4. 3 சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த
திருக்கயிலாய ஞானவுலா
300. திருமாலும் நான்முகனுந் தேர்ந்துணரா தன்றங்
கருமால் உறஅழலாய் நின்ற - பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல்
ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகா தணுகியான் - ஆதி
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனும் தானே ௭ பரனாய (5)
. தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குங் காண்பரிய எம்பெருமான் - ஆனாத
சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப - ஆராய்ந்து
செங்கண் அமரர் புறங்கடைக்கட் சென் றீண்டி
எங்கட்குக் காட்சியருள் என்றிரப்ப - அங்கொருநாள் (10)
. பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கை
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள்
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன் மொய்த்த குஞ்சியின்மேற் சித்திரிப்ப - ஊனமில்சீர்
நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தா
வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள்
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
நலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த (15)
. கற்பகம் ஈன்ற கமழ்பட் டினைஉடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும்
சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா
மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்
கணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய
ஆரம் அவைபூண் டணிதிக ழுஞ்சன்ன
வீரந் திருமார்பில் வில்லிலக - ஏருடைய
எண்டோட்கும் கேயூரம் பெய்துதர பந்தனமும்
கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக் - கொண்டு (20)
. கடிசூத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங் - கடிநிலை மேல்
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர்
எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாமுணர்த்த - ஒண்ணிறத்த
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் அகத்தியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண் (25)
. நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் -தெருவெலாம்
வாயு நனிவிளக்க மாமழை நீர்தௌிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர்
ஈசானன் வந் தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த
கங்கா நதியமுனை உள்ளுருத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புரையிரட்டத் - தங்கிய (30)
. பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக
மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மேகத் துருமு முரசறையப் - போகஞ்சேர்
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான்
விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணோர் மழவிடையை மேற்கொண்டாங் - கெண்ணார்
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் - செருக்குடைய (35)
. சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத
அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலுந் திண்டோட் கருடன்மேல் ௭ மன்னிய
மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேலிடப்பால் மென்கருப்பு வில்லிடப்பால் - ஏல்வுடைய
சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான்
காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர் (40)
. வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டை ஒண்கண் - தாழ்கூந்தல்
மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய
விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் (45)
. குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய
ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் - ஈறார்ந்த
காலங்கள் மூன்றுங் கணமுங் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி - மேலை (50)
. இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி - எமையாளும்
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி - தூயசீர்ச்
சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி - அங்கொருநாள்
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - தூய
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி - நிலைபோற்றி (55)
. போற்றியெனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக - ஏற்றுக்
கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் -கடிகமழும்
பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே
குழாங்கள்
வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே -தூமாண்பில்
வானநீர் தாங்கி மறையோம்பி வான்பிறையோ
டூனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா (60)
. வெள்ளை அணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய
மாட நடுவில் மலரார் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில்
சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும்
கூழைபின் தாழ வளையார்ப்பக் கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாந் தேருந்திச் - சூழொளிய
கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர
அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழற் (65)
. பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்தி
நற்பெருங் கோலம் மிகப்புனைந்து - பொற்புடைய
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்
சூளிகையுஞ் சூட்டுஞ் சுளிகையுஞ் சுட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின்
மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் - நூல்ஏறு
தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடுமென்பார் - காமவேள் (70)
. ஆமென்பார் அன்றென்பார் ஐயறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் - பூமன்னும்
பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் - முன்னம்
ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதாதோடித்
தெருவம் புகுவார் திகைப்பார் - அருகிருந்த
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளிஎன்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் - அண்ணல்மேற்
கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ண நிறைத்தாழ் திறந்திட்டார் - ஒண்ணிறத்த (75)
.
பேதை
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள் - தீதில்
இடையாலும் ஏக்கழுத்த மாட்டாள் நலஞ்சேர்
உடையாலும் உள்ளுருக்க கில்லாள் - நடையாலும்
கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
எவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் - செவ்வனேர்
நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்தன் செவ்வாயின்
வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும்
பாடவந் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் - நாடொறும் (80)
. ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினளாஞ் சேயிழையாள் - நன்றாகத்
தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்துடுத்துக் - கோலஞ்சேர்
பந்தரிற் பாவை கொண்டாடும்இப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர்
ஈசன் எரியாடி என்ன அவனையோர்
காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத் - தாய்சொன்ன
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமன்நூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய (85)
.
பெதும்பை
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவின்இயலாள் - சீரொளிய
தாமரை ஒன்றின் இரண்டு குழையிரண்டு
காமருவி கெண்டையோர் செந்தொண்டை - தூமருவு
முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த
கங்கணஞ் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
கிங்கணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழல்
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியிற்
சந்தனந் தோய்ந்த தடந்தோளாள் - வந்து (90)
. திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் - மடல்பட்ட
மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் - சாலவும்
வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
கஞ்சனத்தை இட்டங் கழகாக்கி - எஞ்சா
மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணியார் வளைதோள்மேல் மின்ன - மணியார்த்த
தூவெண் மணற்கொண்டு தோழியருந் தானுமாய்க்
காமன் உருவம் வரஎழுதிக் - காமன் (95)
. கருப்புச் சிலையும் மலரம்புந் தேரும்
ஒருப்பட் டுடன் எழுதும் போழ்தில் - விருப்பூரும்
தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர
நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று
நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக்
கைவண்டுங் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட
மங்கை
மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய (100)
. அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகங்கமலம் - பொங்கெழிலார்
இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேயெழிலார்
பட்டுடைய அல்குலுந் தேர்த்தட்டு - மட்டுவிரி
கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணி முறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர்
வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள்
காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து - மாதராள் (105)
. பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் - நற்கோட்டு
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர்
தாழுஞ் சடையான் சடாமகுடந் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான்
தார்நோக்குந் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்குந் தன்ன தெழில் நோக்கும் - பேரருளான்
தோள்நோக்குந் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண் நோக்கா (110)
. துள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய
மடந்தை
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர்
ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலுந் திரள்முத்தும் - பாசிலைய
வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப்
புருவமுஞ் செவ்வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென் தோளும் - மருவினிய (115)
. கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள் - ஒண்கேழல்
வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் - ஊழித்
திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய
முத்தாரங் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப் பெருகி -வித்தகத்தால்
கள்ளுங் கடாமுங் கலவையுங் கைபோந்திட்
டுள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய (120)
. காளிங்கஞ் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளிம்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும்
தண்ணறுஞ் சந்தனம் கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் - கொண்ணுதலாள்
தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னுமோர் காமரம் யாழ் அமைத்து - மன்னும்
விடவண்ணக் கண்டத்து வேதியன் மேல்இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதீண் - டடல்வல்ல
வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல (125)
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணியேறு தோளானைக் கண்டாங் - கணிஆர்ந்த
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
கோட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள்
எல்லாருங் கண்டார் எனக் கடவுள் இங்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று -மெல்லவே
செல்ல லுறுஞ்சரணம் கம்பிக்குந் தன்னுறுநோய்
சொல்லலுறுஞ் சொல்லி உடைசெறிக்கும் - நல்லாகம்
காண லுறுங்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது - பூணாகம் (130)
. புல்லலுறும் அண்ணல்கை வாரான்என் றிவ்வகையே
அல்லலுறும் அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள்
தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி
அரிவை
செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் -ஒண்கேழல்
திங்களுந் தாரகையும் வில்லுஞ் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையாற் - பொங்கொளிசேர்
மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்னாவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும் (135)
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர்
இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள் - அடியிணைமேற்
பாடகங் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் - கேடில்சீர்ப்
பொன்னரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னுங் கழுத்தை மகிழ்வித்தாள் - பொன்னனாள் (140)
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமே
பாடல் தொடங்கும் பொழுதிற் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய
இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையுங் கைவிட்டுப் -பொன்னனையீர்
இன்றன்றே காண்ப தெழில் நலம் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்கென்று - சென்றவன்தன்
ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழற் (145)
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தந் திமிரும் முலைஆர்க்கும் - பூந்துகிலைச்
சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர்துயருற்
றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் ௭ சூழொளிய
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலந்தோற்றாள் - அங்கொருத்தி
தெரிவை
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் - ஓரா
மருளோசை இன்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்தீர் புலரியே ஒப்பாள் - அருளாலே (150)
வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ
டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்து
அந்தளிர்போல் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள் - அந்தமில்
சீரார் முகம்மதியம் ஆதலாற் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் - சீராரும்
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் -வண்ணஞ்சேர்
மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் - மாந்தர் (155)
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
பறையறைவ போலுஞ் சிலம்பு - முறைமையால்
சீரார் திருந்தடிமேற் சேர்த்தினாள் தேரல்குல்
ஓரா தகலல் உறாதென்று - சீராலே
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே
பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர்
நற்கழுத்தை நல்லாரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகருங் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும் (160)
காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும்
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினாள் - ஆகிப்
பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய ஆகிக் - கலைகரந்து
உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்து
கள்ளாவி நாறுங் கருங்குழலாள் - தெள்ளொளிய
செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார் (165)
. பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகிரும்
தோளான் நிலைபேறு தோற்றங்கே டாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் - கேளாய
நாணார் நடக்க நலத்தார்க் கிடைஇல்லை
ஏணார் ஒழிக எழில்ஒழிக - பேணும்
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமினீர் என்று - சொலற்கரிய
தேவாதி தேவன் சிவனாயில் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது - போவானேல் (170)
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாய
பேரிளம்பெண்
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் - மண்ணின்மேல்
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம்
அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக்கொடி நுடங்கும் நுண்ணிடையாள் - எஞ்சாத (175)
பொற்செப் பிரண்டு முகடு மணியழுத்தி
வைத்தன போல வளர்ந்தேந்தி - ஒத்துச்
சுணங்கும் திதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்
கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த
கொங்கையாள் கோலங்கட் கெல்லாமோர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் - அங்கையாற்
காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் - வாய்ந்துடனே
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்த செழும்பவளம் -காய்த்திலங்கி (180)
முத்தமுந் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தந் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து
வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய
தண்ணங் கயலும் சலஞ்சலமுந் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த
குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப
யோசனை நாறு குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் - மாசீல்சீர்ப் (185)
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் - மாதார்ந்த
பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழற்
கண்ணவனை அல்லாது காணா செவிஅவன
தெண்ணருஞ்சீர் அல்ல திசைகொள்ளா - அண்ணல்
கழலடி அல்லது கைதொழா அஃதான்று
அழலங்கைக் கொண்டான்மாட் டன்பென் - றெழிலுடைய
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால் (190)
அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில்
ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர்
வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போற்
கட்டுரைத்துக் கைசோர்ந் தகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் (195)
. பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு. 1
காப்பு
301. பெண்ணீர்மை காமின் பெருந்தோள் இணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா. 2
திருச்சிற்றம்பலம்