MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  12.3 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
  திருத்தொண்டர் திருவந்தாதி (1126 - 1215)
  1126 பொன்னி வடகரை சேர்நாரை யூரில் புழைக்கைமுக
  மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல்
  பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும்அந் தாதிதனைச்
  சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே. 1
  1127 தில்லைவாழ் அந்தணர்
  செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
  ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்த
  அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த
  துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே. 2
  1128 திருநீலகண்ட நாயனார்
  சொல்லச் சிவன்திரு ஆணைதன்தூமொழி தோள்நசையை
  ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்உமை கோன் அருளால்
  வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான்
  தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே. 3
  1129 இயற்பகை நாயனார்
  செய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க்
  கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
  மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்
  தெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே. 4
  1130 இளையான்குடிமாற நாயனார்
  இயலா விடைச்சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த
  வயலார் முளைவித்து வாரி மனைஅலக் கால்வறுத்துச்
  செயலார் பயிர்விழுத் தீங்கறி ஆக்கும் அவன்செழுநீர்க்
  கயலார் இளையான் குடியுடை மாறன்எங் கற்பகமே. 5
  1131 மெய்ப்பொருள் நாயனார்
  கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு பொய்த்தவன் காய்சினத்தால்
  செற்றவன் தன்னை அவனைச் செறப்புக லும்திருவாய்
  மற்றவன் தத்தா நமரே எனச்சொல்லி வான்உலகம்
  பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம்என்று பேசுவரே. 6
  1132 விறன்மிண்ட நாயனார்
  பேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம்
  ஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே
  நேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்
  வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே. 7
  1133 அமர்நீதி நாயனார்
  மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்
  முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்
  கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்
  துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே. 8
  1134 சுந்தரமூர்த்தி நாயனார்
  தொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங்
  கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடி
  முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன்
  ஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே. 9
  1135 எறிபத்த நாயனார்
  ஊர்மதில் மூன்றட்ட உத்தமற் கென்றோர் உயர்தவத்தோன்
  தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த
  ஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல்துணி யாக்குமவன்
  ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே. 10
  1136 ஏனாதிநாத நாயனார்
  பத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்
  அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு
  கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்
  நித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீள்நிலத்தே. 11
  1137 கண்ணப்ப நாயனார்
  நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல்
  நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி
  வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான்
  குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே. 12
  1138 குங்குலியக்கலய நாயனார்
  ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள்
  சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் காதலி தாலிகொடுத்
  தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன்
  காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரில் கலையனையே. 13
  1139 மானக் கஞ்சாற நாயனார்
  கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை
  நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்
  அலசும் எனக்கரு தாதவன் கூந்தல் அரிந்தளித்தான்
  மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே. 14
  1140 அரிவாட்டாய நாயனார்
  வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோன் உகலும்இங்கே
  வெள்ளச் சடையாய் அமுதுசெய் யாவிடில் என்தலையைத்
  தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன் காண்
  அள்ளற் பழனங் கணமங் கலத்தரி வாட்டாயனே. 15
  1141 ஆனாய நாயனார்
  தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த
  தூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
  வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்
  ஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே. 16
  1142 சுந்தர மூர்த்தி நாயனார்
  அருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன் இனி அல்லன்என்னும்
  பொருட்டுறை யாவதென் னேஎன்ன வல்லவன் பூங்குவளை
  இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரான்அடைந்தோர்
  மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே. 17
  1143 மூர்த்தி நாயனார்
  அவந்திரி குண்டமண் ஆவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்
  சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை
  உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர்
  நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே. 18
  1144 முருக நாயனார்
  பதிகம் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர்
  மதியம் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து
  துதியம் கழற்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டன்அம்பொன்
  அதிகம் பெறும்புக லூர்முரு கன்எனும் அந்தணனே. 19
  1145 உருத்திர பசுபதி நாயனார்
  அந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்
  உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த
  பைந்தார் உருத்திர பசுபதி தன்னற் பதிவயற்கே
  நந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே. 20
  1146 திருநாளைப்போவார் நாயனார்
  நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப்
  போவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்
  மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
  மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே. 21
  1147 திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
  மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை
  விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவன்என்னா
  முண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத்
  தொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே. 22
  1148 சண்டேசுர நாயனார்
  குலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ்
  தலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும்
  வலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல்
  நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே. 23
  1149 சுந்தரமூர்த்தி நாயனார்
  நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த
  மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றிடென்று
  துதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்
  நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே. 24
  1150 திருநாவுக்கரசு நாயனார்
  நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப்
  பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்
  உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்
  துற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே. 25
  1151 மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்
  திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்
  பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே
  அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே. 26
  1152 குலச்சிறை நாயனார்
  அருந்தமிழ் ஆகரன் வாதில் அமணைக் கழுநுதிமேல்
  இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்எழிற் சங்கம்வைத்த
  பெருந்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசம்மல்கு
  குருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே. 27
  1153 பெருமிழலைக் குறும்ப நாயனார்
  சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக்
  கிறைநன் கழல்நாளை எய்தும் இவனருள் போற்றஇன்றே
  பிறைநன் முடியன் அடியடை வேன்என் றுடல்பிரிந்தான்
  நறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும்நம்பியே. 28
  1154 காரைக்கால் அம்மையார்
  நம்பன் திருமலை நான்மிதி யேன்என்று தாள்இரண்டும்
  உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்
  செம்பொன் உருவன்என் அம்மை எனப்பெற் றவள் செழுந்தேன்
  கொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே. 29
  1155 அப்பூதியடிகள் நாயனார்
  தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணம்என்னா
  மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கே
  இனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்
  அனமார் வயல்திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே. 30
  1156 திருநீலநக்க நாயனார்
  பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சி
  ஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்
  பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்
  நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே. 31
  1157 நமிநந்தியடிகள் நாயனார்
  வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத்
  தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால்
  ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான்
  நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே. 32
  1158 சுந்தரமூர்த்தி நாயனார்
  நந்திக்கும் நம்பெரு மாற்குநல் ஆருரில் நாயகற்குப்
  பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற்
  சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே
  வந்திப் பவன்பெயர் வன்தொண்டன் என்பர்இவ் வையகத்தே. 33
  1159 திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
  வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய
  ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய்
  பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
  தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே. 34
  1160 பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
  சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
  கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த
  அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே. 35
  1161 ஏயர்கோன் கலிக்காம நாயனார்
  கொற்றத் திறல்எந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்ட மெல்லாம்
  தெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனே
  மற்றிப் பிணிதவிர்ப் பான்என் றுடைவாள் உருவிஅந்நோய்
  செற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே. 36
  1162 திருமூல நாயனார்
  குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு
  முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்
  படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி
  அடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே. 37
  1163 தண்டியடிகள் நாயனார்
  கண்ணார் மணிஒன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத்
  தண்ணார் புனல்தடம் தொட்டலும் தன்னை நகும்அமணர்
  கண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்
  விண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே. 38
  1164 மூர்க்க நாயனார்
  தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தருகவற்றால்
  கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள்
  முண்டநன் னீற்றன் அடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்
  நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே. 39
  1165 சோமாசிமாற நாயனார்
  சூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன்என்பான்
  வேதப் பொருள்அஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான்
  நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும்
  மாதுக்குக் காந்தன்வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே. 40
  1166 சுந்தரமூர்த்தி நாயனார்
  துணையும் அளவும் இல் லாதவன் தன்னரு ளேதுணையாக்
  கணையும் கதிர்நெடு வேலும் கறுத்த கயலிணையும்
  பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோள்இரண்டும்
  அணையும் அவன்திரு வாரூரன் ஆகின்ற அற்புதனே. 41
  1167 சாக்கிய நாயனார்
  தகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன்
  மகள்தனந் தாக்கக் குழைந்ததிண் தோளர்வண் கம்பர்செம்பொன்
  திகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப்
  புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே. 42
  1168 சிறப்புலி நாயனார்
  புவனியிற் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த
  தவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்
  அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன்
  சிவன்நிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே 43
  1169 சிறுத்தொண்ட நாயனார்
  புலியின் அதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர்
  ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணித்துக்
  கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
  மலியும் பொழில்ஒண்செங் காட்டம் குடியவர் மன்னவனே. 44
  1170 சேரமான்பெருமாள் நாயனார்
  மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்
  தன்னர் பிரான்தமர் போல வருதலும் தான்வணங்க
  என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்என்னும்
  தென்னர் பிரான்கழ றிற்றறி வான்எனும் சேரலனே. 45
  1171 சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவன்அளித்த
  வீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த
  வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட
  சூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாய்இன்று தொண்டுபட்டே. 46
  1172 கணநாத நாயனார்
  தொண்டரை யாக்கி அவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித்
  தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்
  கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும்
  கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே. 47
  1173 கூற்றுவ நாயனார்
  நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல
  போதங் கருத்திற் பொறித்தமை யால்அது கைகொடுப்ப
  ஓதந் தழுவிய ஞாலம்எல் லாமொரு கோலின்வைத்தான்
  கோதை நெடுவேற் களப்பாளன் ஆகிய கூற்றுவனே. 48
  1174 சுந்தரமூர்த்தி நாயனார்
  கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல்
  ஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதருமக்
  கோற்றொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை
  சாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே. 49
  1175 பொய்யடிமை இல்லாத புலவர்
  தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அ திற்கபிலர்
  பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்
  அருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே
  பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே. 50
  1176 புகழ்ச்சோழ நாயனார்
  புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த
  குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
  நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்
  வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே. 51
  1177 நரசிங்க முனையரைய நாயனார்
  புகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்
  இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும்
  நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள்
  திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே. 52
  1178 அதிபத்த நாயனார்
  திறம்அமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்
  றுறஅமர் மாகடற் கேவிடு வோன்ஒரு நாட்கனக
  நிறம்அமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்
  புறம்அமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே. 53
  1179 கலிக்கம்ப நாயனார்
  பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்அடியான்
  சைவத் திருவுரு வாய்வரத் தான்அவன் தாள்கழுவ
  வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி
  கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே. 54
  1180 கலிய நாயனார்
  கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்
  உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடல்இலனாய்க்
  கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றும்கொள் கூலியினால்
  நம்பற் கெரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே. 55
  1181 சத்தி நாயனார்
  கிரிவில் லவர்தம் அடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன
  திருவில் லவரைஅந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும்
  வரிவில் லவன்வயற் செங்கழு நீரின் மருவுதென்றல்
  தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே. 56
  1182 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
  சத்தித் தடக்கைக் குமரன்நல் தாதைதன் தானம்எல்லாம்
  முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா
  மத்திற்கு மும்மைநன் தாள்அரற் காய்ஐயம் ஏற்றலென்னும்
  பத்திக் கடல்ஐ யடிகளா கின்றநம் பல்லவனே. 57
  1183 சுந்தரமூர்த்தி நாயனார்
  பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்
  சொல்லவன் தென்புக லூர்அரன் பால்துய்ய செம்பொன்கொள்ள
  வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு
  நல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே. 58
  1184 கணம்புல்ல நாயனார்
  நன்னக ராய இருக்குவே ளூர்தனில் நல்குவராய்ப்
  பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து
  மன்னவ ராய அரர்க்குநற் புல்லால் விளக்கெரித்தான்
  கன்னவில் தோள்எந்தை தந்தை பிரான்எம் கணம்புல்லனே. 59
  1185 காரி நாயனார்
  புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும்
  சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி
  வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்
  கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே. 60
  1186 நெடுமாற நாயனார்
  கார்த்தண் முகில்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்
  ஆர்த்த அமணர் அழிந்தது கண்டுமற் றாங்கவரைக்
  கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும்
  வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே. 61
  1187 வாயிலார் நாயனார்
  மாறா அருளரன் தன்னை மனஆ லயத்திருத்தி
  ஆறா அறிவாம் ஒளிவிளக் கேற்றி அகமலர்வாம்
  வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தம்கொடுத்தான்
  வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே. 62
  1188 முனையடுவார் நாயனார்
  என்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்
  என்றும் அமருள் அழிந்தவர்க் காக்கூலி ஏற்றெறிந்து
  வென்று பெருஞ்செல்வம் எல்லாம் கனகநன் மேருவென்னும்
  குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே. 63
  1189 சுந்தரமூர்த்தி நாயனார்
  கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்
  தொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம்
  படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன்
  மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே. 64
  1190 கழற்சிங்க நாயனார்
  மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த
  போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கை
  காதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான்
  நாதமொய்த் தார்வண்டு கிண்டுபங் கோதைக் கழற்சிங்கனே. 65
  1191 இடங்கழி நாயனார்
  சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
  கொங்கிற் கனகம் அணிந்தஆ தித்தன் குலமுதலோன்
  திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக்
  கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே. 66
  1192 செருத்துணை நாயனார்
  கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை
  மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே
  எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால்
  செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே. 67
  1193 புகழ்த்துணை நாயனார்
  செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா
  உருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய்
  தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா
  தருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே. 68
  1194 கோட்புலி நாயனார்
  பெற்றம் உயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமது
  சுற்றம் அறுக்கும் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன்
  குற்றம் அறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசில் அருள்
  பெற்ற அருட்கடல் என்றுல கேத்தும் பெருந்தகையே. 69
  1195 சுந்தரமூர்த்தி நாயனார்
  தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்
  புகுமணக் காதலி னால் ஒற்றி யூர்உறை புண்ணியன்தன்
  மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம்
  நகுவழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூர்அரசே. 70
  1196 பத்தராய்ப் பணிவார்கள்
  அரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட்
  டுரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம்வந்து
  கரசர ணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவி
  சொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே. 71
  1197 பரமனையே பாடுவார்
  தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே
  மிகுத்த இயலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி
  வகுத்த மதில்தில்லை அம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல்
  உகுத்த மனத்தொடும் பாடவல் லோர்என்ப உத்தமரே. 72
  1198 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
  உத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்து
  வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி
  மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச்
  சித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே. 73
  1199 திருவாரூர்ப் பிறந்தார்கள்
  செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்
  செல்வன் திருக்கணத் துள்ளவ ரேஅத னால் திகழச்
  செல்வம் பெருகுதென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியே
  செல்வ நெறியுறு வார்க் கணித் தாய செழுநெறியே. 74
  1200 முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார்
  நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின்
  அறிவால் வணங்கி அர்ச் சிப்பவர் நம்மையும் ஆண்டமரர்க்
  கிறையாய்முக் கண்ணும்எண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும்
  உறைவார் சிவபெரு மாற்குறை வாய உலகினிலே. 75
  1201 முழுநீறு பூசிய முனிவர்
  உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ளொருகால்
  விலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண்
  அலகில் பெருங்குணத் தாரூர் அமர்ந்த அரனடிக்கீழ்
  இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியும் இறைவர்களே. 76
  1202 அப்பாலும் அடிச்சார்ந்தார்
  வருக்கம் அடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்தமிழால்
  பெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கே
  ஒருக்கு மனத் தொடப் பாலடிச் சார்ந்தவர் என்றுலகில்
  தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நம் செழுந்தவரே. 77
  1203 சுந்தரமூர்த்தி நாயனார்
  செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய
  மழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப்
  பொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்
  கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே. 78
  1204 பூசலார் நாயனார்
  பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையாம்
  கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா
  ததுமனத் தேஎல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர்
  புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனில் பூசலையே. 79
  1205 மங்கையர்க்கு அரசியார்
  பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்
  வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்
  தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால்
  நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே. 80
  1206 நேச நாயனார்
  நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படைநல்கினர்தந்
  தாட்டரிக் கப்பெற்ற வன்என்பர் சைவத் தவர் அரையில்
  கூட்டுமக் கப்படங் கோவணம் நெய்து கொடுத்துநன்மை
  ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே. 81
  1207 கோச் செங்கட் சோழ நாயனார்
  மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
  தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து
  சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்
  செய்வித்த வன்திருக் கோச்செங்க ணான்என்னும் செம்பியனே. 82
  1208 செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்தி
  நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல
  வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்
  நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே. 83
  1209 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
  தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்
  நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்
  சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை
  புனையப் பரன்அருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே. 84
  1210 சடைய நாயனார்
  தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையன்என்னும்
  குலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில்
  நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
  பலம்விளங் கும்படி ஆரூரனைமுன் பயந்தமையே. 85
  1211 இசைஞானியார்
  பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
  கயந்தான் உகைத்தநற் காளையை என்றும் கபாலங்கைக்கொண்
  டயந்தான் புகும்அரன் ஆரூர்ப் புனித அரன்திருத்தாள்
  நயந்தாள் தனதுள்ளத் தென்றும் உரைப்பது ஞானியையே. 86
  1212 சுந்தரமூர்த்தி நாயனார்
  ஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம்அறியோம்
  மானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண்
  வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக்
  கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே. 87
  1213 திருத்தொண்டத்தொகையில் உள்ள தொகை அடியார்கள் தனியடியார்கள்
  கூட்டம்ஒன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா
  ஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண் டாம்வினையை
  வாட்டும் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப்
  பாட்டும் திகந்திரு நாவலூராளி பணித்தனனே. 88
  1214 திருத்தொண்டத் தொகைப் பதிகக் கவிகளின் முதற்குறிப்பு
  பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை இலைமலிந்த
  அணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர்
  இணைத்தநற் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின்
  மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே. 89
  1215 நூற் பயன்
  ஓடிடும் பஞ்சேந் திரியம் ஒடுக்கிஎன் ஊழ்வினைகள்
  வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர்
  சூடிடும் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையின்உள்ள
  சேடர்தம் செல்வப் பெரும்புகழ் அந்தாதி செப்பிடவே. 90

  திருச்சிற்றம்பலம்