கோதை நாச்சியார் தாலாட்டு
( ஆசிரியர் யார் என தெரியவில்லை,
S.வையாபுரிப் பிள்ளை, B.A., B.L., உபசரித்தது)
காப்பு
சீரார்ந்த கோதையின்மேற் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழநிதம் பாடவே வேணுமென்று
காரூர்ந்த தென்புதுவைக் கண்ணன் திருக்கோயில்
ஏரார்ந்த சேனையர்கோன் இணையடியுங் காப்பாமே.
நூல்
தென்புதுவை விஷ்ணுசித்தன் திருவடியை நான்தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான்கூறத் 1
தெங்கமுகு மாலானைச் சிறந்தோங்கும் ஸ்ரீ ரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே. 2
சீரார்ந்த கோயில்களும் சிறப்பாகக் கோபுரமும்
காரார்ந்த மேடைகளும் கஞ்சமலர் வாவிகளும் 3
மின்னார் மணிமகுடம் விளங்க அலங்க்ருதமாய்ப்
பொன்னாலே தான்செய்த பொற்கோயில் தன்னழகும் 4
கோபுரத்து உன்னிதமும் கொடுங்கை நவமணியும்
தார்புரத் தரசிலையும் சந்தனத் திருத்தேரும் 5
ஆரார் தலத்தழகும் அம்மறையோர் மால்திரமும்
சீரார் தனத்தழகும் சிறப்பான உத்ஸவமும் 6
வேத மறையோரும் மேன்மைத் தலத்தோரும்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தான்முழங்க 7
பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணன்
ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான்துதிக்கக் 8
கச்சுமுலை மாதர் கவிகள் பலபாட
அச்சுதனர் சங்கம் அழகால் தொனிவிளங்க 9
தித்தியுடன் வீணை சகமுழுதுந் தான்கேட்க
மத்தளமுங் கைமணியும் அந்தத் தவிலுடனே 10
உத்தமர் வீதி உலாவியே தான் விளங்கப்
................................... 11
பேரிகையும் எக்காளம் பின்பு செகண்டிமுதல்
பூரிகை நாதம் பூலோகம் தான்முழங்கத் 12
தும்புருவும் நாரதரும் துய்யகுழ லெடுத்துச்
செம்பவள வாயால் திருக்கோயில் தான்பாட 13
அண்டர்கள் புரந்திரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த 14
வண்டுகளும் பாட மயிலினங்கள் தான்பாடத்
தொண்டர்களும் பாடத் தொழுது பணிந்தேத்த 15
பண்பகரும் பாவலர்கள் பல்லாண் டிசைபாட
செண்பகப்பூ வாசனைகள் திருக்கோயில் தான்வீச 16
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர்தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தான்போடக் 17
குன்றுமணி மாடங்கள் கோபுரங்கள் தான்துலங்கச்
சென்றுநெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 18
அன்னம் நடைபயில் அரிவையர் மடலெழுதச்
சென்னல் குலைசொரியச் செங்குவளை தான்மலரக் 19
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர்விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க 20
மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ளத்
தேன்கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் 21
சென்னல் விளையச் செகமுழுதும் தான்செழிக்கக்
கன்னல் விளையக் கமுகமரம் தான்பழுக்க 22
வெம்புலிகள் வாழும் மேரு சிகரத்தில்
அம்புலிகைக் கவளமென்று தும்பி வழிபறிக்கும் 23
மும்மாரி பெய்து முழுச் சம்பாத் தான்விளையக்
கம்மாய்கள் தான்பெருகிக் கவிந்து வழிந்தோட 24
வாழையிடை பழுத்து வருக்கைப் பிலாபழுத்துத்
தாழையும் பூத்துத் தலையாலே தான்சொரியப் 25
புன்னையும் பூக்கப் புறத்தே கிளிகூவ
அன்னமும் பேசும் அழகான தென்புதுவை 26
தலையருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக்குளமும்
மலையருவி பாயும் வயல் சூழ்ந்த தென்புதுவைப் 27
பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான்கொழிக்கும் தென்புதுவைக் 28
காவணங்கள் மேவிக் கதிரோன் தனைமறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுவை மணங்கமழும் 29
தென்னை மடல்விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிள்விரியப் புதுவை வனந்தனிலே 30
திரு அவதாரம்
சீராரு மெங்கள்விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில்
ஏராருந் துளசிமுல்லை யேகமாய்த் தானும்வச்சு 31
வச்ச பயிர்களுக்கு வளரவே நீர்பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள்செய் துகந்திருக்கும் வேளையிலே; 32
பூமிவிண்டு கேட்கப் புகழ்பெருகு விஷ்ணுசித்தன்
பூமிவிண்ட தலம்பார்த்துப் போனார்காண் அவ்வேளை 33
ஆடித் திருப்பூரத்தில் அழகான துளசியின்கீழ்
நாடி யுதித்ததிரு நாயகியைச் சொன்னாரார்! 34
அப்போது விஷ்ணுசித்தன் அலர்மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்!! 35
அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி என்றார்!!! 36
அப்போது கேட்டு அருளப் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக்கோயில் தான்புகுந்து; 37
பூந்துளவ மணிவண்ணன் பொன்னடிக்கீழ்ப் பெண்ணைவிட
ஊர்ந்து விளையாடி யுலாவியே தான்திரியப் 38
பெண்கொணர்ந்த விஷ்ணுசித்தன் பெருமாளைத் தானோக்கிப்
பெண்வந்த காரணமென் பெருமாளே சொல்லு மென்றார் 39
அப்போது மணிவண்ணன் அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார் 40
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும் என்றார். 41
சொன்னமொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைசு கையிலேதான் கொடுக்க 42
அப்போது விரசையரும் அமுதுமுலை தான்கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு 43
மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் 44
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ, 45
அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ. 46
பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ, 47
பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார், தனக்குப்
பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ, 48
மலடி விரசையென்று வையகத்தோர் சொல்லாமல்
மலடு தனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ, 49
பூவனங்கள் சூழும் புதுவா புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார். 50
கண்ணேயென் கண்மணியே கற்பகமே தெள்ளமுதே
பெண்ணே திருமகளே பேதையரே தாலேலோ, 51
மானே குயிலினமே வண்டினமே தாறாவே
தேனே மதனாபிஷேகமே தெள்ளமுதே 52
வானோர் பணியும் மரகதமே மாமகளே
ஏனோர் கலிநீங்க இங்குவந்த தெள்ளமுதே, 53
பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே சோதி மரகதமே தாலேலோ, 54
வண்டினங்கள் பாடும் மதுவொழுகும் பூங்காவில்
பண்டுபெரி யாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே, 55
சென்னல்களை முத்தீன்று செழிக்கும் புதுவையிலே
அன்னமே மானே ஆழ்வார் திருமகளே 56
வேதங்க ளோதி வென்றுவந்த ஆழ்வார்க்குச்
சீதைபோல் வந்துதித்த திருமகளைச் சொன்னாரார்! 57
முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ, 58
பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே!! 59
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, 60
எந்தை தந்தையென்று இயம்பும்பெரி யாழ்வார்க்கு
மைந்தர் விடாய்தீர்த்த மாதேநீ தாலேலோ, 61
பொய்கைமுத லாழ்வார்க்கும் பூமகளாய் வந்துதித்த
மைவிழிசோதி மரகதமோ தாலேலோ! 62
உலகளந்த மாயன் உகந்துமணம் பண்ணத்
தேவாதி தேவர் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ! 63
சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்லப் பெண்ணாய் வந்த திருமகளைச் சொன்னாரார்! 64
நாராணனை விஷ்ணுவென்று நண்ணுமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்! 65
உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப்
பிள்ளை விடாய்தீர்த்த பெண்ணமுதே தாலேலோ! 66
பாகவ தார்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாகவிடாய் தீர்த்த தங்கமே தாலேலோ! 67
தென்புதுவை வாழும் ஸ்ரீவிஷ்ணு தீர்த்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே தாலேலோ! 68
சாஸ்திரங்கள் ஓதும் சத்புருஷன் ஆழ்வார்க்குச்
சோஸ்திரஞ் செய்து துலங்கவந்த கண்மணியோ! 69
வாழைகளும் சூழ்புதுவை வாழுமெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே தாலேலோ! 70
கன்னல்களுஞ் சூழ்புதுவை கார்க்குமெங்க ளாழ்வார்க்குப்
பன்னுதமிழ் என்னாளும் பாடநல்ல நாயகமோ! 71
பல்லாண்டு பாடும் பட்டர்பிரா னாழ்வார்க்கு
நல்லாண்டில் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்! 72
எந்தாகம் தீத்து ஏழேழு தலைமுறைக்கும்
வந்தாளும் செல்வ மங்கையரே தாலேலோ! 73
என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே;
அன்றொருநாள் விஷ்ணுசித்தன் முதுமலர் தொடுத்துவைக்கத், 74
தொடுத்துவைத்த மலரதனைச் சூடி நிழல்பார்த்து
விடுத்துவைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய 75
அப்போது விஷ்ணுசித்தன் அனுஷ்டான முதலசெய்
தெப்போதுங் போல்கோயிற் கேகவே வேணுமென்று 76
தொடுத்த மாலைதனைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்தேகு மாழ்வாரும் என்கையிலே கேசங்கண்டு 77
பெண்ணரசி கோதை குழல்போலே யிருக்குதென்று
பெண்ணான கோதைக்குக் காட்டியே தானுருக்கிப் 78
பின்பு வனம்புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச்சாத்த. 79
அப்போது மணிவண்ணன் ஆழ்வாரைத் தான்பார்த்து
இப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே 80
என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையும் தான்கூப்பித்;
துன்றிவளக் கோதையரும் சூடியே தானும்வைத்தாள். 81
அம்மாலை தள்ளி அழகான பூக்கொணர்ந்து
நன்மாலை கொண்டு நானுனக்குச் சாத்தவந்தேன் 82
என்றுசொல்ல, மணிவண்ணன் இன்பமாய்த் தான்கேட்டு,
நன்றாக ஆழ்வாரே நானுனக்குச் சொல்லுகிறேன்:- 83
ஒன்மகளும் பூச்சூட்டி ஒருக்கால் நிழல்பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள். 84
அம்மாலை தன்னை ஆழ்வாரே நீ ரேத்துவந்து
இம்மாலை சாத்தி யிருந்தீ ரிதுவரைக்கும். 85
இன்றுமுதல் பூலோக மெல்லாந் தானறிய
அன்றுமலர் கொய்து அழகாகத் தான்தொடுத்துக் 86
கோதை குழல்சூடிக் கொணருவீர் நமக்குநிதம்
கீதமே ளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும் 87
இன்றுமுதல் சூடிக்கொடுத்தா ளிவள்பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான்பெறுவீர்! 88
என்றுரைக்க மணிவண்ணன் யேகினர்காண் ஆழ்வாரும்
சென்றுவந்த மாளிகையில் சிறப்பா யிருந்துநிதம் 89
நீராட்டி மயிர்முடித்து நெடுவேற்கண் மையெழுதி
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே 90
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள்
சீரான ஆழ்வாரைச் சிறப்பாகப் பெண்கேழ்க்க; 91
அப்போது விஷ்ணுசித்தன் அழகான கோதையரை
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலைதான் கொடுத்து 92
உனக்கேதம் பிள்ளைகட் குகந்தே மலர்சூடி
மனைக் காவலனென்றும் மகிழ்ந்தேத்தி வாழும் என்றார். 93
அவ்வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தையென்று திரும்பியே தானுரைப்பாள் 94
வையம் புகழய்யா மானிடவர் பதியன்று!
உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர் 95
இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள் தம்பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் 96
இவ்வார்த்தை கேட்டு இனத்தோரெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள் 97
போனபின்பு விஷ்ணுசித்தன் பொன்னே புனமயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார். 98
இப்படிக் கோதையரும் இருந்து வளருகையில்,
ஒப்பிலாள்நோம்பு உகந்துதான் நோர்க்கவென்று 99
மணிவண்ணர் தனைத்தேடி மனக்கருத்தை யவர்க்குரைத்துப்
பணிசெய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான்கேழ்க்க! 100
மகிழ்ந்து மணி வண்ணன் மனமுவந்து மறையோர்க்குப்
புகழ்ந்துதான் உத்தரவு பொருமுதலுந் தான்கொடுக்க!! 101
உத்தரவு வாங்கி உலகெலாந் தான்நிறைய;
ந்த்தமொரு நோன்பு நேத்தியாய்த் தான்குளித்து 102
மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போத்தி மணம்புணர வேணுமென்று 103
மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை
சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான்பாடிப் 104
பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூமாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைத்திருக்க 105
மாயவனும் வாராமல் மாலைகளுந் தாராமல்
ஆயன்முகங் காட்டாமல் ஆரு மனுப்பாமல் 106
இப்படிக்குச் செய்தபிழை யேதென்று நானறியேன்
செப்படி தோழியரே! திங்கள்முகக் கன்னியரே, 107
தோழியரும் தானுரைப்பாள் துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம்புணர்வார் 108
என்றுசொலக் கோதையும் இதையுங் குழைந்து நிதம்
அன்றில் குயில்மேகம் அரங்கருக்குத் தூதுவிடத், 109
தூதுவிட்டும் வாராமல் துய்ய வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனிமேல் மனஞ்சகியேன் 110
என்று மனம்நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்றுவந்து தோழியர்கள் செப்பவே பாவையர்க்கு 111
அச்சேதி கேட்டு ஆழ்வார் நடுநடுங்கி
அச்சுதனைப் பாடும் அழகான கோதையர்க்குச் 112
சென்றுவந்து பிள்ளைவிடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் மோசம்வரும், 113
என்று திருமகளை எடுத்துச் சிவிகைவைச்சு
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று 114
நல்லநாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்துதென் காவிரியில் 115
நீராட்டஞ் செய்து நெடும்போது செபஞ்செய்து
சீராட்ட வந்து திருமகளத் தான்தேடப் 116
பல்லக்கில் காணாமல் பந்தொடியார் காணாமல்
எல்லாருங் காணாமல் என்மகளை யாரெடுத்தார் 117
நின்று மனம்நொந்து நாற்றிசையும் தான்தேடி
சென்று திருவரங்கத் திருக்கோயில் தான்புகுந்து 118
ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்! 119
என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர்
சென்றெங்களய்யர் திருவடியைத் தான்தொழுவார்! 120
அப்போது கோதையரும் அரங்கர் அடியைவிட்டு
இப்போதும் அய்யர் இணையடியைத் தான்தொழுதாள்!! 121
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள்தனக்கும்
வாழ்த்தியே முற்று மகிழ்ந்து ரெங்கருக்கும். 122
வாழிமுதல் பாடி மங்களமும் தான்பாடி
ஆழிநீர் வண்ணனுக்கு அழகாய் மணம்புணர்வாய்! 123
என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் ரெங்கர்தனை
மன்றல்செய்ய வாருமய்யா மணவாளா என்றழைத்தார்! 124
பங்குனி மாசப் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்கூரஞ் செய்து அழகாய் மணம்புணர 125
வாருமைய்யா வென்று மகிழ்ந்தேத்தி ரெங்கரையும்
சீரணிந்த கோதைதனைச் சிறப்பாகத் தானழைக்க!!! 126
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடைகொடுத்துத்
தப்பாமல் நான்வருவேன் தார்குழலி தன்னோடும். 127
என்றுசொல்லி ஆழ்வாரும் ஏகியே வில்லிபுத்தூர்
சென்றுதிரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து 128
கோதையருக்கு மன்றல் கோஷமாய்ச் செய்யவென்று
........................................... 129
சீதையர்க்கு மன்றல் சிறப்பாய்ச் செய்யவென்று,
ஓலை யெழுதி உலகெலாம் நாளனுப்பிக் 130
...............................
கரும்பினால் கால்நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்ட 131
கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்கவிட்டுப்
................................ 132
பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான்போட்டு
................................. 133
மாங்கனிகள் தூக்கி வருக்கைப் பிலாதூக்கித்
தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து. 134
மேளமுடன் மத்தளமும் மேல்முரசுந் தானடிக்கக்
காளமுடன் நாகசுரம் கலந்து பரிமாற. 135
வானவர்கள் மலர்தூவி வந்து அடிபணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த. 136
இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர்தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரங்கள் தான்போட. 137
ரத்னமணி யாசனமும் ரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும். 138
ஆழ்வார் கிளையும் அயலோர்கள் எல்லோரும்
ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்றவந்த 139
தூபம் கமழத் தொண்டர்களுந் தான்பாடத்
தீபம் துலங்க ஸ்ரீவைஷ்ண வோரிருக்க 140
வேதந் துலங்க மேன்மேலும் சாஸ்திரங்கள்
கீதம் முழங்கக் கீர்த்தனங்கள் தான்முழங்க. 141
வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓதப்.
................................ 142
பூரண கும்பமுதல் பொற்கலசம் தானும்வைத்து
நாரணனைப் போத்தி நான்மறைகள் தானோத. 143
இப்படிக்கு ஆழ்வாரும் எல்லாருங் காத்திருக்க
சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க. 144
கொற்றப் புள்ளியில் ரெங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கூதி வில்லிபுத்தூர் தன்னில்வந்து. 145
மணவாள ராகிமணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தான்கொடுத்தார் 146
ஆடைமுத லாபரணம் அவனிமுதல் பால்பசுக்கள்
கோடைமுதல் தானங் கொடுத்து நிறைந்தபின்பு 147
மந்தரமார் கோடியுடுத்து மணமாலை
யந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு 148
மத்தளம்கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்தாலித் ததும்ப நிரைதரளப் பந்தலின்கண் 149
கைத்தலம் பத்திக் கலந்து பரிமாற.
............................ 150
ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி. 151
மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு மூன்று கழித்து அரங்கருந்தான் 152
அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
அக்கினியைப் போத்தி அக்ஷதையும் தான்தூவி 153
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்.
................................... 154
பஞ்சிலை நாணற் படுத்துப் பரிவைத்து
................................ 155
ஓமங்கள் செய்து ஒருக்காலும் மலர்தூவி
................................. 156
காசின் பணங்கள் கலந்துதா னெங் கொடுத்து
................................ 157
தீவலஞ் செய்து திரும்பி மனையில்வந்து
................................. 158
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பார்த்தவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி 159
செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி
அம்மி மிதித்து அருந்ததியும் தான்பார்த்து 160
அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை 161
அக்ஷதைகள் வாங்கி அரங்கர் மணவரையில்
பக்ஷமுட னிருந்து பாக்கிலையுந் தான்போட்டுக் 162
கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில்
சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார். 163
அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது. 164
என்று பெரியாழ்வார் இளகி மனமகிழ்ந்து
குன்று குடையெடுத்த கோனை மகிழ்ந்துநிதம். 165
வாழி முதல் பாடி மங்களமும் தான்பாட
ஆழிமுதல் பாடி ஆழ்வாரும் போற்றிநின்றார் 166
வாழும் புதுவைநகர் மாமறையோர் தான்வாழி
ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தான்வாழி 167
கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி
சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி. 168
கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.