MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
    (75 கவிதைகள் )
    காவியம்
    1.01 சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
    1.02 புரட்சிக் கவி
    1.03 வீரத்தாய்
    இயற்கை
    1.04 மயில்
    1.05 சிரித்த முல்லை
    1.06 உதய சூரியன்
    1.07 காடு
    1.08 கானல்
    1.09 மக்கள் நிலை
    1.10 காட்சி இன்பம்
    காதல்
    1.11 மாந்தோப்பில் மணம்
    1.12 காதற் கடிதங்கள்
    1.13 காதற் குற்றவாளிகள்
    1.14 எழுதாக் கவிதை
    1.15 காதற் பெருமை
    1.16 காதலைத் தீய்த்த கட்டுப்பாடு
    1.17 தலைவி காதல்
    1.18 விரகதாபம்
    தமிழ்
    1.19 தமிழின் இனிமை
    1.20 இன்பத் தமிழ்
    1.21 தமிழ் உணவு
    1.22 தமிழ்ப் பேறு
    1.23 எங்கள் தமிழ்
    1.24 தமிழ் வளர்ச்சி
    1.25 தமிழ்க் காதல்
    1.26 எந்நாளோ?
    1.27 சங்க நாதம்
    1.28 தமிழ்க் கனவு
    பெண்ணுலகு
    1.29 பெண்களைப்பற்றிப் பெர்னாட்ஷா
    1.30 கைம்மைப் பழி
    1.31 கைம்மைக் கொடுமை
    1.32 மூடத் திருமணம்
    1.33 எழுச்சியுற்ற பெண்கள்
    1.34 குழந்தை மணத்தின் கொடுமை
    1.35 பெண்ணுக்கு நீதி
    1.36 கைம்பெண் நிலை
    1.37 இறந்தவன்மேற் பழி
    1.38 கைம்மைத் துயர்
    1.39 கைம்மை நீக்கம்
    1.40 தவிப்பதற்கோ பிள்ளை?
    1.41 ஆண் குழந்தை தாலாட்டு
    1.42 பெண் குழந்தை தாலாட்டு
    புதிய உலகம்
    1.43 உலக ஒற்றுமை
    1.44 பேரிகை
    1.45 தளை அறு!
    1.46 கூடித் தொழில் செய்க
    1.47 தொழிலாளர் விண்ணப்பம்
    1.48 வாழ்வில் உயர்வுகொள்!
    1.49 மாண்டவன் மீண்டான்!
    1.50 ஆய்ந்து பார்!
    1.51 மானிட சக்தி
    1.52 முன்னேறு!
    1.53 உலகப்பன் பாட்டு
    1.54 உலகம் உன்னுடையது
    1.55 சாய்ந்த தராசு
    1.56 வியர்வைக் கடல்
    1.57 நீங்களே சொல்லுங்கள்!
    1.58 புதிய உலகு செய்வோம்
    1.59 பலிபீடம்
    1.60 சகோதரத்துவம்
    1.61 சேசு பொழிந்த தெள்ளமுது
    1.62 தமிழ்நாட்டிற் சினிமா
    1.63 புத்தகசாலை
    1.64 வாளினை எடடா!
    1.65 வீரத் தமிழன்
    1.66 சைவப் பற்று
    1.67 எமனை எலி விழுங்கிற்று!
    1.68 சுதந்தரம்
    1.69 நம் மாதர் நிலை
    1.70 ஏசுநாதர் ஏன் வரவில்லை?
    1.71 கடவுள் மறைந்தார்!
    1.72 உன்னை விற்காதே!
    1.73 பத்திரிகை
    1.74 யாத்திரை போகும் போது!
    1.75 பூசணிக்காய் மகத்துவம்!

    புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி

    எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பி
    ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத்
    தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
    தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
    கங்குகளில் ஏழு முகிலினமும் - வந்து
    கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? - எனில்
    மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
    மந்த நகையங்கு மின்னுதடா!

    காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
    காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
    தோளசைத்தங்கு நடம் புரிவாள் - அவன்
    தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
    வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
    வையமுழுவதும் துண்டு செய்வேன் - என
    நீள இடையின்றி நீநினைத்தால் - அம்மை
    நேர்படுவாள் உன்றன் தோளினிலே!



    1. காவியம்


    1.1 சஞ்சீவி பர்வதத்தின் சாரல்


    குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த
    மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்
    காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்
    ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு;
    பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே
    னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்;
    வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு;
    காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு.
    நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான்
    சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார்.

    சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே ஓர்நாளில்
    கொஞ்சம் குறையமணி நான்காகும் மாலையிலே
    குப்பன்எனும் வேடக் குமரன் தனியிருந்து
    செப்புச் சிலைபோலே தென்திசையைப் பார்த்தபடி
    ஆடா தசையாமல் வாடிநின்றான். சற்றுப்பின்,
    வாடாத பூமுடித்த வஞ்சிவரக் கண்டான்.
    வரக்கண்ட தும்குப்பன் வாரி அணைக்கச்
    சுரக்கின்ற காதலொடு சென்றான். புதொடாதீர்கள்!மு
    என்றுசொன்னாள் வஞ்சி. இளையான் திடுக்கிட்டான்.

    குன்றுபோல் நின்றபடி குப்பன் உரைக்கின்றான்:
    கண்ணுக்குள் பாவையே! கட்டமுதை நான்பசியோ
    டுண்ணப்போம் போதுநீ ஓர்தட்டுத் தட்டிவிட்டாய்!
    தாழச் சுடுவெய்யில் தாளாமல் நான்குளிர்ந்த
    நீழலைத்தா வும்போது நில்என்று நீதடுத்தாய்!
    தொட்டறிந்த கையைத் தொடாதேஎன் றாய்! நேற்றுப்
    பட்டறிந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ?
    உன்னோடு பேச ஒருவாரம் காத்திருந்தேன்
    என்னோடு முந்தாநாள் பேச இணங்கினாய்!
    நேற்றுத்தான் இன்பக் கரைகாட்டினாய்! இன்று
    சேற்றிலே தள்ளிவிட்டாய்! காரணமும் செப்பவில்லை

    என்றுரைக்கக் கேட்ட இளவஞ்சி, காதலரே!
    அன்றுநீர் சொன்னபடி அவ்விரண்டு மூலிகையைச்
    சஞ்சீவி பர்வதத்தில் தையலெனைக் கூட்டிப்போய்க்
    கொஞ்சம் பறித்துக் கொடுத்தால் உயிர்வாழ்வேன்.
    இல்லையென்றால் ஆவிஇரா தென்றாள். வேட்டுவன்:
    கல்லில் நடந்தால்உன் கால்கடுக்கும் என்றுரைத்தான்.
    கால்இரண்டும் நோவதற்குக் காரணமில்லை. நெஞ்சம்,
    மூலிகை இரண்டின்மேல் மொய்த்திருப்ப தால் என்றாள்.
    பாழ்விலங்கால் அந்தோ! படுமோசம் நேரும் என்றான்
    வாழ்வில்எங்கும் உள்ளதுதான் வாருங்கள் என்றுரைத்தாள்.
    அவ்விரண்டு மூலிகையின் அந்தரங்கம் அத்தனையும்
    இவ்விடத்திற் கேட்டுக்கொள் என்றுரைப்பான் குப்பன்:
    ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது
    நன்றாகக் கேட்கும்;மற் றொன்றைவா யில்போட்டால்
    மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி
    கண்ணுக் கெதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன்;
    ஆதலால் மூலிகையின் ஆசை தணிருஎன்றான்.
    மோதிடுதே கேட்டபின்பு மூலிகையில் ஆசை என்றாள்.
    என்னடி! பெண்ணேநான் எவ்வளவு சொன்னாலும்
    சொன்னபடி கேட்காமல் தோஷம் விளைக்கின்றாய்.
    பெண்ணுக் கிதுதகுமோ? வண்ணமலர்ச் சோலையிலே,
    எண்ணம்வே றாகி இருக்கின்றேன் நான் என்று
    கண்ணைஅவள் கண்ணிலிட்டுக் கையேந்தி நின்றிட்டான்.

    பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?
    மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
    பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
    மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
    ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
    ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு
    புலன் அற்றபேதையாய்ப் பெண்ணைச்செய் தால்அந்
    நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே.
    சித்ரநிகர்ப் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரதநற்
    புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது?
    சற்றுந் தயங்கேன் தனியாய்ச்சஞ் சீவிமலை
    உற்றேறி மூலிகையின் உண்மை அறிந்திடுவேன்.
    மூலிகையைத் தேட முடியாவிட் டால்மலையின்
    மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன்.
    ஊரிலுள்ள பெண்களெல்லாம் உள்ளத்தைப் பூர்த்திசெயும்
    சீரியர்க்கு மாலையிட்டுச் சீரடைந்து வாழ்கின்றார்.
    தோகை மயிலே! இதைநீகேள் சொல்லுகின்றேன்.
    நாகம்போல் சீறுகின்ற நாதரிடம் சொல்லிவிடு.
    பச்சிலைக்குச் சஞ்சீவி பர்வதம்செல் வேன் என்றாள்.

    அச்சுப் பதுமையே! ஆரணங்கே! நில்லேடி!
    நானும் வருகின்றேன் நாயகியே! நாயகியே!
    ஏனிந்தக் கோபம்? எழிலான காதலியே!
    என்றுகுப்பன் ஓடி இளவஞ்சி யைத்தழுவி
    நின்றான். இளவஞ்சி நின்று மகிழ்வுற்றாள்.
    அவ்விரண்டு மூலிகையில் ஆரணங்கே நீஆசை
    இவ்வளவு கொண்டிருத்தல் இப்போது தான்அறிந்தேன்
    கூட்டிப்போய்ப் பச்சிலையைக் கொய்து தருகின்றேன்;
    நீட்டாண்மைக் காரி! எனக்கென்ன நீதருவாய்?
    என்று மொழிந்தான் எழுங்காத லால்குப்பன்.
    முன்னே இலைகொடுத்தால் முத்தம் பிற கென்றாள்.
    என்கிளியே நீமுத்தம் எத்தனைஈ வாய்? என்றான்.
    என்றன் கரத்தால் இறுக உமைத்தழுவி
    நோகாமல் முத்தங்கள் நூறுகொடுப் பேன் என்றாள்.
    ஆசையால் ஓர்முத்தம் அச்சாரம் போ டென்றான்.

    கேலிக்கு நேரம் இதுவல்ல. கேளுங்கள்
    மூலிகைக்குப் பக்கத்தில் முத்தம் கிடைக்கும் என்றாள்.
    குப்பன் தவித்திட்டான், காதற் கொடுமையினால்.
    எப்போது நாம்உச்சிக் கேறித் தொலைப்பதென
    அண்ணாந்து பார்த்திட்டான் அம்மலையின் உச்சிதனை!
    கண்ணாட்டி தன்னையும்ஓர் கண்ணாற் கவனித்தான்.
    வஞ்சிஅப் போது மணாளன் மலைப்பதனைக்
    கொஞ்சம் அவமதித்திக் கோவை உதடு
    திறந்தாள். திறந்து சிரிக்குமுன், குப்பன்
    பறந்தான் பருவதமேல் பாங்கியையும் தூக்கியே.
    கிட்டரிய காதற் கிழத்தி இடும்வேலை
    விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ!
    கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
    மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்.
    மாமலைதான் சென்னி வளைந்து கொடுத்ததுவோ?
    நாம்மலைக்கக் குப்பன் விரைவாய் நடந்தானோ?
    மங்கையினைக் கீழிறக்கி, மாதே! இவைகளே
    அங்குரைத்த மூலிகைகள்; அட்டியின்றிக் கிள்ளிக்கொள்
    என்றுரைத்தான் குப்பன். இளவஞ்சி தான்மகிழ்ந்து
    சென்று பறித்தாள். திரும்பிச் சிறிதுவழி
    வந்தார்கள். அங்கோர் மரத்து நிழலிலே
    சிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள்.

    மூலிகையில் ஓர்இனத்தை முன்னே இருவருமாய்
    ஞாலத்துப் பேச்சறிய நாக்கிலிட்டுத் தின்றார்கள்.
    வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின்
    நெஞ்சம் வசமாக நேரில்அவர் பேசுதல்போல்
    செந்தமிழில் தங்கள் செவியிற்கேட் கப்பெற்றார்.
    அந்த மொழிகள் அடியில் வருமாறு:

    இத்தாலி தேசம் இருந்து நீஇங்கு வந்தாய்.
    பத்துத் தினமாகப் பாங்காய் உணவுண்ண
    இவ்விடுதி தன்னில் இருந்து வருகின்றாய்!
    எவ்வாறு நான் சகிப்பேன் இந்தக் கறுப்பன்
    எனக்கெதிரே உட்கார்ந் திருப்பதனை என்றாய்;
    தனக்கெனவே நல்உணவுச் சாலைஒன் றுண்டாக்கி
    அங்கவன் சென்றால் அடுக்கும் எனஉரைத்தாய்;
    இத்தாலிச் சோதரனே! என்னமதியுனக்கே?
    செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும்
    இவ்வுலக மக்களிலே என்னபே தங்கண்டாய்?
    செவ்வைபெறும் அன்பில்லார் தீயபே தம்கொள்வார்.
    எங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித்
    தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்;
    பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ!போ!போ!
    பேதம்கொண் டோ ர்க்குப் பிராஞ்சில் இடமில்லை
    என்ற மொழிகள் இவர்காதில் கேட்டவுடன்
    நன்று பிராஞ்சியர்க்கு நாக்குளிர வாழ்த்துரைத்தார்.
    பின்னர் அமெரிக்கன் பேசுவதைக் கேட்டார்கள்.
    அன்னவன் பேச்சும் அடியில் வருமாறு:

    நல்ல அமெரிக்கன் நானிலத்தில் வாழ்கின்ற
    எல்லாரும் நன்றாய் இருக்க நினைத்திடுவான்.
    பொல்லா அமெரிக்கன் பொன்னடைந்து தான்மட்டும்
    செல்வனாய் வாழத் தினமும் நினைத்திடுவான்.
    நல்லவனாய் நானிருக்க நாளும் விரும்புகிறேன்.
    சொல்லும் இதுகேட்ட தோகையும் குப்பனும்
    கொத்தடிமை யாகிக் குறைவுபடும் நாட்டுக்கு
    மெத்தத்துணை யாகியிவன் மேன்மை அடைக என்றார்.
    இங்கிலந்து தேசம் இருந்தொருவன் பேசினான்;
    இங்கிருந்து கேட்டார் இருவரும். என்னவென்றால்:

    ஓ!என் சகோதரரே! ஒன்றுக்கும் அஞ்சாதீர்!
    நாவலந் தீவு நமைவிட்டுப் போகாது.
    வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள்என்றால்
    சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்;
    ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்.
    ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே?
    பேதம் வளர்க்கப் பெரும்பெரும்பு ராணங்கள்!
    சாதிச்சண் டைவளர்க்கத் தக்கஇதி காசங்கள்!
    கட்டிச் சமுகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
    கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றோர்.
    தேன்சுரக்கப் பேசிஇந்த தேசத்தைத் தின்னுதற்கு
    வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்.
    இந்த உளைச்சேற்றை ஏறாத ஆழத்தை
    எந்தவிதம் நீங்கிநம்மை எதிர்ப்பார்? இன்னமும்
    சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்
    தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி
    ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச்
    சாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப்
    பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக்
    கற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே.
    இந்த நிலையிற் சுதந்திரப் போரெங்கே?
    கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே?
    தேகம் அழிந்துவிடும்; சுற்றத்தார் செத்திடுவார்;
    போகங்கள் வேண்டாம்; பொருள்வேண்டாம் மற்றுமிந்தப்
    பாழுலகம் பொய்யே பரமபதம்போ என்னும்
    தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம்.
    சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும்,
    நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்,
    மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே
    ஓடச்செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்

    இந்தப் பிரசங்கம் இவ்விருவர் கேட்டார்கள்;
    சொந்த நிலைக்குத் துயருற்றார். வஞ்சி
    சிலைபோல் இருந்தாள்; திகைத்தாள்; பின்நாட்டின்
    நிலையறிய நேர்ந்தது பற்றி மகிழ்ந்திட்டாள்!
    பச்சிலையால் நல்ல பயன்விளையும் என்று சொன்னாள்!
    பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள்.
    இந்த இலையால் இனிநன்மை கொள்க என்று
    சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து.
    வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி
    சொல்லிஎனைத் தூக்கிவந்து சூக்ஷுமத்தைக் காட்டிய,கண்
    ணாளர்தாம் வாழ்வடைக என்றாள்; அவனுடைய
    தோளை ஒருதரம் கண்ணாற் சுவைபார்த்தாள்.
    அச்சமயம் குப்பன், அழகியதன் தாய்நாட்டார்
    பச்சைப் பசுந்தமிழில் பேசுவதைக் கேட்டிருந்தான்.
    குப்பனது தோளில் குளிர்ந்தமலர் ஒன்றுவிழ
    இப்பக்கம் பார்த்தான்; வஞ்சி இளங்கையால்
    தட்டிய தட்டென்று சந்தேகம் தீர்ந்தவனாய்க்
    கட்டிக் கரும்பே! கவனம் எனக்கு
    நமது தேசத்தில் நடக்கின்ற பேச்சில்
    அமைந்து கிடக்கு தென்றான். வஞ்சி அதுகேட்டே
    அன்னியர்கள் பேசுவதில் அன்பைச் செலுத்துங்கள்;
    கன்னத்தை மாத்திரம்என் கையிற் கொடுங்க ளென்றாள்.
    அன்பும் உனக்குத்தான்; ஆருயிரும் உன்னதுதான்
    இன்பக்கிளியே! எனக்களிப்பாய் முத்த மென்றான்.

    கையோடு கைகலந்தார்; முத்தமிடப் போகையிலே
    ஐயையோ! ஐயையோ! என்ற அவலமொழி
    காதிலே வீழ்ந்தது! முத்தம் கலைந்ததே!
    ஈதென்ன விந்தை? எழில்வஞ்சி! கேள் என்றான்.
    வஞ்சி கவனித்தாள். சத்தம் வரும்வழியாய்
    நெஞ்சைச் செலுத்தினார் நேரிழையும் காதலனும்.

    ஓர்நொடியிற் சஞ்சீவி பர்வதத்தை ஓடிப்போய்
    வேரோடு பேர்த்துவர வேண்டுமே ஐயாவே!
    இப்பாழும் வாக்கை இருவரும் கேட்டார்கள்.
    குப்பன் மிகப்பயந்து கோதைமுகம் பார்த்திட்டான்
    வஞ்சி யவள்நகைத்தே இன்ப மணாளரே!
    சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பெயர்க்கும்
    மனிதரும் இல்லை! மலையும் அசையா
    தினிஅந்தச் சத்தத்தில் எண்ணம் செலுத்தாதீர்
    என்றுரைத்தாள் வஞ்சி. இதுசொல்லித் தீருமுன்,

    நன்றாக உங்களுக்கு ராமன் அருளுண்டு;
    வானம் வரைக்கும் வளரும் உடலுண்டே;
    ஏனிங்கு நின்றீர்? எடுத்துவரு வீர்மலையை

    என்றஇச் சத்தம் இவர்செவியில் வீழ்ந்தவுடன்
    குன்று பெயர்வது கொஞ்சமும்பொய் யல்லவென்று
    குப்பன் நடுநடுங்கிக் கொஞ்சுமிள வஞ்சியிடம்
    மங்கையே, ராமனருள் வாய்ந்தவனாம்; வானமட்டும்
    அங்கம் வளர்வானாம்; அப்படிப் பட்டவனை
    இந்தச்சஞ் சீவிமலை தன்னை யெடுத்துவர
    அந்த மனிதன்அங்கே ஆணை யிடுகின்றான்.
    நாலடியில் இங்கு நடந்துவந்து நாம்மலையின்
    மேலிருக்கும் போதே வெடுக்கென்று தூக்கிடுவான்.
    இங்கு வருமுன் இருவரும் கீழிறங்கி
    அங்குள்ள சாரல் அடைந்திடுவோம் வாமுவென்றான்.

    ராமனெங்கே! ராமன் அருளெங்கே! சஞ்சீவி
    மாமலையைத் தூக்குமொரு வல்லமைஎங்கே! இவற்றில்
    கொஞ்சமும் உண்மை இருந்தால்நாம் கொத்தவரைப்
    பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்ப தரிதாகி
    அடிமையாய் வாழோமே? ஆண்மைதான் இன்றி
    மிடிமையில் ஆழ்ந்து விழியோமே? என்றந்த
    வஞ்சி யுரைத்தாள்.பின் மற்றோர் பெருஞ்சத்தம்,
    அஞ்சுகின்ற குப்பன் அதிரச்செய் திட்டதே!

    அம்மலையை ஓர்நொடியில் தூக்கிவந் தையாவே
    உம்எதிரில் வைக்கின்றேன் ஊஹுஹு உஹுஹு!

    குப்பன் பதைத்தான் குடல்அறுந்து போனதுபோல்.
    எப்படித்தாம் நாம்பிழைப்போம்? ஏதும் அறிகிலேன்
    சஞ்சீவி பர்வதத்தைத் தாவித் தரையோடு
    பஞ்சிருக்கும் மூட்டைபோல் பாவி அவன்எவனோ
    தூக்குகின்றான்! வஞ்சி! சுகித்திருக்க எண்ணினையே!
    சாக்காடு வந்ததடி! தக்கவிதம் முன்னமே
    நம்பென்று நான்சொன்ன வார்த்தையெல்லாம் நம்பாமல்
    வம்பு புரிந்தாய்! மலையும் அதிர்ந்திடுதே!
    முத்தம் கொடுத்து முழுநேர மும்தொலைத்தாய்.
    செத்துமடி யும்போது முத்தம் ஒருகேடா?
    என்றனுயி ருக்கே எமனாக வாய்த்தாயே!
    உன்றன் உயிரைத்தான் காப்பாற்றிக் கொண்டாயா?
    தூக்கிவிட்டான்! தூக்கிவிட்டான்! தூக்கிப்போய்த் தூளாக
    ஆக்கிச் சமுத்திரத்தில் அப்படியே போட்டிடுவான்!
    எவ்வாறு நாம்பிழைப்போம்? ஏடி, இதைநீதான்
    செவ்வையாய் யோசித்துச் செப்பாயோ ஓர்மார்க்கம்?

    என்று துடிதுடிக்கும் போதில், இளவஞ்சி
    நின்று நகைத்துத்தன் நேசனைக்கை யால்அணத்தே
    இப்புவிதான் உண்டாகி எவ்வளவு நாளிருக்கும்?
    அப்போது தொட்டிந்த அந்திநே ரம்வரைக்கும்
    மாமலையைத் தூக்கும் மனிதன் இருந்ததில்லை.
    ஓமண வாளரே! இன்னம் உரைக்கின்றேன்,
    மன்னும் உலகம் மறைந்தொழியும் காலமட்டும்
    பின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை.
    அவ்வாறே ஓர்மனிதன் ஆகாயம் பூமிமட்டும்
    எவ்வாறு நீண்டு வளருவான்? இல்லைஇல்லை!
    காதல் நிசம்இக் கனிமுத்தம் மிக்கஉண்மை!
    மாதுதோள் உம்தோள் மருவுவது மெய்யாகும்.
    நம்புங்கள் மெய்யாய் நடக்கும்விஷ யங்களிவை.
    சம்பவித்த உண்மை அசம்பாவத்தால் தாக்குறுமோ?
    வாழ்க்கை நதிக்கு,வீண் வார்த்தைமலை யும்தடையோ?
    வாழ்த்தாமல் தூற்றுகின்றீர் வந்துநிற்கும் இன்பத்தை!
    பொய்யுரைப்பார் இந்தப் புவியைஒரு சிற்றெறும்பு
    கையால் எடுத்ததென்பார் ஐயோஎன் றஞ்சுவதோ?
    முத்தத்தைக் கொள்க! முழுப்பயத்தில் ஒப்படைத்த
    சித்தத்தை வாங்கிச் செலுத்துங்கள் இன்பத்தில்.
    என்றுரைத்தாள் வஞ்சி. இதனாற் பயனில்லை;
    குன்று பெயர்ந்ததென்று குப்பன் மனம்அழிந்தான்!

    இந்நேரம் போயிருப்பார்! இந்நேரம் பேர்த்தெடுப்பார்!
    இந்நேரம் மேகத்தில் ஏறிப் பறந்திடுவார்!
    உஸ்என்று கேட்குதுபார் ஓர்சத்தம் வானத்தில்!
    விஸ்வரூ பங்கொண்டு மேலேறிப் பாய்கின்றார்!

    இம்மொழிகேட் டான்குப்பன்; ஐயோ எனஉரைத்தான்.
    அம்மட்டும் சொல்லத்தான் ஆயிற்றுக் குப்பனுக்கே.
    உண்மை யறிந்தும் உரைக்கா திருக்கின்ற
    பெண்ணான வஞ்சிதான் பின்னும் சிரித்து
    மனதை விடாதீர் மணாளரே காதில்
    இனிவிழப் போவதையும் கேளுங்கள் என்றுரைத்தாள்.
    வஞ்சியும் குப்பனும் சத்தம் வரும்வழியில்
    நெஞ்சையும் காதையும் நேராக வைத்திருந்தார்:

    இப்படி யாகஅநுமார் எழும்பிப் போய்
    அப்போது ஜாம்பவந்தன் ஆராய்ந்து சொன்னதுபோல்
    சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பறந்துமே
    கொஞ்ச நேரத்தில் இலங்கையிலே கொண்டுவந்து
    வைத்தார். உடனே மலைமருந்தின் சத்தியால்
    செத்த இராமனும் லக்ஷ்மணனும் சேர்ந்தெழுந்தார்!

    உற்றிதனைக் கேட்டகுப்பன் ஓஹோ மலையதுதான்
    சற்றும் அசையாமல் தான்தூக்கிப் போனானே!
    லங்கையிலே வைத்தானே! லங்கையில்நாம் தப்போமே!
    என்றான். நடுக்கம் இதயத்தில் நீங்கவில்லை.
    இன்னும் பொறுங்கள் எனஉரைத்தாள் வஞ்சி.

    பெரும்பாரச் சஞ்சீவி பர்வதத்தைப் பின்னர்
    இருந்த இடத்தில் அநுமார், எடுத்தேகி
    வைத்துவிட்டு வந்தார் மறுநிமிஷம் ஆகாமுன்.
    செத்தார்க் குயிர்கொடுத்தார். தெண்டமும் போட்டுநின்றார்!

    குப்பனிது கேட்டுக் குலுக்கென்று தான்நகைத்தான்.
    அப்போதே நான்நினைத்தேன் ஆபத்திரா தென்று.
    நான்நினைத்த வண்ணம் நடந்ததுதான் ஆச்சரியம்.
    ஏனடி!வஞ்சி! இனியச்சம் இல்லை யென்றான்.

    ஆனாலும் இன்னும் அரைநிமிஷம் காத்திருங்கள்;
    நானும் அதற்குள்ளே நாதரே, உம்மையொரு
    சந்தேகம் கேட்கின்றேன். தக்க விடையளிப்பீர்!
    இந்த மலையில்நாம் ஏறிய பின்நடந்த
    ஆச்சரிய சம்பவந்தான் என்ன? அதையுரைப்பீர்!
    பேச்சை வளர்த்தப் பிரியப் படவில்லை
    என்றாள் இளவஞ்சி. குப்பன் இசைக்கிறான்:

    என்னடி வஞ்சி! இதுவும் தெரியாதா?
    நாமிங்கு வந்தோம். நமக்கோர் நலிவின்றி
    மாமலையை அவ்வநுமார் தூக்கி வழிநடந்து
    லங்கையிலே வைத்தது! ராமன் எழுந்ததும்,
    இங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது!
    கண்ணே! மலையைக் கடுகளவும் ஆடாமல்
    கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல்
    தந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து வைத்திட்ட
    அந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி!

    ஆச்சரிய சம்பவத்தைக் குப்பன் அறிவித்தான்.
    பேச்செடுத்தாள் வஞ்சி; பிறகும் ஒருசத்தம்:

    இம்மட்டும் இன்று கதையை நிறுத்துகின்றேன்;
    செம்மையாய் நாளைக்குச் செப்புகின்றேன் மற்றவற்றை.
    சத்தியரா மாயணத்திற் சத்தான இப்பகுதி
    உத்தியாய்க் கேட்டோ ர் உரைத்தோர்எல் லாருமே
    இங்குள்ள போகங்கள் எல்லாம் அனுபவிப்பர்;
    அங்குள்ள வைகுந்தம் அட்டியின்றிச் சேர்வார்கள்;
    ஜானகீ காந்தஸ் மரணே! ஜயஜயராம்!

    மானேஈ தென்னஎன்றான் வையம்அறி யாக்குப்பன்!
    முன்புநான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே
    சொன்ன ஐயையோ தொடங்கி இதுவரைக்கும்
    ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற
    ஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும்
    பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே!
    ஆகியதும் இந்த அரிய உழைப்புக்குப்
    பத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான்.
    சித்தம் மலைக்கச் சிறிதுமிதில் இல்லை யென்று
    கையி லிருந்தஒரு காட்சிதரும் மூலிகையை
    ஐயா இதைவிழுங்கி அவ்விடத்திற் பாருங்கள்
    என்றந்தக் குப்பனிடம் ஈந்துதா னும்தின்றாள்.
    தின்றதும் தங்கள் விழியால் தெருவொன்றில்,
    மாளிகையி னுள்ளே மனிதர் கூட்டத்தையும்,
    ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே
    உட்கார்ந் திருப்பதையும், ஊர்மக்கள் செல்வதையும்,
    பட்டைநா மக்காரப் பாகவதன் ரூபாயைத்
    தட்டிப்பார்க் கின்றதையும், சந்தோஷம் கொள்வதையும்
    கண்டார்கள்; கண்டு கடகடவென் றேசிரித்தார்.
    வண்டு விழியுடைய வஞ்சி யுரைக்கின்றாள்:

    வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள்,
    ஆனது செய்யும் அநுமார்கள், சாம்பவந்தர்,
    ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்.
    விஸ்வரூ பப்பெருமை, மேலேறும் வன்மைகள்,
    உஸ்என்ற சத்தங்கள், அஸ்என்ற சத்தங்கள்,
    எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்.
    செவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை
    முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்.
    இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்?
    உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்
    எள்ளை அசைக்க இயலாது. மானிடர்கள்
    ஆக்குவதை ஆகா தழிக்குமோ? போக்குவதைத்
    தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும்.
    மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை
    எக்களிக்க வேண்டும் இதயத்தில்! ஈதன்றி
    நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே
    புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும்.
    மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ?
    எக்கா ரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ ?
    மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை
    நாடா திருப்பதற்கு நானுங் களையின்று
    சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன். தற்செயலாய்
    அஞ்சும் நிலைமையே அங்கே நிகழ்ந்ததுண்டாம்.
    உங்கள் மனத்தில் உறைந்து கிடந்திட்ட
    பங்கஞ்செய் மூடப் பழக்க வழக்கங்கள்
    இங்கினிமேல் நில்லா எனநான் நினைக்கின்றேன்.
    தங்கள்கை நீட்டித் தமியாளை முன்னரே
    சாரலிலே முத்தம் தரக்கேட்டீர், சாயவில்லை.
    ஈர மலையிலே யான்தந்தேன். ஏற்கவில்லை.
    சத்தத்தை எண்ணிச் சலித்தீர்.அச் சத்தத்தால்
    முத்தத்தை மாற்ற முடியாமற் போனாலும்
    உம்மைப் பயங்காட்டி ஊளையிட்ட சத்தத்தால்
    செம்மைமுத்தம் கொள்ளவில்லை. சேர்ந்துமுத்தம் கொள்வீரே!

    ஏஏஏ நான்இன்றைக் கேளனத்துக் காளானேன்.
    நீயேன் இதையெல்லாம் நிச்சயமாய்ச் சொல்லவில்லை?
    ராமா யணமென்ற நலிவு தருங்கதை
    பூமியிலி ருப்பதைஇப் போதே அறிகின்றேன்.
    நம்பத் தகாதவெலாம் நம்பவைத்துத் தாங்கள்நலம்
    சம்பா திக்கின்ற சரித்திரக் காரர்களால்
    நாடு நலிகுவதை நான்இன்று கண்டுணர்ந்தேன்.
    தோடு புனைந்த சுடர்க்கொடியே நன்றுசொன்னாய்!
    நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கைநதி,
    வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,
    செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,
    தின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள்,
    இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
    முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
    செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?
    மூடப் பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம்
    ஓடுவ தென்றோ? உயர்வதென்றோ? நானறியேன்.
    பாரடி மேற்றிசையில் சூரியன் பாய்கின்றான்.
    சார்ந்த ஒளிதான் தகத்தகா யக்காட்சி!
    மாலைப் பொழுதும் வடிவழகு காட்டுதுபார்!
    சாலையிலோர் அன்னத்தைத் தன்பேடு தேடுதுபார்.
    என்னடி சொல்கின்றாய் ஏடி இளவஞ்சி?
    என்நெஞ்சை உன்நெஞ்சம் ஆக்கிப்பார் என்றுரைத்தான்.

    தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போலே
    கன்னி யுடல்சிலிர்க்கக் காதலரே நாம்விரைவாய்ச்
    சாரல் அடைவோமே, காதலுக்கு தக்கஇடம்.
    சாரலும் தண்மாலை நாயகியைச் சாரக்
    குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோல மிகுந்த
    மயிலாடிக் கொண்டிருக்கும்; வாச முடையநற்
    காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்
    ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்கஉண்டு;
    பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே
    னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்.
    அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே
    இன்பமும் நாமும் இனி!


    1.2 புரட்சிக் கவி


    (பில்கணீயம் என்ற வடமொழி நூலைத் தழுவியது)

    அகவல்

    அரசன் அமைச்சர்பால் அறிவிக் கின்றான்:
    அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்!
    தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்
    அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;
    ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்;
    அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள்
    கவிதை புனையக் கற்றா ளில்லை.
    மலரும், பாடும் வண்டும், தளிரும்,
    மலையும், கடலும், வாவியும், ஓடையும்,
    விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும்,
    மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும்
    தமிழின் அமுதத் தன்மையும், நன்மையும்,
    காலைஅம் பரிதியும், மாலை மதியமும்
    கண்ணையும் மனத்தையும் கவர்வன; அதனால்
    என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
    புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச்
    செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்!
    ஏற்றஓர் ஆசான் எங்குளான்?
    தோற்றிய வாறு சொல்க அமைச்சரே!

    எண்சீர் விருத்தம்

    தலைமைஅமைச் சன்புகல்வான்: எனது மன்னா,
    சகலகலை வல்லவன்;இவ் வுலகோர் போற்றும்
    புலவன்; உயர்கவிஞன்; அவன்பேர் உதாரன்!
    புதல்விக்குத் தக்கஉபாத் தியாயன் அன்னோன்.
    இலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்!
    எனினும்,அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன்.
    குலமகளை அன்னவன்பால் கற்க விட்டால்
    குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!

    ஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்;
    அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது
    தேனிதழாள் தனைஅவனும், அவனைப் பெண்ணும்
    தெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க!
    பானல்விழி மங்கையிடம் உதார னுக்குப்
    பார்வையில்லை குருட னென்று சொல்லி வைக்க!
    ஞானமுறும் உதாரனிடம் அமுத வல்லி
    நலிகுஷ்ட ரோகி என எச்சரிக்க!

    தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்! ஆம்ஆம்
    தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை;
    பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர் என்றான்.
    பேச்சுவல்ல அமைச்சர்பலர் சென்ற ழைத்தார்.
    தேர்வாய்ந்த புவிராஜன் போலே யந்தச்
    செந்தமிழ்த்தீங் கவிராஜன் உதாரன் வந்தான்.
    பார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப்
    பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம் என்றான்.

    சிந்து கண்ணி

    மன்னவன் ஆணைப்படி - கன்னி
    மாடத்தைச் சேர்ந்தொரு
    பன்னரும் பூஞ்சோலை - நடுப்
    பாங்கில்ஓர் பொன்மேடை!
    அன்னதோர் மேடையிலே - திரை
    ஆர்ந்த மறைவினிலே
    மின்னொளி கேட்டிருப்பாள் - கவி
    வேந்தன் உரைத்திடுவான்!

    யாப்புமுறை உரைப்பான் - அணி
    யாவும் உரைத்திடுவான்;
    பாப்புனை தற்கான - அநு
    பவம்பல புகல்வான்.
    தீர்ப்புற அன்னவளும் - ஆசு
    சித்திரம் நன்மதுரம்
    சேர்ப்புறு வித்தாரம் - எனும்
    தீங்கவிதை யனைத்தும்,

    கற்றுவர லானாள்! - அது
    கால பரியந்தம்
    சற்றும் அவன்முகத்தை - அவள்
    சந்திக்கவில்லை! விழி
    அற்றவனைப் பார்த்தால் - ஓர்
    அபசகுன மென்றே!
    உற்றதோர் நோயுடையாள் - என்
    றுதாரனும் பார்த்தில்லை!

    இவ்விதம் நாட்கள்பலப் - பல
    ஏகிட ஓர்தினத்தில்
    வெவ்விழி வேலுடையாள் - அந்த
    மேடையிற் காத்திருந்தாள்.
    அவ்வம யந்தனிலே - விண்
    அத்தனையும் ஒளியால்
    கவ்வி உயர்ந்ததுபார் - இருட்
    காட்டை அழித்தநிலா!

    எண்சீர் விருத்தம்

    அமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை
    அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே,
    இமையாது நோக்கினான் முழு நிலாவை!
    இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்!
    சுமைசுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம்
    தூண்டிவிட ஆஆஆ என்றான்; வாணி
    அமைத்திட்டாள் நற்கவிதை! மழைபோற் பெய்தான்!
    அத்தனையும் கேட்டிருந்தாள் அமுத வல்லி!

    நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
    நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்!
    கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
    கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
    சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
    சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
    காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
    கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!

    அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்;
    அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்;
    பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ ?
    பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!
    சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
    சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
    இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
    எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ!

    உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில்
    ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
    நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை;
    நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
    தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
    சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்
    கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
    கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!

    உன்னைஎன திருவிழியாற் காணு கின்றேன்;
    ஒளிபெறுகின் றேன்;இருளை ஒதுக்கு கின்றேன்;
    இன்னலெலாம் தவிர்கின்றேன்; களிகொள் கின்றேன்;
    எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்!
    அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி
    ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!
    இன்பமெனும் பால்நுரையே! குளிர் விளக்கே!
    எனைஇழந்தேன், உன்னெழிலில் கலந்த தாலே!

    வேறு சிந்து கண்ணி

    இவ்வித மாக உதாரனும் - தன
    தின்குர லால்வெண் ணிலாவையே
    திவ்விய வர்ணனை பாடவே - செவி
    தேக்கிய கன்னங் கருங்குயில்,
    அவ்வறிஞன் கவி வல்லவன் - விழி
    அற்றவ னாயின், நிலாவினை
    எவ்விதம் பார்த்தனன், பாடினன்? - இதில்
    எத்துக்கள் உண்டென ஓடியே,

    சாதுரியச் சொல் உதாரனை - அவன்
    தாமரைக் கண்ணொடும் கண்டனள்!
    ஓதுமலைக் குலம் போலவே - அவன்
    ஓங்கிய தோள்களைக் கண்டனள்!
    ஏதிது போன்றஓ ராண்எழில் - குறை
    இன்றித் திருந்திய சித்திரம்?
    சோதி நிலாவுக்கும் மாசுண்டாம் - இச்
    சுந்தரனோ கறை ஒன்றிலான்!

    என்று வியப்புடன் நின்றனள்; - அந்த
    ஏந்திழை தன்னெதிர் நின்றதைத்
    தன்னிக ரற்ற உதாரனும் - கண்டு
    தன்னை மறந்தவ னாகியே
    என்ன வியப்பிது? வானிலே - இருந்
    திட்டதோர் மாமதி மங்கையாய்
    என்னெதிரே வந்து வாய்த்ததோ? - புவிக்
    கேதிது போலொரு தண்ஒளி!

    மின்னற் குலத்தில் விளைந்ததோ? - வான்
    வில்லின் குலத்திற் பிறந்ததோ?
    கன்னற் றமிழ்க்கவி வாணரின் - உளக்
    கற்பனையே உருப் பெற்றதோ?
    பொன்னின் உருக்கிற் பொழிந்ததோ? - ஒரு
    பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?
    என்று நினைத்த உதாரன்தான் - நீ
    யார்?என்ற ஓர்உரை போக்கினான்.

    அமுதவல்லி யன்றோ! என்றாள் - அந்த
    அமைச்சனும் முடி வேந்தனும்
    நமைப் பிரித்திடும் எண்ணத்தால் - உனை
    நாட்டம் இலாதவன் என்றனர்!
    சமுச யப்பட நீஇன்று - மதி
    தரிசன மதைப் பாடினை!
    கமலங்கள் எனும் கண்ணுடன் - உனைக்
    காணப் பெற்றதென் கண் என்றாள்.

    எண்சீர் விருத்தம்

    இன்னொன்று கேளாயோ அமுத வல்லி!
    என்னிடத்தில் உன்தந்தை என்மகட்கு
    முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து
    மூண்டதெருனச் சொல்லிவைத்தான்! அதனா லன்றோ
    மின்ஒன்று பெண்ணென்று புவியில் வந்து
    விளைந்ததுபோல் விளைந்தஉன தழகு மேனி
    இன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லைமு
    என்றுரைத்தான்; வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்:

    புகாரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ ?
    கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
    பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?
    பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ ?
    நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்
    நிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ?
    சீரழகே! தீந்தமிழே! உனைஎன் கண்ணைத்
    திரையிட்டு மறைத்தார்கள்!மு என்று சொன்னான்.

    பஃறொடை வெண்பா

    வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
    மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
    ஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும்
    நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?
    சித்தரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக்
    கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,
    சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை
    முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும்,
    உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்?
    தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்!
    குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற்
    பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ?
    என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல்
    சென்றுதன் னெஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்!
    நன்று மடமயிலே! நான்பசியால் வாடுகின்றேன்;
    குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்!
    உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும்
    வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி!
    எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான்
    உண்ணும் மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல்
    நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில்
    மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம்
    நீயன்றோ பெண்ணே! நினைப்பை யகற்றிவிடு!
    நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு!
    வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொத்தாதே!
    பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!
    கண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப்
    புண்ணாக்கிப் போடாதே; போபோ மறைந்துவிடு!
    காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்
    சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ!
    பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால்
    நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்?
    கொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை
    அஞ்சுவ தஞ்சாமை பேதமையன் றோஅணங்கே?
    ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக்
    காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ?
    பட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்புக்
    கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ?
    என்றழுதான் விம்மி இளையான், கவியரசன்.
    குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும் நெஞ்சிளகும்!
    ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர்
    பாழான நெஞ்சும் சிலசமயம் பார்த்திரங்கும்!
    சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
    ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?
    ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும்?
    அத்தருணம் அந்த அமுதவல்லி ஏதுசொல்வாள்:
    வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை
    நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்,
    காளைஉன் கைகள்எனைக் காவாமல் போகட்டும்,
    தாளை அடைந்தஇத் தையல்உள்ளம் மாறாதே!
    ஆதரவு காட்டாமல் ஐய!எனை விடுத்தால்
    பாதரக்ஷை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி,
    வேறு கதியறியேன்; வேந்தன் சதுர்வருணம்
    சீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ?
    ஆரத்தழுவி அடுத்தவினா டிக்குள் உயிர்
    தீரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்!
    அன்றியும்என் காதல் அமுதே! நமதுள்ளம்
    ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன?
    நாட்டின் இளவரசி நான்ஒருத்தி! ஆதலினால்
    கோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை!
    கோல்வேந்தன் என்காதற் கொற்றவனைக் கொல்லவந்தால்,
    சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்!
    சாதிஉயர் வென்றும், தனத்தால் உயர்வென்றும்,
    போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமுகம்
    மெத்த இழிவென்றும், மிகுபெரும்பா லோரைஎல்லாம்
    கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்
    பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர்
    ஆவி களையேனும் அர்ப்பணம்செய் வோம்! இதனை
    நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள
    மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்!
    இன்னும்என்ன? என்றாள். உதாரன் விரைந்தோடி
    அன்னத்தைத் தூக்கியே ஆரத் தழுவினான்.
    இன்ப உலகில் இருவர்களும் நாள் கழித்தார்.
    பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம்
    மாறுபடக் கண்டு மனம்பதறித் தோழியர்கள்
    வேறு வழியின்றி வேந்தனிடம் ஓடியே
    மன்னவனே! உன்அருமை மங்கை அமுதவல்லி
    தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ?
    காதல்எனும் இன்பக் கடலில் குளித்துவிட்ட
    மாதிரியாய்த் தோன்றுகிறாள்; மற்றிதனை மேன்மைச்
    சமுகத்தில் விண்ணப்பம் சாதித்தோம் என்றார்.
    அமைதி யுடைய அரசன் அதன்உண்மை
    கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே
    அண்டியிருந் தான்இரவில் ஆரும் அறியாமல்!
    வந்த உதாரன்எழில் மங்கைக்குக் கைலாகு
    தந்து, தமிழில் தனிக்காதலைக் கலந்து
    பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை
    வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும்
    கண்டான் அரசன்! கடுகடுத்தான்! ஆயிரந்தேள்
    மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து
    மாளிகைக்குச் சென்றான். மறுநாள் விடியலிலே
    வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச்
    சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர
    ஏவினான். அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம்.
    இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்;
    அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார்.
    ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு
    தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும்.
    ஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி
    மாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம்.
    அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான்,
    சிங்கா தனத்திலே சேர்ந்து:

    கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி
    கற்க உன்பால் விடுத்தேன் - அட
    குற்றம் புரிந்தனையா இல்லையா இதை
    மட்டும் உரைத்து விடு!
    வெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று
    மேவிட ஆள்பவன் நான் - அட
    இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை
    என்னென்று தானினைத்தாய்?

    வாள்பிடித் தேபுவி ஆளுமிராசர் என்
    தாள்பிடித் தேகிடப்பார்! - அட
    ஆள்பிடித் தால்பிடி ஒன்றிருப்பாய் என்ன
    ஆணவமோ உனக்கு?
    மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை
    வெல்லத் தகுந்தவனோ? - இல்லை
    மாள்வதற்கே இன்று மாள்வதற்கே! என்று
    மன்னன் உரைத்திடவே,

    மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
    வார்க்கும் மழைநாடா! - குற்றம்
    ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே! குற்றம்
    அன்றெனில் அவ்விதமே!
    கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள்
    கொள்ளை வனப்பினிலே - எனைக்
    காமனும் தள்ளிடக் காலிட றிற்றுக்
    கவிழ்ந்தவண்ணம் வீழ்ந்தேன்!

    பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர்
    பால்நில வாயிரம்போல் - அவள்
    அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்
    அடியேன்செய்த தொன்றுமில்லை.
    பிழைபுரிந் தேனென்று தண்டனை போடுமுன்
    பெற்று வளர்த்த உன்றன்
    இழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக் குள்ள
    இன்னல் மறப்ப துண்டோ ?

    நொண்டிச் சிந்து

    கவிஞன் இவ்வா றுரைத்தான் - புவி
    காப்பவன் இடியெனக் கனன் றுரைப்பான்:
    குவிந்த உன் உடற்சதையைப் - பல
    கூறிட்டு நரிதின்னக் கொடுத் திடுவேன்.
    தவந்தனில் ஈன்ற என்பெண் - மனம்
    தாங்குவ தில்லையெனிற் கவலை யில்லை!
    நவிலுமுன் பெரும் பிழைக்கே - தக்க
    ராச தண்டனை யுண்டு! மாற்ற முண்டோ ?

    அரசனின் புதல்வி அவள் - எனில்
    அயலவ னிடம்மனம் அடைத லுண்டோ ?
    சரச நிலையி லிருந்தீர் - அந்தத்
    தையலும் நீயும், அத் தருணமதில்
    இருவிழி யாற் பார்த்தேன்! - அறி
    விலி, உனதொரு குடி அடியோடே
    விரைவில்என் ஆட்சி யிலே - ஒரு
    வேர்இன்றிப் பெயர்த்திட விதித்து விட்டேன்!

    கொலைஞர்கள் வருகரு என்றான் - அவன்
    கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார்.
    சிலையிடை இவனை வைத்தே - சிரச்
    சேதம் புரிக எனச் செப்பிடு முனம்
    மலையினைப் பிளந்திடும் ஓர் - சத்தம்
    வந்தது! வந்தனள் அமுத வல்லி!
    இலை உனக் கதிகாரம் - அந்த
    எழிலுடையான் பிழை இழைக்க வில்லை.

    ஒருவனும் ஒருத்தியு மாய் - மனம்
    உவந்திடில் பிழையென உரைப்ப துண்டோ ?
    அரசென ஒரு சாதி - அதற்
    கயலென வேறொரு சாதி யுண்டோ ?
    கரிசன நால் வருணம் - தனைக்
    காத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான்
    தரும்படி அவனை இங்கே - நீ
    தருவித்த வகையது சரிதா னோ?

    என்மனம் காதல னைச் - சென்
    றிழுத்தபின் னேஅவன் இணங்கின தால்
    அன்னவன் பிழையில னாம்! - அதற்
    கணங்கெனைத் தண்டித்தல் முறை யெனினும்,
    மன்ன!நின் ஒருமகள் நான் - எனை
    வருத்திட உனக்கதி கார மில்லை!
    உன்குடிக் கூறிழைத் தான் - எனில்
    ஊர்மக்கள் இடமதை உரைத்தல் கடன்!

    என்றபற் பல வார்த்தை - வான்
    இடியென உரைத்துமின் னென நகைத்தே
    முன்னின்ற கொலைஞர் வசம் - நின்ற
    முழுதுணர் கவிஞனைத் தன துயிரை
    மென்மலர்க் கரத்தாலே - சென்று
    மீட்டனள் வெடுக்கெனத் தாட்டி கத்தால்.
    மன்னவன் இரு விழியும் - பொறி
    வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடு வான்:

    கும்மி

    நாயை இழுத்துப் புறம்விடுப்பீர் - கெட்ட
    நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே! - இந்தப்
    பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
    பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்! - என்
    தூய குடிக்கொரு தோஷத்தையே - தந்த
    துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை - தன்னில்
    போய்அடைப் பீர்!அந்தப் பொய்யனை ஊரெதிர்
    போட்டுக் கொலைசெய்யக் கூட்டிச் செல்வீர்!

    என்றுரைத் தான். இருசேவகர்கள் - அந்த
    ஏந்திழை அண்டை நெருங்கி விட்டார்! - அயல்
    நின்ற கொலைஞர், உதாரனை யும் நட
    நீஎன் றதட்டினர்! அச்சமயம் - அந்த
    மன்றி லிருந்தஓர் மந்திரிதான் - முடி
    மன்னனை நோக்கி யுரைத்திடுவான் - நீதி
    அன்றிது மங்கைக் கிழைத்திருக்கும் தண்டம்;
    அன்னது நீக்கி யருள்க என்றான்.

    எண்சீர் விருத்தம்

    காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டுங்
    கன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட
    நீதிநன்று மந்திரியே! அவன் இறந்தால்
    நிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்!
    சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்,
    தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்;
    ஓதுகஇவ் விரண்டி லொன்று மன்னவன்வாய்!
    உயிர்எமக்கு வெல்லமல்ல! என்றாள் மங்கை.

    என்ஆணை மறுப்பீரோ சபையி லுள்ளீர்!
    இசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார்
    பின்நாணும் படிசும்மா இருப்ப துண்டோ ?
    பிழைபுரிந்தால் சகியேன்நான்! உறுதி கண்டீர்!
    என்ஆணை! என்ஆணை! உதார னோடே
    எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக்
    கன்மீதி லேகிடத்திக் கொலைசெய் வீர்கள்
    கடிதுசெல்வீர்! கடிதுசெல்வீர்! என்றான் மன்னன்.

    அவையினிலே அசைவில்லை பேச்சு மில்லை;
    அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்!
    சுவையறிந்த பிறகுணவின் சுகம்சொல் வார்போல்
    தோகையவள் என்காதல் துரையே கேளாய்!
    எவையும்நமைப் பிரிக்கவில்லை; இன்பம் கண்டோ ம்;
    இறப்பதிலும் ஒன்றானோம்! அநீதி செய்த
    நவையுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள்
    நற்பாடம் கற்பியா திருப்ப தில்லை.

    இருந்திங்கே அநீதியிடை வாழ வேண்டாம்
    இறப்புலகில் இடையறா இன்பங் கொள்வோம்!
    பருந்தும், கண்மூடாத நரியும் நாயும்,
    பலிபீட வரிசைகளும் கொடுவாள் கட்டும்
    பொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேச்சை மன்னன்
    பொருந்தட்டும்; பொதுமக்கள் ரத்தச் சேற்றை
    அருந்தட்டும்! என்றாள். காதலர்கள் சென்றார்!
    அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக் கின்றேன்:

    கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள்
    கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்;
    அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி
    அனைவருமே வந்திருந்தார். உதார னுக்கும்
    சிலைக்குநிகர் மங்கைக்கும் கடைசி யாகச்
    சிலபேச்சுப் பேசிடுக என்றுசொல்லித்
    தலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்;
    தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான்:

    பேரன்பு கொண்டவரே, பெரியோ ரே,என்
    பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்!
    நீரோடை நிலங்கிழிக்க, நெடும ரங்கள்
    நிறைந்துபெருங் காடாக்கப், பெருவி லங்கு
    நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
    நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்
    போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
    புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கிச்

    சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
    தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
    நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
    நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
    கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
    கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
    பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
    போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?

    அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி
    அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்!
    இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
    இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்
    புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்
    புனலுக்கும் அனலுக்கும் சேற்றி னுக்கும்
    கக்கும்விஷப் பாம்பினுக்கும் பிலத்தி னுக்கும்
    கடும்பசிக்கும் இடையறா நோய்க ளுக்கும்,

    பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்
    பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்
    சலியாத வருவாயும் உடைய தாகத்
    தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்
    எலியாக முயலாக இருக்கின் றார்கள்!
    ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோ ன்
    புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக் கட்குப்
    புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?

    அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண் டாக
    அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
    சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும்
    சாவதென்ற தீர்ப்பளித்தான்; சாவ வந்தோம்!
    ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
    உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்!
    இருவர் இதோ சாகின்றோம்! நாளை நீங்கள்
    இருப்பதுமெய் என்றெண்ணி யிருக்கின் றீர்கள்!

    தன்மகளுக் கெனைஅழைத்துக் கவிதை சொல்லித்
    தரச்சொன்னான், அவ்வாறு தருங்கா லிந்தப்
    பொன்மகளும் எனைக்காதல் எந்தி ரத்தால்
    புலன்மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பி விட்டேன்!
    என்உயிருக் கழவில்லை! அந்தோ! என்றன்
    எழுதாத சித்திரம்போல் இருக்கு மிந்த
    மன்னுடல்வெட் டப்படுமோர் மாப ழிக்கு
    மனநடுக்கங் கொள்ளுகின்றேன்! இன்னும் கேளீர்;

    தமிழறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான்;
    தமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள்!
    அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்,என் னாவி
    அழிவதற்குக் காரணமா யிருந்த தென்று
    சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
    தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ ?
    உமைஒன்று வேண்டுகின்றேன். மாசில் லாத
    உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!

    அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை
    ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல
    அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ?
    அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான்!
    சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்
    சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!
    அரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம்
    ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்!

    ஐயகோ சாகின்றாள்! அவளைக் காப்பீர்!
    அழகியஎன் திருநாடே! அன்பு நாடே!
    வையகத்தில் உன்பெருமை தன்னை, நல்ல
    மணிநதியை, உயர்குன்றைத் தேனை அள்ளிப்
    பெய்யுநறுஞ் சோலையினைத் தமிழாற் பாடும்
    பேராவல் தீர்ந்ததில்லை! அப்பே ராவல்
    மெய்யிதயம் அறுபடவும், அவ்வி ரத்த
    வெள்ளந்தான் வெளிப்படவும் தீரு மன்றோ?

    வாழியஎன் நன்னாடு பொன்னா டாக!
    வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே!
    வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி
    வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி!
    ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்!
    என்பெரியீர், அன்னையீர் ஏகு கின்றேன்!
    ஆழ்கஎன்றன் குருதியெலாம் அன்பு நாட்டில்
    ஆழ்கமுஎன்றான்! தலைகுனிந்தான் கத்தி யின்கீழ்!

    படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து
    பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம்
    அடிசோர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்!
    ஆவென்று கதறினாள்! அன்பு செய்தோர்
    படிமீது வாழாரோ? என்று சொல்லிப்
    பதைபதைத்தாள்! இதுகேட்ட தேச மக்கள்
    கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்; அந்தக்
    கொலையாளர் உயிர்த்தப்ப ஓட லானார்!

    கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்!
    காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்;
    புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று
    போயுரைப்பாய் என்றார்கள்! போகா முன்பே,
    செவியினிலே ஏறிற்றுப் போனான் வேந்தன்!
    செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டா ருக்கே
    நவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்!
    நலிவில்லை! நலமெல்லாம் வாய்ந்த தங்கே!


    1.3. வீரத்தாய்


    காட்சி 1
    [மணிபுரி மாளிகையில் ஓர் தனி இடம். சேனாபதி
    காங்கேயனும் மந்திரியும் பேசுகின்றனர்]

    சேனாபதி:
    மன்னன் மதுவினில் ஆழ்ந்து கிடக்கின்றான்!
    மின்னல்நேர் சிற்றிடை ராணி விஜயா
    நமக்கும் தெரியாமல் எவ்விடமோ சென்றாள்.
    அமைப்புறும் இந்த மணிபுரி ஆட்சி
    எனக்கன்றோ! அன்றியும் என்னரும் நண்ப!
    உனக்கே அமைச்சுப் பதவி உதவுவேன்!

    மந்திரி:
    ஒன்றுகேள் சேனைத் தலைவ! பகைப்புலம்
    இன்றில்லை; ஆயினும் நாளை முளைக்கும்.
    அரசியோ வீரம், உறுதி அமைந்தாள்!
    தரையினர் மெச்சும் சர்வ கலையினள்!

    சேனாபதி:
    அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே!

    மந்திரி:
    நெஞ்சில்நான் பெண்ணை எளிதாய் நினைக்கிலேன்.

    சேனாபதி:
    ஆடை, அணிகலன், ஆசைக்கு வாசமலர்
    தேடுவதும், ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்,
    அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
    கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்,
    மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி!
    ஆனமற் றோர்பகுதி ஆண்மை எனப்புகல்வேன்!
    எவ்வாறா னாலும்கேள்! சேனையெலாம் என்னிடத்தில்!
    செய்வார்யார் நம்மிடத்தில் சேட்டை? இதையோசி!

    மந்திரி:
    [சிரித்துச் சொல்வான்]
    மானுஷிகம் மேல்என்பார், வன்மை உடையதென்பார்
    ஆன அதனை அளித்ததெது ? மீனக்
    கடைக்கண்ணால் இந்தக் கடலுலகம் தன்னை
    நடக்கும்வகை செய்வதெது? நல்லதொரு சக்தி
    வடிவமெது? மாமகளிர் கூட்டமன்றோ? உன்சொற்
    கொடிது! குறையுடைத்து! மேலும் அதுகிடக்க;
    மன்னன் இளமைந்தன் எட்டு வயதுடையான்,
    இன்னும் சிலநாளில் ஆட்சி எனக்கென்பான்!

    சேனாபதி:
    கல்வியின்றி யாதோர் கலையின்றி, வாழ்வளிக்கும்
    நல்லொழுக்க மின்றியே நானவனை ஊர்ப்புறத்தில்
    வைத்துள்ளேன்; அன்னோன் நடைப்பிணம்போல் வாழ்கின்றான்.
    இத்தனைநாள் இந்த இரகசியம் நீயறியாய்!

    மந்திரி:
    ஆமாமாம் கல்வியிலான் ஆவி யிலாதவனே!
    சாமார்த்திய சாலி தந்திரத்தில் தேர்ந்தவன்நீ!
    உன்எண்ணம் என்னசொல்? நான்உனக் கொத்திருப்பேன்!
    முன்னால் செயப்போவ தென்ன மொழிந்துவிடு!

    சேனாபதி:
    ராசாங்கப் பொக்கிஷத்தை நாம்திறக்க வேண்டும்;பின்
    தேசத்தின் மன்னனெனச் சீர்மகுடம் நான்புனைந்தே
    ஆட்சிசெய வேண்டும்என் ஆசையிது! காலத்தை
    நீட்சிசெய வேண்டாம்; விரைவில் நிகழ்விப்பாய்!

    மந்திரி:
    பொக்கிஷத்தை யார்திறப்பார்? பூட்டின் அமைப்பைஅதன்
    மிக்க வலிமைதனைக் கண்டோ ர் வியக்கின்றார்.
    தண்டோ ராப் போட்டுச் சகலர்க்கும் சொல்லிடுவோம்
    அண்டிவந்து தாழ்திறப்பார்க் காயிரரூ பாய்கொடுப்போம்.

    சேனாபதி:
    தேவிலை!நீ சொன்னதுபோல் செய்துவிடு சீக்கிரத்தில்
    ஆவி அடைந்தபயன் ஆட்சிநான் கொள்வதப்பா!

    காட்சி 2
    [சேனாதிபதி அரச குமாரனாகிய சுதர்மனை மூடனாக்கி
    வைக்கக் கருதிக் காடுசேர்ந்த ஓர் சிற்றூரில் கல்வி
    யில்லாத காளிமுத்து வசத்தில் விட்டு வைத்திருக்கிறான்.
    கிழவர் ஒருவர் காளிமுத்தை நண்பனாக்கிக்கொண்டு
    உடன் வசிக்கிறார்.]

    காளிமுத்து:
    என்னா கெழவா? பொடியனெங்கே? இங்கேவா!
    கன்னா பின்னாஇண்ணு கத்துறியே என்னாது?
    மாடுவுளை மேய்க்கவுடு! மாந்தோப்பில் ஆடவுடு!
    காடுவுளே சுத்தவிடு! கல்விசொல்லித் தாராதே!

    கிழவர்:
    மாட்டினொடும் ஆட்டினொடும் மன்னன் குமாரனையும்
    கூட்டிப்போய் வந்திடுவேன்; குற்றமொன்றும் நான்புரியேன்!
    மன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ
    ஒன்றும் வராமேஉன் உத்தரவு போல்நடப்பேன்!

    காளிமுத்து:
    ஆனாநீ போய்வா, அழைச்சிப்போ பையனையும்
    ஓநாயில் லாதஇடம் ஓட்டு!

    காட்சி 3
    [கிழவர் ஓர் தனியிடத்தில் சுதர்மனுக்கு
    வில்வித்தை கற்றுக் கொடுக்கிறார்.]

    கிழவர்:
    விற்கோலை இடக்கரத்தால் தூக்கி, நாணை
    விரைந்தேற்றித் தெறித்துப்பார்! தூணீ ரத்தில்,
    பற்பலவாம் சரங்களிலே ஒன்றை வாங்கிப்
    பழுதின்றிக் குறிபார்த்து, லட்சி யத்தைப்
    பற்றிவிடு! மற்றொன்று, மேலும் ஒன்று
    படபடெனச் சரமரரி பொழி! சுதர்மா,
    நிற்கையில்நீ நிமிர்ந்துநிற்பாய் குன்றத் தைப்போல்!
    நெளியாதே! லாவகத்தில் தேர்ச்சி கொள்நீ!

    சுதர்மன்:
    கற்போர்கள் வியக்கும்வகை இந்நாள் மட்டும்
    கதியற்றுக் கிடந்திட்ட அடியே னுக்கு
    மற்போரும், விற்போரும், வாளின் போரும்
    வளர்கலைகள் பலப்பலவும் சொல்லித் தந்தீர்!
    நற்போத காசிரியப் பெரியீர், இங்கு
    நானுமக்குச் செயும்கைம்மா றொன்றும் காணேன்!
    அற்புதமாம்! தங்களைநான் இன்னா ரென்றே
    அறிந்ததில்லை; நீரும்அதை விளக்க வில்லை.

    கிழவர்:
    இன்னாரென் றென்னைநீ அறிந்து கொள்ள
    இச்சையுற வேண்டாங்காண் சுதர்மா. என்னைப்
    பின்னாளில் அறிந்திடுவாய்! நீறு பூத்த
    பெருங்கனல்போல் பொறுத்திருப்பாய்; உன் பகைவன்
    என்பகைவன்; உன்னாசை என்றன் ஆசை!
    இஃதொன்றே நானுனக்குச் சொல்லும் வார்த்தை
    மின்னாத வானம்இனி மின்னும்! அன்பு
    வெறிகாட்டத் தக்கநாள் தூர மில்லை!

    காட்சி 4
    [சுதர்மனும் கிழவரும் இருக்குமிடத்தில் தண்டோ ராச்
    சத்தம் கேட்கிறது.]

    தண்டோ ராக்காரன்:
    அரசாங்கப் பொக்கிஷத்தைத் திறப்பா ருண்டா?
    ஆயிரரூபாய் பரிசாய்ப் பெறலாங் கண்டீர்!
    வரவிருப்பம் உடையவர்கள் வருக! தீம்!தீம்!
    மன்னர்இடும் ஆணையிது தீம்தீம் தீம்தீம்!

    கிழவர்:
    சரிஇதுதான் நற்சமயம்! நான்போய் அந்தத்
    தறுக்குடைய சேனாதி பதியைக் காண்பேன்
    வரும்வரைக்கும் பத்திரமாய் இரு!நான் சென்று
    வருகிறேன் வெற்றிநாள் வந்த தப்பா!

    காட்சி 5
    [மந்திரியின் முன்னிலையில் கிழவர் அரசாங்கப் பொக்கி
    ஷத்தைத் திறந்தார். மந்திரி கிழவரைக் கூட்டி கொண்டு
    சேனாதிபதியிடம் வந்தான்.]

    மந்திரி:
    தள்ளாத கிழவரிவர் பொக்கி ஷத்தின்
    தாழ்தன்னைச் சிரமமின்றித் திறந்து விட்டார்!

    சேனாபதி:
    கொள்ளாத ஆச்சரியம்! பரிசு தன்னைக்
    கொடுத்துவிடு! கொடுத்துவிடு! சீக்கி ரத்தில்!

    மந்திரி:
    விள்ளுதல்கேள்! இப்பெரியார் நமக்கு வேண்டும்.
    வேலையிலே அமைத்துவிடு ராசாங் கத்தில்!

    சேனாபதி:
    உள்ளதுநீ சொன்னபடி செய்க, (கிழவரை நோக்கி) ஐயா,
    ஊர்தோறும் அலையாதீர்! இங்கி ருப்பீர்!

    கிழவர்:
    அரண்மனையில் எவ்விடத்தும் சஞ்ச ரிக்க
    அனுமதிப்பீர்! என்னால்இவ் வரசாங் கத்தில்
    விரைவில்பல ரகசியங்கள் வெளியாம்! என்று
    விளங்குகின்ற தென்கருத்தில்! சொல்லி விட்டேன்.

    சேனாபதி:
    பெரியாரே, ஆவ்வாறே! அட்டி யில்லை.

    மந்திரி:
    பேதமில்லை, இன்றுமுதல் நீரு மிந்த
    அரசபிர தானியரில் ஒருவர் ஆனீர்.
    அறிவுபெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்!

    காட்சி 6
    [சேனாபதி காங்கேயன், தானே மணிபுரி அரசனென்று
    நாளைக்கு மகுடாபிஷேகம் செய்துகொள்ளப் போகிறான்.
    வெளிநாட்டரசர்களும் வருகின்ற நேரம். மந்திரி நாட்டின்
    நிலைமையைச் சேனாபதிக்குத் தெரிவிக்கிறான்.]

    மந்திரி:
    மணிபுரி மக்கள்பால் மகிழ்ச்சி யில்லை!
    அணிகலன் பூண்கிலர் அரிவை மார்கள்!
    பாடகர் பாடிலர்! பதுமம் போன்ற
    ஆடவர் முகங்கள் அழகு குன்றின!
    வீதியில் தோரணம் விளங்க வில்லை!
    சோதி குறைந்தன, தொல்நகர் வீடுகள்!
    அரச குலத்தோர் அகம் கொதித்தனர்!
    முரசு எங்கும் முழங்குதல் இல்லை!

    சேனாபதி:
    எனக்குப் பட்டம் என்றதும், மக்கள்
    மனத்தில் இந்த வருத்தம் நேர்ந்ததா?
    அராஜகம் ஒன்றும் அணுகா வண்ணம்
    இராஜ சேவகர் ஏற்றது செய்க!
    வெள்ளி நாட்டு வேந்தன் வரவை,
    வள்ளி நாட்டு மகிபன் வரவைக்
    கொன்றை நாட்டுக் கோமான் வரவைக்
    குன்ற நாட்டுக் கொற்றவன் வரவை
    ஏற்றுப சரித்தும் இருக்கை தந்தும்
    போற்றியும் புகழ்ந்தும் புதுமலர் சூட்டியும்
    தீதற நாளைநான் திருமுடி புனைய
    ஆதர வளிக்க அனைத்தும் புரிக!

    மந்திரி:
    ஆர வாரம்! அதுகேட் டாயா?
    பாராள் வேந்தர் பலரும் வரும்ஒலி!

    சேனபதி:
    லிகிதம் கண்ட மன்னர்
    சகலரும் வருகிறார் சகலமும் புரிகநீ!

    காட்சி 7
    [அயல்நாட்டு வேந்தர்கள் வந்தார்கள்; சேனாபதி
    அவர்களை வரவேற்றுத் தனது மகுடாபிஷேகத்தை
    ஆதரிக்க வேண்டுகிறான்.]

    சேனாபதி:
    மணிபுரியின் வேந்தனார் மதுவை யுண்டு
    மனங்கெட்டுப் போய்விட்டார்; விஜய ராணி
    தணியாத காமத்தால் வெளியே சென்றாள்.
    தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான்,
    அணியாத அணியில்லை! அமுதே உண்பான்.
    அருமையுடன் வளர்த்துவந்தும் கல்வி யில்லை.
    பிணிபோல அன்னவன்பால் தீயொ ழுக்கம்
    பெருகினதால் நாட்டினரும் அமைச்சர் யாரும்

    என்னைமுடி சூடுகென்றார். உங்கட் கெல்லாம்
    ஏடெழுதி னேன்நீரும் விஜயம் செய்தீர்;
    சென்னியினால் வணங்குகின்றேன். மகுடம் பூணச்
    செய்தென்னை ஆதரிக்க வேண்டு கின்றேன்
    மன்னாதி மன்னர்களே, என்விண் ணப்பம்!
    மணிமுடியை நான்புனைந்தால் உம்மை மீறேன்!
    எந்நாளும் செய்நன்றி மறவேன் கண்டீர்!
    என்னாட்சி நல்லாட்சி யாயி ருக்கும்!

    வெள்ளிநாட்டு வேந்தன்:
    [கோபத்தோடு கூறுகிறான்]
    காங்கேய சேனாதி பதியே நீர்ஓர்
    கதைசொல்லி முடித்துவிட்டீர்; யாமும் கேட்டோ ம்
    தாங்காத வருத்தத்தால் விஜய ராணி
    தனியாக எமக்கெல்லாம் எழுதி யுள்ள
    தீங்கற்ற சேதியினைச் சொல்வோம், கேளும்!
    திருமுடியை நீர்கவர, அரச ருக்குப்
    பாங்கனைப்போல் உடனிருந்தே மதுப்ப ழக்கம்
    பண்ணி வைத்தீர்! அதிகாரம் அபகரித்தீர்!

    மானத்தைக் காப்பதற்கே ராணி யாரும்
    மறைவாக வசிக்கின்றார்! அறிந்து கொள்ளும்!
    கானகம்நேர் நகர்ப்புறத்தில் ராஜ புத்ரன்
    கல்வியின்றி உணவின்றி ஒழுக்க மின்றி
    ஊனுருகி ஒழியட்டும் எனவி டுத்தீர்.
    உம்எண்ணம் இருந்தபடி என்னே! என்னே!
    ஆனாலும் அப்பிள்ளை சுதர்மன் என்போன்
    ஆயகலை வல்லவனாய் விளங்கு கின்றான்.

    வள்ளிநாட்டு மன்னன்:
    [இடை மறுத்து உரைக்கின்றான்.]
    சுதர்மனை நாம்கண்ணால் பார்க்க வேண்டும்;
    சொந்தநாட் டார்எண்ணம் அறிய வேண்டும்.
    இதம்அகிதம் தெரியாமல் உம்மை நாங்கள்
    எள்ளளவும் ஆதரிக்க மாட்டோ ம் கண்டீர்!
    கொன்றைநாட்டுக் கோமான்:

    [கோபத்தோடு கூறுகிறான்]
    சதிபுரிந்த துண்மையெனில் நண்பரே, நீர்
    சகிக்கமுடி யாததுயர் அடைய நேரும்.

    குன்றநாட்டுக் கொற்றவன்:
    [இடியென இயம்புவான்]
    அதிவிரைவில் நீர்நிரப ராதி என்ப
    தத்தனையும் எண்பிக்க வேண்டும் சொன்னோம்!.

    சேனாபதி:
    [பயந்து ஈனசுரத்தோடு]
    அவ்விதமே யாகட்டும் ஐயன்மீர்! போசனத்தைச்
    செவ்வையுற நீர்முடிப்பீர் சென்று.

    காட்சி 8
    [சேனாபதி மந்திரியிடம் தனது ஆசாபங்கத்தைத்
    தெரிவித்து வருந்துவான்.]

    சேனாபதி:
    வரைமட்டும் ஓங்கி வளர்ந்தஎன் ஆசை
    தரைமட்டம் ஆயினதா? அந்தோ! தனிமையிலே
    ராணி விஜயா நடத்திவைத்த சூழ்ச்சிதனைக்
    காண இதயம் கலக்கம் அடைந்திடுதே!
    வேந்தன் மகனுக்கு வித்தையெல்லாம் வந்தனவாம்!
    ஆந்தை அலறும் அடவிசூழ் சிற்றூரில்
    போதித்த தார்?இதனைப் போயறிவோம் வாவாவா!
    வாதிக்கு தென்றன் மனம்.

    மந்திரி:
    பொக்கிஷந் திறந்தஅந்தப் புலனுறு பெரியார்எங்கே?
    அக்கிழ வர்பால்இந்த அசந்தர்ப்பம் சொல்லிக்காட்டி
    இக்கணம் மகுடம்பூண ஏற்றதோர் சூழ்ச்சிகேட்போம்;
    தக்கநல் லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ!
    [கிழவர் காணப்படாத தறிந்து மந்திரி வருந்துவான்:]
    திருவிலார் இவர்என்றெண்ணித் தீங்கினைஎண்ணி, அந்தப்
    பெரியாரும் நம்மைவிட்டுப் பிரிந்தனர் போலும்!நண்பா!
    அரிவையர் கூட்ட மெல்லாம் அறிவிலாக் கூட்டம்என்பாய்,
    புரிவரோ விஜயராணி புரிந்தஇச் செயல்கள்மற்றோர்!

    சேனாபதி:
    இன்னலெலாம் நேர்க! இனியஞ்சப் போவதில்லை.
    மன்னன்மக னைப்பார்ப்போம் வா!

    காட்சி 9
    [கிழவர் சுதர்மனுக்கு வாட்போர் கற்பிக்கிறார்.
    இதனை ஒரு புறமிருந்து சேனாதிபதியும் மந்திரியும்
    கவனிக்கிறார்கள்.]

    சேனாபதி:
    தாழ்திறந்த அக்கிழவன் ராச தனயனுக்குப்
    பாழ்திறந்து நெஞ்சத்தில் பல்கலையும் சேர்க்கின்றான்.
    வஞ்சக் கிழவனிவன் என்னருமை வாழ்க்கையிலே
    நஞ்சைக் கலப்பதற்கு நம்மைஅன்று நண்ணினான்.
    வாளேந்திப் போர்செய்யும் மார்க்கத்தைக் காட்டுகின்றான்.
    தோளின் துரிதத்தைக் கண்டாயோ என்நண்பா!
    [சேனாபதி கோபத்தோடு சுதர்மனை அணுகிக் கூறுவான்:]
    ஏடா சுதர்மா! இவன்யார் நரைக்கிழவன்?
    கேடகமும் கத்தியும்ஏன் ? கெட்டொழியத் தக்கவனே!

    சுதர்மன்:
    என்நாட்டை நான்ஆள ஏற்ற கலையுதவும்
    தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்!

    சேனாபதி:
    உன்நாட்டை நீஆள ஒண்ணுமோ சொல்லடா!

    சுதர்மன்:
    என்நாட்டை நான்ஆள்வேன்! எள்ளளவும் ஐயமில்லை!
    [சேனாபதி உடனே தன் வாளையுருவிச் சுதர்மன்மேல்
    ஓங்கியபடி கூறுவான்:]
    உன்நாடு சாக்கடே! ஓடி மறைவாய்!பார்!
    மின்னுகின்ற வாள்இதுதான்! வீச்சும் இதுவே!
    [கிழவர் கணத்தில், சேனாபதி ஓங்கிய வாளைத் தமது
    வாளினால் துண்டித்துக் கூறுவார்:]
    உருவியவாள் எங்கே? உனதுடல்மேல் என்வாள்
    வருகுதுபார், மானங்கொள்! இன்றேல் புறங்காட்டு!
    [என வாளை லாவகத்தோடு ஓங்கவே, சேனாபதி
    தன்னைக் காத்துக்கொள்ள முடியாமலும், சாகத்
    துணியாமலும் புறங்காட்டி ஓடுகிறான். கிழவரும்
    சுதர்மனும் சபையை நோக்கி ஓடும் சேனாபதியைத்
    துரத்திக்கொண்டு ஓடி வருகிறார்கள்.]

    காட்சி 10
    [கூடியுள்ள அயல்நாட்டு வேந்தர்களிடம் சேனாபதி
    ஓடிவந்து சேர்ந்தான். அவனைத் தொடர்ந்து கிழவரும்,
    சுதர்மனும் உருவிய கத்தியுடன் வந்து சேர்கிறார்கள்.]

    வெள்ளிநாட்டு வேந்தன்:
    ஆடுகின்ற நெஞ்சும், அழுங்கண்ணு மாகநீ
    ஓடிவரக் காரணமென் உற்ற சபைநடுவில்?
    சேனா பதியே, தெரிவிப்பாய் நன்றாக!
    [சேனாபதி ஒருபுறம் உட்கார்தல்.]
    மானைத் துரத்திவந்த வாளரிபோல் வந்து
    குறித்தெடுத்துப் பார்க்கின்றீர்; நீவிர்யார் கூறும்?
    [என்று பெரியவரை நோக்கிக் கூறிப் பின்
    அயல்நின்ற சுதர்மனை நோக்கிக் கூறுவான்:]
    பறித்தெடுத்த தாமரைப்பூம் பார்வையிலே வீரம்
    பெருக்கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே, நீயார்?

    கிழவர்:
    இருக்கின்ற வேந்தர்களே, என்வார்த்தை கேட்டிடுவீர்!
    மன்னர் குடிக்கும் வழக்கத்தைச் செய்துவைத்தும்,
    என்னை வசப்படுத்த ஏற்பாடு செய்வித்தும்,
    செல்வனையும் தன்னிடத்தே சேர்த்துப் பழிவாங்கக்
    கல்வி தராமல் கடுங்காட்டில் சேர்ப்பித்தும்
    பட்டாபி ஷேகமனப் பால்குடித்தான் காங்கேயன்!
    தொட்டவாள் துண்டித்தேன். தோள்திருப்பி இங்குவந்தான்!
    [தான் கட்டியிருந்த பொய்த்தாடி முதலியவைகளைக்
    களைகிறாள், கிழவராய் நடித்த விஜயராணி.]
    தாடியும்பொய்! என்றன் தலைப்பாகை யும்பொய்யே!
    கூடியுள்ள அங்கியும்பொய்! கொண்ட முதுமையும்பொய்!
    நான்விஜய ராணி! நகைக்கப் புவியினிலே
    ஊனெடுத்த காங்கேயன் ஒன்றும் உணர்கிலான்!
    கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருந்தைச்
    சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியில், ஆடவரைப்
    பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப்
    புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணிவிட்டான்!

    வெள்ளி நாட்டரசன்:
    [ஆச்சிரியத்தோடு கூறுவான்:]
    நீரன்றோ அன்னையார்! நீரன்றோ வீரியார்!
    ஆர்எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறிதன்னை!

    வள்ளிநாட்டு மகிபன்:
    ஆவி சுமந்துபெற்ற அன்பன்உயிர் காப்பதற்குக்
    கோவித்த தாயினெதிர், கொல்படைதான் என்செய்யும்?

    கொன்றைநாட்டுக் கோமான்:
    அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
    என்னும் படிஅமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம்
    ஆகுநாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம்
    போகுநாள், இன்பப் புதியநாள் என்றுரைப்பேன்!
    அன்னையெனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்டவந்த
    மின்னே, விளக்கே, விரிநிலவே வாழ்த்துகின்றேன்!

    குன்றநாட்டுக் கொற்றவன்:
    உங்கள் விருப்பம் உரைப்பீர்கள்; இவ்விளைய
    சிங்கத்திற் கின்றே திருமகுடம் சூட்டிடலாம்!
    தீங்கு புரிந்த, சிறுசெயல்கள் மேற்கொண்ட
    காங்கேய னுக்கும் கடுந்தண் டனையிடலாம்!

    ராணி:
    கண்மணியே! உன்றன் கருத்தென்ன நீயேசொல்!

    சுதர்மன்:
    எண்ணம் உரைக்கின்றேன்! என்உதவி வேந்தர்களே,
    இந்த மணிபுரிதான் இங்குள்ள மக்களுக்குச்
    சொந்த உடைமை! சுதந்தரர்கள் எல்லாரும்!
    ஆதலினால் இந்த அழகு மணிபுரியை
    ஓதும் குடியரசுக் குட்படுத்த வேண்டுகின்றேன்!
    அக்கிரமம் சூழ்ச்சி அதிகாரப் பேராசை
    கொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந்தான்
    மானம் உணர்ந்து, வளர்ந்து, எழுச்சியுற்றுக்
    கானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்!
    ஆதலினால் காங்கேயன் அக்ரமமும் நன்றென்பேன்;
    தீதொன்றும் செய்யாதீர் சேனா பதிதனக்கே!

    மன்னர்கள்:
    அவ்வாறே ஆகட்டும் அப்பனே ஒப்பில்லாய்!
    செவ்வனே அன்புத் திருநாடு வாழியவே!
    சேய்த்தன்மை காட்டவந்த செம்மால்! செழியன்புத்
    தாய்த்தன்மை தந்த தமிழரசி வாழியவே!

    சுதர்மன்:
    எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமைஎலாம்
    எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
    எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
    எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!
    வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை
    வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக!
    வில்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும்
    விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே!


    2. இயற்கை



    1. 4. மயில்


    அழகிய மயிலே! அழகிய மயிலே!
    அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்
    கருங்குயி லிருந்து விருந்து செய்யக்
    கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
    தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
    அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
    தாடுகின்றாய் அழகிய மயிலே!

    உனது தோகை புனையாச் சித்திரம்
    ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

    உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
    உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!

    ஆடு கின்றாய்; அலகின் நுனியில்
    வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
    சாயல்உன் தனிச்சொத்து! ஸபாஷ்! கரகோஷம்!

    ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
    ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
    மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
    ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர்,
    இவைகள் என்னை எடுத்துப் போயின!
    இப்போது, என்நினைவு என்னும் உலகில்
    மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்:
    நீயும் பெண்களும் நிகர் என்கின்றார்!
    நிசம்அது! நிசம்!நிசம்! நிசமே யாயினும்
    பிறர்பழி தூற்றும் பெண்கள்இப் பெண்கள்!
    அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
    அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
    எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே
    இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்
    குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ
    கறையொன் றில்லாக் கலாப மயிலே,
    நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
    இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்
    மனதிற் போட்டுவை; மகளிற் கூட்டம்
    என்னை ஏசும் என்பதற் காக!

    புவிக்கொன் றுரைப்பேன்: புருஷர் கூட்டம்,
    பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
    திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள்
    சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!


    1.5. சிரித்த முல்லை


    மாலைப் போதில் சோலையின் பக்கம்
    சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது.
    வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது.
    வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்.
    சோலை நடுவில் சொக்குப் பச்சைப்
    பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்து
    குலுக்கென்று சிரித்த முல்லை
    மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சிகொண் டேனே!


    1.6. உதய சூரியன்


    உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில்
    உதித்துவிட்டான் செங்கதிரோன்; தகத்தகா யம்பார்!
    விலகிற்றுக் காரிருள்தான்; பறந்ததுபார் அயர்வு;
    விண்ணிலெலாம் பொன்னொளியை ஏற்றுகின்றான் அடடா!
    மிலையும்எழிற் பெருங்கடலின் அமுதப்ர வாகம்!
    மேலெல்லாம் விழிஅள்ளும் ஒளியின் ப்ரவாகம்!
    நலம்செய்தான்; ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான், காட்டி
    நடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை!

    ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானகத்தில் மண்ணில்
    உயர்மலைகள், சோலை,நதி இயற்கைஎழில் கள்பார்!
    களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால்
    கவிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்!
    தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி!
    திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்;
    ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில்
    உயர்கின்றான்; உதயசூ ரியன்வாழ்க நன்றே!


    1.7. காடு


    [காவடிச் சிந்து மெட்டு]

    முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்! - எதிர்
    முட்டுகருங் கற்களும்நெ ருங்கும் - மக்கள்
    இட்டடி எடுத்தெடுத்து
    வைக்கையிலே கால்களில்
    தடுங்கும் - உள்
    நடுங்கும்.

    கிட்டிமர வேர்கள்பல கூடும் - அதன்
    கீழிருந்து பாம்புவிரைந் தோடும் - மர
    மட்டையசை வால்புலியின்
    குட்டிகள்போய்த் தாய்ப்புலியைத்
    தேடும் - பின்
    வாடும்.

    நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி
    நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர்
    வாளெயிற்று வேங்கையெலாம்
    வால்சுழற்றிப் பாயவருங்
    காடு - பள்ளம்
    மேடு!

    கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்
    கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு
    தூளிபடத் தாவுகையில்
    ஊளையிடும் குள்ளநரி
    குன்றில் - புகும்
    ஒன்றி.

    வானிடைஓர் வானடர்ந்த வாறு - பெரு
    வண்கிளை மரங்கள்என்ன வீறு! - நல்ல
    தேனடைசொ ரிந்ததுவும்
    தென்னைமரம் ஊற்றியதும்
    ஆறு - இன்பச்
    சாறு!

    கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது
    காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும்
    ஆனினம் சுமந்தமடி
    ஆறெனவே பால்சுரந்து
    தீர்க்கும் - அடை
    ஆக்கும்.


    1. 8. கானல்


    வானும் கனல்சொரியும்! - தரை
    மண்ணும் கனல்எழுப்பும்!
    கானலில் நான்நடந்தேன் - நிழல்
    காணும் விருப்பத்தினால்!
    ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
    உயிருக் கில்லைஅங்கே!
    ஆன திசைமுழுதும் - தணல்
    அள்ளும் பெருவெளியாம்!

    ஒட்டும் பொடிதாங்கா - தெடுத்
    தூன்றும் அடியும்சுடும்;
    விட்டுப் புறங்குதித்தால் - அங்கும்
    வேகும்! உளம்துடிக்கும்!
    சொட்டுப் புனல்அறியேன்! - ஒன்று
    சொல்லவும் யாருமில்லை!
    கட்டுடல் செந்தணலில் - கட்டிக்
    கந்தக மாய்எரியும்!

    முளைத்த கள்ளியினைக் - கனல்
    மொய்த்துக் கரியாக்கி
    விளைத்த சாம்பலைப்போய் - இனி
    மேலும் உருக்கிடவே
    கொளுத்தி டும்கானல்! - உயிர்
    கொன்று தின்னும்கானல்!
    களைத்த மேனிகண்டும் - புறங்
    கழுத்த றுக்கும்வெளி!

    திடுக்கென விழித்தேன் - நல்ல
    சீதளப் பூஞ்சோலை!
    நெடும் பகற்கனவில் - கண்ட
    நெஞ்சுறுத் தும்கானல்
    தொடர்ந்த தென்நினைவில்! - குளிர்
    சோலையும் ஓடையுமே
    சுடவ ரும்கனலோ - என்று
    தோன்றிய துண்மையிலே.


    1. 9. மக்கள் நிலை


    சிட்டு

    தென்னை மரத்தில் - சிட்டுப்
    பின்னும் அழைக்கும் - ஒரு
    புன்னை மரத்தினில் ஓடிய காதலி
    போ போ என்றுரைக்கும்.

    வண்ண இறக்கை - தன்னை
    அங்கு விரித்தே - தன்
    சென்னியை உள்ளுக்கு வாங்கிஅச் சேவலும்
    செப்பும் மணிவாயால்:

    என்னடி பெண்ணே - உயிர்
    ஏகிடும் முன்னே - நீ
    என்னிடம் வாஎனை யாகிலும் கூப்பிடு,
    தாமதம் நீக்கிவிடு

    என்றிது சொல்லப் - பெட்டை
    எண்ணம் உயர்ந்தே - அத்
    தென்னையிற் கூடிப்பின் புன்னையிற் பாய்ந்தது,
    பின்னும் அழைக்கும் சிட்டு.

    அணில்

    கீச்சென் றுகத்தி - அணில்
    கிளையொன் றில்ஓடிப் - பின்
    வீச்சென்று பாய்ந்துதன் காதலன் வாலை
    வெடுக்கென்று தான் கடிக்கும்.

    ஆச்சென்று சொல்லி - ஆண்
    அணைக்க நெருங்கும் - உடன்
    பாய்ச்சிய அம்பெனக் கீழ்த்தரை நோக்கிப்
    பறந்திடும் பெட்டை அணில்!

    மூச்சுடன் ஆணோ - அதன்
    முதுகிற் குதிக்கும் - கொல்லர்
    காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக்
    கலந்திடும் இன்பத் திலே.

    ஏச்சுக்கள் அச்சம் - தம்மில்
    எளிமை வளப்பம் - சதிக்
    கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம்
    கொஞ்சமும் இல்லை அங்கே!

    வானும் முல்லையும்

    எண்ணங் கள்போலே - விரி
    வெத்தனை கண்டாய்! - இரு
    கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள்
    கூடிச் சுடர்தரும் வான்!

    வண்ணங் களைப்போய்க் - கரு
    மாமுகில் உண்டு - பின்பு
    பண்ணும் முழக்கத்தை, மின்னலை, அம்முகில்
    பாய்ச்சிய வானவில்லை,

    வண்ணக் கலாப - மயில்
    பண்ணிய கூத்தை - அங்கு
    வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தனள்!
    மேல்முத்தை வான் சொரிந்தான்!

    விண்முத் தணிந்தாள் - அவள்
    மேனி சிலிர்த்தாள்! - இதைக்
    கண்ணுண்ண உண்ணக் கருத்தினி லின்பக்
    கடல்வந்து பாய்ந்திடுதே!

    மனிதர்

    மஞ்சம் திருத்தி - உடை
    மாற்றி யணிந்தே - கொஞ்சம்
    கொஞ்சிக் குலாவிட நாதன் வரும்படி
    கோதைஅ ழைக்கையிலே,

    மிஞ்சிய சோகம் - மித
    மிஞ்சிய அச்சம் - என்
    வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன
    வாதனை கொள்வாரோ?

    நெஞ்சிலிவ் வாறு - நினைந்
    தங்குரைக் கின்றான்: - அடி
    பஞ்சைப் பரம்பரை நாமடி! பிள்ளைகள்
    பற்பலர் ஏதுக் கென்பான்.

    கஞ்சி பறித்தார் - எழுங்
    காதல் பறித்தார் - கெட்ட
    வஞ்சகம் சேர்சின்ன மானிடச் சாதிக்கு
    வாய்த்த நிலை இதுவோ!


    1.10. காட்சி இன்பம்


    குன்றின்மீது நின்று கண்டேன்
    கோலம் என்ன கோலமே!
    பொன் ததும்பும் அந்திவானம்
    போதந் தந்த தே - டி - தோழி!
    குன்றின்மீது..

    முன்பு கண்ட காட்சி தன்னை
    முருகன் என்றும் வேலன் என்றும்
    கொன் பயின்றார் சொல்வர்; அஃது
    குறுகும் கொள்கை அன் - றோ - தோழி!
    குன்றின்மீது..

    கண்ணும் நெஞ்சும் கவரு கின்ற
    கடலை, வானைக் கவிஞர் அந்நாள்
    வண்ண மயில் வேலோன் என்றார்;
    வந்ததே போர் இந் - நாள் - தோழி!
    குன்றின்மீது..

    எண்ண எண்ண இனிக்கும் காட்சிக்
    கேது கோயில்? தீபம் ஏனோ?
    வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம்
    மயில வெற்பும் நன் - றே - தோழி!
    குன்றின்மீது..

    பண்ண வேண்டும் பூசை என்பார்
    பாலும் தேனும் வேண்டும் என்பார்
    உண்ண வேண்டும் சாமி என்பார்
    உளத்தில் அன்பு வேண் - டார் - தோழி!
    குன்றின்மீது..

    அன்பு வேண்டும்; அஃது யார்க்கும்
    ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீக்கும்!
    வன்பு கொண்டோ ர் வடிவு காட்டி
    வணங்க என்று சொல் - வார் - தோழி!
    குன்றின்மீது..

    என்பும் தோலும் வாடு கின்றார்
    ஏழை என்ப தெண்ணார் அன்றே
    துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு
    சூழ்க வையம் தோ - ழி - வாழி!
    குன்றின்மீது..


    3. காதல்



    1.11. மாந்தோப்பில் மணம்


    தாமரை பூத்த குளத்தினிலே - முகத்
    தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக்
    கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்
    கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! - அவள்
    தூய்மை படைத்த உடம்பினையும் - பசுந்
    தோகை நிகர்த்த நடையினையும் - கண்டு
    காமனைக் கொல்லும் நினைப்புடனே - குப்பன்
    காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே.

    முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு
    முழுமதி போல நனைந்திருக்கும் - தன்
    துகிலினைப் பற்றித் துறைக்குவந்தாள்! - குப்பன்
    சோர்ந்துவிட் டானந்தக் காமனம்பால்! - நாம்
    புகழ்வதுண் டோ குப்பன் உள்ளநிலை! - துகில்
    பூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் - குப்பன்
    சகலமும் நீயடி மாதரசி - என்
    சாக்காட்டை நீக்கிட வேண்டும் என்றான்.

    கன்னி யனுப்பும் புதுப்பார்வை - அவன்
    கட்டுடல் மீதிலும் தோளினிலும் - சென்று
    மின்னலின் மீண்டது! கட்டழகன் - தந்த
    விண்ணப்பம் ஒப்பினள் புன்னகையால்!

    சற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் - அவள்
    சங்கீத வாய்மொழி ஒன்றினிலே - எண்ணம்
    முற்றும் அறிந்திடக் கூடுமென்றே - அவள்
    முன்பு நடந்திடப் பின்தொடர்ந்தான் - பின்பு
    சிற்றிடை வாய்திறந் தாள்.அதுதான் - இன்பத்
    தேனின் பெருக்கன்று; செந்தமிழே!
    சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் - என்
    தோழிகள் இப்பக்கம் வந்திடுவார்.

    காலை மலர்ந்தது! மாந்தரெலாம் - தங்கள்
    கண்மலர்ந் தேநட மாடுகின்றார்! - இச்
    சோலையி லேஇள மாமரங்கள் - அடர்
    தோப்பினை நோக்கி வருக! என்றாள்.
    நாலடி சென்றனர்! மாமரத்தின் - கிளை
    நாற்புறம் சூழ்ந்திட்ட நல்விடுதி!
    மூலக் கருத்துத் தெரிந்திருந்தும் - அந்த
    மொய்குழல் யாதுன்றன் எண்ண மென்றாள்.

    உன்னை எனக்குக் கொடுத்துவிடு! - நான்
    உனக்கெனைத் தந்திட அட்டியில்லை - இந்தக்
    கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் - எட்டிக்
    காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்:
    சின்ன வயதினில் என்றனையோர் - பெருஞ்
    சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! - எனில்
    அன்னது நான்செய்த குற்றமன்று! - நான்
    அமங்கலை என்றுகண் ணீர்சொரிந்தாள்!

    மணந்திட நெஞ்சில் வலிவுளதோ? - என்று
    வார்த்தைசொன் னாள்;குப்பன் யோசித்தனன்! - தன்னை
    இணங்கென்று சொன்னது காதலுள்ளம் - தள்
    என்றனமூட வழக்க மெலாம் - தலை
    வணங்கிய வண்ணம் தரையினிலே - குப்பன்
    மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! - பின்
    கணம்ஒன்றி லேகுப்பன் நெஞ்சினிலே - சில
    கண்ணற்ற மூட உறவினரும்,

    வீதியிற் பற்பல வீணர்களும் - வேறு
    விதியற்ற சிற்சில பண்டிதரும் - வந்து
    சாதியி லுன்னை விலக்கிடுவோம் - உன்
    தந்தையின் சொத்தையும் நீஇழப்பாய்! - நம்
    ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! - தாலி
    அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! - நல்ல
    கோதை யொருத்தியை யாம்பார்த்து - மணம்
    கூட்டிவைப் போம்என்று சத்தமிட்டார்!

    கூடிய மட்டிலும் யோசித்தனன் - குப்பன்
    குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! - முன்
    வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் - அந்த
    வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும்அவன் - ஆ!
    ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! - மூடர்
    எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! - மற்றும்
    பேடி வழக்கங்கள், மூடத்தனம் - இந்தப்
    பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!

    காதல் அடைதல் உயிரியற்கை! - அது
    கட்டில் அகப்படும் தன்மையதோ? - அடி
    சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
    தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! - இனி
    நீதடு மாற்றம் அகற்றிவிடு! - கை
    நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! - அடி
    கோதை தொடங்கடி! என்றுசொன்னான். - இன்பம்
    கொள்ளை!கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!


    1.12. காதற் கடிதங்கள்


    காதலியின் கடிதம்
    என் அன்பே,
    இங்குள்ளோர் எல்லோரும்
    க்ஷேமமாய் இருக்கின் றார்கள்;
    என் தோழியர் க்ஷேமம்!
    வேலைக்காரர் க்ஷேமம்! இதுவுமன்றி
    உன்தயவால் எனக்காக உள்வீட்டுக்
    களஞ்சியநெல் மிகவு முண்டே,
    உயர்அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில்
    பத்துவிதம் உண்டு. மற்றும்
    கன்னலைப்போற் பழவகை பதார்த்தவகை
    பக்ஷணங்கள் மிகவு முண்டு.
    கடிமலர்ப்பூஞ் சோலையுண்டு. மான்க்ஷேமம்.
    மயில்க்ஷேமம். பசுக்கள் க்ஷேமம்.
    இன்னபடி இவ்விடம்யா வரும்எவையும்
    க்ஷேமமென்றன் நிலையோ என்றால்
    இருக்கின்றேன்; சாகவில்லை என்றறிக.
    இங்ஙனம் உன்
    எட்டிக்காயே.
    காதலன் பதில்
    செங்கரும்பே,
    உன்கடிதம் வரப்பெற்றேன்.
    நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன்.
    தேமலர்மெய் வாடாதே! க்ஷேமமில்லை
    என்றுநீ தெரிவிக் கின்றாய்.
    இங்கென்ன வாழ்கிறதோ? இதயத்தில்
    உனைக்காண எழும்ஏக் கத்தால்,
    இன்பாலும் சர்க்கரையும் நன்மணத்தால்
    பனிக்கட்டி இட்டு றைத்த
    திங்கள்நிகர் உளிர்உணவைத் தின்றாலும்
    அதுவும்தீ! தீ!தீ! செந்தீ!
    திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன்.
    உனை அங்கே விட்டுவந்தேன்!
    இங்குனைநான் எட்டிக்காய் எனநினைத்த
    தாயுரைத்தாய்; இதுவும் மெய்தான்.
    இவ்வுலக இன்பமெலாம் கூட்டிஎடுத்
    துத்தெளிவித் திறுத்துக் காய்ச்சி
    எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை
    எட்டிக்காய் என்பா யாயின்
    எனக்குநீ எட்டிக்காய் என்றுதான்
    சொல்லிடுவேன்.
    இங்குன்
    அன்பன்.


    1.13. காதற் குற்றவாளிகள்


    தோட்டத்து வாசல் திறக்கும் - தினம்
    சொர்ணம் வந்தால் கொஞ்ச நேரம்மட்டும்
    வீட்டுக் கதைகளைப் பேசிடுவாள் - பின்பு
    வீடுசெல்வாள். இது வாடிக்கையாம்.
    சேட்டுக் கடைதனிற் பட்டுத்துணி - வாங்கச்
    சென்றனள் சுந்தரன் தாய்ஒருநாள்!
    பாட்டுச் சுவைமொழிச் சொர்ணம்வந்தாள் - வீட்டிற்
    பாடம் படித்திருந்தான் இளையோன்.

    கூடத்திலே மனப் பாடத்திலே - விழி
    கூடிக் கிடந்திடும் ஆணழகை,
    ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் - அவள்
    உண்ணத் தலைப்படும் நேரத்திலே,
    பாடம் படித்து நிமிர்ந்தவிழி - தனிற்
    பட்டுத் தெரிந்தது மானின்விழி!
    ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
    ஆயிரம் ஏடு திருப்புகின்றான்!

    தன்னந் தனிப்பட்ட என்னைவிட்டே - பெற்ற
    தாயும் கடைக்கு நடந்துவிட்டாள்.
    இன்னுமுண்டோ அங்கு வேலைஎன்றான். - சொர்ணம்
    ஏறிட்டுப் பார்த்தனள் கூறுகின்றாள்:
    தன்னந் தனிப்பட நீயிருந்தாய் - எந்தத்
    தையல்உன் பொன்னுடல் அள்ளிவிட்டாள்?
    என்றனள். சுந்தரன் என்னுளத்தைக் - கள்ளி!
    எட்டிப் பறித்தவள் நீஎன்றனன்.

    உள்ளம் பறித்தது நான்என்பதும் - என்றன்
    உயிர் பறித்தது நீஎன்பதும்
    கிள்ளி உறிஞ்சிடும் மாமலர்த்தேன் - இன்பக்
    கேணியிற் கண்டிட வேணுமென்றாள்.
    துள்ளி எழுந்தனன் சுந்தரன்தான்! - பசுந்
    தோகை பறந்தனள் காதலன்மேல்!
    வெள்ளத்தி னோடொரு வெள்ளமுமாய் - நல்ல
    வீணையும் நாதமும் ஆகிவிட்டார்!

    சாதலும் வாழ்தலும் அற்றஇடம் - அணுச்
    சஞ்சல மேனும்இல் லாதஇடம்,
    மோதலும் மேவலும் அற்றஇடம் - உளம்
    மொய்த்தலும் நீங்கலும் அற்றஇடம்!
    காதல் உணர்வெனும் லோகத்திலே - அவர்
    காணல் நினைத்தல் தவிர்ந்திருந்தார்!
    சூதற்ற சுந்தரன் தாயும்வந்தாள் - அங்குச்
    சொர்ணத்தின் தாயும் புகுந்துவிட்டாள்!

    பெற்ற இளந்தலைக் கைம்பெண்ணடீ! - என்ன
    பேதமை? என்றனள் மங்கையின்தாய்.
    சிற்சில ஆண்டுகள் முற்படவே - ஒரு
    சின்னக் குழந்தையை நீமணந்தாய்;
    குற்றம் புரிந்தனை இவ்விடத்தே - அலங்
    கோலமென்றாள் அந்தச் சுந்தரன்தாய்.
    புற்றரவொத்தது தாயர் உள்ளம்! - அங்குப்
    புன்னகை கொண்டது மூடத்தனம்!

    குற்றம் மறுத்திடக் காரணங்கள் - ஒரு
    கோடி இருக்கையில், காதலர்கள்
    கற்றவை யாவையும் உள்ளத்திலே - வைத்துக்
    கண்ணிற் பெருக்கினர் நீரருவி!
    சற்றிது கேளுங்கள் நாட்டினரே! - பரி
    தாபச் சரித்திரம் மானிடரே!
    ஒற்றைப் பெரும்புகழ்த் தாயகமே! - இந்த
    ஊமைகள் செய்ததில் தீமையுண்டோ ?


    1.14. எழுதாக் கவிதை


    மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான்;
    மெல்லஇருட் கருங்கடலில் விழுந்த திந்தஉலகும்!
    தோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும்
    தோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்பேன் அடடா!
    நாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள், என்றன்
    நனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை!
    மாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை
    மனவெளியில் ஒளிசெய்தாள் என்னதகத் தகாயம்!

    புன்னையின்கீழ்த் தின்னையிலே எனைஇருக்கச் சொன்னாள்.
    புதுமங்கை வரவுபார்த் திருக்கையிலே, அன்னாள்,
    வண்ணமலர்க் கூட்டத்தில், புள்ளினத்தில், புனலில்,
    வானத்தில்,எங்கெங்கும் தன்னழகைச் சிந்திச்
    சின்னவிழி தழுவும்வகை செய்திருந்தாள்! இரவு
    சேர்ந்தவுடன் என்னுளத்தைச் சேர்ந்துவிட்டாள்! எனினும்
    சன்னத்த மலருடலை என்னிருகை ஆரத்
    தழுவுமட்டும் என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

    என்னுளத்தில் தன்வடிவம் இட்டஎழில் மங்கை
    இருப்பிடத்தில் என்னுருவம் தன்னுளத்திற் கொண்டாள்;
    மின்னொளியாள் வராததுதான் பாக்கியிந்த நேரம்
    வீறிட்ட காதலுக்கும் வேலிகட்டல் உண்டோ ?
    கன்னியுளம் இருளென்று கலங்கிற்றோ! கட்டுக்
    காவலிலே சிக்கிஅவள் தவித்திடுகின் றாளோ!
    என்னென்பேன் அதோபூரிக் கின்றதுவெண் ணிலவும்!
    எழில்நீல வான்எங்க ணும்வயிரக் குப்பை!

    மாலைப்போ தைத்துரத்தி வந்தஅந்திப் போதை
    வழியனுப்பும் முன்னிருளை வழியனுப்பி விட்டுக்
    கோலநிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில்
    கொலைபுரியக் காத்திருக்கும் காதலொடு நான்தான்
    சோலைநடுவே மிகவும் துடிக்கின்றேன்; இதனைத்
    தோகையிடம் போயுரைக்க எவருள்ளார்? அன்னாள்
    காலிலணி சிலம்புதான் கலீரெனக் கேளாதோ?
    கண்ணெதிரிற் காணேனோ பெண்ணரசை யிங்கே?

    தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் நகையோ!
    தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும்!
    விண்ணீலம் கார்குழலோ! காணும் எழிலெல்லாம்
    மெல்லியின்வாய்க் கள்வெறியோ! அல்லிமலர்த் தேனின்
    வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ!
    வாழியஇங் கிவையெல்லாம் எழுதவரும் கவிதை!
    கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோ வந்துவிட்டாள்!
    கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே!


    1.15. காதற் பெருமை


    நல்ல இளம்பருவம் - மக்கள்
    நாடும் குணம்,கீர்த்தி,
    கல்வி இவையுடையான் - உயர்
    கஜராஜ் என்பவனும்,
    முல்லைச் சிரிப்புடையாள் - மலர்
    முக ஸரோஜாவும்,
    எல்லையிற் காதற்கடல் - தனில்
    ஈடுபட்டுக் கிடந்தார்.

    திங்கள் ஒருபுறமும் - மற்றைச்
    செங்கதிர் ஓர்புறமும்
    தங்கி யிருந்திடினும் - ஒளி
    தாவுதல் உண்டதுபோல்
    அங்கந்த வேலூரில் - இவர்
    அங்கம் பிரிந்திருந்தும்
    சங்கமம் ஆவதுண்டாம் - காதற்
    சமுத்திர விழிகள்!

    ஒட்டும் இரண்டுளத்தைத் - தம்மில்
    ஓங்கிய காதலினைப்
    பிட்டுப்பிட் டுப்புகன்றார் - அதைப்
    பெற்றவர் கேட்கவில்லை.
    குட்டை மனத்தாலே - அவர்
    கோபப் பெருக்காலே
    வெட்டிப் பிரிக்கவந்தார் - அந்த
    வீணையை நாதத்தினை!

    பொன்னவிர் லோகத்திலே - உள்ளம்
    பூரிக்கும் காதலிலே
    என்னுளம் கன்னியுளம் - இணைந்
    திருந்தும் இன்பஉடல்
    தன்னைப் பயிலுவதோர் - நல்ல
    சந்தர்ப்பம் இல்லையென்றே
    தன்னையும் தையலையும் - பெற்ற
    சமுகத்தை நொந்தான்.

    அண்டைஇல் லத்தினிலே - என்
    அன்பன் இருக்கின்றான்!
    உண்ணும் அமுதிருந்தும் - எதிர்
    உண்ண முடிந்ததில்லை!
    தண்டமிழ்ப் பாட்டிருந்தும் - செவி
    சாய்த்திடக் கூடவில்லை!
    வண்மலர் சூடலில்லை - அது
    வாசலிற் பூத்திருந்தும்.

    என்று சரோஜாவும் - பல
    எண்ணி எண்ணிஅயர்வாள்.
    தன்னிலை கண்டிருந்தும் - அதைச்
    சற்றும் கருதாமல்
    என்னென்ன மோபுகல்வார் - அந்த
    இரும்பு நெஞ்சுடையார்.
    அன்னதன் பெற்றோரின் - செயல்
    அத்தனையும் கசப்பாள்.

    நல்ல ஸரோஜாவின் - மணம்
    நாளைய காலைஎன்றார்!
    மெல்லியின் பெற்றோர்கள் - வந்து
    வேறொரு வாலிபனைச்
    சொல்லி உனக்கவன்தான் - மிக்க
    தோதென்றும் சொல்லிவிட்டார்.
    கொல்லும் மொழிகேட்டாள் - மலர்க்
    கொம்பு மனம்ஒடிந்தாள்!

    கொழிக்கும் ஆணழகன்! - அவன்
    கொஞ்சிவந் தேஎனது
    விழிக்குள் போய்ப்புகுந்தான் - நெஞ்ச
    வீட்டில் உலாவுகின்றான்!
    இழுத் தெறிந்துவிட்டே - மற்
    றின்னொரு வாலிபனை
    நுழைத்தல் என்பதுதான் - வெகு
    நூதனம் என்றழுவாள்!

    காத லிருவர்களும் - தம்
    கருத் தொருமித்தபின்
    வாதுகள் வம்புகள்ஏன்? - இதில்
    மற்றவர்க் கென்னஉண்டு?
    சூதுநிறை யுளமே - ஏ
    துட்ட இருட்டறையே!
    நீதிகொள், என்றுலகை - அவள்
    நிந்தனை செய்திடுவாள்!

    இல்லத்தின் மாடியிலே - பின்னர்
    எறிஉரைக்க லுற்றாள்:
    இல்லை உனக்கெனக்கு - மணம்
    என்று முடித்துவிட்டார்.
    பொல்லாத நாளைக்கொ - வெறும்
    புல்லனை நான்மணக்க
    எல்லாம் இயற்றுகின்றார் - பெற்ற
    எமன்கள் இவ்விடத்தில்!ரு

    அடுத்த மாடியிலே - நின்ற
    அன்பனிது கேட்டான்;
    துடித்த உள்ளத்திலே - அம்பு
    தொடுக்கப் பட்டுநின்றான்!
    எடுத்துக் காட்டிநின்றாள் - விஷம்
    இட்டதோர் சீசாவை!
    அடி எனதுயிரே! - அழை
    அழைஎனையும் என்றான்!

    தீயும் உளத்தோனும் - விஷம்
    தேடி எடுத்துவந்தான்!
    தூயநற் காதலர்க்கே - பெருந்
    தொல்லை தரும்புவியில்
    மாய்க நமதுடல்கள்! - விஷம்
    மாந்துக நம்மலர்வாய்!
    போய்நுகர் வோம்சலியா - இன்பம்
    பூமியின் கர்ப்பத்திலே!

    என்று விஷம்குடித்தார் - அவர்
    இறப்பெனும் நிலையில்
    ஒன்றுபட்டுச் சிறந்தார் - இணை
    ஓதரும் காதலர்கள்.
    இன்றுதொட் டுப்புவியே - இரண்
    டெண்ணம் ஒருமித்தபின்
    நின்று தடைபுரிந்தால் - நீ
    நிச்சயம் தோல்விகொள்வாய்!


    1.16. காதலைத் தீய்த்த கட்டுப்பாடு


    வேற்றூர்போய் நள்ளிரவில் வீடுவந்த
    வேலனிடம் ஆள்ஒருவன் கடிதம்தந்தான்.
    ஏற்றதனை வாசிக்க லுற்றான்வேலன்:
    என்னருமைக் காதலரே கடைசிச்சேதி;
    நேற்றிரவு நாமிருவர் பூந்தோட்டத்தில்
    நெடுநேரம் பேசியதை என்தாய்கண்டாள்!
    ஆற்றாத துயரால்என் தந்தை,அண்ணன்
    அனைவரிட மும்சொல்லி முடித்துவிட்டாள்.

    குடும்பத்தின் பெயர்கெடுக்கத் தோன்றிவிட்டாய்
    கொடியவளே! விஷப்பாம்பே! என்றுதந்தை
    தடதடவென் றிருகையால் தலையில்மோதித்
    தரையினிலே புரண்டழுதார். அண்ணன்அங்கு
    மடமடவென் றேகொல்லைக் கிணற்றில்வீழ்ந்தே
    மாய்வார்போல் ஓடிப்பின் திரும்பிவந்து
    படுபாவி தாலியற்ற பிறகும்இந்தப்
    பழுதுநடை கொள்வதுண்டோ என்றுநைந்தார்.

    தாயோஎன் எதிர்வந்து தாலியோடு
    சகலமும் போயினஏடி இன்னும்என்ன!
    தீயாகிக் கொளுத்திவிட்டாய் எம்மையெல்லாம்!
    தெருவார்கள் ஊரார்கள் இதையறிந்தால்
    ஓயாமல் தூற்றிடுவார்! யாம்இவ்வூரில்
    உயர்ந்திருந்தோம்; தாழ்த்திவிட்டாய் அந்தோ!நீதான்
    பாயேனும் விரித்ததிலே படுப்பதுண்டா
    பதியிழந்தால்? மூதேவி என்றுசொன்னாள்.

    தந்தையார்அடி உன்னைக் கொன்றுபோட்டுத்
    தலையறுத்துக் கொள்ளுகின்றேன் என்பார்.அண்ணன்
    அந்தமதி யற்றவனைக் கொல்வேன்என்றே
    அருகிருக்கும் கொடுவாளைப் பாய்ந்தெடுப்பான்!
    இந்தவிதம் கொதித்தார்கள் இரவுமட்டும்!
    இனிஎன்னால் அவர்கட்குத் தொல்லைவேண்டாம்;
    சுந்தரனே, என்காதல் துரையே!உன்னைத்
    துறக்கின்றேன் இன்றிரவில் கடலில்வீழ்ந்தே!ரு

    காதலியின் கடிதத்தில் இதைவாசித்தான்!
    கதறினான்! கடல்நோக்கிப் பறந்தான்வேலன்!
    ஈதறிந்தார் ஊரிலுள்ளார்! ஓடினார்கள்!
    எழில்வானம், முழுநிலவு, சமுத்திரத்தின்
    மீதெல்லாம் மிதக்கும்ஒளி, அகண்டாகாரம்
    மேவுபெருங் காட்சியில்ஓர் துன்பப்புள்போல்
    மாதுகடற் பாலத்தின் கடைசிநின்று
    வாய்விட்டுக் கதறுகின்றாள் வசமிழந்தாள்:

    எனைமணந்தார் இறந்தார்;என் குற்றமல்ல;
    இறந்தவுடன் மங்கலநாண், நல்லாடைகள்,
    புனைமலர்குங் குமம்அணிகள் போனதுண்டு;
    பொன்னுடலும் இன்னுயிரும் போனதுண்டோ ?
    எனைஆளும் காதலுக்கோர் இலக்கியத்துக்
    கிசைந்ததெனில் உயிரியற்கை; நான்என்செய்வேன்?
    தனையடக்கிக் காதலினைத் தவிர்த்துவாழும்
    சகம்இருந்தால் காட்டாயோ நிலவேநீதான்!

    கண்படைத்த குற்றத்தால் அழகியோன்என்
    கருத்தேறி உயிர்ஏறிக் கலந்துகொண்டான்!
    பெண்படைத்த இவ்வுலகைப் பல்லாண்டாகப்
    பெற்றுணர்ந்த நெடுவானே! புனலே!கூறீர்,
    மண்படைப்பே காதலெனில் காதலுக்கு
    மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக்கண்டார்?
    புண்படைத்த என்நாடே, கைம்மைக்கூர்வேல்
    பொழிகின்றாய் மங்கையர்மேல்! அழிகின்றாயே!

    ஆடவரின் காதலுக்கும் பெண்கள்கூட்டம்
    அடைகின்ற காதலுக்கும், மாற்றமுண்டோ ?
    பேடகன்ற அன்றிலைப்போல், மனைவிசெத்தால்
    பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட்கின்றான்!
    வாடாத பூப்போன்ற மங்கைநல்லாள்
    மணவாளன் இறந்தால்பின் மணத்தல்தீதோ?
    பாடாத தேனீக்கள், உலவாத்தென்றல்,
    பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ ?

    இளமைதந்தாய், உணர்வுதந்தாய், இன்பங்காணும்
    இன்னுயிரும் தந்திட்டாய் இயற்கைத்தேவி,
    வளமையற்ற நெஞ்சுடையார் இந்நாட்டார்கள்
    மறுக்கின்றார் காதலினைக் கைம்மைகூறி!
    தளைமீற வலியில்லேன்! அந்தோ! என்றன்
    தண்டமிழின் இனிமைபோல் இனியசொல்லான்
    உளமாரக் காதலித்தான் என்னை!அன்னோன்
    ஊர்நிந்தை ஏற்பதனைச் சகிப்பேனோநான்!

    ஓருயிரும் இரண்டுடலும் நாங்கள்!எம்மை
    உளிகொண்டு வெட்டிவிட்ட கட்டுப்பாடே,
    தீராத காதலினை நெஞ்சத்தோடு
    தீய்த்துவிட்டாய் என்றாள்.பின் ஓடிவந்து
    சீராளன் தாவினான்! வீழ்ந்தாள்!வீழ்ந்தான்!
    தேம்பிற்றுப் பெண்ணுலகு! இருவர்தீர்ந்தார்!
    ஊரார்கள் பார்த்திருந்தார் கரையில்நின்றே
    உளம்துடித்தார்; எனினும்அவர் உயிர்வாழ்கின்றார்.


    1.17. தலைவி காதல்


    சோலையிலோர் நாள் எனையே
    தொட்டிழுத்து முத்தமிட்டான்
    துடுக்குத் தனத்தை என்சொல்வேன்
    மாலைப் பொழுதில்இந்த மாயம்புரிந்த செம்மல்
    வாய்விட்டுச் சிரித்துப் பின்
    போய்விட்டானேடி தோழி!
    சோலையிலோர்..

    ஓடி விழிக்கு மறைந்தான் - ஆயினும் என்றன்
    உள்ளத்தில் வந்து நிறைந்தான்!
    வேடிக்கை என்ன சொல்வேன்
    மின்னல்போல் எதிர் நின்றான்!
    வேண்டித் தழுவச் சென்றேன்
    தாண்டி நடந்து விட்டான்!
    சோலையிலோர்..

    அகம் புகுந்தான் சேயோ - அவனை எட்டி
    அணக்க வழிசொல் வாயோ!
    சகம் பெறும் அவன்அன்று
    தந்த துடுக்கு முத்தம்!
    சக்ரவாகம் போல்வந்தான்;
    கொத்திப்போக மறந்தான்!
    சோலையிலோர்..


    1.18. விரகதாபம்


    காதலும் கனலாய் என்னையே சுடும்
    ஈதென்ன மாயமோ!
    நாதர் மாதெனையே சோதித்தாரோ
    நஞ்சமோஇவ் வஞ்சிவாழ்வு? ஐயையோ!

    நலியுதேஎன் அகமிகுதியு மலருடலே
    நனிமெலிதல் அநிதி இதுவலவோ?
    வனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில்
    வருவாரோ அலது வருகிலரோ?
    வாரிச விக சித முக தரி சனமுற
    வசமதோ கலவி புரிவது நிசமோ
    மதுரமான அமுதமு
    மலரினொடுமது கனியிரச
    மதிவிரச மடைவதென்ன!
    காதலும் கனலாய்..

    தென்ற லென்றபுலி சீறல் தாளேன்
    சீத நிலவே தீதாய் விளைந்திடுதே!
    வென்றி யணைந்திடும் அவர்புயம் அணைந்தே
    மேவி ஆவி எய்தல் எந்தநாள்?
    காதலும் கனலாய்..


    4. தமிழ்



    1.19. தமிழின் இனிமை


    கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
    கழையிடை ஏறிய சாறும்,
    பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
    பாகிடை ஏறிய சுவையும்,
    நனிபசு பொழியும் பாலும் - தென்னை
    நல்கிய குளிரிள நீரும்,
    இனியன என்பேன் எனினும் - தமிழை
    என்னுயிர் என்பேன் கண்டீர்!

    பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
    புனலிடை வாய்க்கும் கலியும்,
    குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
    கொட்டிடும் அமுதப் பண்ணும்,
    குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
    கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
    விழைகுவ னேனும், தமிழும் - நானும்
    மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

    பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
    பக்கத் துறவின் முறையார்,
    தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
    சந்ததம் மறவாத் தந்தை,
    குயில்போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
    கொட்டி வளர்க்கும் பிள்ளை,
    அயலவ ராகும் வண்ணம் - தமிழ்என்
    அறிவினில் உறைதல் கண்டீர்!

    நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
    நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
    காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
    கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
    மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
    மலைகளின் இன்பக் காட்சி,
    மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
    விந்தையை எழுதத் தரமோ?

    செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
    தேக்கிய கறியின் வகையும்,
    தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
    தயிரொடு மிளகின் சாறும்,
    நன்மது ரஞ்செய் கிழங்கு - கானில்
    நாவி லினித்திடும் அப்பம்,
    உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
    உணர்வை வளர்ப்பது தமிழே!


    1. 20. இன்பத் தமிழ்


    தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
    தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
    தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
    தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
    தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


    1. 21. தமிழ் உணவு


    ஆற்றங் கரைதனிலே - இருள்
    அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
    காற்றிலுட் கார்ந்திருந்தேன் - வெய்யிற்
    காலத்தின் தீமை இலாததினால் அங்கு
    வீற்றிருந்தார் பலபேர் - வந்து
    மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
    சாற்றுச் சுவைமொழியார் - சிலர்
    தங்கள் மணாளரின் அண்டை யிருந்தனர்;
    ஆற்றங் கரைதனிலே!

    நாட்டின் நிலைபேசிப் - பல
    நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர்புறம்.
    ஓட்டம் பயின்றிடுவார் - நல்ல
    ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
    கோட்டைப் பவுன்உருக்கிச் - செய்த
    குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகள்
    ஆட்ட நடைநடந்தே - மண்ணை
    அள்ளுவர், வீழுவர், அம்புலி வேண்டுவர்;
    ஆற்றங் கரைதனிலே!

    புனலும் நிலாவொளியும் - அங்குப்
    புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
    இனிது பறந்துபறந் - தங்கும்
    இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்!
    தனிஒரு வெள்ளிக்கலம் - சிந்தும்
    தரளங்கள் போல்வன நிலவு நக்ஷத்திரம்!
    புனையிருள் அந்திப்பெண்ணாள் - ஒளி
    போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த
    ஆற்றங் கரைதனிலே!

    விந்தை உரைத்திடுவேன் - அந்த
    வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
    முந்தஓர் பாட்டுரைத்தாள் - அது
    முற்றும் தெலுங்கில் முடிந்து தொலைந்தது;
    பிந்தி வடக்கினிலே - மக்கள்
    பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்.
    எந்தவிதம் சகிப்பேன்? - கண்ட
    இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன.
    ஆற்றங் கரைதனிலே!

    பொருளற்ற பாட்டுக்களை - அங்குப்
    புத்தமு தென்றனர்; கைத்தாள மிட்டனர்;
    இருளுக்குள் சித்திரத்தின் - திறன்
    எற்படுமோ இன்பம் வாய்த்திடக் கூடுமோ?
    உருவற்றுப் போனதுண்டோ - மிக்க
    உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு?
    கருவுற்ற செந்தமிழ்ச்சொல் - ஒரு
    கதியற்றுப் போனதுண்டோ அடடா! அந்த
    ஆற்றங் கரைதனிலே!

    சங்கீத விற்பனனாம் - ஒரு
    சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை;
    அங்கந்தப் பாட்டினிலே - சுவை
    அத்தனையும் கண்டு விட்டது போலவே
    நம்குள்ளர் வாய்திறந்தே - நன்று
    நன்றென ஆர்ப்பரித்தார்! அந்த நேரத்தில்
    எங்கிருந்தோ தமிழில் - ஓர்
    இன்ப நறுங்கவி கேட்டது காதினில்
    ஆற்றங்கரைதனிலே!

    அஞ்சலை, உன்ஆசை - என்னை
    அப்புறம் இப்புறம் போக விடாதடி
    கொஞ்சம் இறங்கிடுவாய் - நல்ல
    கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை
    வஞ்சி, எனக்களிப்பாய்! - என்ற
    வண்ணத் தமிழ்ப்பதம் பண்ணிற் கலந்தென்றன்
    நெஞ்சையும், வானத்தையும் - குளிர்
    நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும்

    ஒன்றெனச் செய்ததுவே! - நல்
    உவகை பெறச்செய்த தேதமிழ்ப் போசனம்!
    நன்று தமிழ்வளர்க! - தமிழ்
    நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
    என்றும் தமிழ்வளர்க! - கலை
    யாவும் தமிழ்மொழியால் விளைந் தோங்குக!
    இன்பம் எனப்படுதல் - தமிழ்
    இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!
    ஆற்றங் கரைதனிலே!


    1.22. தமிழ்ப் பேறு


    ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட
    என்னை எழுதென்று சொன்னதுவான்!
    ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
    ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
    காடும் கழனியும் கார்முகிலும் வந்து
    கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
    ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
    அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!

    சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
    தோகை மயில்வரும் அன்னம்வரும்,
    மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
    மாணிக்கப் பரிதி காட்சிதரும்
    யுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
    வெற்பென்று சொல்லி வரைகருஎனும்
    கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
    கூவின என்னை! - இவற்றிடையே,

    இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
    என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
    அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
    ஆவியில் வந்து கலந்ததுவே!
    இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
    என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
    துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
    தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.


    1.23. எங்கள் தமிழ்


    இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
    கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
    கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
    கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
    தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
    தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை!
    நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
    நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்.
    இனிமைத் தமிழ்மொழி..

    தமிழ்எங்கள் உயிர்என்ப தாலே - வெல்லுந்
    தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே
    தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்
    தமிழ்குன்று மேல்தமிழ் நாடெங்கும் இருளாம்
    தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத்
    தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு!
    தமிழ்என்று தோள்தட்டி ஆடு! - நல்ல
    தமிழ்வெல்க வெல்கஎன் றேதினம் பாடு!
    இனிமைத் தமிழ்மொழி..


    1. 24. தமிழ் வளர்ச்சி


    எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்;
    இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
    வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
    விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
    தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
    செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
    எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்
    இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.

    உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
    ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
    சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
    தமிழ்மொழியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.
    இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.
    எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
    தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை.
    தகத்தகா யத்தமிழைத் தாபிப்போம் வாரீர்!


    1.25. தமிழ்க் காதல்


    கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
    காட்டினில் வண்டின் இசைவளத்தால்
    கமழ்தரு தென்றல் சிலிர்சிலிர்ப்பால் - கருங்
    கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால்
    அமையும்அன் னங்களின் மென்னடையால் - மயில்
    ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
    சமையும் ஒருத்தி-அப் பூஞ்சோலை - எனைத்
    தன்வசம் ஆக்கிவிட் டாள்ஒருநாள்.

    சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
    தோளினை ஊன்றி இருக்கையிலே
    சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
    செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
    சோலையெ லாம்ஒளி வானமெலாம் - நல்ல
    தோகையர் கூட்டமெ லாம்அளிக்கும்
    கோலஇன் பத்தையென் உள்ளத்திலே - வந்து
    கொட்டிவிட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!


    1.26. எந்நாளோ?


    என்னருந் தமிழ்நாட் டின்கண்
    எல்லோரும் கல்வி கற்றுப்
    பன்னருங் கலைஞா னத்தால்,
    பராக்கிர மத்தால், அன்பால்
    உன்னத இம மலைபோல்
    ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
    இன்புற்றார் என்று மற்றோர்
    இயம்பக்கேட் டிடல் எந்நாளோ?

    கைத்திறச் சித்தி ரங்கள்,
    கணிதங்கள், வான நூற்கள்,
    மெய்த்திற நூற்கள், சிற்பம்,
    விஞ்ஞானம், காவி யங்கள்
    வைத்துள தமிழர் நூற்கள்
    வையத்தின் புதுமை என்னப்
    புத்தக சாலை எங்கும்
    புதுக்குநாள் எந்த நாளோ?

    தாயெழிற் றமிழை, என்றன்
    தமிழரின் கவிதை தன்னை
    ஆயிரம் மொழியிற் காண
    இப்புவி அவாவிற் றென்ற
    தோயுறும் மதுவின் ஆறு
    தொடர்ந்தென்றன் செவியில் வந்து
    பாயுநாள் எந்த நாளோ,
    ஆரிதைப் பகர்வார் இங்கே?

    பார்த்தொழில் அனைத்தும் கொண்ட
    பயன்தரும் ஆலைக் கூட்டம்
    ஆர்த்திடக் கேட்ப தென்றோ?
    அணிபெறத் தமிழர் கூட்டம்
    போர்த்தொழில் பயில்வ தெண்ணிப்
    புவியெலாம் நடுங்கிற் றென்ற
    வார்த்தையைக் கேட்டு நெஞ்சு
    மகிழ்ந்து கூத்தாடல் என்றோ?

    வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
    வீரங்கொள் கூட்டம்; அன்னார்
    உள்ளத்தால் ஒருவரே மற்
    றுடலினால் பலராய்க் காண்பார்;
    கள்ளத்தால் நெருங் கொணாதே
    எனவையம் கலங்கக் கண்டு
    துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
    சொக்கும்நாள் எந்த நாளோ?

    தறுக்கினாற் பிறதே சத்தார்
    தமிழன்பால் என்நாட் டான்பால்
    வெறுப்புறும் குற்றஞ் செய்தா
    ராதலால் விரைந் தன்னாரை
    நொறுக்கினார் முது கெலும்பைத்
    தமிழர்கள் என்ற சேதி
    குறித்தசொல் கேட்டின் பத்திற்
    குதிக்கும்நாள் எந்த நாளோ?

    நாட்டும்சீர்த் தமிழன் இந்த
    நானில மாயம் கண்டு
    காட்டிய வழியிற் சென்று
    கதிபெற வேண்டும் என்றே
    ஆட்டும்சுட் டுவிரல் கண்டே
    ஆடிற்று வையம் என்று
    கேட்டுநான் இன்ப ஊற்றுக்
    கேணியிற் குளிப்ப தெந்நாள்?

    விண்ணிடை இரதம் ஊர்ந்து
    மேதினி கலக்கு தற்கும்
    பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப்
    பாரினை மயக்கு தற்கும்
    மண்ணிடை வாளை யேந்திப்
    பகைப்புலம் மாய்ப்ப தற்கும்
    எண்ணிலாத் தமிழர் உள்ளார்
    எனும்நிலை காண்ப தென்றோ?

    கண்களும் ஒளியும் போலக்
    கவின்மலர் வாசம் போலப்
    பெண்களும் ஆண்கள் தாமும்
    பெருந்தமிழ் நாடு தன்னில்,
    தண்கடல் நிகர்த்த அன்பால்
    சமானத்தர் ஆனார் என்ற
    பண்வந்து காதிற் பாயப்
    பருகுநாள் எந்த நாளோ?


    1.27. சங்க நாதம்


    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

    திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
    உடுக்களோடும்
    மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
    நாங்கள், ஆண்மைச்
    சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
    முழங்கு சங்கே!

    சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
    தீராதி தீரரென் றூதூது சங்கே!
    பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
    சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

    வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
    வெற்றித் தோள்கள்!
    கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
    எங்கள் உள்ளம்!
    வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
    எங்கள் மூச்சாம்!
    எங்கள் வாழ்வும்...


    1.28. தமிழ்க் கனவு


    தமிழ்நா டெங்கும் தடபுடல்! அமளி!!
    பணமே எங்கணும் பறக்குது விரைவில்
    குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!!
    தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார்,
    ஓடினார், ஓடினார், ஓடினார் நடந்தே!
    ஆயிரம் ஆயிரத் தைந்நூறு பெண்கள்
    ஒளிகொள் விழியில் உறுதி காட்டி
    இறக்கை கட்டிப் பறக்கின் றார்கள்!
    ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உத்ஸாகம்!
    சமுத்திரம் போல அமைந்த மைதானம்!
    அங்கே கூடினார் அத்தனை பேரும்!
    குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்!
    வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்!
    உரக்கக் கேட்டான்: யுஉயிரோ நம்தமிழ்?ரு
    அகிலம் கிழிய யுஆம்!ஆம்!ரு என்றனர்!!
    ஒற்றுமை என்றான்; நற்றேன் என்றனர்.
    உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
    தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
    சிங்கப் புலவரைச் சேர்த்தமைத் தார்கள்!
    உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத் தையெலாம்
    கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
    சுடர்க்கவி தொடங்கினர்! பறந்தது தொழும்பு!
    கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்,
    வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்,
    தொழில்நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்!
    காற்றி லெலாம் கலந்தது கீதம்!
    சங்கீத மெலாம் தகத்தகா யத்தமிழ்!
    காதலெலாம் தமிழ் கனிந்த சாறு!
    கண்ணெதிர் தமிழக் கட்டுடல் வீரர்கள்!
    காதல் ததும்பும் கண்ணா ளன்றனைக்
    கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால்
    புகழ்ந்தா ளென்று பொறாமல் சோர்ந்து
    வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன்.
    அந்தோ! அந்தோ! பழய
    நைந்த தமிழரொடு நானிருந்தேனே!


    பெண்ணுலகு



    1.29. பெண்களைப்பற்றிப் பெர்னாட்ஷா


    புவிப்பெரியான் ஜார்ஜ்பெர்னாட் ஷாவுரைத்த
    பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில்உள்ளீர்!
    புஉவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
    உதவுபவள் பெரும்பாலும் மனைவிஆவாள்!
    அவளாலே மணவாளன் ஒழுங்குபெற்றான்!
    அவளாலே மணவாளன் சுத்திபெற்றான்!மு
    குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
    குள்ளர்களே கேட்டீரோ ஷாவின்பேச்சை!

    அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
    அவனடையும் தீமையையார் அறியக்கூடும்?
    கவலையுற ஆடவர்கள் நாளும்செய்யும்
    கணக்கற்ற ஊழல்களை யெல்லாம்அந்த
    நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்!
    நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
    சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
    சூக்ஷுமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!

    கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
    கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
    புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
    புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
    வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
    மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
    இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
    இரண்டுருளை யால்நடக்கும் இன்பவாழ்க்கை!


    1. 30. கைம்மைப் பழி


    கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு
    வேரிற் பழுத்த பலா - மிகக்
    கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்
    வடிக்கின்ற வட்ட நிலா!

    சீரற் றிருக்குதையோ குளிர் தென்றல்
    சிறந்திடும் பூஞ் சோலை - சீ
    சீஎன் றிகழ்ந்திடப் பட்டதண்ணே நறுஞ்
    சீதளப் பூ மாலை.

    நாடப் படாதென்று நீக்கிவைத் தார்கள்
    நலஞ்செய் நறுங் கனியைக் - கெட்ட
    நஞ்சென்று சொல்லிவைத் தார்எழில் வீணை
    நரம்புதரும் தொனியை.

    சூடப் படாதென்று சொல்லிவைத் தார்தலை
    சூடத்தகும் க்ரீ டத்தை - நாம்
    தொடவும் தகாதென்று சொன்னார் நறுந்தேன்
    துவைந்திடும் பொற் குடத்தை!

    இன்ப வருக்கமெல் லாம்நிறை வாகி
    இருக்கின்ற பெண்கள் நிலை - இங்
    கிவ்வித மாக இருக்குதண்ணே! இதில்
    யாருக்கும் வெட்க மிலை!

    தன்கண வன்செத்து விட்டபின் மாது
    தலையிற்கைம் மைஎன ஓர் - பெருந்
    துன்பச் சுமைதனைத் தூக்கிவைத் தார்;பின்பு
    துணைதேட வேண்டாம் என் றார்.

    துணைவி இறந்தபின் வேறு துணைவியைத்
    தேடுமோர் ஆடவன் போல் - பெண்ணும்
    துணைவன் இறந்தபின் வேறு துணைதேடச்
    சொல்லிடு வோம்புவி மேல்.

    யுகணைவிடு பட்டதும் லட்சியம் தேடும்ரு நம்
    காதலும் அவ் வாறே - அந்தக்
    காதற்கணை தொடுக்காத உயிர்க்குலம்
    எங்குண்டு சொல் வேறே?

    காதல் இல்லாவிடம் சூனியமாம் புவி
    காதலினால் நடக்கும் - பெண்கள்
    காதலு ளத்தைத் தடுப்பது வாழ்வைக்
    கவிழ்க்கின் றதை நிகர்க்கும்.

    காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட
    கைம்மையைத் தூர்க்கா தீர்! - ஒரு
    கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச்
    சாத்திரம் பார்க்கா தீர்!


    1.31. கைம்மைக் கொடுமை


    கண்கள் நமக்கும் உண்டு - நமக்குக்
    கருதும் வன்மை யுண்டு
    மண்ணிடைத் தேசமெல்லாம் - தினமும்
    வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
    எண்ண இயலாத - புதுமை
    எதிரிற் காணுகின்றோம்
    கண்ணிருந் தென்னபயன்? - நமக்குக்
    காதிருந் தென்னபயன்?

    வானிடை ஏறுகின்றார் - கடலை
    வசப் படுத்துகின்றார்
    ஈனப் பொருள்களிலே - உள்ளுறை
    இனிமை காணுகின்றார்
    மேனிலை கொள்ளுகின்றார் - நாமதை
    வேடிக்கை பார்ப்பதல்லால்
    ஊன்பதைத்தே அவைபோல் - இயற்ற
    உணர்ச்சி கொள்வதில்லை.

    புழுதி, குப்பை,உமி - இவற்றின்
    புன்மைதனைக் களைந்தே
    பழரசம் போலே - அவற்றைப்
    பயன் படுத்துகின்றார்!
    எழுதவும் வேண்டா - நம்நிலை
    இயம்பவும் வேண்டா!
    அழகிய பெண்கள் - நமக்கோ
    அழுகிய பழத்தோல்!

    கைம்மை எனக்கூறி - அப்பெரும்
    கையினிற் கூர்வேலால்
    நம்மினப் பெண்குலத்தின் - இதய
    நடுவிற் பாய்ச்சுகின்றோம்.
    செம்மை நிலையறியோம் - பெண்களின்
    சிந்தையை வாட்டுகின்றோம்;
    இம்மை இன்பம்வேண்டல் - உயிரின்
    இயற்கை என்றறியோம்.

    கூண்டிற் கிளிவளர்ப்பார் - இல்லத்தில்
    குக்கல் வளர்த்திடுவார்,
    வேண்டியது தருவார்; - அவற்றின்
    விருப்பத்தை யறிந்தே!
    மாண்டவன் மாண்டபின்னர் - அவனின்
    மனைவியின் உளத்தை
    ஆண்டையர் காண்பதில்லை - ஐயகோ,
    அடிமைப் பெண்கதியே!


    1.32. மூடத் திருமணம்


    முல்லை சூடி நறுமணம் முழுகிப்
    பட்டுடை பூண்டு பாலொடு பழங்கள்
    ஏந்திய வண்ணம் என்னருமை மகள்
    தனது கணவனும் தானு மாகப்
    பஞ்சனை சென்று பதைப்புறு காதலால்
    ஒருவரை ஒருவர் இழுத்தும் போர்த்தும்,
    முகமல ரோடு முகமலர் ஒற்றியும்,
    இதழோடு இதழை இனிது சுவைத்தும்,
    நின்றும் இருந்தும் நேயமோடு ஆடியும்,
    பிணங்கியும், கூடியும் பெரிது மகிழ்ந்தே
    இன்பத்துறையில் இருப்பர்ரு என்று எண்ணினேன்.
    இந்த எண்ணத்தால் இருந்தேன் உயிரோடு!
    பாழும் கப்பல் பாய்ந்து வந்து
    என்மகள் மருகன் இருக்கும் நாட்டில்
    என்னை இறக்கவே, இரவில் ஒருநாள்
    என்மகள் மருகன் இருவரும் இருந்த
    அறையோ சிறிது திறந்து கிடந்ததை
    நள்இராப் பொழுதில் நான்கண்ட போதில்
    இழுத்துச் சாத்த என்கை சென்றது;
    கழுத்தோ கதவுக்கு உட்புறம் நீண்டது!
    கண்களோ மருகனும் மகளும் கனிந்து
    காதல் விளைப்பதைக் காண ஓடின!
    வாயின் கடையில் எச்சில் வழியக்
    குறட்டை விட்டுக் கண்கள் குழிந்து
    நரைத்தலை சோர்ந்து, நல்லுடல் எலும்பாய்ச்
    சொந்த மருகக் கிழவன் தூங்கினான்!
    இளமை ததும்ப, எழிலும் ததும்பக்
    காதல் ததும்பக் கண்ணீர் ததும்பி
    என்மகள் கிழவ னருகில் இருந்தாள்.
    சிவந்த கன்னத்தால் விளக்கொளி சிவந்தது!
    கண்ணீர்ப் பெருக்கால் கவின்உடை நனைத்தாள்!
    தொண்டு கிழவன் விழிப்பான் என்று
    கெண்டை விழிகள் மூடாக் கிளிமகள்
    காதலும் தானும் கனலும் புழுவுமாய்
    ஏங்கினாள்; பின்பு வெடுக்கென்று எழுந்தாள்.
    சர்க்கரைச் சிமிழியைப் பாலிற் சாய்த்தாள்.
    செம்பை எடுத்து வெம்பி அழுதாள்.
    எதையோ நினைத்தாள்! எதற்கோ விழித்தாள்!
    உட்கொளும் தருணம் ஓடிநான் பிடுங்கினேன்.
    பாழுந் தாயே! பாழுந் தாயே!
    என்சாவுக்கே உனை இங்கு அழைத்தேன்!
    சாதலைத் தடுக்கவோ தாய்எமன் வந்தாய்?
    என்றுஎனைத் தூற்றினாள். இதற்குள் ஓர்பூனை
    சாய்ந்த பாலை நக்கித் தன்தலை
    சாய்ந்து வீழ்ந்து செத்தது கண்டேன்.
    மண்ணாய்ப் போக! மண்ணாய்ப் போக!
    மனம்பொருந் தாமணம் மண்ணாய்ப் போக!
    சமூகச் சட்டமே! சமூக வழக்கமே!
    நீங்கள், மக்கள் அனைவரும்
    ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே!


    1.33. எழுச்சியுற்ற பெண்கள்


    மேற்றிசையில் வானத்தில் பொன்னு ருக்கு
    வெள்ளத்தில் செம்பருதி மிதக்கும் நேரம்!
    வேற்கண்ணி யாளொருத்தி சோலை தன்னில்
    விளையாட நின்றிருந்தாள் மயிலைப் போல!
    காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்
    கனியடித்துக் கொண்டுசெலும் செல்வப் பிள்ளை
    ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட
    அவளிடத்தே சிலசொன்னான். பின்னுஞ் சொல்வான்:

    விரிந்தஒரு வானத்தின் ஒளிவெள் ளத்தை
    விரைந்துவந்து கருமேகம் விழுங்கக் கூடும்!
    இருந்தவெயில் இருளாகும் ஒருக ணத்தில்!
    இதுஅதுவாய் மாறிவிடும் மறுக ணத்தில்.
    தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றே யொன்று!
    தெளிந்தஓர் உள்ளத்தில் எழுந்த காதல்
    பருந்துவந்து கொத்துமென்றும் தணிவ தில்லை;
    படைதிரண்டு வந்தாலும் சலிப்ப தில்லை!

    கன்னத்தில் ஒருமுத்தம் வைப்பாய் பெண்ணே,
    கருதுவதிற் பயனில்லை; தனியாய் நின்று
    மின்னிவிட்டாய் என்மனதில்! பொன்னாய்ப் பூவாய்
    விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னான்.
    கன்னியொரு வார்த்தையென்றாள். என்ன வென்றான்;
    கல்வியற்ற மனிதனைநான் மதியேன் என்றாள்.
    பன்னூற்பண் டிதனென்று தன்னைச் சொன்னான்.
    பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்:

    பெருங்கல்விப் பண்டிதனே உனக்கோர் கேள்வி;
    பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ ? என்றாள்.
    தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
    தராவிடில்நான் மேற்கொண்டால் என்ன வென்றாள்.
    திருமணமா காதவள்தன் பெற்றோ ரின்றிச்
    செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
    மருவஅழைக் கின்றாயே, நானும் என்றன்
    மாதா பிதாவின்றி விடைசொல் வேனா?

    என்றுரைத்தாள். இதுகேட்டுச் செல்வப் பிள்ளை
    என்னேடி, இதுஉனக்குத் தெரிய வில்லை;
    மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில் மட்டும்
    மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.
    என்மனது வேறொருவன் இடத்தி லென்றே
    இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள்.
    உன்நலத்தை இழுக்கின்றாய்; வலிய நானே
    உனக்களிப்பேன் இன்பமென நெருங்க லானான்!

    அருகவளும் நெருங்கிவந்தாள்; தன்மேல் வைத்த
    ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்கு முன்னே
    ஒருகையில் உடைவாளும் இடது கையில்
    ஓடிப்போ! என்னுமொரு குறிப்பு மாகப்
    புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்:
    புனிதத்தால் என்காதல் பிறன் மேலென்று
    பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தெளிந்த காதல்
    படைதிரண்டு வந்தாலும் சலியா தென்றாள்.

    ஓடினான் ஓடினான் செல்வப் பிள்ளை
    ஓடிவந்து மூச்சு விட்டான் என்னிடத்தில்.
    கூடிஇரு நூறுபுலி எதிர்த்த துண்டோ ?
    கொலையாளி யிடமிருந்து மீண்ட துண்டோ ?
    ஓடிவந்த காரணத்தைக் கேட்டேன். அன்னோன்
    உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டு விட்டேன்.
    கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சி தாங்கக்
    குலுங்க நகைத் தேயுரைத்தேன் அவனிடத்தில்:

    செல்வப்பிள்ளாய்! இன்று புவியின் பெண்கள்
    சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!
    கொல்லவந்த வாளைநீ குறைசொல் லாதே!
    கொடுவாள்போல் மற்றொருவாள் உன் மனைவி
    மெல்லிடையில் நீகாணாக் காரணத் தால்,
    விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப்பெண் கள்மேல்!
    பொல்லாத மானிடனே, மனச்சான் றுக்குள்
    புகுந்துகொள்வாய்! நிற்காதே! என்றேன்; சென்றான்.


    1.34. குழந்தை மணத்தின் கொடுமை


    ஏழு வயதே எழிற்கருங் கண்மலர்!
    ஒருதா மரைமுகம்! ஒருசிறு மணியிடை!!
    சுவைத் தறியாத சுவைதருங் கனிவாய்!
    இவற்றை யுடைய இளம்பெண் அவள்தான்,
    கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு,
    தாவாச் சிறுமான், மோவா அரும்பு!
    தாலி யறுத்துத் தந்தையின் வீட்டில்
    இந்தச் சிறுமி யிருந்திடு கின்றாள்;
    இவளது தந்தையும் மனைவியை யிழந்து
    மறுதார மாய்ஓர் மங்கையை மணந்தான்.
    புதுப்பெண் தானும் புதுமாப் பிளையும்
    இரவையே விரும்பி ஏறுவர் கட்டிலில்!
    பகலைப் போக்கப் பந்தா டிடுவார்!
    இளந்தலைக் கைம்பெண் இவைகளைக் காண்பாள்!
    தனியாய் ஒருநாள் தன்பாட் டியிடம்
    தேம்பித் தேம்பி அழுத வண்ணம்
    ஏழு வயதின் இளம்பெண் சொல்லுவாள்:
    என்னை விலக்கி என்சிறு தாயிடம்
    தந்தை கொஞ்சுதல் தகுமோ? தந்தை
    அவளை விரும்பி, அவள் தலைமீது
    பூச்சூடு கின்றார்; புறக்கணித் தார்எனை!
    தாமும் அவளும் தனியறை செல்வார்;
    நான்ஏன் வெளியில் நாய்போற் கிடப்பது?
    அவருக்கு நான்மகள்! அவர்எதிர் சென்றால்,
    நீபோ! என்று புருவம் நெறிப்பதோ?
    பாட்டி மடியிற் படுத்துப் புரண்டே
    இவ்வாறு அழுதாள் இளம்பூங் கொடியாள்.
    இந்நிலைக்கு இவ்வாறு அழுதாள் - இவளது
    பின்நிலை எண்ணிப் பாட்டி பெரிதும்
    அழுத கண்ணீர் வெள்ளம், அந்தக்
    குழந்தை வாழ்நாட் கொடுமையிற் பெரிதே.


    1.35. பெண்ணுக்கு நீதி


    கல்யாணம் ஆகாத பெண்ணே! - உன்
    கதிதன்னை நீநிச் சயம்செய்க கண்ணே!
    கல்யாணம் ஆகாத..

    வல்லமை பேசியுன் வீட்டில் - பெண்
    வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;
    நல்ல விலை பேசுவார் - உன்னை
    நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்,
    கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்
    கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்;
    வல்லி உனக்கொரு நீதி - இந்த
    வஞ்சகத் தரகற்கு நீஅஞ்ச வேண்டாம்.
    கல்யாணம் ஆகாத..

    பெற்றவ ருக்கெஜ மானர் - எதிர்
    பேசவொண் ணாதவர் ஊரினில் துஷ்டர்,
    மற்றும் கடன் கொடுத்தோர்கள் - நல்ல
    வழியென்று ஜாதியென் றேயுரைப் பார்கள்;
    சுற்றத்தி லேமுதி யோர்கள் - இவர்
    சொற்படி உன்னைத் தொலைத்திடப் பார்ப்பார்.
    கற்றவளே ஒன்று சொல்வேன் - உன்
    கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!
    கல்யாணம் ஆகாத..

    தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில்
    தள்ளி யடைக்கப் படுங்குதி ரைக்கும்
    கனைத்திட உத்தர வுண்டு - வீட்டில்
    காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்;
    கனத்தஉன் பெற்றோரைக் கேளே! - அவர்
    கல்லொத்த நெஞ்சையுன் கண்ணீரி னாலே
    நனைத்திடு வாய்அதன் மேலும் - அவர்
    ஞாயம் தராவிடில் விடுதலை மேற்கொள்!
    கல்யாணம் ஆகாத..

    மாலைக் கடற்கரை யோரம் - நல்ல
    வண்புனல் பாய்ந்திடும் மாநதி தீரம்
    காலைக் கதிர்சிந்து சிற்றூர் - கண்
    காட்சிகள் கூட்டங்கள் பந்தாடு சாலை
    வேலை ஒழிந்துள்ள நேரம் - நீ
    விளையாடுவாய் தாவி விளையாடு மான்போல்!
    கோலத்தினைக் கொய்வ துண்டோ ? - பெண்கள்
    கொய்யாப் பழக்கூட்டம் என்றே உரைப்பாய்.
    கல்யாணம் ஆகாத..


    1.36. கைம்பெண் நிலை


    கண்போற் காத்தேனே - என்னருமைப்
    பெண்ணை நான்தானே
    கண்போற் காத்தேனே..

    மண்ணாய்ப் போன மாப் பிள்ளை
    வந்ததால் நொந்தாள் கிள்ளை
    மணமக னானவன் - பிணமக னாயினன்
    குணவதி வாழ்க்கைஎவ் - வணமினி ஆவது?
    கண்போற் காத்தேனே..

    செம்பொற் சிலை,இக் காலே
    கைம்பெண் ணாய்ப்போன தாலே
    திலகமோ, குழலில் - மலர்களோ அணியின்
    உலகமே வசைகள் - பலவுமே புகலும்
    கண்போற் காத்தேனே..

    பொன்னுடை பூஷ ணங்கள்
    போக்கினா லேஎன் திங்கள்!
    புகினும் ஓர்அகம் - சகுனம் தீதென
    முகமும் கூசுவார் - மகளை ஏசுவார்!
    கண்போற் காத்தேனே..

    தரையிற் படுத்தல் வேண்டும்
    சாதம் குறைத்தல் வேண்டும்
    தாலி யற்றவள் - மேல ழுத்திடும்
    வேலின் அக்ரமம் - ஞாலம் ஒப்புமோ?
    கண்போற் காத்தேனே..

    வருந்தாமற் கைம்பெண் முகம்
    திருந்துமோ இச் சமுகம்?
    மறுமணம் புரிவது - சிறுமைஎன் றறைவது
    குறுகிய மதியென - அறிஞர்கள் மொழிகுவர்.
    கண்போற் காத்தேனே..


    1.37. இறந்தவன்மேற் பழி


    அந்திய காலம் வந்ததடியே! - பைந்தொடியே!
    இளம்பிடியே! - பூங்கொடியே!

    சிந்தை ஒன்றாகிநாம் இன்பத்தின் எல்லை
    தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தத் தொல்லை
    வந்ததே இனிநான் வாழ்வதற் கில்லை
    மனத்தில் எனக்கிருப்ப தொன்றே - அதைஇன்றே
    குணக்குன்றே! - கேள்நன்றே!
    அந்திய காலம்..

    கடும்பிணி யாளன்நான் இறந்தபின், மாதே!
    கைம்பெண்ணாய் வருந்தாதே, பழிஎன்றன் மீதே,
    அடஞ்செய்யும் வைதிகம் பொருட்படுத் தாதே!
    ஆசைக் குரியவனை நாடு - மகிழ்வோடு
    தார்சூடு - நலம்தேடு!
    அந்திய காலம்..

    கற்கண்டு போன்றபெண் கணவனை இழந் தால்
    கசந்தபெண் ஆவது விந்தைதான் புவி மேல்!
    சொற்கண்டு மலைக்காதே உன்பகுத் தறி வால்
    தோஷம், குணம் அறிந்து நடப்பாய் - துயர்கடப்பாய்
    துணைபிடிப்பாய் - பயம்விடுப்பாய்.
    அந்திய காலம்..


    1.38. கைம்மைத் துயர்


    பெண்கள்துயர் காண்பதற்கும் கண்ணிழந்தீரோ!
    கண்ணிழந்தீரோ! உங்கள் கருத்திழந்தீரோ!
    பெண்கள்துயர்..

    பெண்கொடிதன் துணையிழந்தால்
    பின்புதுணை கொள்வதிலே
    மண்ணில்உமக் காவதென்ன வாழ்வறிந்தோரே?
    வாழ்வறிந்தோரே! மங்கை மாரைஈன்றோரே!
    பெண்கள்துயர்..

    மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்
    மங்கைநல்லாள் என்னசெய்வாள்? அவளைநீங்கள்
    ஆலையிட்ட கரும்பாக்கி உலகஇன்பம்
    அணுவளவும் அடையாமல் சாகச்செய்தீர்!

    பெண்டிழந்த குமரன்மனம்
    பெண்டுகொள்ளச் செய்யும்எத்தனம்
    கண்டிருந்தும் கைம்பெண்என்ற கதைசொல்லலாமோ?
    கதைசொல்லலாமோ? பெண்கள் வதைகொள்ளலாமோ?
    பெண்கள்துயர்..

    துணையிழந்த பெண்கட்குக் காதல்பொய்யோ?
    சுகம்வேண்டா திருப்பதுண்டோ அவர்கள்உள்ளம்?
    அணையாத காதலினை அணைக்கச்சொன்னீர்
    அணைகடந்தால் உங்கள்தடை எந்தமூலை?

    பெண்ணுக்கொரு நீதிகண்டீர்
    பேதமெனும் மதுவையுண்டீர்
    கண்ணிலொன்றைப் பழுதுசெய்தால் கான்றுமிழாதோ?
    கான்றுமிழாதோ? புவிதான் பழியாதோ?
    பெண்கள்துயர்..


    1. 39. கைம்மை நீக்கம்


    நீஎனக்கும், உனக்கு நானும் - இனி
    நேருக்குநேர் தித்திக்கும் பாலும், தேனும்
    நீ எனக்கும்..

    தூய வாழ்வில் இதுமுதல் நமதுளம்
    நேய மாக அமைவுற உறுதி சொல்! அடி!
    நீ எனக்கும்..

    கைம்பெண்என் றெண்ணங் கொண்டே
    கலங்கினா யோகற் கண்டே?
    காடு வேகுவதை ஒரு மொழியினில்
    மூடு போட முடியுமோ உரையடி? ததி
    நீ எனக்கும்..

    பைந்தமி ழைச்சீ ராக்கக்
    கைம்மைஎன் னும்சொல் நீக்கப்
    பறந்து வாடி அழகிய மயிலே!
    இறந்த கால நடைமுறை தொலையவே.
    நீ எனக்கும்..

    பகுத்தறி வான மன்று
    பாவை நீஏறி நின்று
    பாரடீ உன் எதிரினிற் பழஞ்செயல்
    கோரமாக அழிந் தொழி குவதையே.
    நீ எனக்கும்..

    கருத்தொரு மித்த போது
    கட்டுக்கள் என்ப தேது?
    கைம்மை கூறும் அதிசய மனிதர்கள்
    செம்மை யாகும் படிசெய மனதுவை! அடி!
    நீ எனக்கும்..


    1.40. தவிப்பதற்கோ பிள்ளை?


    விளக்குவைத்த நேரத்தில் என்வேலைக் காரி
    வெளிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து
    களிப்புடனே பிரசவந்தான் ஆய்விட்ட தென்றாள்!
    காதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்!
    உளக்கலசம் வழிந்துவரும் சந்தோஷத் தாலே
    உயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன். நன்றாய்
    வளர்த்துவரக் குழந்தைக்கு வயதுமூன் றின்பின்
    மனைவிதான் மற்றுமொரு கருப்பமுற லானாள்.

    பெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று
    பிறக்குமா என்றிருந்தேன். அவ்வாறே பெற்றாள்!
    கண்ணழகும் முகஅழகும் கண்டுபல நாட்கள்
    கழிக்கையிலே மற்றொன்றும் பின்னொன்றும் பெற்றாள்!
    எண்ணுமொரு நால்வரையும் எண்ணி யுழைத்திட்டேன்.
    எழில்மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்!
    உண்ணுவதை நானுண்ண மனம்வருவ தில்லை;
    உண்ணாமலே மனைவி பிள்ளைகளைக் காத்தாள்.

    வரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்!
    வாராத நினைவெல்லாம் வந்துவந்து தோன்றும்!
    துரும்பேனும் என்னிடத்தில் சொத்தில்லை! நோயால்
    தொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டாள் தொல்லை!
    அரும்பாடு மிகப்படவும் ஆக்ஷேப மில்லை;
    ஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி?
    இரும்பாநான்? செத்துவிட்டால் என்பிள்ளை கட்கே
    என்னகதி? ஏன்பெற்றேன்? எனநினைக்கு நாளில்,

    ஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில்
    உணவருந்திப் படுக்கையொடு தலையணையும் தூக்கி
    தெருத்திண்ணை மேல்இட்டேன்! நித்திரையும் போனேன்!
    சிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன்
    அருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள்.
    அயர்ந்தீரோ என்றுரைத்தாள்! மலர்க்கரத்தாள் தொட்டாள்!
    தெருவினிலேபனி என்றாள். ஆமென்று சொன்னேன்;
    தெரிந்துகொண்டேன் அவள்உள்ளம். வார்த்தையென்ன தேவை!

    மனையாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம்
    மவுனத்தில் ஆழ்ந்திருந்தோம். வாய்த்ததொரு கனவு:
    கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ!
    கதியற்ற குழந்தைகளோர் கோடான கோடி
    மனம்பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம்
    வந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்;
    இனத்தவரின் குழந்தைகளோ, ஏ!என்று கெஞ்ச
    ஏறிவந்த சீமான்கள் சீ!என்று போனார்.

    கனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்;
    காதலெனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோ ம். மெய்யாய்த்
    தினம்நாங்கள் படும்பாட்டை யாரறியக் கூடும்?
    சீ!சீ!!சீ!!! இங்கினியும் காதல் ஒருகேடா?
    எனமுடித்தோம். ஆனாலும் வீட்டுக்குள் சென்றோம்.
    இன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ !
    தனியறையில் கண்ணொடுகண் சந்தித்த ஆங்கே
    தடுக்கிவிழுந் தோம்காதல் வெள்ளத்தின் உள்ளே!

    பத்துமா தம்செல்லப் பகற்போதில் ஓர்நாள்,
    பட்டகடன் காரர்வந்து படுத்துகின்ற நேரம்,
    சித்தமெலாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித்
    திடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து
    முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல
    முகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளைபெற்றாள் என்றாள்.
    தொத்துநோய், எழ்மை, பணக்காரர் தொல்லை
    தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!

    காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
    கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?
    சாதலுக்கோ பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?
    சந்தான முறைநன்று; தவிர்க்குமுறை தீதோ?
    காதலுத்துக் கண்ணலுத்துக் கைகள் அலுத்துக்
    கருத்தலுத்துப் போனோமே! கடைத்தேற மக்கள்
    ஓதலுக்கெல் லாம்மறுப்பா? என்னருமை நாடே,
    உணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே.


    1.41. ஆண் குழந்தை தாலாட்டு


    ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
    ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
    காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
    நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
    ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
    ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
    உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
    பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
    சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
    கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!
    நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்
    சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்
    கனலேற்ற வந்த களிறே, எனது
    மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!
    தேக்குமரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே
    ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில்,
    பொன்முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச்
    சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்!
    அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
    கொள்ளைநோய் போல்மதத்தைக் கூட்டியழும் வைதிகத்தைப்
    போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்
    வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா!
    வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்
    மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும்
    மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
    ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு!
    எல்லாம் அவன்செயலே என்று பிறர்பொருளை
    வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்,
    காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்
    வேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும்,
    மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த
    தேனின் பெருக்கே,என் செந்தமிழே கண்ணுறங்கு!


    1.42. பெண் குழந்தை தாலாட்டு


    ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
    ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
    சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
    காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!
    வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
    பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
    நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
    தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!
    வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
    கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
    அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
    சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!
    மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
    கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
    மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
    காடு, மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
    வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
    தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
    புண்ணிற் சரம்விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக்
    கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!
    தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
    உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
    எல்லாம் கடவுள்செயல் என்று துடைநடுங்கும்
    பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!
    வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கை
    கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
    சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
    நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!


    புதிய உலகம்



    1.43. உலக ஒற்றுமை


    தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
    சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
    சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோ ன்
    தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
    கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
    கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்!
    தென்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
    சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!

    ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
    அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க
    வாயடியும் கையடியும் வளரச் செய்வார்!
    மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோ ம்!
    தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
    தொல்லுலக மக்களெலாம் யுஒன்றேரு என்னும்
    தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
    சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே.


    1. 44. பேரிகை


    துன்பம் பிறர்க்கு!நல் இன்பம் தமக்கெனும்
    துட்ட மனோபாவம்,
    அன்பினை மாய்க்கும்; அறங்குலைக் கும்;புவி
    ஆக்கந்தனைக் கெடுக்கும்!
    வன்புக் கெலாம் அதுவேதுணை யாய்விடும்
    வறுமை யெலாம்சேர்க்கும்!
    இன்பம் எல்லார்க்கும் என்றேசொல்லிப் பேரிகை
    எங்கும் முழங்கிடுவாய்!

    தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்
    தாரணி என்றவண்ணம்,
    தீமைக்கெல் லாம்துணை யாகும்; இயற்கையின்
    செல்வத்தையும் ஒழிக்கும்!
    தேமலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும்
    சித்தத்திலே சேர்ப்போம்!
    க்ஷேமம் எல்லார்க்கும் என்றேசொல்லிப் பேரிகை
    செகம் முழங்கிடுவாய்!

    நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
    நச்சு மனப்பான்மை,
    தொல்புவி மேல்விழும் பேரிடியாம்; அது
    தூய்மைதனைப் போக்கும்!
    சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம்
    சூழத் தகாதுகண்டாய்!
    செல்வங்கள் யார்க்கும் என்றே சொல்லிப் பேரிகை
    திக்கில் முழங்கிடுவாய்!


    1. 45. தளை அறு!


    கடவுள்கடவுள் என்றெதற்கும்
    கதறுகின்ற மனிதர்காள்!
    கடவுள்என்ற நாமதேயம்
    கழறிடாத நாளிலும்
    உடைமையாவும் பொதுமையாக
    உலகுநன்று வாழ்ந்ததாம்;
    கடையர்ருசெல்வர் என்றதொல்லை
    கடவுள்பேர் இழைத்ததே!

    உடைசுமந்த கழுதைகொண்
    டுழைத்ததோர் நிலைமையும்
    உடைமைமுற்றும் படையைஏவி
    அடையும்மன்னர் நிலைமையும்
    கடவுளாணை யாயின்,அந்த
    உடைவெளுக்கும் தோழரைக்
    கடவுள்தான்முன் னேற்றுமோ?தன்
    கழுதைதான் முன்னேற்றுமோ?

    ஊரிலேனும் நாட்டிலேனும்
    உலகிலேனும் எண்ணினால்
    நீர்நிறைந்த கடலையொக்கும்
    நேர்உழைப் பவர்தொகை!
    நீர்மிதந்த ஓடமொக்கும்
    நிறைமுதல்கொள் வோர்தொகை!
    நேரிற்சூறை மோதுமாயின்
    தோணிஓட்டம் மேவுமோ?

    தொழிலறிந்த ஏழைமக்கள்
    தொழில்புரிந்து செல்வர்பால்
    அழிவிலாமு தல்கொடுக்க
    அம்முதற் பணத்தினால்
    பழிமிகுந்த அரசமைத்துப்
    படைகள்தம்மை ஏவியே
    தொழில்புரிந்த ஏழைமக்கள்
    சோற்றிலே மண்போடுவார்!

    நடவுசெய்த தோழர்கூலி
    நாலணாவை ஏற்பதும்
    உடலுழைப்பி லாதசெல்வர்
    உலகைஆண் டுலாவலும்
    கடவுளாணை என்றுரைத்த
    கயவர்கூட்ட மீதிலே
    கடவுளென்ற கட்டறுத்துத்
    தொழிலுளாரை ஏவுவோம்.


    1.46. கூடித் தொழில் செய்க


    கூடித் தொழில்செய்தோர் கொள்ளைலா பம்பெற்றார்
    வாடிடும் பேதத்தால் வாய்ப்பதுண்டோ தோழர்களே!
    நாடிய ஓர்தொழில் நாட்டார் பலர்சேர்ந்தால்
    கேடில்லை நன்மை கிடைக்குமன்றோ தோழர்களே!
    சிறுமுதலால் லாபம் சிறிதாகும்; ஆயிரம்பேர்
    உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே!
    அறுபதுபேர் ஆக்கும் அதனை ஒருவன்
    பெறுவதுதான் சாத்தியமோ பேசிடுவீர் தோழர்களே!
    பற்பலபேர் சேர்க்கை பலம்சேர்க்கும்; செய்தொழிலில்
    முற்போக்கும் உண்டாகும் முன்னிடுவீர் தோழர்களே!
    ஒற்றைக்கை தட்டினால் ஓசை பெருகிடுமோ
    மற்றும் பலரால் வளம்பெறுமோ தோழர்களே!
    ஒருவன் அறிதொழிலை ஊரார் தொழிலாக்கிப்
    பெரும்பே றடைவதுதான் பெற்றிஎன்க தோழர்களே!
    இருவர் ஒருதொழிலில் இரண்டுநாள் ஒத்திருந்த
    சரிதம் அரிதுநம் தாய்நாட்டில் தோழர்களே!
    நாடெங்கும் வாழ்குவதிற் கேடொன்று மில்லைஎனும்
    பாடம் அதைஉணர்ந்தாற் பயன்பெறலாம் தோழர்களே!
    பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெலாம்
    கூடித் தொழில்செய்யும் கொள்கையினால் தோழர்களே!
    ஐந்துரூபாய்ச் சரக்கை ஐந்துபணத்தால் முடித்தல்
    சிந்தை ஒருமித்தால் செய்திடலாம் தோழர்களே!
    சந்தைக் கடையோநம் தாய்நாடு? லக்ஷம்பேர்
    சிந்தைவைத்தால் நம்தொழிலும் சிறப்படையும் தோழர்களே!
    வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
    கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் தோழர்களே!
    கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் இன்றுவரை
    மூடிய தொழிற்சாலை முக்கோடி தோழர்களே!
    கூடைமுறம் கட்டுநரும் கூடித் தொழில்செய்யின்
    தேடிவரும் செல்வம் சிறப்புவரும் தோழர்களே!


    1.47. தொழிலாளர் விண்ணப்பம்


    காடு களைந்தோம் - நல்ல
    கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
    நாடுகள் செய்தோம் - அங்கு
    நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
    வீடுகள் கண்டோ ம் - அங்கு
    வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
    பாடுகள் பட்டோ ம் - புவி
    பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.

    மலையைப் பிளந்தோம் - புவி
    வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்
    அலைகடல் மீதில் - பல்
    லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
    பலதொல் லையுற்றோம் - யாம்
    பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்
    உலையில் இரும்பை - யாம்
    உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.

    ஆடைகள் நெய்தோம் - பெரும்
    ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோ ம்;
    கூடை கலங்கள் - முதல்
    கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
    கோடையைக் காக்க - யாம்
    குடையளித் தோம்நல்ல நடையன்கள் செய்தோம்
    தேடிய பண்டம் - இந்தச்
    செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.

    வாழ்வுக் கொவ்வாத - இந்த
    வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்
    ஆழ்கடல் காடு - மலை
    அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
    ஈழை அசுத்தம் - குப்பை
    இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.
    சூழக் கிடந்தோம் - புவித்
    தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.

    கந்தை யணிந்தோம் - இரு
    கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
    மொந்தையிற் கூழைப் - பலர்
    மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
    சந்தையில் மாடாய் - யாம்
    சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
    சிந்தை மெலிந்தோம் - எங்கள்
    சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?

    மதத்தவன் தலைவீர்! - இந்த
    மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!
    குதர்க்கம் விளைத்தே - பெருங்
    கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!
    வதக்கிப் பிழிந்தே - சொத்தை
    வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
    நிதியின் பெருக்கம் - விளை
    நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!

    செப்புதல் கேட்பீர்! - இந்தச்
    செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
    கப்பல் களாக - இனித்
    தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
    இப்பொழு தேநீர் - பொது
    இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
    ஒப்ப டைப்பீரே - எங்கள்
    உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
    ஒப்படைப்பீரே!


    1.48. வாழ்வில் உயர்வுகொள்!


    சுயமரி யாதைகொள் தோழா! - நீ
    துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே!
    சுயமரி யாதைகொள் ..

    உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ
    உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்;
    துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று
    சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!
    அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
    ஆட்பட் டிருப்பவர் என்று சொல்வோரைப்
    பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்
    பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு!
    சுயமரி யாதைகொள் ..

    சேசு முகம்மது என்றும் - மற்றும்
    சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென்றும்,
    பேசி வளர்க்கின்ற போரில் - உன்
    பெயரையும் கூட்டுவார் நீஒப்ப வேண்டாம்!
    காசைப் பிடுங்கிடு தற்கே - பலர்
    கடவுளென் பார்!இரு காதையும் மூடு!
    கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
    கோயிலென் றால்ஒரு காதத்தி லோடு!
    சுயமரி யாதைகொள் ..

    கோயில் திருப்பணி என்பார் - அந்தக்
    கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
    வாயிலில் வந்துனைக் காசு - கேட்கும்
    வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
    வாயைத் திறக்கவும் சக்தி - இன்றி
    வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ
    தாயென்ற பாவனை யோடும் - உன்
    சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும்.
    சுயமரி யாதைகொள் ..

    கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
    கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
    கடவுள் புவிக்கவ தாரம் - அந்தக்
    கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
    கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
    கழுகொத்த பூசுரர், பரமாத்து மாக்கள்
    கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
    கதைகளி னாலும் சுகங்கண்ட துண்டா?
    சுயமரி யாதைகொள் ..

    அடிமை தவிர்த்ததும் உண்டோ ? - அன்றி
    ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்,
    மிடிமை தவிர்த்ததும் உண்டோ ? - அன்றி
    மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ ?
    குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக்
    கூட்டத்தை எண்ணாமல், கொடுந்தடி யர்க்கு
    மடங்கட்டி வைத்ததி னாலே - தம்பி!
    வசம்கெட்டுப் போனது நமதுநன் னாடு.
    சுயமரி யாதைகொள் ..

    உழைக்காத வஞ்சகர் தம்மை - மிக
    உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ?
    விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
    விளையாடும் திருடரைச் சாமிஎன் கின்றார்!
    அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
    அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
    முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர்
    முதலெழுத் தோதினும் மதியிருட் டாகும்!
    சுயமரி யாதைகொள் ..


    1. 49. மாண்டவன் மீண்டான்!


    ஆற்றோரம் தழைமரங்கள் அடர்ந்தஒரு தோப்பில்
    அழகான இளமங்கை ஆடுகின்றாள் ஊஞ்சல்!
    சேற்றுமண்ணால் திண்ணையிலே உட்கார்ந்து பொம்மை
    செய்துவிளை யாடுகின்றான் மற்றுமொரு பிள்ளை!
    ஏற்றிவைத்த மணிவிளக்கின் அண்டையிலே பாயில்
    இளஞ்சிசுவும் பெற்றவளும் கொஞ்சுகின்றார் ஓர்பால்!
    ஏற்றகடன் தொல்லையினால் நோய்கொண்ட தந்தை
    ஏ!என்று கூச்சலிட்டான்; நிலைதவறி வீழ்ந்தான்!

    அண்டைஅயல் மனிதரெல்லாம் ஓடிவந்தார். ஆங்கே
    அருந்துணைவி நாயகனின் முகத்தில்முகம் வைத்துக்
    கெண்டைவிழிப் புனல்சோர அழுதுதுடித் திட்டாள்;
    கீழ்க்கிடந்து மெய்சோர்ந்த நோயாளி தானும்
    தொண்டையிலே உயிரெழுப்பும் ஒலியின்றிக் கண்ணில்
    தோற்றமது குறைவுபடச் சுவாசம்மேல் வாங்க,
    மண்டைசுழ லக்கண்ணீர் வடித்துவடித் தழுதான்.
    மனமுண்டு வாயில்லை என்செய்வான் பாவம்!

    பேசாயோ வாய்திறந்து பெற்றெடுத்த உன்றன்
    பிள்ளைகளைக் கண்கொண்டு பாராயோ என்றன்
    வீசாத மணிஒளியே! என்றுரைத்தாள் மனைவி.
    விருப்பமதை இன்னதென விளம்பிடுக, என்று
    நேசரெலாம் கேட்டார்கள். கேட்டநோயாளி
    நெஞ்சினையும் விழிகளையும் தன்னிலையில் ஆக்கிப்
    பேசமுடி யாநிலையில் ஈனசுரத் தாலே
    பெண்டுபிள்ளை! பெண்டுபிள்ளை!! என்றுரைத்தான் சோர்ந்தான்!!!

    எதிர்இருந்தோர் இதுகேட்டார்; மிகஇரக்கங் கொண்டார்.
    இறப்பவனைத் தேற்றவெண்ணி ஏதேதோ சொன்னார்.
    இதுதேதி உன்கடனைத் தீர்க்கின்றோம் என்றார்.
    இருந்தநிலை மாறவில்லை மற்றொருவன் வந்து
    மதிவந்து விட்டதண்ணே நமதுசர்க்கா ருக்கு!
    புமக்களுக்குப் புவிப்பொருள்கள் பொதுமுவென்று சர்க்கார்
    பதிந்துவிட்டார் இனிப்பெண்டு பிள்ளைகளைப் பற்றிப்
    பயமில்லை! கவலையில்லை! மெய்யண்ணே, மெய்மெய்!!

    என்றுசொன்னான் தேற்றுமொழி, இறக்கின்ற மனிதன்
    இறக்குங்கால் கவலையின்றி இறக்கட்டும் என்று!
    நன்றிந்த வார்த்தைஅவன் காதினிலே பாய்ந்து
    நலிவுற்ற உள்ளத்தைப் புலியுளமாய்ச் செய்து
    சென்றஉயிர் செல்லாமல் செய்ததனால் அங்குச்
    செத்துவிட்ட அம்மனிதன் பொத்தெனவே குந்தி,
    இன்றுநான் சாவதற்கே அஞ்சவில்லை என்றான்!
    இறப்பதெனில் இனியெனக்குக் கற்கண்டென் றானே!


    1.50. ஆய்ந்து பார்!


    சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
    சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா?
    மாந்தரிற் சாதி வகுப்பது சரியா?
    மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?

    வாய்ந்தபோர்க் குறிபோல் மதக்குறி இனிதா?
    மனமொழி மெய்ஒன்றி மகிழுதல் இனிதா?
    ஆய்ந்துபார் நெஞ்சமே அமைதிதான் சிறப்பா?
    அண்டைவீட் டைப்பறிக்கும் சண்டைதான் சிறப்பா?

    காணுமா னிடரைக் கனம்செயல் முறையா?
    கடவுள் எனும்மயக்கில் கவிழ்ப்பது முறையா?
    மாணுறும் தன்னம்பிக்கை வளர்ப்பது நலமா?
    வயப்படும் பக்தியினால் பயப்படல் நலமா?

    வீணரைப் பணிவது மக்களின் கடனா?
    மேவும் உழைப்பினிலே ஏவுதல் கடனா?
    நாணு மூடவழக்கம் நாடுதல் பெரிதா?
    நல்லறி வென்னும்வழிச் செல்லுதல் பெரிதா?

    கோயிலுக் கொன்று கொடுத்திடல் அறமா?
    கோடி கொடுக்கும்கல்வி தேடிடல் அறமா?
    வாயிலில் வறியரை வளர்த்திடல் அன்போ?
    மடத்தில் வீணிற்பொருளைக் கொடுத்திடல் அன்போ?

    நாயிலுங் கடையாய் நலிவது மேலா?
    நல்லகூட் டுத்தொழில்கள் நாட்டிடல் மேலா?
    ஓய்வறி யார்உறங்க இடந்தரல் உயர்வா?
    ஊரை வளைக்கும்குரு மார்செயல் உயர்வா?

    மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா?
    மாதர்முன் னேற்றத்தால் மகிழ்வது மாண்பா?
    மேதினி துயர்ப்பட விரும்புதல் இதமா?
    விதவைக்கு மறுமணம் உதவுதல் இதமா?

    கோதையர் காதல்மணம் கொள்வது சீரோ?
    குழந்தைக்கு மணஞ்செய்து கொல்வது சீரோ?
    போதனையாற் பெண்கள் பொதுவெனல் கனமோ?
    பொட்டுக்கட்டும் வழக்கம் போக்குதல் கனமோ?

    பாழ்படும் பழமை சூழ்வது திறமா?
    பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா?
    தாழ்பவர் தம்மைத் தாழ்த்துதல் சால்போ?
    தனம்காப் பவர்தங்கள் இனம்காத்தல் சால்போ?

    ஆழ்வுறும் ஆத்திகம் வைதிகம் சுகமா?
    அகிலமேற் சமதர்மம் அமைப்பது சுகமா?
    சூழும் நற்பேதம் தொடர்வது வாழ்வோ?
    சுயமரி யாதையால் உயர்வது வாழ்வோ?


    1.51. மானிட சக்தி


    மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்
    வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு
    மானிடத் தன்மையை நம்பி - அதன்
    வன்மையி னாற்புவி வாழ்வுகொள் தம்பி!
    மானிடம் என்றொரு வாளும் - அதை
    வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
    வானும் வசப்பட வைக்கும் - இதில்
    வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்
    மானிடத் தன்மையைக் ..

    மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த
    வையத்திலே அவன் செய்த வரைக்கும்
    மானிடத் தன்மைக்கு வேறாய் - ஒரு
    வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
    மானிடம் என்பது புல்லோ? - அன்றி
    மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?
    கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு
    கடலை வசப்படச் செய்ததும் அதுதான்!
    மானிடத் தன்மையைக் ..

    மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு
    மானிடன் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;
    மானிடம் என்பது குன்று - தனில்
    வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
    மானிடருக் கினி தாக - இங்கு
    வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே
    வான்திசை எங்கணும் நீபார்! - வாழ்வின்
    வல்லமை யுமானிடத் தன்மைருஎன் றதேர்!
    மானிடத் தன்மையைக் ..


    1.52. முன்னேறு!


    சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
    தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை
    ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்
    ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!
    பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்
    பேசுசுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்!
    ஈதேகாண்! சமுகமே, யாம்சொன்ன வழியில்
    ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே.

    அண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற
    அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ?
    கொண்டு விட்டோ ம் பேரறிவு, பெருஞ்செயல்கள்
    கொழித்து விட்டோ ம் என்றிங்கே கூறுவார்கள்.
    பண்டொழிந்த புத்தன், ராமாநு ஞன்,மு
    கம்மது, கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச்
    சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை!
    சமூகமே ஏறுநீ, எம்கொள் கைக்கே!


    1.53. உலகப்பன் பாட்டு


    பகுத்தறிவு மன்றத்தில் உலகம்என்ற
    பழயமுத லாளியினை நிற்கவைத்து
    மிகுத்திருந்த உன்நன்செய், புன்செய்யாவும்
    வெகுகாலத் தின்முன்னே, மக்கள்யாரும்
    சுகித்திருக்கக் குத்தகைக்கு விட்டதுண்டோ ?
    சொல்!என்றேன்; உலகப்பன் ஆம்ஆம்என்றான்.
    வகுத்தஅந்தக் குத்தகைக்குச் சீட்டுமுண்டோ
    வாய்ச்சொல்லோ என்றுரைத்தேன். வாய்ச்சொல்என்றான்.

    குத்தகைக்கா ரர்தமக்குக் குறித்தஎல்லை
    குறித்தபடி உள்ளதுவா என்றுகேட்டேன்.
    கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள்
    கண்மூடி மக்களது நிலத்தையெல்லாம்
    கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்ததாலே
    கூலிமக்கள் அதிகரித்தார், என்னசெய்வேன்!
    பொத்தல்இலைக் கலமானார் ஏழைமக்கள்;
    புனல்நிறைந்த தொட்டியைப்போல் ஆனார்செல்வர்.

    அதிகரித்த தொகைதொகையாய்ச் செல்வமெல்லாம்
    அடுக்கடுகாய்ச் சிலரிடம்போய் ஏறிக்கொண்டு
    சதிராடு தேவடியாள் போல்ஆடிற்று!
    தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்;
    இதுஇந்நாள் நிலைஎன்றான் உலகப்பன்தான்!
    இந்நிலையி லிருப்பதனால் உலகப்பாநீ
    புதுக்கணக்குப் போட்டுவிடு; பொருளைஎல்லாம்
    பொதுவாக எல்லார்க்கும் குத்தகைசெய்.

    ஏழைமுத லாளியென்ப தில்லாமற்செய்
    என்றுரைத்தேன். உலகப்பன் எழுந்துதுள்ளி,
    ஆழமப்பா உன்வார்த்தை! உண்மையப்பா,
    அதற்கென்ன தடையப்பா, இல்லையப்பா;
    ஆழமப்பா உன்கருத்து, மெய்தானப்பா,
    அழகாயும் இருக்குதப்பா, நல்லதப்பா,
    தாழ்வுயர்வு நீங்குமப்பா, என்றுசொல்லித்
    தகதகென ஆடினான். நான்சிரித்து,

    ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப்பார்!
    ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பாரப்பா!
    தேடப்பா ஒருவழியை என்றுசொன்னேன்.
    செகத்தப்பன் யோசித்துச் சித்தம்சோர்ந்தான்.
    ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
    உதையயப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி
    ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!


    1.54. உலகம் உன்னுடையது!



    பள்ளம் பறிப்பாய், பாதா ளத்தின்
    அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!
    பள்ளந் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே,
    தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!
    தோளையும் உதட்டையும் தொங்கவை! ஈன
    உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!
    நக்கிக்குடி! அதை நல்லதென்று சொல்!
    தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும்
    தாழ்ந்துபோ! குனிந்து தரையைக் கெளவி
    ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!
    பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே,
    அழு!இளி! அஞ்சு! குனி! பிதற்று!
    கன்னங் கருத்த இருட்டின் கறையே!
    தொங்கும் நரம்பின் தூளே! இதைக்கேள்:
    மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!
    இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
    தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
    மீசையை முறுக்கி மேலே ஏற்று!
    விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
    நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை!
    உன்வீடு - உனது பக்கத்து வீட்டின்
    இடையில் வைத்த சுவரை இடித்து
    வீதிகள் இடையில் திரையை விலக்கி
    நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
    ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
    ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!
    ஏறி நின்று பாரடா எங்கும்!
    எங்கும் பாரடா இப்புவி மக்களை!
    பாரடா உனது மானிடப் பரப்பை!
    பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
    யுஎன்குலம்ரு என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
    மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
    அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
    அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு.
    மானிட சமுத்திரம் நானென்று கூவு!
    பிரிவிலை எங்கும் பேத மில்லை
    உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!
    புகல்வேன்: உடைமை மக்களுக்குப் பொது!
    புவியை நடத்து! பொதுவில் நடத்து!
    வானைப் போல மக்களைத் தாவும்
    வெள்ள அன்பால் இதனைக்
    குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!


    1. 55. சாய்ந்த தராசு


    வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் - புவி
    மக்களெல்லாம் ஒப்புடையார்!

    ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதை
    இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ?
    வாழ்வதிலும் நலம் ..

    கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
    கொள்ளை யடிப்பதும் நீதியோ - புவி
    வாழ்வதுதான் எந்தத் தேதியோ?
    வாழ்வதிலும் நலம் ..

    சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத்
    தீர்கஎனும் இந்த லோகமே - உரு
    அற்றொழிந் தாலும்நன் றாகுமே!
    வாழ்வதிலும் நலம் ..

    காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன்
    காணத் தகுந்தது வறுமையாம் - அவன்
    பூணத் தகுந்ததும் பொறுமையாம்!
    வாழ்வதிலும் நலம் ..

    அன்பெனச் சொல்லியிங் காதிமுதற் பேத
    வன்பை வளர்த்தனர் பாரிலே - அதன்
    பின்புகண் டோ ம்இதை நேரிலே!
    வாழ்வதிலும் நலம் ..

    மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்
    வாழை யிலைமுற்றும் நறுநெய்யாம் - இது
    மிக்குயிர் மேல்வைத்த கருணையாம்!
    வாழ்வதிலும் நலம் ..

    கோயிலிலே பொருள் கூட்டும் குருக்களும்
    கோதையர் தோளினிற் சாய்கின்றார் - இங்கு
    நோயினிலே மக்கள் மாய்கின்றார்!
    வாழ்வதிலும் நலம் ..

    கோரும் துரைத்தனத் தாரும் பெரும்பொருள்
    கொண்டவர்க்கே நலம் கூட்டுவார் - உழைப்
    போரிடமே கத்தி தீட்டுவார்!
    வாழ்வதிலும் நலம் ..

    மக்களெல் லாம்சம மாக அடைந்திட
    மாநிலம் தந்ததில் வஞ்சமோ? - பசி
    மிக்கவரின் தொகை கொஞ்சமோ?
    வாழ்வதிலும் நலம் ..


    1.56. வியர்வைக் கடல்


    அதிகாலை
    கிழக்கு வெளுக்கமுன் வெளியிற் கிளம்பினேன்
    ஒளிசெயும் மணியிருள், குளிர்ச்சி, நிசப்தம்,
    இவற்றிடை என்னுளம் துள்ளும் மான்குட்டி!
    உத்ஸாகம் எனைத் தூக்கி ஓடினது!

    இயற்கை
    குன்றம் இருக்கும்.அக் குன்றத் தின்பால்
    குளமும், அழகிய குளிர்பூஞ் சோலையும்
    அழகு செய்யும்! அவ்விடத் தில்தான்
    என்றன் சொந்த நன்செய் உள்ளது.

    பகல்
    கடல்மிசை உதித்த பரிதியின் நெடுங்கதிர்
    வானெலாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்!
    புவியின் சித்திரம் ஒளியிற் பொலிந்தது.
    இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்.

    வயல்
    வளம்பெற நிறைந்த இளம்பயிர்ப் பசுமை
    மரகதம் குவிந்த வண்ணம் ஆயிற்று;
    மரகதக் குவியல்மேல் வாய்ந்த பனித்துளி
    காணக்கண் கூசும் வயிரக் களஞ்சியம்!
    பரந்தஎன் வயலைப் பார்த்துக்கொண் டிருந்தேன்
    மகிழ்ச்சி தவிர மற்றொன்று காணேன்!

    உழைப்பு
    களையினைக் களைவது கருதி, எனது
    பண்ணை ஆட்கள் பலபேர் வந்தனர்.
    என்னை வணங்கினர்; வயலில் இறங்கினர்.
    வில்லாய் வளைந்தது மேனி; அவர்தோள்
    விசையாய்க் களைந்தது களையின் விளைவை!
    முகவிழி கவிழ்ந்து வயலில் மொய்த்தது.

    நடுப்பகல்
    காலைப் போதினைக் கனலாற் பொசுக்கிச்
    சூரியன் ஏறி உச்சியிற் சூழ்ந்தான்.
    சுடுவெயில் உழவர் தோலை உரித்தது;
    புதுமலர்ச் சோலையில் போய்விட்டேன் நான்.

    வெயில்
    குளிர்புனல் தெளிந்து நிறைந்த மணிக்குளம்!
    நிழல்சேர் கரையில் நின்றுகொண் டிருந்தேன்
    புழுக்கமும் வியர்வையும் எழுப்பி என்னை
    நலிவு செய்த நச்சு வெய்யில்,
    வானி லிருந்து மண்ணிற் குதித்துத்
    தேன்மலர்ச் சோலை செழுமை கடந்தென்
    உளத்தையும் உயிரையும் பிளப்பது விந்தை!
    குளத்தில் விழுந்து குளிக்கத் தொடங்கினேன்.
    வெள்ளப் புனலும் கொள்ளிபோல் சுட்டது.

    உழைப்புத் துன்பம்
    காலைப் போதினைக் கனலால் பொசுக்கிச்
    சோலையும் கடந்து சுடவந்த வெய்யில்
    விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன்.
    எண்ணும் போதென் கண்ணின் எதிரில்
    வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள்
    வந்து நின்று வணக்கம் செய்தனர்.
    ஐயகோ நெஞ்சமே, இந்த ஆட்கள்
    தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினர்?

    வியர்வைக் கடலின் காட்சி
    களைபோக்கும் சிறுபயன் விளைக்க இவர்கள்
    உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
    ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
    இவ்வுல குழைப்பவர்க் குரிய தென்பதையே!


    1.57. நீங்களே சொல்லுங்கள்!


    சித்திரச் சோலைகளே! உமை நன்கு
    திருத்த இப் பாரினிலே - முன்னர்
    எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
    ரோ!உங்கள் வேரினிலே.

    நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
    நெல்விளை நன்னிலமே! - உனக்
    கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
    இறைத்தனர் காண்கிலமே.

    தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
    தந்தஅக் காலத்திலே - எங்கள்
    தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
    சொல்லவோ ஞாலத்திலே.

    மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
    வையமெ லாம் வகுத்தார் - அவர்
    ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
    அந்தியெலாம் உழைத்தார்.

    ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்
    ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
    ஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில்
    உதித்தது மெய்அல்லவோ?

    கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
    கீழிருக்கும் கடைக்கால் - எங்கள்
    சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்
    சிதைந்த நரம்புகள்தோல்!

    நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
    நின்ற இயற்கைகளே! - உம்மைச்
    சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
    லாளார் தடக்கைகளே!

    தாரணியே! தொழி லாளர் உழைப்புக்குச்
    சாட்சியும் நீயன்றோ? - பசி
    தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
    செல்வர்கள் நீதிநன்றோ ?

    எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க
    ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்
    புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
    புதரினில் தூங்கிடுமோ?

    கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
    கெஞ்சும்உத் தேசமில்லை - சொந்த
    வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
    வார்த்தைக்கு மோசமில்லை.


    1.58. புதிய உலகு செய்வோம்


    புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
    புதியதோர் உலகம் ..

    பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
    புதியதோர் உலகம் ..

    இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    யுஇதுஎனதெரு ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
    புதியதோர் உலகம் ..

    உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
    யுஒருபொருள் தனிருஎனும் மனிதரைச் சிரிப்போம்!
    புதியதோர் உலகம் ..

    இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
    ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
    புதியதோர் உலகம் ..


    1.59. பலிபீடம்


    மத - ஓடத்திலேறிய மாந்தரே - பலி
    பீடத்திலே சாய்ந்தீரே!

    பாடுபட் டீர்கள் பருக்கையில் லாதொரு
    பட்டியில் மாடென வாழ்கின்றீர் - மதக்
    கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் - ஒண்ட
    வீடுமில் லாமலே தாழ்கின்றீர்!
    மத - ஓடத்திலேறிய ..

    பாதிக்கு தேபசி என்றுரைத் தால்,செய்த
    பாபத்தைக் காரணம் காட்டுவார் - மத
    வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில்
    ஓதிநின் றால்படை கூட்டுவார்.
    மத - ஓடத்திலேறிய ..

    வாதனை சொல்லி வணங்கிநின் றால்தெய்வ
    சோதனை என்றவர் சொல்லுவார் - பணச்
    சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட
    போதனையால் தினம் கொல்லுவார்.
    மத - ஓடத்திலேறிய ..

    பேதிக்கும் நோய்க்கும் பெரும்பசிக் கும்,பல
    பீதிக்கும் வாய்திறப் பீர்களோ! - இழி
    சாதியென்றால் எதிர்ப் பீர்களோ? - செல்வர்
    வீதியைத் தான் மதிப்பீர்களோ?
    மத - ஓடத்திலேறிய ..

    கூடித் தவிக்கும் குழந்தை மனைவியர்
    கூழை நினைத்திடும் போதிலே - கோயில்
    வேடிக்கையாம் தெரு மீதிலே - செல்வர்
    வாடிக்கை ஏற்பீரோ காதிலே?
    மத - ஓடத்திலேறிய ..

    தொட்டிடும் வேலை தொடங்கலு மின்றியே
    தொந்தி சுமக்கும்பு ரோகிதர் - இட்ட
    சட்டப்படிக்கு நீரோ பதர் - அவர்
    அட்டகா சத்தினுக் கேதெதிர்?
    மத - ஓடத்திலேறிய ..

    மூடத் தனத்தை முடுக்கும் மதத்தைநிர்
    மூலப் படுத்தக்கை ஓங்குவீர் - பலி
    பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ
    நாடு நமக்கென்று வாங்குவீர்.
    மத - ஓடத்திலேறிய ..


    1.60. சகோதரத்துவம்


    உறுதி உறுதி உறுதி!
    ஒன்றே சமுகம் என்றெண்ணார்க்கே - இறுதி!
    உறுதி உறுதி உறுதி ..

    உறவினர் ஆவார் ஒரு நாட்டார் - எனல்
    உறுதி உறுதி உறுதி ..

    பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்
    பிழைநீக் குவதே உயிருள் ளாரின் கடமை - நம்மிற்
    குறைசொல வேண்டாம் உறவினர் பகைநீங் குங்கோள் - உங்கள்
    குகையினை விட்டே வெளிவரு வீர்சிங் கங்காள்
    உறுதி உறுதி உறுதி ..

    நாட்டுக் குலையில் தீட்டுச் சொல்வார் மொழியை - நாமே
    நம்பித் தேடிக் கொண்டோ ம் மீளாப் பழியை - நாட்டின்
    கோட்டைக் கதவைக் காக்கத் தவறும் அந்நாள் - இந்தக்
    குற்றம் செய்தோம்; விடுவோம்; வாழ்வோம் இந்நாள்
    உறுதி உறுதி உறுதி ..

    வாழ்விற் செம்மை அடைதல் வேண்டும் நாமே - நம்மில்
    வஞ்சம் காட்டிச் சிலரைத் தாழ்த்தல் தீமை - புவியில்
    வாழ்வோ ரெல்லாம் சமதர் மத்தால் வாழ்வோர் - மற்றும்
    வரிதிற் றாழ்வோர் பேதத் தாலே தாழ்வோர்
    உறுதி உறுதி உறுதி ..

    தேசத் தினர்கள் ஓர்தாய் தந்திடு சேய்கள் - இதனைத்
    தெளியா மக்கள் பிறரை நத்தும் நாய்கள் - மிகவும்
    நேசத் தாலே நாமெல் லாரும் ஒன்றாய் - நின்றால்
    நிறைவாழ் வடைவோம் சலியா வயிரக் குன்றாய்.
    உறுதி உறுதி உறுதி ..

    பத்துங் கூடிப் பயனைத் தேடும் போது - நம்மில்
    பகைகொண் டிழிவாய்க் கூறிக் கொள்ளல் தீது - நம்
    சித்தத் தினிலே இருளைப் போக்கும் சொல்லைக் - கேளீர்
    செனனத் தாலே உயர்வும் தாழ்வும் இல்லை
    உறுதி உறுதி உறுதி ..


    1.61. சேசு பொழிந்த தெள்ளமுது


    மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி? தோழி - முன்பு
    வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா - அவர்
    காதினிக் கும்படி சொன்னசொல் ஏதடி? தோழி - அந்தக்
    கர்த்தர் உரைத்தது புத்தமு தென்றறி தோழா - அந்தப்
    பாதையில் நின்று பயனடைந்தார் எவர்? தோழி - இந்தப்
    பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
    ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை தோழி - இங்கு
    ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா.

    ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி? தோழி - அந்த
    இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
    மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி? தோழி - அட
    முன்-மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
    நாசம் விளைக்க நவின்றது யாதடி? தோழி - சட்டம்
    நால் வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்
    ஆசை மதம்புகப் பேதம் அகன்றதோ? தோழி - அவர்க்
    கங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் தோழா!

    சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி? தோழி - அந்தத்
    தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அந்தப்
    புல்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்? தோழி - அதைப்
    போதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர் தோழா - அடி
    எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர்? தோழி - அட
    இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா - முன்பு
    வல்லவர் சேசு வகுத்தது தான்என்ன? தோழி - புவி
    மக்கள் எல்லாம்சமம் என்று முழக்கினர் தோழா!

    ஈண்டுள்ள தொண்டர்கள் என்ன செய்கின்றனர்? தோழி - அவர்
    ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர் தோழா - அடி
    வேண்ட வரும்திருக் கோயில் வழக்கென்ன? தோழி - அட
    மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர் தோழா - விரல்
    தீண்டப் படாதவர் என்பவர் யாரடி? தோழி - இங்குச்
    சேசு மதத்தினை தாபித்த பேர்கள்என் தோழா - உளம்
    தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி? தோழி - அவர்
    சோதரர் யாவரும் என்று முழங்கினர் தோழா!

    பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல் லாம்என்ன? தோழி - இவை
    பாரத நாட்டுப் பழிச்சின்னத் தின்பெயர் தோழா - இங்குக்
    கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்
    கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு
    நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன? தோழி - தினம்
    நேர்மையில் கோயில்வி யாபாரம் செய்வது தோழா - இந்த
    வஞ்சகர்க் கென்ன வழுத்தினர் சேசுநல் தோழி - இன்ப
    வாழ்க்கை யடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்!

    நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு? தோழி - அங்கு
    நல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர் தோழா - அந்த
    ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி? தோழி - மக்கள்
    அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர் தோழா - மக்கள்
    மாலைத் தவிர்த்து வழிசெய்வ ரோஇனித் தோழி - செக்கு
    மாடுக ளாக்கித்தம் காலைச்சுற் றச்செய்வர் தோழா - அந்தக்
    கோலநற் சேசு குறித்தது தானென்ன? தோழி - ஆஹா
    கோயிலென் றால்அன்பு தோய்மனம் என்றனர் தோழா!

    ஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்? தோழி - அவர்
    அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர் தோழா - அந்தக்
    கேண்மைகொள் சேசுவின் கீர்த்தி யுரைத்திடு தோழி - அவர்
    கீர்த்தி யுரைத்திட வார்த்தை கிடைக்கிலை தோழா - நலம்
    தாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்? தோழி - அன்று
    தன்னைப் புவிக்குத் தரும்பெரு மானவர் தோழா - அந்த
    ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர்? - எனில்
    அன்னியர்ரு தான்என்ற பேதமி லாதவர் தோழா.


    6. பன்மணித்திரள்



    1.62. தமிழ்நாட்டிற் சினிமா


    உருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே
    ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்
    திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பி யர்கள்
    தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்,
    இருவிழியால் அதுகாணும் நாள்எந்த நாளோ,
    என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,
    இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
    எதிர்வைக்கும் நாள்எந்நாள் என்றுபல நினைத்தேன்.

    ஒலியுருவப் படம்ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்;
    ஓடினேன்; ஓடியுட்கார்ந் தேன்இரவில் ஒருநாள்.
    புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப்பெண் ஒருத்தி,
    புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
    மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
    வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
    எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
    எழில்முதுகிற் கைவைத்தான்! புதுமைஒன்று கண்டேன்.

    உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
    உயிர்அதிர்ந்த காரணத்தால் உடல்அதிர்ந்து நின்றே,
    தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது
    சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்
    சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
    சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
    களங்கமிலாக் காட்சி,அதில் இயற்கையெழில் கண்டேன்!
    கதைமுடிவில் யுபடம்ருஎன்ற நினைவுவந்த தன்றே!

    என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
    எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
    ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
    உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
    ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
    ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
    ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
    ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

    வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
    மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
    வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
    வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
    அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்,
    அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!
    கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை
    கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!

    பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
    பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
    சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
    சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
    வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!
    மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.
    இரக்கமற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்
    ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

    படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்
    பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
    படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
    பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
    இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
    இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
    படமெடுத்தால் செந்தமிழ்நா டென்னும்இள மயிலும்
    படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!


    1.63. புத்தகசாலை


    தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்
    சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,
    இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
    இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!
    மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
    மாகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்!
    சனித்ததங்கே புத்துணர்வு! புத்த கங்கள்
    தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!

    மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்
    மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
    தனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்
    சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்,
    இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
    இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;
    புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
    புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

    தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை
    சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.
    தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
    தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,
    அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,
    அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,
    சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலை சேர்
    துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

    நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்
    நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.
    நூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து
    நொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற
    கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
    குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.
    மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
    முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.

    வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்
    மரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும்,
    ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்
    அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை
    நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்
    நினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும்
    மாசற்ற தொண்டிழைப்பீர்! சமுதா யச்சீர்
    மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்!


    1.64. வாளினை எடடா!


    வலியோர்சிலர் எளியோர்தமை
    வதையேபுரி குவதா?
    மகராசர்கள் உலகாளுதல்
    நிலையாம்எனும் நினைவா?
    உலகாளஉ னதுதாய்மிக
    உயிர்வாதை யடைகிறாள்;
    உதவாதினி ஒருதாமதம்
    உடனேவிழி தமிழா!

    கலையேவளர்! தொழில்மேவிடு!
    கவிதைபுனை தமிழா!
    கடலேநிகர் படைசேர்கடு
    விடநேர்கரு விகள்சேர்!
    நிலமேஉழு! நவதானிய
    நிறையூதியம் அடைவாய்;
    நிதிநூல்விளை! உயிர்நூல்உரை
    நிசநூல்மிக வரைவாய்!

    அலைமாகடல் நிலம்வானிலுன்
    அணிமாளிகை ரதமே
    அவைஏறிடும் விதமேயுன
    ததிகாரம் நிறுவுவாய்!
    கொலைவாளினை எடடாமிகு
    கொடியோர்செயல் அறவே
    குகைவாழ்ஒரு புலியே!உயர்
    குணமேவிய தமிழா!

    தலையாகிய அறமேபுரி
    சரிநீதி யுதவுவாய்!
    சமமேபொருள் ஜனநாயகம்
    எனவேமுர சறைவாய்!
    இலையேஉண விலையேகதி
    இலையேஎனும் எளிமை
    இனிமேலிலை எனவேமுர
    சறைவாய் முரசறைவாய்!


    1.65. வீரத் தமிழன்


    தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
    சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
    அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்
    ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
    குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
    குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
    என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
    இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

    வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
    வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
    நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
    நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
    வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
    விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
    சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
    தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

    வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
    விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
    சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
    தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
    காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
    கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
    கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
    கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!


    1.66. சைவப் பற்று


    இரும்புப் பெட்டியிலே - இருக்கும்
    எண்பது லக்ஷத்தையும்,
    கரும்புத் தோட்டத்திலே - வருஷம்
    காணும் கணக்கினையும்,
    அருந் துணையாக - இருக்கும்
    ஆயிரம் வேலியையும்
    பெரும் வருமானம் - கொடுக்கும்
    பிறசொத் துக்களையும்,

    ஆடை வகைகளையும் - பசும்பொன்
    ஆபர ணங்களையும்,
    மாடு கறந்தவுடன் - குடங்கள்
    வந்து நிறைவதையும்,
    நீடு களஞ்சியங்கள் - விளைந்த
    நெல்லில் நிறைவதையும்,
    வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த
    வட்டித் தொகையினையும்,

    எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள்
    எங்கள் மடாதிபதி
    வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம்
    மேனியெ லாம்பூசிக்
    கண்கவர் பூஷணங்கள் - அணிந்து
    கட்டில் அறைநோக்கிப்
    பெண்கள் பலபேர்கள் - குலவிப்
    பின்வர முன்நடந்தார்!

    பட்டுமெத் தைதனிலே - மணமே
    பரவும் பூக்களின்மேல்
    தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச்
    சைவத்தை ஆரம்பித்தார்;
    கட்டிக் கரும்பினங்கள் - சகிதம்
    கண்கள் உறங்கிவிட்டார்.
    நட்ட நடுநிசியில் - கனவில்
    நடந்தது கேளீர்:

    நித்திரைப் பூமியிலே - சிவனார்
    நேரில் எழுந்தருளிப்
    புத்தம் புதிதாகச் - சிலசொல்
    புகல ஆரம்பித்தார்.
    இத்தனை நாளாகப் - புவியில்
    எனது சைவமதை
    நித்தநித்த முயன்றே - புவியில்
    நீளப் பரப்பிவிட்டாய்.

    மடத்தின் ஆஸ்தியெல்லாம் - பொதுவில்
    மக்களுக் காக்கிவிட்டேன்!
    திடத்தில் மிக்கவனே - இனிநீ
    சிவபுரி வாழ்க்கை
    நடத்துக! என்றே - சிவனார்
    நவின்று பின்மறைந்தார்.
    இடி முழக்கமென்றே - தம்பிரான்
    எண்ணம் கலங்கிவிட்டார்!

    தீப்பொறி பட்டதுபோல் - உடலம்
    திடுக்கிட எழுந்தார்!
    கூப்பிடு காவலரை - எனவே
    எமனை எலி விழுங்கிற்று! கூச்சல் கிளப்பிவிட்டார்.
    காப்பளிக்க வேண்டும் - பொருள்கள்
    . எமனை எலி விழுங்கிற்று! களவுபோகு மென்றார்
    மாப்பிள்ளை என்றனுக்கே - இத்ததி
    எமனை எலி விழுங்கிற்று! மரணம் ஏதுக் கென்றார்.

    சொப்பனத்தை நினைத்தார் - தம்பிரான்
    எமனை எலி விழுங்கிற்று! துள்ளிவிழுந் தழுதார்!
    ஒப்பி உழைத்ததில்லை - சிறிதும்
    எமனை எலி விழுங்கிற்று! உடல் அசைந்ததில்லை!
    எப்படி நான்பிரிவேன் - அடடா!
    எமனை எலி விழுங்கிற்று! இன்பப் பொருளையெல்லாம்;
    தப்பிப் பிழைப்பதுண்டோ - எனது
    எமனை எலி விழுங்கிற்று! சைவம் எனத்துடித்தார்!


    1.67. எமனை எலி விழுங்கிற்று!


    சர்க்கா ருக்குத் தாசன்நான்! ஓர்நாள்
    பக்கத் தூரைப் பார்க்க எண்ணி
    விடுமுறை கேட்டேன். விடுமுறை இல்லை!
    விடுமுறை பலிக்க நோயை வேண்டினேன்.
    மார்புநோய் வந்து மனதில் நுழைந்தது!

    மலர்ந்தஎன் முகத்தினில் வந்தது சுருக்கம்!
    குண்டு விழிகள் கொஞ்சம் குழிந்தன.
    என்பெண் டாட்டி என்னை அணுகினாள்.
    எதிரில் பந்து மித்திரர் இருந்தார்.
    தூயஓர் பெரியார் என்னுடல் தொட்டுக்
    காயம் அநித்தியம் என்று கலங்கினார்.
    எதிரில் நிமிர்ந்தேன்; எமன்!எமன்! எமனுரு!

    இரு கோரப்பல்! எரியும் கண்கள்!!
    சுவாசமும் கொஞ்சம் சுண்டுவ தறிந்தேன்.
    சூடு மில்லை உடம்பைத் தொட்டால்!
    கடிகா ரத்தின் கருங்கோடு காணேன்;
    கண்டது பிழையோ, கருத்தின் பிழையோ
    ஒன்றும் சரியாய்ப் புரிய வில்லை
    என்ற முடிவை ஏற்பாடு செய்தேன்!
    என்கதி என்ன என்று தங்கை
    சொன்னதாய் நினைத்தேன். விழிகள் சுழன்றன!
    பேசிட நாக்கைப் பெயர்த்தே னில்லை.
    பேச்சடங் கிற்றெனப் பெருந்துயர் கொண்டேன்.
    இருப்புத் தூண்போல் எமன்கை இருந்ததே!
    எட்டின கைகள் என்னுயிர் பிடிக்க!
    உலகிடை எனக்குள் ஒட்டுற வென்பதே
    ஒழிந்தது! மனைவி ஓயா தழுதாள்!
    எமனார் ஏறும் எருமைக் கடாவும்
    என்னை நோக்கி எடுத்தடி வைத்தது.
    மூக்கிற் சுவாசம் முடியும் தருணம்
    நாக்கும் நன்கு நடவாச் சமயம்,
    சர்க்கார் வைத்தியர் சடுதியில் வந்து
    பக்குவஞ் சொல்லிப் பத்துத் தினங்கள்
    விடுமுறை எழுதி மேசைமேல் வைத்து
    வெளியிற் சென்றார். விஷய முணர்ந்தேன்.
    அண்டையூர் செல்ல அவசியம் மாட்டு
    வண்டி கொண்டுவா என்றேன்! மனைவி
    எமனிழுக் கின்றான் என்றாள். அத்ததி
    சுண்டெலி ஒன்று துடுக்காய் அம்மி
    யண்டையில் மறைந்ததும் அம்மியை நகர்த்தினேன்!
    இங்கு வந்த எமனை அந்த
    எலிதான் விழுங்கி யிருக்கும் என்பதை
    மனைவிக் குரைத்தேன். வாஸ்தவம் என்றாள்!
    மாட்டு வண்டி ஓட்டம் பிடித்தது!
    முன்னமே லீவுதந் திருந்தால்,
    இந்நேரம் ஊர்போய் இருக்க லாமே!


    1.68. சுதந்தரம்


    தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்;
    மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
    பொன்னே, மணியே, என்றுனைப் புகழ்வார்;
    ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்!
    உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
    வான வீதியில் வந்து திரிந்து
    தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்
    சோலை பயின்று சாலையில் மேய்ந்து
    வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்!
    தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
    அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய்.
    அக்கா வந்து கொடுக்கச்
    சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?


    1.69. நம் மாதர் நிலை


    பழங்கால அறைக்குளே பதினைந்து திருடர்கள்
    பதுங்கிடவும் வசதியுண்டு.
    பதார்த்தவகை மீதிலே ஒட்டடையும் ஈக்களும்
    பதிந்திடவும் வசதியுண்டு.
    முழங்கள் பதினெட்டிலே மாற்றமில்லா விடினும்
    முன்றானை மாற்றமுண்டு.
    முடிகிவரும் நோய்க்கெலாம் கடவுளினை வேண்டியே
    முடிவடைய மார்க்கமுண்டு.

    தொழுங்கணவன் ஆடையிற் சிறுபொத்தல் தைக்கவும்
    தொகைகேட்கும் ஆட்கள்வேண்டும்.
    தோசைக் கணக்கென்று கரிக்கோடு போடவோ
    சுவருண்டு வீட்டில்.இந்த
    ஒழுங்கெலாம் நம்மாதர் வாரத்தின் ஏழுநாள்
    உயர்விரதம் அநுஷ்டிப்பதால்
    உற்றபலன் அல்லவோ அறிவியக் கங்கண்
    டுணர்ந்த பாரததேசமே!


    1.70. ஏசுநாதர் ஏன் வரவில்லை?


    தலை,காது, மூக்கு, கழுத்து,கை, மார்பு,விரல்,
    தாள்என்ற எட்டுறுப்பும்
    தங்கநகை, வெள்ளிநகை, ரத்தின மிழைத்தநகை,
    தையலர்கள் அணியாமலும்,
    விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
    வேண்டுமென் றேபாதிரி
    விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை
    வெறுத்தார்கள் பெண்கள்புருஷர்!

    நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றி
    நீள்இமைகள், உதடு,நாக்கு
    நிறையநகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க
    நிலைக்கண்ணா டியும்உண்டென
    இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள்
    எல்லாரும் வந்துசேர்ந்தார்;
    ஏசுநா தர்மட்டும் அங்குவர வில்லையே,
    இனியபா ரததேசமே!


    1.71. கடவுள் மறைந்தார்!


    மனைமக்கள் தூங்கினார் நள்ளிரவில் விடைபெற்று
    வழிநடைச் சிரமம்இன்றி
    மாபெரிய யுசிந்தனா லோகத்தைரு அணுகினேன்.
    வந்தனர்என் எதிரில்ஒருவர்.
    எனைஅவரும் நோக்கியே நான்கடவுள் நான்கடவுள்
    என்றுபல முறைகூறினார்.
    இல்லைஎன் பார்கள்சிலர்; உண்டென்று சிலர்சொல்வர்
    எனக்கில்லை கடவுள்கவலை

    எனவுரைத் தேன்.அவர், யுஎழுப்புசுவர் உண்டெனில்
    எழுப்பியவன் ஒருவனுண்டே
    இவ்வுலகு கண்டுநீ நானும்உண் டெனஅறிகரு
    என்றுரைத்தார். அவரைநான்
    கனமான கடவுளே உனைச்செய்த சிற்பிஎவன்?
    காட்டுவீர் என்றவுடனே
    கடவுளைக் காண்கிலேன்! அறிவியக்கப் புலமை
    கண்ட பாரததேசமே!


    1.72. உன்னை விற்காதே!


    தென்னி லங்கை யிராவணன் தன்னையும்
    தீய னென்னும் துரியனையும் பிறர்
    என்ன சொல்லி யெவ்வாறு கசப்பினும்
    இன்று நானவர் ஏற்றதைப் பாடுவேன்;
    இன்னு மிந்தச் செயலற்ற நாட்டினில்
    எத்தனை துரியோ தனர் வாழினும்
    அன்னவர் தமைக் கொல்ல முயன்றிடும்
    அந்த கன்தனை நான்கொல்ல முந்துவேன்.

    நெஞ்சி லுற்றது செய்கையில் நாட்டுதல்
    நீச மன்று; மறக்குல மாட்சியாம்!
    தஞ்ச மென்று பிறன்கையில் தாழ்கிலாத்
    தன்மை யாவது வீரன் முதற்குணம்!
    நெஞ்சி லூறிக் கிடந்ததம் பூமியை
    நேரில் மற்றவர் ஆண்டிடப் பார்த்திடும்
    பஞ்சை யன்று. துரியன் இராவணன்
    பாரதக் குலம் வேண்டிடும் பண்பிதே!

    தன்கு லத்தினைத் தூக்கிடும் தாம்பெனச்
    சகம் சிரிக்கப் பிறந்தவி பீஷணன்
    நன்ம னத்தவன் ராமனைச் சார்ந்ததை
    நல்ல தென்பது ராமன் முகத்துக்காம்!
    இன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை
    இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும்
    துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே
    துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறுவேன்.

    பாரதத் திருத் தாயெனும் பேச்சிலே
    பச்சை யன்பு பொழிந்திடு கின்றவர்
    வீரத் தால்உள மேசெய லாயினோர்
    விழி யிலாதவர் ஊமைய ராயினும்
    கோரித் தாவுமென் னுள்ளம் அவர்தம்மை!
    கொள்கை மாற்றல் திருட்டுத் தனங்காண்!
    ஓரி போலப் பதுங்கும் படித்தவர்
    ஊமை நொள்ளை செவிடென்று சொல்லுவேன்!

    இன்பம் வந்து நெருங்கிடு நேரத்தில்
    ஈனர் அஞ்சிக் கிடக்கின்ற நேரத்தில்
    ஒன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின்
    உரிமைத் தாய்தனைப் போவென்று சொல்வதால்,
    என்னை யீன்ற நறுந்தாய் நாட்டினை
    எண்ணுந் தோறும் உளம்பற்றி வேகுதே!
    அன்பி ருந்திடில் நாட்டின் சுகத்திலே
    ஆயிரம் கதை ஏன்வளர்க் கின்றனர்?


    1. 73. பத்திரிகை


    காரிருள் அகத்தில் நல்ல
    கதிரொளி நீதான்! இந்தப்
    பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
    பாய்ந்திடும் எழுச்சி நீதான்!
    ஊரினை நாட்ட இந்த
    உலகினை ஒன்று சேர்க்கப்
    பேரறி வாளர் நெஞ்சிற்
    பிறந்த பத்திரிகைப் பெண்ணே!

    அறிஞர்தம் இதய ஓடை
    ஆழநீர் தன்னை மொண்டு
    செறிதரும் மக்கள் எண்ணம்
    செழித்திட ஊற்றி ஊற்றிக்
    குறுகிய செயல்கள் தீர்த்துக்
    குவலயம் ஓங்கச் செய்வாய்!
    நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
    நலம்காணார் ஞாலம் காணார்.

    கடும்புதர் விலக்கிச் சென்று
    களாப்பழம் சேர்ப்பார் போலே
    நெடும்புவி மக்கட் கான
    நினைப்பினிற் சென்று நெஞ்சிற்
    படும்பல நுணுக்கம் சேர்ப்பார்
    படித்தவர். அவற்றை யெல்லாம்
    கொடும் என அள்ளி உன்தாள்
    கொண்டார்க்குக் கொண்டு போவாய்!

    வானிடை நிகழும் கோடி
    மாயங்கள், மாநி லத்தில்
    ஊனிடை உயிரில் வாழ்வின்
    உட்புறம் வெளிப் புறத்தே
    ஆனநற் கொள்கை, அன்பின்
    அற்புதம் இயற்கைக் கூத்து
    தேனிதழ் தன்னிற் சேர்த்துத்
    தித்திக்கத் தருவாய் நித்தம்!

    சிறுகதை ஒன்று சொல்லிப்
    பெருமதி யூட்டும் தாளே!
    அறைதனில் நடந்த வற்றை
    அம்பலத் திழுத்துப் போட்டுக்
    கறையுளம் தூய்மை செய்வாய்!
    களைப்பிலே ஊக்கம் பெய்வாய்!
    நிறைபொருள் ஆவாய் ஏழை
    நீட்டிய வெறுங் கரத்தே!

    ஓவியம் தருவாய்! சிற்பம்
    உணர்விப்பாய்! கவிதை யூட்டக்
    காவியம் தருவாய்! மக்கள்
    கலகல வெனச் சிரிப்பு
    மேவிடும் விகடம் சொல்வாய்!
    மின்னிடும் காதல் தந்து
    கூவுவாய்! வீரப் பேச்சுக்
    கொட்டுவாய் கோலத் தாளே!

    தெருப்பெருக் கிடுவோ ருக்கும்
    செகம்காக்கும் பெரியோர்க் கும்,கை
    இருப்பிற் பத்திரிகை நாளும்
    இருந்திடல் வேண்டும்! மண்ணிற்
    கருப்பெற் றுருப்பெற் றிளநடை
    பெற்றுப்பின் ஐந்தே ஆண்டு
    வரப்பெற்றார் பத்திரிகை நாளும்
    உண்டென்றால் வாழ்க்கை பெற்றார்!


    1.74. யாத்திரை போகும் போது!


    சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
    சோப்புப் பாட்டரி விளக்கு தூக்குக் கூஜாதாள் பென்சில்
    தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
    காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்தி ரைக்கே!


    1.75. பூசணிக்காய் மகத்துவம்!


    மெய் வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின் றார்கள்;
    செய் வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின் றாய்நீ!
    பொய் வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச் செய்துண் டேன்;உன்
    கைவண்ணம் அங்கு கண்டேன்; கறிவண்ணம் இங்கு கண்டேன்!

    பாரதிதாசன் கவிதைகள் முற்றும்.