MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    புரட்சி கவிஞர் பாரதிதாசனின் இருண்ட வீடு

    1. தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல்.

    கடலின் மீது கதிரவன் தோன்றிப்
    படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
    வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்.
    விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள்.

    *..*..*

    அப்போது மணியும் ஆறரை ஆனதால்
    எப்பொழு தும்போல் இரிசன் என்ற
    மாடு கறப்பவன் வந்து கறந்து
    பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
    உறியில் வைக்காது-உரலின் அண்டையில்
    வைத்துப் போனான். மங்கையின் கணவனோ,
    சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
    சாய்வுநாற் காலியில் சாய்ந் திருந்தான்.

    *

    2. குழந்தையின் அழுகை, பையனின் பொய்; தந்தையின் போக்கு.

    தாயோ துயில்வதில் தனிமை பொறாமல்
    நோயுடன் குழந்தை நூறு தடவை
    அம்மா என்றும் அப்பா என்றும்
    கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது!

    * * *

    பெரிய பையன் பிட்டையும் வடையையும்
    கருதி, முதலில் கையால் சாம்பலைத்
    தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின்
    அருகில் இருந்தபால் செம்பை, விரைவில்
    தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் கழுவினான்;
    பாக்கி இருப்பது பால் என்றறிந்து
    கடிது சென்றே இடையன் இப்படிச்
    செம்பின் பாலைச் சிந்தினான் என்று,
    நம்பும் படியே நவின்றான் தந்தைபால்!
    தந்தையார் நாளைக் கந்த இடையன்
    வந்தால் உதைப்பதாய் வாய்மலர்ந் தருளினார்.

    *

    3. பையன் காலைக்கடன் முடிக்காமல் உணவுண்ணத் தொடங்கினான்;
    இரண்டு பற்களின் மறைவு.

    பிட்டுக் காரி தட்டினாள் கதவையே
    திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்
    பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
    பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்
    ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
    நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது
    வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்
    வடையின் சுவையோ விடேன் விடேன் என்றது
    கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்
    மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்
    வில்லம்பு போல மிகவிரை வாக
    நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
    படபட வென்று பானையைத் தள்ளிக்
    கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று
    நின்ற பசுவின் நெற்றியில் மோதி
    இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்
    புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!

    *

    4. தலைவி எழுந்தாள்; சாணமிட்டாள்; கோலமிட்டாள்;
    அவளைக் கண்ட பகலவன் நடுங்கினான்.

    நாயின் அலறல் நற்பசுக் கதறல்
    பானையின் படபடா பையனின் ஐயோ -
    இத்தனை முழக்கில் ஏந்திழை புரண்டு
    பொத்தல் மரத்தின் புழுப்போல் நெளிந்தே
    எழுந்தாள். அவளோ, பிழிந்து போட்ட
    கருப்பஞ் சக்கையின் கற்றைபோல் இருந்தாள்.
    இதுதான் பாதை எனும் உணர்வின்றி
    மெதுவாய் அறையினின்று வெளியில் வந்தாள்.
    பாதி திறந்த கோதையின் விழியோ
    பலகறை நடுவில் பதிந்த கோடுபோல்
    தோன்றிற்று! மங்கை தூக்கம் நீங்காது,
    ஊன்றும் அடிகள் ஓய்ந்து தள்ளாடினாள்.
    உடைந்த பெட்டி மேல் கிடந்த பிட்டைத்
    தொடர்ந்து நாய் தின்பதும் தோன்றவில்லை.
    நடந்து சென்றவள் நற்பசு வுக்கெதிர்
    கிடந்த சாணியைக் கிளறி எடுத்து
    மீந்தபாற் செம்பில் விழுது கரைத்துச்
    சாய்ந்து விடாமல் தாழைத் திறந்து
    தெருவின் குறட்டில் தெளித்தாள்! அவள்குழல்
    முள்ளம் பன்றி முழுதுடல் சிலிர்த்தல் போல்
    மேலெழுந்து நின்று விரிந்து கிடந்தது!
    வாலிழந்து போன மந்தி முகத்தாள்
    கோல மிடவும் குனிந்தாள்; தாமரை
    போல எழுதப் போட்ட திட்டம்
    சிறிது தவறவே தேய்ந்த துடைப்பம்
    அவிழ்ந்து சிதறுமே, அப்படி முடிந்தது!
    பொன்நிறக் கதிரொடு போந்த பகலவன்
    இந்நில மக்கள்பால் தன்விழி செலுத்தினான்!
    கோலம் போட்டவள் கொஞ்சம் நிமிர்ந்தாள்.
    காலைப் பரிதியின் கண்கள் நடுங்கின!

    *

    5. தலைவி, தலைவன், பையனுக்கு மருத்துவம், சாணி ஒத்தடம்.

    குறட்டி னின்று கோதை, உட்சென்று
    கணவனின் எதிர்வந்து கையோய்ந்து குந்தினாள்.

    * * *

    காலையில் புதுப்பேச்சுக் காண லாயினார்.
    தன்னரு மனைவியைப் பொன்னிகர் கணவன்
    என்ன மணியடி? என்று கேட்டான்.
    சண்டிமணிப் பொறிக்குச் சாவி கொடுக்க
    அண்டை வீட்டானை அன்றே அழைத்தேன்;
    வரவே இல்லை மாமா என்றாள்.
    அந்த நேரம் அண்டை வீட்டுக்
    கந்தன், குடையும் காலிற் செருப்புமாய்
    வீட்டி னின்று வெளியிற் செல்வதைப்
    பார்த்த கணவன், பாரடி அவனை,
    அதற்குள் வேலை அனைத்தும் முடித்துக்
    கடைக்குச் செல்லும் கருத்தை என்றான்.
    விடியா மூஞ்சி விடியு முன்பே
    போனால் நீயும் போக வேண்டுமோ?
    என்று கூறி இளிக்க லானாள்.

    * * *

    பெரிய பையன் அருகில் வந்தான்
    வடையும் கையும் வாயும் புண்ணுமாய்
    நடைமெலிந் தேஅவன் நண்ணுதல் கண்டே
    என்ன என்ன என்றுகேட் டாள்தாய்.
    புன்னை அரும்புபோல் புதிதாய் முளைத்த
    இரண்டு பற்கள் இல்லைஎன் றுரைத்தான்.
    வீங்கிய உதட்டுநோய் தாங்கிலேன் என்றான்.
    உருண்டைச் சாணியை ஒருமுறை பூசினால்
    மறுநொடி ஆறுமென்று மங்கை மருத்துவ
    மறைநூல் வகுத்த வண்ணம் கூறினாள்.
    பிறகா கட்டும் பிட்டைத் தின்பாய்
    வேலைக் காரி விடிந்தபின் வருவாள்
    பாலைக் காய்ச்சிப் பருகலாம் என்றாள்.
    எட்டரை அடிக்கையில் இப்படிச் சொன்னாள்.

    *

    6. பிட்டை நாய் தின்றது, மீண்டும் வாங்கிய பிட்டுக்குத் தலைவர் புறப்படுகிறார்.
    புதிய பிட்டை உண்ணப் பையன் உதடு இடந்தரவில்லை.

    அழுமூஞ்சி பிட்டை அணுகினான். நாயும்
    நழுவிற்றுப் பிட்டை நன்று தின்று.
    தொட்டுச் சுவைக்கப் பிட்டில் லாமையால்
    பெரிய பையன் சிறிய நரிபோல்
    ஊழ் ஊழ் என்றே ஊளையிட் டிருந்தான்.

    வீடு பெருக்கும் வேம்பு வந்தாள்!
    சமையல் செய்யும் சங்கிலி வந்தாள்!
    கடைக்கென் றமைந்த கணக்கன் வந்தான்!
    கூடத்து நடுவில் ஏடு விரித்தே
    மறுபடி வாங்கிய வடையையும் பிட்டையும்
    சங்கிலி படைத்தாள் தலைவருக் காகவே!
    பல்லைச் சுரண்டுவோர் பார்த்தார் அதனை,
    மெல்ல எழுந்தார், மெல்ல நடந்தார்.
    காலைக் கடனைக் கழிக்கக் கருதினார்.

    பிட்டையும் வடையையும் பெட்டியில் குந்திக்
    கிட்ட இழுத்தான் கிழிந்தவாய்ப் பெரியவன்.
    அவனுடல் கொஞ்சம் அசைந்தது. வாய்எயிறு
    கவலை மாட்டின் கழுத்துப் போல
    வீங்கி இருந்ததால் வெடுக்கென வலித்தது!
    தாங்காது கையால் தடவிப் பார்த்தான்!
    நோயும் பெரியவன் நோக்க வில்லை!
    வாயில் நுழைய வடைக்கு வழியில்லை!

    *

    7. பிள்ளையின் நோய்க்குப் பிட்டுத் திணிக்கப்படுகிறது.
    மற்றவர்க்குப் பிட்டு வேண்டாம் என்று முடிந்தது. பிள்ளைக்கு வாயில்லை.

    வீட்டின் தலைவி நீட்டிய காலும்
    ஆட்டின் கத்தல்போல் அருமைப் பாட்டுமாய்க்
    குழந்தையை வைத்துக் குந்தி யிருந்தாள்.
    இழந்த உயிரில் இம்மி யளவு
    பிள்ளையின் உடலொடு பிணைந்தி ருந்ததால்,
    வள்ளிக் கொடியும் வதங்கிய தைப்போல்
    தாய்மேற் பிள்ளை சாய்ந்து கிடந்தது.

    தாயோ சங்கிலி தன்னை அழைத்து
    வாங்கி வந்த வடையையும் பிட்டையும்
    கொண்டுவா பசியடி குழந்தைக் கென்றாள்.
    தட்டில் வடையும் பிட்டும் கொண்டு
    சட்டென வைத்தாள் சங்கிலி என்பவள்.

    கூடத்து நடுவில் ஏடு விரித்து
    வைத்த பிட்டையும் வடையையும், வந்து
    மொய்த்த ஈயடு முதல்வர் தின்றார்!
    மறுபடி ஒருபிடி வாயில் வைக்குமுன்
    சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார்.

    அதனால் அதை அவர் அருந்துதல் நீங்கி,
    கையினால் வேண்டாம் வடை என்று காட்டினார்.

    பெரிய பையன் பிசைந்தான் பிட்டை!
    ஒருதுளி கூட உண்ணமாட் டாமல்
    கொரகொர கொழகொழ கொணகொண என்றான்.
    இதன் மொழிபெயர்ப் பென்ன என்றால்
    எயிறு வீங்கி இடத்தை மறித்தது
    தின்பதற் கென்ன செய்வேன்? என்பதாம்.
    பையனால் இப்படிப் பகர முடிந்தது.
    பிட்டை வாயில் இட்டுத் திணிக்கும்
    தாயை நோக்கிஅத் தடுக்குக் குழந்தை
    தாயே எனக்கிது சாகும் நேரம்என்று
    வாயால் சொல்லும் வல்லமை இல்லை.
    அறிவெனும் வெளிச்சம் அங்கே யில்லை.
    மடமை மட்டும் மகிழ்ந்து கிடந்தது.

    *

    8. பிள்ளை நிலைக்குக் காரணம் தோன்றிவிட்டது தலைவிக்கு!

    தந்தியும் ஆணியும் தளர்ந்த யாழ்போல்
    கூடத்து நடுவில் வாடிய சருகுபோல்
    பெரியவன் பாயில் சுருண்டு கிடந்தான்.
    என்பு முறிந்த வன்புலி யுடம்பைக்
    கன்மேல் கிடத்திய காட்சிபோல
    ஓய்வுடன் தலைவர் ஒருபக் கத்தில்
    சாய்வுநாற் காலியில் சாய்ந்து கிடந்தார்.

    * * *

    வயிற்றின் உப்பலால் வாயிலாக் குழந்தை
    உயிரை இழக்க ஒப்பாது கிடந்தது;

    * * *

    நடைவீட் டினிலே கடையின் கணக்கன்
    நெடுந் தூக்கத்தில் படிந்து கிடந்தான்.
    வேலைசெய் வோர்கள் மூலையில் குந்தி
    மாலை நேரத்தின் வரவுபார்த் திருந்தனர்.

    * * *

    இல்லத் தலைவி எண்ண லானாள்:
    குழந்தை யுடம்பில் கோளா றென்ன?
    வளர்க்கும் முறையில் மாற்ற மில்லையே!
    களிம்புறு பித்தளை கைப்படக் கைப்பட
    விளங்குறும் அதுபோல், வேளை தோறும்
    கனிநிகர் உடம்பில் கண்ணை வைத்துப்
    பனிபிணி யின்றிப் பார்க்கின் றேனே!
    எனப்பல வாறு நினைக்கும் போது
    நெட்டை யன்தலை குட்டை இறைப்பினில்
    பட்டதைப் போல்அப் பாவையின் நெஞ்சில்
    பட்டதோர் எண்ணம்! பார்வை திருப்பினாள்:
    மந்திரக் காரன் வரட்டும் என்றாள்.
    அந்தச் சங்கிலி, அவர் ஏன் என்றாள்.
    இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
    நொந்தது குழந்தை நோயால் என்றாள்.
    வாலன் என்னும் மந்திரக் காரனை
    அழைக்கின் றேன்என் றறைந்தாள் சங்கிலி!
    சரிபோ! என்று தலைவி சொன்னாள்!
    நாழிகை போக்காது நடந்தாள் சங்கிலி!
    ஏழரை ஒன்ப திராகு காலம்
    இப்போது வேண்டாம் - என்றான் தலைவன்.
    வீட்டின் அரசியும் வேண்டாம் என்றாள்.
    நடந்த சங்கிலி நன்றெனத் திரும்பினாள்.
    வேலைக் காரியும் வீட்டின் தலைவியும்
    நாலைந்து கடவுளின் நற்பெயர் கூறிக்
    காப்பீர் என்று காப்புங் கட்டி
    வேப்பிலை ஒடிக்கும் வேலையில் நுழைந்தார்.

    *

    9. வரவேண்டிய பணம் நல்ல வேளையில்தான் வந்தது.

    வீட்டு முன்கட்டில் வீட்டுக் காரனும்
    காட்டுமுத் தெனும் கணக்கனும் ஏதோ
    ஓசை காட்டிப் பேசி யிருந்தனர்.
    அந்த நேரம் அந்த இடத்தில்
    பாக்கியும் வட்டியும் பட்டுச் செட்டி
    தூக்கி வந்து தொகையாய் எண்ணினான்.
    வீட்டுக் காரனும் வீட்டுக் கணக்கனும்
    சீட்டை எடுத்துச் செல்லு வைத்தார்.
    பட்டுச் செட்டி பகரு கின்றான்:
    இராகு காலம் எட்டிப் போனபின்
    தரவேண் டியதைத் தந்தேன்; ஆயினும்
    தந்த பணத்தைச் சரியாய் எண்ணிச்
    சொந்தப் பெட்டியில் சுருக்காய் வைப்பீர்
    என்று கூறி எழுந்து போனான்!

    *

    10. வீட்டின் தூய்மை, எலிக்கூத்து, பூனை மகிழ்ச்சி, எறிபடும் குப்பை.

    இனிதாய்ப் பகல்மணி பனிரண் டானது
    பழங்கல அறைக்குள் பதுங்கி யிருந்த
    கிழஎலி கள்தாம் கிளைஞ ரோடு
    கூடத் திற்சிறு குண்டான் மேலும்
    மாடிப் படியில் மட்குடந் தனிலும்,
    ஆடல் பாடல் அரங்கு செய்தன.

    தயிரின் மொந்தையில் தலை புகாததால்
    நறுக்கென்று சாய்த்து நக்கிற்றுப் பூனை!

    வடித்த சோற்றை வட்டிலில் கண்டு
    தடித்தடிக் காக்கைகள் சலிக்கத் தின்றன!

    * * *

    வீட்டினுள் காற்று வீசுந் தோறும்
    மோட்டு வளையில் மொய்த்த ஒட்டடை
    பூமழை யாகப் பொழியும் தரையில்!
    ஊமைக் குப்பைகள் உம்மென்று மேலெழும்!

    *

    11. தலைவர் சாப்பிட முடியவில்லை;
    இலந்தையூர்க்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

    சங்கிலி தலைவரைச் சாப்பிட அழைத்தாள்;
    அங்கே பசியால் அழியும் தலைவரோ
    மெதுவாய் எழுந்தார்; அதே நேரத்தில்
    எப்போ தும்போல் இரண்டு பல்லிகள்
    பளபள வென்று பாடவே, தலைவர்
    மீண்டும்நாற் காலியில் விசையாய்ச் சாய்ந்தார்.
    அந்த நேரம் அங்குநின் றிருந்த
    கணக்கன் தலைவரைக் கனிவுடன் அழைத்தே
    இன்று நீங்கள் இலந்தை யூர்க்குச்
    சென்று வஞ்சகன் சிற்றம் பலத்தைக்
    கண்டு பணத்தைக் கையடு வாங்கிக்
    கொண்டு வருவதாய்க் கூறி னீர்களே!
    ஐதராப் பாக்கம் அவன் ஓடிவிட்டால்
    பைதரா வழக்கும் பயன்படாதே
    பத்துப் பைகள் பறிபோக லாமோ?
    என்று பலவும் எடுத்துச் சொன்னான்!
    நன்று நன்று சென்று நீஒரு
    காரைப் பேசிக் கடிதில் கொண்டுவா.
    அச்சாரப் பணம் ஐந்துரூ பாய்கொடு.
    கடன் பட்டவனைக் கையடு பிடிக்க
    அரச காவலர் அங்கே இருப்பரேல்
    ஐந்து ரூபாய் அவரிடம் கொடுத்து
    வேண்டிய ஒழுங்குடன் விரைவில் அழைத்துவா
    என்றான் தலைவன்! ஏகினான் கணக்கன்.
    *

    12. தலைவரின் மைத்துனர் வருகிறார்; வரவேண்டாம் என்று வரவேற்றார்.

    ளள் ளள் என்று வெள்ளை நாய், வீட்டின்
    வாயிலில், யாரையோ வரவேற் கின்றதை
    வீட்டுக் காரர் கேட்டார் காதில்,
    நீட்டினார் தலையை வீட்டின் வெளியில்
    மைத்துனர் ஊரினின்று வருவதாய் அறிந்தார்.
    வாரும் வாரும் வாரும் என்றார்.
    மைத்துனர், வந்தேன் வந்தேன் என்று
    வாயிற் படிமேல் வைத்தார் காலை.
    இடறிற்றுக் கால்! இரும்இரும் மச்சான்
    வராதீர் மச்சான் வராதீர் என்றார்.
    இல்லை இல்லை என்றார் மைத்துனர்.

    * * *

    தூய குறிதான் தோன்றும் வரைக்கும்
    வாயிலில் காலை வைக்கலா காதென
    மைத்துனர், எதிரில் மாட்டுக் கொட்டிலில்
    மொய்க்கும் கொசுக்களால் மூடுண் டிருந்தார்.
    காரும் சாவடிக் காவல ரோடு
    நேரில் வீட்டெதிர் நின்றது வந்து.
    விரைவாய் உண்டார்; விரைவாய் ஏறினார்;
    விரைவாய்க் காரும் தெருவை அகன்றது.
    கணக்கனும் அந்தக் காரில் சென்றான்.

    *

    13. தலைவியும் அவளின் அண்ணனும் பேசுகிறார்கள்;
    குழந்தைக்குப் பண்டம் வாங்கி வந்தார் மாமா.

    மைத்துனர் வீடு வந்து நுழைந்தார்.
    ஒத்த அன்பின் உடன்பிறந் தாளைத்
    தங்கையே என்ன அங்கே செய்கின்றாய்?
    உடம்புக் கென்ன? குறைபா டில்லையே?
    குழந்தைக் கென்ன? ஒன்று மில்லையே?
    பெரியவன் நலத்தில் பிழைபா டில்லையே?
    குடித்தனம் எவ்வாறு? தடித்தனம் இல்லையே?
    என்று கேட்டார். எதிரில் நின்றவள்
    இருக்கின் றேன்நான் என்று கூறினாள்.
    சாகா திருப்பது தனக்கே வியப்போ?

    * * *

    அங்குப் பாயினில் அயர்ந்து கிடந்த
    வாயிலாக் குழந்தையை மைத்துனர் கண்டார்.
    இயம்ப முடியா இரக்கம் அடைந்தார்.
    அவ்விரக் கத்தின் அறிகுறி யாகத்
    தூங்கும் பிள்ளையைத் துயருற எழுப்பி
    வாங்கி வந்த மாம்பழம் அனைத்தையும்
    ஆங்கே குழந்தை அண்டையில் பரப்பினார்.
    பூந்தி கட்டிய பொட்டணம் அவிழ்த்துக்
    கொஞ்சம் அள்ளிக் குழந்தை முகத்தெதிர்
    வஞ்சம் இன்றி வைத்துக் குழந்தையே
    பாங்கொடு தின்னப் பழமும் பூந்தியும்
    வாங்கி வந்தேன் மருந்துபோல் என்றார்;
    ஓட்டை நீக்கி உள்ளீடு தன்னைக்
    காட்டி விளாம்பழம் கருத்தாய்த் தின்என்று
    அதையும் குழந்தையின் அண்டையில் வைத்தார்!
    குழந்தை கிடந்த கூட மெல்லாம்
    உழுந்து கிடந்த ஒருகளம் போலவும்
    வேம்பின் பழம்பூ விரிதரை போலவும்
    ஈயின் காடும் எறும்பின் காடும்
    ஆயிற்று! மைத்துனர் அப்புறம் சென்றார்.

    *

    14. பெரிய பையனுக்கு விளையாட்டுத் துப்பாக்கி! அனைவர்க்கும் மகிழ்ச்சி!

    அங்கே, பெரியவன் அடுக்கிய இரண்டு
    முட்டைபோல் உதடுகள் முன்னே தோன்ற
    மல்லாந்து மார்பை மறுபுறம் திருப்பாது
    சொல்லும் இன்றித் துடிக்கும் நெஞ்சோடு
    மாம்பழம் விளாம்பழம் வந்த வழியில்
    காதைச் செலுத்திக் கண்ணைச் சாய்த்து
    மாமனை எதிர்பார்த் தூமைபோல் அழுதான்.
    மாமனோ சென்னையில் வாங்கி வந்த
    கைத்துப் பாக்கியைக் கையில் கொடுத்தான்.
    பெரியவன் உதடுகள் சிரித்தாக வேண்டும்!
    வெள்ளைப் பற்கள் வெளித் தோன்றாமல்
    பிணம் சிரிப்பதுபோல் பெரிதும் சிரித்தான்.
    தங்க மாமனார் தாமும் சிரித்தார்.
    உரியவள் இதனை உணர்ந்து சிரித்தாள்.
    கைத்துப் பாக்கி மெய்த்துப் பாக்கிபோல்
    வித்தென்று தக்கை விலகி வெடிப்பதை
    மாமனார் காட்டினார். மங்கையும் பையனும்
    வியப்படைங் தார்கள்.வீட்டுக் காரியோ
    அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல்
    வைத்து விடுங்கள் வைத்து விடுங்கள்
    அவனிடம் கொடுக்க லாகா தென்றாள்.
    அவ்வா றதனை அங்கே வைத்தார்.
    *

    15. பையனின் சாதகம், கைப்பிள்ளைக்குச் சாவே கிடையாது.

    என்னருந் தங்கையே இந்தப் பெரியவன்
    நன்றாகப் படிக் கின்றானா? சொல்
    என்றான். தங்கை இயம்பு கின்றாள்.
    சாதகம் பார்த்தோம்; சரியாய் அவனுக்குப்
    பத்தொன்ப தாண்டு படிப்பு வராதாம்.
    இருபதில் உலகையே என்னதென் பானாம்
    என்றுதன் அண்ண னிடத்திற் கூறினாள்.
    கையோ டிந்தக் கைக் குழந்தையின்
    குறிப்பையும் பார்த்தால் குற்ற மென்ன?
    என்று கேட்டான் பின்னும் அண்ணன்.
    காட்டினேன் குழந்தையைக் கல்லில் தூக்கிப்
    போட்ட போதிலும் போகாதாம் உயிர்;
    தொண்ணூறு வயதென்று சோசியன் சொன்னான்.
    மந்தத் தாலே வந்த நலிஇது!
    இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
    நலிஇவ் வாறு வலிவு பட்டது.
    வளரும் பிள்ளைக்கு வயிற்றுக் கோளாறு
    வருவதும் போவதும் வழக்கந் தானே!
    நாளைக்கே இது நன்றாய்ப் போய்விடும்
    ஏழு மலையான் இரக்கம் வைப்பான்.
    காப்பாய் என்று காப்பும் கட்டினேன்.
    என்று தங்கை இயம்பினாள். அவனோ
    சமையல் ஆனதா தங்கையே என்றான்.

    *

    16. அண்ணன் தன் பசியைக் கூறினான்; தங்கை
    அவன் ஏறி வந்த வண்டியை மெச்சுகிறாள்.

    ஆமாம் இந்த அலைச்சலில் உங்களைச்
    சாப்பிடும் படியும் சாற்ற வில்லை
    என்றாள். வெந்நீர் இருக்குமா என்றான்.
    ஆமாம் ஆமாம் அடுப்பில் வெந்நீர்
    கொதிக்க வைப்பேன் குளிப்பீர் என்றாள்.
    வெற்றிலை கொஞ்சம் வேண்டும் என்றான்.
    ஆமாம் ஆமாம் அதையும் மறந்தேன்
    என்று கூறி ஈந்தாள் வெற்றிலை.
    வெற்றிலை போட்டான். வெறித்துப் பார்த்தான்.
    சாப்பிடச் சொல்லிக் கூப்பிட வில்லை.
    பசியால் அண்ணன் பதைபதைக் கின்றான்;
    துடிப்போடு தங்கைபால் சொல்ல லானான்;
    விடிய நாலுக்கு வீட்டை விட்டுக்
    கிளம்பி னேனா? கிளிய னூரில்
    சிற்றுண வுக்குச் சுற்றிப் பார்த்தேன்.
    அகப்பட வில்லை; அதற்குள் வண்டியும்
    புறப்பட் டதனால் பொசுக்கும் பசியுடன்
    ஏறினேன்; இங்கே இழிந்தேன் என்றான்.
    இந்தக் கதையை இயம்பித் தனது
    பொறுக்கொணாப் பசியைப் புகன்றான். அவளோ
    எங்கள் அண்ணன் ஏறி வந்த
    வண்டியே வண்டி வண்டியே வண்டி
    என்று வண்டியின் இயல்பைப் பற்றி
    எண்ணி மகிழ்ந்தாள்! மண்ணாங் கட்டி!

    *

    17. மாலை ஏழு மணிக்குக் காப்பி முடிகிறது.

    அண்ணன் உடனே அருகி லிருந்த
    உணவு விடுதியில் உண்டு வந்தான்.
    குறட்டைத் தூக்கம், குழந்தையின் அழுகை,
    பெரியவன் உதடுகள் புரிந்த இன்னல்,
    இவற்றுடன் மாலை ஏழுமணி ஆயிற்று.

    * * *

    வேலைக் காரிகள் பாலைக் காய்ச்சி
    நாலைந்து செம்பு நன்றாய்க் குடித்தபின்,
    தலைவியை எழுப்பித் தந்தார், குடித்தாள்!
    பெரியவன் குடிப்பது சரியல்ல என்றே
    இருபணிப் பெண்டிரும் இருசெம்பு குடித்தார்.
    அருமை யான அண்ணனை எழுப்பி
    ஒருசெம்பு காப்பி தரும்படி தலைவி
    இயம்பினாள். சங்கிலி எழுப்பினாள். எழுப்பி
    காப்பி கீப்பி சாப்பிடு கின்றீரா
    ஏற்பாடு செய்யவா என்று கேட்டாள்.
    வேலைக் காரியின் விருப்பப் படி அவன்
    வேண்டாம் என்று விளம்பி விட்டான்.

    *

    18. மஞ்சள்தாள் திருமணத்தாள்தானே வேறென்ன?
    காகிதம் படிக்கையில் தலைவர் வருகிறார்.

    அண்ண னும்தங் கையும் நெருங்கியே
    பிறந்த ஊர்க் கதைகள் பேசலா னார்கள்:
    நமது வீட்டின் நாலாவது வீட்டுக்
    கமலத் துக்குக் கண்ணாலம் என்று
    காயிதம் வந்தது கண்டீரா? என்றுதன்
    அண்ணனைக் கேட்டாள். அண்ணன் சிரித்துக்
    கமலம் இறந்து கணக்கிலா நாட்கள்
    ஆயின என்றான். அதுகேட்டு மங்கை
    இல்லை அண்ணா இதோ பாருமென்று
    மஞ்சள் உறைக்குள் வந்த அஞ்சலைக்
    கொண்டு வந்து கொடுத்தாள்; அதை அவன்
    மேலுறை கிழித்து நாலுசொல் படித்தான்.
    அதற்குள் காரும் பொதுக்கென்று வந்தது.
    வீட்டுத் தலைவர் வீட்டில் நுழைந்தார்.
    சாய்வு நாற்காலியில் சலிப்புடன் சாய்ந்தார்.
    ஐதராப் பாக்கம் அவன் போய்விட்டான்.
    பணமும் போனது; பற்றாக் குறைக்கோ
    இன்று ரூபாய் இருபத் தைந்தும்,
    பட்டினி யோடு பறந்து திரிந்த
    தொல்லையும் வீணாய்த் தொலைந்தன என்றார்.
    அந்த நேரம் அண்ணன் அங்கே
    திருமண அழைப்பை விரைவாய்ப் படித்தான்.
    ஏட்டினில் இருந்த தென்ன வென்றால்:
    அன்புடை யவரே அவ் வாசாமி
    ஐந்து நாளில் ஐதராப் பாக்கம்
    போவதாய்த் திட்டம் போட்டிருக் கின்றான்.
    கடிதம் இதனைக் கண்ட வுடனே
    வந்தால் தொகையை வட்டியும் முதலுமாய்
    வாங்கி விடலாம், வந்து சேரவும்.
    அங்கவன் போனபின் இங்குநீர் வருவது
    வீணே இங்ஙனம் வீராசாமி.
    *

    19. தலைவர் எரிச்சல்; இருவர் சண்டை
    வந்த அண்ணனும் போய்விட்டான்.

    எப்போது வந்த திந்தக் கடிதம்
    என்று தலைவர் எரிச்சலாய்க் கேட்டார்.
    ஏழெட்டு நாள்முன் இங்கு வந்தது.
    திருமணத் துக்குச் செல்லமாட்டீர் என்று
    அடுப்பங் கரையில் அதனை வைத்தேன்.
    இதனா லென்ன என்றாள் தலைவி.
    இதுவா திருமணம் என்றார் தலைவர்.
    மஞ்சள் கடிதம் திருமணம் அல்லவா?
    என்று கூறினாள் எல்லாம் தெரிந்தவள்.
    பதரே என்று பல்லவி தொடங்கினார்.
    அடக்கென் றெடுத்தாள் அவள்அநு பல்லவி!
    எங்கிருந் தாயடி என்குடிக் கிப்படி
    மங்கிப் போக வைத்தாய் காலடி
    பொங்க லாண்டி யாகப் போம்படி
    புரிவ தெல்லாம் மிகவும் அழும்படி
    எனவே இப்படி முடித்தார் முதலடி!
    தானும் தொடங்கினாள் தாளத் தின்படி;
    ஊருக் கழித்தாய் உருப்பட வாநீ
    நாட்டுக் கழித்தாய் நலம்பட வாநீ
    இனியும் ஊரில் எடுபட வாநீ
    என்று கூறி எழுந்தாள் அம்மை.
    இரண்டாம் அடியை இப்படி முடிக்குமுன்
    வந்த அண்ணன் வந்த வழியே
    சந்தடி யின்றிச் சடுதியிற் சென்றான்.

    *

    20. தலைவர் கோபித்துக்கொண்டு புறப்படுகிறார்.

    வீட்டுக் காரர் மேலும் தொடங்கினார்;
    இந்தாடி என்றே எடுத்தடி வைத்துப்
    பந்தா டிடுவேன் பார்எனக் குதித்துப்
    பல்லைக் கடித்தே பரக்க விழித்தே
    கொல்லைக் கோடிக் கோலைத் தேடி
    விட்டே னாஎன மீசை முறுக்கிச்
    சட்டென இதுதான் தக்க தென்று
    துண்டை எடுத்துத் தோளில் போட்டுச்
    சுண்டெலி வால்போல் தொங்கும் தலைமயிர்
    கோதி நுணுக்காய்க் குடுமி முடித்துக்
    காதில் தொங்கும் கடுக்கனைத் துடைத்துச்
    சாப்பிட மாட்டேன் சற்றும் இங்கிரேன்
    கூப்பிட நினைத்தால் கொன்று போடுவேன்
    இங்கு நான்இரேன் சங்கிலி, தெரிந்ததா!
    எங்கே பையன்? இரடா இங்கே.
    என்று கூறி - எங்கே செருப்பும்
    ஒன்றுதானா? என்றதை அணிந்து,
    சென்று பின்பு திரும்பி வந்து
    கன்றையும் மாட்டையும் நன்று கருதுநீ
    உன்னிடம் குழந்தையை ஒப்பு வித்தேன்
    சங்கிலி இன்னும் நான் சாற்றுவ தைக் கேள்;
    இப்போ தேநான் இவ்விடம் விட்டுச்
    செட்டித் தெருவில் தென்னை மரத்தோ
    டொட்டி இருக்கும் ஒருவீட்டருகில்
    குட்டிச் சுவரின் கோடியி லிருக்கும்
    இரிசி வீட்டின் எதிர்த்த வீட்டில்
    இருப்பேன். நீயோ என்னை அங்கு
    வந்து கிந்து வருவாய் கிருவாய்
    என்று கூப்பிட எண்ண வேண்டாம்.
    அந்த வீட்டெண் அறுபத் திரண்டுதான்
    தெருப் பக்கத்தில் இருக்கும் அறையில்
    இருப்பேன்; அழைத்தால் வரவே மாட்டேன்.
    என்று தலைவர் இரைச்சல் போட்டு
    நடைவரைக் கும்போய் இடையில் திரும்பி
    அழைப்பார் இல்லை ஆதலால், மீண்டும்
    திரும்பிப் பார்த்துத் தெருவொடு சென்றார்.

    *

    21. சங்கிலி தேற்றல், தலைவியின் தூற்றல்.

    சங்கிலி வந்து தலைவியை நோக்கியே
    தங்க மான தங்கள் கணவருக்
    கிப்படி யெல்லாம் எரிச்சலுண் டாக்குதல்
    தப்பா அல்லவா சாற்றுவீர் என்றாள்.
    உரைத்தது போதும் உட்கார் என்று
    தலைவி சொன்னாள். சங்கிலி அமர்ந்தாள்.

    • • •

    மலைக் குரங்கா மனிதரா அவர்தாம்?
    கோணங்கி ஆடிக் கொக்க ரித்தார்
    ஆணாய்ப் பிறந்தால் அமர்க்கை வேண்டும்
    இவர்போல் மனிதரை யான்பார்த்த தில்லை.
    சுவரா கல்லா சொல்வதைப் பொறுக்க,
    மூச்சு விட்டாலும் ஆச்சா என்கிறார்.
    சீச்சி இவரொரு சின்னப் பிறவி
    என்றிவ் வாறு பன்றிபோல் உறுமிச்
    சென்று சோறுபோடு என்றாள் தலைவி.
    *

    22. மண்ணெண்ணெய்க் கையோடு சாப்பிடுகிறார்கள்.
    சமையல் நன்றாயில்லை என்பதற்குக் காரணம் தோன்றவில்லை.

    பையன்நோய் சிறிது படிந்தி ருந்ததால்
    பையன் நிமிர்ந்து பசிபசி என்றான்!
    பைய னுக்கும் பரிமாறி னார்கள்.
    தாயும் பிள்ளையும் சரேலென் றெழுந்தே
    இட்டமண் ணெண்ணெய்ப் புட்டியை இடறி
    எண்ணெய் சாய்ந்ததால் இச் இச் என்றே
    இருவரும் கையால் எடுத்துரு வாக்கிக்
    கடிது சமையல் கட்டினை அடைந்தார்.
    சோற்றில் ஏதும் சுடுநாற்றம் இல்லை,
    சாற்றி லேதும் தவறே இல்லை,
    குழம்பில் ஏதுங் குற்ற மில்லை.
    அவைகள் சுவையுடன் அமைந்தன எனினும்
    அந்த இருவரும் அலம்பாத கையோடு
    வந்துட் கார்ந்தார் வழக்கப் படியே.
    சோற்றில் ஏதோ சுவை குறைவுற்றது
    சாற்றில் ஏதோ தவறு தோன்றிற்று
    குழம்பில் ஏதோ குறை தோன்றிற்று
    சுவையுடன் அமைந்தவை கவலை விளைத்தன.
    வீட்டுக் காரி மிகவும் சினந்து
    இவற்றில் இனிமேல் சுவைதனை ஏற்ற
    முடியுமா என்று மொழிந்தாள். மொழிந்ததும்,
    என்னா லாவ தினியன்று மில்லை
    என்று கூறினாள் எதிர் நின்ற சங்கிலி.
    உண்டு முடிந்ததும் உள்ள கறியையும்
    மீந்த சோற்றையும் வேலைக் காரிகள்
    ஏந்தி வீட்டுக் கெடுத்துப் போயினர்.

    *

    23. வீட்டுக்காரி, பையன் தூக்கம்.

    பெரிய பையன் பெட்டி யண்டையில்
    கொரகொர வென்று குறட்டை ஏற
    மெழுகு போல அழுக்குப் படிந்த
    தலையணை மீது தலையை வைத்து
    விலகாது மூட்டை வெடுக்கென்று கடிப்பதும்
    தோன்றா உணர்வோடு தூங்க லானான்.
    ஈன்ற தாயோ ஈன்றகைப் பிள்ளையின்
    அண்டையில் படுத்தாள். அலறிற்றுப் பசு;
    வைக்கோல் போட மறந்தே னென்றே
    ஓடி, வைக்கோலைத் தேடிப் போட்டு
    நாடி வந்து நடுவிற் படுத்தாள்.
    தெருவில் நாயும் குரைப்பது கேட்டுத்
    தெருவின் கதவைச் சென்றுதாழ் இட்டாள்.
    நவாப்புக் குதிரை நாடு முழுதும்
    சவாரி வந்து தரையில் புரளல் போல்
    படுத்துப் புரண்டு பிடித்தாள் தூக்கம்!
    *

    24. இரவு பத்து மணி; தலைவர் திரும்பி வருகிறார்.

    எண்ணெய் இன்றி இருண்டன விளக்குகள்.
    இருண்ட வீட்டில் இருளும் குழந்தையும்
    அன்றி, மற்றை யனைவரும் துயின்றனர்.
    குற்றுயி ராகக் குழந்தை கிடந்தது.
    தூற்றும் பழியை ஏற்க அஞ்சி
    நள்ளிரு ளானது பிள்ளை சாகாமல்
    தன்மடி தனிலே தாங்கிக் கிடந்தது.
    சரியாய் அப்போது - இரவு பத்துமணி;
    தலைவர் திரும்பித் தம்வீடு நோக்கினார்.
    தலைவா சலில்நாய் தான் வரவேற்றது.
    வீடு மூடியும் விளக்கவிந் தும்இருள்
    காடுபோல் இருப்பது கருதிக் கனைத்தார்.
    கனைப்பது கேட்டு மனையாள் வந்து,தாழ்
    திறப்பாள் அல்லவா? திறக்கவே யில்லை.
    நாயை நோக்கி நவின்றார் தலைவர்
    நீயேன் தெருவில் நிற்கிறாய் என்று.
    நாய் அது கேட்டு ஞய்ஞய் என்றதாம்.
    அதற்கும் வழியில்லை அழகிய வீட்டில்.

    * * *

    கதவைத் தட்டினார் கையின் விரலால்!
    பதியத் தட்டியும் பார்த்தார் பிறகு!
    அழுந்தத் தட்டினார் அங்கை யாலே!
    அடித்தார் இடித்தார் படபட வென்றே!
    எட்டி உதைத்தார் இருநூறு தடவை!
    முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்!
    *

    25. அண்டை அயலார்க்கு இடையூறு!
    சினத்தோடு வந்தவர் சிரிப்போடு திரும்பினர்.

    எதுவும் பயன்பட வில்லை ஆயினும்
    அண்டை அயலில் அருகில் இருந்தவர்
    தக்க தரிகிடத் தாளம் கேட்டுத்
    தூக்கம் கலைந்ததால் சூழ்ந்தோடி வந்து
    மூக்கில் எரிச்சலை முன்னே நிறுத்தி
    என்னாங் காணும் இந்நே ரத்தில்
    தச்சுப் பட்டறை வைச்சது போலவும்
    அச்சுப் பீப்பாய் அடிப்பது போலவும்
    இப்படித் தட்டி இன்னல் விளைக்கிறீர்?
    உள்ளே இருப்பவர் உயிரோ டிருந்தால்
    கொள்ளுக் கட்டிய குதிரை போல
    வாய்திறக் காமலா வம்பு செய்வார்கள்?
    என்று கூறி இரைச்சலிட் டார்கள்.
    கதவு மிகவும் கனத்த தென்றார்.
    எழுந்து திறப்பாள் என்பதை நீவிர்
    எதிர்பார்த் திடவே யில்லை போலும்,
    கதவை உடைப்பதே கருத்துப் போலும்!
    என்று சிரித்தே ஏகினார் வந்தவர்.
    *

    26. கதவு திறக்கப்பட்டது. தலைவர்க்குப் பசி. கூச்சலிட்டுப் பார்த்தார்.

    மேலும் கதவிடிப்பு வேலை தொடங்கிற்று.
    பனிரண்டு மணிக்குத் தனிப்பெருந் தலைவியின்
    சிறுவிரல் தன்னைத் தின்ற திருட்டெலி
    பெருவிரல் தன்னைப் பிடுங்கும் போதுதான்
    விழித்தாள். காதில் வீதியில் தொலைவில்
    புழுவொன்று சருகுமேல் புரள்வது போன்ற
    ஓசை தன்னை உற்றுக் கேட்டாள்.
    ஆசை ஆம்படை யானா என்றே
    மெதுவாய் எழுந்து மெதுவாய் நின்று
    மெதுவாய்ப் பெயர்ந்து மெதுவாய் நடந்தே
    கோட்டை நடுவின் வேட்டுப் போலத்
    தலைவர் இடிக்கும் தடித்த கதவைத்
    திறந்து விட்டுத் திரும்பி வந்து
    நிறைமுக் காட்டோடு நீட்டிப் படுத்தாள்.
    தலைவி விழிப்புடன் தலையசைப் பதையும்
    முதல்மகன் கொண்ட முழுத்தூக் கத்தையும்
    இருட்டில் விளக்கை ஏற்றிப் பார்த்த
    தலைவர் ஏனடா தம்பி சாப்பாடு -
    உண்டா இல்லையா உரையடா என்றார்.
    சாப்பாட்டுக் கடை சாத்தியாய் விட்டது.
    போய்ப் பார்த்துத்தான் புறப்பட்டு வந்தேன்
    என்று கூறினார்! ஏதும் பதிலில்லை.
    அத்தனை பேரும் அழிந்தா போனீர்?
    ஒருவரும் இல்லா தொழிந்தா போனீர்?
    என்று கூறி இரைச்ச லிட்டார்.

    *

    27. சாப்பாடு இல்லை என்று தெரிந்தபின்
    சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார் தலைவர்.

    அமைவாய் விளக்கை அங்கையில் தூக்கிச்
    சமையல் அறைக்குத் தாமே சென்றார்.
    ஏன மெல்லாம் இறக்கி இறக்கிப்
    பூனை போலப் புரட்டித் தள்ளிப்
    பொரியற் சட்டியைப் போட் டுடைத்துச்
    சரியல் சட்டியைத் தட்டென்று போட்டே
    எண்ணெய்ச் சட்டியை எடுத்துச் சாய்த்து
    வெண்ணெய்த் தாழியை விரியத் தள்ளிச்
    சோற்றுப் பானை துடைக்கப் பட்டதைக்
    குழம்புச் சட்டி கழுவப் பட்டதைத்
    தெரிந்து, பசியோ திருதிரு என்று
    எரிவு கொள்ள, இழவோ என்று
    திறந்த வற்றைத் திறந்தே போட்டுப்
    பெருச்சா ளிக்குப் பிழைப்புண் டாக்கிக்
    கூடத் தினிலே குந்திப் பார்த்தும்
    பாடிப் பார்த்தும் படிந்து பார்த்தும்
    எதுவும் நடவா தென்று தெரிந்தபின்
    தலைவர் ஓர் உறுதி சாற்ற லானார்:
    சாப்பிட மாட்டேன் சத்தியம் என்று!

    *

    28. திருடன் வந்து அலமாரி திறந்து, தன்செயலை அமைதியோடு செய்கிறான்.

    சரியாய் ஒருமணி இரவில் தலைவர்
    தூக்கமும் பசியின் துடிப்பும் விழிப்பும்
    இரங்கத் தக்கவாய் இருந்தன. தலைவியோ
    கனவால் விழிப்பதும் கண்ணயர் வதுமாய்
    இருந்தாள். பையன் சொறிவான், தூங்குவான்!
    இந்த நிலைமையில் இவர்கள் இருக்கையில்
    திருடன் ஒருவன் தெருப்பக்கத்து
    மாடிமேல் ஏறி ஆடா தசையாது
    முற்றத்து வழியைப் பற்றி இறங்கினான்.
    அவனோ கறுப்புடை அரையிற் கட்டிப்
    பிறைபோற் கத்தியும் பிடித் திருந்தான்!
    ஓசை யின்றி உள்ளறை புகுந்தான்.
    படர்ந்தெரி விளக்கைப் பளிச்சென் றவித்தான்!
    அலமாரி தன்னை அங்கையால் தடவினான்!
    சாவி யில்லை; தாவி நகர்ந்து
    தலைவியின் தலைமாடு தடவினான்; இல்லை!
    சாய்வு நாற் காலியில் சாய்ந்திருந் தவரின்
    அண்டையில் இருந்த குண்டுப் பெட்டிமேல்
    இருந்தது சாவி; எடுத்துச் சென்றே
    அலமாரி தன்னை கிலுக்கென்று திறந்தான்!
    வீட்டுநாய் அதனைக் கேட்டுக் குலைத்தது!
    தலைவர் விழித்தார். தலைவி விழித்தாள்.
    பெரியவன் விழித்தான். தெருவில் தொலைவில்
    எதையோ கண்டு பதைத்தது நாய் என்று
    மதமத வென்று மல்லாந் திருந்தனர்!
    சிறிது நேரம் சென்ற பின்னர்
    நிறையப் பணத்தாள் நிறையப் பணங்கள்
    போட்டுக் கட்டிய பொத்தற் பைகளைக்
    கையில் தூக்கினான் கரிய திருடன்.
    பொத்தல் வழியே பொத்தென்று சிற்சில
    வெள்ளிக் காசுகள் வீழ்ந்த ஓசை
    அனைவர் காதையும் அசைத்த தேனும்
    தலைவர் எதையோ தடவு கின்றார்
    என்று தலைவி எண்ணி யிருந்தாள்.
    தலைவி பாக்குத் தடவினாள் என்று
    தலைவர் நினைத்துச் சரி என் றிருந்தார்.
    பெருச்சாளி என்று பெரியவன் நினைத்தான்.
    திருடன் துணியன்று தேடி, அதிலே
    பெரும்பணப் பையைப் பெயர்த்து வைத்துக்
    கட்டி இடது கையிற் பிடித்து
    வலது கையில் வைத்தான் கத்தியை!

    *

    29. திருடனைத் தேள் கொட்டிற்று. திருடன் இருப்பதைத்
    தலைவர் அறிந்து, அங்கிருந்த விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்தார்.

    அவன்தன் காலை அயலில் பெயர்த்தான்;
    கெளவிற்றுக் காலை கடுந்தேள் ஒன்று.
    கடுந்தேள் அகற்றக் காலை உதறினான்.
    தகரப் பெட்டியில் தன்கால் பட்டதால்
    தடாரென் றெழுந்த சந்தடிக் கிடையில்
    கள்ளன் உட்புறக் கதவில் நுழைந்தான்.
    தலைவர் சடுதியில் விளக்கை ஏற்றினார்.
    கதவில் திருடன் பதுங்கி யிருப்பது
    வெளியில் இடுக்கால் வெளிப்பட் டதினால்
    தலைவர் தமது தலையைச் சாய்த்துக்
    கத்தியைக் கள்ளனைக் கண்ணால் பார்த்துப்
    பின்வாங்கும் போது பெட்டி யின்மேல்
    கைத்துப் பாக்கி வைத் திருப்பதைக்
    கண்டார்; அதனைக் கையில் எடுத்தார்.
    விளையாட் டுக்கு வெடிப்ப தாயினும்
    அந்தத் திருடனை அஞ்ச வைக்கலாம்
    என்று தலைவர் எண்ணிக் கொண்டார்.

    *

    30. விளையாட்டுத் துப்பாக்கியை மெய்யானதென்று திருடன் நடுங்கினான்.
    ஆனால் பையன், திருடனை உண்மையுணரச் செய்துவிட்டான்.

    அந்த வேளையில் அருமைத் தலைவி
    கள்ளனா என்று வெள்ளையாய்க் கேட்டாள்.
    கள்ளன் அதுகேட்டுக் கதவிற் பதுங்கினான்;
    கைத்துப் பாக்கியைக் கண்டு நடுங்கினான்.
    என்னைச் சுடாதீர்! என்று கூறிப்
    பணத்தைக் கொடுத்துப் பயணப் படவும்
    பண்ணினான் முடிவு! பையன் அப்போது
    நிலைமை யாவும் நேரில் அறிந்தும்,
    பொய்த் துப்பாக்கியை மெய்த்துப் பாக்கி
    என்று நினைக்கும் தன்னருந் தந்தையை
    மடையன் என்றெண்ணி வாளா யிருந்தான்.
    எடுத்ததை வைத்துப் பிடியடா ஓட்டம்
    சுடுவேன் பாரடா சுடுவேன் என்று
    கைத்துப் பாக்கியைக் காட்டினார் தலைவர்.
    அதுகேட்டுப் பெரியவன் அப்பா! அப்பா.
    அத்துப் பாக்கி பொய்த் துப்பாக்கி;
    தக்கை வெடிப்பது தானே என்றான்.
    திருடனுக்கு அச்சம் தீர்ந்து போயிற்று.
    மெதுவாய் நடந்து வெளியிற் செல்கையில்
    இதுவா தெருவுக்கு ஏற்ற வழியென்று
    திருடன் கேட்டுச் சென்று மறைந்தான்.
    திருடன் கையோடு செல்வமும் மறைந்தது.
    தலைவியும் பையனும் தலைவர் தாமும்
    குலைநடுக் கத்தால் கூவா திருந்தனர்!

    *

    31. திருடன் போனது தெரிந்தபின், தலைவருக்கு எரிச்சல் வந்தது.
    அந்த எரிச்சல் தலைவியைக் கொன்றது.

    திருடன் அந்தத் தெருவைவிட் டகன்றதை
    ஐய மின்றி அறிந்த பின்னர்,
    தலைவர் அலறத் தலைப்பட்டார்; அடே
    கொலைஞனே எனக்குக் குழந்தையாய் வந்தாய்
    கைத்துப் பாக்கியால் கள்ளன் நடுங்கினான்
    பொய்த்துப் பாக்கி பொய்த்துப் பாக்கி
    என்றாய், சென்றான் பொருளையும் தூக்கி
    என்று கூறி, எதிரில் இருந்த
    சந்தனக் கல்லைச் சரேலென எடுத்துப்
    படுத் திருந்த பையனை நோக்கி
    எறிந்தார். பசியும், எரிபோல் சினமும்,
    மடமையும் ஒன்றாய் மண்டிக் கிடந்த
    தலைவன் எறிந்த சந்தனக் கல்லோ
    குறிதவறிப் போய்க் கொண்ட பெண்டாட்டி
    மார்பினில் வீழ்ந்தது; மங்கை ஆ என்று
    கதறினாள்; அ•தவள் கடைசிக் கூச்சல்!

    *

    32. பெரிய பையன் இல்லை.
    < dd> அயலார் நலம் விசாரிக்கிறார்கள்.

    குறிதவ றாமல் எறிந்த முக்காலி
    பெரியவன் தலைமேல் சரியாய் வீழ்ந்தது.
    தலைவர் பின்னும் தாம்விட் டெறிந்த
    விறகின் கட்டை வீணே; ஏனெனில்
    முன்பெ பெரியவன் முடிவை அடைந்தான்!
    அறிவிலார் நெஞ்சுபோல் அங்குள விளக்கும்
    எண்ணெய் சிறிதும் இல்லா தவிந்தது.
    வீட்டின் தலைவர் விளக்கேற்று தற்கு
    நெருப்புப் பெட்டியின் இருப்பிடம் அறியாது
    அன்பு மனைவியை அழைப்பதா இல்லையா
    என்ற நினைப்பில் இருக்கையில், அண்டை
    அயலார் தனித்தனி அங்கு வந்தார்கள்.
    எதிர்த்த வீட்டான் என்ன வென்றான்.
    திருடனா என்றான் சீனன். விளக்கை
    ஏற்றச் சொன்னான் எட்டி யப்பன்.
    எதிர்த்த வீட்டின் எல்லிக் கிழவி,
    குழந்தை உடல்நலம் குன்றி இருந்ததே
    இப்போ தெப்படி என்று கேட்டாள்.
    விளக்கேற் றும்படி வீட்டுக் காரியை
    விளித்தார் தலைவர்; விடையே இல்லை!
    என்மேல் வருத்தம் என்று கூறிப்
    பின்னர் மகனைப் பேரிட் டழைத்தார்;
    ஏதும் பதிலே இல்லை. அவனும்
    வருத்த மாய்இருப் பதாய் நினைத்தார்!
    அயல்வீட் டார்கள் அகல்விளக் கேற்றினார்.
    கிழவி முதலில் குழந்தையைப் பார்த்து
    மாண்டது குழந்தை மாண்டது என்றாள்!
    மனைவியும் பையனும் மாண்ட சேதி
    அதன்பின் அனைவரும் அறிய லாயினர்.
    தெருவார் வந்து சேர்ந்தார் உள்ளே.
    ஊரினர் வீட்டின் உள்ளே நுழைந்தார்.
    அரச காவலர் ஐந்துபேர் வந்தார்.
    ஐவரும் நடந்ததை ஆராய்ந் தார்கள்.

    *

    33. கல்வியில்லா வீடு இருண்ட வீடு.

    எல்லா நலமும் ஈந்திடும் கல்வி
    இல்லா வீட்டை இருண்டவீ டென்க!
    படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின்
    துடிப்பிலார் நிறைந்த சுடுகா டென்க!
    அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம்
    நெறி காணாது நின்ற படிவிழும்!
    சொத்தெலாம் விற்றும் கற்ற கல்வியாம்
    வித்தால் விளைவன மேன்மை, இன்பம்!
    செல்வம் கடல்போல் சேரினும் என்பயன்?
    கல்வி இல்லான் கண் இலான் என்க.
    இடிக்குரற் சிங்கநேர் இறையே எனினும்
    படிப்பிலாக் காலை நொடிப்பிலே வீழ்வான்!
    கல்லான் வலியிலான்; கண்ணிலான்; அவன்பால்
    எல்லா நோயும் எப்போது முண்டு.
    கற்க எவரும்; எக்குறை நேரினும்
    நிற்காது கற்க. நிறைவாழ் வென்பது
    கற்கும் விழுக்காடு காணும்; பெண்கள்
    கற்க! ஆடவர் கற்க! கல்லார்
    முதிய ராயினும் முயல்க கல்வியில்!
    எதுபொருள் என்னும் இருவிழி யிலாரும்
    படித்தால் அவர்க்குப் பல்விழி கள்வரும்.
    ஊமையுங் கற்க ஊமை நிலைபோம்!
    ஆமைபோல் அடங்கும் அவனும் கற்க
    அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்!
    கையும் காலும் இல்லான் கற்க
    உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான்.
    இல்லார்க் கெல்லாம் ஈண்டுக்
    கல்விவந் ததுவெனில் கடைத்தேறிற் றுலகே!

    முற்றும்.