5.4 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த
திருஎழுகூற்றிருக்கை
487. ஓருடம்பு ஈருரு ஆயினை ஒன்றுபுரிந்
தொன்றி னீரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை (5)
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரண்அரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டு நீக்கி
ஒன்று நினைவோர்க் குறுதி யாயினை (10)
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டும் நினைவி லோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழி தோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை (15)
நான்முகன் மேன்முகம் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை உழிதர (20)
ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டு நின் குழையே ஒன்றுநின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க (25)
இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
ஏழில் இன்னரம் பிசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில் (30)
விறலியர் கொட்டு மழுத்த வேந்தினை
ஆல நீழல் அன்றிருந் தறநெறி
நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன் (35)
தாதை ஒருமிடற்று இருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை அவனொடு காலனை அடர்த்தனை (40)
அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருத்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன் (45)
நாற்றோள் நலனே நந்தியிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணங் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால் (50)
சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதஞ் சென்னியிற் பரவுவன் பணிந்தே. ..55 1
488 (வெண்பா)
பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் - தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து. 2
திருச்சிற்றம்பலம்