MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  11.4 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
  திருஏகம்பமுடையார் திருவந்தாதி (926 - 1025)
  926 மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய்
  கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே
  பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்ற
  இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே. 1
  927 ஏகம்பனே என்னை ஆள்பவ னேஇமை யோர்க்கிரங்கிப்
  போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும்ஐவாய்
  நாகம்பொன் னாரம் எனப்பொலி வுற்றுநல் நீறணியும்
  ஆகம்பொன் மாமலை ஒப்பவ னேயென்பன் ஆதரித்தே. 2
  928 தரித்தேன் மனத்துன் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய்
  வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேஎன்றன் வல்வினையை
  அரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச்
  சிரித்தேன் உனக்கடி யாரடி பூணத் தௌிந்தனனே. 3
  929 தௌிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடிவம்
  அளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச் செக்கர்
  ஒளிதரு மேனிஎம் ஏகம்ப னேஎன் றுகந்தவர்தாள்
  தளிதரு தூளிஎன் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே. 4
  930 பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர்
  கற்றுகந் தேன்என் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின்
  பற்றுகந் தேறும் உகந்தவ னேபட நாகக்கச்சின்
  சுற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே. 5
  931 அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக் கயற்கலரின்
  முடிநின்ற சூழ்முடி காண்பரி தாயிற்றுக் கார்முகிலின்
  இடிநின்ற சூழ்குரல் ஏறுடை ஏகம்ப யாம்எங்ஙனே
  வடிநின்ற சூலப் படையுடை யாயை வணங்குவதே. 6
  932 வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர்
  இணக்கன்றி மற்றோர் இணக்கறி வோமல்லம் வல்லரவின்
  குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடின் அல்லால்
  கணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே. 7
  933 நலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்கள்அன்பு
  கலந்தர னார்கச்சி ஏகம்பம் கண்டு கனல்திகிரி
  சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய்தக்கன் வேள்வியெல்லாம்
  நிலந்தர மாகச்செய் தாயென்று பூசித்து நின்மின்களே. 8
  934 மின்கள்என் றார்சடை கொண்டல்என் றார்கண்டம் மேனிவண்ணம்
  பொன்கள்என் றார்வௌிப் பாடுதம் பொன்அடி பூண்டுகொண்ட
  என்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான்
  தன்களென் றார்உல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே. 9
  935 தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும்
  வன்மையிற் குன்றா மதிற்கச்சி ஏகம்பர் வண்கயிலைப்
  பொன்மயிற் சாயலும் சேயரிக் கண்ணும் புரிகுழலும்
  மென்மையிற் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே. 10
  936 தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம் அடியார்
  மனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர் வான்கயிலைச்
  சினம்விட் டகலாக் களிறு வினாவியோர் சேயனையார்
  புனம்விட் டகலார் பகலாம் பொழுதும்நம் பூங்கொடியே. 11
  937 பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சிஏ கம்பர்பொற்பார்
  கோங்கத் திருந்த குடுமிக் கயிலைஎம் பொன்னொருத்தி
  பாங்கொத் திருந்தனை ஆரணங் கேபடர் கல்லருவி
  ஆங்கத் திருந்திழை ஆடிவந் தாற்கண் டடிவருத்தே. 12
  938 வருத்தம் தருமெய்யும் கையில் தழையும் வன்மாவினவும்
  கருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத்
  திருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத்
  துருத்தந் திருப்பதன் றிப்புனங் காக்கும் தொழில்எமக்கே. 13
  939 எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை
  உம்மையும் மானிடம் இப்புனத் தேவிட்டு வந்தமைந்தர்
  தம்மையும் மானையும் சிந்தையும் நோக்கங் கவர்வஎன்றோ
  அம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே. 14
  940 அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலையுள் எம்மையரம்
  பிருளைக் கரிமறிக் கும்இவர் ஐயர் உறுத்தியெய்ய
  வெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்கு
  மருளைத் தருசொல்லி எங்கோ விளையுண்டிவ் வையகத்தே. 15
  941 வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள்
  ஐயார் வருகலை ஏனம் கரிதொடர் வேட்டையெல்லாம்
  பொய்யான ஐயர் மனத்தவெம் பூங்கொடி கொங்கைபொறாப்
  பையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே. 16
  942 பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட்
  டுருமொத்த திண்குரற் சீயம் திரிநெறி ஓங்குவைவாய்ப்
  பொருமுத் தலைவேற் படைக்கம்பர் பூங்கயி லைப் புனத்துள்
  தருமுத் தனநகை தன்நசை யால்வெற்பு சார்வரிதே. 17
  943 அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணிய
  அரிதன் திருவடிக் கர்ச்சித்த கண்ணுக் கருளுகம்பர்
  அரிதன் திருக்கங் குலியால் அழிந்த கயிலையல்லிங்
  கரிதென் றிருப்பதெம் பால்வெற்ப எம்மையர்க் கஞ்சுதுமே. 18
  944 அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர்
  நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி ஏகம்பர் நீள்கயிலைக்
  குஞ்சரத் தாழ்வரை வீழநுங் கொம்புய்யக் கும்பமூழ்கும்
  வெஞ்சரத் தாரன வோஅல்ல வோஇவ் வியன்முரசே. 19
  945 சேய்தந் தகைமை உமைகண வன்திரு ஏகம்பத்தான்
  தாய்தந்தை யாய்உயிர் காப்போன் கயிலைத் தயங்கிருள்வாய்
  வேய்தந்த தோளிநம் ஊச லொடும் விரை வேங்கைதன்னைப்
  பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட தோசைப் பகடுவந்தே. 20
  946 வந்தும் மணம்பெறின் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம்
  முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேன்இழிச்சித்
  தந்தும் மலர்கொய்தும் தண்திசை மேயுங் கிளிகடிந்தும்
  சிந்தும் புகர்மலை கைச்சும்இச் சாரல் திரிகுவனே. 21
  947 திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக்
  கிரியக் குறவர் பருவத் திடுதர ளம்வினையோம்
  விரியச் சுருள்முத லானும் அடைந்தோம் விரைவிரைந்து
  பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற தென்அங்குப் பேசுமினே. 22
  948 பேசுக யாவரு மைக்கணி யார்என்று பித்தர்எங்கும்
  பூசுகை யார்திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத்
  தேசுகை யார்சிலை வெற்பன் பிரியும் பரிசிலர்அக்
  கூசுகை யாதுமில் லாக்குலை வேங்கைப் பெயர்நும்மையே. 23
  949 பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப்
  பெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின்
  துயரால் வருந்தி மனமும்இங் கோடித் தொழுதுசென்ற
  தயரா துரையும்வெற் பற்கடி யேற்கும் விடைதமினே. 24
  950 தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும்
  மும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலை
  அம்மைக் கருங்கண்ணி தன்னொடின் பந்தரும் தண்புனமே
  எம்மைக் கவலை செயச்சொல்லி யோவல்லி எய்தியதே. 25
  951 இயங்கும் திரிபுரம் எய்தஏ கம்பர் எழிற்கயிலைத்
  தயங்கு மலர்ப்பொழில் காள்தையல் ஆடரு வித்தடங்காள்
  முயங்கு மணியறை காள்மொழி யீர்ஒழி யாதுநெஞ்சம்
  மயங்கும் பரிசுபொன் னார்சென்ற சூழல் வகுத்தெமக்கே. 26
  952 வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம்
  மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக்கள்வாய்
  நெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவுகம்பர்
  தொகுப்பால் மணிசிந் தருவிக் கயிலைஇச் சூழ்புனத்தே. 27
  953 புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்ற
  கனங்குழை யாள்தற் பிரிய நமக்குறும் கையறவால்
  மனங்குழை யாவரும் கண்களி பண்பல பாடுந்தொண்டர்
  இனங்குழை யாத்தொழும் ஏகம்பர் இக்கயி லாயத்துள்ளே. 28
  954 உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம்
  கள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கன்றிக் கங்கையென்னும்
  வெள்ளம் பெரிய சடைத்திரு ஏகம்பர் விண்அரணம்
  தள்ளம் பெரிகொண் டமைத்தார் அடியவர் சார்வதன்றே. 29
  955 அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதஅருவிக்
  குன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடைநிழற்கீழ்
  நின்றும் பொலியினும் கம்பர்நன் னீறு நுதற்கிலரேல்
  என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே. 30
  956 நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம்
  வலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த் தாலும்வெற்பன்
  குலத்துமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித்தொழும்
  நலத்தமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே. 31
  957 படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும்
  நடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும்
  கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள்
  உடையான் கழற் கன்ப ரேல்அவர் யாவர்க்கும் உத்தமரே. 32
  958 உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி
  பத்துங்கை யான இருபதும் சோர்தர வைத்திலயம்
  ஒத்துங்கை யாலவன் பாடக் கயிலையின் ஊடுகைவாள்
  எத்துங்கை யான்என் றுகந்தளித் தார்கச்சி ஏகம்பரே. 33
  959 அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு
  அம்பரம் கொள்வதோர் வேழத் துரியவன் தன்னுருவாம்
  எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தான்இடை யாதடைவான்
  நம்பரன் தன்னடி யார்அறி வார்கட்கு நற்றுணையே. 34
  960 துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும்
  பணைத்தோள் அகலமும் கண்டத்து நீலமும் அண்டத்துமின்
  பிணைத்தா லனசடை யுந்திரு முக்கணும் பெண்ணொர்பக்கத்
  தணைத்தார் எழிற்கம்பர் எங்கள் பிரானார்க் கழகியவே. 35
  961 அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம்
  பழகறி விற்பெரி யோர்தமைப் பற்றலர் பற்றும்அன்பின்
  குழகறி வேற்பினுள் ஒன்றறி யாரறி யாமைதெய்வம்
  கிழகெறி யப்பட் டுலந்தார் உலகிற் கிடந்தனரே. 36
  962 கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு பால்மதியம்
  தொடக்குண் டிலங்கும் மலங்கும் திரைக்கங்கை சூடுங்கொன்றை
  வடக்குண்டு கட்டத் தலைமாலை வாளால் மலைந்தவெம்போர்
  கடக்கும் விடைத்திரு ஏகம்பர் கற்றைச் சடைமுடியே. 37
  963 கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார்
  முற்றுற் றிலாமதி யின்கொழுந் தேகம்பர் மொய்குழலாம்
  மற்றைத் திசையின் மணிப்பொற் கொழுந்தத் தரங்கழுநீர்
  தெற்றிப் பொலிகின்ற சூட்டழ காகித் திகழ்தருமே. 38
  964 தருமருட் டன்மை வலப்பால் கமலக்கண் நெற்றியின்மேல்
  திருமலர்க் கண்பிள வின்றிக ழுந்தழல் செல்வக்கம்பர்
  கருமலர்க் கண்இடப் பாலது நீலம் கனிமதத்து
  வருநுதற் பொட்டணங் குக்குயர்ந் தோங்கும் மலர்க்குழலே. 39
  965 மலர்ந்த படத்துச்சி ஐந்தினும் செஞ்சுடர் மாமணிவிட்
  டலர்ந்த மணிக்குண் டலம்வலக் காதினில் ஆடிவரும்
  நலந்திரு நீள்வயி ரம்வெயிற் பாய நகுமணிகள்
  கலந்தசெம் பொன்மக ரக்குழை ஏகம்பர் காதிடமே. 40
  966 காதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம் அங்குயர்ந்து
  போதலைக் கும்பனிப் பொன்மலை நீற்றின் பொலியகலம்
  தாதலைக் குங்குழல் சேர்பணைத் தோள்நறுஞ் சாந்தணிந்து
  சூதலைக் கும்முலை மார்பிடம் ஏகம்பர் சுந்தரமே. 41
  967 தரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளரா
  உரம்பொற் புடைய திருவயி றாம்வலம் உம்பர்மும்மைப்
  புரம்பொற் பழித்தகம் பர்க்குத் தரத்திடு பூண்முலையும்
  நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்தே. 42
  968 உடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சி
  வடத்தொரு கோவணந் தோன்றும் அரைவலம் மற்றையல்குல்
  தொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூநுண்டுகில்
  அடல்பொலி ஏறுடை ஏகம்பம் மேய அடிகளுக்கே. 43
  969 அடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந்
  திடிகுரற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின்
  அடியிடப் பாலது பஞ்சுற அஞ்சுஞ் சிலம்பணிந்த
  வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே. 44
  970 தருக்கவற் றான்மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையை
  நெருக்கவற் றோட மழுவாள் விசைத்தது நெற்களென்றும்
  பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர் அத்தர்தம் பாம்புகளின்
  திருக்கவற் றாலிட் டருளும் கடகத் திருக்கரமே. 45
  971 கரத்தத் தமருகத் தோசை கடுத்தண்டம் மீபிளப்ப
  அரத்தத்த பாதம் நெரித்திட் டவனி தலம்நெரியத்
  தரத்தத் திசைகளுக் கப்புறம் போர்ப்பச் சடைவிரித்து
  வரத்தைத் தருகம்பர் ஆடுவர் எல்லியும் மாநடமே. 46
  972 நடனம் பிரான்உகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர்
  உடன்வந்து மூவா யிரவர் இறைஞ்சி நிறைந்தஉண்மைக்
  கடனன்றி மற்றறி யாத்தில்லை அம்பலம் காளத்தியாம்
  இடம்எம் பிரான்கச்சி ஏகம்பம் மேயாற் கினியனவே. 47
  973 இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத்
  தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த
  முனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டிஅன்புக்
  கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே. 48
  974 பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல்
  வரவித் தனையுள்ள தெங்கறிந் தேன் முன் அவர்மகனார்
  புரவித் தனையடிக் கக்கொடி தாய்விடி யாஇரவில்
  அரவித் தனையுங்கொண் டார்மட வார்முன்றில் ஆட்டிடவே. 49
  975 இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண்
  டிடஅஞ் சுவர்மட வார்இரி கின்றனர் ஏகம்பத்தீர்
  படம்அஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற்
  படஅஞ் சுவர்எங்ங னேபலி வந்திடும் பாங்குகளே. 50
  976 பாங்குடை கோள்புலி யின்அதள் கொண்டீர்நும் பாரிடங்கள்
  தாங்குடை கொள்ளப் பலிகொள்ள வந்தீர் தடங்கமலம்
  பூங்குடை கொள்ளப் புனற்கச்சி ஏகம்பம் கோயில்கொண்டீர்
  ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள வந்தீர் இடைக்குமின்றே. 51
  977 இடைக்குமின் தோற்கும் இணைமுலை யாய்முதி யார்கள்தஞ்சொல்
  கடைக்கண்நன் றாங்கச்சி ஏகம்பர் ஐயங் கொளக்கடவும்
  விடைக்குமுன் தோற்றநில் லேநின் றினியிந்த மொய்குழலார்
  கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது வோதங் கிறித்துவமே. 52
  978 கிறிபல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக்
  குறிபல பாடிக் குளிர்கச்சி ஏகம்பர் ஐயங்கொள்ள
  நெறிபல வார்குழ லார்மெலி வுற்ற நெடுந்தெருவில்
  செறிபல வெள்வளை போயின தாயர்கள் தேடுவரே. 53
  979 தேடுற் றிலகள்ள நோக்கம் தெரிந்தில சொற்கள்முடி
  கூடுற் றிலகுழல் கொங்கை பொடித்தில கூறும்இவள்
  மாடுற் றிலமணி யின்மட அல்குலும் மற்றிவள்பால்
  நாடுற் றிலஎழில் ஏகம்ப னார்க் குள்ளம் நல்கிடத்தே. 54
  980 நல்கும் புகழ்க்கட வூர்நன் மறையவன் உய்யநண்ணிக்
  கொல்கின்ற கூற்றைக் குமைத்த வெங் கூற்றம் குளிர்திரைகள்
  மல்கும் திருமறைக் காட்டமிர் தென்றும் மலைமகள் தான்
  புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம் மேவிய பொன்மலையே. 55
  981 மலையத் தகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலை
  நிலையத் தமரர் தொழஇருந் தான்நெடு மேருஎன்னும்
  சிலையத்தன் பைம்பொன் மதில்திரு ஏகம்பத் தான்திகழ்நீர்
  அலையத் தடம்பொன்னி சூழ்திரு ஐயாற் றருமணியே. 56
  982 மணியார் அருவித் தடம்இம யங்குடக் கொல்லிகல்லின்
  திணியார் அருவியின் ஆர்த்த சிராமலை ஐவனங்கள்
  அணியார் அருவி கவர்கிளி ஒப்பும்இன் சாரல்விந்தம்
  பணிவார் அருவினை தீர்க்கும்ஏ கம்பர் பருப்பதமே. 57
  983 பருப்பதம் கார்தவழ் மந்தரம் இந்திர நீலம்வெள்ளை
  மருப்பதங் கார்கருங் குன்றியங் கும்பரங் குன்றம் வில்லார்
  நெருப்பதங் காகுதி நாறும் மகேந்திரம் என்றிவற்றில்
  இருப்பதங் காவுகந் தான்கச்சி ஏகம்பத் தெம்மிறையே. 58
  984 இறைத்தார் புரம்எய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு
  மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்ற மன்னல்குன்றம்
  நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக் குன்றம்என் தீவினைகள்
  குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே. 59
  985 கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் தானம் துருத்தியம்பேர்
  தேறுமின் வேள்விக் குடிதிருத் தோணி புரம்பழனம்
  ஆறுமின் போல்சடை வைத்தவன் ஆருர் இடைமருதென்
  றேறுமின் நீரெம் பிரான்கச்சி ஏகம்பம் முன்நினைந்தே. 60
  986 நினைவார்க் கருளும் பிரான்திருச் சோற்றுத் துறைநியமம்
  புனைவார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணம்நீர்
  புனைவார் பொழில்திரு வெண்காடு பாச்சில் அதிகையென்று
  நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி ஏகம்பம் நண்ணுமினே. 61
  987 நண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம்நல்லூர்
  மண்ணில் பொலிகடம் பூர்கடம் பந்துறை மன்னுபுன்கூர்
  எண்ணற் கரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடி
  கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி ஏகம்பம் காண்மின் சென்றே. 62
  988 சென்றேறி விண்ணுறும் அண்ணா மலைதிகழ் வல்லம்மென்பூ
  வின்தேறல் பாய்திரு மாற்பேறு பாசூர் எழில்அழுந்தூர்
  வன்தே ரவன்திரு விற்பெரும் பேறு மதில்ஒற்றியூர்
  நின்றேர் தருகச்சி ஏகம்பம் மேயார் நிலாவியவே. 63
  989 நிலாவு புகழ்த்திரு வோத்தூர் திருஆமாத் தூர்நிறைநீர்
  சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சைதொண்டர்
  குலாவு திருப்பனங் காடுநன் மாகறல் கூற்றம்வந்தால்
  அலாய்என் றடியார்க் கருள்புரி ஏகம்பர் ஆலயமே. 64
  990 ஆலையங் கார்கரு காவைகச் சூர்திருக் காரிகரை
  வேலையங் கேறு திருவான்மி யூர்திரு ஊறல்மிக்க
  சோலையங் கார்திருப் போந்தைமுக் கோணம் தொடர்கடுக்கை
  மாலையன் வாழ்திரு ஆலங்கா டேகம்பம் வாழ்த்துமினே. 65
  991 வாழப் பெரிதெமக் கின்னருள் செய்யும் மலர்க்கழலோர்
  தாழச் சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழதவர்போய்
  வாழப் பரற்சுரம் ஆற்றா தளிரடி பூங்குழல் எம்
  ஏழைக் கிடையிறுக் குங்குய பாரம் இயக்குறினே. 66
  992 உறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக் குன்பின்வரப்
  பெறுகின்ற வண்மையி னால்ஐய பேரருள் ஏகம்பனார்
  துறுகின்ற மென்மலர்த் தண்பொழில் கச்சியைச் சூழ்ந்திளையோர்
  குறுகின்ற பூங்குவ ளைக்குறுந் தண்பணை என்றுகொளே. 67
  993 கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சில வேய்உலறி
  விள்ளும் வெடிபடும் பாலையென் பாவை விடலைபின்னே
  தெள்ளும் புனற்கச்சி யுள்திரு ஏகம்பர் சேவடியை
  உள்ளும் அதுமறந் தாரெனப் போவ துரைப்பரிதே. 68
  994 பரிப்பருந் திண்மைப் படையது கானர் எனிற்சிறகு
  விரிப்பருந் துக்கிறை ஆக்கும்வெய் யேன்அஞ்சல் செஞ்சடைமேல்
  தரிப்பருந் திண்கங்கை யார்திரு வேகம்பம் அன்னபொன்னே
  வரிப்பருந் திண்சிலை யேயும ராயின் மறைகுவனே. 69
  995 வனவரித் திண்புலி யின்அதள் ஏகம்ப மன்னருளே
  எனவரு பொன்னணங் கென்னணங் கிற்கென் எழிற்கழங்கும்
  தனவரிப் பந்தும் கொடுத்தெனைப் புல்லியும் இற்பிரிந்தே
  இனவரிக் கல்லதர் செல்வதெங் கே ஒல்கும் ஏழைநெஞ்சே. 70
  996 நெஞ்சார் தரஇன்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள்
  பஞ்சார் அடிவைத்த பாங்கிவை ஆங்கவள் பெற்றெடுத்த
  வெஞ்சார் வொழியத்தன் பின்செல முன்செல் வெடுவெடென்ற
  அஞ்சா அடுதிறற் காளைதன் போக்கிவை அந்தத்திலே. 71
  997 இலவவெங் கான்உனை யல்லால் தொழுஞ்சரண் ஏகம்பனார்
  நிலவும் சுடரொளி வெய்யவ னேதண் மலர்மிதித்துச்
  செலவும் பருக்கை குளிரத் தளிரடி செல்சுரத்துன்
  உலவுங் கதிர்தணி வித்தருள் செய்யுன் உறுதுணைக்கே. 72
  998 துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன்
  இணையொத்த கொங்கையொ டேஒத்த காதலொ டேகினரே
  அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல்
  பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே. 73
  999 மின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும்
  நென்னல்இப் பாக்கைவந் தெய்தின ரேல்எம் மனையிற்கண்டீர்
  பின்னரிப் போக்கருங் குன்று கடந்தவர் இன்றுகம்பர்
  மன்னரி தேர்ந்து தொழுங்கச்சி நாட்டிடை வைகுவரே. 74
  1000 உவரச்சொல் வேடுடைக் காடுகந் தாடிய ஏகம்பனார்
  அவரக்கன் போன விமானத்தை ஆயிரம் உண்மைசுற்றும்
  துவரச் சிகரச் சிவாலயம் சூலம் துலங்குவிண்மேல்
  கவரக் கொடிதிளைக் குங்கச்சி காணினும் கார்மயிலே. 75
  1001 கார்மிக்க கண்டத் தெழில்திரு ஏகம்பர் கச்சியின்வாய்
  ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு வோர்ஒலி பொன்மலைபோல்
  போர்மிக்க செந்நெல் குவிப்போர் ஒலிகருப் பாலையொலி
  நீர்மிக்க மாக்கட லின்ஒலி யேஒக்கும் நேரிழையே. 76
  1002 நேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப்
  பார்த்தமை யால்இமை தீந்தகண் பொன்னே பகட்டுரிவை
  போர்த்தமை யால்உமை நோக்கருங் கம்பர்கச் சிப்பொழிலுள்
  சேர்த்தமை யால்இமைப் போதணி சீதம் சிறந்தனவே. 77
  1003 சிறைவண்டு பாடும் கமலக் கிடங்கிவை செம்பழுக்காய்
  நிறைகொண்ட பாளைக் கமுகின் பொழில்இவை தீங்கனியின்
  பொறைகொண்ட வாழைப் பொதும்புவை புன்சடை ஏகம்பனார்
  நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே. 78
  1004 நன்னுத லார்கருங் கண்ணும் செவ்வாயும் இவ் வாறெனப்போய்
  மன்னித ழார்திரு நீலமும் ஆம்பலும் பூப்பவள்ளை
  என்னவெ லாம்ஒப்புக் காதென்று வீறிடும் ஏகம்பனார்
  பொன்னுத லார்விழி யார்கச்சி நாட்டுள்இப் பொய்கையுளே. 79
  1005 உள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங் கிட்டநன்னீர்
  வள்வா ளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களைஆட்
  கொள்வார் பிறவி கொடாதஏ கம்பர் குளிர்குவளை
  கள்வார் தருகச்சி நாட்டெழில் ஏரிக் களப்பரப்பே. 80
  1006 பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர்
  தரப்பா சிகள்மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச்
  சுரப்பார் எருமை மலர்தின்னத் துன்னுக ராஒருத்தல்
  பொரப்பார் பொலிநுத லாய்செல்வக் கம்பர்தம் பூங்கச்சியே. 81
  1007 கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும்
  வைச்சார் மகிழ்திரு ஏகம்பர் தேவி மகிழவிண்ணோர்
  விச்சா தரர்தொழு கின்ற விமானமும் தன்மமறா
  அச்சா லையும்பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே. 82
  1008 ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்
  பாங்கினில் நின்ற தரியுறை பாடகம் தெவ்இரிய
  வாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான்கவிகள்
  தாங்கின நாட்டிருந் தாளது தன்மனை ஆயிழையே. 83
  1009 இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி விழியின்வந்த
  பிழையா அருள்நம் பிராட்டிய தின்ன பிறங்கல்உன்னும்
  நுழையா வருதிரி சூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத்
  தழையார் பொழிலிது பொன்னே நமக்குத் தளர்வில்லையே. 84
  1010 தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்தழுவக்
  கிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார்
  வளமாப் பொழில்திரு ஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சி
  உளரா வதுபடைத் தோம்மட வாய்இவ் வுலகத்துளே. 85
  1011 உலவிய மின்வடம் வீசி உருமதிர் வுள்முழங்கி
  வலவிய மாமதம் பாய்முகில் யானைகள் வானில்வந்தால்
  சுலவிய வார்குழல் பின்னரென் பாரிர் எனநினைந்து
  நிலவிய ஏகம்பர் கோயிற் கொடியன்ன நீர்மையனே. 86
  1012 நீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம் அஞ்சலையென்
  றாரென்னி லுந்தம ராயுரைப் பார்அம ராவதிக்கு
  நேரென்னி லுந்தகும் கச்சியுள் ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
  சேரென்னி லும்தங்கும் வாட்கண்ணி தான்அன்பர் தேர்வரவே. 87
  1013 வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய்
  பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம் அன்பர்தம் தேரின்முன்னே
  தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன் னாகத்தண் காந்தட்கொத்தின்
  கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும் போந்தன கார்முகிலே. 88
  1014 கார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுது
  போர்முக மாப்பகை வெல்லச்சென் றார்நினை யார்புணரி
  நீர்முக மாக இருண்டு சுரந்தது நேரிழைநாம்
  ஆர்முக மாக வினைக்கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே. 89
  1015 உயிரா யினஅன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்ற
  பயிரார் புயல்பெற்ற தென்னநம் பல்வளை பான்மைகளாம்
  தயிரார்பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள்போல்
  கையிரா வளையழுந் தக்கச் சிறுத்தன கார்மயிலே. 90
  1016 கார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும் இன்றுதனிப்
  போர்விடை பெற்றெதிர் மாண்டார் எனஅண்டர் போதவிட்டார்
  தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம்பொன் நன்பூண்
  மார்விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே. 91
  1017 விடைபாய் கொடுமையெண் ணாதுமே< லாங்கன்னி வேல்கருங்கண்
  கடைபாய் மனத்திளங் காளையர் புல்கொலி கம்பர்கச்சி
  மடைபாய் வயலின முல்லையின் மான்கன்றொ டான்கன்றினம்
  கடைபாய் தொறும்பதி மன்றில் கடல்போல் கலந்தெழுமே. 92
  1018 எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க்
  கொழுமணப் புன்னைத் துணர்மணற் குன்றில் பரதர்கொம்பே
  ெசுழுமலர்ச் சேலல்ல வாளல்ல வேலல்ல நீலமல்ல
  முழுமலர்க் கூர்அம்பின்ஓர்இரண் டாலும் முகத்தனவே. 93
  1019 முகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய மூதுரையை
  உகம்பார்த் திரேல்என் நலம்உயர் ஏகம்பர் கச்சிமுன்நீர்
  அகம்பாக ஆர்வின் அளவில்லை என்னின் பவளச் செவ்வாய்
  நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற வர்கொள்க நன்மயலே. 94
  1020 மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம்
  இயக்கத் திடுசுழி ஓதம் கழிகிளர் அக்கழித்தார்
  துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர் கச்சிக் கடலபொன்னூல்
  முயக்கத் தகல்வு பொறாள்கொண்க நீர்வரும் ஊர்க்கஞ்சுமே. 95
  1021 மேயிரை வைகக் குருகுண ராமது உண்டுபுன்னை
  மீயிரை வண்டோ தமர்புக் கடிய விரிகடல்வாய்ப்
  பாயிரை நாகங்கொண் டோன்தொழும் கம்பர்கச் சிப்பவ்வநீர்
  தூயிரை கானல்மற் றார்அறி வார்நந் துறைவர்பொய்யே. 96
  1022 பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடா
  மெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க்
  கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
  அவ்வரு தாமங் களினம் வந் தார்ப்ப அணைகின்றதே. 97
  1023 இன்றுசெய் வோம்இத னில்திரு ஏகம்பர்க் கெத்தனையும்
  நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில்
  சென்றுசெ யாரை விடும்துணை நாளும் விடா தடிமை
  நின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே. 98
  1024 காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம்
  ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர் ஏதும் இலாதஎம்மைப்
  பூட்டிவைத் தார்தமக் கன்பது பெற்றுப் பதிற்றுப் பத்துப்
  பாட்டிவைத் தார்பர வித்தொழு வாம்அவர் பாதங்களே. 99
  1025 பாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல்பணியும்
  ஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தனவே
  போதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும்
  வேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே. 100

  திருச்சிற்றம்பலம்