MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    திருமாலை தனியன்

    திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது

    மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
    கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
    திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
    பெருமானை, எப்பொழுதும் பேசு.

    ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை

    872:
    காவலிற் புலனை வைத்துக்
    கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
    நாவலிட் டுழிதரு கின்றோம்
    நமன்தமர் தலைகள் மீதே,
    மூவுல குண்டு மிழ்ந்த
    முதல்வ.நின் நாமம் கற்ற,
    ஆவலிப் புடைமை கண்டாய்
    அரங்கமா நகரு ளானே. (2) (1)

    873:
    பச்சைமா மலைபோல் மேனி
    பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா. அமர ரேறே.
    ஆயர்தம் கொழுந்தே. என்னும்,
    இச்சுவை தவிர யான்போய்
    இந்திர லோக மாளும்,
    அச்சுவை பெறினும் வேண்டேன்
    அரங்கமா நகரு ளானே. (2) (2)

    874:
    வேதநூல் பிராயம் நூறு
    மனிசர்தாம் புகுவ ரேலும்,
    பாதியு முறங்கிப் போகும்
    நின்றதில் பதினை யாண்டு,
    பேதைபா லகன தாகும்
    பிணிபசி மூப்புத் துன்பம்,
    ஆதலால் பிறவி வேண்டேன்
    அரங்கமா நகரு ளானே. (3)

    875:
    மொய்த்தவல் வினையுள் நின்று
    மூன்றெழுத் துடைய பேரால்,
    கத்திர பந்து மன்றே
    பராங்கதி கண்டு கொண்டான்,
    இத்தனை யடிய ரானார்க்
    கிரங்கும்நம் மரங்க னாய
    பித்தனைப் பெற்று மந்தோ.
    பிறவியுள் பிணங்கு மாறே. (4)

    876:
    பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்
    பெரியதோ ரிடும்பை பூண்டு
    உண்டிராக் கிடக்கும் போது
    உடலுக்கே கரைந்து நைந்து,
    தண்டுழாய் மாலை மார்பன்
    தமர்களாய்ப் பாடி யாடி,
    தொண்டுபூண் டமுத முண்ணாத்
    தொழும்பர்சோ றுகக்கு மாறே. (5)

    877:
    மறம்சுவர் மதிளெ டுத்து
    மறுமைக்கே வெறுமை பூண்டு,
    புறம்சுவ ரோட்டை மாடம்
    புரளும்போ தறிய மாட்டீர்,
    அறம்சுவ ராகி நின்ற
    அரங்கனார்க் காட்செய் யாதே,
    புறம்சுவர் கோலஞ் செய்து
    புள்கவ்வக் கிடக்கின் றீரே. (6)

    878:
    புலையற மாகி நின்ற
    புத்தொடு சமண மெல்லாம்,
    கலையறக் கற்ற மாந்தர்
    காண்பரோ கேட்ப ரோதாம்,
    தலையறுப் புண்டும் சாவேன்
    சத்தியங் காண்மின் ஐயா,
    சிலையினா லிலங்கை செற்ற
    தேவனே தேவ னாவான். (7)

    879:
    வெறுப்பொடு சமணர் முண்டர்
    விதியில்சாக் கியர்கள், நின்பால்
    பொறுப்பரி யனகள் பேசில்
    போவதே நோய தாகி
    குறிப்பெனக் கடையு மாகில்
    கூடுமேல் தலையை ஆங்கே,
    அறுப்பதே கருமங் கண்டாய்
    அரங்கமா நகரு ளானே. (8)

    880:
    மற்றுமோர் தெய்வ முண்டே
    மதியிலா மானி டங்காள்,
    உற்றபோ தன்றி நீங்கள்
    ஒருவனென் றுணர மாட்டீர்,
    அற்றமே லொன்ற றீயீர்
    அவனல்லால் தெய்வ மில்லை,
    கற்றினம் மேய்த்த வெந்தை
    கழலிணை பணிமி னீரே. (9)

    881:
    நாட்டினான் தெய்வ மெங்கும்
    நல்லதோ ரருள்தன் னாலே,
    காட்டினான் திருவ ரங்கம்
    உய்பவர்க் குய்யும் வண்ணம்,
    கேட்டிரே நம்பி மீர்காள்.
    கெருடவா கனனும் நிற்க,
    சேட்டைதன் மடிய கத்துச்
    செல்வம்பார்த் திருக்கின் றீரே. (10)
    882:
    ஒருவில்லா லோங்கு முந்நீர்
    அனைத்துல கங்க ளுய்ய,
    செருவிலே யரக்கர் கோனைச்
    செற்றநம் சேவ கனார்,
    மருவிய பெரிய கோயில்
    மதிள்திரு வரங்க மென்னா,
    கருவிலே திருவி லாதீர்.
    காலத்தைக் கழிக்கின் றீரே. (11)

    883:
    நமனும்முற் கலனும் பேச
    நரகில்நின் றார்கள் கேட்க,
    நரகமே சுவர்க்க மாகும்
    நாமங்க ளுடைய நம்பி,
    அவனதூ ரரங்க மென்னாது
    அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்,
    கவலையுள் படுகின் றாரென்
    றதனுக்கே கவல்கின் றேனே. (12)

    884:
    எறியுநீர் வெறிகொள் வேலை
    மாநிலத் துயிர்க ளெல்லாம்,
    வெறிகொள்பூந் துளவ மாலை
    விண்ணவர் கோனை யேத்த,
    அறிவிலா மனித ரெல்லாம்
    அரங்கமென் றழைப்ப ராகில்,
    பொறியில்வாழ் நரக மெல்லாம்
    புல்லெழுந் தொழியு மன்றே? (13)

    885:
    வண்டின முரலும் சோலை
    மயிலினம் ஆலும் சோலை,
    கொண்டல்மீ தணவும் சோலை
    குயிலினம் கூவும் சோலை,
    அண்டர்கோ னமரும் சோலை
    அணிதிரு வரங்க மென்னா,
    மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை
    விலக்கிநாய்க் கிடுமி னீரே. (2) (14)

    886:
    மெய்யர்க்கே மெய்ய னாகும்
    விதியிலா வென்னைப் போல,
    பொய்யர்க்கே பொய்ய னாகும்
    புட்கொடி யுடைய கோமான்,
    உய்யப்போ முணர்வி னார்கட்
    கொருவனென் றுணர்ந்த பின்னை,
    ஐயப்பா டறுத்துத் தோன்றும்
    அழகனூ ரரங்க மன்றே? (15)

    887:
    சூதனாய்க் கள்வ னாகித்
    தூர்த்தரோ டிசைந்த காலம்,
    மாதரார் கயற்க ணென்னும்
    வலையுள்பட் டழுந்து வேனை,
    போதரே யென்று சொல்லிப்
    புந்தியில் புகுந்து, தன்பால்
    ஆதரம் பெருக வைத்த
    அழகனூ ரரங்க மன்றே? (16)

    888:
    விரும்பிநின் றேத்த மாட்டேன்
    விதியிலேன் மதியொன் றில்லை,
    இரும்புபோல் வலிய நெஞ்சம்
    இறையிறை யுருகும் வண்ணம்
    சுரும்பமர் சோலை சூழ்ந்த
    அரங்கமா கோயில் கொண்ட,
    கரும்பினைக் கண்டு கொண்டேன்
    கண்ணிணை களிக்கு மாறே. (17)

    889:
    இனிதிரைத் திவலை மோத
    எறியும்தண் பரவை மீதே,
    தனிகிடந் தரசு செய்யும்
    தாமரைக் கண்ண னெம்மான்,
    கனியிருந் தனைய செவ்வாய்க்
    கண்ணணைக் கண்ட கண்கள்,
    பனியரும் புதிரு மாலோ
    எஞ்செய்கேன் பாவி யேனே. (18)

    890:
    குடதிசை முடியை வைத்துக்
    குணதிசை பாதம் நீட்டி,
    வடதிசை பின்பு காட்டித்
    தென்திசை யிலங்கை நோக்கி,
    கடல்நிறக் கடவு ளெந்தை
    அரவணைத் துயிலு மாகண்டு,
    உடலெனக் குருகு மாலோ
    எஞ்செய்கே னுலகத் தீரே. (2) (19)

    891:
    பாயுநீ ரரங்கந் தன்னுள்
    பாம்பணைப் பள்ளி கொண்ட,
    மாயனார் திருநன் மார்பும்
    மரகத வுருவும் தோளும்,
    தூய தாமரைக் கண்களும்
    துவரிதழ் பவள வாயும்,
    ஆயசீர் முடியும் தேசும்
    அடியரோர்க் ககல லாமே? (20)
    892:
    பணிவினால் மனம தொன்றிப்
    பவளவா யரங்க னார்க்கு,
    துணிவினால் வாழ மாட்டாத்
    தொல்லைநெஞ் சே.நீ சொல்லாய்,
    அணியனார் செம்பொ னாய
    அருவரை யனைய கோயில்,
    மணியனார் கிடந்த வாற்றை
    மனத்தினால் நினைக்க லாமே? (21)

    893:
    பேசிற்றே பேச லல்லால்
    பெருமையொன் றுணர லாகாது,
    ஆசற்றார் தங்கட் கல்லால்
    அறியலா வானு மல்லன்,
    மாசற்றார் மனத்து ளானை
    வணங்கிநா மிருப்ப தல்லால்,
    பேசத்தா னாவ துண்டோ ?
    பேதைநெஞ் சே.நீ சொல்லாய். (22)

    894:
    கங்கயிற் புனித மாய
    காவிரி நடுவு பாட்டு,
    பொங்குநீர் பரந்து பாயும்
    பூம்பொழி லரங்கந் தன்னுள்,
    எங்கள்மா லிறைவ னீசன்
    கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
    எங்ஙனம் மறந்து வாழ்கேன்
    ஏழையே னேழை யேனே. (23)

    895:
    வெள்ளநீர் பரந்து பாயும்
    விரிபொழி லரங்கந் தன்னுள்,
    கள்ளனார் கிடந்த வாறும்
    கமலநன் முகமும் கண்டு
    உள்ளமே. வலியை போலும்
    ஒருவனென் றுணர மாட்டாய்,
    கள்ளமே காதல் செய்துன்
    கள்ளத்தே கழிக்கின் றாயே. (24)

    896:
    குளித்துமூன் றனலை யோம்பும்
    குறிகொளந் தணமை தன்னை,
    ஒளித்திட்டே னென்க ணில்லை
    நின்கணும் பத்த னல்லேன்,
    களிப்பதென் கொண்டு நம்பீ.
    கடல்வண்ணா. கதறு கின்றேன்,
    அளித்தெனக் கருள்செய் கண்டாய்
    அரங்கமா நகரு ளானே. (25)

    897:
    போதெல்லாம் போது கொண்டுன்
    பொன்னடி புனைய மாட்டேன்,
    தீதிலா மொழிகள் கொண்டுன்
    திருக்குணம் செப்ப மாட்டேன்,
    காதலால் நெஞ்ச மன்பு
    கலந்திலே னதுதன் னாலே,
    ஏதிலே னரங்கர்க்கு எல்லே.
    எஞ்செய்வான் தோன்றி னேனே. (26)

    898:
    குரங்குகள் மலையை தூக்கக்
    குளித்துத்தாம் புரண்டிட் டோ டி,
    தரங்கநீ ரடைக்க லுற்ற
    சலமிலா அணிலம் போலேன்,
    மரங்கள்போல் வலிய நெஞ்சம்
    வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
    அரங்கனார்க் காட்செய் யாதே
    அளியத்தே னயர்க்கின் றேனே. (27)

    899:
    உம்பரா லறிய லாகா
    ஒளியுளார் ஆனைக் காகி,
    செம்புலா லுண்டு வாழும்
    முதலைமேல் சீறி வந்தார்,
    நம்பர மாய துண்டே?
    நாய்களோம் சிறுமை யோரா,
    எம்பிராற் காட்செய் யாதே
    எஞ்செய்வான் தோன்றி னேனே. (28)

    900:
    ஊரிலேன் காணி யில்லை
    உறவுமற் றொருவ ரில்லை,
    பாரில்நின் பாத மூலம்
    பற்றிலேன் பரம மூர்த்தி,
    காரொளி வண்ண னே.(என்)
    கண்ணனே. கதறு கின்றேன்,
    ஆருளர்க் களைக் ணம்மா.
    அரங்கமா நகரு ளானே. (29)

    901:
    மனத்திலோர் தூய்மை யில்லை
    வாயிலோ ரிஞ்சொ லில்லை,
    சினத்தினால் செற்றம் நோக்கித்
    தீவிளி விளிவன் வாளா,
    புனத்துழாய் மாலை யானே.
    பொன்னிசூழ் திருவ ரங்கா,
    எனக்கினிக் கதியென் சொல்லாய்
    என்னையா ளுடைய கோவே. (30)
    902:
    தவத்துளார் தம்மி லல்லேன்
    தனம்படத் தாரி லல்லேன்,
    உவர்த்தநீர் போல வென்றன்
    உற்றவர்க் கொன்று மல்லேன்,
    துவர்த்தசெவ் வாயி னார்க்கே
    துவக்கறத் துரிச னானேன்,
    அவத்தமே பிறவி தந்தாய்
    அரங்கமா நகரு ளானே. (31)

    903:
    ஆர்த்துவண் டலம்பும் சோலை
    அணிதிரு வரங்கந் தன்னுள்,
    கார்த்திர ளனைய மேனிக்
    கண்ணனே. உன்னைக் காணும்,
    மார்க்கமொ றறிய மாட்டா
    மனிசரில் துரிச னாய,
    மூர்க்கனேன் வந்து நின்றேன்,
    மூர்க்கனேன் மூர்க்க னேனே. (32)

    904:
    மெய்யெல்லாம் போக விட்டு
    விரிகுழ லாரில் பட்டு,
    பொய்யெலாம் பொதிந்து கொண்ட
    போட்கனேன் வந்து நின்றேன்,
    ஐயனே. அரங்க னே.உன்
    அருளென்னு மாசை தன்னால்,
    பொய்யனேன் வந்து நின்றேன்
    பொய்யனேன் பொய்ய னேனே. (33)

    905:
    உள்ளத்தே யுறையும் மாலை
    உள்ளுவா னுணர்வொன் றில்லா,
    கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
    தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
    உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
    உடனிருந் தறிதி யென்று,
    வெள்கிப்போ யென்னுள் ளேநான்
    விலவறச் சிரித்திட் டேனே. (34)

    906:
    தாவியன் றுலக மெல்லாம்
    தலைவிளாக் கொண்ட எந்தாய்,
    சேவியே னுன்னை யல்லால்
    சிக்கெனச் செங்கண் மாலே,
    ஆவியே.அமுதே என்றன்
    ஆருயி ரனைய எந்தாய்,
    பாவியே னுன்னை யல்லால்
    பாவியேன் பாவி யேனே. (35)

    907:
    மழைக்கன்று வரைமு னேந்தும்
    மைந்தனே.மதுர வாறே,
    உழைக்கன்றே போல நோக்கம்
    உடையவர் வலையுள் பட்டு,
    உழைக்கின்றேற் கென்னை நோக்கா
    தொழிவதே,உன்னை யன்றே
    அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி.
    அரங்கமா நகரு ளானே. (36)

    908:
    தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்
    திருவரங்கங் கத்துள் ளோங்கும்,
    ஒளியுளார் தாமே யன்றே
    தந்தையும் தாயு மாவார்,
    எளியதோ ரருளு மன்றே
    எந்திறத் தெம்பி ரானார்,
    அளியன்நம் பையல் என்னார்
    அம்மவோ கொடிய வாறே. (37)

    909:
    மேம்பொருள் போக விட்டு
    மெய்ம்மையை மிகவு ணர்ந்து,
    ஆம்பரி சறிந்து கொண்டு
    ஐம்புல னகத்த டக்கி,
    காம்புறத் தலைசி ரைத்துன்
    கடைத்தலை யிருந்து,வாழும்
    சோம்பரை உகத்தி போலும்
    சூழ்புனல் அரங்கத் தானே. (2) (38)

    910:
    அடிமையில் குடிமை யில்லா
    அயல்சதுப் பேதி மாரில்,
    குடிமையில் கடைமை பட்ட
    குக்கரில் பிறப்ப ரேலும்,
    முடியினில் துளபம் வைத்தாய்.
    மொய்கழற் கன்பு செய்யும்,
    அடியரை யுகத்தி போலும்
    அரங்கமா நகரு ளானே. (39)

    911:
    திருமறு மார்வ.நின்னைச்
    சிந்தையுள் திகழ வைத்து,
    மருவிய மனத்த ராகில்
    மாநிலத் துயிர்க ளெல்லாம்,
    வெருவரக் கொன்று சுட்டிட்
    டீட்டிய வினைய ரேலும்,
    அருவினைப் பயன துய்யார்
    அரங்கமா நகரு ளானே. (40)
    912:
    வானுளா ரறிய லாகா
    வானவா. என்ப ராகில்,
    தேனுலாந் துளப மாலைச்
    சென்னியாய். என்ப ராகில்,
    ஊனமா யினகள் செய்யும்
    ஊனகா ரகர்க ளேலும்,
    போனகம் செய்த சேடம்
    தருவரேல் புனித மன்றே? (41)

    913:
    பழுதிலா வொழுக லாற்றுப்
    பலசதுப் பேதி மார்கள்,
    இழிகுலத் தவர்க ளேலும்
    எம்மடி யார்க ளாகில்,
    தொழுமினீர் கொடுமின் கொள்மின்.
    என்றுநின் னோடு மொக்க,
    வழிபட வருளி னாய்போன்ம்
    மதிள்திரு வரங்கத் தானே. (42)

    913:
    அமரவோ ரங்க மாறும்
    வேதமோர் நான்கு மோதி,
    தமர்களில் தலைவ ராய
    சாதியந் தணர்க ளேலும்,
    நுமர்களைப் பழிப்ப ராகில்
    நொடிப்பதோ ரளவில், ஆங்கே
    அவர்கள்தாம் புலையர் போலும்
    அரங்கமா நகரு ளானே. (43)

    915:
    பெண்ணுலாம் சடையி னானும்
    பிரமனு முன்னைக் காண்பான்,
    எண்ணிலா வூழி யூழி
    தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
    விண்ணுளார் வியப்ப வந்து
    ஆனைக்கன் றருளை யீந்த
    கண்ணறா, உன்னை யென்னோ
    களைகணாக் கருது மாறே. (2) (44)

    916:
    வளவெழும் தவள மாட
    மதுரைமா நகரந் தன்னுள்,
    கவளமால் யானை கொன்ற
    கண்ணனை அரங்க மாலை,
    துவளத்தொண் டாய தொல்சீர்த்
    தொண்டர டிப்பொ டிசொல்,
    இளையபுன் கவிதை யேலும்
    எம்பிறார் கினிய வாறே. (2) (45)

    தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்