
நோக்கிய கண்களை, நுதி கொள் மூக்கினால்,
காக்கைகள் கவர்ந்து கொண்டு, உண்ணக் காண்டியால். 60
மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய
நீல் உறு திசைக் கரி திரிந்து நிற்பன
ஆல் உற அனையவன் தலையை வவ்வி, வில்
கால் உறு கணை தடிந்து, இடுவ காண்டியால். 61
நீர்த்து எழு கணை மழை வழங்க, நீல வான்
வேர்த்தது என்று இடை இடை வீசும் தூசுபோல்,
போர்த்து எழு பொலங் கொடி இலங்கை, பூழியோடு
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆடக் காண்டியால். 62
நீல் நிற அரக்கர்தம் குருதி நீத்தம் நீர்
வேலை மிக்கு, ஆற்றொடு மீள, வேலை சூழ்
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறாக்
காலனும், வெறுத்து, உயிர் காலக் காண்டியால். 63
அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர் கற்பகச் சோலை வாவிவாய்,
பிணங்குறு வால் முறை பிடித்து, மாலைய
கணம் கொடு குரக்குஇனம் குளிப்பக் காண்டியால். 64
செப்புறல் என் பல? தெய்வ வாளிகள்,
இப் புறத்து அரக்கரை முருக்கி ஏகின,
முப் புறத்து உலகையும் முடிக்க மூட்டலால்,
அப் புறத்து அரக்கரும் அவியக் காண்டியால். 65
ஈண்டு, ஒரு திங்கள், இவ் இடரின் வைகுதல்
வேண்டுவது அன்று; யான், விரைவின் வீரனைக்
காண்டலே குறை; பினும் காலம் வேண்டுமோ?
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ? 66
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு; உன் ஆர் உயிர்ச்
சேவகன் திரு உருத் தீண்ட, தீய்ந்திலாப்
பூ இலை; தளிர் இலை; பொரிந்து வெந்திலாக்
கா இலை; கொடி இலை;-நெடிய கான் எலாம். 67
சோகம் வந்து உறுவது, தெளிவு தோய்ந்து அன்றோ?
மேகம் வந்து இடித்து உரும்ஏறு வீழ்கினும்,
ஆகமும் புயங்களும் அழுந்த, ஐந்தலை
நாகம் வந்து அடர்ப்பினும், உணர்வு நாறுமோ? 68
மத்து உறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? 69
இந் நிலை உடையவள் தரிக்கும் என்றியேல்,
பொய்ந் நிலை காண்டி; யான் புகன்ற யாவும், உன்
கைந் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன்;
மெய்ந் நிலை உணர்ந்து, நீ விடைதந்து ஈ என்றான். 70
தீர்த்தனும், கவிக் குலத்து இறையும், தேவி! நின்
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர், மாக் கடல்
தூர்த்தன, இலங்கையைச் சூழ்ந்து, மாக் குரங்கு
ஆர்த்தது கேட்டு, உவந்து இருத்தி, அன்னை! நீ. 71
எண்ண அரும் பெரும் படை, நாளை, இந் நகர்
நண்ணிய பொழுது, அதன் நடுவண், நங்கை! நீ,
விண் உறு கலுழன்மேல் விளங்கும் விண்டுவின்,
கண்ணனை என் நெடும் வெரிநில் காண்டியால். 72
அங்கதன் தோள்மிசை, இளவல், அம் மலை
பொங்கு வெங்கதிர் எனப் பொலிய, போர்ப்படை
இங்கு வந்து இறுக்கும்; நீ இடரும் ஐயமும்
சங்கையும் நீங்குதி; தனிமை நீங்குவாய். 73
குரா வரும் குழலி! நீ குறித்த நாளினே,
விராவு அரு நெடுஞ் சிறை மீட்கிலான்எனின்,
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு,
இராவணன் அவன்; இவன் இராமன் என்றனன். 74
அனுமன் உரையால் சீதை தேறி கூறல்
ஆக இம் மொழி ஆசு இல கேட்டு, அறிவுற்றாள்;
ஓகை கொண்ட் களிக்கும் மனத்தள், உயர்ந்தாள்;
போகை நன்று இவன் என்பது, புந்தியின் வைத்தாள்;
தோகையும், சில வாசகம் இன்னன சொன்னாள்: 75
சேறி, ஐய! விரைந்தனை; தீயவை எல்லாம்
வேறி; யான் இனி ஒன்றும் விளம்பலென்; மேலோய்!
கூறுகின்றன, முன் குறி உற்றன, கோமாற்கு
ஏறும் என்று, இவை சொல்லினள் இன்சொல் இசைப்பாள்: 76
நாகம் ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள்,
ஆகம் வந்து, எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படை விட்டது, மெல்ல விரிப்பாய். 77
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன்?
மன்ன! என்றலும், மாசு அறு கேகயன் மாது, என்
அன்னைதன் பெயர் ஆக என அன்பினொடு, அந் நாள்,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி-மெய்ம்மை தொடர்ந்தோய்! 78
சீதை சூடாமணியை அனுமனிடம் கொடுத்தல்
என்று உரைத்த, இனிது இத்தனை பேர் அடையாளம்;
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள்,
தன் திருத் துகிலில் பொதிவுற்றது, தானே
வென்றது அச் சுடர், மேலொடு கீழ் உற மெய்யால், 79
வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா,
ஏங்கினாள்; அவ் அனுமனும், என்கொல் இது? என்னா,
வீங்கினான்; வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும். 80
மஞ்சு அலங்கு ஒளியோனும், இம் மா நகர் வந்தான்,
அஞ்சலன் என, வெங் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரி சக்கரவாகமுடன், தாழ்
கஞ்சமும், மலர்வுற்றன; காந்தின காந்தம். 81
கூந்தல் மென் மழை கொள் முகில்மேல் எழு கோளின்
வேந்தன் அன்னது, மெல்லியல்தன் திருமேனி
சேந்தது, அந்தம் இல் சேவகன் சேவடி என்னக்
காந்துகின்றது, காட்டினள்; மாருதி கண்டான். 82
சூடையின்மணி கண் மணி ஒப்பது, தொல் நாள்
ஆடையின்கண் இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை, நல்லோய்!
கோடி என்று கொடுத்தனள், மெய்ப் புகழ் கொண்டாள். 83
சூடாமணி பெற்ற அனுமன் விடைபெற்றுச் செல்லுதல்
தொழுது வாங்கினன்; சுற்றிய தூசினன், முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து,
அழுது, மும்மை வலம் கொடு இறைஞ்சினன்; அன்போடு,
எழுது பாவையும், ஏத்தினள்; ஏகினன் இப்பால். 84
மிகைப் பாடல்கள்
சேண் தவா நெறி செல் பகல் தீங்கு அற,
மீண்டு, தம்பியும் வீரனும் ஊர் புக,
பூண்ட பேர் அன்பினோருடன் போதியால்!
ஈண்டு யான் வரம் வேண்டினென், ஈறு இலாய்! 31-1
என்று உரைத்திடுதி; பின், அயோத்தி எய்தினால்,
வென்றி வெஞ் சிலையினான் மனம் விழைந்திடாது;
அன்றியே, மறை நெறிக்கு அருகன் அல்லனால்;
பொன் திணி மௌலியும் புனைதல் இல்லையால். 38-1
கொற்றவன் சரத்தினால் குலைகுலைந்து உக,
இற்றது இவ் இலங்கை என்று, இரங்கி ஏங்கவே,
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக,
பொற்றொடி! நீயும் கண்டு, இரங்கப் போதியால். 65-1
அங்கு, அது அஞ்சி, நடுங்கி, அயன் பதி அண்மி,
இங்கு நின் வரவு என்னை எனக் கனல்வு எய்த,
மங்கை பங்கனொடு எண் திசையும் செல, மற்றோர்
தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய். 77-1
இந்திரன் தரும் மைந்தன் உறும் துயர் யாவும்
அந்தரத்தினில் நின்றவர் கண்டு, இனி, அந்தோ!
எந்தைதன் சரண் அன்றி, ஒர் தஞ்சமும் இன்றால்;
வந்து அவன் சரண் வீழ்க! என உற்றதும் வைப்பாய். 77-2
ஐய நின் சரணம் சரண்! என்று, அவன் அஞ்சி,
வையம் வந்து வணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே,
வெய்யவன் கண் இரண்டொடு போக! என, விட்ட
தெய்வ வெம் படை உற்றுள தன்மை தெரிப்பாய். 77-3
எந்தை, நின் சரணம் சரண்! என்ற இதனால்,
முந்தை உன் குறையும் பொறை தந்தனம்; முந்து உன்
சந்தம் ஒன்று கொடித் திரள் கண்கள்தமக்கே
வந்து ஒர் நன் மணி நிற்க! என, வைத்ததும் வைப்பாய். 77-4
வேகம் விண்டு சயந்தன் வணங்கி, விசும்பில்
போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு பொழிந்தார்;
நாக நம்பன் இளங் கிளை நன்கு உணராத,
பாகு தங்கிய வென்றியின், இன் சொல் பணிப்பாய். 77-5
சுந்தர காண்டம்
6. பொழில் இறுத்த படலம்
விடைபெற்ற அனுமனின் உள்ள நிலை
நெறிக் கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்,
பொறிக் குல மலர்ப் பொழிலிடைக் கடிது போவான்,
சிறுத் தொழில் முடித்து அகல்தல் தீது எனல், தெரிந்தான்;
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான். 1
ஈனம் உறு பற்றலரை எற்றி, எயில் மூதூர்
மீன நிலையத்தின் உக வீசி, விழி மானை
மானவன் மலர்க் கழலில் வைத்தும்இலென் என்றால்,
ஆனபொழுது, எப் பரிசின், நான் அடியன் ஆவேன்? 2
வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால்
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே,
வெஞ் சிறையில் வைத்தும்இலென்; வென்றும்இலென்; என்றால்,
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ? 3
கண்ட நிருதக் கடல் கலக்கினென், வலத்தின்
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள் மலர்க் குழல் பிடித்து,
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ? 4
மீட்டும் இனி, எண்ணும் வினை வேறும் உளதுஅன்றால்;
ஓட்டி இவ் அரக்கரை உலைத்து, என் வலி எல்லாம்
காட்டும் இதுவே கருமம்; அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாவதுகொல்? என்று முயல்கின்றான். 5
இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்,
அப் பெரிய பூசல் செவி சார்தலும், அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால்,
துப்பு உற முருக்கி, உயிர் உண்பல், இது சூதால். 6
வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்,
வெந் திறல் அரக்கனும், விலக்க அரு வலத்தால்
முந்தும்; எனின், அன்னவன் முடித் தலை முசித்து, என்
சிந்தை உறு வெந் துயர் தவிர்த்து, இனிது செல்வேன். 7
அசோக வனத்தை அனுமன் அழித்தல்
என்று நினையா, இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்;
அன்று, உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்;
துன்று கடி காவினை, அடிக்கொடு துகைத்தான். 8
முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த;
மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த;
இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த;
ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த. 9
வேரொடு மறிந்த சில; வெந்த சில; விண்ணில்
காரொடு செறிந்த சில; காலினொடு வேலைத்
தூரொடு பறிந்த சில; தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில; உக்க, சில நெக்க; 10
சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் போர்
ஆனன நுகரக் குளரும் ஆன; அடி பற்றா
மேல் நிமிர விட்டன, விசும்பின் வழி மீப் போய்,
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த. 11
அலைந்தன கடல் திரை; அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக இடிந்தன; குலக் கிரிகளோடு
மலைந்து பொடி உற்றன; மயங்கி நெடு வானத்து
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த. 12
முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும்வகை வீசின, களித்த திசை யானை,
மடப் பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியன ஒத்தன, எயிற்றின் இடை ஞால்வ. 13
விஞ்சை உலகத்தினும், இயக்கர் மலைமேலும்,
துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும்,
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர், பறித்தார்,
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ. 14
பொன் திணி மணிப் பரு மரன், திசைகள் போவ,
மின் திரிவ ஒத்தன; வெயில் கதிரும் ஒத்த;
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர, ஊழின்
தன் திரள் ஒழுக்கி, விழு தாரகையும் ஒத்த. 15
புள்ளினொடு வண்டும், மிஞிறும், கடிகொள் பூவும்,
கள்ளும், முகையும், தளிர்களோடு இனிய காயும்,
வெள்ள நெடு வேலையிடை, மீன்இனம் விழுங்கித்
துள்ளின; மரன் பட, நெரிந்தன துடித்த. 16
தூவிய மலர்த்தொகை சுமந்து, திசைதோறும்,
பூவின் மணம் நாறுவ, புலால் கமழ்கிலாத,
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய, திரை ஆர்கவிகள் அம்மா! 17
இடந்த மணி வேதியும், இறுத்த கடி காவும்,
தொடர்ந்தன துரந்தன படிந்து, நெறி தூர,
கடந்து செலவு என்பது கடந்தது, இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது, நல் நீர். 18
வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும்
வானினிடை வீசிய இரும் பணை மரத்தால்,
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய-
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான. 19
எண் இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே,
தண்ணென் மழைபோல் இடை தழைந்தது; சலத்தால்,
அண்ணல் அனுமான், அடல் இராவணனது, அந் நாள்,
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என, விதித்தான். 20
தேன் உறை துளிப்ப, நிறை புள் பல சிலம்ப,
பூ நிறை மணித் தரு விசும்பினிடை போவ,
மீன் முறை நெருக்க, ஒளி வாளொடு வில் வீச,
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன. 21
சாகம் நெடு மாப் பணை தழைத்தன; தனிப் போர்
நாகம் அனையான் எறிய, மேல் நிமிர்வ-நாளும்
மாக நெடு வானிடை இழிந்து, புனல் வாரும்
மேகம் எனல் ஆய-நெடு மா கடலின் வீழ்வ. 22
ஊனம் உற்றிட, மண்ணின் உதித்தவர்,
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என,
தான கற்பகத் தண்டலை விண்தலம்
போன, புக்கன, முன் உறை பொன்னகர். 23
மணி கொள் குட்டிமம் மட்டித்து, மண்டபம்
துணி படுத்து, அயல் வாவிகள் தூர்த்து, ஒளிர்
திணி சுவர்த் தலம் சிந்தி, செய்ற்கு அரும்
பணி படுத்து, உயர் குன்றம் படுத்துஅரோ; 24
வேங்கை செற்று, மராமரம் வேர் பறித்து,
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்,
பாங்கர் சண்பகப் பத்தி பறித்து, அயல்
மாங்கனிப் பணை மட்டித்து மாற்றியே; 25
சந்தனங்கள் தகர்ந்தன-தாள் பட,
இந்தனங்களின் வெந்து எரி சிந்திட,
முந்து அனங்க வசந்தன் முகம் கெட,
நந்தனங்கள் கலங்கி நடுங்கவே. 26
காமரம் களி வண்டு கலங்கிட,
மா மரங்கள் மடிந்தன, மண்ணொடு;
தாம், அரங்க அரங்கு, தகர்ந்து உக,
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே. 27
குழையும், கொம்பும், கொடியும், குயிற்குலம்
விழையும் தண் தளிர்ச் சூழலும், மென் மலர்ப்
புழையும், வாசப் பொதும்பும், பொலன் கொள் தேன்
மழையும், வண்டும், மயிலும், மடிந்தவே. 28
பவள மாக் கொடி வீசின, பல் மழை
துவளும் மின் என, சுற்றிட; சூழ் வரை,
திவளும் பொன் பணண மா மரம் சேர்ந்தன,
கவள் யானையின் ஓடையின் காந்தவே. 29
பறவை ஆர்த்து எழும் ஓசையும், பல் மரம்
இற எடுத்த இடிக் குரல் ஓசையும்,
அறவன் ஆர்த்து எழும் ஓசையும், அண்டத்தின்
புற நிலத்தையும் கைம்மிகப் போயதே. 30
பாடலம் படர் கோங்கொடும், பண் இசைப்
பாடல் அம் பனி வண்டொடும், பல் திரைப்
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன,-
பாடு அலம் பெற, புள்இனம், பார்ப்பொடே. 31
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்,
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன;
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல்,
விண்தலம் புக நீள் மரம், வீழ்ந்தவே. 32
தாமரைத் தடம் பொய்கை, செஞ் சந்தனம்-
தாம் அரைத்தன ஒத்த; துகைத்தலின்,
காமரம் களி வண்டொடும், கள்ளொடும்,
காமர் அக் கடல் பூக் கடல் கண்டவே. 33
சிந்துவாரம் திசைதொறும் சென்றன,
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன;
தந்து, ஆரம், புதவொடு தாள் அற,
தம் துவாரம் துகள் பட, சாய்ந்தவே. 34
நந்தவானத்து நாள் மலர் நாறின,
நந்த, வானத்து நாள் மலர் நாறின;
சிந்து அ(வ்) வானம் திரிந்து உக, செம் மணி
சிந்த, வால் நந்து இரிந்த, திரைக் கடல்; 35
புல்லும் பொன் பணைப் பல் மணிப் பொன் மரம்,
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால்,
எல்லில் இட்டு விளக்கிய இந்திரன்
வில்லும் ஒத்தன, விண் உற வீசின. 36
ஆனைத் தானமும், ஆடல் அரங்கமும்,
பானத் தானமும், பாய் பரிப் பந்தியும்,
ஏனைத் தார் அணி தேரொடும் இற்றன-
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே. 37
மயக்கு இல் பொன் குல வல்லிகள், வாரி நேர்
இயக்குறத் திசைதோறும் எறிந்தன,
வெயில் கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன,
புயல் கடல்தலை புக்கன போல்வன. 38
பெரிய மா மரமும், பெருங் குன்றமும்,
விரிய வீசலின், மின் நெடும் பொன் மதில்
நெரிய, மாடம் நெருப்பு எழ, நீறு எழ,
இரியல்போன, இலங்கையும் எங்கணும். 39
தொண்டை அம் கனி வாய்ச் சீதை துயக்கினால் என்னைச் சுட்டாய்;
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீசக்
கண்டனை நின்றாய் என்று, காணுமேல், அரக்கன் காய்தல்
உண்டு என வெருவினான்போல், ஒளித்தனன், உடுவின் கோமான். 40
காசு அறு மணியும், பொன்னும், காந்தமும், கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள் ஆகக் குயிற்றிய மதனச் சோலை,
ஆசைகள்தோறும், ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய, விளக்கலாலே, விளங்கின உலகம் எல்லாம். 41
கதறின வெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு; கண்கள்
குதறின பறவை, வேலை குளித்தன; குளித்திலாத
பதறின; பதைத்த; வானில் பறந்தன; பறந்து பார் வீழ்ந்து
உதறின, சிறையை; மீள ஒடுக்கின உலந்து போன. 42
தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்தொறும் தொடுத்த புள்தம்
கூட்டொடும் துறக்கம் புக்க, குன்று எனக் குலவுத் திண் தோள்
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்தன்னால்;
மீட்டு, அவன் கருணைசெய்தால்; பெறும் பதம் விளம்பலாமோ? 43
சீதை சிறை இருந்த மரம் மட்டும் அழியாது திகழ்தல்
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை,
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும்,
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை, ஐயன் வைகும் ஆல் என, நின்றது அம்மா! 44
கதிரவன் தோன்றுதல்
உறு சுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
அறிகுறியாக விட்டாள்; ஆதலான், வறியள் அந்தோ!
செறி குழல் சீதைக்கு அன்று, ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி,
எறி கடல் ஈவது என்ன, எழுந்தனன், இரவி என்பான். 45
வனத்தின் பொழில் அழித்து நின்ற அனுமனின் நிலை
தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து, ஒரு தமியன் நின்றான்,
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்;
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான்;
ஊழியின் இறுதிக் காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான். 46
அனுமனைக் கண்டு அஞ்சிய அரக்கியர் வினாவும், சீதையின் மறுமொழியும்
இன்னன நிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கி,
பொன்மலை என்ன நின்ற புனிதனைப் புகன்று நோக்கி,
அன்னை! ஈது என்னை மேனி? யார்கொல்? என்று, அச்சம் உற்றார்,
நன்னுதல்தன்னை நோக்கி, அறிதியோ நங்கை? என்றார். 47
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்,
தூயவர் துணிதல் உண்டோ , நும்முடைச் சூழல் எல்லாம்?
ஆய மான் எய்த, அம்மான், இளையவன், அரக்கர் செய்த
மாயம் என்று உரைக்கவேயும், மெய்என மையல் கொண்டேன். 48
அனுமன் வேள்வி மண்டபத்தை அழித்தல்
என்றனள்; அரக்கிமார்கள் வயிறு அலைத்து, இரியல்போகி,
குன்றமும், உலகும், வானும், கடல்களும், குலையப் போனார்;
நின்றது ஓர் சயித்தம் கண்டான்; நீக்குவன் இதனை என்னா,
தன் தடக் கைகள் நீட்டிப் பற்றினன், தாதை ஒப்பான். 49
கண் கொள அரிது; மீது கார் கொள அரிது; திண் கால்
எண் கொள அரிது; இராவும் இருள் கொள அரிது; மாக
விண் கொள நிவந்த மேரு வெள்குற, வெதும்பி உள்ளம்
புண் கொள, உயர்ந்தது; இப் பார் பொறை கொள அரிது போலாம். 50
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி, புதிய பால் பொழிவது ஒக்கும்
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன,
அம் கை பத்து-இரட்டியான்தன் ஆணையால், அழகு மாணப்
பங்கயத்து ஒருவன் தானே, பசும் பொனால் படைத்தது அம்மா! 51
தூண் எலாம் சுடரும் காசு; சுற்று எலாம் முத்தம்; செம் பொன்
பேணல்ஆம் மணியின் பத்தி, பிடர் எலாம்; ஒளிகள் விம்ம,
சேண் எலாம் விரியும் கற்றைச் சேயொளிச் செல்வற்கேயும்
பூணலாம்; எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே. 52
வெள்ளியங்கிரியை, பண்டு, வெந் தொழில் அரக்கன், வேரோடு
அள்ளினன் என்னக் கேட்டான்; அத் தொழிற்கு இழிவு தோன்ற,
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல,
வள் உகிர்த் தடக் கைதன்னால் மண்நின்றும் வாங்கி, அண்ணல், 53
விட்டனன், இலங்கைதன்மேல்; விண் உற விரிந்த மாடம்
பட்டன, பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற;
சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர், அரக்கர்தாமும்;
கெட்டனர் வீரர், அம்மா!-பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்? 54
சோலை காக்கும் பருவத் தேவர் இராவணனிடம் செய்தி தெரிவித்தல்
நீர் இடு துகிலர்; அச்ச நெருப்பு இடு நெஞ்சர்; நெக்குப்
பீரிடும் உருவர்; தெற்றிப் பிணங்கிடு தாளர்; பேழ் வாய்,
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர்; ஓடி உற்றார்;-
பார் இடு பழுவச் சோலை பாலிக்கும் பருவத் தேவர். 55
அரி படு சீற்றத்தான்தன் அருகு சென்று, அடியின் வீழ்ந்தார்;
கரி படு திசையின் நீண்ட காவலாய்! காவல் ஆற்றோம்!
கிரி படு குவவுத் திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச,
எரி படு துகிலின், நொய்தின் இற்றது கடி கா என்றார். 56
சொல்லிட எளியது அன்றால்; சோலையை, காலின், கையின்,
புல்லொடு துகளும் இன்றி, பொடிபட நூறி, பொன்னால்
வில் இடு வேரம்தன்னை வேரொடு வாங்கி வீச,
சில் இடம் ஒழிய, தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார். 57
இராவணன் இகழ்ந்து நகுதலும், காவலர் அனுமன் செய்லை வியந்து கூறலும்
ஆடகத் தருவின் சோலை பொடி படுத்து, அரக்கர் காக்கும்
தேட அரு வேரம் வாங்கி, இலங்கையும் சிதைத்தது அம்மா!
கோடரம் ஒன்றே! நன்று இது! இராக்கதர் கொற்றம்! சொற்றல்
மூடரும் மொழியார் என்ன மன்னனும் முறுவல் செய்தான். 58
தேவர்கள், பின்னும், மன்ன! அதன் உருச் சுமக்கும் திண்மைப்
பூவலயத்தை அன்றோ புகழ்வது! புலவர் போற்றும்
மூவரின் ஒருவன் என்று புகல்கினும், முடிவு இலாத
ஏவம், அக் குரங்கை, ஐய! காணுதி இன்னே என்றார். 59
அனுமனின் ஆரவாரம்
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட,
எண் திசை சுமந்த மாவும், தேவரும் இரியல்போக,
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர,
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என, அனுமன் ஆர்த்தான். 60
மிகைப் பாடல்கள்
எனப் பதம் வணங்கி, அன்னார் இயம்பிய வார்த்தை கேளா,
கனக் குரல் உருமு வீழ, கனமலை சிதற, தேவர்
மனத்து அறிவு அழிந்து சோர, மாக் கடல் இரைப்புத் தீர
சினத்து வாய் மடித்து, தீயோன், நகைத்து, இவை செப்பலுற்றான். 57-1