MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    11.2 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
    திருக்கழுமல மும்மணிக் கோவை (866 - 895)
    866 திருவளர் பவளப் பெருவரை மணந்த
    மரகத வல்லி போல ஒருகூறு
    இமையச் செல்வி பிரியாது விளங்கப்
    பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
    அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த ..(5)

    வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
    கதிர்விடு நின்முகங் காண்தொறும் காண்தொறும்
    முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்
    திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
    தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை ..(10)

    இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
    செவ்வாய்க் குமுதம் செவ்வி செய்யநின்
    செங்கைக் கமலம் மங்கை வனமுலை
    அமிர்த கலசம் அமைவின் ஏந்த
    மலைமகள் தனாது நயனக் குவளைநின் ..(15)

    பொலிவினொடு மலர மறையோர்
    கழுமல நெறிநின்று பொலிய
    நாகர் நாடு மீமிசை மிதந்து
    மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்கு
    ஒன்றா வந்த குன்றா வெள்ளத்து ..(20)

    உலகம்மூன் றுக்கும் களைகண் ஆகி
    முதலில் காலம் இனிது வீற் றிருந்துழித்
    தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
    தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
    அன்னா யோவென் றழைப்பமுன் னின்று ..(25)

    ஞான போனகத் தருள்அட்டிக் குழைத்த
    ஆனாத் திரளை அவன்வயின் அருள
    அந்தணன் முனிந்து தந்தார் யாரென
    அவனைக் காட்டுவன் அப்ப வானார்
    தோஒ டுடைய செவியன் என்றும் ..(30)

    பீஇ டுடைய பெம்மான் என்றும்
    கையில் சுட்டிக் காட்ட
    ஐயநீ வௌிப்பட் டருளினை ஆங்கே. 1
    867 அருளின் கடல்அடியேன் அன்பென்னும் ஆறு
    பொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதும்
    கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்
    அண்டத்தார் நாமார் அதற்கு. 2
    868 ஆரணம் நான்கிற்கும் அப்பா லவன்அறி யத்துணிந்த
    நாரணன் நான்முக னுக்கரி யான்நடு வாய்நிறைந்த
    பூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும்
    காரணன் அந்தக் கரணங் கடந்த கருப்பொருளே. 3
    869 கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
    காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
    தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
    அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
    மையிருள் நிறத்து மதனுடை அடுசினத் ..(5)

    தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
    அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
    துன்ப இருளைத் துரந்து முன்புறம்
    மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
    கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப் ...(10)

    பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
    சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
    எந்தைநீ இருக்க இட்டனன் இந்த
    நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
    அடையப் பரந்த ஆதிவெள் ளத்து ...(15)

    நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
    வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப
    மாலும் பிரமனும் முதலிய வானவர்
    காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி
    மற்றவர் உய்யப் பற்றிய புணையாய் ...(20)

    மிகநனி மிதந்த புகலி நாயக
    அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
    செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
    அமையாக் காட்சி இமையக்
    கொழுந்தையும் உடனே கொண்டிங்கு ....(25)

    எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே. 4
    870 மானும் மழுவும் திருமிடற்றில் வாழும்இருள்
    தானும் பிறையும் தரித்திருக்கும் - வானவர்க்கு
    வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
    உள்ளத்தே நின்ற ஒளி. 5
    871 ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளத்
    தௌிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாததொரு
    களிவந்த வாஅன்பு கைவந்த வாகடை சாரமையத்
    தௌிவந்த வாநங் கழுமல வாணர்தம் இன்னருளே. 6
    872 அருள்பழுத் தளித்த கருணை வான்கனி
    ஆரா இன்பத் தீராக் காதல்
    அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
    மாடக் கோபுரத் தாடகக் குடுமி
    மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின் ..(5)

    வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
    பாவையுடன் இருந்த பரம யோகி
    யானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள்
    அகில லோகமும் அனந்த யோனியும்
    நிகிலமும் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி ..(10)

    எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
    யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
    தாய ராகியும் தந்தைய ராகியும்
    வந்தி லாதவர் இல்லை யான்அவர்
    தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும் ...(15)

    வந்தி ராததும் இல்லை முந்து
    பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
    இறவா நிலனும் இல்லை பிறிதில்
    என்னைத் தின்னா உயிர்களும் இல்லையான் அவை
    தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை அனைத்தே ..(20)

    காலமும் சென்றது யான்இதன் மேலினி
    இளைக்குமா றிலனே நாயேன்
    நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்
    தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
    பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும் ...(25)

    இயன்றதோர் பொழுதின் இட்டது மலராச்
    சொன்னது மந்திர மாக என்னையும்
    இடர்ப்பிறப்பு இறப்பெனும் இரண்டின்
    கடற்ப டாவகை காத்தல் நின்கடனே. 7
    873 கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம்
    அடலாம் உபாயம் அறியார் - உடலாம்
    முழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான்
    கழுமலத்தைக் கைதொழா தார். 8
    874 தொழுவாள் இவள்வளை தோற்பாள்
    இவளிடர்க் கேஅலர்கொண்
    டெழுவாள் எழுகின்ற தென்செய
    வோஎன் மனத்திருந்தும்
    கழுவா மணியைக் கழுமல
    வாணனைக் கையிற்கொண்ட
    மழுவா ளனைக்கண்டு வந்ததென்
    றால்ஓர் வசையில்லையே. 9
    875 வசையில் காட்சி இசைநனி விளங்க
    முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து
    வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற
    மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
    புகலி நாயக இகல்விடைப் பாக ....(5)
    அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
    குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
    மூவெயில் எரித்த சேவகத் தேவ
    இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்
    நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக் ....(10)

    காமனை விழித்த மாமுது தலைவ
    வானவர் அறியா ஆதி யானே
    கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
    மறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக்
    காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை ...(15)
    ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்
    ஆவன பலவும் அழிவன பலவும்
    போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
    தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
    எண்ணில் கோடி எனைப்பல வாகி ...(20)
    இல்லன உளவாய் உள்ளன காணாப்
    பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்
    அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்
    கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
    குழிவழி யாகி வழிகுழி யாகி ....(25)
    ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற
    வந்தாற் போல வந்த தெந்தைநின்
    திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
    யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
    மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை ..(30)
    ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
    சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
    தவிராது தடவினர் தமக்குச்
    சுவராய்த் தோன்றும் துணிவுபோன் றெனவே. 10
    876 எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
    சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப்
    பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
    பூம்புகலி யான்இதழிப் போது. 11
    877 போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல்உண்டெங்கும்
    ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன் றேயிணை யாகச் செப்பும்
    சூதும் பெறாமுலை பங்கர்தென் தோணி புரேசர்வண்டின்
    தாதும் பெறாத அடித்தா மரைசென்று சார்வதற்கே. 12

    (பின்வரும் 13 முதல் 30 முடிய உள்ள பாசுரங்கள் பல அச்சுப் பிரதிகளில் கண்டவை.
    திருச்சிராப்பள்ளி திருமுறைக்கலைஞர் வித்துவான் திரு. பட்டுச்சாமி ஓதுவாரால் எடுத்துக்
    கொடுக்கப் பெற்றவை. மும்மணிக்கோவை முப்பது பாடல்களைக் கொண்டது என்பது
    இலக்கணம்.)

    878 சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெரும
    கருணை முதுவெள்ளம் பெருகு திருநயன
    கைவலம் நெல்லியங் கனியது போலச்
    சைவசித் தாந்தத் தெய்வ ஆகமத்ை
    வரன்முறை பகர்ந்த திருமலர் வாய ...(5)

    பவளவரை மீதில் தவளமின் என்னச்
    செப்பரு மார்பணி முப்புரி நூல
    பேரிகல் ஆணவக் காரிரு ளினுக்கும்
    பின்றொடர் வல்வினை வன்றொட ரினுக்கும்
    மாயைமா மாயை ஆயபே யினுக்கும் ... (10)

    அஞ்சல்என் றமைத்த கஞ்சமென் கரதல
    அருமறைச் சிரத்தும் பெருமைமெய் அன்பர்
    துங்க இதயத்தும் தங்கு பொற்பாத
    துன்னிய பயோதரம் மின்னினம் மிடைதலின்
    அளப்பரும் பெருமை வளத்தினை விளைத்தலின் ...(15)

    சந்திர திலகம் சிந்துரம் மருவலின்
    உறுகண் டீரவந் துறுமுழை உறுதலின்
    சாதமுறை சுழீஇச் சோதிமீ தமர்தலின்
    பணைஎழு மரவம் பிணையொடு மேவலின்
    காமரஞ் செவ்வழி காமரின் எய்தலின் ...(20)

    அளகை எதிரெனும் ஆசையுற் றுறைதலி
    னாடக மருவி நீடறை பெருதலின்
    நாட்டியத் தோகை ஈட்டமங் கணைதலின்
    அகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின்
    மலையா சலமென நிலைசேர் மாட ....(25)

    மாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசை
    நேமிமால் வரைஎனப் பூமிமீ திலங்கும்
    காழிமா நகரம் தூழிதே ரமர்ந்த
    அமையா அன்பின் உமையாள் கொழுந
    தெரியநான் முகன்பணி பெரியநா யகநின் ...(30)

    பொன்மலர்ப் பாதம் சென்னிவைத் திறைஞ்சுதும்
    மேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள்
    பரம்பரை தவறா வரம்பெரு குரவன்
    மருளற இரங்கி அருளிய குறிஎனும்
    நிந்தையில் கனக மந்தரம் நிறுவி ...(35)

    மாண்அறிவென்னும் தூணிடைப் பிணித்த
    நேசம் என்னும் வாசுகி கொளுவி
    மதித்தல் என்னும் மதித்தலை உஞற்றிய
    பேரா இன்பச் சீர்ஆ னந்தம்
    பெறலறும் அமுதம் திறனொடும் பெற்று ....(40)

    ஞானவாய் கொண்டு மோனமாய் உண்டு
    பிறப்பிறப் பென்னும் மறப்பெரும் பயத்தால்
    பன்னாட் பட்ட இன்னாங் ககற்றி
    என்னையும் தன்னையும் மறந்திட்
    டின்ப மேலீ டெய்துதற் பொருட்டே. ...(45) 13
    879 பொருளாசை பெண்ணாசை பூவாசை என்னும்
    மருள்ஆசை யாமாசை மாற்றித் - தெருள்ஞான
    வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நல்நெஞ்சே
    பூந்தராய் நாதரைநீ போற்று. 14
    880 போற்றும் பழமறை வாசிப் புனிதர் புகலிவெற்பன்
    ஆற்றும் தவத்தினைக் கண்டே நகைத்த தணிகொள்முல்லை
    தூற்றும் புயல்வட காற்றோ அடிக்கத் தொடங்குமதிக்
    கீற்றிங் கெனது மனங்குழம் பாகக் கிடைத்ததின்றே. 15
    881 இன்றென உளதென அன்றென ஆமென
    உரைதரு நூலையும் பொருளையும் தனித்தனி
    பல்வித மாகச் சொல்வகைச் சமய
    மாகிய பயம்பில் போகுதல் குறித்த
    நிலையில் துறைபல நிலையுள துறைசில ...(5)

    பொருந்திடும் உலகப் பெருங்கட லிடத்தின்
    மயிர்நூல் கிடத்திப் பயில்வுரு தோலெனும்
    வன்புறு பலகையின் என்பெனும் ஆணியில்
    நரம்பெனப் பெயரிய உரம்பெறு கயிற்றின்
    வெரிந்உறும் என்பெனும் பெரிய கூம்பின் ...(10)

    ஐம்பொறி யாகிய மொய்ம்புறு வாய்தலின்
    காயமென அமைத்த மாயநா வாயில்
    இருவினை என்ன வருசரக் கேற்றிக்
    காமம் உலோபம் ஏமமா மோகம்
    மிதமறு குரோதம் மதமாச் சரியமென் ...(15)

    றுரைபெறு யவனர் நிரையுற இருத்தி
    நெடுநீர் என்னப் படுநெடு நாணில்
    தங்கிய மடிஎனும் நங்குரஞ் சேர்த்தி
    அற்றமில் மனம்எனப் பெற்றபாய் விரித்துத்
    தடைபடா ஆசைக் கடுவளி துரப்பத் ....(20)

    தானம் ஆதி யான தீவுகளிற்
    செல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லி
    இவ்வா றியங்கும் அவ்வா றதனுள்
    முன்பார் கால வன்பார் தாக்கத்
    தொக்குறு மரக்கலம் பக்குவிட் டம்ம . ..(25)

    அக்கடல் நீருள் புக்கறி வழிவுழி
    மறலி என்னும் சுறவுபிடித் தீர்ப்பக்
    கடுநர கென்னும் படுகுழி அழுந்தி
    உளதுய ரினுக்கோர் அளவிலை அதனால்
    இம்முறை இயங்குதல் செம்மை அன்றென்று ..(30)

    முற்றுணர் பெரியோய் அற்றமில் வலியோய்
    ஓதா துணர்ந்த நாதா தீத
    அருவுரு என்னும் பொருள்முழு துடையோய்
    யாவரும் நின்வய மேவரப் புரிவோய்
    கரையறும் இன்பப் புரைதவிர் நிமல ....(35)

    சாந்தணி வனமுலை ஏந்திழை பாக
    ஞானமா மணநிறை மோனமா மலரே
    வித்தகம் பழுத்த முத்திவான் கனியே
    பரைமுதல் ஐம்பணை நிரைபெறக் கிளைத்த
    திருத்தகு நீழல் அருட்பெருந் தருவே ..(40)

    பத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்த
    பசும்பொனிற் செய்த நசும்பு பலதொக்க
    தோற்றம் போல வீற்றுவீற் றமைந்த
    தீங்கனி பணைதொறும் தாங்குமா தணையும்
    வித்துரு மத்திணை ஒத்தசெந் தளிரும் ...(45)

    ஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும்
    மேலிடு வண்டெனும் நீலமா மணியும்
    மரகதம் என்ன விரவுகாய்த் திரளும்
    மறுவில்மா மணிஎனும் நறியசெங் கனியும்
    கிடைத்தசீர் வணிகரில் படைத்தமாந் தருவும் ..(50)

    எண்டிசை சூழ்ந்து விண்தொடும் புகலி
    மேவிய பெரும ஆவி நாயகனே
    கணபணக் கச்சைப் பணஅர வசைத்த
    மட்டலர் புழுகணி சட்டை நாயகன்
    எனுமீ காமன் மன்னினன் புரப்பநீ ..(55)

    வீற்றினி திருக்க ஏற்றமெய்ப் பிரணவத்
    தோணியே பற்றெனத் துணிந்து
    காணுறும் அறிவொடு கண்டு கொண்டேனே. 16
    882 கண்டேன் புகலிக் கருத்தனைத்தன் மெய்ஞ்ஞான
    வண்டேனுண் டேமகிழும் வண்டானேன் ௭ பண்டே
    அளியனுமா னேன்மனமெய் யார்பதம்வே றின்றிக்
    குளிர்சிவா னந்தமிலங் கும். 17
    883 கும்பிட்ட பத்தர்க் கழியாத இன்பம் கொடுக்குமுத்தர்
    வம்பிட்ட கொங்கை உமைபாகர் சண்பையர் வந்திலரேல்
    கொம்பிட்ட கோழிக் கொடிவேந்தன் கொச்சையைக் கொல்வதனால்
    அம்பிட்ட கட்சிச்சிற் றிடைச்சிக்கென் னோபயன் ஆகுவதே. 18
    884 ஆகுவா கனனைத் தோகைவா கனனை
    உற்றசீர் மகார்எனப் பெற்றசுந் தரனை
    ஞானவா ரிதியில் ஆனஆ ரமுதே
    கற்றவர் கருதும் நற்றவக் கரும்பே
    இருட்குறும் பெறிந்த அருட்கலா மதியே ....(5)

    கதிர்த்தொகை குன்றா துதித்த செங்கதிரே
    நிறைந்தஅன் பவரின் உறைந்த செந்தேனே
    துன்பமொன் றறியா இன்பவா ரிதியே
    மறைமுடி விளக்கும் சுடர்விடு மணியே
    விறலரி பிரமன் பெறலரும் பொருளே ...(10)

    சிற்பநூல் முழுதும் அற்பமின் றுணர்ந்த
    ஓவியர் அற்புத மேவுகைத் தொழிலர்
    சுத்தவெண் படிகப் பித்திகைத் தலத்தின்
    நவமணி தௌித்துக் குவவின கூர்நுதித்
    தூரியங் கொண்டு சீரிதிற் குயிற்றும் ....(15)

    இமைப்பிலா நாட்டத் தமைப்பருங் கலாப
    நீலமே காரமும் கோலமார் குயிலும்
    துப்பமர் வளைவாய் ஒப்பறு பச்சைத்
    தகைசிறைக் கிளியும் புகைநிறப் புறவும்
    மேல்நிமிர் தூவிப் பால்நிற அனமும் ...(20)

    நன்மது நிகர்த்த இன்மொழிப் பூவையும்
    இனமெனக் கருதி மனமுவந் தணைத்த
    உயிர்நிலை பெற்ற மயில்முதற் பறவையும்
    கூறுபட நோக்கினர் வேறுபா டறியா
    வளனொடு செறிந்த அளவிலா மாடத் ..(25)

    துறைதரு கற்பு நிறைகுல மடவார்
    அளிமுரல் குழலும் ஒளிகிளர் முகமும்
    குலாவிய புருவமும் நிலாவிரி குழையும்
    நறியமென் சொல்லுஞ் சிறிய நுண்ணிடையும்
    தத்துநீர் உவரி முத்தமா லிகையும் ...(30)

    பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்
    திருநகர் இதுவெனக் கருதிவான் முகிலும்
    சந்திர விம்பமும் இந்திரத் தனுவும்
    இலங்குசெங் கதிரும் துலங்குவா னமுதும்
    வாரா மின்னும் தாரா கணமும் ..(35)

    ஒருங்குவந் திருந்த பெருந்திறன் ஏய்ப்பக்
    காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த
    காழிநா யகனே வாழிபூ ரணனே
    ஏர்தரும் பொற்கிரி சேர்கருங் கொடியும்
    பொன்னிற மாமெனச் சொன்னதொல் மொழியும் ...(40)

    ஏதமில் நிறைமதிச் சீதள நிலவால்
    ஆரும்மெய் உருப்பம் தீரும் என்பதும்
    மொழிதரும் இரத குளிகைதற் சேர்ந்த
    காளிமச் சீருண நீள்இயற் கனக
    மாமெனக் கூறும் தோமறு மொழியும் ....(45)

    கருட தியானம் மருள்தப வந்தோர்
    நோக்கினில் தவிரும் தீக்கடு என்றலும்
    ஆயிரங் கிரணத் தலர்கதிர் முன்னம்
    பாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழியும்
    அங்கண்மா ஞாலத் தெங்கணும் ஒப்ப ..(50)

    இயலும் பட்டாங் கயல்அல என்னல்
    சரதமெய்ஞ் ஞான வரதநிற் சேர்ந்த
    பேதையேன் பாசத் தீவினை அகற்றித்
    திருவருட் செல்வம் பெருகுமா றுதவி
    அளித்தருள் பேரின் பாகும் ..(55)

    களித்திடும் முத்திக் காழிவான் கனியே. 19
    885 காழிக்கு வேந்தர் கருணா லயர்முனம்நீ
    காழிக் குமரன் கவிகையினை - ஆழிக்கட்
    கண்டமட்டில் சூடகமும் கார்விழியிற் கங்கணமும்
    கொண்டனள்என் றன்னமே கூறு. 20
    886 கூறுஞ் செனனக் குடில்நெடு நாள்நுழை கூன்முழுதும்
    மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர்கொண்ட
    நீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம்
    தேறும் பொருள்என் றுணராத மாயச் செருக்கினர்க்கே. 21
    887 செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றி
    எம்ம னோரின் இறந்துபிறந் துழலும்
    மம்மரிற் பெரிய வானவர் குழுவை
    மெய்ப்பொருள் என்று கைப்பொருள் உதவியும்
    வழுத்தியும் நெஞ்சத் தழுத்தியும் வறிதே ..(5)

    புறவார் பசும்புற் கறவாக் கற்பசு
    வாயிடைச் செருகித் தூயநீர் உதவி
    அருஞ்சுவைப் பால்கொளப் பெருஞ்சுரை வருடும்
    பேதையர் போலவும் ஓதுநஞ் சமரும்
    எட்டியை விரும்பி மட்டுநீர்த் தேக்கி ..(10)

    ஈநுழை கல்லா மேல்நிமிர் வேலி
    உறும்படி அமைத்து நருங்கனி கொள்ளக்
    கருதி முயலுந் திருவிலி போலவும்
    இலகுவால் அரிசி உலைபெய எண்ணி
    வெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும் ..(15)

    அருநிலம் உழுததின் எருமிகப் பெய்து
    வித்திட் டாங்கே விளைபயன் கொள்ளச்
    சித்தத் துன்னும் மத்தர் போலவும்
    வாழ்நாள் அனைத்தும் வீழ்நா ளாக்கி
    இம்மையும் மறுமையும் செம்மையிற் பொருந்தா ..(20)

    திடருறும் மாந்தர் புடவியிற் பலரால்
    அன்னவா றௌியனும் உன்னிமதி மயங்கா
    தெய்ப்பினில் உதவு மெய்ப்பொரு ளாகி
    என்றும்ஓர் இயல்பொடு நின்றகா ரணநின்
    சேவடி த் தாமரைப் பூவினைப் புனைந்து ...(25)

    நாத்தழும் பேற ஏத்திஉள் ளுருகிப்
    பெருகிய அன்பென வருநீர் நிறைந்த
    இதய வாவிப் பதுமமா மலரின்
    குணனெனப் பொருந்தும் மணமாம் நின்னைக்
    கண்டிறு மாந்து பண்டைவா தனைதீர்ந் ..(30)

    தறைகடல் அழுந்தும் நிறைகுட மதுபோன்
    றசைவற் றிருக்க இசையத் தருதி
    நிலைமிகப் பொருந்திப் பலமுறை சாரலால்
    உந்திய வன்ன உருமரு வுதலான்
    மந்திரத் துறுசுடர் மகத்துயர் தலினால் ...(35)

    இதம்பயில் இசைகொள் பதங்கவந் துறுதலால்
    வேதமே ஒப்பென ஓதுகோ புரமும்
    ஒழுக்குநெறி சிறிதும் வழுக்கில அதனால்
    நூற்பதப் பிரிவின் மேற்பதம் அதனால்
    பலகலை ஒளிர்மதி நிலவிய அதனால் ...(40)

    முத்தரை வியக்கும் பத்திமை அதனால்
    சிவாகமம் எனஒளிர் துவாமணி மேடையும்
    வெள்ளைவா ரணமேற் கொள்ளுமாங் கதனால்
    கட்டா மரைபல மட்டார் தலினால்
    அஞ்சுமந் தூரம் விஞ்சிஓங் குதலால் .....(45)

    இந்திரன் எனப்பொலி யந்திர வாவியும்
    எங்கணும் நிறைந்த வெங்குரு நாதா
    கருவலி தொலைக்கும் பெருமலை மருந்தே
    கருணைசூற் கொண்ட பெரியவான் முகிலே
    சிற்றிடைக் கருங்கட் பொற்றொடிக் கரத்தூள் ....(50)

    ஆகமார் வனமுலை அணையும்
    போகமார் இதழிப் பூங்கண் ணியனே. 22
    888 கண்ணின் றொளிருங் கருமணியின் உள்ளொளிபோல்
    உண்ணின் றொளிரும் ஒளிவிளக்கென் - றெண்ணிப்
    புகலிப் பெருமானைப் புண்ணியனைப் போற்றில்
    அகலுமே பாசவிருள் அன்று. 23
    889 இருள்அந் தகன்வரின் ஈர்எயி றேபிறை ஏய்ந்தசெவ்வான்
    சுருள்குஞ்சி பாசம் எனஅந்தி வந்தது தோகைசொற்றேன்
    பருகும் புகலிப் பிரான்எனும் பானுப் பலகிரணம்
    பெருகும் படிவந் துதித்தால் மின்ஆவி பெருகுவளே. 24
    890 பெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட்
    காயினும் சிறந்த நேயநெஞ் சினனே
    யாகக் கழனியின் யோகத் தபோதனர்
    ஆனபேர் உழவர் மானமோ டாக்கிய
    முயலகன் என்னும் இயல்பெருங் கரும்பை ....(5)

    உதிரம் என்னும் முதிர்சா றொழுக
    நகையெனும் முத்தந் தொகையுறத் தோன்றச்
    சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்
    டரைத்தக வயிரங் கரைத்த வித்தகனே
    குங்குமக் கொங்கை அங்கயற் செங்கட் ...(10)

    பெண்ணரசி பிரியா வண்ணமெய்ப் பாக
    பாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சி
    வௌிய கற்பூரம் களிகொள் கத்தூரி
    நறுமணம் எவையும் உறுமுறை பொருந்தி
    உண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும் ...(15)

    நெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும்
    மதிதரு நிலவெனப் புதிய வெண்டயிரும்
    வருக்கையின் கனியும் சருக்கரைக் கட்டியும்
    முதல்உப கரணம் பதனொடு மரீஇத்
    தளவரும் பென்ன வளமலி போனகம் ...(20)

    மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்
    நன்னயத் துடன்அருள் அன்னசத் திரமும்
    பாடகச் சீரடிப் பான்மொழி மடவார்
    நாடகத் தொழில்பயில் நீடரங் கெவையும்
    கலைபயில் கழகமும் பலர்பயில் மன்றமும் ...(25)

    உள்ளன கரவா துவந்தெதிர்ந் தளிக்கும்
    வள்ளியோர் வாழும் மணிநெடு வீதியும்
    பூமகள் உறையு ளாமென விளங்கும்
    பெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனே
    ஏந்தெழிற் புவன வேந்தன்நீ ஆதலின் ....(30)

    வளமலி நான்முகக் களமருன் ஏவலின்
    உரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்ட
    மண்டலம் என்னும் கண்டநீள் வயலுள்
    சராசரத் தொகுதி விராயவித் திட்டுப்
    பாதவ மிருகம் பறவை மானிடர் ...(35)

    ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப
    மாவுறை மருமக் காவ லாளர்
    வளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின்
    புரிபயன் பெறுவான் அரிதர வியற்றி
    மெய்வலிக் கூற்றுவக் கைவினை மாக்கனி ....(40)

    புலாலுடை யாக்கைப் பலாவம தகற்றி
    அற்றமில் உயிரெனப் பெற்றநெற் றிரளைப்
    பூதசா ரத்தனுப் பூத மகாதனு
    பூத பரிணாமம் புகலுறு யாக்கை
    மூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப் ....(45)

    பொன்னில நிரயம் இந்நிலம் என்னும்
    இடந்தொறும் ஆங்கவை அடங்கவைத் தவற்றுள்
    ஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற்
    சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்
    அரசுகொள் கடமை ஆறிலொன் றென்னும் ..(50)

    புரைதீர் முறைமை புதுக்கினை போலும் அதனால்
    மாசுகம் நீயுறும் வண்மை
    பேசுக கருணைப் பெரியநா யகனே. 25
    891 பெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக்
    கொருவா தருள்வரம் ஒன்றுண்டே - திருமால்
    விடையாய் புகலி விமலா மவுன
    விடையாய் பிறியா விடை. 26
    892 விடையம் பொருளென் றுணராத மார்க்கம் விரும்புமழுப்
    படையம் புயக்கரத் தெந்தாதை ஞான பரமஎன்றெண்
    சடையம் புனலணி வேணு புரேசன்அந் தாள்மலர்தூ
    விடையம் பொருளென் றிருநீஎன் றுண்மை விளம்பினனே. 27
    893 விளம்புவன் யான்ஒன் றுளம்புகு நெறியால்
    எழுத்தின் உறழாது வழுத்துபொருள் இன்றி
    குறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லே
    ஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி
    குழலினு மியாழினும் அழகிதாம் அதுபோல் ...(5)

    நற்றா யாகிஎற் பெற்றாய் என்சொல்
    திருச்செவிக் கேறும் பொருத்தமுண் டதனால்
    கேட்டி கேட்டி வாட்டமில் பெரியோய்
    மதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப்
    பற்பல உதவுங் கற்பகத் தருவு ..(10)

    நந்தா வளன்அருட் சிந்தா மணியும்
    வாமமாம் மேனிய காம தேனுவும்
    அருளிய ஏவல் வரன்முறை கேட்பக்
    கடவுளர் அணிமணித் தடமகு டங்கள்
    காற்றுணை வருடப் போற்றினர் இறைஞ்சி ...(15)

    முனிவர் ஆசி நனிபல மொழியக்
    கரம்பயில் கவரி அரம்பையர் இரட்டக்
    கின்னரர் விபஞ்சி நன்னரம் புளரா
    இசையமு திருஞ்செவி மிசைஎடுத் தூற்ற
    முடங்குளைச் செங்கண் மடங்கல் அணைநாப்பண் ....(20)

    அமுதுகு மென்சொற் குமுதமென் செவ்வாய்
    இந்தி ராணி வந்தரு கிருப்பக்
    கருமுகில் ஆயிரந் திருமலர் பூத்துச்
    செங்கதிர்ச் சேகரம் துங்கவீற் றிருந்த
    பெருந்திறன் கடுப்ப இருந்துவிண் புரக்கும் ...(25)

    அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும்
    பழமறை கனிந்து மழவுபெற் றிருந்த
    செந்நாத் தவிசின் முன்னாள் தங்கிப்
    பனுவ லாட்டி இனிதுவந் திருப்ப
    வண்டுபாண் முரன்று கிண்டுபு ததைந்து ...(30)

    பொற்றா துண்ணா முற்றா இன்பப்
    பிரசமுற் றிருந்த வரசரோ ருகத்தன்
    நெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாது
    திண்ணிய மனத்திடை எண்ணியாங் கியற்றி
    எம்மால் எவையும் இயன்றன என்னச் ...(35)

    செம்மாந் திருக்கும் சிறிய வாழ்க்கையும்
    திதலைபூத் தலர்ந்து மதகளி றிகலி
    வருமுலை சுமந்த திருமகள் பச்சைப்
    பசுந்துழாய் அலங்கல் அசும்புதேன் துளித்துக்
    கடிகமழ் மார்பிற் குடிபுகுந் திருப்பத் ..(40)

    தண்ணில வெனவிரி வெண்ணிறப் பாற்கடல்
    ஒல்லொலித் தரங்கம் மெல்லடி வருடக்
    காமர்தென் கால்எனுஞ் சாமரை அசையத்
    துத்திநெய் பரந்து பைத்தபை அகலில்
    அணிகிளர் பலகதிர் மணிவிளக் கொளிரச் ...(45)

    சுடிகைவான் அரவ நெடியபூ அணைமேல்
    மறுவிலா நீல வரைகிடந் தென்ன
    அறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும்
    அழியா இன்பம்என் றொழியா துரைப்பினும்
    கற்றவர் கருத்தின் உற்று நோக்குழி ...(50)

    இந்திர சாலம் முந்துநீள் கனவு
    வெண்டேர் போல உண்டெனத் தோன்றி
    இலவாம் ஆதலின் நலமல ஆங்கவை
    நிலைபே றுடையது நின்னருட் செல்வம்
    அன்னதே பெறுதற் குன்னினன் தமியேன் ...(55)

    அதனால்
    எளிதினின் இரங்கி அளிசுரந் தருளுதி
    மரகதத் திடையிடை தரளமிட் டிழைத்த
    அரமியம் அதனை விரிகுழை பொதுளி
    அரும்பிய புன்னைப் பெரும்பொழில் எனவும் ...(60)

    ஆடக அலங்கல் அணியணி நிறைத்த
    சேடுயர் நீல்நிறச் செய்குன் றதனைத்
    துணர்த்தபூங் கொன்றை மணத்தகா எனவும்
    மொய்க்கும்வண் சிறையுளி மைக்கரு நிறங்கள்
    பளிங்கரிந் தியற்றிய துளங்கொளி மாடப் ....(65)

    பித்திகைத் தலத்திடைப் பத்திபாய் தலினால்
    வந்ததிங் கிரவெனச் சந்தத மடவார்
    வார்முலை ஆடவர் மார்பிடை குளிப்பப்
    புல்லிய கலவிப் புதியதேன் நுகரும்
    மல்லலங் காழி வளநகர் வாண ...(70)

    குறிகுணங் கடந்த மறுவில்மா மணியே
    உறைபொருள் எங்கணும் நிறைபரி பூரண
    அந்த மாதி முந்தையே தவிர்ந்த
    அனாதி முத்த என்ஆதி நித்த
    அருவுரு வில்லா ஒருபெரும் பொருளே ....(75)
    அளவையின் அடங்கா தொளிர்சுக நேய
    உருகுமெய் அன்பர் பருகுமா ரமுதே
    நலங்கனி பெரிய நாயகி
    கலந்தபே ரின்பிற் களித்தபண் ணவனே. 28
    894 பணமஞ் சரையிருக்கப் பாவையரைச் சும்மா
    புணர்கின்றீர் என்று புகலப் - புணர்வார்க்
    கரைக்காசு தந்தனம்என் றார்புகலி யார்மா
    வரைக்காசென் றான்அதற்கு மான். 29
    895 மானைக் கலந்த மணவாளன் காழி வரதன்செங்க
    ணானைப் புரந்தவன் பத்தர்க்கு முத்தி அளித்தருளும்
    ஏனைப் பெரும்பொருள் கல்விமெய் செல்வம் இருந்தளிப்பார்
    தேனைத் தருஞ்செழுந் தாமரை நாமகள் செந்திருவே. 30

    திருச்சிற்றம்பலம்