MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  2.3 காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த
  திருஇரட்டை மணிமாலை (பாசுரங்கள் 24- 43)
  24. கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சம்என்பாய்த்
  தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி
  வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை
  இளந்திங் களும்எருக் கும்மிருக் குஞ்சென்னி ஈசனுக்கே. 1
  25. ஈசன் அவன்அல்லா தில்லை எனநினைந்து
  கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
  மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
  பிறவாமைக் காக்கும் பிரான். 2
  26. பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
  டிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
  பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய்
  அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே. 3
  27. அந்தணனைத் தஞ்செமென் றாட்பட்டார் ஆழாமே
  வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
  பொன்கண்டாற் பூணாதே கோள்நாகம் பூண்டானே
  என்கண்டாய் நெஞ்சே இனி. 4
  28. இனிவார் சடையினிற் கங்கையென் பாளைஅங் கத்திருந்த
  கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால்
  முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயில்முழ்கத்
  தனிவார் கணைஒன்றி னால்மிகக் கோத்தஎஞ் சங்கரனே. 5
  29. சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
  பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
  ஆவாவென் றாழாமைக் காப்பானை எப்பொழுதும்
  ஓவாது நெஞ்சே உரை. 6
  30. உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கிற்செவ் வான்தொடைமேல்
  இரைக்கின்ற பாம்பினை என்றும் தொடேல்இழிந் தோட்டந்தெங்கும்
  திரைக்கின்ற கங்கையும் தேன்நின்ற கொன்றையும் செஞ்சடைமேல்
  விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே. 7
  31. வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
  காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
  வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
  கில்லேன மாஎன்றான் கீழ். 8
  32. கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய்
  வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்விர வார்புரங்கள்
  பாழா யிடக்கண்ட கண்டன்எண் தோளன்பைம் பொற்கழலே
  தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளும் தலைநின்மினே. 9
  33. தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
  தலையா யினஉணர்ந்தோர்காண்பர் - தலையாய
  அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
  கண்டத்தான் செம்பொற் கழல். 10
  34. கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார்
  நிழற்கண்ட போழ்தத்து நில்லா வினைநிகர் ஏதுமின்றித்
  தழற்கொண்ட சோதிச் செம் மேனிஎம் மானைக்கைம் மாமலர்தூய்த்
  தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்மடுந் தொல்வினையே. 11
  35. தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
  ஒல்லை வணங்கி உமையென்னும்- மெல்லியல்ஓர்
  கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
  நீற்றானை நெஞ்சே நினை. 12
  36. நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கோர் தஞ்சமென்று
  மனையா ளையும்மக்கள் தம்மையும் தேறியோர் ஆறுபுக்கு
  நனையாச் சடைமுடி நம்பன்நந் தாதைநொந் தாதசெந்தீ
  அனையான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே. 13
  37. அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
  முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தில்
  ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்
  நீறாடி நெய்யாடி நீ. 14
  38. நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே
  தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் றிரங்குவல்வாய்ப்
  பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம்
  போய்நின்று பூதந் தொழச்செய்யும் மொய்கழற் புண்ணியனே. 15
  39. புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
  எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
  கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
  அம்மானுக் காட்பட்ட அன்பு. 16
  40. அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோர் ஆடரவம்
  தன்பால் ஒருவரைச் சாரஒட் டாதது வேயும்அன்றி
  முன்பா யினதலை யோடுகள் கோத்தவை ஆர்த்துவெள்ளை
  என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே. 17
  41 ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
  ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
  படங்குலவு நாகமுமிழ் பண்டமரர் சூழ்ந்த
  தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு. 18
  42 தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாம்ஒருநாள்
  எமக்கொன்று சொன்னால் அருளுங்கொ லாமிணை யாதுமின்றிச்
  சுமக்கின்ற பிள்ளைவெள்ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய்
  உமைக்கென்று தேடிப் பெறாதுட னேகொண்ட உத்தமரே. 19
  43. உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
  செத்த மரம்அடுக்கித் தீயாமுன் - உத்தமனாம்
  நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
  கேளாழி நெஞ்சே கிளர்ந்து. 20

  திருச்சிற்றம்பலம்