MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7. கபிலதேவ நாயனார் பாசுரங்கள் (515 - 671)

    7.1 கபிலதேவ நாயனார் அருளிச் செய்த
    மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
    515. (வெண்பா)
    திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
    ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
    காதலால் கூப்புவர்தம் கை. 1
    516 (கட்டளைக் கலித்துறை)
    கைக்கும் பிணியொடு காலன் தலைப்படும் ஏல்வையினில்
    எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்
    பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்
    திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே. 2
    517 (வெண்பா)
    அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
    இடியவலோ டெள்ளுண்டை கன்னல் - வடிசுவையில்
    தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
    வாழ்வானை வாழ்த்தியே வாழ். 3
    518 (கட்டளைக் கலித்துறை)
    வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த
    கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டைஎல் லாந்துறுத்தும்
    பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான்
    வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே. 4
    519 (வெண்பா)
    விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
    விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
    விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்
    கண்ணிற் பணிமின் கனிந்து. 5
    520 (கட்டளைக் கலித்துறை)
    கனிய நினைவொடு நாடொறும் காதற் படும் அடியார்க்
    கினியன் இனியொரு இன்னாங் கிலம்எவ ரும்வணங்கும்
    பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை
    முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே. 6
    521 (வெண்பா)
    யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார்
    மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும்
    வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
    உள்ளக் கருத்தின் உளன். 7
    522 (கட்டளைக் கலித்துறை)
    உளதள வில்லதோர் காதலென் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
    வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத்
    திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக்
    களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே. 8
    523 (வெண்பா)
    கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப்
    பணங்கொண்ட பாந்தட் சடைமேல் - மணங்கொண்ட
    தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த
    போதகத்தின் தாள்பணியப் போம். 9
    524 (கட்டளைக் கலித்துறை)
    போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல்
    நாகபந் தத்தந்த நாளம் பிறையிறை யான்பயந்த
    மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர்
    ஏகதந் தத்தெந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே. 10
    525 (வெண்பா)
    ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
    மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் - தூத்தழல்போல்
    செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழலங்கை
    முக்கட் கடாயானை முன். 11
    526 (கட்டளைக் கலித்துறை)
    முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீனுயர்த்த
    மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத்
    தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மேயுமையாள்
    தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே. 12
    527 (வெண்பா)
    சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க
    முரணுடையேன் அல்லேன் நான்முன்னம் - திரள்நெடுங்கோட்
    டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர்
    பண்டத்தான் தாள்பணியாப் பண்டு. 13
    528 (கட்டளைக் கலித்துறை)
    பண்டந்த மாதரத் தானென் றினியன வேபலவும்
    கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூருணர்வில்
    கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றை யொற்றை
    வெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே. 14
    529 (வெண்பா)
    வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய்
    தாட்கொண் டருளும் அரன்சேயை - வாட்கதிர்கொள்
    காந்தார மார்பிற் கமழ்தார்க் கணபதியை
    வேந்தா உடைத்தமரர் விண். 15
    530 ( கட்டளைக் கலித்துறை)
    விண்ணுதல் நுங்கிய விண்ணுமண் ணுஞ்செய் வினைப்பயனும்
    பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமா
    கண்ணுதல் நுங்கிய நஞ்சம்உண் டார்கரு மாமிடற்றுப்
    பெண்ணுதல் நும்பிரி யாவொரு பாகன் பெருமகனே. 16
    531 (வெண்பா)
    பெருங்காதல் என்னோடு பொன்னோடை நெற்றி
    மருங்கார வார்செவிகள் வீசி - ஒருங்கே
    திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர
    வருவான்தன் நாமம் வரும். 17
    532 (கட்டளைக் கலித்துறை)
    வருகோட் டருபெருந் தீமையும் காலன் தமரவர்கள்
    அருகோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தஅன்பு
    தருகோட் டருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும்
    ஒருகோட் டிருசெவி முக்கட்செம் மேனிய ஒண்களிறே. 18
    533 (வெண்பா)
    களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
    ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
    கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
    நண்ணுவதும் நல்லார் கடன். 19
    534 (கட்டளைக் கலித்துறை)
    நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற
    பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த
    வில்லான் அளித்த விநாயக னேஎன்று மெய்ம்மகிழ
    வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே. 20

    திருச்சிற்றம்பலம்