MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  9. இளம்பெருமான் அடிகள் பாசுரங்கள் (773 - 802)

  9.1 இளம்பெருமான் அடிகள் அருளிச் செய்த
  சிவபெருமான் திருமும்மணிக்கோவை
  773. (அகவல்)
  முதல்வன் வகுத்த மதலை மாடத்து
  இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
  பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப்
  புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
  எறிவளி எடுப்பினுஞ் சிறுநடுக் குறாநின்
  அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
  இலங்குவளைத் தனிப்போது விரித்த
  அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே. 1
  774 (வெண்பா)
  மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
  கீறு தடுப்பக் கிடக்குமே - நீறடுத்த
  செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
  எந்தாய்நின் சென்னி இடை. 2
  775 (கட்டளைக் கலித்துறை)
  இடைதரில் யாமொன் றுணர்த்துவ துண்டிமை யோர்சிமையத்
  தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
  தொடைதரு துண்டங் கிடக்கினுந் தொண்டர் ஒதுக்கியிட்ட
  புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே. 3
  776 (அகவல்)
  சடையே, நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே
  மிடறே, நஞ்சகந் துவன்றி அமிர்து பிலிற்றும்மே
  வடிவே, முளிஎரி கவைஇத் தளிர்தயங் கும்மே
  அடியே, மடங்கல்மதஞ் சீறி மலர்பழிக் கும்மே
  அஃதான்று, இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத்
  தலைமுன்று வகுத்த தனித்தாட்
  கொலையூன்று குடுமி நெடுவே லோயே. 4
  777 வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
  காலைநீர் எங்கே கரந்தனையால் -மாலைப்
  பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
  இறைக்கூறாய் எங்கட் கிது. 5
  778 இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரசி
  புதுநீர் மணத்தும் புலியத ளேஉடை பொங்குகங்கை
  முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் றோட்டதிங்கள்
  செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே. 6
  779 வண்ணம், ஐஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
  மஞ்சுமி விலகிப் பகல்செகுக் கும்மே
  என்னைப், பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள்
  நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
  அஃதான்று, முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
  நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்
  தேமுறு முதிர்சடை இறைவ
  மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே. 7
  780 உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
  புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்
  முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
  இன்னநாள் கண்ட திவள். 8
  781 இவளப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல்
  அவளப்புத் தேளிர் உலகிற் கரசி அதுகொண்டென்னை
  எவளுக்கு நீநல்ல தியாரைமுன் எய்திற்றெற் றேயிதுகாண்
  தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே. 9
  782 கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து
  அயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின்
  அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்
  யாமே கண்டதும் இலமே தாமா
  மூவா எஃகமும் முரணும்
  ஓவாது பயிற்றும் உலகமால் உளதே. 10
  783 உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத
  வளரொளிதேய்ந் துள்வளைந்த தொக்கும் - கிளரொளிய
  பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார்
  கோதைப் பிறையின் கொழுந்து. 11
  784 கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின்
  செழுந்திரட் குன்றகஞ் சென்றடைந் தாலொக்குந் தெவ்வர்நெஞ்சத்
  தழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர்
  எழுந்திரட் சோதிப் பிழம்புமென் உள்ளத் திடங்கொண்டவே. 12
  785 கொண்டற் கார்எயிற்றுச் செம்மருப் பிறாலின்
  புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
  வரையோன் மருக புனலாள் கொழுந
  இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
  நீறாடு பொழங்கழல் பரவ
  வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே. 13
  786 நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
  எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிர
  ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
  ஏற்றரால் தீரும் இடர். 14
  787 இடர்தரு தீவினைக் கெள்கிநை வார்க்குநின் ஈரடியின்
  புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப்
  படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங்
  கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே. 15
  788 அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும்
  அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
  அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக்
  குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
  மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
  காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
  நெடுவரை நௌிய வாங்கிச்
  சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே. 16
  789 ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
  ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்கு
  மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
  மீதூரக் கண்சிவந்த வேந்து. 17
  790 வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட
  சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்தகிரி
  ஏந்தற்கு மைத்துனத் தோழன்இன் தேன்மொழி வள்ளியென்னும்
  கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே. 18
  791 கொற்றத் துப்பில் ஒன்றை ஈன்ற
  துணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப்
  பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின்
  நேர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
  தவழ்தரு புனல்தலைப் படுநர்
  அவல மாக்கடல் அழுந்தலோ இலரே. 19
  792 இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்
  றுலகலொஞ் சென்றுழல்வ ரேனும் -மலர்குலாம்
  திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே
  எங்கட் குறுந்தெரியின் ஈண்டு. 20
  793 ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்
  வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்
  பூண்டஒற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்
  நீண்டஒற் றைப் பிறைக் கீளும்எப் போதும்என் நெஞ்சத்தவே. 21
  794 நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே
  மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ
  மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ
  யாதா கியதோ எந்தை நீதியென்
  றுடைதலை நெடுநிலா வெறியல்
  கடைதலென் றருளிச் சூடிய பொருளே. 22
  795 பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
  அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத
  பான்மறா மான்மறிக்கைப் பைங்கட் பகட்டுரியான்
  தான்மறான் பைங்கொன்றைத் தார். 23
  796 தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
  ஏரிய மென்முலைப் பொன்மலை யாட்டிக் கெற் றேயிவனோர்
  பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
  ஓரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே. 24
  797 உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
  இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
  புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
  நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை
  பயிற்று நாவலர்க்
  கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே. 25
  798 எளியமென் றெள்கி இகழாது நாளும்
  அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தௌிவரிய
  வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்
  கொள்கையிலை எம்மாற் குறை. 26
  799 குறையாப் பலிஇவை கொள்கஎன் கோல்வளை யுங்கலையும்
  திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில்
  பொறைபாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த
  இறைவா இடுபிணக் காடசெம் மேனிஎம் வேதியனே. 27
  800 வேதியர் பெரும விண்ணோர் தலைவ
  ஆதி நான்முகத் தண்ட வாண
  செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
  காய்சின மழவிடைப் பாகநின்
  மூவிலை நெடுவேல் பாடுதும்
  நாவலம் பெருமை நல்குவோய் எனவே. 28
  801 எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச
  நனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக்
  கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
  போர்க்கையிலை பேசல்நீ பொய். 29
  802 பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை
  இந்நீள் கடைக்கென்று வந்தறி யீர்இனிச் செய்வதென்னே
  செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த
  முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே. 20

  திருச்சிற்றம்பலம்