இரண்டாம்பத்து
முதல்திருமொழி - மெச்சூது
(பூச்சிகாட்டி விளையாடுதல்.)
கலித்தாழிசை
118:
மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். (2) 1.
119:
மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 2.
120:
காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 3.
121:
இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 4.
122:
சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 5.
123:
செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 6.
124:
தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7.
125:
கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத்
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 8.
126:
பதகமுதலைவாய்ப் பட்டகளிறு
கதறிக்கைகூப்பி என்கண்ணா. கண்ணா. என்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 9.
தரவு கொச்சகக்கலிப்பா
127:
வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. (2) 10.
இரண்டாம் திருமொழி - அரவணையாய்
(கண்ணனை முலையுண்ண அழைத்தல்)
கலிவிருத்தம்
128:
அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ
வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. (2) 1.
129:
வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. 2.
130:
தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா.
உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. 3.
131:
கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4.
132:
தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா.
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. 5.
133:
மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா. முலையுணாயே. 6.
134:
பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா. நீமுலையுணாயே. 7.
135:
இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே. 8.
136:
அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம
அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே. முலையுணாயே. 9.
137:
ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே உத்தமா. நீமுலையுணாயே. 10.
138:
வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. (2) 11.
மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
(பன்னிருநாமம்: காதுகுத்துதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
139:
போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன்
காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னைத்
தனியேபோய்எங்கும்திரிதி
பேய்ப்பால்முலையுண்டபித்தனே.
கேசவநம்பீ. உன்னைக்காதுகுத்த
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2) 1.
140:
வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா. இங்கேவாராய்
எண்ணற்கரியபிரானே. திரியை
எரியாமேகாதுக்கிடுவன்
கண்ணுக்குநன்றுமழகுடைய
கனகக்கடிப்பும்இவையா. 2.
141:
வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன்
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன்
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே.
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே. இங்கேவாராய். 3.
142:
வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா. நீசொல்லுக்கொள்ளாய்
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான். இங்கேவாராய். 4.
143:
சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய்
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ? நம்பீ.
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே. திரியிடவொட்டில்
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே. நீஇங்கேவாராய். 5.
144:
விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ.
கண்ணா. என்கார்முகிலே.
கடல்வண்ணா. காவலனே. முலையுணாயே. 6.
145:
முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப்
பசுநிரைமேய்த்தாய்.
சிலையொன்றுஇறுத்தாய். திரிவிக்கிரமா.
திருவாயர்பாடிப்பிரானே.
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே. 7.
146:
என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ.
உன்காதுகள்தூரும்
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே.
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே. 8.
147:
மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித்
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக்
காணவேகட்டிற்றிலையே?
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா. உன்காதுதூரும்
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே. 9.
148:
காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்?
காதுகள்வீங்கியெறியில்
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா. என்தன்கண்ணே. 10.
149:
கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்
கடிகமழ்பூங்குழலார்கள்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே. எங்களமுதே.
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன்
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா. இங்கேவாராய். 11.
150:
வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்?
காதுகள்நொந்திடும்கில்லேன்
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளைச்
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா. இங்கேவாராய். 12.
151:
வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே. 13.
நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
(கண்ணனை நீராட அழைத்தல்.)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
152:
வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு
திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். (2) 1.
153:
கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய். நீபிறந்ததிருவோணம்
இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான். ஓடாதேவாராய். 2.
154:
பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய். 3.
155:
கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே.
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே. நீராடவாராய். 4.
156:
அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ.
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான். இங்கேவாராய். 5.
157:
எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே.
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணம்அழகியநம்பீ. மஞ்சனமாடநீவாராய். 6.
158:
கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்
பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே.
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய். 7.
159:
கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின்திறத்தேனல்லன்நம்பீ. நீபிறந்ததிருநல்நாள்
நன்றுநீநீராடவேண்டும் நாரணா. ஓடாதேவாராய். 8.
160:
பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய். 9.
161:
கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. (2) 10.
ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
(கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்)
கலித்தாழிசை
162:
பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை
முன்னையமரர் முதல்தனிவித்தினை
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2) 1.
163:
பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும் மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 2.
164:
திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 3.
165:
பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய். 4.
166:
கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த பரமன்திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்.
ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய். 5.
167:
கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்.
கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய். 6.
168:
பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்
வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்.
மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 7.
169:
உந்தியெழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன்
கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்.
தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய். 8.
170:
மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய். 9.
தரவு கொச்சகக்கலிப்பா
171:
கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2) 10.
ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
(காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்)
கலித்தாழிசை
172:
வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. (2) 1.
173:
கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா. 2.
174:
கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 3.
175:
ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன்
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல்
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா. 4.
176:
சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல்
ஊரொன்றுவேண்டிப் பெறாதஉரோடத்தால்
பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத்
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 5.
177:
ஆலத்திலையான் அரவினணைமேலான்
நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான்
பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா. 6.
178:
பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில்
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட அக்
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா. 7.
179:
மின்னிடைச் சீதைபொருட்டா இலங்கையர்
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ
தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா. 8.
180:
தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா. 9.
தரவு கொச்சகக்கலிப்பா
181:
அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன்
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர்
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே. 10.
ஏழாம் திருமொழி - ஆனிரை
(கண்ணனைப் பூச்சூட அழைத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
182:
ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2) 1.
183:
கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்.
திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய்.
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். 2.
184:
மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய்.
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். 3.
185:
தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். 4.
186:
புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய்.
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்.
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். 5.
187:
எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி.
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்.
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். 6.
188:
குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே.
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா.
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்.
குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய். 7.
189:
சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்.
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்.
ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய்.
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8.
190:
அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்.
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா.
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்.
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய். 9.
191:
செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2) 10.
எட்டாம் திருமொழி - இந்திரனோடு
(கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
192:
இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்.
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். (2) 1.
193:
கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்.
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்.
நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய். 2.
194:
செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்.
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்.
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான். காப்பிடவாராய். 3.
195:
கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே. வெள்ளறைநின்றாய். கண்டாரோடேதீமைசெய்வாய்.
வண்ணமேவேலையதொப்பாய். வள்ளலே. காப்பிடவாராய். 4.
196:
பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான். நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய். ஞானச்சுடரே. உன்மேனி
சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய். 5.
197:
கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்.
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே. காப்பிடவாராய். 6.
198:
கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே. நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்.
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய். 7.
199:
இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய்.
கும்பக்களிறட்டகோவே. கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே.
செம்பொன்மதிள்வெள்ளறையாய். செல்வத்தினால்வளர்பிள்ளாய்.
கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய். 8.
200:
இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி. சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய்.
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய். 9.
201:
போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. (2) 10.
ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
(வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
202:
வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். (2) 1.
203:
வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ. வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்துக்
காகுத்தநம்பீ. வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்.
அஞ்சனவண்ணா. அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே. 2.
204:
திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான் வழக்கோ? அசோதாய்.
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே. 3.
205:
கொண்டல்வண்ணா. இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய். இங்கேபோதராயே
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா. இங்கேபோதராயே
உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான்கற்றகல்விதானே. 4.
206:
பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 5.
207:
போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா.
குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா.
வேதப்பொருளே. என்வேங்கடவா.
வித்தகனே. இங்கேபோதராயே. 6.
208:
செந்நெலரிசிசிறுபருப்புச்
செய்த அக்காரம்நறுநெய்பாலால்
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே. 7.
209:
கேசவனே. இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா. இங்கேபோதராயே. 8.
210:
கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப்
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே. 9.
211:
சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே. 10.
212:
வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன்
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே. (2) 11.
பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
(ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்)
கலித்தாழிசை
213:
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2) 1.
214:
குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். 2.
215:
தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். 3.
216:
தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். 4.
217:
ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். 5.
218:
தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். 6.
219:
மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும். 7.
220:
தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். 8.
221:
வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும். 9.
தரவு கொச்சகக்கலிப்பா
222:
அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2) 10.